Monday, June 07, 2004

தாடியாரு.

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறக்கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம். ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.

ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே....ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

The whole world is his who chooses the right time and right place.

எம்.கே.குமார்.

3 comments:

ஈழநாதன்(Eelanathan) said...
This comment has been removed by a blog administrator.
எம்.கே.குமார் said...

Å¡í¸ ®Æ¿¡¾ý. ¸ÕòиÙìÌ ¿ýÈ¢. ¦¾¡¼÷óÐ ÀÊÔí¸û.

±õ.§¸.ÌÁ¡÷.

எம்.கே.குமார் said...

வாங்க ஈழநாதன். கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

எம்.கே.குமார்.

Search This Blog