Monday, November 06, 2017

”நைலான் வலையில் சிக்கியவர்கள்: “

 

எம்.கே.குமாரின் கவிதைகளூடேயும் சிறுகதைகளூடேயும்
  
சுப்ரபாரதிமணியன்

சாதாரண வலை என்றால் அகப்படும் மீனகள் சாதாரணமாய் பலியாகும். பல தப்பித்துப் போகும். ஆனால் நைலான் வலையில் சிக்கிய மீன்களின் ஆதாரமே பாதிக்கப்படும். மூலமே அறுந்து போகும் அப்படி மூல ஆதார வாழ்க்கை, புலம் பெயர்ந்த - வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட பல மனிதர்களை தன் படைப்புகளில் இடம் பெறச் செய்கிறவர் சிங்கப்பூர் எழுத்தாளாரான எம்.கே.குமார் என்றறியப்பட்ட ஆவுடையார்கோவில் தீயத்தூர் மகாலிங்கம் காளிமுத்து குமார்.

புலம் பெயர்ந்து வாழ்கிறவர்களின் சிக்கலில் , படைப்பில் தென்படுவதாக ஈரமண்ணின் வேர் வாழ்க்கை , புலம் பெயர்ந்த மண்ணின் சல்லி வேர்கள், அந்நியமாக்கப்பட்ட சூழல், ஊருக்கே திரும்ப எத்தனிக்கும் மனம், ஆனால் மனதை இறுக்கிப் பிடித்திருக்கும் தளைகள் என்பது  போல்தான் குமாரின் படைப்புகளும் அமைந்திருக்கின்றன. பெரிய நகரத்திலிருந்து ஓடி வந்தவர்கள் இவர்கள். கிராமியத்திற்கு ஏங்குபவர்கள், தங்களின் அடையாளங்களை இழந்து விட்டு புது அடையாளங்களை நிரந்தரமாய் அணிந்து கொள்வதில்  கொஞ்சம் தயக்கம் உள்ளவர்கள்.   தாங்கள்,  தங்களில் பதித்த பிம்பத்தை அழித்து விடுகிறவர்கள் என்றும் சொல்லலாம்.

“ எல்லா மழைத்துளியும்
மண்ணிற்கு வருகிறது
சாக்கடையில் கலந்தும்
பாறையில் விழுவதாயும்..
மனிதர்களும் இப்படித்தான் “ என்கிறார் அவரும் ஒரு கவிதையில்.(வரையா மரபு)

இந்த நகர, கிராம, பெருநகர, அயல் அனுபவச் சிதைவை அவர்கள் உள்ளுணர்வு கொண்டு யோசிக்க அவகாசம் கிடைப்பதில்லை. ஆசுவாசமும் இருப்பதில்லை. ஆனாலும் ஒரு துளி  எப்போதாவது தென்பட்டு விடுகிறது.பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் உறவு கொள்கிற தமிழனுக்கு கிராமத்து உறவும், கிராமத்து பரம்பரை தூய்மையும் உறுத்துவதாக பல சமயங்களில் அமைந்து விடுகின்றன. அவற்றையும் கடந்து போகிறான். (மஹால் சுந்தர் கதையில்). அவன் விளையாடிய விளையாட்டுகள்தான். ஆனால் தன் வாரிசானப் பெண்  அதையெல்லாம் செய்யும்போது கட்டுப்பாடுகள் , வரைமுறைகளை விதிக்கிறான். ஆண் என்பவன் தந்தையை  விட மேலோங்கி நிற்கிறான். (கோவில் வீதி) . இது ஆண் இயல்பு என்று எந்தப் பெண்ணும் சுலபமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் விளையாடவே இப்படி அனுமதி மறுக்கப்படுகிற போது கணவனைத் தேர்வு செய்வதில் இருக்கும் சங்கடங்கள் சொல்லி மாளாது. காதல் உணர்வுகள் சிதறடிக்கப்படுகின்றன. கர்ப்பங்கள் கலைக்கப்பட வேண்டும் என்பதில்  எந்த வித இரண்டாம் பட்சக் கருத்துக்கும்  இடமில்லை அவையெல்லாம் சாதாரணமாகவே பெண்களுக்கு நடந்தேறுகின்றன. (கருக்கு கதை ). பெரும்பாலும் உரையாடல்களாக, தொன்மமாக என்று கதையை வடிவமிக்கிற போது ஒரு பனையின் சொல்லாடலாக இதை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

“ அன்றொரு நண்டு
நேற்றொரு ஆமை
இன்றைக்குப் பாம்பு
வளையாய் இருப்பதிலும் சுமையாய் “ ( இருத்தலின் வலி )

என்று உணரும் நிறையப் பெண்களை குமார் காட்டுகிறார். கைவிடப்பட்ட பெண் திரைப்பட உலகில் அடைக்கலமாகிறாள். ஆனால் அவளை துரதிஷ்டம் துரத்திக் கொண்டே இருக்கிறது. கணவன் மரணமும் துரத்துகிறது. அவளுக்கு வாய்ப்பளிக்கிற      “ அந்த அதிகார ஆண்” இறுதியில் வைக்கும் கேள்விதான் என்ன….. அதை குமார் சொல்வதில்லை.( பிறை நிலவுகள் ) வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறார். தலைக்கேசம் சீர்திருத்தும் இடத்தில் நடைபெறும் உரையாடல்  வெகு சாதாரணமாகவே அமைந்து  இதிலென்ன என்று ஆச்சர்யப்படும்போது இறுதி வரியாய் ஒரு பெண்ணை மையமாக வைத்து  என்றாகிற போது கதை திருப்படைகிறது (சூடிக்கொடுத்த சுடர் முடி). இந்தத் திருப்பமடைதலை முன்னர் குறிப்பிட்ட கதையிலும் கண்டு கொள்ளலாம்.
கள்ள  நோட்டும், மந்திரிப்பதவியும் அதிகாரமும்  புருவம் உயர்த்தி பயப்பட வைக்கின்றன. “ வேட்டை “ என்பதை   பல தளங்களில் கொண்டு சென்று ஒருங்கிணைப்பது விசேசமாக இருக்கிறது. ‘எரியும் சட்டையைப் போட்டுக் கொண்டவர்களாய் ‘ மனிதர்கள் அலைக்கிறார்கள். மூக்கையன் பேரும், காவல்துறை அதிகார உச்சம், சொத்து ,பணம்  என பல தளங்களில் வேட்டையாடபடுகின்றன..பெரியவர்கள் பறவைகளின் கலகலப்போடு பாலியல் சமாச்சாரங்களை உரையாடல்களாக்கி ஆசுவாசம் பெற்றுக் கொள்கிறார்கள், (புரியாத புதிர்).

“ மிருகவதை ” கவிதை முரண் பல சிறுகதைகளில் காணக்கிடைக்கிறது.

”நிலமகள் படும்
பாட்டின் இரகசியம்
எனக்கு மட்டும் தெரியும் ” என்ற கவிதையில் ரகசியம் சொல்லும் குமார் “ மருதம் “ சிறுகதையில் நிலத்தை விற்று விடல், அல்லது கை விடல் அல்லது திரைப்படம் போன்ற கேளிக்கைக்காக கைமாற்றலைக் கூட தற்கொலைக்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளும்போன தலைமுறை விவசாயம் ஏர்பின்னது உலகம் என்பதைக் கசப்புடன் சொல்லிப் போகிறது.

இதை இன்னொரு ரூபமாய் விமர்சனத்துடன் கவிதையிலும் முன் வைக்கிறார்,. நீரின் விலையைக் கேட்டு அதிர்ச்சியாகி மாட்டை விற்று தண்ணீர் விவசாயத்திற்குப் போகிறான் விவசாயி. ( சிங்கை , மலேசியாவில் உணவுப்பொருட்கள் வாங்கும்போது தண்ணீர் போத்தலும் தவறாமல் வாங்க வேண்டியிருக்கிறது எனும்போதுதான் இக்கவிதை முழு அர்த்தம் பெறும் )

ஒரு எழுத்தாளனை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை நாச்சாரம்மாள் என்ற  மனைவியும் அவள் எழுத்தாளக் கணவனின் அவஸ்தையிலும் “ நகைச்சுவையாகவே “ சொல்லப்பட்டிருக்கிறது….( கவிஞரேறுவின் கதை ). குரூர நகைச்சுவை.

 மறுபுறமாய் 
“ உடலைத் தின்னக்
கொடுத்த ஓவியங்கள் “-பெண்கள் குரூரங்களுக்குள் இருந்தே இவரின் கதைகளில் நடமாடுகிறார்கள்.(திணறல்கள்) .கணவனின் கொடுமையால் வீட்டிற்குப்போகாமல்  மருத்துவ மனையிலேயே தங்கிப் பணிபுரியும் நர்ஸ்  பெண் ஒருத்தியின் அவஸ்தைக்கு முன் இந்த கவிஞரின் ஆண் அவஸ்தை  ஒரு பங்கு குறைவுதான்.சிங்கப்பூரில் ” சார்ஸ் “ வியாதி தந்த அந்த நர்ஸ் பெண்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. .. சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களில் காமமும் காசும் தொழிலும் என்று அல்லாடுகிற ஆண்கள் நிறையவே தென்படுகிறார்கள்.. சேரி சிம்ரன் சிதைந்து போவது, மனைவியின் உடல் பிணவறையில், உருக்குலைந்து போகும் தாய்களின் கதை என்று பல கதையம்சங்களை கதைக்கவிதைகளாக விரித்துக் கொண்டு போய் எழுதியும் பார்த்திருக்கிறார்.  சிறுகதைகள் எழுத நினைத்து நேரமின்மை அல்லது அவசரம் தந்தக் கவிதைகள் அந்தக் கதைக்கவிதைகள் எனலாம் அவை. அல்லது நாலு வரிக்கவிதை ஒற்றைப்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலையில் நீள் கவிதைகள் காசு கொடுத்து புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு   பலபக்கங்களில் நீள் கவிதைகள் தென்படுவது , பல பக்கங்கள் கவிதைகளால் நிரப்பப்பட்டிருக்கிற ஆறுதலையும் தரக்கூடும்.



“செத்த மீன்
என்றாலும்
குத்துகிறது  முள் “; ( ரணம்)

ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த வகையில்  ஒரு மாதிரிக் கவிதை இது. இந்த வகையில் குறும்பாக்கள் போல் அமைந்திருக்கும் சில சிறுகதைகளையும் சொல்லலாம்.. சமூக முரண்களுடன் அவை சிறுகதைகளாகி நிற்பதையும்.

இவரின் சிறுகதைகளில் அரசியல் நெருக்கடிகளையும் மன அவஸ்தைகளையும் உலகமயமாக்கலின் விளைவுச் சிதைவுகளையும் தேடிப்பிடித்துக் கண்டடைவது பெரிய ஆசுவாசம்.. படைப்பில் ஒரு தலைப்பரிமாணமாய் மன அவசமே ஆக்கிரமித்த சூழல்களில் அந்த ஆசுவாசம் நிச்சயம் புரியும்.  நிச்சயம் பிடிபடும்.

எம்.கே. குமாரின் சிறுகதைகளும், கவிதைகளும் என்று இரு நூல்களையும் அப்படி சமூக அவல நிலையிலானதாக இனம் கண்டு கொண்டதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசமும் உள்ளது. மொழியில் கிராமிய அனுபவங்களை நாட்டாரியப் பாணியிலும் நகர அவஸ்தையை மூச்சுத்திணறும்  இறுக்கமான சொற்களின் கட்டமைப்பிலும் வெளிப்படுத்தியிருப்பதும்  இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் என்றும் சொல்லலாம்,முந்தியசிறுகதைத் தொகுப்பு  வெளிவந்து பத்தாண்டுகள் கடந்த பின் அவர் முன் நிறுத்தும் கலை அனுபவகளை  இன்னும் தொகுப்பாக வெளியிடப்படாத பத்துக் கதைகளிலும் வைத்திருக்கிறார்   என்பது சாதாரணமல்ல. .கீழேக்குறிப்பிடப்பட்டுள்ள புதிய கவிதைத் தொகுப்பிலும் கூட…..

எம்.கே. குமாரின் இரு நூல்கள்

  1. சூரியன் ஒளிந்தணையும் பெண் ( உயிர்மை வெளியீடு சென்னை ரூ110. 2013 )
  2. மருதம் ( சிறுகதைகள் –  , சென்னை வெளியீடு ரூ100 2006 )


No comments:

Search This Blog