சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய தமது முப்பதாம் ஆண்டு நிறைவு விழா, முத்தமிழ் விழாவாக சிங்கப்பூர் பாலிடெக்னிக்கின் கலையரங்கில் கடந்த 29ம் தேதி மாலை சிறப்பாக நடந்தேறியது.
விழாவிற்குத் தலைமைதாங்கி கொஞ்சும் தமிழிலும் மேதமை ஆங்கிலத்திலும் அசத்தி அமர்ந்தார் திரு.தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் கல்வியமைச்சர் மற்றும் உதவி நிதி அமைச்சர். கருத்துரையை திரு.ஜெயமோகனும் இலக்கியப்பேருரையை திரு.வைரமுத்துவும் ஆற்றுவதாய் அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.
விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மிக அழகான உச்சரிப்புகளோடு ஒரு மாணவி பாடினார். மிகக்குறைந்த வயதிலேயே பாட்டுவட்டுகளும் அவர் வெளியிட்டிருக்கிறாராம்.
அதற்குப்பிறகு கதைசொல்லும் போட்டியில் வென்ற சிறுவயது மாணவி பெத்தனாட்சி கதை சொல்ல மேடையேறினார். அடடா! என்ன உச்சரிப்பு, என்ன அபிநயம்! வாரி அணைத்துக்கொள்ளவேண்டும் போலிருந்தது அக்குழந்தையை. மிக எளிமையான உடையில் இருந்ததால் எனக்கு இன்னும் பிடித்துப்போனது.
அதனைத் தொடர்ந்து செல்வி ஸ்ருதி ரமேஷ் மற்றும் அவருடைய தோழி இருவரும் இணைந்து வழங்கிய கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கான நடனநிகழ்ச்சி பாராட்டக்கூடியதாய் இருந்தது.
அதற்குப்பிறகு ஆரம்பித்தது பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவமாணவிகளுக்கான மாறுவேட இறுதிப்போட்டி. கட்டபொம்மன்களும் கண்ணகிகளும் திருவள்ளுவரும் தமிழ்த்தாயும் வீரசிவாஜியும் வெறுமனே வந்துவிட்டுச்செல்லாமல் அழகுமொழியில் அதிரவைத்து அனைவரின் நெஞ்சையும் கவர்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கட்டபொம்மனாய் நடித்த செவாலியே கூட இம்மாதிரி கையைச் சொடுக்கிப் பேசவில்லை என்னுமளவுக்கு அசரவைத்தார்கள் சிறுவர்கள். கண்ணகி சிலம்பை மன்னன் எதிரில் வீசியதில் எதிரில் அமர்ந்திருந்த அமைச்சர் அவர்கள் கொஞ்சம் திணறித்தான் போனார். அருகிலிருந்த தனது சீன உயர் அதிகாரிக்கு அவர் அதை விளக்கிச்சொன்னது தெரிந்தது. முத்துகளும் மாணிக்கங்களும் மேடைக்குக்கீழே சிதறிக்கிடந்தன.
எழுத்தாளர் கழகத்தில் பொருளாளர் பதவி வகிக்கும் திருமதி. சித்ரா ரமேஷ் மற்றும் செயலாளர் திரு.சுப.அருணாசலம் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.
சிங்கப்பூரில் தமிழுக்கு அடையாளம் கொடுத்த தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி அவர்களுடைய நினைவாக ஒவ்வொரு வருடமும் தமிழ்வேள் விருது வழங்கும் பணியும் நடந்தேறிவருகிறது. இம்முறை கவிஞரேறு அமலதாசு அவர்களுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. ஐந்தரை பவுனும் பாராட்டுச்சிறப்பிதழையும் பெற்ற அவர் குரல் தழுதழுக்க கண்கள் சலசலக்க உணர்ச்சிப்பிழம்பானார்.
1967லே என்று ஆரம்பித்த அவர், அதற்குப்பிறகு பலவருடங்கள் முந்திபிந்தி பல உதாரணங்களைக் கூற ஆரம்பித்தார். முடிக்கவும் என்று நிகழ்ச்சி நெறியாளர் கொடுத்த குறிப்புகளையெல்லாம் நிராகரித்து முடிக்க மறுத்தவர், வைரமுத்து அவர்களை கலைஞருக்கு மிக நெருக்கமானவர் என்றும் வைரமுத்து சொன்னால் எது வேண்டுமானாலும் கலைஞர் செய்வார் என்றும் முன்மொழிந்து அப்படியே இந்திய ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.எ அவர்களுக்கும் வைரமுத்து அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் என்பதையும் கூட்டத்திற்குச்சொன்னார்.
தமிழ்வேள் திரு. கோ.சா வுக்கு சென்னை மெரீனாவில் ஒரு சிலை வைக்கத்தான் இத்தனை கூப்பாடும் என்பது பிறகு தெரிந்தது.அமரர். கோ.சா அவர்களுக்கு உரிய மரியாதையை தமிழகத்தில் (திராவிடர் கழகத்தின் ஒரு கல்லூரி கட்டிடத்திற்கு கோ.சாரங்கபாணி அரங்கம் என்று பெயர் பொறித்து திரு.வீரமணி அவர்கள் கௌரவப்படுத்தியது ஞாபகம் இருக்கலாம்) அவர் எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருப்பதை உணரமுடிந்தாலும் மெரீனாவில் இன்னொரு சிலை என்பதை இப்போதெல்லாம் கோர்ட்டுகளே தீர்மானிக்கின்றன.
எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. ஆண்டியப்பன் அவர்கள் தனது வரவேற்புரையில் (தலைமையேற்கும் அரசு ஆட்களை எளிதாக மடக்கும் வழக்கமான காரியத்தில் தானும் நுழைந்து) அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
அதற்குப்பிறகு அமைச்சர் பேசியது போக, வெற்றிபெற்ற குழந்தைகளுக்கும் சிறுகதை, கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்துவந்தார் திருமதி சித்ரா ரமேஷ், திரு.ஜெமோவை பேச அழைக்க. ஜெ.மோவைப்பற்றிய ஒரு விசாலமான கவனமறிதலை வீசியவர் மறக்காமல் கஸ்தூரிமானையும் நான் கடவுளையும் சேர்த்துக்கொண்டார்.கூட்டம் சிறிது சலசலப்புடனும் ஏனோதானோவென்றும் ஆரம்பித்த வேளை, ஜெயமோகன், 'மற்ற மேடைப்பேச்சாளர்களைப்போல நான் பேச முடியாமல் போகலாம், எனது பேச்சும் அப்படிப்பட்டது இல்லை' என்று ஒரு ஜெர்க் கொடுத்து பேச்சை ஆரம்பிக்க, கூட்டம் நிதானித்து பேச்சுக்குள் இறங்க எத்தனித்தது.
'இலக்கியம் என்பது எதற்காக' என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தவர், காந்தியை எடுத்தாண்டு, கோபல்லகிராமத்தின் மூதாட்டியின் வாக்கை முன்வைத்து, இந்திய நாட்டின் அடிப்படையை ஆராய்ந்து, இலக்கியங்கள் இருப்பது மன அறம், மனித அறம், சமூக அறம் ஆகியவற்றை வளர்க்கத்தான் அல்லது பேணத்தான் என்றார். பலவாழ்க்கையில் தன்னை நுழைத்துப்பார்க்க இயலாத வாசகன் இலக்கியத்தின் வாயிலாக அவற்றைச்செய்துகொள்ள விரும்புகிறான் என்றும் சொன்னார். ஆண்முகத்தில் முடி இருக்கும், பெண்முகத்தில் இருக்காது, பெண் சருமம் மிருதுவாய் இருக்கும், இவற்றிற்கு தன் உடலை விதவிதமான அலங்காரங்களில் தானே பார்த்துக்கொள்ளப்பிடிக்கும் என்று இப்பூமியில் வாழும் மனிதர்களை குரங்குகளாய் எண்ணி ஆய்வு மேற்கொள்ளும் ஒரு இன்னொரு கிரகவாசி உதாரணத்தையும் சொன்னார்.
இவ்வாழ்வியல் அறத்தில் முழுதும் நிற்கும் காந்தி போன்றவர்களுக்கு இலக்கியமே தேவையில்லை என்றும் காந்தி தன் வாழ்நாளில் (டால்ஸ்டாயின்(என நினைக்கிறேன்) ஒரே ஒரு புத்தகம் தவிர) எந்த இலக்கியத்தையும் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முதன்முதலில் அவர்களை வரவேற்று உபசரித்தது இந்திய தேச அறவாழ்வின் அடையாளம் என்றும் அவர்களும் அதற்கேற்றவர்களாய் தம்மை (முதலில்) காட்டிக்கொண்டதும் காரணமென்றார். (இதைச்சரியாகப் புரிந்துகொள்ளாத வைரமுத்து அவர்கள் என்ன செய்தார் என்பது அடுத்து வருகிறது.) தாய் தந்தையரை இழந்து ஒரு நாடோடிபோல தான் அலைந்த காலத்தில் இந்தியதேசம் எங்கும் ஒருவேளைச்சாப்பாட்டுக்குக்கூட தான் பட்டினியாக இருந்ததில்லை என்றும் காரணம் இந்தியாவில் இருக்கும் எல்லாத் தாய்மார்களும் அவ்வளவு அறநெறி வாய்ந்தவர்கள் என்று அவர் சொன்னபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்து அடங்கியது. இன்னும் சில இடங்களில் கைத்தட்டலையும் பெற்ற அவருக்கு இது ஒரு நிறைவான பேச்சாகவும் கேட்டவர்களுக்கும் திருப்தியாகவும் இருந்திருக்கும் என உறுதியாக நம்பலாம்.
கவிப்பேரரசு அதற்கடுத்த நாள் நடத்திய கவியரங்கத்தில் மிகச்சிறப்பாகச் செய்ததாக எல்லோரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு முதல்நாள் அவர் பேசிய பேச்சு, அபத்தமோ அபத்தம் என்பதை அவர் நன்றாக உணர்ந்துகொண்டார் போலும்!
'வடக்கிலிருந்து வரும் வாடை, தெற்கிலிருந்து வரும் தென்றல், கிழக்கிலிருந்து வரும் கோடை, மேற்கிலிருந்து வரும் கூதல்' என்று பேசி, 'ஆகவே தமிழர்களே'( ம்ம், கை தட்டுங்கள் என்பதற்காய்) என ஒரு நிறுத்து நிறுத்தி பிறகு இணையத்திலும் பலகாலமாய கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன சில டாக்டர் ஜோக்குகளையும் சொல்லி 'பேசு தமிழா பேசு' என்றார்.கவிப்பேரரசு தான் கவிழ்வது தெரிந்ததாலோ என்னவோ, 'நண்பர் ஜெயமோகனின் இக்கருத்தில் முரண்படுவதற்கு வருந்துகிறேன் எனச்சொல்லி, ஆங்கிலேயர்கள் வந்து வெற்றிபெற்றது நம்முடைய அறத்தாலல்ல, பிளவால், ஒற்றுமையின்மையால் என்று சொன்னார். இதை சில நிமிடங்கள் வலியுறுத்திச்சொன்னார். மறக்காமல் கலைஞரைப் பாராட்டினார்.
இந்தியக்கூட்டங்களுக்கே உரித்தான சில 'நல்ல' விஷயங்கள் சிங்கப்பூர இந்தியர்கள் கூட்டத்திலும் இருக்காது என்று நான் நம்பியதை கான்கிரீட் போட்டு சமாதியாக்கினார்கள் சிலர்.
அமைச்சர் வரும்போது அரங்கமே எழுந்துநின்று கரவொலி எழுப்பவும் என்று சொன்னவர்கள், அமைச்சர் வந்தபிறகு ஜெயமோகனை அழைத்துவந்து அமரச்செய்துவிட்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். திடீரென 'ம்ம், எல்லோரும் எழுந்து நின்று கரவொலி எழுப்புங்கள்' என மயில்சாமி ஒரு படத்தில் சொல்வதுபோல கவிப்பேரரசு வைரமுத்து வருவதை பறையறிவித்தார்கள். கூட்டமே எழுந்து வெள்ளையாடையில் வந்த தேவனை தரிசித்தது. மிடுக்கு குலையாமல் வந்தமர்ந்தார் அவர். தாமதத்திற்கு காரணமோ வருத்தமோ அவரும் சொல்லாத நிலையில் வைரமுத்து அவர்களுக்கு மட்டும் இத்தகையை அதீத வரவேற்பு ஏன் என்பதாய் சில சலசலப்புகள்.
நிகழ்ச்சி நடத்துதலில், பரிசு வழங்குதலில் என முன்னுக்குப்பின்னாய் பல தவறான அறிவிப்புகள்.அமைச்சரின், வைரமுத்து அவர்களின் இடத்தை அடைத்து குழந்தைகளும் பெரியவர்களும் போட்டோ எடுத்துக்கொண்டிருக்க மேடைக்குக் கீழேயும் புரோகிராம் நடந்தது. மேடை நிகழ்ச்சியைப் பார்ப்பதா இல்லை கீழே போட்டோஷெஷனை பார்ப்பதா என எல்லோரும் விழித்தனர்.
எனினும் ஒட்டுமொத்த முத்தமிழ்விழாவில் குழந்தைகளின் வாயிலாகத் தமிழ்த்தாய் சிரித்துமகிழ்ந்திருப்பாள். அவளின் அறஉணர்வு, உண்மைகளை அவளுக்கும் உணர்த்தியிருக்கும்.
(குறிப்பெடுக்காமல் எழுதியது. கருத்துகளில் ஏதேனும் தவறிருக்கலாம்!)
3 comments:
எம்.கே.குமார்
போகாத குறையை தீர்த்திடீங்க.
கொஞ்சம் லேட்டாக பார்கிறேன்.
நன்றி
செய்திக்கட்டுரையாகவும், விமர்சனக் கட்டுரையாகவும் நன்றாக வந்திருக்கிறது கட்டுரை.
'இலக்கியப் பேருரை' ஆற்றிய வைரமுத்துவை, வெறும் 'கருத்துரையாற்றிய' வைரமுத்துவுக்கும் சமமான வரவேற்பு தரும் காலம் வர கஸ்தூரிமானும், நான் கடவுளும் போக இன்னும் சில படங்கள் வந்து சிறப்பாக ஓடிவிட்டால் போதும், அது வரையில் காத்திரும்.
சரியான முன் தயாரிப்புக்கு சோம்பலுரும் பிஸியான பட்டிமன்றப் பேச்சாளர்களின் அத்தனை உத்திகளும் கொண்டதாக இருந்தது, 'கவிப்பேரரசுவின்' 'இலக்கியப் பேருரை!
வாழ்க தமிழ் மக்களின் விழிப்புணர்வு!
நன்றி வடுவூர் குமார் மற்றும் மானஸாஜென் ரமேஷ்.
அன்பன்
எம்.கே.
Post a Comment