குறிப்பிட்ட தமிழ்ப்படம் சிங்கப்பூரில் எந்த தியேட்டரில் ஓடுகிறதென்பதை 'தமிழ்முரசி'ல் தேடுவதுதான் என் வழக்கம். 'நல்ல' படம் எதுவும் சிங்கப்பூரில் நிறைய நாட்கள் ஓடாதே; மைனாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டதோ' என்றவாறு தேடினால், "ரசிகர்களின் விரும்பத்திற்கிணங்க, மீண்டும், ரெக்ஸ் திரையரங்கம்-1ல் மாபெரும் திரைக்காவியம் - மைனா" என்றிருந்தது. தோமஸைப் போன்றவன் நான். ரெக்ஸ் திரையிரங்கிற்குத் தொலைபேசினேன். படம் ஓடுகிறதா, எத்தனை மணிக்குக் காட்சி, கட்டணம் எவ்வளவு. சந்தேகம் தீர்ந்தது. மைனாவைப் பார்த்துவிடுவது என்றுமுடிவுசெய்துவிட்டேன்.
அண்மைக்காலமாக எந்த தமிழ்ப்படத்தைப் பார்த்தாலும் எனக்கு கமல்ஹாசன் ஞாபகம் வருவது நல்லதா கெட்டதா என்பதை செராங்கூன் ரோடு 'மணி' கிளிதான்சொல்லவேண்டும். 'மைனா'வைப் பார்த்துவிட்டு அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன் என்று 'கமல்' சொல்லியிருந்தது வேறு 'கூடுதல்' ஆவலை என்னுள் புகுத்தியிருந்தது.
ஓடும் ரயிலில் 'எழுத்தும் இயக்கமும் - பிரபு சாலமன்' என்ற நிலையில்'மைனா'வுக்குள் இணைந்தேன்.
கதையை வானத்திலிருந்தோ அல்லது கற்பனைக்கெட்டாத ஒன்றிலிருந்தோ எடுக்கவில்லை என்பதே ஒரு மிகப்பெரிய அண்மைய ஆறுதல்களில் ஒன்று.
படிப்பு வராமல் வெட்டியாய்த் திரியும் சிறுவன் ஒருவன், தெருவில் நிற்கும் ஆதரவற்ற தாயையும் மகளையும் தனது மலைக்கிராமத்தில் குடியேற்றுகிறான். அப்பெண்ணின் மேல் உயிராய் இருக்கும் அவன், வருடங்கள் கடந்து, அவளையே மணக்க வேண்டும் எனக் காதல் பைத்தியமாய் திரியும் போது அந்தப்பெண்ணின் அம்மா, அவனுக்கு அவளைக் கட்டி வைக்க முடியாது என்று வெகுண்டெழுகிறாள். காதல் ஜோடி ஓடுகிறது; போலீஸ் துரத்துகிறது. முடிவு என்ன? இதுதான் கதை. இவ்வளவு சாதாரண ஒரு கதையைத் திரைக்கதையின் மூலம் பறக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்.
மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதைகளைப் பதிவு செய்வது ஒரு மாபெரும் வேலை. படம் முழுக்க வரும் பச்சையும் ஈரமும் கடைசிக்காட்சி வரை தொடர்கிறது. பிரபுசாலமன் சொன்னது போல இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போல இருக்க வேண்டும். அப்போதுதான் அசலான பதிவு கிடைக்கும். இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நன்றி.
குணா படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை. மலையை, இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு புகைப்படம் எடுப்பவர்கள் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும்; அவ்வளவு அழகு காட்சிக்கு காட்சி.
கதையை ஏன் தீபாவளிக்கு முன் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தபோது வில்லனே தீபாவளிதான் என்பது அதிர்ச்சி. தலைதீபாவளி கொண்டாட முடியவில்லையே என்றெல்லாம் வன்முறையில் இறங்கும் கும்பல் தமிழ்நாட்டில் இருப்பது அதிர்ச்சியாயிருந்தாலும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரண காரியங்களைப் பகுத்தறிய முயன்றால்தான் அச்சம்பவமே நடக்காதே?! அந்த நேரத்தில், அந்த மனிதன்,அப்படி இருந்தான்; அவ்வளவுதான்!
மிகப்பெரிய ஆச்சரியம் நாயகி அமலா பால். இத்தனை குட்டியூண்டு (19 வயதுதானாம்),புதுமுக நடிகை எல்லாம் காமிரா முன்னால் நிற்கிறோம் என்ற சொரணை '1 சதவீதம்'கூட இல்லாமல் இப்படி (அ)சாதாரணமாக இருக்க (நடிக்கிறார்கள் எனச்சொல்ல முடியவில்லை!) முடிகிறதே, அது எப்படி என்பதுதான்.
நாயகி அமலா பால் பெரிய அழகியெல்லாம் இல்லை. (அவரை விட பெரிய அழகி, படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது, ரெக்ஸ் திரையரங்கு வாசலில்,எனதுமுன்னால் சென்றார்; நாம் பார்ப்பதை யாரும் பார்க்காமல் பார்ப்பது எப்படி என்று நிறையப்பேருக்கு "கிளாஸ்" எடுக்கவேண்டும்) ஆனால் படத்தில் மைனாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிந்துசமவெளியில் நடித்த பாவத்திற்கு இது விமோசனம்என்கிறார்கள் சிலர். அப்படத்திலும் எனக்கு அவரைப் பிடித்திருந்தது. நல்ல நடிகை என்பவள் எல்லாவிதக் கதைகளிலும்தானே நடிக்கவேண்டும்.
விதார்த் கதையின் நாயகன்; ஒரு கதையை உருவமாக்க, பொருத்தமான ஆள்தான் தேவை; நடிகருக்குக் கதை இல்லை. அந்த வகையில் விதார்த் பட்டையைக்கிளப்புகிறார். கூத்துப்பட்டறை பாசறையிலிருந்து வந்தாலும் கதைக்கேற்றவர். அடுத்தடுத்துப் படங்கள் வருவது கஷ்டம் தான், காரணம், கதை நாயகனாகிவிட்டிருப்பது.
தம்பி ராமையாவின் காமெடி மீது எனக்குப் பெரிதாய் அபிப்பிராயம் இருந்ததில்லை. காமெடிக்கு முயற்சிக்கிறார் என்றே நினைந்திருந்தேன். இப்படம் அவருக்கு ஒரு மைல்கல். காமெடிக்கும் குணச்சித்திரத்திற்கும் ஏற்றவாறு ஒரு நடிகர். மணிவண்ணனின் (இல்லாத) இடத்தைப் பிடிக்கலாம்.
அறிமுக நடிகர் சேது (போலீஸ்) அபாரம். ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இவர் கோபம் பொங்கப் பேசும் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் உண்டாவது. இவரைக்கதாநாயகனாக வைத்து 'விருமாண்டி' ஸ்டைலில் மற்றொரு பார்வையில் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்? நேற்றுவரை அந்த ஞாபகம் தான். படம் பார்த்தவர்களும் யோசிக்கலாம்.
படத்தின் நாயகன் கொலைகாரக் கும்பலில் ஒருவனோ அல்லது ரௌடியோ இல்லை என்பது மிக மிக மிகப்பெரிய ஆறுதல். இயக்குனருக்கு நன்றி.
போலீஸ்காரர்கள் அனைவரும் மனிதர்களே; மனிதர்கள் அனைவரும் பழிவாங்குபவர்களே என்பதைச் சொல்லும் காட்சி. (சோத்துல வெஷத்தை வெச்சி கொன்றுடுவேன், என்கவுண்டரில் போட்டுருவேன்) பழிவாங்கக் காத்திருப்பவர்கள்,மன்னிப்பும் வழங்குவார்கள்; மன்னிக்க முடிந்தவர்கள் பழியும் வாங்குவார்கள்;பழிவாங்கியவர்கள் மனிதனாகவும் ஆவார்கள் எனப் போலீஸ்காரர்களைச் சுற்றி வெறொரு உலகத்தை காண்பித்த இயக்குனருக்கு இன்னொரு நன்றி.
முரட்டு மீசை, பெரிய மச்சம், கனத்த சரீரம், பரட்டை முடி, விரிந்த கிருதா வரிசையில்'அம்மை போட்ட தழும்பு முகம்' என்பதும் வில்லன்களின் உருவகமாக ஆக்கமுற்படுவது தவிர்க்கப்படவேண்டும். அப்படி ஒரு படிமத்தை பார்ப்பவர்கள் மனதில் உருவாக்க அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத்தெரிந்த பல வில்லன்கள் எப்போதும் "ஒயிட் அண்ட் ஒய்ட்" ஆடையில் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள், அமைதிப்படை ராஜராஜசோழனைப்போல! இன்றுவரை மனதில் நிற்கும் கொடூர வில்லன்களில் "சத்யா" கிட்டியும், "மகாநதி" ஹனிஃபாவும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கமல்ஹாசனுக்கு நன்றி.
சினிமாவில் நல்ல இயக்குனர்கள் தென்படுவது ஒரு ஆறுதல். பிரபு சாலமன் அந்த முயற்சியில் வெற்றிபெற்றாலும், அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் என்று இப்போதைக்குச் சொல்லமாட்டேன். காரணம், இப்படி ஒரு படத்தை மீண்டும் அவர் கொடுக்க வேண்டும். படத்தில் சில காட்சிகள் நிறைவற்று இருந்ததாக அல்லது ஏதோ ஒன்று குறைந்ததாக நினைவு. எனது அளவுகோல், இயக்குனர் பாலாவினுடையதும் கமலுடையதும் ஆகும்.
மிகுந்த நிறைவுணர்வை அளிப்பதில் பின்னணி இசை முன்னுக்கு நிற்கிறது. பாடல்களில் மைனா மைனா பாடல் நெஞ்சை உரசுகிறது. (மீண்டும்) நல்வரவு டி.இமான்.
தோல்விப்பட(ல)த்திலிருந்து பிரபுசாலமன் மீண்டுவந்ததிற்கு அவரது கடின உழைப்பில் மிளிர்ந்த, பின்வருவனவற்றைச் சொல்லமுடியும்.
o ஒரு சாதாரண கிராமத்துக் காதல் கதையாய் இல்லாமல் புதியதொரு மலையும் மலை சார்ந்த காதலுமாய் முன்னிருத்தியதால்
o மிக மிக நேர்த்தியான திரைக்கதை
o உணர்வுகளோடு ஒத்துப்போகும் ஒளிப்பதிவும் இசையும்
o கதைக்கேற்ற பொருத்தமாய் நட்சத்திரங்கள்
o ரசனையாயும் புதுமையாயும் படத்தில் வரும் சிறு சிறு காட்சிகள் (உதாரணம்,மனித உரிமை ஆர்வலர், பல் டாக்டர்…)
o எதிர்பாராத இடத்திலிருந்து வரும் முடிவுகள்
o நாயகன் - நாயகியின் மிக மிக இயல்பான நடிப்பும் கதைகேற்ற பொருத்தமும்(நாயகியின் பருவமும் ஹி..ஹி..ஹி..)
தமிழ் சினிமா நண்பர்களுக்கு எனது நாலணா அறிவுரைகள்...
1. இன்னும் ஒரு நான்கு வருடங்களுக்காவது சிறு பருவத்து நட்பு, காதல், அன்பு,வண்டி ஓட்டுதல், கூட்டாஞ்சோறு ஆக்குதல் என்பதாய் எடுத்துத் தொலைக்காதீர்கள். அப்படியே எடுத்தாலும் கிராமத்தை விட்டு விட்டு நகரத்துக்கு வாருங்கள். (ஆமாம், நகரத்தில் வளர்ந்த பசங்களெல்லாம் ஏழு எட்டு வயதில் என்னதான் செய்வார்கள்? அப்பா அம்மா விளையாட்டு, ஓணானை விரட்டுதல், பக்கத்து வீட்டு அண்ணனுக்கு காதல் தூது செல்லுதல்..இப்படி ஏதும்...உண்டா? எனக்குத் தெரியவில்லை.)
2. சாதாரண காதல் கதையை எடுத்து, கிளைமேக்ஸில் உணர்ச்சியை ஊற்றி,வெற்றியைப் பிழிந்து விடலாம் என கனவு கண்டு அப்படிப் படம் எடுக்காதீர்கள். படம் கண்டிப்பாய் ஃபிளாப் ஆகும்.
3. மைனாவைக் காப்பி அடிக்காதீர்கள்.
*******
இது, இப்படி நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று, 'மைனா' பார்த்துவிட்டு வருபவர்கள் அனைவருமே நினைப்பார்கள். அதுதான் வாழ்க்கை என்பது நம் வாழ்க்கையிலிருந்து கூட நாம் அறிய இயலும், ஆனால் அறியாத ஒன்று. அதுதான் வெற்றிக்கான பாதை என்பது தமிழ் சினிமாவில் தெரியத்தொடங்கியிருப்பது "சேது" கொடுத்த தைரியம். தைரியம் தரும் பாதை சிறக்கட்டும். எம்.கே.குமார்.
நன்றி: தங்கமீன்