Tuesday, May 29, 2012

சிங்கப்பூர் வாசக வட்டத்தின் ’மே’ மாத கலந்துரையாடல் - ஒரு பகிர்வு!


சிங்கப்பூர் வாசக வட்டத்தின் மே மாத கலந்துரையாடலானது கடந்த மே 20 அன்று சிங்கப்பூரின் அங் மோ கியோ தேசிய நூலகத்தில் புனைவு அல்லாதவை அல்லது அ-புனைவு படைப்புகள் என்பன குறித்து நடைபெற்றது.

கடல் போன்ற பெருவெளி கொண்டது அ-புனைவு இலக்கியம். பத்தி எழுத்து, பக்க எழுத்து, புனைவில் புகழ்பெற்றவர்களின் அ-புனைவு எழுத்து, அ-புனைவால் எழுச்சியை உருவாக்கிய எழுத்து, கடைசி பக்க எழுத்து, பயண எழுத்து, பகடி எழுத்து என எந்தவித பேதமும் இல்லாமல் கலந்துரையாடலில் கடலாடி விட்டிருந்தன அக்கடலில் கிளம்பிய அலைகள்.

கார்ல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் ஆகியோரிலிருந்து ஆரம்பித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா ரமேஷ். தொலைந்த கனவு குறித்த பார்வையைப் பகிர்ந்தார் திரு. இராம கண்ணபிரான்.

கலைஞர் மு.கவின் உடன்பிறப்பு படைப்புகள், குல்தீப் நய்யாரின் எமெர்ஜென்ஸி படைப்புகள், தினமணியின் அறிவியல் மலரில் எழுதிய நெல்லை சு முத்து, தீம்தரிகிட ஞானி, சுஜாதா, சுப்புடு, வெங்கட் சாமிநாதன், க.நா.சு, அவரின் மருமகன் பாரதிமணி அவர்கள், அண்மைய அவருடைய மாமனார் கட்டுரை, கி.ரா, புனைவிலும் அ-புனைவிலும் வெற்றிபெற்ற எஸ் ராமகிருஷ்ணன், அ-புனைவின் அதிபதி சாரு நிவேதிதா, அமரகாவியம் ஜெயமோகன், வருடிச்செல்லும் வண்ணதாசன் கடிதங்கள், அ.முத்துலிங்கம் என்னும் வாழ்க்கை வழிப்போக்கன் என எல்லைகளற்று பரவி விரிந்தது அ-புனைவு வானம்.

வால்கா முதல் கங்கை வரை, வந்தார்கள் வென்றார்கள், சங்கச்சித்திரங்கள், ஏன் எதற்கு எப்படி, எனது இந்தியா, கதாவிலாசம், கணையாழியின் கடைசி பக்கங்கள் என தொடர்ந்தன அ-புனைவு சிலாகிப்புகள்.

பத்தி எழுத்தின் தரம், பத்தி எழுத்தாளர்களின் போக்கு, எளிமையுடன் கூடிய பொருண்மை ஆகியவையும் விவாதிக்கப்பட்டு விசாலமடைந்தன.
தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு சுகா, ஆனந்த விகடன் வட்டியும் முதலும் முருகன், சிங்கப்பூரின் குறிப்ப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தான ஷா-நவாஸின் ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், சிங்கப்பூர் தமிழ்முரசு எழுதும் தற்போதைய தலையங்கம் ஆகிவையும் விவாதத்தில் வந்தன.

காலில் விழாத மதன், கற்பழிக்காத ஜெயமோகன், ஆசிட் வீச்சுவழக்கு, வருடா வருடம் மாறும் வரலாறு என இம்மையை தொட்டுச்சென்றன சில பகிர்வுகள்.

இராம கண்ணபிரான், ஜெயந்திசங்கர், கேஜே ரமேஷ், ஷாநவாஸ், பூங்குன்ற பாண்டியன், மாதங்கி, ஹேமா, எம்.கே.குமார், ஆனந்தகுமார் இவர்களோடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் சித்ரா ரமேஷ். வழக்கம் போல அ-புனைவின் புனைவாய் கேசரியும் வடையும்!

காரல் மார்க்சின் கடும் தோழராய் இருந்தாலும் சரி, கம்பனின் காவிய தாசனாய் இருந்தாலும் சரி, மு.வ வின் முரட்டு பக்தராய் இருந்தாலும் சரி, சாரு நிவேதிதாவின் சரச சல்லாப சகலையாய் இருந்தாலும் சரி, சுந்தர ராமசாமி சுவாசித்த காற்றைச் சுவாசிப்பவராய் இருந்தாலும் சரி – உட்கார்ந்து காதுகொடுத்துக்கொண்டிருக்கும் அந்த சில மணித்துளிகளில் அடையாது அடையும் ஒரு ரசிக-வாசக புலனுகர்வு-மனப்பகிர்வு இன்பத்திற்காகவாவது கண்டிப்பாய் வரலாம் மாதம் ஒருமுறை அங்மோகியோ நூலகத்திற்கு.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் வழங்கும் அடுத்த கலந்துரையாடல் வரும் ஜூன் 3 அன்று மாலை 5.30மணிக்கு அங்மோகியோ நூலகத்தில். திரு வேங்கடாசலபதி சிறப்பிப்பார்.

Thursday, May 10, 2012

வழக்கு எண் 18/9(ம் எனது வக்காலத்து எண் 15/9ம்) – ஒரு பகிர்வு

படத்தின் குறிப்பிடத்தகுந்தவை :-
  1. தேர்ந்த செதுக்கியெடுத்த கதாபாத்திரத்தேர்வு, கதையில் வரும் அத்தனை பேரும் இப்படியாகவே வாழ்கிறார்கள் என்னும் நம்பகத்தன்மை தரும் தேர்ச்சி.
  2. வெகு வெகு இயல்பான நேர்த்தியான திரைக்கதை
  3. காட்சிகள் ஒவ்வொன்றிலும் வைக்கவேண்டிய விசயங்களுக்கு மெனக்கெட்டு உழைத்திருப்பது (பிளாஸ்டிக் கப், திருக்குறள், பாலன், தூரத்தில் தெறியும் பள்ளி, பட போஸ்டர் என)
  4. அகிரா குரோசோவா (அ) விருமாண்டி வகை கதைசொல் பாணி
  5. சலிப்பு ஏற்படாத வகையில் விளிம்புநிலை மனிதர்களை கதையில் இணைத்த போக்கு
  6. சின்னச்சாமி – தொலையும் கலைகளின் சாட்சியாய்.
  7. ’ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில்’ வேறொரு முழு கதையை முன்வைத்தல்
  8. கந்துவட்டி, விவசாயி கிட்னியை விற்று குடும்பம் காக்கவேண்டிய நிர்ப்பந்தம், விவசாய நிலங்கள் அழிப்பு என இந்தியாவின் இருதயமான கிராமக்கதைகளை இயம்புதல்
  9. முறுக்குகடை ஓனராக வரும் ஐயா (மனைவியை இழந்து, குழந்தைகள் இன்றி வாடும், பாலாஜி சக்திவேல் அவர்களின் நண்பர் அவர். அண்மையில் “நீயா நானா”வில் மனம் குமுறிக் குமுறி அழுதவர்; மனதைத் தாக்கியவர்) எவ்வளவு கொடூரமானவராக நடிக்கிறார்?!
  10. சினிமாவில் முதன் முதலாக ‘முகம் மறைக்கப்பட்ட மந்திரி’ – நிஜ உணர்வைத் தருகிறது.
  11. இரண்டுஅருமையான பாடல்கள்! இளையராஜா பாடும் உணர்வைத்தரும் ஒரு பாட்டு.
  12. தமிழ்சினிமாவில் இதுவரை வராத எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்ட கேமிரா. (சிறியதால் இருந்ததால் இது சாத்தியம்.)
  13. தற்கால இளையர்களின் வாழ்வியல் தாக்கங்கள், பெற்றோர்கள் கையாளும் முறையில் அறிவிக்கப்படாத சில பதிவுகள்.
  14. சினிமா மீது விருப்பம் கொண்ட அனைவரும் குறைந்தது மூன்று தடவையாவது மீண்டும் மீண்டும் இப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள விஷயங்கள் இருக்கின்றன.
  15. சினிமாவின் மீது ஆசையும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஒரு படைப்பாளியாய் எழுந்து நிற்கும் இயக்குனர் திரு. பாலாஜிசக்திவேல்.


படத்தில் மேம்படுத்தியிருக்கவேண்டியவை:-
  1. நகைச்சுவையை ஏன் இவர் வெறுக்கிறாரோ தெரியவில்லை. (’காதலி’ல் கரட்டாண்டி, இதில் சின்னச்சாமி - இவர்களைவைத்து இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்! இரண்டிலுமே மிஸ்ஸிங்.) சில காட்சிகளுக்கு முனைந்திருப்பதைதவிர.
  2. சில குறும்படங்களை இணைத்த உணர்வாய் மட்டுமே முடியும் நெகிழ்ச்சி (முழுப்படமாய் மனதில் பின்தங்குகிறது)
  3. ஒரே கதையை இருவர் சொல்லும் முறையில், இரு வேறு கதையாய் ஆகிவிட்டமை.
  4. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ’அங்காடித்தெரு’ படத்தை நினைவுபடுத்துதல்.
  5. வேலுவின் முன்கதைச்சுருக்கம் ஒரு துன்பியலை மட்டுமே முன்னிறுத்துவதற்காய் வந்துபோகிறது! அப்பாவுக்காக அவன் எதையும் செய்வான் என்பதை ஒரு சில காட்சிகளில் ஆழப்படுத்தியிருக்கலாம்.
  6. காசுவோடு போய்விட்ட பாலியல் தொழிலாளி அக்கா. மீண்டும் கதையில் எங்காவது நுழைத்திருக்கலாம்.
  7. இரண்டு வரியாய் முதலில் வந்துவிடுவதால் பாடல்கள் முழுமையாய் வரும்போது ஒரு தாக்கம் இல்லை.
  8. பின்னணி இசை
  9. காட்சி எடிட்டிங்கில் ஏதோ குறைவு. கதாபாத்திரத்தின் பின்னணியைச் சுழற்றும் காட்சிகளில் சில கார்ட்டூனைப்போல! 
எம். கே.குமார்

Search This Blog