"எழுத்தாளன் என்பவன் வேறு வரலாற்றாசிரியன் என்பவன் வேறு
வரலாறு ஆள்வோராலும் ஆளப்படுவோராலும் எழுதப்படுவதுண்டு
உண்மையான வரலாறு இதன் இரண்டுக்கும் இடையில் இருக்கலாம்.
சங்க இலக்கிய முழுவதுமே இயற்கையை பிரதானமாக பேசியது.
களவும் காவலும் ஒருநாணயத்தின் இருபக்கங்கள், களவாளியையே காவலாளியாக போடுவது என்பது இன்றும் பின்பற்றப்படும் ஒரு பயிற்சி.
இலக்கியம் வரலாறல்ல. வரலாற்றின் தடங்களில் ஒரு இலக்கியப்படைப்பு காலை ஊன்றி வேறொரு தளத்தைத் தேடுகிறது.
தமிழக வரலாற்றைப் பேசும் வரலாற்றுநாவல்கள் மிகக்குறைவு. பிரபஞ்சனின் நாவல்களுக்குப்பிறகு, ஆழிசூழ் உலகு, சோளகர்தொட்டி போன்ற சமூகநாவல்கள் தற்போது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. காவல்கோட்டம் நாவலிலும் வேள்பாரியிலும் பல வரலாற்றுச்சன்றுகள் உள்ளன. தமிழரின் அறிவுச்செல்வத்தையும் இயற்கைபோற்றுதலையும் வேள்பாரியில் வைத்துள்ளேன். விகடனில் எழுதினாலும் வேள்பாரி காவல்கோட்டத்தைவிட ஒருபடி மேலான உழைப்பைக் கோரியுள்ளது, மனதுக்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது.
இந்தியாவை முழுக்க பிரிட்டிஷ் ஆண்டாலும் மதுரையின் ஒட்டுமொத்தகாவலை ஒரு கிராமம் கட்டுக்குள் வைத்திருப்பதைக் கருவாக எடுத்தே காவல்கோட்டம் உருவானது. மூவேந்தர்களாலும் வெல்லமுடியாத ஒருவன் தன் தேரை ஒரு முல்லைக்கொடிக்குக் கொடுத்துச்சென்றான் என்றால் அவனுடைய இயற்கையின் மீதான நேசம் எத்தகையதாக இருக்கும் என்ற சிந்தனையே வீரநாயகன் வேள்பாரி உருவாகக் காரணம். தமிழில் கிராபிக் நாவல்கள் கடும் பொருள் முதலீட்டை முன்தேடுவதால் அது இப்போதைக்கு பரவலாகவில்லை."
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. சு வெங்கடேசன் அவர்கள் பகிர்ந்துகொண்டதிலிருந்து...
No comments:
Post a Comment