கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து போலீசாரை மண்டைகாய வைத்ததும், தமிழகத்தை ஆட்டிவந்த பிரபல முக்கியமான செ, ஜெ, வழக்குகளைப்போல புகழ்பெற்று விளங்கியதும், அனுமார் வாலென நீண்டு, விசாரணை முடிவற்று இலக்கின்றி அலைந்து கொண்டிருந்ததுமான குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கு ஒருவழியாய் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
மீனாட்சி டீச்சர் தினமும் நிறைய நகை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்வது வழக்கம் என்றும், சாராயம் குடிப்பதற்காக அவரின் நகைகளைக் கொள்ளையடிக்க தீர்மானித்து எப்போதும் அவர் செல்லும் வழியை கவனமாய் நோட்டமிட்டோம் என்றும் அப்படியே ஒருநாள் அங்கேயே அவரை மடக்கி வாழைத் தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று நகைகளைப் பறித்து, விடாது பெய்த மழையிலும் அவரை மாறி மாறி கற்பழித்தோம் எனவும் இவைகளை மறைக்க கொலையும் செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் தந்திருக்கின்றனர் கொலையாளிகளான இருவர்.
தமிழ்நாட்டில் நடக்கும் மிகச் சாதாரணமான கொலைகளில் ஒன்றைப் போல தோன்றும் இக்கொலை முக்கிய ஒரு கொலையாக இடம் மாறத்துவங்கியது யாரால், எப்போது, எப்படி?
இக்கொலை செய்ததாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் பெரிய கேடிகளெல்லாம் இல்லை. பெரிதாகத் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்பவர்களும் இல்லை. அதுவும் அவ்வூரிலேயே இருப்பவர்கள். டீச்சரின் நகை அவர்களது மனைவிகளுக்கே வந்திருக்கிறது குடிப்பதற்காய் விற்றது போக. இப்படியெல்லம் பல பாயிண்டுகளைக் குறிவைக்காத இந்தியாவின் ஸ்காட்லான்ட் யார்டாம் தமிழக கேவலத்துறை சாரி காவல்துறை திட்டமிட்டு ஒரு குட்ம்பத்தைப் பழிவாங்கியிருப்பது, வெறுமனே அவமானகரமானது என்பதாய்ச் சொல்லிவிட்டுச் செல்லமுடியாதது.
தமிழ் சினிமாவில் வரும் கதாநாயக பழிவாங்கல் படலம் போல, கொலை செய்தவர்களை விட்டு சில அப்பாவிகளைப் பிடித்து விசாரணை என்ற பெயரிலும் உண்மை கண்டறியும் சோதனை என்பதாயும் மனவேதனைக்கு உட்படுத்திய காவல்துறையை என்ன செய்வது? ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏவிற்கே இந்நிலையெனில் (அதுகூடவே காரணமாயிருந்தாலும்) சாமான்யர்களின் கதி என்ன? ஹேபியஸ் கார்பஸ் மனு எப்படியெல்லாம் படுத்தும் ஒரு அப்பாவிக் குடியானவனை? போலீசாரின் அராஜகம் அத்துமீறல் முடியாதபொழுது கிடைத்தவனைப் பழிவாங்குதல் என்ற இத்துறையின் மூலக்கூறுகள் எத்துணை பொறுப்பற்றவை!
இதுகாறும் போலீசாரால் புழுகப்பட்டு வந்த அப்பாவிகள் விடுவிக்கப்பட்ட வுள்ளனர். தெரியாமல் பிடித்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள் என்று மட்டும் சொல்லி இரு வருடங்களாய் படுத்திய கொடுமையை எளிதாக மறைத்துவிட முயலலாம் தமிழக காவல்துறை! ஆனால் இது நியாயமா என்பதுதான் நம் கேள்வி.
மரபணுச்சோதனை, மயக்கவிசாரணை என்பவையெல்லாம் போக முன்னாள் எம்.எல்.ஏவான திரு. பாப்பா சுந்தரம், 2006 தேர்தலில் சில ஓட்டுகளில் தோற்பதற்குக்கூட போலீசாரின் பொறுப்பற்ற இக்கொலை வழக்கு விசாரணைதான் காரணமாயிருந்திருக்கிறது.
காரணகாரியமில்லாமல் பொதுமக்களையும் போக்கத்தவர்களையும் பொறுப்பற்றதனமாய் கைதுசெய்து அதனால் அவர்கள் தம் வாழ்விழந்து, மானமிழந்து, மரியாதையிழந்து, குடும்பமிழந்து இறுதியில் நிரபராதியாய் நிற்பது எப்பேர்ப்பட்ட கொடுமை என்பதை எப்போது இக்காவல்துறை உணரும்?
அன்பன்,
எம்.கே.
No comments:
Post a Comment