ஜெயமோகன் படலம்
ஜெயமோகன் எழுதிய
’கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ என்ற குறிப்பு அவல அதிர்ச்சியலைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில்,
அக்குறிப்பை விட, அதற்கு பதில் எழுதிய
கவிஞர் திருமாவளவனுக்கு, ஜெயமோகன் எழுதிய புதிய பதிலில்தான் அதிர்ச்சி மேல்
அதிர்ச்சி அடுக்கி நிற்கிறது.
காந்தி, கலைஞர்,
எம்ஜிஆர், சிவாஜி, சுந்தர ராமசாமி, சுஜாதா என்ற ’மக்களின் மன மல்டிபிளெக்ஸ்
கார்டுகளை’ பொதுவெளியில் வைத்து அகம்-புறம் என அநாவசிய நாகரிகம் பார்க்காமல்
பிரித்துமேய்ந்து பிம்பம் களைப்பதை ’மாலையில் ஒரு மல்லிக் காஃபி’ குடிப்பதைப்போல
இலகுவாய்ச் செய்துவிட்டுப்போனாலும் ஏதாவது ஒருவரியில் இத்துனூண்டு அறவியல்
இருக்கும் எப்போதும், அட்லீஸ்ட், முடித்துவைக்கும்போதாவது.
ஆனால், நேற்று
சாப்பிட்டது தயிர்சாதமா இல்லை புளிச்சாதமா என்பது போல ஒரு குறிப்பை எழுதிவிட்டு
சாதாரணமாய் எழுந்துபோய்விட்டார்.
கலைஞர் டெசோவை
கையில் எடுத்ததும் ஜெயமோகனும் ஈழத்தை எடுத்துவிட்டார் என நினைக்கிறேன்.
பொதுவெளியில்
பேசும்போது கவனமாக இருப்பார் ஜெயமோகன். அதுவும் இதுபோன்ற வரலாற்றுத் திரித்தல்களின்
அடையாளத்தைக் கவனமாக முன்வைப்பார். பாவம், தூக்கத்தில் எழுந்துவந்து
அட்டைக்கத்தியுடன் போரிட்டதைப்போல பின்வாங்குகிறார், இதில்.
’தனது நெடுநாள்
வாசகர்’ சொல்வதற்காகவே, ’இந்திய ராணுவம் கற்பழிக்கவில்லை’ என்று அதை முன்மொழிய
முயலும் போது அவரது அறவியல் நேர்மை நடுங்கவைக்கிறது. தூக்கத்திலேயே எழுதிவிட்டாரோ
என்றும் யோசிக்கவைக்கிறது. செத்தால்தான் தெரியும் சாவு என்பது என்ன வாழ்வைய்யா?
நல்லவேளை,
ஷோபாசக்தியும் திருமாவளவனும் பெண்களாய் பிறந்து வன்கலவியில் சிக்கி சாவாது
போய்விட்டார்கள்; தாங்களே சாட்சி என்று நேரே வந்து நின்று பேச அவர்களும் இல்லையெனில்
இவ்விவாதம் என்ன ஆகியிருக்குமோ என்று அஞ்சவைக்கிறது.
தான் மிகவும்
நேசிக்கும் படைப்புத்திறன் கொண்ட இருவர், சிறுகுறிப்புகளுடன் ’நடமாடும்
சாட்சிகளாக’ குறுக்கே வந்தபின் குறுகுறுப்பு கொள்கிறார்; சாமன்யனாகிறார்; சறுக்கிவிட்டதாகச்சொல்கிறார்; இந்தியாவையே
அவர்கள் மன்னிக்கவேண்டும் என்கிறார்.
மிகவும்
மதிக்கப்பட்ட இந்த இருவரையும் பொதுவெளியில் அதிதீவிரமாய் பந்திவைத்து பிம்பத்தைக்
கரைத்துக் காயடித்தபின், குறுக்கே வர சாட்சிகளும் இல்லாத தேசத்தில் இந்திய
ராணுவத்தினர் கற்பழிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்று வரலாற்றுத்திரிபு நடந்தால் என்
செய்வது?
’அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல
வரவில்லை’ என்று ஒரு
சப்பைக்கட்டு வேறு.
கவிஞர் வா
மணிகண்டன் சொல்வது போல ’சர்ச்சையில் இருக்கிறது தன் இலக்கிய இருப்பிடம்’ என்று அவர் முடிவெடுத்துவிட்டால்
என்னைப்போன்றவர்களுக்கும் வருத்தமே மிஞ்சுகிறது.
என்னாச்சு
ஜெயமோகன்?
தீர்ப்புகள்
திருத்தப்படலாம். ஐயத்தின் வீரியத்தில் அவலமாக்கிய வாழ்வைத் திருப்பித்தர யார்
இயலும்?
மதன் அத்தியாயம்
கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ’மாடபூசி
கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமாரைத்’
தெரியாதவர்களுக்குக் கூட ’மதன்’ என்றால் யார் எனத்தெரியும். இதில் ஆனந்தவிகடன்
பங்களிப்பு என்பது நான்குக்கு நாலே முக்கால் சதவீதம் என்பது நல்லுலகிற்குத்
தெரியும்.
தான் எழுதிய ஒரு
பதிலுக்கு (ஆனந்தவிகடன் பாணியில் சொல்வதானால்) சுவாரஸ்யம் கூட்ட சேர்க்கப்பட்ட,
’உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதாவின் காலடியில் தலைவணங்கி ஒரு தொண்டர்’ ஆசிவாங்கும் படம் அவருக்கு
அதிர்ச்சியையும் தேவையற்ற மனச்சோர்வையும் கொடுத்ததாய்ச்சொல்லி ’அது தன்னுடைய
வேலையல்ல’ என்று ஒரு அறிவிப்பு வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்.
’டிவி’ வேலை
போய்விடுமே என்று பயப்படும் ’பத்திரிகையாளர் மதன்’ அரசியல் சார்பற்று
நடுநிலைமையுடன் கேள்விபதிலையும் சரி, கார்ட்டூனையும் சரி காபந்து பண்ணமாட்டார்
என்று விகடனே அவருக்கு ’குட்பை’ சொல்லிவிட்டது.
‘இத்துனூண்டு
சம்பவம் இது’ என்று
நினைக்கமுடியவில்லை. மதனின் கேள்வி-பதில் சுவாரஸ்யமற்றுப்போய் பல மாதங்கள்
ஆகிவிட்டன. வலைப்பூக்களில் வரும் கார்ட்டூனாவது பரவாயில்லை, அந்த அளவிற்குக்கூட அவரது
கார்ட்டூன்களில் “காரம்” இல்லை.
மாற்றம் ஒன்றே
மாறாதது என்பதில் விகடன் எப்போதும் நடுநிலைமை. மாற்றம் தேடிக் காத்திருந்தவேளையில்
’படம் நழுவிக் காலில் விழுந்து’ பாதகம் செய்துவிட்டது மதனுக்கு.
விகடன் வாசகர்கள்
ஏறக்குறைய எல்லோருமே விகடன் செய்தது சரிதான் என்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள்
ஒரு முகபுத்தக
நண்பர், ’உட்கார்ந்திருப்பது ஜெயலலிதா; குனிந்து வணங்குபவர் மதன்’ என்றும் இன்னொருவர், “ரஃபி
பெரனார்டுப்போல அதிமுகவின் அடுத்த எம்.பி மதன் தான்” என்றும் சொல்லிவிட்டார்கள்.
எனக்கு இரண்டு
விஷயங்கள் தொண்டையை அடைக்கின்றன.
ஒன்று, ஆ.வி. வாசகர்களின்
பார்வையில் ’அடுத்த சுஜாதா’ என்ற “அரை-பிம்பத்தில்” இருந்த மதன் மாயச்சுழலில்
சிக்கிவிழுந்துவிட்டார். இனி சராசரிகளில் ஒரு சராசரியாய் சிக்கக்கூடும். (’சான்ஸ்
கிடைச்சா தான் சார் சச்சின் டெண்டுல்கரே’ என்ற டயலாக்கில் எனக்கு
நம்பிக்கையுண்டு.)
இரண்டு, மதனை
நினைக்கும்போது உண்மையில் எனக்கு, ’மாட்டுக்கறி திங்கும் மாமி’ என்று
அட்டைப்படத்தில் போடுமளவுக்கு ’தில்’ இருக்கும் ’நக்கீரனைப்’ பார்க்க
திகில்லாயிருக்கிறது.
எம்.கே.குமார்.
No comments:
Post a Comment