Thursday, April 21, 2016

1. எதிர்-அலையில்லாத(?!) அதிமுக கரையேறுமா? - தமிழ்நாடு 2016சட்டசபைத் தேர்தலைப் பற்றி நாலுவார்த்தை!

தமிழ்நாடு 2016 சட்டசபைத் தேர்தலைப் பற்றி ஏதாவது எழுதாமல்போனால் சாமி குத்தமாகிவிடும். சாமன்யனுக்கு தேர்தலையும் திரைப்படத்தையும் விட்டால் போக்கிடம் ஏது? அதனால், இந்ததேர்தலைப்பற்றி நாலுவார்த்தை எழுதிவைத்துவிடலாம் என்று நள்ளிரவில் தோன்றியதால் இங்கே எழுதிவைக்கிறேன்.



1. எதிர்-அலையில்லாத(?!) அதிமுக கரையேறுமா?
முதலில் ’எந்தவித எதிர்அலையும் அடிக்காத, அல்லது சிக்கலிலும் சிக்காத அதிமுக’ என்று சிலர்சொல்வதைக் கேட்பது அபத்தமாக இருக்கிறது. சாவு வரவில்லையாதலால் சுடுகாடு சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறும் பாக்கியவான்கள் அவர்கள். நிற்க.

தமிழக வரலாற்றில் எந்தவித வளர்ச்சியும் இல்லாத ஐந்து வருடங்கள் என்பது, கடந்த ஐந்து வருடங்கள்தான். ஐந்து வருடத்தில் ஒரு குடியானவனுக்கு, ஒரு மாணவனுக்கு, ஒரு இல்லத்தரசிக்கு, ஒரு பெண்குழந்தைக்கு எதுவுமே நடக்காதா? உங்களுக்கு கடந்த ஐந்து வருடங்கள் நாட்டில் எதுவுமே நடக்காமல் உங்களுக்குச் சோறுமட்டும் கிடைத்தால் அலையடிக்காத வாழ்க்கை என்று ஆனந்தப்படுவீர்களா?? எதிர்காலத்தில் அந்தச்சோறுக்கே வழி செய்யவில்லையென்றாலும்?

ஒரு மாநிலத்தைப் பிரித்து இரண்டாக்கினார்கள். புதுதலைநகரம் வேண்டும். சிங்கப்பூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தார். ஆற்றின் கரையில் மிகவும் திட்டத்தோடு உருவாகிக்கொண்டிருக்கிறது அமராவதி நகர். ஆந்திரப்பிரதேசத்தின் புதுதலைநகர். கனவுடன் முன்செல்கிறார் சந்திரபாபு நாயுடு, எடுத்துக்கொண்ட காலம் இரண்டு ஆண்டுகள். அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதியில்லை என்றது அந்நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமகனாய் வருகிறேன், இல்லையென்று சொல் பார்க்கலாம், என்று சென்றார் மோடி. இன்று அவர் உலக நாடுகளின் செல்லப்பிள்ளை. எடுத்துக்கொண்ட காலம் மூன்று ஆண்டுகள். தமிழ்நாட்டில்??

ஐந்து ஆண்டுகள்? ஒரு அழுகாச்சி அரசவை நாடகமும் சில கூனிச்சமூகமும் உருவானதைத்தவிர வேறுஎதுவும் நடக்கவில்லை. அளவுக்கதிகமாய் காசு கொடுத்து மின்சாரம் வாங்கி கடனை ஏற்றுகிறார்கள். கட்டப்போவது யார்? அது ஆட்சிக்கு நாம் வரமுடியாதபோது, அடுத்துவருபவனின் தலையெழுத்து, நமக்கென்ன? இப்போது குவிப்போம். தவிப்போர் தவிக்கட்டும். காணொளி இருக்கிறது கட்டிடத்தைத் திறந்துவைக்க, இன்னோவா இருக்கிறது எடுபிடிகளை உருவாக்க.  புயலா மழையா வெள்ளமா வேனைவிட்டு இறங்காமல் அருள்பாலிக்கலாம். சின்னத்தை மறந்துவிடுவார்களா ஸ்டிக்கர் ஒட்டலாம். வேறென்ன, பெரிதாய் வேலையில்லை, அலையும் இல்லை அலைச்சலும் இல்லை. வருமானத்திற்கு வழி? டாஸ்மாக் இருக்கிறது. வாழைமரமாய்க் கொட்டுகிறது. ஓடட்டும் வண்டி. குடிகுடியைக் கெடுக்குமே? கெடுக்கட்டுமே? நம் குடியா, எவனோ ஒருவன். 1000ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுபோட்டவன். அவன் குடித்தால் நமக்கு என்ன? கோபுரத்தில் ஏறி விழுந்துசெத்தால் நமக்கு என்ன?

ஆக, ஒரு ஆளுங்கட்சியாய் எல்லா விதத்திலும் தோல்வியுற்ற, ஆனாலும் எந்தவித நற்பெருமைகளும் இல்லாத எதிர் அணியோடு போட்டி போடுகையில் எப்படி இயங்கவேண்டும்? சரியாகச்செய்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இதுவரைக்குமான மற்ற எல்லாத்தேர்தல்களையும் விட, ஜெயலலிதாவிற்கு மிகச் சவாலானது இத்தேர்தல். ஆளுங்கட்சியாய் இருந்தால் எதிர்ப்புக்கிளம்பிவருவது தெரிந்து விடும். எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளுங்கட்சியின் பலவீனம் புலப்பட்டுவிடும். இந்தத்தேர்தலில் இரண்டும் இல்லாமல் கடலில் போட்ட கல்லாய்க் கிடக்கிறது நிலவரம்.

ஒருகாலக்கட்டத்தில் வெளிச்சமாய்க்கிடந்த சென்னை வெள்ளவிவகாரமும் ’பீப் சாங்கில்’ மறந்துபோய்விட்டது. ஆளுக்குஆள் மதுவிலக்கு, மதுவிலக்கு என்று சொல்லி அதற்கிருந்த மரியாதையும் போய்விட்டது. இப்போது என்ன சொல்வது என்றே புரியவில்லை.

அனைத்துத்தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலைச் சந்திப்பது, நிச்சயமாக ஜெ.யின் தைரியமும் சாதனையும் பெருமையும்தான். ஆனால் இச்சூழ்நிலையில் அது அத்தியாவசியமா என்ற கேள்வி எழாமலில்லை.  பெரும்பான்மையமைக்க அல்லது ஆதரவளிக்க ஒரே சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் உதவலாம். அதற்காகக் கூட்டணியைத் தவிர்க்கலாமா? நான்கு-முனை, ஐந்து-முனைப் போட்டி என்று வந்தபின் நூறு இருநூறு வாக்குகளில்கூட வெற்றி தோல்வி அமையக்கூடிய தேர்தல் சூழ்நிலையில், வாசனின் த.மா.காவையும் வேல்முருகனின் த.வா.கவையும், ஜான்பாண்டியனின் கட்சியையும் கழட்டிவிட்டுவிட்டுத் தேர்தலைச் சந்திக்கும்  ஜெ, மிகப்பெரும் தவறு செய்துவிட்டார்.

அதிலும் இப்போது, ஒவ்வொரு சீட் கொடுத்திருக்கும் விசுவாச காமெடியர்களைவிட, கடந்தசிலமாதங்களில் மிகச்சிறந்த விசுவாச அடிமைகளாய் இருந்தவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கூட்டிக்குறைத்துக் கொடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் அதிகம் விழுவதை அவர் வீணாக்கியிருக்கவேண்டாம். சாம,பேத,தான,தண்ட வழிகளில், கட்சித்தலைவர்களைத் தன் வழிக்குக்கொண்டுவரும் ஜெயலலிதா, வாசனையும் வேல்முருகனையும் கூட்டணிக்குக்கொண்டுவர ஆர்வமில்லாமல் போனது அதிசயம்தான். திமுகவின் இப்போதைய பலத்திற்கு இதுவே போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? திமுக கூட்டணியில் இணைந்துவிடாதவகையில் அவர்களை ’டீல்’ செய்தது இராஜதந்திரம்தான் எனினும், அவசியமில்லாமல், வெறும் பகட்டுப்பீதாம்பரத்துக்காய் ஓட்டுகள் பிரிந்துபோவது அவசியமில்லை.

வேட்பாளர்களின் தேர்விலும் அதே தந்திரத்தோடு ஜெ இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. காரணம், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிறகு வரும் ரிப்போர்ட்டுகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதும் பொதுசமூகத்தின் பார்வையில் நல்ல அபிப்பிராயத்தையே கொண்டுவரும் எனினும் வாய்ப்பிழந்த வேட்பாளர்கள் முழுமனத்தோடு தேர்தல் வேலைசெய்ய முன்வரவேண்டும். அதற்கு ஜெ.நேரிடையாக அவர்களை அழைத்துப்பேசினால்தான் உண்டு. முன்னால் அமைச்சர்கள் உள்ளிட்ட பழைய ஆட்களுக்கு அல்லது அவர்களின் வாரிசுகளுக்குக் வாய்ப்புக்கொடுப்பது, அறிந்தமுகங்கள் என்றவகையில் சிலவாக்குகளைக் கூடுதலாய்ப் பெற்றுத்தரும். அண்மையில் வாய்ப்பளிக்கப்பட்ட முன்னால் அமைச்சர்களின் மாற்றமும் இன்னும் எதிரணியின் வேட்பாளர்களைப் பார்த்து, அவர்களுக்கேற்றவாறு மாற்றம் செய்வதும் நல்லதுதான்.

மக்கள் எளிமைத்தனத்தை விரும்புகிறார்கள் என்பதைக் காலம் கடந்தாவது ஜெயலலிதா உணர்ந்துகொள்ளவேண்டும். கொடும்வெயிலில் மக்களை வாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச்சொன்னால் நன்றாயிருக்கும். நேற்றுவரைக்கும் அவரது கூட்டணிக்காக அலைந்துவிட்டு இன்று அவரை எதிர்த்துப்பேசுபவர்களின் அறிவிலித்தனத்தை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் எனினும், அந்த காமெடியர்களின் பேச்சுக்கு எதிராய்ப் பரப்புரை செய்ய கட்சிஆட்களையும் இன்னும் இறக்கிவிட்டதாய்த் தெரியவில்லை. ஹெலிபேடு அமைக்க விவசாய நிலங்களில் தார் ஊற்றுவது உள்ளிட்ட வேலைகளைச்செய்யாமலும் இருக்கவேண்டும். விஜயகாந்த என்னும் காமெடியரையோ அல்லது குடும்ப ஆதிக்கமாய் ஒரு ஆட்சியையோ தமிழகமக்கள் இப்போதைக்கு விரும்பவில்லை எனினும், தானும் களத்திலும் மக்களிடத்திலும் அனுசரனையாய் நடந்துகொள்ள அவர் முன்வரவேண்டும், இவையெல்லாம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினால் மட்டுமே.

எம்.கே.குமார்

No comments:

Search This Blog