Showing posts with label தேவதேவன். Show all posts
Showing posts with label தேவதேவன். Show all posts

Saturday, December 14, 2019

நான் அவர் மற்றும் ஒரு மலர்!

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா, கடந்த ஆகஸ்டு 17 & 18 ஆகிய தேதிகளில் இரு நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. முதன்முதலில் ஆண்டுவிழா என்ற ஒன்றை, நாங்கள் 2013-இல் ஆரம்பித்ததும், அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராய் வந்து சிறப்புரை ஆற்றியவர் திரு ஜெயமோகன் என்பது பலருக்கும் நினைவிலிருக்கும். அச்சிறப்புரையில் ஜெயமோகன் குறிப்பிட்ட  'யாருமில்லை தானே கள்வன்' என்ற கபிலரின் பாடலும், அதில்வரும் குருகு என்ற பறவையும் மற்றும் சரஸ்-வதி தமிழ்க்கதையும் எப்போதும் நினைவிலிருப்பவை.
அவரைத்தொடர்ந்து, ஜோ டி குரூஸ், நாஞ்சில் நாடன், தமிழச்சி தங்கபாண்டியன், சாரு நிவேதிதா போன்ற படைப்பாளிகள் வாசகர் வட்ட ஆண்டுவிழாக்களைச் சிறப்பித்தனர்.

சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில், இரண்டு சிறப்பான அம்சங்கள் எப்போதும் உண்டு. ஒன்று, தேர்ந்த எழுத்தாளரின் இலக்கிய உரை. இரண்டாவது வாசகர் வட்ட நண்பர்களின்  குறிப்பிடத்தக்க சிங்கப்பூர் இலக்கியத்தின் பொதுவான புத்தகவெளியீடுகள்.

இந்தமுறை சிறப்பு விருந்தினராக, கவிஞர் தேவதேவனை அழைக்கலாம் என முடிவுசெய்தோம். நான்தான் அவரை முன்மொழிந்தேன். பாரதி மூர்த்தியப்பன் மிகவும் உற்சாகமாகிவிட்டார். சில கவிஞர்கள் அவருக்கு அந்தரங்கத்தோழர்கள். தேவதேவனும் அதில் ஒருவர். கட்டாயம் அழைத்துவருவோம், நான் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று அப்போதே புக்கிங் செய்துவிட்டார். சித்ரா, ஷா நவாஸ் உள்ளிட்ட நண்பர்கள், தேவதேவன் அகவயமாய் உரையாடுபவர், வாசகர் வட்ட ஆண்டுவிழாவிற்கு மேடையுரை மிகவும் முக்கியம், மேடையில் அவர் உணர்வெழுச்சியாய் உரையாற்ற இயலுமா என்ற அக்கரையை முன்வைத்தார்கள். விஷ்ணுபுர சிங்கப்பூர் கிளைக்கழகத்தின் (?!) சரவணனிடம் இதுகுறித்துப்பேசினேன். அவர் குறிப்பிட்ட நல்ல எழுத்தாளர்கள் மற்றும் உரையாடலுக்கு ஏற்றவர்கள் அப்போது இங்கு வந்துவிட்டும் சென்றிருந்தார்கள். எனவே அவர்களையே மீண்டும் அழைப்பது உசிதமாகாது என்ற முடிவுக்கும் வந்தோம். தீவிர உரையாடலுக்கு ஏற்ற படைப்பாளிகளும் அருகிவருகிறார்களோ?

தீவிர எழுத்தும் இலக்கியமேடைப்பேச்சில் சிறப்புமாக இருக்கும் இன்னொரு படைப்பாளியையும் அழைக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏற்கனவே சிங்கப்பூர் கவிஞர் , நண்பர் சர்வான் பெருமாள் ஒருமுகநூல் பதிவில், பவா செல்லத்துரை அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குவேன் என்பதுபோல பேராவல் ஒன்றைச் சொல்லியிருந்தார். நானும், ’வாசகர் வட்டம்’ அதைச்செய்யும் என்று பதிலிட்டிருந்தேன். பவாவை அழைப்பது குறித்து வாசகர் வட்ட நண்பர்களிடம் தெரிவித்தேன். நீ வாக்குக்கொடுத்தற்கெல்லாம் வாசகர் வட்டம் வளைந்துபோகாது என்றார்கள். பெண்ணுக்கா வாக்குக்கொடுத்தேன். சர்வான் போன்ற ஆணுக்குத்தானே? பாவிகள்.

இறுதியில் பவாவைவிடச் சிறந்த ஒருபேச்சாளரை நாம் இப்போது அழைக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தோம். உமா கதிரவனிடம் சொன்னேன். மகிழ்ச்சி என்றார். அவருடன் வம்சியையும் அழைக்கலாலாமா என்ற யோசனை வந்தது. சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிரவன், நீதிப்பாண்டி, நஸீர் (மற்றும் என் சிறு பங்களிப்புடனும்)  உள்ளிட்டோரின் உதவியுடன், எழுத்தாளர் அஸ்வகோஷ் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கி, சென்னையில் வெளியிட்டிருந்தார் வம்சி. நாஞ்சில் நாடன், ஜெயமோகன், கோணங்கி, இமையம், சு.வேணுகோபால் உள்ளிட்டோரும் அந்த ஆவணப்படத்தில் பேசியிருந்தார்கள். சிங்கப்பூரில் அதை வெளியிடும் திட்டமிருந்ததால், இவர்களுடன் வம்சியையும் இங்கு அழைத்தோம்.

திரு தேவதேவனை அழைத்துப் பேசினேன். என் அலுவலகத்திற்கு வெளியே மனிபிளாண்ட் இலைகள் இதயம் இதயமாய் செழித்துக்கிடந்த அந்தச்செடிக்கு முன்னும் பின்னும் நடந்துகொண்டு, நான் அவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது. தூத்துக்குடி தமிழ் கேட்டு பலவருடங்களாகிவிட்டன. மரியாதையில்லாமல் பேசுவதுபோலத் தோன்றினாலும்  மனதுக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ். ‘என்னை ஏன் அழைக்கிறீங்க?’ ’நீங்களெல்லாம் எந்தக்கொள்ளைக்கூட்டம்?’ ’கிட்னி எடுக்கும் திட்டமிருக்குமோ?’ என்பதுபோன்ற சந்தேகத்தொனியுடனே பேசினார். நான் உற்சாகம் கொப்பளிக்கப் பேசிக்கொண்டிருந்தேன். ’நயன்தாராவுடன் கல்யாணம் முடிவாயிருச்சுங்க, என்ன, அதுதான் ஒத்துக்க மாட்டேங்குது’ என்பதுபோல, ’வரலாம், பாஸ்போர்ட்டுதான் இல்லை’ என்றார்.

ஆகஸ்டுக்குள் எடுக்க முடியுமா என்று சரவணிடம் கேட்டேன். சரவணன், கூடலிங்கம் போன்ற விஷ்ணுபுர வாசகவட்ட நண்பர்கள், அவர் பாஸ்போர்ட் எடுக்க உதவினார்கள். சென்னை தூத்துக்குடி பயண வசதிக்கும் உதவிபுரிந்தார்கள். சென்னையில் பவாவும் வம்சியும் அவரைத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். சென்னை சிங்கப்பூர் விமான நிலையங்களின் பயணநடைமுறைச் சிக்கல்களில், வம்சி, தேவதேவனை நன்கு பார்த்துக்கொண்டார். விஷ்ணுபுர நண்பர்கள், வம்சி ஆகியோருக்கு எங்கள் நன்றி.

2019, ஆகஸ்டு 16 வெள்ளிக்கிழமை மதியம் 1230 அளவில் சிங்கப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் மூவரும். நான், சரவணன் மற்றும் பவாவின் ரசிகர் என்று அவரைக் காண வந்த பானுகுமார் ஆகியோர் காத்திருந்தோம். மூவரும் வெளியில் வந்தார்கள். கட்டியணைத்துக்கொண்டோம். அதுவரை பக்கத்தில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருந்தார் ஒருவர். சரி யாரோ கேர்ள்பிரண்டுக்கு வெயிட் பண்ணக்கூடும் என்றிருந்தேன். பவா வெளியில் வந்ததும், ஓடிப்போய் அவர் கையில் கொடுத்து கட்டியணைத்துக்கொண்டார் அவர். என் பெயர் மணி, உங்கள் உரை கேட்டுத்தான் என் இரவு முடிகிறது என்று தளும்பினார். 

தேவதேவனை நேரில், கடல்தாண்டிப் பார்க்கையில் பேருவகை. காலதூரமற்று உருக்கொண்டு கண்ணெதிரில் வந்து நிற்கும் மின்னல் போல் உற்சாகமாய் இருந்தார்.

வரவேற்பு
இரவும் உணவும் ஷா நவாஸின் அன்பும்
அவர் பையைப் போட்டுக்கிட்டா நீயெல்லாம் பாட்ஷாவா?
கவிதைத்தோழர்கள்
செட்டிநாடு கறி உரிமையாளர் ஊட்டி முகாம், கணேஷ் அவர்களுடன்
விஷ்ணுபுர சிங்கப்பூர் கழக ஒருங்கிணைப்பாளர் சரவணனுடன்
ஏஞ்சல்களால் நிறைந்த உலகம்





தாமரை மலர் போட்ட புடவைதான் அவர் மனைவிக்கு வேண்டும் அடம்பிடிக்கும் பாரதி





கையில் ஏந்திய மலர்


புன்னகைப்பூவே


மின்னற்பொழுதே தூரம்

பவா சிங்கப்பூர் வருவதை முகநூலில் அறிவித்ததும், சிங்கப்பூரிலிருந்து பல அழைப்புகள் வந்தனவாம் அவருக்கு. சந்திக்க ஆவலாய் இருப்பதாய்ச் சொன்னவர்கள், வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டவர்கள்போக, ’ஏன் வாசகர் வட்டம் நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள், நான் அந்த நிகழ்ச்சிக்கெல்லாம் வரமாட்டேனே என்றுகூட கவலையோடு விசாரித்தார்களாம் சிலர். பவாவும் தற்போதுதான் முதன்முறையாக சிங்கப்பூருக்கு வருவதாகச் சொன்னார். 

ஆண்டுவிழா நிகழ்ச்சியில், சித்ரா ரமேஷின் ஒரு கோப்பை நிலா என்ற கவிதை நூல், எம்.கே.குமாரின் ஓந்தி என்ற சிறுகதை நூல், அழகுநிலாவின் பா அங் பாவ் என்ற சிறுவர் பாடல்கள் நூல் மற்றும் ஷா நவாஸின் “Not Unto the Taste” என்ற கவிதை மொழிபெயர்ப்பு நூல் ஆகியன வெளியீடு கண்டன. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்கள் தேவதேவனும் பவாவும்.

 மின்னற்பொழுதே தூரம் என்று தூரமும் காலமும் அற்ற கவிதைவெளிக்குள் சரக்கென்று தன் பேச்சில் இறங்கினார் தேவதேவன். தாகூரின் தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும்; கவிதையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றும், ’கவிதையை எழுதாதே, கவிதையாய் வாழ்காலமும் இடமும் அற்ற நம் வாழ்வே ஒருகவிதைதான் என்பன போன்ற மேற்கோளினை வைத்து ஏஞ்சல் உள்ளிட்ட கவிதைகளை வாசித்து சிற்றுரை ஆற்றினார் தேவதேவன்.

தன் சிறப்புரையில் பல்வேறு சிறுகதைகளைத் தொட்டு வாழ்வின் உன்னதங்களை எடுத்துச்சொன்னார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. பவாவின் கதை கேட்கலாம் வாங்கவிற்கு ஒரு ரசிகத்தலைமுறை உருவாகிவருகிறது. அனைவரும் கதைசொல்லியாக பவாவை அடையாளம் காண்கிறார்கள். முன்பெல்லாம், தன்முனைப்புப்பேச்சாளர்கள், பக்தி, பகடிசார்ந்த பேச்சாளர்களுக்குத்தான் இவ்வளவு ரசிகர்களைக் கண்டதுண்டு. புத்தகங்களை வாசிக்காது, காணொளிகளின்வழி இலக்கியம்பக்கம் வரும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. இவர்களில் ஓரிருவர், அக்கதையாடலில் வரும் கதைகளைத் தேடிப்பிடித்து வாசித்து சிறிது நகர்ந்து தன் ரசனையுணர்வை அடையும்போது மேலும் இது விரிவடையலாம்.

பவாவின் குரலிலிருக்கும் பாசாங்கில்லாத அந்நியோன்யம் கதையில் ஊடுபாவியிருக்கும் அன்பை, அறத்தைச் சொல்லிக்கொண்டு செல்லும்போது கேட்பவர்களிடையே ஓர் உணர்வெழுச்சியை அது எழுப்புகிறது. தேர்ந்த மலர்களைக்கொண்டு கட்டிய ஒரு பூங்கொத்தைப்போல மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. கதையிலிருந்து ஒரு சினிமா காட்சி மேலெழுந்துவருவதைப்போல, ஓர் எழுத்தாளன், ஓர் கதைசொல்லியின் கைகொண்டு மீண்டு எழுந்துநிற்கும் ஒரு எளிய வெற்றியின் அடையாளமாய் அது இருக்கிறது.

ஆகஸ்டு 18, மாலை 6 மணி அளவில், பீஷான் நூலகத்தில், எழுத்தாளர் அஸ்வகோஷ் (இராஜேந்திர சோழன்) குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் படைப்பாளியாகவும் சமூகப்பணிகளில் களப்போராட்டம்கண்ட தோழராகவும் அவருடைய வாழ்க்கை, நெகிழ்ச்சியைத் தந்தது. இத்தகையை போராட்டங்களின் முடிவில் அவருக்கு எஞ்சுவது என்ன என எண்ணும்போது, ’பின்தொடரும் நிழலின்குரல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. நிகழ்ச்சியில் அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்-இயக்குனர் வம்சியின் உரையும் கலந்துரையாடலும் நடைபெற்றன. எழுத்தாளர் அஸ்வகோஷின் படைப்புகள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டன. அவருடைய கடன் கதை எப்போதும் என்னால் மறக்கமுடியாதது. இன்றுபோய் நாளைவா என்பது கடனுக்கெனவே சொல்லப்பட்டதுபோலும். கிராமங்களில் கடன்வாங்க அலைவதே கடனுக்குமுன்பு பெருஞ்சுமையை வரவழைக்கும். அதை அப்படியே சொல்லும் இக்கதை. கொண்டாரெட்டியாரிடம் கடன்வாங்க பத்துநடை நடப்பான் மண்ணாங்கட்டி இக்கதையில். புற்றில் உறையும் பாம்புகளும் பிடித்த இன்னொரு கதை.

ஆகஸ்டு 18, காலை 10 மணிமுதல் 12.30வரை, தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில், கவிதை குறித்த ரசனைப்பயிலரங்கு, கவிஞர் தேவதேவன் தலைமையில் நடைபெற்றது. நானும் பாரதி மூர்த்தியப்பனும் நிகழ்ச்சியைத் தொகுத்தோம். தேவதேவனின் கவிதைகளில் பிடித்த கவிதைகளை, கவிதைகளில் ஆர்வமும், இப்போது சிங்கப்பூரில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் சிலரை அழைத்து, அவர் முன்னால் வாசித்து, அதுகுறித்து மேலும் உரையாடும் சாத்தியம் அல்லது அதுகுறித்த தேவதேவனின் பார்வையை, பேச்சை ரசித்துக்கொண்டிருந்தோம். ஏறக்குறைய இரண்டறை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் தேவதேவன் பேசிக்கொண்டேயிருந்தார். இப்படி வசதியாக அமர்ந்து, இடைவெளிவிட்டு பேசுவதானால், இன்னும் பலமணிநேரம்கூட என்னால் பேசிக்கொண்டிருக்கமுடியும் என்றார்.

நீ கற்றது கவிதையெனில், கல்லாதது ஏதுமில்லை;   கவிதையாய் வாழும்போது கவிதையைச் செய்வது அவசியமில்லை என்றும் சொன்னார். மேலும், தன்னுடைய கவிதைகள், இயல்பாக தான் வாழும் சூழலிருந்து எழுந்தவை என்றும் கவிதையில் முன்முடிவுகள் ஏதுமற்று அதனை எதிர்கொள்வது அவசியம் என்றும் சொன்னார் தேவதேவன். எந்த உணர்வானாலும்  உச்சம் எய்த வேண்டும். உச்சத்திற்குபேர் தான் கவிதை.  எந்த கஷ்டம் கொடுத்தாலும் என்னை இதிலிருந்து பிரிக்க முடியாது என்ற கவித்துவ வாழ்வை தன் ஆன்மா எப்படி பிரிக்க இயலாதபடி பிணைத்திருக்கிறது என்றும் உரைத்தார். உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் ஒரே வெளிப்பாடு கவிதைதான். அழகியலும் ரசனையும் தன்னை மிகவும்நேசிக்கும் மனிதனை உருவாக்கும், மேலும் அதனால் தன்னைப்போலவே பிறரையும் நேசிக்கும் மனிதனையும் அது தொடரும் என்ற கவிதைமதம் போன்றதொரு வாழ்வியல் கோட்பாட்டை அவர் தன் கவிதைகள் மற்றும் ரசனையின்வழி முன்வைத்தார். எத்தனையோ மதங்கள் இருந்தாலும் இம்மதத்தை யாராவது ஓரிருவர் பின்பற்றச்செய்துவிட்டால்போதுமே எனக்கு என்றும் ஆசைப்படுகிறார்.
என் வீட்டுக்கு வந்தார். மகிழ்ச்சியுடன் ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

என் அம்மிணியிடம், ’இவரைப் பத்திரமா பாத்துக்கிடுங்க’ என்றார் தேவதேவன். அவருக்கு ஒருநிமிடம் தலை சுத்திவிட்டது. இவனையா? என்று மனதுக்குள் கறுவிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். பிறகு, ’அவர்தான் என்னைப் பாத்துக்கிடணும்’ என்றார்.

தமிழின் எழுத்துவடிவங்களை மாற்றி, எளிமையாக்கும் யோசனைகள் அவரிடம் இருக்கின்றன. சில குறியீடுகளைப் பயன்படுத்தி, தமிழில் உள்ள எழுத்துக்களைக் குறைத்து மேலும் எளிமையாக்கமுடியும் என்கிறார்.

அப்போ, ஜெயமோகன் என்னைக் கூப்பிடச்சொல்லலியா, என்று அடிக்கடி கேட்டார். இல்லை சார், ஏன் அப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள்  என்றேன்.  இல்லை,  அவரை வாசிச்சவங்கதான் என்னை வாசிச்சவங்களா சொல்றாங்க. நிறையப்பேரு அவர் என்னைப்பத்தி எழுதித்தான், என்கிட்டே வந்ததாச்சொல்றாங்க என்றார். உங்களை  இங்கே சிலர் முன்னரே வாசித்திருக்கிறோம். ஜெயமோகனின் எரிமருள்வேங்கை போன்ற கட்டுரைகளின்வழி உங்களை மேலும் நெருங்கியிருக்கிறோம் என்றேன். ’ஜெயமோகன் வழியாகவே என்னை அதிகம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து, ஜெயமோகன்தான், தேவதேவன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார் என்று சொன்னால்கூட நம்பிவிடுவார்களாயிருக்கும்’ என்றார். ஒரு வினாடி  அமைதி நிலவ, பிறகு வாய்விட்டுச்சிரித்தோம். உண்மையாய் அப்படி நடந்தால்கூட ஆச்சர்யமில்லைதான்.

நானும் சரவணனும் தேவதேவனை  'உட்லண்ட்ஸ் வாட்டர் ஃப்ரொண்ட்' என்ற மலேசியாவுக்கருகில் கடலுக்குள் இருக்கும் பாலத்திற்கு அழைத்துச்சென்றோம். நல்லா இருக்குலே..இந்த இடம் என்றார் தேவதேவன். கடலைச்சுற்றி விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்க, திடீரென, 'உங்க ஏஞ்சலை இங்கு கூட்டிவாறதுண்டா?' என்றார் என்னிடம். நானும் சரவணனும் ஒருவரையொருவர் பாத்துக்கொண்டு, 'எந்த ஏஞ்சல் சார், ஏஞ்சல் ஒண்ணா, ஏஞ்சல் ரெண்டா, இல்லை மூன்றா' என்றேன். வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.
விஷ்ணுபுர விழா, ஊட்டிமுகாம் படங்களில் அவர் எப்போதும் சித்தபிரமைகொண்டவர் போல அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கும் ஒருபடம்கூட அங்கே பார்த்ததாய் ஞாபகம் இல்லை. சிங்கப்பூரில் அவர் அடிக்கடி சிரித்தார். பவாசெல்லத்துரை சார் கூட ஒருமுறை, ’இவர் தேவதேவன் தானா? இப்படியெல்லாம் பேசுவாரா? சிரிப்பாரா? நான் பார்த்ததேயில்லையே, ஒருநாள் என்வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஏதும் ஏதும் பேசாமல் இருந்து, பிறகு, ஷைலஜாவிடம்,  உங்கள் வளையல் குறித்து கவிதை எழுதணும் என்றுதான் வந்தேன்’ என்றுமட்டும் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார். அவரா இவர்? என்று ஆச்ச்ர்யப்பட்டுக்கொண்டேயிருந்தார்.

ஏர்போர்ட்டுக்கு நானும் சரவணன்னும் சென்றிருந்தோம். ரொம்பநேரம் விடாமல் அவர் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தேன். இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பவாவும் வம்சியும் விமானநிலையத்தில் இணைந்துகொண்டார்கள். நண்பரின் வீட்டில் செம சாப்பாடு, நீங்க மிஸ் செஞ்சிட்டீங்க, குமார்; திருவண்ணாமலை கண்டிப்பா வாங்க’ என்றார் பவா.  நானும் இதுவரைக்கும் அங்கு போனதில்லை. போகவேண்டும். பவாவின் உண்டாட்டு பெரு ஆனந்தம்.

போர்டிங் கேட்டுக்குள் போகும்முன் தயங்கித்தயங்கி நின்றுகொண்டிருந்தார் தேவதேவன். எனக்கும் குழப்பம். மீண்டும் ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டேன். கொஞ்சம் கூச்சத்திற்குப் பிறகு கழுத்தில் ஒரு முத்தமும் கொடுத்தேன்.

இன்னும் சில நாட்கள் அவர் இங்கு இருக்கமட்டாரா என்று ஏங்கியதாய்ச் சொன்னார்கள் சிலர். பலர் கண்கலங்கினார்கள். மிக நிறைவான பொழுது தேவதேவனுடன்..மிக்க நன்றி என்று சிங்கப்பூரிலிருக்கும் எழுத்து நண்பர்கள் முகநூலில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

கவிதை ரசனையரங்கில் கடைசியாக இந்தக் கவிதையை நான் வாசித்தேன்.

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

ஒரு நிமிடம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் என்னையே. காலம் கடலென மிதந்தது. ஏதாவது அர்த்தம் கேட்டுவிடுவானோ என அவரும் ஏதாவது விளக்கம் சொல்லிவொடுவாரோ என நானும்  சபையும் உறைந்திருக்க, "அதை அப்படியேவிட்டுடுவோமே;  யாரும் எதுவும் சொல்லாம" என்று கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் பவா செல்லத்துரை. அத்தனை பேருடைய உள்ளத்திலும் மலர்ந்துகிடந்தது அந்த மலர்.

தேவதேவனை என் ஆன்மாவுடன் உரையாடும் தோழன் என்று ஜெயமோகன் எழுதியைப் படித்திருக்கிறேன். அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், அங்கு வந்திருந்த அத்தனை பேருடைய ஆன்மாவிலும் அவர் ஊடாடியிருப்பதாக, நானும் சொன்னேன். இலக்கியக்கடல், குடும்பக்கடல், பொருளாதாரக்கடல் என அலைக்களிக்கும் அத்தனை அலைகளிலும் அல்லலுற்று வந்தவர்களைக் கரையேற்றாமல், ஆழ்கடலுக்கு அழைத்துச்சென்று அவர்களை மிதக்கவிட்டு, அவர்களின் கையில் ஓர் அழகிய ரசனைமலரைக் கொடுத்துச்சென்றார் அவர். தேவதேவனின் கவிதை மலர் கூம்பியும் விரிந்தும் விளக்காகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்தலின் ருசிகாட்டி திசைகாட்டி எங்கள்முன் நிற்கின்றன.

படங்களுக்கு
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2585232184834490&type=3
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2586447468046295&type=3

எம்.கே.குமார்

Monday, August 26, 2019

வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் "ஓந்தி" சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா


வெற்றிகரமாக நிறைவு பெற்றது வாசகர் வட்ட ஆண்டு விழா மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு "ஓந்தி" வெளியீட்டுவிழா.

நிகழ்ச்சிக்கு வந்து நாங்கள் நினைத்தபடியே ஆத்மார்த்தமாய் சிறப்பித்தனர் திரு தேவதேவன் மற்றும் திரு பவா செல்லத்துரை அவர்கள்.

வாசகர் வட்ட ஆண்டுவிழா எப்போதும்  மார்ச் மாதத்தில் நடக்கும். இம்முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஆகஸ்டுமாதத்திற்குத் தள்ளிவைக்க நேரிட்டது. இதற்கிடையில் ஏப்ரல் தமிழ்மொழிமாத விழாவில்கவிதையும் காட்சியும்என்ற ஒரு நிகழ்ச்சியையும் வாசகர் வட்டம் செய்தது. ரோகிணி சிறப்பு விருந்தினராய் வந்தார். ஏறக்குறைய 160 புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி அந்நிகழ்வை வெற்றியாக்கினர் மாணவர்கள். அதற்குப்பிறகு இந்நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டோம்.

 

தேவதேவன் அவர்களை மார்ச் மாதத்தில் தொடர்புகொண்டு அழைத்தோம்கடவுச்சீட்டு இல்லையென்றவுடன்அதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் நடந்தனவிஷ்ணுபுர நண்பர்கள் சரவணன்கூடலிங்கம் உள்ளிட்டோர் உறுதுணையாய் இருந்தனர்அவர் வருவது உறுதியானவுடன் இன்னொருவரையும் அழைக்கலாமா என்று யோசனை எழுந்ததுஆண்டுவிழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று இலக்கியச் சிறப்புரை.  2013ல் ஜெயமோகன் ஆரம்பித்து வைத்த அப்பேருரை வருடாவரும் சிறப்பாக இருக்கும்தேவதேவன் ஒப்பனைகளற்ற அகவயமாய் உரையாடக்கூடியவர்அவர் நீண்ட நேரம் பேசுவது சிரமம் என்றவுடன்சிறப்புரைக்கு இன்னொருவர் என சில எழுத்தாளர்கள் நினைவுக்கு வந்தனர்பேச்சாளர் மட்டும் நோக்கமல்லஎழுத்தாளராகவும் இருக்கவேண்டும்பவாசெல்லத்துரையை அழைக்கலாம் என்ற யோசனை வந்ததுநிதிஆதரவு ஒரு சிறப்பு விருந்தினருக்கே என்ற வகையில்இன்னொருவரின் செலவுகளை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாம் என முடிவுசெய்தோம்இதற்கிடையில் ”U Studios” சார்பில் சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிர்பாண்டித்துரைநசீர் மற்றும் என்னுடைய பங்களிப்புகளில்எழுத்தாளர் ’அஷ்வகோஷ்’ குறித்த ஆவணப்படத்தை எடுத்து சென்னையில் வெளியிட்டிருந்தார் பவாவின் புதல்வன் வம்சிஅதைச் சிங்கப்பூரில் வெளியிடலாம் என்றும் யோசனை வந்தது.
 

      

     

  

 



 

சரியாக ஒருமாதத்திற்கு முன்புதான் ஆண்டுவிழா வேலைகள் துவங்கினசித்ரா ரமேஷ் கவிதைப்புத்தகம் வெளியீடு செய்வது குறித்து ஆரம்பித்துவைத்தார்மற்ற புத்தகங்கள் உடனே விழித்து எழுந்தன.

என்னுடைய கதைகளைத்தொகுத்தபின்முன்னுரை வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனைபத்துப்பதினைந்து நாட்களுக்குள் யாரைத் தொந்தரவுசெய்வது என்ற தவிப்புஒருமுறை இவரை கேட்கலாம்முடியாது என்றால் முன்னுரை இல்லாமலேயே வரட்டும் என்று திரு.சு வேணுகோபால் அவர்களைத் தொடர்புகொண்டேன்சிறந்த படைப்பாளிஇலக்கியத்தை மிக மிக நேர்மையாக அணுகும் மனிதர்களில் ஒருவர்ஒருபக்கம் தினசரி கல்லூரிவேலைகள்மறுபக்கம் நாகர்கோவில் இலக்கியச்சந்திப்பு வேலைகள்நேரிடையாக கைத்தொலைபேசியிலோ கணினியிலோ எழுத வராது அவருக்குஇந்நிலையில்கையால் எழுதி படம் எடுத்து எனக்கு அனுப்பிவைப்பார்அதை நான் தட்டச்சு செய்வேன்பிழைதிருத்தங்கள் செய்வோம்இப்படி இப்புத்தக ஆக்கத்தில் முன்னோடியாய் துணைநின்ற திரு சு.வேணுகோபால் அவர்களுக்கு என் முதல் நன்றி.
எல்லாம் ஒன்றையொன்று நெருங்கிசரியாக பத்துநாட்களுக்குமுன் அப்பாவைப் பார்க்க ஊருக்குச்செல்லவேண்டிய நிலைஎன் வீட்டில் இணைய இணைப்பு எடுக்காதுஎழுந்து எதிரிலிருக்கும் குளக்கரைக்கு வரவேண்டும்கோபியர்கள் குளித்துக்கரையேறாத அதே குளம்தான்இப்போது தண்ணியும் இல்லை, கோபியர்களும் இல்லை. நெட்டுக்காக அங்கு வரவேண்டியிருந்ததுஅங்கிருந்தே வேணுகோபால் சாருக்கு மெசேஜ் அனுப்புவேன்அங்கிருந்தே யாவரும் பதிப்பக ஜீவகரிகாலனுக்கும் பதில் அனுப்புவேன்.

அட்டைப்படத்தை அனுப்பிவைத்தார் ஜீவ கரிகாலன்இதை அப்பாவின் கையால் இவ்வுலகத்திற்கு வெளியிடவேண்டும் என்ற ஆசைஅப்பாவின் உடல்சோர்வுக்கிடையே அவரைக் கொஞ்சம் வெளியே அழைத்துச்செல்லவேண்டும் என்று முன்னமே யோசித்திருந்தேன்அப்பாஅம்மாவின் எழுபதாவது அகவைவிழாவுக்கு சென்றவருடமே திருக்கடையூர் செல்லவேண்டியதுஇம்முறை செல்லலாம் என்று கிளம்பினோம்முதல்நாள் திருக்கடையூர்இரண்டாம் நாள் வேளாங்கண்ணிதிருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் வைத்து அந்த அட்டைப்படத்தை அவரை வெளியிடச்சொன்னேன்அபிராமி யும் மனதுக்கு நெருக்கமானவள்மிக மிக மகிழ்வான தருணமது.
 
 
 
 


 


இப்புத்தகத்தை வெளியிட்டயாவரும்பதிப்பக நண்பர்கள் ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு நன்றி. அட்டைப்படம் கோபு ராசுவேலின் அபாரமான உழைப்பு. அவருக்கும் என் நன்றி.

புத்தகத்தைப் பற்றிய நேர்மையான பார்வையாக ஓரிரு பின்னுரைகளை கடந்த என்னுடைய ’5.12pm’, புத்தகத்தில் வைத்திருந்தேன். ’ஓந்தி’க்கு அத்தகைய ஒரு மதிப்பீடாய், சிறந்த வாசகர், விமர்சகர், சிவானந்தம் நீலகண்டன் எழுதித்தந்தார். நிகழ்வில் அவரே புத்தக அறிமுகத்தையும் செய்தார். அவருக்கும் என் மரியாதையும் நன்றியும்.

புத்தக வெளியீட்டிற்கு இருநட்கள்வரை சிங்கப்பூருக்கு புத்தகம் வந்துசேர்வதில் தாமதம். நூலைக்கொண்டு வந்து சேர்க்க உதவினார்கள் என் மனைவியும் அவருடைய நண்பர்களும். அவர்களுக்கு என் நன்றி.

முதற்பிரதிக்குச் சிறப்புச்செய்த Avanta Global நிறுவனர் திரு. புவன் ஈஸ்வரன், அவர் சார்பாய் மேடையில் பெற்றுக்கொண்ட கவிமாலைக் காப்பாளர் அண்ணன் மா.அன்பழகன் ஆகியோருக்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ஜோதி மாணிக்கவாசகம், திரு அருண் மகிழ்நன் திருமதி ப்ரியா அருண்,  திரு. முகமது அலி, செல்வி கவிதா கரும், திரு இறை மதியழகன்,  தினமலர் ஐயா புருஷோத்தமன், ஆசிரியர் சோமு, சகோதரர் திரு ரவிச்சந்திரன் சோமு, திரு மதியழகன், கங்கைகொண்டான் கழக சகோதரர் புருஷோத்தமன், முனைவர் திருமதி & திரு வெங்கட்  சகோதரர் சிராஜுதீன், முனைவர் ராஜூ சீனிவாசன்,  சகோதரர் செட்டிநாடு கணேஷ், சகோதரர் அன்புச்செல்வன்இதழன், சகோதரர் தியாக ரமேஷ், கல்லூரி நண்பர் ஆனந்த் ஆகியோருக்கு என் அன்பு நன்றி.

சிங்கப்பூர் கவிஞர்கள், இலக்கியநண்பர்கள், தாம் சண்முகம், ராஜூ ரமேஷ், மெ.அழகப்பன், மதிக்குமார், கருணாகரசு, அருள்குமரன், செல்வராசு, கார்த்திக் அருண்குமார், பாலாஜி, தெய்வா, ஜோசப் சேவியர், செந்தில்குமார்- சுபா, கங்கா, ஹேமா, பிரியா கணேசன், அபிராமி சுரேஷ், மோகனப்பிரியா, வித்யா கிருஷ், சரஸ் வேல், சுபாஷினி கலைக்கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் வருகைக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்பு சகோதரர்கள் சுந்தரம், ராவ், சதீஷ், அன்பு மாணவர்கள் மன்னார்குடி கவி, திருவரங்குளம்-மேற்கு தேவன் அன்பு, தனபால், தஞ்சாவூர் மோகன் ஆகியோருக்கும் என் அன்பு நன்றி.

நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த தேசிய கலைகள் மன்றம், திரு அழகியபாண்டியன், செல்வி நிர்மலா உள்ளிட்ட தேசிய நூலகவாரியம், செய்திகளை வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழ், உதவி நல்கிய புரவலர்கள், நிகழ்வை புகைப்படமாக்கி நிலைத்து நிற்கச்செய்த சகோதரர் வெங்கட் ஆகியோருக்கும் நன்றி.

வாசகர் வட்டத்தின் நிகழ்வு எப்போதும் சிறப்பானதாய் அமைய அதன் இயல்பான ஒருங்கிணைப்பும் இணைந்து நிற்பவர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பும் முக்கிய காரணம். தேவதேவன் மற்றும் பவா இந்த நிகழ்வில் கதாநாயகர்களாக, மூத்தோர்களாக தோள்நின்றார்கள். என் புத்தக வெளியீட்டில் உறுதுணையாய் நின்ற வாசகர் வட்ட நண்பர்கள் சித்ரா, ஷா நவாஸ், பாரதி, அழகுநிலா, சிவானந்தம், பாண்டித்துரை போன்றோருக்கு என் அன்பு.

ஒரு புத்தகம் என்றும் நிலைத்து நிற்கப்போகும் ஒரு படைப்பு. அதன் உருவில், வெளியீட்டில், பயணத்தில் இணைந்துநின்ற அத்துணை நல்லோருக்கும் நன்றி. இன்னொரு வெளியீட்டில் சந்திப்போம்.

அன்புடன்
எம்.கே.

Search This Blog