Friday, May 27, 2011

நடுநிசி நாய்கள் – ஒரு சிறப்புப்பார்வை

தமிழ் வலைப்பூக்களை அண்மையில் அதிகமாய் மேய்ந்ததில், சூடும் காற்றும் மெல்ல சேர்ந்தேறி, நடுநிசி நாய்கள் என்ற புதிய படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என, வயிறு உப்பி, கும்பி சூடு கண்டிருந்தது. இதற்கு மேலும் காயவிட்டால் கும்பி என்னாவது என்பதால் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.

நடுநிசியில் தான் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என எனக்கு இருந்தது போலும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிங்கப்பூரின் ரெக்ஸ் திரையரங்க வாயிலை அடைந்து டிக்கெட் கேட்டேன். நள்ளிரவு1215க்கு காட்சி. அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ’இந்த நட்ட நடுராத்தியில படத்துக்கு வந்திருக்கு பாரு நாயி’ என்பதாய் கூடலின் உச்சஸ்தானத்தின் எரிச்சல் அடைந்தவரைப் போல பார்த்தார்.

நடுநிசி நாயின் இயக்குனர் ’கௌதம் வாசுதேவ மேனனை’ ’மின்னலே’ படம் வந்ததிலிருந்து எனக்குத்தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா எனக்கேட்பவர்களை ஆண்டவன் தண்டிக்கட்டும்.) அப்போது அவர் கௌதமாய் இருந்தார். அதற்குப்பிறகு சில போலீஸ் குட்டிக்கரணங்களையும், சித்தப்பாவை வைத்து ஒரு விரும்பத்தகாத படத்தையும், தனது அப்பாவை வைத்து ஒரு பாடல்படத்தையும் எடுத்த பின்பு, இந்த ந.நி.நா படத்துக்கு வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த “மேனனை” அவர் தன் பெயருடன் சேர்க்க பட்ட பாடு, எந்த நடுநிசி நாயும் படாத, வார்த்தையால் சொல்லமுடியாத பாடு. அதை விடுங்கள்.

கௌ.வா.மே மிகவும் நல்லவர். உணர்வுகளை அழகாய்ச் சொல்பவர். பெண்களை மதிப்பவர். எனக்கு அவரைப் பிடிக்கக்காரணம் ஜோதிகாவுக்கும் திரிஷாவுக்கும் புடவை கட்டிப் பார்த்தவர் என்பதால் மட்டுமல்ல; தாமரை என்ற பெண்கவிஞரை உச்சம் கொள்ளச்செய்தவர் என்பதால் மட்டுமல்ல; நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று சூடேற்றியவர் என்பதால் மட்டுமல்ல; அவர் செம்மொழிப்பாடலுக்கு இயக்குனர் என்பதால் தான். அந்த வகையில் தமிழர்களுக்கு விஜய் நம்பியார், சிவசங்கர மேனன் போல இவரும் நண்பர்தான்.

இந்த நடுநிசி நாய்கள் என்ற தலைப்பைப் பற்றி ரெண்டு வரியில் சொல்லிவிடலாம் எனத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமி என்று தென்தமிழ்நாட்டில், மலையாள தேசத்திற்கருகில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய ’உடம்பில்’ பிறந்தவர்களில் மிக முக்கியமான இருவர் அண்ணன் பசுவய்யாவும் தம்பி ஜேஜேயும். அண்ணன் பசுவய்யா பெரிய கவிஞன். தம்பி ஜே ஜே பெரிய சிந்தனாவாதி. அந்த அண்ணன் படைத்து, 1975ல் முதற்பதிப்பாய் வந்த 29 கவிதைகளைக் கொண்டதுதான் இந்த நடுநிசிநாய்கள் கவிதைத்தொகுப்பு. (நடுநிசி நாய்கள் என்று எங்கே தேடினாலும் வாசுதேவ மகா மேனன் தான் தற்போது கிடைக்கிறார்; பசுவய்யாவை புத்தக புழுதிகளில் தான் எங்காவது தேடவேண்டும் போலிருக்கிறது.)

அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர், இப்படத்தில் நடித்த நடிகை சமீரா ரெட்டி. அவர் ஒன்றும் அழகெல்லாம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள்தான் நம்பப்போகிறீர்களா இல்லை கௌதம் வாசுதேவ மேனன் தான் ஒத்துக்கொள்ளப்போகிறாரா? அண்மையில் ஒரு தொ.கா நிகழ்ச்சியில் பேசிய கௌ.வா.மே, தனக்கு சமீராவைப் பிடிக்கும் என்றார். அதனால் எனக்கும் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர், உடலுக்கு மூஞ்சியைப் போல படத்துக்கு முக்கியமானவர். அந்த வகையில் மனோஜ் பரமஹம்சா விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கௌ.வா.மேயின் இப்படத்திலும் ஒளிஓவியம் செய்திருக்கிறார். (முதல் ஒளி ஓவியரே, எங்கேயிருக்கீங்க, 9ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடத்துக்கு அப்புறம் ஆளக்காணோம்?)

படம் தகாத உறவு பற்றியும் எல்லோருக்கும் கிடைக்காத தகுந்த உறவு பற்றியும் என்று சொல்லியது போதாதென்று, கலாச்சாரக்காவலர்களை மிகவும் அதிர்ச்சியாக்கும் என்று வேறு சொல்லியிருந்தார்கள். இதனால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியானது. நான் கலாச்சாரக் ’காவலன்’ இல்லை, அது விஜய். இருந்தாலும், எனக்குக் கிடைக்காத எதுவும் அடுத்தவர்களுக்குக் கிடைத்தால் அந்த அதிர்ச்சி ஏற்படும். குறிப்பாய்....வேண்டாம் விடுங்கள். அதைப்பற்றியா பேசுகிறோம்?

சரி, ரெண்டு டிக்கெட் என்றேன். அருகிலிருந்த இன்னொரு ’கவுண்டர்’ பெண் (கவுண்டரா தெரியவில்லை, வேறு ஜாதியாகவும் இருக்கலாம்) அதே தியேட்டரில் ஓடும் ஒரு மலாய் படத்துக்கு (மலாய் ந.நி.நாயாய் இருக்குமோ) வந்த கூட்டத்துக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் ரெண்டு டிக்கெட் என்றேன். அந்த நண்பர் எழுந்து உள்ளே சென்றார். இப்போது என் பக்கம் திரும்பிய அந்தப்பெண் (மலேசியப்பெண்ணாக இருக்கவேண்டும்; அவ்வளவு அழகு!) சாரி டிக்கெட் இல்லை என்றார்.

என்ன? ஏன் டிக்கெட் இல்லை? நடு நிசி நாய்கள் படத்துக்கு நடுநிசியில் கூட கூட்டம் வருகிறதா, ஆச்சர்யமாய் இருந்தது.

மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்டேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் அனுமதி இல்லை என்றார். என்ன நானா குழந்தை, என் மனசைச் சொல்கிறாரோ என்று குழம்பிய வேளையில், அவன் தான் தூங்குகிறானே என்றார் என் மனைவி.

அவன் திடீரென விழித்து எழுந்து விட்டால், என்ன செய்வது என்று கேட்டார் அப்பெண்.

ம்ஹூம், என்ன சொல்வது, பெண்கள் தான் எவ்வளவு புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு ’பயணம்’ ஆனேன்.

நடுநிசி நாய்கள் படத்தை நான் மட்டுமே செல்லும் ’சிறப்புப்பார்வை’யில் தான் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளியானது

No comments:

Search This Blog