Monday, October 12, 2020

மணியுலகு

 https://www.jeyamohan.in/139210/

ஜெயமோகனின் இந்தப்பதிவைப் பார்த்ததும் மணி நினைவுக்கு வந்துவிட்டது. என்னுடன் (என்னைத்தவிர) பழகிய ஒரே நாய் மணிதான்.



மணி அண்ணன் இறந்துபோன சிலநாட்களுக்குள் எங்கிருந்தோ வந்துவிட்டது இந்த மணி. அண்ணனைப்போலவே அப்பாவிடம் அவ்வளவு பாசம். அப்பாவுடன் வயல், கொல்லை, காடு, கண்மாய் என எங்கும் உடன் செல்லும். என்னிடமும் பாசம் மிக அதிகம். ஒவ்வொருமுறை ஊருக்குச்செல்லும்போதும் என் காலடி ஊரைத்தொடுமுன் என்னைத்தேடி வந்துநிற்பது படைப்பின் பேரதிசயம். ஏறக்குறைய அதன் உடம்பு முழுவதும் தடவி, செல்லமாய்ச் சொறிந்துவிடுவேன். அதைத்தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ஓடவேண்டும்போல ஒருமுறை வினோத ஆசை வந்ததுண்டு. காட்டுப்பக்கம் சென்றாலும் கூடவே வரும். 

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையென்றானபோது முதலில் சுணங்கிப்படுத்தது மணிதான். ஒருசில மாதங்களில் அலைவதிலிருந்து தன்னைத்தானே சுருக்கிக்கொண்டது. 

சென்றமுறை அப்பாவைப்பார்க்க சென்றபோது மணியைக் காணவில்லையே எங்கே என்றுகேட்டேன். மூன்று நாட்களாக நம்கொல்லைக்கருகில், ஒரே இடத்தில் படுத்துக்கிடந்ததாகவும் வீட்டுக்கு அழைத்தும், சாப்பாடு கொண்டுவைத்தும் அதைத்தொடாமல் அப்படியே கண்ணுறங்கிவிட்டதாகவும் அப்பா சொன்னார். கண்ணீர் வந்து நின்றது.

அப்பாவின் ஆயுளை நீட்டிக்க தன்னை முன்வந்துகொடுத்ததாகவே நான் நினைத்தேன். ஆன்மா சாந்தியடையட்டும் மணி. மூக்குக்குமேலே என் செல்லமுத்தம் இப்போதும் ஒன்று உனக்கு.

No comments:

Search This Blog