· இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
எம்.கே.குமார்.
மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர். பணம் மட்டுமே பிரதானமாகிப்போன ஒருவன். தாய்நாட்டின் முன்னேற்ற வேட்கையில் ஒருவன். அமெரிக்க வாழ்க்கையின் பிடிப்பில் மூன்றாமவன். ஒவ்வொருவரும் தங்களுடையதை லட்சியமாகக்கொண்டு போராட விழைகின்ற கணத்தில் அவர்கள் செல்லும் பயணம் ஓரிடத்தில் எதிர்பாராமல் சந்தித்துக்கொள்கிறது. பயணம் சந்தித்தபோதிலும் பாதைகள் வேறல்லவா? வெவ்வேறான பாதைகள் ஒரே பயணத்தைத்தருமா என்ன? ஒருவர் பயணத்தில் ஒருவர் தடைக்கல்லாகிறார்கள். விளைவு? படம் சொல்கிறது.
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே எட்டு வயதிலிருந்து அல்லாடிய ஒருவன் தனது வாழ்க்கையில் அடுத்த தளங்களை அப்படி அமைத்துக்கொள்ள விரும்பாமல் பணத்தை நாடுகிறான். அது வரும் வழி அவனுக்கு சிறந்த வழி. எத்தகைய பாப தருணங்களும் அவனுக்கு அவசியமில்லை. அருவருப்பில்லை. பணம் மட்டுமே தேவை. அவனது வாழ்க்கையில் வருகிறாள் சராசரியான ஒரு மனைவி. கணவனின் மூடத்தனமான மூர்க்கத்தனமான பாதையை தடுத்து நிறுத்தும் வேகத்தோடு அரவணத்துக்கொள்கிறாள். அணைந்துபோகும் ஆளா அவன்? கரைகள் அறியுமா அலையின் வலிகளை!
இரண்டாமவன் காலங்காலமாக போராடிய குடும்பத்திலிருந்து வருகிறவன். அவனது டி.என்.ஏ அதன் வேலையைக் கவனிக்கிறது. கணவனைப்போலவே மகனையும் இழந்து விடுவோமோ எனதஞ்சினாலும் தான் வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை தனது மன உறுதியில் காட்டிக்கொண்டிருப்பவள் அவன் தாய். வாழ்க்கையின் நிதர்சனங்களை முழுமையாக உணர்ந்துகொண்டவன் இவன். எதுவரை தொடரும் வாழ்க்கை என்பதறியாத வேளையில் இன்றைய நிதர்சனத்தைக்கொண்டு போராடுபவன். இன்றைய விதையின் மூலம் நாளைய மரத்திற்கு வித்திடுபவன். வித்திடுகிறான். வித்திடுவது ஜனநாயகத்தின் அடிப்படை நிலத்தில். விடுவார்களா காலம் காலமாய் நிலத்தையாண்ட அதிபதிகள்? விளைவு? பணத்திற்காக அலையும் ஒருவனை கையிலெடுத்துக்கொள்கிறார்கள் காரியத்தை முடிக்க. கயல்கள் மாட்டிக்கொள்ளலாம்; அலைகள் மாட்டுமா என்ன வலையில்?
அண்ணா மேம்பாலத்தின் அடியில் அதிகாலை நாலு மணிக்கு விழித்துக்கிடக்கும் மேல்தட்டு வாரிசுகளில் மூன்றாமவனும் ஒருவன். ரயிலில் முத்தமிட்ட அந்தப் பெண்ணுக்கும் சேர்த்து நாற்பத்திரண்டாவது முறையாக கல்யாணம் பற்றி சத்தியம் செய்துவிட்டு மாலை விடுதிகளில் நடனமாடி நள்ளிரவுகளில் பெண்ணாண்டு அதிகாலை பறக்கும் லு·ப்தான்ஸா விமானத்தில் விழித்து அமெரிக்க முருகன் கோயிலையும் அங்கு போடவேண்டிய மொட்டையையும் நினைத்து வளரும் அவனுக்கு தந்தையானவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தந்தையின் ஐஏஎஸ் வாரிசு கனவில் அவரறியாமல் மண் விழுகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் மண்ணல்ல அது. சென்னை மண். மனம் மயக்கும் மணம் தருவதல்லவா மண்? வருகிறது. தருகிறது. ஆனால் அவனது அமெரிக்க கனவு?
மாதவனுக்கு தனது கேரீயரில் இன்னொரு நல்ல படம். நல்ல(!?)வில்லன்கள் பயப்படும் அளவுக்கு பின்னுகிறார். பார்த்து இன்பா! இனி உனக்கு வில்லன் வேஷம் மட்டுமே வரப்போகிறது! காதலியைக்கொஞ்சுவதாயிருக்கட்டும், கொஞ்சிய மறுகணத்தில் அவளைச் செவிட்டில் அறைந்து காலால் உதைப்பதாகட்டும், நண்பனையே சுட்டுக்கொல்வதாகட்டும் எட்டு வயது ஏற்படுத்திய அடிப்படைத்தேவைகளின் பாதிப்பு அவனின் காட்டுகோபமாய் நெஞ்சில் அறைய வைக்கிறது.
அடுத்தவர் மைக்கேல். மைக்கேல் வசந்தாக வரும் சூர்யா. காட்சிகளுக்கு இவரும் இவருக்கு காட்சிகளும் வசனமும் இட்லியும் சாம்பாரும் போல சரி விகிதத்தில் கலந்துகொள்கின்றன. படம் முடிந்த கணங்களிலும் இவரது பிம்பங்கள் கண்ணுக்குள் நிற்கின்றன. அம்மாவிடம் அனுசரனையாக பேசும் போதும் சரி, தங்கைகளிடம் பாசத்தை வெளிப்படுத்தும்போதும் சரி, அரசியல்வாதி '(சப்பாணி)அண்ணன்' செல்வநாயகத்திடம் கண்கள் குரூரத்தில் கலக்க பேசும்போது சரி, காதலில் ஹார்மோன்களின் பங்கு பற்றி காதலியிடம் பேசிவிட்டு அவளது கண்களை ஆழமான காதலில் பார்க்கும்போதும் சரி சூர்யா நல்ல நடிகராகத் தேறிவிட்டார். மிகவும் இளமையாக வேறு இருக்கிறார். இப்போதுள்ள ஹீரோக்களில் இந்தளவுக்கு பெர்சனாலிட்டி பிளஸ் நடிப்பு இவரிடத்தில் மட்டுமே மேலோங்கி நிற்பது மிகவும் நல்ல விஷயம். வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பாய்ஸ் நாயகன் சித்தார்த் அமெரிக்க கனவு கண்டு சென்னையில் வாழும் வாசி. அழகாக சிரிக்கிறார். அடுத்த இளம்பெண்களின் கனவுவாரிசாக அட்டகாசமாக வரலாம். வாய்ப்பிருக்கிறது. இவரெல்லாம் எம் எல் ஏ என்பது
மணிரத்னத்தின் செயற்கை குறும்பு.
பிரமிட் நடராஜனின் வரிசையில் சில 'கெட்டப்' கதாபாத்திரங்களுக்கு அட்டகாச நடிகர் கிடைத்து விட்டார். சப்பாணி படைத்த என் இனிய தமிழ் மக்கள் ·பேமஸ் பாரதிராஜா. சராசரி அரசியல் வில்லன்களின் வசனம் இவருக்கு எடுபடாது என்பததைத்தெளிவாக உணர்ந்திருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் மண்வாசனை தெளிக்க மிகவும் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது. முதல் மரியாதையில் 'தயவுசெய்து நீங்கள் நடிக்கவேண்டாம், அமைதியாக இயல்பாக நடந்துவாருங்கள்
உட்கார்ந்து இருங்கள்' என்று சொல்லி பாரதிராஜா, நடிகர்திலகத்தை நடிக்க வைத்ததைப்போன்று பாரதிராஜாவிடமும்
மணிரத்னம் சொல்லியிருப்பார் போலும். முகத்தை கடுகடுக்காமல் கன்னங்களை அசைத்து இம்சிக்காமல் கண்கள் மூலமும் வசன வெளிப்பாடு மூலமும் நடிக்க வைத்திருக்கிறார்.
ஐம்பதிலும் ஆசை வருமாம். வருகிறது. ஐம்பதைத்தாண்டி எழுபதுகளில் பயணிக்கும் ஒருவருக்கு அது அலையலையாய் கரை புரண்டு வருகிறது. ஐம்பது வயது இளைஞன் போல தன்னை உணர்வதாக நெல்சன் மண்டேலா சொல்கிறார்; இவர் எழுதுகிறார். அவர் வசனகர்த்தா சுஜாதா. படம் இயல்புகளைத்தொலைத்து நின்றாலும் எக்கணத்திலும் போரடிக்காமல் போவதற்கும் ரசிக்கவைப்பதற்கும் அவர் மட்டுமே காரணம். சுஜாதாவின் தட்டச்சு விரல்களுக்கு நல்ல தீனி!(பின்னே! அவர்தான் பேனாவால் எழுவதில்லையே!) புகுந்து விளையாடுகிறார் மனிதர். ஜெண்டில்மேன் பாய்ஸ் கணேஷ் வசந்த் என அத்தனை கூட்டணிகளும் அவருக்கு புதுத்தெம்பை அளிக்க மூன்று வித்தியாச கதாநாயர்களுக்கும் முழுமையான வசனங்களை அள்ளி இறைத்திருக்கிறார். படம் வெற்றி என்றால் முதற்காரணம் சுஜாதா மட்டுமே! 50 மிலி சாராயத்திற்காக எவனாவது மொத்த சாராயக்கடையையும் வாங்குவானா என்பது அவர் எழுதிய ஒரு டயலாக். கால்கட்டு வாசலில் இருப்பவர்கள் கவனிக்கலாம்.
நான்கு என் ஆர் ஐக்கள் சேர்ந்து சித்தார்த்தை கதாநாயகனாக்கி திரிஷாவை கதாநாயகியாக்கி ஒரு அடல்ஸ் ஒன்லி படம் எடுத்தார்கள் என்றால் தைரியமாக சுஜாதாவை வசனகர்த்தாவாக்கிவிடலாம். முதலிலேயே அவரிடம் அது ஏ படம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனையேயில்லை. படம் வசூலில் சாதனைதான். கவர்ச்சிக்காட்சிகள் இல்லாமலேயே அப்படி எழுத இப்போதும் முடியும்போல இவரால்.
மணிரத்னத்தின் வயதைச்சொல்லி அண்மையில் வியந்தது விகடன். அவ்வளவு இளமையாக இருப்பதாக. அதை நிருபிக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் அவர். ஆனால் பழைய சரக்குகளைத் தவிர்த்திருந்தால் நிறையவே பாராட்டியிருக்கலாம். மாதவனையும் பாரதிராஜாவையும் அக்கதாபாத்திரங்களுக்கு போட்டது மட்டுமே அவர் செய்த புதுமை. மற்றபடி காட்சிகளும் கதையும் இளமையானாலும் பழமை.
மணிரத்ன ரசனையாகத் தோன்றிய ஒரு காட்சியாக சூர்யாவும் ஈஷா தியோலும் ரயிலில் சந்திக்கும் காட்சியைச் சொல்லலாம். மற்றவை அனைத்திலும் அது மிஸ்சிங்.
இசை பரவாயில்லை. மணிரத்னத்திற்கென்று நிறையவே கஷ்டப்பட்டு போட்டிருப்பார் போல ரகுமான். தேறுகிறது. பாடல்கள் சில கதையோடு ஒன்றவில்லை. ஜன கண மண வைத்தவிர. வைரமுத்துவின் இளமை வரிகளுக்கு நெஞ்சமெல்லாம் பாடல் உதாரணம். வழக்கமான வைரமுத்து வரிகள் ஆங்காங்கு வந்து போகின்றன. அவர் கொஞ்சம் மாறலாம். புதுமையாக சிந்திக்கலாம்.
படத்தின் முதல் காட்சி மீண்டும் மீண்டும் ஐந்து முறை வருகிறது. அகிரா குரோசோவாவோ அலைபாயுதேவோ எது ஏற்படுத்திய பாதிப்பு தெரியவில்லை. படம் பார்க்கிறவர்கள் லேசாக உச்சுக்கொட்டுவது தீனமாக காதில் விழுகிறது. முழுக்காட்சியையும் மீண்டும் மீண்டும் போடுமளவுக்கு மக்களை முட்டாளாக நினைத்திருக்க வேண்டாம் இயக்குனர். சமீப கால வெற்றிகள் தந்த ஆர்வமா இல்லை பயமா இது?
அழகான வைரமுத்துவின் யாக்கை--திரி, காதல்-சுடர் பாடலை இப்படி கேவலப்படுத்தியிருக்கவேண்டாம். ஒரு ரீ-மிக்ஸ் பாடலைப் போடவேண்டிய இடத்திற்கு வைரமுத்து என்ன பாவம் பண்ணினாரோ தெரியவில்லை. வைரமுத்துவின் கவிதை எதற்கென்றும் தெரியவில்லை.
பெண்கள் தங்களது மேலாடை கிழிக்கப்படவேண்டும் என்றுதான் விரும்புகிறார்களா என்று மணிரத்னம் சொல்ல வேண்டும். ரோஜாவிலிருந்து வரும் வாரிசு காட்சி இது. காதலன், காதலியின் மடியில் புரளுவதும் அவளைப்போன்ற அழகான பெண்குழந்தைகளைத் தன் தேவையாகக் கூறுவதும் பம்பாயிலிருந்து பிரதிபலிக்கும் இன்னொரு காட்சி. மாமியாரிடம் தான் மாசமாவதற்கு தயார் என்று பேசும் மருமகள்கள் மணிரத்னம் படத்தில் மட்டுமே வருவார்கள். அப்படியே இரு தங்கைகள் இருக்கும் காதலனின் வீட்டிற்குச் சென்று அவனை அதற்கு தயார்செய்யும் காட்சிகளும்!
படுக்கையறைக் காட்சிகள் மட்டுமே இளமையையும் காதலின் ஆழத்தையும் சொல்லும் என்று மணிரத்னம் இன்னும் நினைக்கிறாரா?
சிவகாசியில் மாப்பிள்ளை பார்த்த பிறகு (முதலில் அது கதாநாயகி அவனை வெறுமனே ஏமாற்றுகிறாளோ என்று தோன்றுகிறது) இன்னொருவனுடன் கடற்கரையில் புரண்டாடும் பெண்கள் சென்னையில் இருக்கிறார்களா என்பது எனக்கேற்பட்ட மிகப்பெரிய ஆச்சரியம். நிஜமாகவே அப்படியானதொரு சூழ்நிலை நிலவுமானால் அது எல்லோருக்குமே வெட்கக்கேடு!
'மிஸ்டர் சந்திரமௌலி'யில் ஆரம்பித்து 'ஓடிப்போகலாமா' வழி வந்து ஜாக்கெட் கிழித்து போர்வைகளையும் சேலைகளையும் இழுத்து போர்த்தி அள்ளிவீசி பெண்ணை நவீன ஓவியமாக்கி பெண்குழந்தைகள் பற்றிப்பேசி என் புருஷன் எனக்கு வேணும் என்பதாய் முடிப்பதற்கு இன்னொரு புதுப்படம் எதற்கு?
இளமையாய் இருக்கிறது. கனமில்லை. மணிரத்ன சினிமா வரிசையில் திருடா திருடாவிற்கு முந்தையது!
எம்.கே.குமார்.
No comments:
Post a Comment