Saturday, December 14, 2019

புதிய வானம் புதிய பூமி

அக்பர் வடிவமைத்ததாய்ச் சொல்லப்படும் ஸ்ரீநகர் நகரம் உண்மையில் இயற்கை எழில்கொஞ்சும் நகரம்தான். 45கிமீ பரப்பளவுக்கு சுற்றி விரிந்துகிடக்கும் தால் ஏரி. Abode of love என்று சொல்லக்கூடிய மொகல் தோட்டம் இன்னொரு வரலாற்றுப்பாரம்பரியம். அழகும் வரலாறும் மிளிர்ந்துகிடக்கும் இடம் கஷ்மீர்.

Chinar இலைகள் மொகல் தோட்டம் எங்கும் பரவிக்கிடக்கின்றன. இலைகளை உதிர்த்து பனிக்காலத்துக்குத் தன்னை இணைத்துக்கொள்ளும் மரங்களின் உணர்வு. வருமுன் காத்துக்கொள்ளும் உத்தி. இந்திரா காந்தி அவர்களுக்கு மிகவும் பிடித்த மரங்களாம் இவை. ரசனைமிகுந்தவர் இந்திராகாந்தி. குளிர்காலத்தில் அவர் இங்கு வராமல் இருக்கவே மாட்டாராம். சுடப்படுவதற்கு சிலநாட்களுக்கு முன்கூட அவர் ஸ்ரீநகர் சென்றுவிட்டு வந்தாராம். 

ஃபிரன் எனப்படும் டிரெஸுக்குள் கைகளை விட்டுக்கொண்டு நடந்துபோய்க்கொண்டேயிருக்கிறார்கள். சட்டென ஒரு பார்வைக்கு கையில்லாதவர்கள் போல் தெரிகிறது. வசதியான ஒரு ஆடை. துவைக்கவும் தேவையில்லை என நினைக்கிறேன்.

நாய்வாலைப்போல வெந்துகொண்டிருந்த குழாயை நறுக்கி கெபாப் என்று கொண்டுவந்து தந்தார்கள். நல்ல ருசி. ஆட்டின் நெஞ்செலும்பை 4-5 மணி நேரம் நெய்யில் வேகவைத்துக்கிடக்கும் தமக்மாஸ் என்ற ஆட்டிறைச்சி எலும்பைக்கூட கடிக்கமுடிகிறது அவ்வளவு சுவை. ஒரு பீஸ் ₹200. 

காஷ்மீரி கேவா எனப்படும் குங்குமப்பூ டீ  அபார சுவை. குல்மார்க் ஏரியாவில் சிறுகுவளையொன்று 30ரூபாய். நான் வாங்கி வானத்துக்குக் காட்டிக் குடித்துக்கொண்டிருந்தேன். வானகமே வையகமே பனிச்செருவே... இந்த தேசத்தின் குளிரில் என் மனச்சூட்டையும் உடற்சூட்டையும் இணைத்துக்கொள்கிறேன்.

கஷ்மீரில் பிச்சைக்காரர்களை எங்கும் பார்க்கமுடியவில்லை. மனநலம் குன்றியவர் போலிருந்த ஒரே ஒரு முதியவர் வந்து காசுகேட்டார். 20 ருபாய் கொடுத்ததும் கையை தன் phiran உடுப்புக்குள்ளே விட்டு, அதை வைத்துக்கொண்டு போனார்.

ஸ்ரீநகர் எங்கும் எந்த தலைவர்களின் படங்களையும் பார்க்கவில்லை. ஒரே ஒரு இடத்தில்  வன இலாகா சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதல்வர் திருமதி மகபூப் படமும் அவருடைய தந்தை படமும் இருந்தது. ஒரே ஒரு பெட்ரோல் பங்கில் மோடி அவர்களின் படம் இருந்தது.

இந்நாள் முதல்வர் மகபூப், முன்னாள் முதல்வர் என அனைவருடைய வீடும் ஒரே தெருவில் இருக்கிறது. பாதுகாப்பு பலம்.

ஸ்ரீநகரின் முக்கிய தெருக்களில் பத்தடிக்கு ஒரு பாதுகாப்புப்படை வீரர் நிற்கிறார். விமானநிலையத்திற்குள்ளேயும் வெளியேயும் கடும்பாதுகாப்பு. பயணிகளை இறக்கிவிடும் டாக்ஸி கூட முழு ஸ்கேனுக்குப்பிறகே உள்ளே செல்லமுடியும் திருப்பதிமலையடிவாரத்தில் லக்கேஜையெல்லாம் செக் செய்வதுபோல செய்கிறார்கள். லக்கேஜை ஸ்கேன் செய்யும்போது, எனக்கு  உதவிய வடகிழக்கு இந்திய முகஜாடைகொண்ட பாதுகாப்பு வீரர் ’நன்றி சென்றுவருக’ என்று என்னைப்பார்த்து தமிழில் சொன்னார். இந்திய உச்சியில் உடல்சிலிர்த்துப் புளகாங்கிதமடைந்த இரண்டாவது தருணம் அது. ஆக இன்னொரு முதல் தருணமும் இருக்கிறது..

என் கார் ஓட்டுநர் பர்வேஸ் மூன்று மாடி வீடுகட்டி குடும்பத்தோடு வசிக்கிறாராம். யாரும் இங்கு வாடகைக்கு வசிப்பதில்லை என்றார். வாஜ்பாய் வெரி குட்மேன் என்றார். இந்தியாவின் 4 முக்கிய தீவிரவாதிகள் என்று அத்வானி, முரளிமனோகர் ஜோசி, ராஜ்தாக்கரே, மற்றும் மோடியைச்சொன்னார்.

டிசம்பர் ஆறு காலையில் கிளம்பி குல்மார்க் சென்றேன். தேசிய நெடுஞ்சாலை 1-இல் பயணம் செய்யும் வாய்ப்பு. வாஜ்பாயின் கனவு இது என்றும் அவரை மிக நல்ல மனிதன்..குட்மேன் குட்மேன் என்று சொல்லிக்கொண்டே வந்தார் என் ஓட்டுநர். வழியெங்கும் நகரமாதலின் அறிமுகங்களாய் விளைநிலங்கள் கடைகள் மற்றும் வீடுகளாக மாறுவதைக் காணமுடிந்தது. இடையில் ஓரிடத்தில் காஷ்மீரி ஆடைகள் மற்றும் தரமான கொட்டைகள் மற்றும் குங்குமப்பூ கிடைக்கும் என்று ஓரிடத்தில் நிறுத்தினார். அவர் நண்பர் கடை என்றும் சொல்லிக்கொண்டார்.  விலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கார்பெட் தரையில் சோபாவில் அமரச்சொல்லி அரைமணிநேரம் காஷ்மீரி கார்பெட்டுகள் எப்படிச்செய்யப்படுகின்றன என்பதை விளக்கினார். வெள்ளைக்காரர்களுக்கேத்த வியாபார உத்தியும் பாவனையும். நான் இறங்கி வெளியே வந்துவிட்டேன்.

வழியில் சாப்பாட்டிற்காக ’பாரத் தாப்பா’ என்ற கடையில் நிறுத்தினார் ஓட்டுநர். உடனுக்குடன் சமைப்பதால் கொஞ்சம் தாமதமாகும் ஆனாலும் சுவை அதிகம் என்றார். உண்மைதான். அபார சுவை.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது  பக்கத்தில் தமிழ்க்குரல்கள். திருநெல்வேலிப்பையனும் கோயம்புத்தூர் பொண்ணும் அவர்களது சிறுபெண்ணுமாக ஒரு எஞ்சினியர் தம்பதி. கட்டாரில் வசிப்பதாய்ச்சொன்னார்கள். ஹிந்தியில் நன்றாய்ப்பேசிக்கொண்டார்கள். 

குல்மார்க்கில் ராஜா ஹரிசிங்கின் அரண்மனைக்குக் குதிரையில்தான் செல்லவேண்டும் என்று உள்ளூர் வணிக ஏற்பாடு. என் அரண்மனைக்கு நான் குதிரையில் செல்வதற்கு என்ன கட்டுப்பாடு என்று வாய்வரை வந்தாலும் குதிரையைப்பிடித்துக்கொண்டு என்னோடு நடந்துவருபவர் ரோஜா படத்தில் வரும் வில்லன் போலிருந்ததால் எதுவும் சொல்லவில்லை. 

குல்மார்க்கில் சிறுமலை ஒன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று இருக்கிறது. படிகளில் ஏறி உள்ளே சென்றால் பூட்டியிருந்தது. கதவின் கம்பிகளுக்கிடையே சிவலிங்கம் நெய்யால் செய்ததுபோன்று காட்சிதந்தது. அதைச்சுற்றி இலைகளை வைத்து அழகான அலங்காரம். வெளியிலிருந்த உண்டியலுக்கு எடைக்கு எடையில் பூட்டு இருந்தது. நூறு ரூபாயைப் போட்டேன்.

டிசம்பர் 6 மாலை, குல்மார்க்கிலிருந்து ஸ்ரீநகர் வரும்போதும் மட்டும், மாகம் என்ற ஒரே ஒரு இடத்தில், ஈரான் அதிபர் ஹாசன் ருஹானியின்  படங்களை வைத்து நன்கொடை கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஷியா முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி இது என்றார் ஓட்டுநர்.

ஹ்ஸ்ரத்பால் மசூதிக்குச்சென்றேன். மிகப்பழமையானது என்று  ஓட்டுநர் அழைத்துச்சென்றார். ஆயிரத்துக்குமேற்பட்ட புறாக்கள் பறந்தமர்ந்து விளையாடின. இந்தப்பெயரை எங்கோ கேட்டிருக்கிறோமே என்று உள்ளுக்குள் யோசித்துக்கொண்டேயிருந்தேன். மஜீத்துக்கு வெளியிலிருந்து படம் எடுத்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்தமசூதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தார்கள் அல்லவா என்று கேட்டேன். ஓட்டுநர் ஒருநிமிடம் அதிர்ச்சியாகி, உங்கள் ஞாபகசக்தி நன்று என்றார். ஆமாம், 1989ல் தீவிரவாதிகள் இந்தமசூதிக்குள் புகுந்து பாதுகாப்புப்படையினருடன் பெரும்தாக்குதல் நடத்தினர். வரலாற்றில் சிக்கிய பெரும் பழமையான நல்ல மசூதி.

குஜார் இனமக்கள் வாழும் காங்கன் பகுதிவழியே சோனாமார்க் சென்றோம். ’பாம்பையும் பாப்பானையும் கண்டால்’ என்ற தமிழகப் பழமொழிபோல குஜாரையும் கோப்ராவையும் பார்த்தால் குஜாரை அடி என்று காஷ்மீரிகள் சொல்வதாய்ச் சொன்னார் ஓட்டுநர். காரணம் கேட்டதற்கு அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்றார். தேர்தலில் இவர்களே அதிகம் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதாகவும் காசுவாங்குவதாகவும் சொன்னார்.

18950 அடி உயரம் சோனாமார்க் அருமையான பனி சூழும் இன்னொரு இடம்.. லே, கார்கில், லடாக் செல்லும் பாதை இதுதான். உறையும் பனி காரணமாக, ஆறுமாதம் இச்சாலை மூடிவைக்கப்படும் என்றார்கள். எந்த வாகனமும் செல்லமுடியாது. மோடி ஆட்சிக்கு வந்தபின், இப்போது 6 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை செய்கிறார்கள். இன்னும் சிலவருடங்களில் இது முழுப்பயன்பாட்டுக்கு வரும் என்றார்கள். ட்ரில்லிங் மெஷின் உள்ளிட்ட வாகனங்களும் வேலை செய்யும் பணியாளர்களுமாக இருந்தது அந்த இடம். தூரத்தில் நான்கைந்து கஷ்மீர் இளைஞர்கள் ஒரு காரின் அருகில், கேவா டீ அருந்திக்கொண்டிருந்தார்கள். அது ஒரு நகரும் கடை என்பதையும் அறிந்தேன். அன்பாகப்பேசினார்கள். பாகிஸ்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம், தனி கஷ்மீர் என்பதே எங்கள் ஆசை என்றார்கள். 

டால் ஏரி அழகியலின் உச்சம். ஏரியின் கரையில் முதியவர்கள் சிலர் ஆங்காங்கே வால்நட் கொட்டைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். உடைத்தும் உடைக்காமலும். 

ஷிகாரா படகுப்பயணம் கமல், ஸ்ரீதேவி, எம்.ஜி.ஆர் சரோஜாதேவி, நம்பியார் என பல நினைவுகளைக் கிளறிவிட்டது. ஒற்றைத்துடுப்பால் தள்ளிக்கொண்டுபோகும் படகில் பயணம். வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் படகுவீடுகளைக்கடந்தது செல்லும் படகு. தானே தள்ளிக்கொண்டு வரும் சிறுசிறுபடகுகளில், நம் படகுக்கருகில் வந்து சிக்கன் டிக்கா, மட்டன் டிக்கா, கெபாப், பழங்கள், குங்கப்பூ,  கைவினைப்பொருட்கள் விற்கிறார்கள். நடுத்தர வயதுள்ள ஒருபெண் தன்படகைத் தானே தள்ளிக்கொண்டுபோகிறார், வாழ்க்கையென்னும் ஏரியைப்போன்ற டால் ஏரியில்.

படகுவீட்டில் நுழைந்தோம். ஏரியில் மிதக்கும் பங்களா. படகுவீட்டில் முதலில் வரவேற்பறை. பிறகு சப்பாட்டு அறை, பிறகு சிறு அறைகள், இறுதியில் மாஸ்டர் அறை. ஏர்கான் அளவு 28 வைத்தும் குளிராக இருக்கிறது.

ஸ்ரீநகர் ஏர்போர்ட்டுக்குள் காபி 60 ரூபாய் என்றார்கள். ஒரு காபி வாங்கிவிட்டு சிறந்த ஏர்போர்ட் என்ற இரண்டாவது விருதுவாங்கிய அதனுள் உலாவிக்கொண்டிருந்தேன். என்னை நோக்கி வந்தார் அந்த பாதுகாவலர். குறுகுறு பார்வையில் கோபமோ கட்டளையிடும் அதிகாரமோ ஏதும் தெரியவில்லை. எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். டெல்லி என்றேன். தமிழ்நாடா? என்றார். ஆமாம், ஆனால் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டேன் என்றேன். பேச ஆரம்பித்தார். சிறுதுநேரம் பேசிவிட்டு அவர் சொல்லிச்சென்றதுதான் இந்த சுற்றுலா முடிந்த இந்தநாள்வரை மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. காமராஜர் ஞாபகம் வந்தார்; கமல்ஹாசன் ஞாபகம் வந்தார். இன்னும் என்னென்னமோ ஞாபகம் வந்தது. அவர் அப்படி என்னதான் சொல்லியிருப்பார் என்று யோசிக்கிறீர்களா? தென் இந்தியர்கள் நல்லவர்கள், அமைதியானவர்கள், விட்டுக்கொடுப்பவர்கள் என்றார். 

கொடுமை கொடுமையின்னு ஸ்ரீநகருக்குப்போனா அங்கே ஒரு கொடுமை!




 மூத்த தேவி ஆலயத்துக்குச் செல்லும் வழி
மிகப்பழமையான மஜீத் முன்பு

பனியிலிருந்தும் நீரிலிருந்தும் காக்க கால்நடை தட்டை உணவுகளை மரக்கிளைகளுக்குள் சேர்த்து வைக்கின்றனர்.

ஆறு கிலோ மீட்டருக்கு தரையடிப்பாதை அமைக்கும்பணி

இரண்டு தரையடிப்பாதை

சோனாமார்க். கார்கில்  செல்லும் வழி
மூத்த தேவியை வணங்கியபின் மேலும் காட்டுக்குள் மேலேறிச்சென்றால் தரிசனம் தரும் சிவா.

மூத்த தேவி.

ச்சினார் இலைகளுடன் ஒரு அழகன் (கவிஞனும்)

சாப்பாட்டுக்கடையில் காலுக்கருகில் வைத்துக்கொள்ளும் சூடேற்றி

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே?

இராஜாவின் பாதை

குல்மார்க் -ல் உள்ள சிவனாலயம்

கஷ்மீர் ஸ்ரீநகரில் எங்குமே காணப்படாத திரு மோடியின் படம். இங்கு மட்டும்

விளைநிலங்கள் வசிப்பிடங்களாக மாறும் நிகழ்காலங்கள்

கார்கில் செல்லும் பாதை. 

பனி மேலே நான்

சோனா மார்க்கில் வழிகாட்டும் நண்பர்கள்குழு. சூடாக டீ விற்கிறார்கள். 

இந்த குளிருக்கு இந்த டீ அற்புதம் மட்டுமல்ல; ஆனந்தம்

பிள்ளைக்கூட்டங்களைப்  பார்க்கையிலே

தால் ஏரி

இராஜ  ராஜ சோழன் நான்

வாழ்க்கையென்னும் ஓடம்

ஒட்டுமொத்த கஷ்மீர் பயணத்திலும் இரண்டு முறை உளஎழுச்சியடைந்தேன்.
திடுமென எதிர்பாராத ஒரு ரெஸ்டாரண்டில் ஏ.ஆர் ரகுமானின் பாடல். அவரே பாடுவது. சக தமிழனாக ஏதோ ஒரு உணர்வாக இருந்தது. இரண்டாவது ஸ்ரீநகர் விமான நிலைய காவல் அதிகாரி ஒருவர் தமிழில்,’நன்றி மீண்டும் வருக’ என்னும்போது.

ஒட்டுமொத்தமாக, இது ஒரு மாபெரும் தேசத்தின் கலாச்சாரம் பொங்கிய தலைப்பகுதியென உணர்ந்தேன். இதன் அழகியலிலும் சமூக வாழ்வியல்களிலும் எளிதாக இணைந்துகொண்டேன். ஒவ்வொரு மனிதர்களிலும் ஒரு சகோதரத்தன்மையை உணர்ந்தேன். ஒருவகையில் தமிழர்கள் உள்ளிட்ட விதவிதமான இந்திய இராணுவ முகங்கள்கூட எனக்குள் இதைக் கடத்தியிருக்கக்கூடும்.

(டிசம்பர் 2017ல் எழுதியது)

நான் அவர் மற்றும் ஒரு மலர்!

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா, கடந்த ஆகஸ்டு 17 & 18 ஆகிய தேதிகளில் இரு நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. முதன்முதலில் ஆண்டுவிழா என்ற ஒன்றை, நாங்கள் 2013-இல் ஆரம்பித்ததும், அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராய் வந்து சிறப்புரை ஆற்றியவர் திரு ஜெயமோகன் என்பது பலருக்கும் நினைவிலிருக்கும். அச்சிறப்புரையில் ஜெயமோகன் குறிப்பிட்ட  'யாருமில்லை தானே கள்வன்' என்ற கபிலரின் பாடலும், அதில்வரும் குருகு என்ற பறவையும் மற்றும் சரஸ்-வதி தமிழ்க்கதையும் எப்போதும் நினைவிலிருப்பவை.
அவரைத்தொடர்ந்து, ஜோ டி குரூஸ், நாஞ்சில் நாடன், தமிழச்சி தங்கபாண்டியன், சாரு நிவேதிதா போன்ற படைப்பாளிகள் வாசகர் வட்ட ஆண்டுவிழாக்களைச் சிறப்பித்தனர்.

சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில், இரண்டு சிறப்பான அம்சங்கள் எப்போதும் உண்டு. ஒன்று, தேர்ந்த எழுத்தாளரின் இலக்கிய உரை. இரண்டாவது வாசகர் வட்ட நண்பர்களின்  குறிப்பிடத்தக்க சிங்கப்பூர் இலக்கியத்தின் பொதுவான புத்தகவெளியீடுகள்.

இந்தமுறை சிறப்பு விருந்தினராக, கவிஞர் தேவதேவனை அழைக்கலாம் என முடிவுசெய்தோம். நான்தான் அவரை முன்மொழிந்தேன். பாரதி மூர்த்தியப்பன் மிகவும் உற்சாகமாகிவிட்டார். சில கவிஞர்கள் அவருக்கு அந்தரங்கத்தோழர்கள். தேவதேவனும் அதில் ஒருவர். கட்டாயம் அழைத்துவருவோம், நான் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று அப்போதே புக்கிங் செய்துவிட்டார். சித்ரா, ஷா நவாஸ் உள்ளிட்ட நண்பர்கள், தேவதேவன் அகவயமாய் உரையாடுபவர், வாசகர் வட்ட ஆண்டுவிழாவிற்கு மேடையுரை மிகவும் முக்கியம், மேடையில் அவர் உணர்வெழுச்சியாய் உரையாற்ற இயலுமா என்ற அக்கரையை முன்வைத்தார்கள். விஷ்ணுபுர சிங்கப்பூர் கிளைக்கழகத்தின் (?!) சரவணனிடம் இதுகுறித்துப்பேசினேன். அவர் குறிப்பிட்ட நல்ல எழுத்தாளர்கள் மற்றும் உரையாடலுக்கு ஏற்றவர்கள் அப்போது இங்கு வந்துவிட்டும் சென்றிருந்தார்கள். எனவே அவர்களையே மீண்டும் அழைப்பது உசிதமாகாது என்ற முடிவுக்கும் வந்தோம். தீவிர உரையாடலுக்கு ஏற்ற படைப்பாளிகளும் அருகிவருகிறார்களோ?

தீவிர எழுத்தும் இலக்கியமேடைப்பேச்சில் சிறப்புமாக இருக்கும் இன்னொரு படைப்பாளியையும் அழைக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏற்கனவே சிங்கப்பூர் கவிஞர் , நண்பர் சர்வான் பெருமாள் ஒருமுகநூல் பதிவில், பவா செல்லத்துரை அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குவேன் என்பதுபோல பேராவல் ஒன்றைச் சொல்லியிருந்தார். நானும், ’வாசகர் வட்டம்’ அதைச்செய்யும் என்று பதிலிட்டிருந்தேன். பவாவை அழைப்பது குறித்து வாசகர் வட்ட நண்பர்களிடம் தெரிவித்தேன். நீ வாக்குக்கொடுத்தற்கெல்லாம் வாசகர் வட்டம் வளைந்துபோகாது என்றார்கள். பெண்ணுக்கா வாக்குக்கொடுத்தேன். சர்வான் போன்ற ஆணுக்குத்தானே? பாவிகள்.

இறுதியில் பவாவைவிடச் சிறந்த ஒருபேச்சாளரை நாம் இப்போது அழைக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தோம். உமா கதிரவனிடம் சொன்னேன். மகிழ்ச்சி என்றார். அவருடன் வம்சியையும் அழைக்கலாலாமா என்ற யோசனை வந்தது. சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிரவன், நீதிப்பாண்டி, நஸீர் (மற்றும் என் சிறு பங்களிப்புடனும்)  உள்ளிட்டோரின் உதவியுடன், எழுத்தாளர் அஸ்வகோஷ் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கி, சென்னையில் வெளியிட்டிருந்தார் வம்சி. நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கோணங்கி, இமையம், சு.வேணுகோபால் உள்ளிட்டோரும் அந்த ஆவணப்படத்தில் பேசியிருந்தார்கள். சிங்கப்பூரில் அதை வெளியிடும் திட்டமிருந்ததால், இவர்களுடன் வம்சியையும் இங்கு அழைத்தோம்.

திரு தேவதேவனை அழைத்துப் பேசினேன். என் அலுவலகத்திற்கு வெளியே மனிபிளாண்ட் இலைகள் இதயம் இதயமாய் செழித்துக்கிடந்த அந்தச்செடிக்கு முன்னும் பின்னும் நடந்துகொண்டு, நான் அவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது. தூத்துக்குடி தமிழ் கேட்டு பலவருடங்களாகிவிட்டன. மரியாதையில்லாமல் பேசுவதுபோலத் தோன்றினாலும்  மனதுக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ். ‘என்னை ஏன் அழைக்கிறீங்க?’ ’நீங்களெல்லாம் எந்தக்கொள்ளைக்கூட்டம்?’ ’கிட்னி எடுக்கும் திட்டமிருக்குமோ?’ என்பதுபோன்ற சந்தேகத்தொனியுடனே பேசினார். நான் உற்சாகம் கொப்பளிக்கப் பேசிக்கொண்டிருந்தேன். ’நயன்தாராவுடன் கல்யாணம் முடிவாயிருச்சுங்க, என்ன, அதுதான் ஒத்துக்க மாட்டேங்குது’ என்பதுபோல, ’வரலாம், பாஸ்போர்ட்டுதான் இல்லை’ என்றார்.

ஆகஸ்டுக்குள் எடுக்க முடியுமா என்று சரவணிடம் கேட்டேன். சரவணன், கூடலிங்கம் போன்ற விஷ்ணுபுர வாசகவட்ட நண்பர்கள், அவர் பாஸ்போர்ட் எடுக்க உதவினார்கள். சென்னை தூத்துக்குடி பயண வசதிக்கும் உதவிபுரிந்தார்கள். சென்னையில் பவாவும் வம்சியும் அவரைத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். சென்னை சிங்கப்பூர் விமான நிலையங்களின் பயணநடைமுறைச் சிக்கல்களில், வம்சி, தேவதேவனை நன்கு பார்த்துக்கொண்டார். விஷ்ணுபுர நண்பர்கள், வம்சி ஆகியோருக்கு எங்கள் நன்றி.

2019, ஆகஸ்டு 16 வெள்ளிக்கிழமை மதியம் 1230 அளவில் சிங்கப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் மூவரும். நான், சரவணன் மற்றும் பவாவின் ரசிகர் என்று அவரைக் காண வந்த பானுகுமார் ஆகியோர் காத்திருந்தோம். மூவரும் வெளியில் வந்தார்கள். கட்டியணைத்துக்கொண்டோம். அதுவரை பக்கத்தில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருந்தார் ஒருவர். சரி யாரோ கேர்ள்பிரண்டுக்கு வெயிட் பண்ணக்கூடும் என்றிருந்தேன். பவா வெளியில் வந்ததும், ஓடிப்போய் அவர் கையில் கொடுத்து கட்டியணைத்துக்கொண்டார் அவர். என் பெயர் மணி, உங்கள் உரை கேட்டுத்தான் என் இரவு முடிகிறது என்று தளும்பினார். 

தேவதேவனை நேரில், கடல்தாண்டிப் பார்க்கையில் பேருவகை. காலதூரமற்று உருக்கொண்டு கண்ணெதிரில் வந்து நிற்கும் மின்னல் போல் உற்சாகமாய் இருந்தார்.

வரவேற்பு
இரவும் உணவும் ஷா நவாஸின் அன்பும்
அவர் பையைப் போட்டுக்கிட்டா நீயெல்லாம் பாட்ஷாவா?
கவிதைத்தோழர்கள்
செட்டிநாடு கறி உரிமையாளர் ஊட்டி முகாம், கணேஷ் அவர்களுடன்
விஷ்ணுபுர சிங்கப்பூர் கழக ஒருங்கிணைப்பாளர் சரவணனுடன்
ஏஞ்சல்களால் நிறைந்த உலகம்





தாமரை மலர் போட்ட புடவைதான் அவர் மனைவிக்கு வேண்டும் அடம்பிடிக்கும் பாரதி





கையில் ஏந்திய மலர்


புன்னகைப்பூவே


மின்னற்பொழுதே தூரம்

பவா சிங்கப்பூர் வருவதை முகநூலில் அறிவித்ததும், சிங்கப்பூரிலிருந்து பல அழைப்புகள் வந்தனவாம் அவருக்கு. சந்திக்க ஆவலாய் இருப்பதாய்ச் சொன்னவர்கள், வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டவர்கள்போக, ’ஏன் வாசகர் வட்டம் நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள், நான் அந்த நிகழ்ச்சிக்கெல்லாம் வரமாட்டேனே என்றுகூட கவலையோடு விசாரித்தார்களாம் சிலர். பவாவும் தற்போதுதான் முதன்முறையாக சிங்கப்பூருக்கு வருவதாகச் சொன்னார். 

ஆண்டுவிழா நிகழ்ச்சியில், சித்ரா ரமேஷின் ஒரு கோப்பை நிலா என்ற கவிதை நூல், எம்.கே.குமாரின் ஓந்தி என்ற சிறுகதை நூல், அழகுநிலாவின் பா அங் பாவ் என்ற சிறுவர் பாடல்கள் நூல் மற்றும் ஷா நவாஸின் “Not Unto the Taste” என்ற கவிதை மொழிபெயர்ப்பு நூல் ஆகியன வெளியீடு கண்டன. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்கள் தேவதேவனும் பவாவும்.

 மின்னற்பொழுதே தூரம் என்று தூரமும் காலமும் அற்ற கவிதைவெளிக்குள் சரக்கென்று தன் பேச்சில் இறங்கினார் தேவதேவன். தாகூரின் தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும்; கவிதையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றும், ’கவிதையை எழுதாதே, கவிதையாய் வாழ்காலமும் இடமும் அற்ற நம் வாழ்வே ஒருகவிதைதான் என்பன போன்ற மேற்கோளினை வைத்து ஏஞ்சல் உள்ளிட்ட கவிதைகளை வாசித்து சிற்றுரை ஆற்றினார் தேவதேவன்.

தன் சிறப்புரையில் பல்வேறு சிறுகதைகளைத் தொட்டு வாழ்வின் உன்னதங்களை எடுத்துச்சொன்னார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. பவாவின் கதை கேட்கலாம் வாங்கவிற்கு ஒரு ரசிகத்தலைமுறை உருவாகிவருகிறது. அனைவரும் கதைசொல்லியாக பவாவை அடையாளம் காண்கிறார்கள். முன்பெல்லாம், தன்முனைப்புப்பேச்சாளர்கள், பக்தி, பகடிசார்ந்த பேச்சாளர்களுக்குத்தான் இவ்வளவு ரசிகர்களைக் கண்டதுண்டு. புத்தகங்களை வாசிக்காது, காணொளிகளின்வழி இலக்கியம்பக்கம் வரும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. இவர்களில் ஓரிருவர், அக்கதையாடலில் வரும் கதைகளைத் தேடிப்பிடித்து வாசித்து சிறிது நகர்ந்து தன் ரசனையுணர்வை அடையும்போது மேலும் இது விரிவடையலாம்.

பவாவின் குரலிலிருக்கும் பாசாங்கில்லாத அந்நியோன்யம் கதையில் ஊடுபாவியிருக்கும் அன்பை, அறத்தைச் சொல்லிக்கொண்டு செல்லும்போது கேட்பவர்களிடையே ஓர் உணர்வெழுச்சியை அது எழுப்புகிறது. தேர்ந்த மலர்களைக்கொண்டு கட்டிய ஒரு பூங்கொத்தைப்போல மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. கதையிலிருந்து ஒரு சினிமா காட்சி மேலெழுந்துவருவதைப்போல, ஓர் எழுத்தாளன், ஓர் கதைசொல்லியின் கைகொண்டு மீண்டு எழுந்துநிற்கும் ஒரு எளிய வெற்றியின் அடையாளமாய் அது இருக்கிறது.

ஆகஸ்டு 18, மாலை 6 மணி அளவில், பீஷான் நூலகத்தில், எழுத்தாளர் அஸ்வகோஷ் (இராஜேந்திர சோழன்) குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் படைப்பாளியாகவும் சமூகப்பணிகளில் களப்போராட்டம்கண்ட தோழராகவும் அவருடைய வாழ்க்கை, நெகிழ்ச்சியைத் தந்தது. இத்தகையை போராட்டங்களின் முடிவில் அவருக்கு எஞ்சுவது என்ன என எண்ணும்போது, ’பின்தொடரும் நிழலின்குரல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. நிகழ்ச்சியில் அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்-இயக்குனர் வம்சியின் உரையும் கலந்துரையாடலும் நடைபெற்றன. எழுத்தாளர் அஸ்வகோஷின் படைப்புகள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டன. அவருடைய கடன் கதை எப்போதும் என்னால் மறக்கமுடியாதது. இன்றுபோய் நாளைவா என்பது கடனுக்கெனவே சொல்லப்பட்டதுபோலும். கிராமங்களில் கடன்வாங்க அலைவதே கடனுக்குமுன்பு பெருஞ்சுமையை வரவழைக்கும். அதை அப்படியே சொல்லும் இக்கதை. கொண்டாரெட்டியாரிடம் கடன்வாங்க பத்துநடை நடப்பான் மண்ணாங்கட்டி இக்கதையில். புற்றில் உறையும் பாம்புகளும் பிடித்த இன்னொரு கதை.

ஆகஸ்டு 18, காலை 10 மணிமுதல் 12.30வரை, தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில், கவிதை குறித்த ரசனைப்பயிலரங்கு, கவிஞர் தேவதேவன் தலைமையில் நடைபெற்றது. நானும் பாரதி மூர்த்தியப்பனும் நிகழ்ச்சியைத் தொகுத்தோம். தேவதேவனின் கவிதைகளில் பிடித்த கவிதைகளை, கவிதைகளில் ஆர்வமும், இப்போது சிங்கப்பூரில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் சிலரை அழைத்து, அவர் முன்னால் வாசித்து, அதுகுறித்து மேலும் உரையாடும் சாத்தியம் அல்லது அதுகுறித்த தேவதேவனின் பார்வையை, பேச்சை ரசித்துக்கொண்டிருந்தோம். ஏறக்குறைய இரண்டறை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் தேவதேவன் பேசிக்கொண்டேயிருந்தார். இப்படி வசதியாக அமர்ந்து, இடைவெளிவிட்டு பேசுவதானால், இன்னும் பலமணிநேரம்கூட என்னால் பேசிக்கொண்டிருக்கமுடியும் என்றார்.

நீ கற்றது கவிதையெனில், கல்லாதது ஏதுமில்லை;   கவிதையாய் வாழும்போது கவிதையைச் செய்வது அவசியமில்லை என்றும் சொன்னார். மேலும், தன்னுடைய கவிதைகள், இயல்பாக தான் வாழும் சூழலிருந்து எழுந்தவை என்றும் கவிதையில் முன்முடிவுகள் ஏதுமற்று அதனை எதிர்கொள்வது அவசியம் என்றும் சொன்னார் தேவதேவன். எந்த உணர்வானாலும்  உச்சம் எய்த வேண்டும். உச்சத்திற்குபேர் தான் கவிதை.  எந்த கஷ்டம் கொடுத்தாலும் என்னை இதிலிருந்து பிரிக்க முடியாது என்ற கவித்துவ வாழ்வை தன் ஆன்மா எப்படி பிரிக்க இயலாதபடி பிணைத்திருக்கிறது என்றும் உரைத்தார். உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் ஒரே வெளிப்பாடு கவிதைதான். அழகியலும் ரசனையும் தன்னை மிகவும்நேசிக்கும் மனிதனை உருவாக்கும், மேலும் அதனால் தன்னைப்போலவே பிறரையும் நேசிக்கும் மனிதனையும் அது தொடரும் என்ற கவிதைமதம் போன்றதொரு வாழ்வியல் கோட்பாட்டை அவர் தன் கவிதைகள் மற்றும் ரசனையின்வழி முன்வைத்தார். எத்தனையோ மதங்கள் இருந்தாலும் இம்மதத்தை யாராவது ஓரிருவர் பின்பற்றச்செய்துவிட்டால்போதுமே எனக்கு என்றும் ஆசைப்படுகிறார்.
என் வீட்டுக்கு வந்தார். மகிழ்ச்சியுடன் ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

என் அம்மிணியிடம், ’இவரைப் பத்திரமா பாத்துக்கிடுங்க’ என்றார் தேவதேவன். அவருக்கு ஒருநிமிடம் தலை சுத்திவிட்டது. இவனையா? என்று மனதுக்குள் கறுவிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். பிறகு, ’அவர்தான் என்னைப் பாத்துக்கிடணும்’ என்றார்.

தமிழின் எழுத்துவடிவங்களை மாற்றி, எளிமையாக்கும் யோசனைகள் அவரிடம் இருக்கின்றன. சில குறியீடுகளைப் பயன்படுத்தி, தமிழில் உள்ள எழுத்துக்களைக் குறைத்து மேலும் எளிமையாக்கமுடியும் என்கிறார்.

அப்போ, ஜெயமோகன் என்னைக் கூப்பிடச்சொல்லலியா, என்று அடிக்கடி கேட்டார். இல்லை சார், ஏன் அப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள்  என்றேன்.  இல்லை,  அவரை வாசிச்சவங்கதான் என்னை வாசிச்சவங்களா சொல்றாங்க. நிறையப்பேரு அவர் என்னைப்பத்தி எழுதித்தான், என்கிட்டே வந்ததாச்சொல்றாங்க என்றார். உங்களை  இங்கே சிலர் முன்னரே வாசித்திருக்கிறோம். ஜெயமோகனின் எரிமருள்வேங்கை போன்ற கட்டுரைகளின்வழி உங்களை மேலும் நெருங்கியிருக்கிறோம் என்றேன். ’ஜெயமோகன் வழியாகவே என்னை அதிகம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து, ஜெயமோகன்தான், தேவதேவன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார் என்று சொன்னால்கூட நம்பிவிடுவார்களாயிருக்கும்’ என்றார். ஒரு வினாடி  அமைதி நிலவ, பிறகு வாய்விட்டுச்சிரித்தோம். உண்மையாய் அப்படி நடந்தால்கூட ஆச்சர்யமில்லைதான்.

நானும் சரவணனும் தேவதேவனை  'உட்லண்ட்ஸ் வாட்டர் ஃப்ரொண்ட்' என்ற மலேசியாவுக்கருகில் கடலுக்குள் இருக்கும் பாலத்திற்கு அழைத்துச்சென்றோம். நல்லா இருக்குலே..இந்த இடம் என்றார் தேவதேவன். கடலைச்சுற்றி விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்க, திடீரென, 'உங்க ஏஞ்சலை இங்கு கூட்டிவாறதுண்டா?' என்றார் என்னிடம். நானும் சரவணனும் ஒருவரையொருவர் பாத்துக்கொண்டு, 'எந்த ஏஞ்சல் சார், ஏஞ்சல் ஒண்ணா, ஏஞ்சல் ரெண்டா, இல்லை மூன்றா' என்றேன். வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.
விஷ்ணுபுர விழா, ஊட்டிமுகாம் படங்களில் அவர் எப்போதும் சித்தபிரமைகொண்டவர் போல அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கும் ஒருபடம்கூட அங்கே பார்த்ததாய் ஞாபகம் இல்லை. சிங்கப்பூரில் அவர் அடிக்கடி சிரித்தார். பவாசெல்லத்துரை சார் கூட ஒருமுறை, ’இவர் தேவதேவன் தானா? இப்படியெல்லாம் பேசுவாரா? சிரிப்பாரா? நான் பார்த்ததேயில்லையே, ஒருநாள் என்வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஏதும் ஏதும் பேசாமல் இருந்து, பிறகு, ஷைலஜாவிடம்,  உங்கள் வளையல் குறித்து கவிதை எழுதணும் என்றுதான் வந்தேன்’ என்றுமட்டும் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார். அவரா இவர்? என்று ஆச்ச்ர்யப்பட்டுக்கொண்டேயிருந்தார்.

ஏர்போர்ட்டுக்கு நானும் சரவணன்னும் சென்றிருந்தோம். ரொம்பநேரம் விடாமல் அவர் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தேன். இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பவாவும் வம்சியும் விமானநிலையத்தில் இணைந்துகொண்டார்கள். நண்பரின் வீட்டில் செம சாப்பாடு, நீங்க மிஸ் செஞ்சிட்டீங்க, குமார்; திருவண்ணாமலை கண்டிப்பா வாங்க’ என்றார் பவா.  நானும் இதுவரைக்கும் அங்கு போனதில்லை. போகவேண்டும். பவாவின் உண்டாட்டு பெரு ஆனந்தம்.

போர்டிங் கேட்டுக்குள் போகும்முன் தயங்கித்தயங்கி நின்றுகொண்டிருந்தார் தேவதேவன். எனக்கும் குழப்பம். மீண்டும் ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டேன். கொஞ்சம் கூச்சத்திற்குப் பிறகு கழுத்தில் ஒரு முத்தமும் கொடுத்தேன்.

இன்னும் சில நாட்கள் அவர் இங்கு இருக்கமட்டாரா என்று ஏங்கியதாய்ச் சொன்னார்கள் சிலர். பலர் கண்கலங்கினார்கள். மிக நிறைவான பொழுது தேவதேவனுடன்..மிக்க நன்றி என்று சிங்கப்பூரிலிருக்கும் எழுத்து நண்பர்கள் முகநூலில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

கவிதை ரசனையரங்கில் கடைசியாக இந்தக் கவிதையை நான் வாசித்தேன்.

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

ஒரு நிமிடம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் என்னையே. காலம் கடலென மிதந்தது. ஏதாவது அர்த்தம் கேட்டுவிடுவானோ என அவரும் ஏதாவது விளக்கம் சொல்லிவொடுவாரோ என நானும்  சபையும் உறைந்திருக்க, "அதை அப்படியேவிட்டுடுவோமே;  யாரும் எதுவும் சொல்லாம" என்று கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் பவா செல்லத்துரை. அத்தனை பேருடைய உள்ளத்திலும் மலர்ந்துகிடந்தது அந்த மலர்.

தேவதேவனை என் ஆன்மாவுடன் உரையாடும் தோழன் என்று ஜெயமோகன் எழுதியைப் படித்திருக்கிறேன். அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், அங்கு வந்திருந்த அத்தனை பேருடைய ஆன்மாவிலும் அவர் ஊடாடியிருப்பதாக, நானும் சொன்னேன். இலக்கியக்கடல், குடும்பக்கடல், பொருளாதாரக்கடல் என அலைக்களிக்கும் அத்தனை அலைகளிலும் அல்லலுற்று வந்தவர்களைக் கரையேற்றாமல், ஆழ்கடலுக்கு அழைத்துச்சென்று அவர்களை மிதக்கவிட்டு, அவர்களின் கையில் ஓர் அழகிய ரசனைமலரைக் கொடுத்துச்சென்றார் அவர். தேவதேவனின் கவிதை மலர் கூம்பியும் விரிந்தும் விளக்காகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்தலின் ருசிகாட்டி திசைகாட்டி எங்கள்முன் நிற்கின்றன.

படங்களுக்கு
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2585232184834490&type=3
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2586447468046295&type=3

எம்.கே.குமார்

Search This Blog