Tuesday, April 26, 2016

மடையைத் திறப்பவர் மடையரா? ஒரு சர்ச்சையும் எனது சாட்சியமும்!

மடையர்கள் என்ற சொல், ஏரிகளின் மடைகளைத் திறப்பவர்களைச் சொல்லும்பொருட்டு உருவாக்கப்பட்டது என்பது பற்றி வரலாறு சொல்லுவதாகச் சொன்ன தொ.பரமசிவன் தகவலை, தி இந்து டி.எல்.சஞ்சீவிகுமார் எடுத்தாண்டு, அதை பேராசிரியர் ராமசாமி கிண்டல்செய்து, ஜெயமோகன் அதற்கு, நாகாக்க உரைத்திருக்கும் நான்கு இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளேன். வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

உண்மையைச்சொல்லவேண்டுமானால்,  இரண்டு விஷயங்கள் இவற்றில் உள்ளன.
1. மடையைத் திறப்பவர்கள் மடையர் என்று அழைக்கப்பட்டார்கள் என்று தொ.ப , எந்த சான்றுகளும் இன்றிநிறுவுவது.
2. இரண்டாவது நீர்நிலைகளின் மடை செய்யப்பட்ட விதமும் அதைத் திறக்கும் முறையும் பற்றி தொ.ப சொல்வது

இவற்றில் முதலாவதைப் பற்றிச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. நான் சங்ககாலத் தகவல்களில் பாண்டித்யம் பெற்றவன் இல்லை. ஜெ.மோவோ, மு.ராவோ, நாஞ்சில் நாடனோ இதுபற்றிவிளக்கலாம். அதுதான் வரலாறுக்கும் நாட்டுக்கும் நல்லது.

ஆனால், இரண்டாவது தகவலைப் பற்றிச் சொல்ல என்னிடம் சிலவிஷயங்கள் இருக்கின்றன. அது, தொ.ப சொல்லும் மடை திறக்கும் மற்றும் மடையில் செருகச்செய்யப்படும் பனைமரம் பற்றிய தகவல்கள் கிட்டத்தட்ட சரியானதுதான்.

காரணம், இம்மடைகளை நான் பார்த்திருக்கிறேன். எப்படித் திறப்பார்கள் என அறிந்திருக்கிறேன்.

எனது கிராமத்தில், மிக மிக ஆபத்தான இவ்வேலையைச்செய்ய, யாரும் முன்வராத பலவேளைகளில், நீருக்குள் இறங்கி மடையைத் திறந்தவர் எனது தந்தையார் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக, சமூகக்கீழ்த்தட்டு மக்களில் திறமையான ஒருவரையோ  அல்லது அனுபவமும் கிராம சிறுதெய்வங்களின் அருள்பெற்றவர்கள் என்று பேணப்படும் சிலரையோ அல்லது ’சேதம் பார்ப்பவர்’ என்று சொல்லப்படும் ‘குடிவானவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நீர்மேலாண்மை செய்யும் பொதுவான ஒருவரையோ தான் இவ்வேலைக்குச் செலுத்துவர்.

பலவேளைகளில் பெரும்பாலும் அவர்களில் சிலர், குடித்துவிட்டு நிலையற்று இருக்கும்போது, தைரியமாக இவ்வேலையைச் செய்ய, என் தந்தையர் தானே முன்வந்து,  உள்ளே மூழ்கிச் சென்று மடையைத்திறந்துவிட்டு அதே வேகத்தில் மேலே வருவார்.

தி ஹிந்துவில் சஞ்சீவிகுமாரின் கட்டுரையைப் படித்துவிட்டு, அண்மையில் நான் ஊருக்குச்சென்றபோது, அவரிடம், இந்த வேலையின் அதிபயங்கர ஆபத்து பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தேன்.

இப்போது மடைகள் மாறிவிட்டன.

அடுத்தமுறை, மடைசெய்வது பற்றியும், திறப்பது பற்றியும் இதுபற்றி விளக்கமாக அவரிடம் பேசி,  காணொளிசெய்யவேண்டும் என்று ஆசை., பார்க்கலாம்.

வேளாண் சமுதாயத்திற்காக, உயிராசை அகற்றி, மூச்சை அடக்கி, அடியாழ நீருக்குள் சென்று மதகை அசைத்துத் திறந்து, நீர்ப்பாய்தல் வேகம் கொள்ளும்முன், சடுதியில் வெளியே வந்து மூச்சை இழுத்து உயிர் கொள்பவரை, மடையர் என்றால், உங்களைக் கொலை செய்யாமல் விடமட்டேன். :-)


ஆனால் இவர் பனைமரத்தைப் பற்றி எழுதியிருக்கும் விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்… ஏனெனில், கண்டமேனிக்கும் அட்ச்சுவுடுவது என்பது ஒரு ஆராய்ச்சியாளப் பெருந்தகைக்குச் சரியேயல்ல.

தேக்குமரம், பலாமரம், வேங்கைமரம் என்பவை போலல்லாமல் – பனை மரம் போன்ற அரிக்காஷீ (=Arecaceae) குடும்ப மரங்களின் தண்டுகளில் ‘வைரம் பாய்வது‘ என்பது நடக்கவே நடக்கமுடியாத விஷயம். ஏனெனில் அவற்றின் உள்ளமைப்பே வேறு!(தவறு) 
இவற்றில் நார்களும், சிறுகுழாய்களும், சுற்றுப்புறத்தில் ஒலைப் பிணைப்புகளும் (fibro vascular bundles and frond bases) நிரம்பியிருக்கும். இவற்றின் பலம் அதிகமில்லை. ஆனால் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகம். என் சொந்த அனுபவத்திலுருந்து சொல்கிறேன்:  நான் பனைமரத் தண்டுகளிலிருந்து பலகைகளை வெட்டியெடுத்து மரவேலை செய்ய முயன்று தோற்றவன்; ஆனால் தென்னை மரத் தண்டுப்பலகைகளிலிருந்து ஊஞ்சல்பலகைகளையும், புத்தக அலமாரிகளையும் வெற்றிகரமாகச் செய்திருப்பவன். (தென்னை மரத்திலும் ‘வைரம் பாய’ முடியாது)
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் –‘வைரம் பாய்ந்த’ பனைமரக் கட்டை என்பது சுத்த கப்ஸா.
அதன் உள்தண்டை நீக்கிவிட்டால்‘ என்றெல்லாம் தொபெ எழுதுகிறார். அப்படி சர்வசாதாரணமாக புடலங்காயிலிருந்து அதன் குடலை நீக்குவதுபோலச் செய்துவிடமுடியாது என்றாலும், ஒரு பேச்சுக்கு இதனைச் சரியென்று கிண்டலாக ஒப்புக்கொண்டாலுமே – இப்படி குழாய் போல ஆக்கப்பட்ட தண்டிற்கு சக்தியோ தாங்குதிறனோ இருக்கவேயிருக்காது!
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து‘ என்று எழுதுகிறார். மடைகளோ மதகுகளோ, அப்படி ‘அடியாழத்தில்’ உருவாக்கப்படுபவையே அல்ல!  (தவறு) இம்மாதிரி நீராவாரிக் கட்டமைப்புகள் மேல்மட்டத்திலிருந்து கீழ்வரை (அடிமட்டம் வரையல்ல) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் பார்த்திருக்கும் வரையில் அவை, மிகக் கவனமாக, நீர் நிலைகளில் குறைந்த பட்சம் சில அடிகளாவது நீர் ‘நிரந்தரமாகத்’ தேங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.‘ 
என்னமாதிரிக் கற்பனைச் சோகக்கதையிது! ஆனால், பனங்குழாய்களினூடே ஒருமனிதன் அடித்துச் செல்லப்படமுடியுமா என்ன? பனை மரத் தண்டுகளின் விட்டம் சுமார் ஒரு அடிதான்.  அதிலும் தொப அவர்களின் கண்டுபிடிப்பான பனைமரக் குழாய்களின் உள்விட்டம் சுமார் முக்கால் அடிதான் இருக்கமுடியும்!  (தவறான புரிதல்)
இத்தனூண்டு குழாய்க்குள், ஒரு மனிதன் வெள்ளத்தில் புயல்வேகமாக அடித்துச்செல்லப் படக்கூடுமானால் – பழந்தமிழ் மடையர்கள், ஓமப்பொடி அல்லது காராசேவு அளவே ‘குண்டு’ எனக் கருதப்படவேண்டுமா என்ன?

http://www.jeyamohan.in/87317#.Vx67pvl97Z4

https://othisaivu.wordpress.com/2016/04/24/post-634/#comment-5278

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7883303.ece

http://www.jeyamohan.in/8219#.Vx6z0vl97Z4

1 comment:

Aathma said...

I fully agree..opening the madai is very risky job..I remember people describing it in my village..

Search This Blog