Thursday, December 04, 2014

வசந்த பாலனுக்கு ஒரு கடிதம்..


அன்புள்ள அண்ணன் வசந்தபாலன் அவர்களுக்கு,

தாங்கள் இதுவரை இயக்கிய நான்கு படங்களுக்கும் ரசிகன் நான். அரவான் பார்த்துவிட்டு என்னுடைய வலைப்பதிவில் விமர்சனம் எழுதியிருந்தேன். விமர்சனத்திற்குப் பதில் இக்கடிதத்தை எழுதியிருக்கவேண்டுமோ என இப்போது நினைக்கிறேன்.

தாங்கள் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குனர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களுல் ஒருவர் என்பதும் உங்களது இரண்டாவது படத்தை அவரே தயாரித்தார் என்பதும்  அவரே உங்களது குரு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

திரைப்பட இயக்கம் என்பது போராட்டமும், வலியும் வேதனையும், ஏமாற்றமும், நிறைந்தது என இப்போதெல்லாம் சாதாரண பார்வையாளராகிய நாங்களும்  இப்போதெல்லாம் அறிந்திருக்கிறோம்.

அதிலும் தன் இலட்சிய வாழ்வின் முதற்படியாய் எதன் பொருட்டு சில பல வருடங்களாக உணவு, உறக்கம், இளமை, குடும்பம் முதலியவற்றையெல்லாம் இழந்து கடலில் போராடி கரைதட்டி காலை ஊன்றி நிற்கும் நிலைக்கு ஒப்ப வெளியாகும் ஒரு இயக்குனரின் முதல்படம் எப்படி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் ஒரு இயக்குநருடைய வாழ்வை அது எபப்டியெல்லாம்  தீர்மானிக்கும் என்பதும் உணரத்தக்கதே.

அந்த வகையில் உங்களுக்கு, உங்களது கடின உழைப்புக்கு, உங்களது முதற்படம் நன்றாயிருந்தாலும் கூட, எனக்கும் பிடித்திருந்தது என்றாலும் கூட, மாபெரும் தோல்வி அடைந்தததும் அதற்குப்பிறகு ஏறக்குறைய பத்து வருடங்கள் நீங்கள் பட்ட அவமானங்களும் துயரங்களும் வார்த்தைகளில் அடங்காதது. கடின உழைப்பும் முயற்சியும் கொடுத்தபின்பும் காரணமே இல்லாது ஏற்படும் தோல்வி ஏற்படுத்தும் வலி சொல்லித்தெரியக்கூடியதல்ல.

மேலேறி வந்தீர்கள். ’வெயில்’ என்றொரு படம் கொடுத்தீர்கள். வாழ்வு கொடுக்கும் வெற்றி தோல்விகளின் சதுரங்க ஆட்டங்களை அழகாய் முன்வைத்தீர்கள். இன்றுவரை அப்படத்தின் தாக்கம் என் மனதுக்குள்ளே இருக்கிறது. ஒரு சராசரி பார்வையாளனாய்க் கூட, உருகுதே மருகுதே பாடலின் கடைசிக்காட்சியில் ஃபில்ம் சுருள் கருகி உருகும் காட்சி ஒரு தீராத வேதனையைக் கவிதையாய்க் காட்சிப்படுத்திச் சென்றிருக்கிறது.

’அங்காடித்தெரு’விற்கு வந்தீர்கள். சொல்லப்படாத கதைக்களம். யாரும் தொடத்தயங்கும் முயற்சி. வெற்றி பெற்றீர்கள். அத்தளத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவருக்காவது அதன் மூலம் ஒரு பரிவோ பாசமோ மதிப்போ மரியாதையோ கிடைத்திருந்தால் கூட படம் வெற்றிதான். கண்டிப்பாய் கிடைத்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நானும் ஒரு சராசரி ரசிகனாக அத்தகையவற்றிற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

அடுத்ததாய் ’அரவான்’ என்றொரு படம். என்னைப்பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான முயற்சி. கடினமான உழைப்பைத் தந்து உருவாக்கிய படம். அப்படத்தில் நடிகர்கள் அணியும் வேட்டி செய்யும் முறையைப்பற்றி படித்தபோதே திரைப்பட இயக்குனரின் வேலைகள் பற்றி ஆச்சரியம் அடைந்தேன். அது வெற்றிபெற்றிருக்கவேண்டிய படம். அதில் என்ன குறை என்பதை சினிமாவில் இயக்குநராக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் விவாதிக்கவேண்டும்.

இப்போது ’காவியத்தலைவன்’. படத்தைப்பற்றி எனது பார்வையில் எனது பின்னூட்டத்தில் இப்படிச்சொல்லியிருந்தேன். ஒரு நாவலைப்போல பல்வேறு தளங்களில் இப்படம் விரிகிறது என்று. அதுதான் உண்மை. காட்சியமைப்பிலும், திரைக்கதையிலும் அதைக் குறையின்றி செய்யமுடிந்தது உங்களால். ஆனால், முழுப்படமாக அதை வெற்றிகரமாகக் கொண்டுவரமுடியவில்லை.

ஏஆர் ரகுமான் தனது எல்லாப் படங்களையும் விட இதில் மிகவும் சிறப்பாய்ப் பண்ணியிருக்கிறார். இளையர்களை படத்தை நோக்கிவரச்செய்ததில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது. ஆனால், கதையின் காலத்திற்கும் பின்னணிக்கும் வரவேண்டிய வாத்தியங்கள் வந்திருக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன்.

இரு நடிகர்கள் நடிக்கும் காட்சி. அக்காட்சி மட்டும் மனதில் தங்கியிருந்தால் இருவரும் நன்றாய் நடித்தார்கள் என்றோ, ஒளிப்பதிவு நேர்த்தியாய் கண்ணுக்குள் 
சொருகிக்கொண்டது என்றோ சொல்லிவிடலாம். ஆனால், நாடகம் சம்பந்தப்பட்ட ஒரு படத்திற்கு வசனம் எவ்வளவு முக்கியம். நாடகக்காரர்கள் வெளிப்பேச்சிலும் அப்படியே அல்லவா பேசிக்கொள்வார்கள். குறிப்பாய் நாசர் பேசும் காட்சிகளின் வசனம் வெகு இயல்பாய் நறுக்கென்று இருந்தது. சித்தார்த்–ப்ருத்விராஜ் பேசும்காட்சிகளில் இன்னும் மேம்பட்டிருக்கலாம்.

தான் அமர்ந்திருக்கும் இடத்தை மறந்துவிட்டு இன்னொரு உலகத்திற்குள் கொண்டுசெல்வதுதான் இலக்கியம் அல்லது கலை. அங்காடித்தெருவில் ஒருமிகைக்காட்சி. ஏழ்மையின் பரிதாபத்தைக் காண்பிக்க, டாகுமெண்டரி படங்களைப்போல பிச்சைக்காரர்களை மட்டும் காட்டிச்சென்றீர்கள். ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு மாறுவதைப்போல உணர்வுக்காய் மாறும் காட்சி இயல்பில் தோற்றுவிடுகிறது.

அதே தவறு காவியத்தலைவனிலும். காளி சுதந்திரப்போராட்டத்திற்காய் பாடுபடும் இடங்களுக்கிடையில் காந்தியின் வீடியோ வருகிறது. இது நேர்த்தியா?  தயவுசெய்து இதுபற்றி பரிசீலனை செய்யுங்கள்.

கடைசிக்காட்சியும் அதுபோலவே, கோமதி, காளியின் அஸ்தியைக்கரைக்க கங்கைக்கரையில் நிற்பதாய் வரும் காட்சி இன்று நடப்பதுபோல அதிக வெளிச்சத்தில், புதியதாய் வந்து நிற்கிறது. கதையின் படி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரும் ஒரு காட்சி.

யார் குழந்தையை சுமக்கவேண்டும் என்பதை நான் தான் முடிவுசெய்யவேண்டும் என்ற அழகிய பெண்ணியல் சார்ந்த சிந்தனையும் அதைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்துசெல்லவிருக்கும் எல்லையற்ற போராட்டங்களுக்குத்தயாராய் ஒரு பெண்ணின் கதை அழகாய் நிறுத்தப்படுகிறது.

யாருக்கும் யாரும் புத்தி சொல்லமுடியாது. இதுதான் வெற்றிக்கான ஃபார்முலா என்று எழுதமுடியாது. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் ஒரு திரைப்படத்தைத் தரும் தொடர்ந்த உங்களது முயற்சி ஆசீர்வதிக்கப்பட்டது.

வெற்றியின் சூத்திரம் அறிந்துகொள்ள முயற்சிக்கும் வேகம் ஒருபுறம், ஒரு சாதாரண முயற்சியாய் இருந்துவிடக்கூடாதே என்கிற அக்கறை மறுபுறம். இரண்டும் கலந்து உங்களை ஆட்டிவைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னும் சில முயற்சிகளில் இரண்டும் இணையும் அந்த இடம் உங்களுக்கு பிடிபட்டே தீரும். வாழ்த்துகள்.


எம்.கே.குமார்

Friday, October 03, 2014

அதிகம் அறியப்படாத அரசியல் கொலை - லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தான், ரஷ்யா அதிகாரிகளுடன்,  இறப்பதற்கு சில மணித்துளிகள்முன்.

***
அக்டோபர் 2 ல் பிறந்த முக்கிய ஆளுமைகளுல் இன்னொருவர் லால்பகதூர் சாஸ்திரி. காந்தியின் சத்திய சீடர்களுல் ஒருவர். இந்தியாவின் இரண்டாம் பிரதமர்.

1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா முன்னேறியதற்கு காரணம் சாஸ்திரிதான். அப்போரை ஒரு நிறுத்தம் நோக்கி கொண்டுவர இந்தியாவையும் பாகிஸ்தானையும் ரஷ்யா அழைத்திருந்தது.

ரஷ்யாவிற்குச் சென்ற சாஸ்திரி பிணமாக வந்தார். ஹார்ட் அட்டாக் என்று இன்றுவரை கூவிக்கொண்டிருக்கின்றன அனைத்து அரசாங்கங்களும். ஆனால் நடந்தென்ன?

  1. ரஷ்யாவிற்குச் செல்லும் முன் சாஸ்திரிக்கு உடல்நலத்தில் எந்தப்பிரச்சனையுமில்லை.
  2. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் கையெழுத்துவிட்டு இரவு ஓய்வுக்குச் செல்கிறார். இரவு 10 மணிக்கு அறைக்கு வருகிறார்.
  3. இந்தியத்தூதர் டி.என்.கவுல் வீட்டிலிருந்து அவரது சமையற்காரர் ஜான் முகமது சமைத்த உணவு வருகிறது. கொஞ்சம் போல சாப்பிடுகிறார்.
  4. படுக்கையிலிருந்து மகளுக்கு போன் செய்து ’பாலருந்திவிட்டு தூங்கப்போகிறேன் அம்மா’, என்கிறார்.
  5. 1.20 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக தனது உதவியாளர் ஜகன்நாத் இருக்கும் அறைக்கதவைத்தட்டி தண்ணீர் கேட்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு படுக்கையில் அமரும்போதே மூர்ச்சையற்று விடுகிறார். சிறிது நேரத்தில் மரணம். அருகில் தெர்மோபிளாஸ்க் உருண்டு கிடைக்கிறது.
  6. அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
  7. அவரது உடல் போஸ்ட்-மார்ட்டம் செய்யப்படவேயில்லை. இந்தியா-ரஷ்யா என இரு அரசாங்கங்களும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை
  8. உடல் நீல நிறத்திலும் ஆங்காங்கு காயங்கள் இருந்ததாகவும் அவரது மனைவி சொல்லியிருக்கிறார்.
  9. 1970, அக்டோபர் 2, தனது கணவர் மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்கிறார் திருமதி சாஸ்திரி.
  10. இவரது மரணம் பற்றி இந்திய அரசு அதற்கு மேல் எந்த அக்கறையையும் காட்டவில்லை, பெயருக்கென்று ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. ராஜ் நரைன் விசாரணைக்குழு.
  11. ராஜ் நரைன் விசாரணைக்குழுவின் ஒரு விசாரணை சம்பந்தப்பட்ட ஒரு தகவல் கூட இந்திய பாராளுமன்ற நூலகத்தில் இல்லை
  12. 2009ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இது பற்றிக்கேட்டபோது, ஒரே ஒரு அறிக்கை மட்டுமே  உள்ளது. ஆனால் அது, நாட்டு இறையாண்மை சம்பந்தப்பட்டதால் வெளியிட முடியாது என்று பதில் அளித்துவிட்டது பிரதமர் அலுவலகம்.
  13. 1977ல், சாஸ்திரியின் மரணம் குறித்து அறிந்த இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்தது பராளுமன்ற கூட்டு சபை. ஒருவர் ஆர்.என்.சுஹா, சாஸ்திரியின் மருத்துவர். ரஷ்யாவில் அவருடன் இருந்தவர். விசாரணைக்கு டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தபோது ட்ர்க் லோரியால் மோதப்பட்டு சாலையில் மரணம் அடைந்தார். இது தற்செயலா?
  14. இன்னொருவர், ராம்நாத். சாஸ்திரியின் வேலைக்காரர். ரஷ்யாவில் உடன் இருந்தவர். “இதுவரை மனதை வதைத்துக் கொண்டிருந்ததையெல்லாம் இன்று சொல்லிவிடுகிறேன் அம்மா”, என்று சாஸ்திரியின் மனைவியிடம் சொல்லிவிட்டு, பார்லிமெண்டுக்கு நடந்து வந்தவரை இன்னொரு லோரி அடித்து கால்களை இழந்து நினைவையும் இழந்ததார். இதுவும் தற்செயலானதாய் இருக்கமுடியுமா?

எம்.கே.குமார்

Thursday, October 02, 2014

இன்று நினைவுக்கு வந்த காந்தி



இன்று நினைவுக்கு வந்த காந்தி
எனக்கருகில் இருந்தார்.
இப்படியே இருந்துவிடுங்கள் அய்யா.


எம்.கே.குமார்

****
பாஸிவ் ரெஸிஸ்டென்ஸ் (Passive resistance) என்று முதலில் சொல்லிப்பார்த்திருக்கிறார். ‘சாத்வீக எதிர்ப்பு’ என்ற பொருள் தரும் அது, பலவீனங்களின் ஆயுதமாகவும், பகைமைக்கு இடம் தருவதாகவும், பின்னர் பலாத்காரமாக மாறிவிடவும் வாய்ப்புண்டு என்று காந்தி உணர்ந்தார். அதற்கொரு சொல் தேடினார். ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம் போட்டியைக்கூட அறிவித்தார். மகன்லால், சதாக்கிரகம் (சத்+ஆக்கிரகம்) என்ற சொல்லைப் பரிந்துரைத்துப் பரிசு வென்றார். இந்தச் சொல்லை மேலும் தெளிவாக்கி, சத்தியாக்கிரகம் என்று காந்தி மாற்றினார். வாழ்நாள் முழுவதும் அதையே பயன்படுத்தினார். இதை சத்திய சோதனையில் விவரித்துள்ளார்.

கடவுளைத் தவிர்த்து, மனசாட்சியின் பேரால் அரசாங்க உறுதிமொழிகள் அமையும் நடை முறைக்குக் காரணமானவர் சார்லஸ் பிராட்லா (1833-1891). இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், ‘கடவுள் பேரால்’ உறுதி மொழி ஏற்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற விதி, உறுதி ஏற்காமல் அவரை அவையில் அமர அனுமதிக்கவில்லை. அவரும் உறுதியாக நின்றார். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. மறபடியும் நின்றார். மறுபடியும் மறுத்தார். இப்படி மூன்றுமுறை நடந்த பிறகு வேறு வழியில்லாமல் நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்தி அவரை உறுப்பினராக்கிக்கொண்டது அரசு. மனசாட்சி முறை இப்படித்தான் உலகத்தில் தொடங்கியது. பெர்னார்ட்ஷா உட்பட பலர் பிராட்லாவின் பக்கம் நின்றனர். 1891-ல் காலமான பிராட்லாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 3,000 பேரில் நம்முடைய 22 வயது காந்தியும் ஒருவர்.

ன்று தமிழ் இந்துவில் வெளிவந்த பழ.அதியமான் எழுதிய கட்டுரையில் என்னைக் கவர்ந்த சில செய்திகள்.











Monday, September 22, 2014

காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து- அரவாணிகள் பற்றிய கடிதம்

பாலியல் அரசியலின் கோமாளித்தனத்தை அனிருத்தன் வாசுதேவன் அவர்களின் கட்டுரை வேட்டையாடி விளையாடியிருக்கிறது.

ஓரின, ஈரின ஈர்ப்புடையோர் மற்றும் அரவாணிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான அல்லது ஆரோக்கியமற்ற ஊடகங்களது சித்தரிப்புகள், அறியத்தராத ஒரு அவலநிலையை அல்லது அடிமை நிலையை அவர்களின்பால் ஏற்றிக்கொண்டேயிருக்கும் என்பதை ஊடக ராஜகன்னியான திரையகம் சார்ந்து சொல்லி இவர் வேட்டையாடியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

அதே ஊடகங்களில் தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் இதுவரையான அக்கேடுகளை அறியத்தராமல் அல்லது தொட்டுணர்த்தாமல் நேற்றிலிருந்து இது புகுந்திருப்பதைப்போல இவர் 'வேட்டையாடு விளையாட்'டிலிருந்து உரைத்து வெறுமனே விளையாடியிருப்பது சிந்திக்கவேண்டியது ஆகும்.

அரவாணிகளை ஒரு நலிந்த இனமாக வெறுமனே கிளுகிளுப்பூட்ட அல்லது நகைப்பூட்ட ஏதுவாய் திரையுலகத்தினர் மேற்கொண்ட உத்திகள் நேற்று இன்று பிறந்தவை அல்ல. பாடலின் நடுவில் வந்து கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணிச்செல்வதிலும் பெண்புணர்த்தலில் தீராத வேட்கைகொள்ளும் ஒருவனை அரவாணியக்கொண்டு திகைக்கவைப்பதிலும் என திரை நுகர்வோருக்கு செறிவற்ற தன்மைகொண்டு வெறுமனே களிப்பூட்ட மட்டும் இத்தகு அரவாணிக் கொள்கைகளை நெடுங்காலமாய் திரையுலகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்துறைகளில் மேம்பட்ட நிலையை நோக்கி அவர்கள் நகரும் வேளையிலும் அக்கூறுகளையே அடிப்படையாகக்கொண்டு அது இன்றும் கேலி பேசியபடியே இருக்கிறது. பெண்ணிய, தலித்திய மற்றும் அங்கஹீனத் தாழ்மைகளை அகற்ற புரட்சியும் விடுதலையும் பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் அங்கங்களை அடிப்படையாகக் கொண்ட இவைகளின் மூலம் அது நகைப்பூட்ட முற்படுவது அநாகரிகமே அன்றி வேறல்ல!

நல்ல கலைஞரின்(கமல்), நல்ல கலைநய காட்சி அமைப்பு இயக்குனரின்(கௌதம்) வேட்டையாடு விளையாடு சார்ந்ததாய் மட்டுமே இவரால் இதைப்பார்க்க முடிந்திருக்கிறது. கமலும் கௌதமும் செய்தால் மட்டுமல்ல; யார் செய்தாலும் இது வருத்ததிற்குரியதே. இதே காலகட்டத்து திரைப்படைப்பான 'சில்லுன்னு ஒரு காதலி'ல் கூட ஆரோக்கியமற்ற வெறும் கிளுகிளுப்பூட்ட கலக்கப்பட்ட காட்சியாகவே இது பரிணமித்திருக்கிறது.

தேவையற்றவைகளைக் கொண்டிருக்கும் ஒன்று முழுமையான கலைப்படைப்பாகாது என்றும் இத்திரைப்படத்திற்கு ஓரின உறவைச்சொல்லும் காட்சிகள் அவசியமற்றது என்பதையும் முன்மொழிந்திருக்கும் இக்கட்டுரையை வரவேற்கிறேன். ஆனால் கமல்-ஜோதிகா உறவு, உரிமையாளர்-சொத்து என்றாவதை இவர் சுட்டிக்காட்டுவது இங்கு அவசியமற்றது. அது எளிதில் மாற்றியிருக்ககூடிய வசனத்தின் வெளிப்பாடேயன்றி அதை பொருட்கொள்ளுதல் தகாது. இப்படிச் சுட்டிக்காட்ட முயன்றால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையையும் இவர் சாடவேண்டியிருக்கும். தவறான வசனம் வேறு; அவசியமற்ற காட்சி வேறு!

கலைப்படைப்பிற்கு மட்டுமின்றி வெறும் 'களிப்புதரும்' படைப்பிற்கும் கூட இத்தகு வலிமையற்ற இனங்களின் வாழ்க்கையை அவலமாக்குதல் அவசியமன்று. ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி அரவாணிகளுக்கும் தார்மீக வாழ்க்கை நெறிகள் உள்ளன. எனவே இப்போதையத் தேவை அரவாணிகளை நோக்கிய ஒரு முழுமையான புரிந்துகொள்ளல் மற்றும் கூடி வாழுதல் சார்ந்த ஒரு அறம்! இதைக் கேலிக்குள்ளாக்கும் படைப்பு திரைப்படைப்பு மட்டுமின்றி எப்படைப்பாயினும் கண்டிக்கப்படவேண்டியது ஆகும்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது நிறையப்பேருந்துகள் விடுவதும் அதனைச்சுற்றி விடுதிகள்/கழிப்பறைகள் கட்டுவதும், அழகுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்கள் வைப்பதும் அல்லது விழுப்புரத்தில் வியாபாரஸ்தலத்தை உருவாக்குவதும் போன்ற காரியங்களைத் தாண்டி உண்மையான உணர்வுகளைக் கொண்டு இவர்களை யாவரும் அணுகுவது நலம்.

உடற்குறையுள்ளவர்களை யார் கேலி செய்தாலும் அது தவறுதான்; தலித்துகளை யார் சாதிசொல்லி திட்டினாலும் தண்டனை உண்டு; பெண்களின் பால் எத்தகு வரம்புமீறலெனினும் குற்றமே; மிருகங்களை எப்படித் துன்புறுத்தினும் மிருகவதைச் சங்கம் கேட்கும் என்பதைப்போல இதற்கும் தகுந்த சமூக அறிவுறுத்தல்களும் அரசியலைப்புகளும் உடனடி அவசரத் தேவை.

எம்.கே.குமார்.
சிங்கப்பூர்

http://www.kalachuvadu.com/issue-83/letters.asp
நன்றி: காலச்சுவடு

சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு

நண்பர்களே, சிங்கப்பூர் வாசகர் வட்டம் புதுப்பொலிவுடன் பல்வேறு இலக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர்ப் பெண்படைப்பாளர்களை ஊக்குவிக்கும்பொருட்டும் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதைப் பரப்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டும் சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வாசகர் வட்டம் வெளியிட இருக்கிறது. முழுக்க முழுக்க பெண் கவிஞர்களின் படைப்புகளைக் கொண்ட இத்தொகுப்பில் 15 பெண்கவிஞர்கள் பங்குபெறுவார்கள். பாடுபொருள் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தது ஐந்து முதல் 10 பக்கங்களுக்கு ஒவ்வொரு கவிஞர்களின் கவிதைகளும், அவர்களைப்பற்றிய சிறு குறிப்புடன் தொகுப்பில் இடம்பெறும். புதியதாகவோ, நாளிதழ், வார, இணைய இதழ்களிலோ வெளியானதாக இருக்கலாம், ஏற்கனவே புத்தகமாக பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தவிர்க்கவும்.
பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை 
singaporepoet@gmail.com என்ற இணையமுகவரிக்கு வரும் 30 செப்டம்பர் தேதிக்குள் அனுப்பவேண்டுகிறோம். தொகுப்பாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.
அன்புடன்
எம்.கே
வாசகர் வட்டம் சார்பாக.
  

Monday, June 23, 2014

பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை – ஒரு பார்வை

ஜெயமோகனுக்கு எதிரான பெண் எழுத்தாளர்களின் கூட்டறிக்கையை வாசித்தேன். (ஜெயமோகனுக்கு எதிரான என்றுதான் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய என்று சொல்வது பெரிய அபத்தமாய் இருக்கும்.) சேற்றில் கல் எறியக்கூடாது என்பது ஜெயமோகனுக்கு இப்போது தெரிந்திருக்கும். பெயரிடப்பட்ட படைப்பாளிகளில் சிலர் எனது முகநூலிலும் நண்பர்கள் என்பதைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது.

பெண் எழுத்தார்களே, ஜெயமோகன் எந்தவொரு பெண்ணையும் இதன்மூலம் அவமானப்படுத்தவில்லை. அவர்களின் இலக்கியப்பங்களிப்பும் அதன் மூலம் மட்டுமே உருவானதாகச் சொல்லப்படும் அவர்களின்  அங்கீகாரங்களையும் யோசிக்கச்சொல்கிறார். இலகுவாகக் கொள்ளப்படும் புதுக்கவிதை வடிவங்களைத் தாண்டி வேறொரு இலக்கியத்தளத்தில் அவர்களின் படைப்புகள் என்ன என்கிறார்.

இத்தகைய ஒரு படைப்பு/விமர்சன இயங்கு தளத்தில் உரையாற்றத் திராணியற்றவர்களாக, கவிதை மொழிக்குப் பயன்படுத்தும் அதே மொழியைக் கொண்டு (இதைக் கூட கவனிக்க இயலாத மொழிவளம் கொண்ட(?) படைப்பாளிகள்!) ஒரு கூட்டறிக்கை என்ற பெயரில் பெண்ணியத்தை அவமானப்படுத்தும் ஜெயமோகனை அவமானப்படுத்தும் போலிபாசாங்கில் அல்லது புரிந்துகொள்ள இயலாத பின்புத்தியில், அவர்களை அவர்களே அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே இந்த அறிக்கையின் மூலம் எனக்குத் தோன்றுகிறது.

நிறையப் பெண்கள் எழுதவேண்டும். சமகால இலக்கிய உலகில் அவர்கள் இன்னும் ஆழமாகவும் அகலாமகவும் வேறூன்ற அவர்களை அவர்களே சோதனைசெய்துகொள்வது ஒன்றே பொருத்தமானதாக இருக்கும். அதை நோக்கிய முன் உந்துதலாகவே ஜெயமோகன் செய்தார். ஆனால் நடந்திருப்பது வேறு. இது அவர்களின் மிக மோசமான இன்னும் சொல்லப்போனால் அரைவேக்காட்டுத்தனமான புறப்பாடாகவே அல்லது உளறல்களாக இதை நான் பார்க்கிறேன்.

இந்த கூட்டறிக்கையின் மூலம் இரண்டு விஷயங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கின்றன

ஒன்று தமிழில் எழுதும் பெண்கள் என்று நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பல பெயர்களை முகநூலில் மட்டுமே பார்த்திருக்கிறேன். (இதில் முக்காலெ மூணு வீசம் கவிஞர்களே!)

இரண்டு, யாருமே ஜெயமோகனைப் படித்ததில்லை. அவருடைய படைப்புத்திறனிலும் படைப்புகளின் தரத்தையும் உள்வாங்கிக் கொள்ளவேயில்லை. கூட்டறிக்கையில் பெயரிட்ட அத்தனை பேரில் ஒரே ஒருவர், அவருடைய படைப்புகளில் பெண்களில் நிலையை அல்லது நிஜத்தில் பெண்சார்ந்த அவரது நடவடிக்கைகளில் ஒரு சிறுபகுதியையேனும் அலசி ஆராய்ந்திருந்தால் கூட இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார்கள்.

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த பெருமாள் முருகனிடம் இதுசம்பந்தமாக ஒரு கேள்வியை முன்வைத்தபோது ’யாருடைய இடத்தையும் பிடுங்கிக்கொள்ளாமல் அவர்களே முன்னுக்குச் சென்றால் அல்லது முன்னிறுத்தப்பட்டால் இருக்கட்டுமே’ என்றும், ’இப்பொழுதுதான் பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள், முழுமையாக வரட்டுமே, பிறகு தரம் பற்றிப்பேசுவோம்’ என்றும் சொன்னார். ஆக, தரம் என்னும் அடையாளப்படுத்தும் தளத்துக்குள், இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் வரவில்லையெனினும் அவர்களை வரவேற்போம் என்றாலும் இது சார்ந்த முன்னெடுப்புகளின் ஒரு பகுதிதான் அல்லது தரவுதான் இந்த விவாதம் என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயமோகன் அளவுக்கு பல தளங்களில் விரியும் இலக்கியப் படைப்புகளைக் கொண்ட உச்சங்களை பெண் எழுத்தாளர்கள் படைக்க இயலாது என அவர்களே முடிவுகட்டிக்கொண்டாலும் (அறிக்கையிலிருந்து அதுதான் தெரிகிறது!) பெண் உலகம் சார்ந்த சில அற்புதங்களை சிறந்த படைப்புகளை பெண் எழுத்தாளர்களே படைக்கமுடியும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்.

அதற்கு வேண்டிய உழைப்பும் மெனக்கெடலும் கொண்ட பெண் எழுத்தாளர்களை வரவேற்போம், வாழ்த்துவோம்; வெறுமனே அறிக்கை என்ற பெயரில் தங்களைத் தாங்களே கொச்சைப்படுத்தும் பெண் எழுத்தார்களையல்ல.


எம்.கே.குமார்

சிங்கப்பூர்

பிகு. சாரு நிவேதிதாவின் இந்த அறிக்கை குறித்தான பதிவையும் படிக்கவும்.

Monday, December 30, 2013

மலேசிய எழுத்தாளர் அன்புச்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி..

பேரதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 14 டிசம்பர் அன்று தஞ்சையில் நடந்த முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாலன் விருது வழங்கு விழாவில் "மலேசியச்சிறுகதைகள் ஒரு பார்வை" என்ற தலைப்பில் மிக நுட்பமாக, தெளிவாக உரையாற்றினார்.

மலேசியாவில், கெடா மாநிலத்துக்கு ஒரு இலக்கியவரம் இருப்பதாகப் பேசிய அவர், புதிய எழுத்தாளர்களில் குறிப்பிடும் படியாய் கே.பாலமுருகனையும் தயாஜியையும் சொன்னார். 

மதிய உணவு இடைவேளையில் உங்களது ஆய்வு மிகவும் சிறப்பாக இருந்ததாககவும் ஒட்டுமொத்த சிறுகதையின் வரலாற்றை 10 நிமிடத்துக்குள் சிறப்பாகச் செய்ததாகவும் அவரிடம் நான் பகிர்ந்துகொன்டேன். 

பாலமுருகன் என் நண்பர் தான் எனச்சொல்லவும், அப்படியா என்று என் தோளில் கை போட்டுக்கொண்டு நடந்தார். அவருடைய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி என்னிடம்தான் இருந்தது. இறைவனடி சேர்ந்துவிட இவ்வளவு அவசரம் ஏன் ஐயா? 

அவருடைய ஆத்மா சந்தியடையை பிரார்த்தனைகள்.

Saturday, January 26, 2013

கமல்ஹாசன் சிக்கிய அரசியல்


எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட்ட 21 இஸ்லாம் அமைப்புகள் இணைந்து விஸ்வரூபம் படத்தைத் தடை செய்துவிட்டனர் என்று நானும் நீங்களும் நம்பினால் அதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

  1. ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். 21 அமைப்புகள் அல்ல, 21000 அமைப்புகள் வந்தாலும் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தான் நினைத்ததைச் செய்யும் அதிகார ஆணவம் கொண்டவர் ஜெயலலிதா. மறக்கும் வியாதி கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள். அரசாங்க பணியாட்கள் அத்தனை பேரையும் ஒரேநாளில் தூக்குவார். உலகமே எதிர்த்தாலும் நூலகத்தை மருத்துவமனையாக்குவார். மருத்துவமனைக்கு சட்டமன்றத்தைப் போடுவார். அப்படிப்பட்டவர், முஸ்லீம்கள் திரண்டு வந்து புகார் அளித்ததும் பொங்கிவிட்டார் என்பது முழுக்க முழுக்க முட்டாள்தனம் நிரம்பிய அவதானிப்பு.

  1. முஸ்லீம்கள் அவருக்கு எப்போதும் நண்பர்களாய் இருந்ததேயில்லை. கலைஞர் கூட குல்லாய் போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பார். ஜெயலலிதா ம்ஹூம். மோடிக்கு நண்பராய் இருந்துகொண்டு முஸ்லீமிற்கு கைதூக்க அவர் அவ்வளவு நல்லவரல்ல. ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பொங்கினார், முஸ்லீம்களுக்காகவா? 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள்.

  1. கமல்ஹாசனின் மீது ஜெயலலிதாவிற்கு எப்போதுமே பிரியம் இருந்ததில்லை. தன் சக கலைஞன் என்ற பார்வையிருந்தும் கூட, தான் அதே சினிமா இனம் என்று தெரிந்திருந்தும்கூட! கமல்ஹாசன் கலைஞரின் தமிழ் மீது பிரியம் கொண்டவர், அதனால் கமல் ஜெயலலிதாவிற்கு உள்ளூரப்பகையாகிப்போனவர்.

  1. ’மாமனை அடிக்க முடியாதவர்கள் மச்சானை அடிப்பார்கள்’ என்பார்கள். படத்தைத் தணிக்கை செய்யும் சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் வருவது. ஏற்கனவே மத்திய அரசை எல்லாவிதத்திலும் தொடர்ந்து புறங்காட்டி அவமதிக்கிறார். டீசல் விலையை உயர்த்தியதற்காக மத்திய அரசின் மீது மாநில அரசு வழக்குத் தொடரப்போவது தனிக்கதை. இதில், இப்படி மத்திய அரசுக்குட்பட்ட ஒரு சென்சார்போர்டு அமைப்புக்கெதிரே, அதாவது மத்திய அரசு அனுமதித்தபிறகும் தன்னால் தடுக்கமுடியும் என்ற கர்வம்.. அதுதான் இது.

  1. விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் இருந்த முகமதிய அதிகாரி, முகமது அலி ஜின்னா, சென்ற தேர்தலில் தி.மு.கவின் சட்டமன்ற வேட்பாளர். தி.மு.க காரர். ஆக, தி.மு.கவுக்கும் ஒரு ஆப்பு வைத்தாகிவிட்டது. முஸ்லீம்களுக்கெதிராய் ஒரு முஸ்லீமே இருந்தார் என்று அறியப்படுத்தி, இனி முஸ்லீம்கள் இவருக்கு ஓட்டுப்போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

  1. ஜெயலலிதாவிற்கு ஆகவே ஆகாதவர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட ப.சிதம்பரத்தின் புத்தக விழா அண்மையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கலைஞர், கமல்ஹசன், ரஜினி. அதிலும் கமல் பேசுகையில் ’வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும்’* என்று முத்தாய்ப்பு வைக்க, பிறகு பேசிய கலைஞரோ வேட்டி கட்டிய தமிழரே பிரதமர் என்று சொல்லி சேலை கட்டிய தமிழர் பிரதமர் கனவில் இருப்பதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு வைத்த ஆப்பு  விஸ்வருபத்துக்கு வந்து நிற்கிறது.

  1. ஜெயா டிவிக்கு விற்கப்பட்ட விஸ்வருபத்தின் தொலைக்காட்சி உரிமை, அதிக விலையின் காரணமாக சன்டிவிக்கு மாறியதாயும் சொல்கிறார்கள். சன் டிடிஎச் ஒளிபரப்பு செய்ய அனுமதியும் வாங்கி இருந்தது.

  1. விஸ்வருபத்தின் சேலம் ஏரியா பகுதி உரிமையை உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்தது. உதயநிதி தயாரித்தார் என்பதற்காகவே நீர்ப்பறவை படத்திற்கான வரிவிலக்கை எந்திவித முகாந்திரமும் இல்லாமல் தரமறுத்த அம்மையார், இப்படி ஒரே கல்லில் ஒன்பது ஸ்தானத்தையும் அடிக்க முடியும் என்றால் சும்மா விடுவாரா?

  1. சென்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு 200கோடி தருதாக ஆசைகாட்டி, அவரை அதிமுக பக்கம் இழுப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாய் அத்தனைப் புலனாய்வு ஏடுகளும் சொன்னது. அப்போதைக்கு எஸ்கேப் ஆன கமல்ஹாசன் இப்போது மாட்டிக்கொண்டார்.

  1. விஸ்வரூபம் படம் வெளீயிட்ட மலேஷியா, NC 16 தணிக்கை அளித்து அனுமதியளித்திருந்த சிங்கப்பூர் நாடுகளும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் படத்தை, முஸ்லீகளின் போராட்டத்தாலோ எதிர்ப்பாலோ நிறுத்தவில்லை. உற்பத்தி இடமான தமிழ்நாட்டிலேயே ஒரு சரக்கை தடைசெய்தபின் இறக்குமதி செய்வது ஆபத்தாகலாம் என்பதால் தான். இது, ஜெயலலிதா தெரிந்தே ஒரு கலைஞனுக்கு, பால்ய நண்பனுக்கு, தனது சொந்த விருப்பு வெறுப்பின் மூலம்  செய்த மிகப்பெரிய துரோகம்.

- இத்தகைய தசாவதார வியூகத்தில் மாட்டிக்கொண்ட கமல், இனி என்ன செய்யப்போகிறார்?

 எல்லாக் கதவுகளும் ஒரு சேர அடைபட்ட கமல்ஹாசன் ஒரு சினிமாப்பைத்தியம். சினிமாவை விட்டு அவரால் வெளிவரவே முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இனி, இரண்டு வழிகள் இருக்கின்றன, அவருக்கு.

ஒன்று அதிமுக வில் சேரலாம். ராதாரவியைப்போல, ராமராஜனைப்போல, குண்டு கல்யணத்தைப்போல... மேடையேறலாம். பல கோடிகள் கிடைக்கும். அல்லது விஸ்வரூபமே 200 கோடிக்கு ஜெயா டிவியால் வாங்கப்படும். பிரச்சனை எல்லாம் தீரும். கனவுப்படங்களை எடுக்கலாம்.

இரண்டாம் வழி, வா வா என்று இழுக்கப்பட்டும் ஒளிந்துகொண்டிருக்கின்ற ரஜினியை விலக்கி/இணைத்து, இத்தகைய அதிகார, கலாச்சார தீவிரவாதித்திற்கெதிரே, முதல்வன் படத்தில் அர்ஜூன் பொங்கும் காட்சியைப்போல (ஒரு சூழ்நிலையில் இப்போது இருப்பதால்) தீவிர அரசியலில் இறங்கலாம். ஆடு மாடு வழங்கிவிட்டு, முக்கியப்பிரச்சனைகளில் ஒளிந்துகொள்ளும் விஜயைவிட, தலைவனுக்கேற்ற தகைசால் குணம் சிறிதுமில்லாத விஜயகாந்தைவிட, வருமான வரி நேர்மையும் இடறுகளுக்கெதிரே கலங்காது நிற்கும் தைரியமும் இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவனும் நமக்குக் கிடைக்கலாம்.

எம்.கே.குமார்.

Friday, September 21, 2012

சிங்கப்பூர் டைம்ஸ் 2012

அரசியல், சினிமா என்கிறவகையில் பொழுதுபோக்குக்கு பஞ்சம் என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் தொடர்பான விஷயம் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் சிங்கப்பூரில். அத்தகு செய்திகள் இரண்டு, சென்றமாதம் சிங்கப்பூரைப் பரபரப்பாக்கின.

சிங்கப்பூரில் இருக்கும் 200,000 வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கும் 2013 ஆன் ஆண்டிலிருந்து வார விடுமுறை அளித்து சட்டமியற்றி இருக்கிறது சிங்கப்பூர் அரசு. வீட்டுவேலைக்கென வந்த பெண்களை குறிப்பிட்ட வேலைநேரம், ஓய்வுநேரம் என எதுவுமே இல்லாமல் வேலைவாங்கிக்கொள்வதையே குறியாய்க் கொண்டு ’அடிமைகள்’ என நினைத்தே செயல்படும் சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் நியாயமான எல்லா உழைப்பாளிகளையும் போலவே அவர்களையும் நாம் அணுகவேண்டும்.

பணிப்பெண்கள் விஷயத்தில் அண்மையில் வாங்கிக்கட்டிக்கொண்ட நாடு மலேஷியா. பணிப்பெண்களை மலேஷியா தரக்குறைவாக நடத்தியதற்காக ஒட்டு மொத்தமாக பணிப்பெண்களை அங்கு அனுப்புவதை நிறுத்தியது இந்தோனேஷியா. இப்போது சில சட்டப் பாதுகாப்பு இறுக்கமாக்களுக்குப்பின் மீண்டும் அனுப்ப முன்வந்துள்ளது. சவூதி அரேபியா, தாய்லாந்து, தென்கொரியா, எமிரேட்ஸ் மற்றும் மலேஷியா நாடுகளில் மட்டுமே பணிப்பெண்களுக்கு விடுமுறை இல்லை. அதிலும்  மலேஷியாவில் தற்போது சில சட்ட மாற்றங்கள்.

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தேக்காவிலும், ஆர்ச்சர்ட் ரோட்டிலும், லக்கி ப்ளாசாவிலும் நடக்கவே முடியாத அளவிற்கு இவர்கள் குவிந்துவிடுவார்கள். விளைவு, கருத்தரிப்பும் கள்ளத்தொடர்புகளும் கொலைகளும் பெருகும் என்றெல்லாம் ஒரு சிலர் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

இந்த பணிப்பெண் விடுமுறைச்செய்தியை கேள்விக்குள்ளாக்கியது அதே வாரம் நடந்த இந்த சம்பவம்.

மார்ச் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கேலாங் பகுதி பட்ஜெட் விடுதியொன்றில் ’பங்களாதேஷைச் சேர்ந்த 22வயது திரு. முகமது ருமோன்’ மற்றும் ’பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 33வயது மிஸ் ரெஸிலின் வினிகஸ்’ இருவரும் இரவு 11.30 மணிவாக்கில் கழுத்தறுபட்டு வெட்டுக்காயங்களோடு ரத்தவெள்ளத்தில் பிணமாய்க்கிடந்தார்கள். ருமோன் கட்டிடவேலைக்கும் ரெஸிலின் வீட்டு வேலைக்கும் நாடுவிட்டு நாடு வந்தவர்கள்.

ஆறுமாதத்திற்கு முன் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஒருவரையொருவர் காதலித்ததாகவும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் நண்பர்கள் சொல்ல, இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களையும் அப்பெண் தனது ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்.

அப்பையனைச் சந்திக்கச்சென்ற அந்த மாலையில் அதாவது ஒரு மணிநேரத்திற்கு முன்பு கூட தனது முகப்பக்கத்தில் தனது புகைப்படத்தைப் போட்டுவிட்டு ஜாலியாகச் சென்ற அந்தப்பெண் இறந்துபோயிருந்தார். அப்பையன் வழக்கத்திற்கு மாறாக அன்று காலைமுதல் அமைதியாக இருந்ததாகவும் மசூதிக்கும் சென்றதாகவும்  அறை நண்பர்கள் சொல்கிறார்கள்.

இரு தற்கொலை, ஒரு கொலை-ஒரு தற்கொலை, இரு கொலை என வெவ்வேறு யூகங்கள் ஆட்டிப்படைக்கின்றன. "Go for someone whose not only proud and glad to have u, but will also take the risk and effort just to be with u என்பதுதான் தனது பேஸ்ஃபுக்கில் எழுதியிருந்த கடைசி வாக்கியம்.

இருவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்கள்.

@@@
கங்கை அமரனுக்கு ’வாழ்நாள் சாதனையாளர்’ விருது, வெங்கட் பிரபுவிற்கு ’சிறந்த இயக்குனர்’ விருது, பிரேம்ஜி அமரனுக்கு ’துணைநடிகர் விருது’ என கங்கைஅமரனின் ’கலைக்குடும்ப விழாவாக’ கலக்கியது சிங்கப்பூரில் நடந்த ’அனைத்துல தமிழ்ப்பட விருது’ (International Tamil Film Awards – 2012) விழா. ’மங்காத்தாவும்’ சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சூர்யா, ஆர்யா, சிம்பு, அமலாபால், சந்தானம் வருவார்கள் என நடுநாக்கை ’தக்காளிச்சாஸில்’ நனைத்துக்கொண்டு வந்தவர்களை எமாற்றினார்கள் வந்திருந்த ஒரே ஒரு ஹீரோ ’ஜெய்’ மற்றும் ஹீரோயின்ஸ் ’ஸ்ரேயா’ மற்றும் ’ஹன்ஷிஹா..!

வந்தவர்களுக்குத்தான் விருது என்று ஏதும் சொன்னார்களோ என்னவோ? ஜெய்க்கு சிறந்தநடிகர் விருதும் ஸ்ரேயாவிற்கு சிறந்தநடிகை விருதும் கொடுக்கப்பட்டது.

அடுத்தமுறை ”இண்டெர்னேஷனல் ஆஸ்கார் தமிழ்ப்பட விருது” என்ற ஒன்றை யாராவது ஏற்பாடு செய்து, அதை உலகநாயகன் கமலஹாசனுக்கு கொடுத்து  அவரை ”ஆஸ்கார் வென்ற நாயகன்” என்றாக்கும்படி விருது வழங்கும் கமிட்டியை ”பெடோக் நீர்த்தேக்க ஆவிநண்பர்கள் குழு” சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வசந்தம் தொலைக்காட்சியில் “மெகா ஸ்டார் புரடக்‌ஷன்ஸ்” சார்பில் வரப்போகும் ”கேட்டது கிடைக்கும் - 2” நிகழ்ச்சிக்கு ’audition’ நடந்தது. Auditionக்கு வந்தவர்களுக்கு வந்தநேரத்தைக்கொண்டு வரிசை எண் தரப்பட்டது. இறுதியில் அகரவரிசைப்படி பெயரைக் கூப்பிட்டுக் கேள்விகேட்டார்கள்.
                                                                                                      
சென்றமுறை நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் தங்கமும் பரிசுகளும் வென்றவருக்குக் கேட்கப்பட்ட கேள்வி  ”முத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார்” என்பதாகும்! அவருக்கும் விடைதெரியாமல் அவருடைய போட்டியாளரும் தெரியாமல் முழிக்க, அந்தக்கேள்விக்கு கொஞ்சம் ”concession” வழங்கி ’முத்து படத்தின் இயக்குனர் யார்’ என்று கேட்கப்பட்டு இறுதியாக தங்கம் வழங்கப்பட்டிருந்தது வேறு எனக்கு கொஞ்சம் ஆசை காட்டியது.

’இந்தமுறை அப்படியெல்லாம் செய்து எங்களை நாங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளமாட்டோம்’ என்று, தயாரிப்பாளர் திரு கலைச்செல்வன் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார் எனக்கு. சென்றமுறை வென்ற தள்ளுவண்டிக்குழந்தையோடு வந்த குடும்பமும் இந்தமுறை கலந்துகொண்டு இறுதிப்போட்டிக்குச் செல்லும் உத்வேகத்தோடு இருந்ததைக் கண்டு கொஞ்சம் கலவரம் ஆனேன்.

20கேள்விகளைக் கொண்ட ஒரு வினாத்தாளில் சில கேள்வி- பதில்கள் என்னைக் கவர்ந்தன. ’சிங்கப்பூரின் கோடு எண் எது’ என்ற கேள்விக்கு ஒரு  நண்பர் ’64’ என்று எழுதியிருந்தார். அவர் சிங்கப்பூரிலே பிறந்துவளர்ந்தவர், தெரிந்திருக்க நியாமில்லை. வெளிநாட்டிலிருந்து அழைத்தால்தானே அந்த எண் தேவைப்படும்? முத்தமிழ் யாவை என்ற கேள்விக்கு அப்படியென்றால் என்ன என்று கேட்டார் ஒரு இளம்பெண். ’மூன்று தமிழ்’ என்று கேட்டிருந்தால் எழுதியிருப்பேன் என்றும் சொன்னார். அடடா, வடை போச்சே!

நிறைய இளையர்களைக் கண்டது உற்சாகமாய் இருப்பதாய் திரு கலைச்செல்வனும் சொன்னார். நானும் சொல்கிறேன்.

Audition இறுதியில் எல்லோரிடமும் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, ’நிகழ்ச்சி நடக்கும் கூட்டத்திற்கு எத்தனை பேரைக் கூட்டிவருவீர்கள்?’ என்பதுதான். அந்தக்கேள்விதான் ஒரு கோடி பரிசு வெல்லப்போகும் கேள்வி என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. எத்தனை பேர் வேண்டும் என்று ஒருவர் திருப்பிக்கேட்டார். ஆள் சப்ளை செய்யும் வியாபாரம் எதுவும் செய்கிறார் போலும்!  அடுத்த ’எலக்‌ஷனுக்கு’ இந்த நபர் தேவைப்படுவார்; தேடி வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

20பேருக்கு மேலே என்று சொல்லியவர்களை திரு கலைச்செல்வம் குறித்துக்கொண்டார்.  நான் என்ன சொன்னேன் என்று எனக்கே ஞாபகமில்லை.

”கேட்டது கிடைக்கும்” என்ற நிகழ்ச்சிக்குச் சென்ற எனக்கு ’இரண்டு கேள்விகள் கிடைத்தன’. ஒன்று, A, b என்ற அகர வரிசையில் பெயரைக் கூப்பிடுவதற்கு எதற்கு வரிசை எண் சீட்டு கொடுத்தார்கள்? (12மணிக்குச் சென்ற நான், 4 மணிக்கு நாக்கு வெளியே தொங்க, பசியோடு வெளியே ஓடிவரவேண்டியதாயிற்று).

இரண்டாவது கேள்வி, ’எத்தனை பேரைக்கூட்டி வரமுடியும், சரி. டிக்கெட்டு விலை எவ்வளவு?’ - நிகழ்ச்சியைப் பார்க்கக் காத்திருக்கிறேன்.

அரவான் திரைப்படம் அண்மையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்த படம். ’கோல்டன் டிஜிட்டர்’ தியேட்டரில் படம் பார்க்கையில் என் மனம் வழக்கத்திற்கு மாறாய் குதூகலித்திருந்தது. காரணம் தெரியாத குதூகலம் இது. வருவதும் போவதும் அதிசயம்தான்.

படம் முடிந்து வெளியே வரும்போது ஒரே ஒரு வார்த்தையில் அந்த ஒட்டுமொத்த உணர்வையும் மழுங்கடித்துவிட்டுச் சென்றுவிட்டார் என் முன்னால் சென்ற ஒரு கொலைகாரப்பாவி.’அவனும் கழுத்த அறுத்துக்கிட்டு நம்மளையும் அறுத்துட்டாண்டா!’

நல்லவேளை என் கையில் கத்தி இல்லை.

எம்.கே.குமார்.

Thanks: Thangameen.com

Tuesday, July 03, 2012

கோடியக்கரை & வேதாரண்யம் - தொட்டுவிடும் தூரத்தில் தொலையும் அடையாளம்

எனது நம்பிக்கையை கிஞ்சித்தும் பொய்யாக்கவில்லை இந்திய அரசியல்வாதிகள். எந்த நாட்டுக்குச்சென்றாலும் எத்தனையோ முறை அடடா, இதைவிட அருமையான படகுப்பயணம் ஒன்று தமிழநாட்டில் நடத்தாலாமே, இடம் இருக்கிறதே, இதைவிட அருமையான ஒரு சிற்றாறு ஒன்றை திருநெல்வேலி நவ திருப்பதிப்பக்கம் பார்த்திருக்கிறோமோ, இதைவிட அருமையான கடற்கரை விருந்தை நமது ஊர் கடற்கரையில் நடத்தலாமே என்று ஏங்கிய தருணங்கள் எத்தனையோ முழுகிப்போய்விட்டன. சரி, நவீன வளர்ச்சியால் பொருளாதார மேம்பாட்டால் இதையாவது உருப்படியாய் வைத்திருப்பார்களோ என்ற நப்பாசையிருந்தாலும் அவர்களின் சுற்றுச்சூழல் குறித்த அறிவின் மீதும் அக்கறையின் மீதும் கொண்ட நம்பிக்கையோடு சென்ற எனக்கு எமது ஆட்சியாளர்கள் எப்போதும் எமது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கமாட்டார்கள் எனக் காட்டிவிட்டார்கள்.

அண்மையில் ஊருக்கு வந்தபோது, சொந்த அலுவல் காரணமாய் திருத்துறைப்பூண்டி பக்கம் செல்ல வேண்டிவந்தது. வேளாங்கண்ணிக்கு செல்லும்போது அங்கு செல்வது வழக்கம். அதுவும் ஏறக்குறைய பத்து பதினைந்து வருடங்களாகிவிட்டது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மன்னார்குடி வழியே திருத்துறைப்பூண்டி பயணம். ஏறக்குறைய நான்கு மணிநேரப்பயணத்தில் இரண்டு நண்பர்களின் ஞாபகம் தவிர்க்கமுடியாமல் வந்தது. ஒருவர் வடுவூர் குமார்
. சிங்கப்பூரில் வசிக்கும் அவர் பெயரில் இருக்கும் வடுவூர் வழியே பஸ் சென்றதும் "ஓ, இதுதான் அவர் ஊரா" எனக் கேட்டுக்கொண்டேன். (வடுவூர் குமார் இதைப் படித்தால், அது வேறு ஒரு வடுவூர் என்று சொல்லாமல் இருந்தால் சரி). இன்னொருவர் நண்பர் சுப்புரத்தினம். திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் ஒன்றாக வேலை செய்தோம். இப்போது மத்தியகிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிகிறார். 'சிங்கப்பூரை விட உலகம் பெரியது; வெளியில் வாருங்கள் குமார்' என்று அடிக்கடி ஆஃப்லைனில் செய்தி கொடுத்துவிட்டுசெல்வார்.

திருத்துறைப்பூண்டி வரை வந்துவிட்டீர்கள், அருகிலிருக்கும் வேதாரண்யமும் கோடியக்கரையும் சென்றுவிட்டுச் செல்லலாமே; பிறகு எப்போது பார்க்கமுடியும் அவைகளை' என்று ஏதோ மாயமாகப்போகும் பொருளைப்பற்றி பேசுவது போன்ற நண்பரின் வேண்டுகோளை அரைகுறை மனதாய் ஏற்றேன். வேதாரண்யம் என்றதும் உப்புச்சத்தியாகிரகம் செய்த இடம் என்பது மட்டுமே ஞாபகம் வருகிறது. அதேபோல கோடியக்கரை என்றதும் வெகு அருகிலே யாழ்ப்பாணம் என்பதும் கோடியக்கரை சண்முகம் அவர்களும் ஞாபகத்திற்கு வருகிறார்கள், கூட சில தவிர்க்க முடியாத சம்பவங்களும்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் எவ்வளவு தூரம் என்ற கேள்விக்கு அட, பத்து நிமிஷந்தான் என்றதும் அங்கிருந்து கோடிக்கரை, அட, அங்கிருந்து கோடிக்கரை நடக்கும் தூரம்தான் என்பதும் தமிழர்களின் தூரத்து அளவிடும் முறையைக் காட்டுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். வேதாரண்யம் 31கி.மீ என்பதும் அங்கிருந்து கோடிக்கரை 14கி.கீ என்பதும் அங்கு செல்லும்போதுதான் தெரிந்தது.

(திருமறைக்காடு) வேதாரண்யம் கோயில் நான்கு வீதிகளுடன் அழகாய் இருக்கிறது. உள்ளே இருக்கும் வேதாரண்யீசுவரர் மாமன்னராம் கலைஞரின் ஆட்சியிலும் சந்தோசமாய் இருப்பாரென நம்புகிறேன். பஸ் நிலையத்திற்கு முந்தைய சாலை 'வழக்கம்போல்' இருக்கிறது.

பார்ப்பதற்கு வேறென்ன முக்கியமான இடங்கள் வேதாரண்யத்தில், என்ற கேள்விக்கு அம்பாசமுத்திரம் அம்பானி பார்க்கலாம், தியேட்டர் இருக்கிறது, என்றவரை நாம் கோபிக்கக்கூடாது. அதுவும் தற்கால தமிழனின் அடையாளம் தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கோடியக்கரையின் உள்ளே நுழையும்போதே இடதுபுறத்தில் கையைக் காட்டிய நண்பர், 'உள்ளேதான் சண்முகம் வீடு' என்றார். பரவாயில்லை, கேட்காமலேயே சொல்லிவிட்டார். கோடியக்கரை (கள்ளிமேடு முனையாம், Point Calimere) சுனாமிக்கு முன்னாடியும் இப்படித்தான் இருந்ததா என்று கேட்டேன். சுனாமியடித்த தடம் இன்னும் மாறாதது போலவே இன்றும் இருக்கிறது. சாதாரண ஓட்டுவீடுகளும் ஆங்காங்கு சில வெளிநாட்டு ஊழியத்தின் பலனாய் முளைத்திருக்கும் கான்கிரீட் வீடுகளுக்கும் (கலைஞரும், ஈவிகேஎஸ்இளங்கோவனும் கோபித்துக்கொள்ளக்கூடாது, இந்திரா காந்தி அல்லது கலைஞர் கான்கிரீட் வீடு திட்டத்தால் வந்ததா இவை என எனக்குத்தெரியவில்லை; வீட்டின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களாயும் இருக்கலாம்) மத்தியில் ஊருக்கே கட்டியம் கூறுவது போல ஒரு மூன்றுமாடிக்கட்டிடம். ஆச்சரியமாய்ப் பார்த்தேன். இந்திய சுங்கத்துறை! அப்படிப்போடு. என்னவாம் என்றேன். 'எல்டிடியீ' நிறைய கடத்துறாங்கன்னு கட்டுனதாம்' என்றார் நண்பர். வயிறு எரிகிறது.

சரி, கோடியக்கரை கடற்கரையைப் பார்க்கலாமா? பொன்னியின் செல்வனில் ஏதோ இதுபற்றி படித்ததாய் ஞாபகம் என்றேன். பூங்குழலி எங்களை மன்னித்துவிடு. அயர்ந்து படுத்திருக்கும் குடியானவனைப்போல நாலைந்து சிறு படகுகள் அலையடியில் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் வரைபடத்தில் குறுக்கு வெட்டாய் கிழக்கிலிருந்து மேற்காய் திரும்பும் ஒரு துறைமுகம் கிடைக்கும் கோலத்தைப் பார்த்தால் என்ன சொல்வது?




அடுத்தது கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம். 1967ல் உருவாக்கப்பட்டதாம் இது. உலர்பசுமைக் காடுகளும், மாங்குரோவ் காடுகளும், வெட்லாண்ட்ஸ் எனச்சொல்லப்படும் சதுப்புநிலப்பகுதிகளையும் உள்ளடக்கியதாம் இது. மொத்தம் 377 சதுரகிலோமிட்டர்களாம். (தகவல்கள் வனவிலங்கு சரணாலயத்தில் கிடைத்தவை அல்ல! இணையம்)

பொது நுழைவாயிலைப் பூட்டிவைத்திருக்கிறார்கள். வண்டி வரும்போது நுழைவுச்சீட்டு கொடுத்துவிட்டு திறந்துவிடுகிறார்கள். நுழைவுச்சீட்டு வழங்குமிடத்துக்கும் நுழைவாயிலுக்கும் 100 மீட்டர் தூரம். நாம் போய் காத்து இருக்கவேண்டும். எப்போதாவது வரும் வண்டிக்கு ஏன் நுழைவாயிலேயே காத்து இருக்க்வேண்டும் என்பதால் அங்கு போய் விடுவார்களென நினைக்கிறேன். அதிகாரி வந்து நேரத்தைக் குறித்துக்கொண்டு உள்ளே அனுப்புவார். திரும்பி வரும்போது சமைத்த அல்லது பச்சை மான்கறி ஏதும் இருக்கிறதா என எப்போதும் ஆராய்வார்களாம். திரும்பி வரும் நேரத்தைப் பொறுத்ததாம் அது.

வெட்லாண்ஸ் பகுதியில் பாதிக் காட்டை அழித்துவிட்டார்களென நினைக்கிறேன். வரண்டு கிடைக்கிறது மொத்தப்பகுதியும். மான்கள் பொட்டை வெயிலிலும் ஆங்காங்கு நடமாடுகின்றன. இக்காலத்தில், அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மீறி, மான்களை இன்னும் அங்கு பார்க்க நேருவது சந்தோசமாக இருக்கிறது. குதிரைகள் எருதுகளும் உலவுகின்றன. குதிரைகள் காட்டுக்குதிரைகளா இல்லை வளர்ப்புக்குதிரைகளா எனத்தெரியவில்லை. ஏனெனில் ராமர் பாதம் அருகில் உள்ள உப்பளங்களில் குதிரைகளை சிலர் கட்டிவைத்திருந்தார்கள்.

தண்ணீர்த்தொட்டி வைத்திருக்கிறார்கள். அவைகள் கிடக்கும் அவலத்தைப் பாருங்கள்.




திரும்பி வரும்போது சாப்பிடலாமா எனக்கேட்டேன். சூப்பர் மான்கறிபிரியாணிக் கடை ஒன்று இருக்கிறது போகலாமா என்றார் நண்பர். ம்ஹ்ஹூம், வேண்டாம், 'அசைவம்' சாப்பிட்டு சாப்பிட்டு நாக்குச்செத்துக்கிடக்கிறது, நல்ல சைவ ஹோட்டல் ஏதாவது என்றேன் நான்.

வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில், இடதுபுறத்தில் திரும்பி ஒரு மெஸ்ஸுக்கு அழைத்துசென்றார்.

கீரை இங்கு நன்றாயிருக்கும் என்பதால் இவரை இங்கு கூட்டிவந்தேன், கீரை இல்லையா இன்று என்று கேட்டார் நண்பர் அந்த மெஸ் உரிமையாளரிடம். கீரை இப்போதெல்லாம் அவ்வளவாய் கிடைப்பதில்லை. அதுதான் கத்தரிக்காய் கூட்டு என்றார் அவர். ம்ம், அடுத்து "கீரை விவசாயியின் காவியம்" என்று ஒன்று எழுதலாம் என இருக்கிறேன்.


பிகு: கோடிக்கரையா அல்லது கோடியக்கரையா? எனக்கே குழப்பம். அதுதாம் இரண்டையும் ஆங்காங்கு பயன்படுத்தியிருக்கிறேன். அறிவிப்புப்பலகைகள், பேருந்து அனைத்திலும் இரண்டையும் பார்த்ததாய் ஞாபகம்.


அன்பன்
எம்.கே.குமார்

ஜெயமோகன மதன காவியம் – 'கொஞ்சம் பழசு!'

ஜெயமோகன்  படலம்

ஜெயமோகன் எழுதிய ’கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ என்ற குறிப்பு அவல அதிர்ச்சியலைகளை உலகுக்கு  அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில், அக்குறிப்பை விட,  அதற்கு பதில் எழுதிய கவிஞர் திருமாவளவனுக்கு, ஜெயமோகன் எழுதிய புதிய பதிலில்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடுக்கி நிற்கிறது.

காந்தி, கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, சுந்தர ராமசாமி, சுஜாதா என்ற ’மக்களின் மன மல்டிபிளெக்ஸ் கார்டுகளை’ பொதுவெளியில் வைத்து அகம்-புறம் என அநாவசிய நாகரிகம் பார்க்காமல் பிரித்துமேய்ந்து பிம்பம் களைப்பதை ’மாலையில் ஒரு மல்லிக் காஃபி’ குடிப்பதைப்போல இலகுவாய்ச் செய்துவிட்டுப்போனாலும் ஏதாவது ஒருவரியில் இத்துனூண்டு அறவியல் இருக்கும் எப்போதும், அட்லீஸ்ட், முடித்துவைக்கும்போதாவது.

ஆனால், நேற்று சாப்பிட்டது தயிர்சாதமா இல்லை புளிச்சாதமா என்பது போல ஒரு குறிப்பை எழுதிவிட்டு சாதாரணமாய் எழுந்துபோய்விட்டார்.

கலைஞர் டெசோவை கையில் எடுத்ததும் ஜெயமோகனும் ஈழத்தை எடுத்துவிட்டார் என நினைக்கிறேன்.

பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருப்பார் ஜெயமோகன். அதுவும் இதுபோன்ற வரலாற்றுத் திரித்தல்களின் அடையாளத்தைக் கவனமாக முன்வைப்பார். பாவம், தூக்கத்தில் எழுந்துவந்து அட்டைக்கத்தியுடன் போரிட்டதைப்போல பின்வாங்குகிறார், இதில்.

’தனது நெடுநாள் வாசகர்’ சொல்வதற்காகவே, ’இந்திய ராணுவம் கற்பழிக்கவில்லை’ என்று அதை முன்மொழிய முயலும் போது அவரது அறவியல் நேர்மை நடுங்கவைக்கிறது. தூக்கத்திலேயே எழுதிவிட்டாரோ என்றும் யோசிக்கவைக்கிறது. செத்தால்தான் தெரியும் சாவு என்பது என்ன வாழ்வைய்யா?

நல்லவேளை, ஷோபாசக்தியும் திருமாவளவனும் பெண்களாய் பிறந்து வன்கலவியில் சிக்கி சாவாது போய்விட்டார்கள்; தாங்களே சாட்சி என்று நேரே வந்து நின்று பேச அவர்களும் இல்லையெனில் இவ்விவாதம் என்ன ஆகியிருக்குமோ என்று அஞ்சவைக்கிறது.

தான் மிகவும் நேசிக்கும் படைப்புத்திறன் கொண்ட இருவர், சிறுகுறிப்புகளுடன் ’நடமாடும் சாட்சிகளாக’ குறுக்கே வந்தபின் குறுகுறுப்பு கொள்கிறார்;  சாமன்யனாகிறார்; சறுக்கிவிட்டதாகச்சொல்கிறார்; இந்தியாவையே அவர்கள் மன்னிக்கவேண்டும் என்கிறார்.

மிகவும் மதிக்கப்பட்ட இந்த இருவரையும் பொதுவெளியில் அதிதீவிரமாய் பந்திவைத்து பிம்பத்தைக் கரைத்துக் காயடித்தபின், குறுக்கே வர சாட்சிகளும் இல்லாத தேசத்தில் இந்திய ராணுவத்தினர் கற்பழிக்கவே லாயக்கில்லாதவர்கள் என்று வரலாற்றுத்திரிபு நடந்தால் என் செய்வது?

அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை’ என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. 

கவிஞர் வா மணிகண்டன் சொல்வது போல ’சர்ச்சையில் இருக்கிறது தன் இலக்கிய இருப்பிடம்’  என்று அவர் முடிவெடுத்துவிட்டால் என்னைப்போன்றவர்களுக்கும் வருத்தமே மிஞ்சுகிறது.

என்னாச்சு ஜெயமோகன்?

தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஐயத்தின் வீரியத்தில் அவலமாக்கிய வாழ்வைத் திருப்பித்தர யார் இயலும்?

மதன் அத்தியாயம்

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமாரைத்’ தெரியாதவர்களுக்குக் கூட ’மதன்’ என்றால் யார் எனத்தெரியும். இதில் ஆனந்தவிகடன் பங்களிப்பு என்பது நான்குக்கு நாலே முக்கால் சதவீதம் என்பது நல்லுலகிற்குத் தெரியும்.

தான் எழுதிய ஒரு பதிலுக்கு (ஆனந்தவிகடன் பாணியில் சொல்வதானால்) சுவாரஸ்யம் கூட்ட சேர்க்கப்பட்ட, ’உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதாவின் காலடியில் தலைவணங்கி  ஒரு தொண்டர்’ ஆசிவாங்கும் படம் அவருக்கு அதிர்ச்சியையும் தேவையற்ற மனச்சோர்வையும் கொடுத்ததாய்ச்சொல்லி ’அது தன்னுடைய வேலையல்ல’ என்று ஒரு அறிவிப்பு வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்.

’டிவி’ வேலை போய்விடுமே என்று பயப்படும் ’பத்திரிகையாளர் மதன்’ அரசியல் சார்பற்று நடுநிலைமையுடன் கேள்விபதிலையும் சரி, கார்ட்டூனையும் சரி காபந்து பண்ணமாட்டார் என்று விகடனே அவருக்கு ’குட்பை’ சொல்லிவிட்டது.

இத்துனூண்டு சம்பவம் இது என்று நினைக்கமுடியவில்லை. மதனின் கேள்வி-பதில் சுவாரஸ்யமற்றுப்போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. வலைப்பூக்களில் வரும் கார்ட்டூனாவது பரவாயில்லை, அந்த அளவிற்குக்கூட அவரது கார்ட்டூன்களில் “காரம்” இல்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் விகடன் எப்போதும் நடுநிலைமை. மாற்றம் தேடிக் காத்திருந்தவேளையில் ’படம் நழுவிக் காலில் விழுந்து’ பாதகம் செய்துவிட்டது மதனுக்கு.

விகடன் வாசகர்கள் ஏறக்குறைய எல்லோருமே விகடன் செய்தது சரிதான் என்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள்

ஒரு முகபுத்தக நண்பர், ’உட்கார்ந்திருப்பது ஜெயலலிதா; குனிந்து வணங்குபவர் மதன்’ என்றும் இன்னொருவர், “ரஃபி பெரனார்டுப்போல அதிமுகவின் அடுத்த எம்.பி மதன் தான்” என்றும் சொல்லிவிட்டார்கள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் தொண்டையை அடைக்கின்றன.

ஒன்று, ஆ.வி. வாசகர்களின் பார்வையில் ’அடுத்த சுஜாதா’ என்ற “அரை-பிம்பத்தில்” இருந்த மதன் மாயச்சுழலில் சிக்கிவிழுந்துவிட்டார். இனி சராசரிகளில் ஒரு சராசரியாய் சிக்கக்கூடும். (’சான்ஸ் கிடைச்சா தான் சார் சச்சின் டெண்டுல்கரே’ என்ற டயலாக்கில் எனக்கு நம்பிக்கையுண்டு.)

இரண்டு, மதனை நினைக்கும்போது உண்மையில் எனக்கு, ’மாட்டுக்கறி திங்கும் மாமி’ என்று அட்டைப்படத்தில் போடுமளவுக்கு ’தில்’ இருக்கும் ’நக்கீரனைப்’ பார்க்க திகில்லாயிருக்கிறது.

எம்.கே.குமார்.

Tuesday, May 29, 2012

சிங்கப்பூர் வாசக வட்டத்தின் ’மே’ மாத கலந்துரையாடல் - ஒரு பகிர்வு!


சிங்கப்பூர் வாசக வட்டத்தின் மே மாத கலந்துரையாடலானது கடந்த மே 20 அன்று சிங்கப்பூரின் அங் மோ கியோ தேசிய நூலகத்தில் புனைவு அல்லாதவை அல்லது அ-புனைவு படைப்புகள் என்பன குறித்து நடைபெற்றது.

கடல் போன்ற பெருவெளி கொண்டது அ-புனைவு இலக்கியம். பத்தி எழுத்து, பக்க எழுத்து, புனைவில் புகழ்பெற்றவர்களின் அ-புனைவு எழுத்து, அ-புனைவால் எழுச்சியை உருவாக்கிய எழுத்து, கடைசி பக்க எழுத்து, பயண எழுத்து, பகடி எழுத்து என எந்தவித பேதமும் இல்லாமல் கலந்துரையாடலில் கடலாடி விட்டிருந்தன அக்கடலில் கிளம்பிய அலைகள்.

கார்ல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் ஆகியோரிலிருந்து ஆரம்பித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்ரா ரமேஷ். தொலைந்த கனவு குறித்த பார்வையைப் பகிர்ந்தார் திரு. இராம கண்ணபிரான்.

கலைஞர் மு.கவின் உடன்பிறப்பு படைப்புகள், குல்தீப் நய்யாரின் எமெர்ஜென்ஸி படைப்புகள், தினமணியின் அறிவியல் மலரில் எழுதிய நெல்லை சு முத்து, தீம்தரிகிட ஞானி, சுஜாதா, சுப்புடு, வெங்கட் சாமிநாதன், க.நா.சு, அவரின் மருமகன் பாரதிமணி அவர்கள், அண்மைய அவருடைய மாமனார் கட்டுரை, கி.ரா, புனைவிலும் அ-புனைவிலும் வெற்றிபெற்ற எஸ் ராமகிருஷ்ணன், அ-புனைவின் அதிபதி சாரு நிவேதிதா, அமரகாவியம் ஜெயமோகன், வருடிச்செல்லும் வண்ணதாசன் கடிதங்கள், அ.முத்துலிங்கம் என்னும் வாழ்க்கை வழிப்போக்கன் என எல்லைகளற்று பரவி விரிந்தது அ-புனைவு வானம்.

வால்கா முதல் கங்கை வரை, வந்தார்கள் வென்றார்கள், சங்கச்சித்திரங்கள், ஏன் எதற்கு எப்படி, எனது இந்தியா, கதாவிலாசம், கணையாழியின் கடைசி பக்கங்கள் என தொடர்ந்தன அ-புனைவு சிலாகிப்புகள்.

பத்தி எழுத்தின் தரம், பத்தி எழுத்தாளர்களின் போக்கு, எளிமையுடன் கூடிய பொருண்மை ஆகியவையும் விவாதிக்கப்பட்டு விசாலமடைந்தன.
தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு சுகா, ஆனந்த விகடன் வட்டியும் முதலும் முருகன், சிங்கப்பூரின் குறிப்ப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தான ஷா-நவாஸின் ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், சிங்கப்பூர் தமிழ்முரசு எழுதும் தற்போதைய தலையங்கம் ஆகிவையும் விவாதத்தில் வந்தன.

காலில் விழாத மதன், கற்பழிக்காத ஜெயமோகன், ஆசிட் வீச்சுவழக்கு, வருடா வருடம் மாறும் வரலாறு என இம்மையை தொட்டுச்சென்றன சில பகிர்வுகள்.

இராம கண்ணபிரான், ஜெயந்திசங்கர், கேஜே ரமேஷ், ஷாநவாஸ், பூங்குன்ற பாண்டியன், மாதங்கி, ஹேமா, எம்.கே.குமார், ஆனந்தகுமார் இவர்களோடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் சித்ரா ரமேஷ். வழக்கம் போல அ-புனைவின் புனைவாய் கேசரியும் வடையும்!

காரல் மார்க்சின் கடும் தோழராய் இருந்தாலும் சரி, கம்பனின் காவிய தாசனாய் இருந்தாலும் சரி, மு.வ வின் முரட்டு பக்தராய் இருந்தாலும் சரி, சாரு நிவேதிதாவின் சரச சல்லாப சகலையாய் இருந்தாலும் சரி, சுந்தர ராமசாமி சுவாசித்த காற்றைச் சுவாசிப்பவராய் இருந்தாலும் சரி – உட்கார்ந்து காதுகொடுத்துக்கொண்டிருக்கும் அந்த சில மணித்துளிகளில் அடையாது அடையும் ஒரு ரசிக-வாசக புலனுகர்வு-மனப்பகிர்வு இன்பத்திற்காகவாவது கண்டிப்பாய் வரலாம் மாதம் ஒருமுறை அங்மோகியோ நூலகத்திற்கு.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் வழங்கும் அடுத்த கலந்துரையாடல் வரும் ஜூன் 3 அன்று மாலை 5.30மணிக்கு அங்மோகியோ நூலகத்தில். திரு வேங்கடாசலபதி சிறப்பிப்பார்.

Search This Blog