Tuesday, September 27, 2005

குடிமுந்திரி & ஒன்பது ரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச் செல்லும் நெற்கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள்.

செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும்.

காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப் புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக.

தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன. அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர். முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக. மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை. அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன. இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான். கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல். மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை.

பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது. தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை. படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

புத்தக அறிமுகம்: பாலிதீன் பைகள்.

'படித்தவுடன் மனதில் நிற்பதைப்போன்ற ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லுங்கள், உடனே நான் படிக்கவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறு உங்களூக்கு இருந்தால் அதற்காக நான் பரிந்துரைக்கும் நூலின் பெயர் இதுதான்.

பீ அள்ளூம் சமூகத்திலிருந்து வந்த அவனும் புரோகிதம் சார்ந்த சமூகத்திலிருந்து வந்த அவளும் காதலித்து மணம் புரிகிறார்கள். மணம் புரிவதற்கு முன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கும் சமூகத்தை ஒரு மீள்பார்வை செய்கிறார்கள். செய்வதின் விளைவு இந்நாவல்.

மணிரத்னத்தின் சில படங்களைப்போல கதை சொல்லல் முன்னும் பின்னும் நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அது ஒரு புதுமையாகவும் கதையின் எளிமையை அசாதரணமாகவும் சொல்ல முற்பட்டிருக்கிறது.

நாவலின் தலைப்பு சொல்ல வந்ததைச் சுருக்கெனச் சொல்லிச் செல்கையில் அதற்காக இவ்வளவு பிரயத்தனப்பட்டு அடிக்கடி அதை விளக்க முயன்றிருக்க ஆசிரியருக்கு அவசியம் இல்லை.

கழிவறையில் பிறந்த தன் நண்பனுக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறார் ஆசிரியர். கதையில் வரலாற்றுப்பின்னணிகளும் நிறைந்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு முழு வரலாற்றுச்சாதனமாக இந்நூலை அவர் எழுதியிருக்கலாமோ என்று எனக்குத்தோன்றியது.

படித்துப்பாருங்கள்.

நூலின் பெயர்: பாலிதீன் பைகள்
ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: காவ்யா
16, 17 இ கிராஸ்,
இந்திரா நகர்
பெங்களூர்.
நூலின் விலை: ரூபாய் 65.


அன்பன்.
எம்.கே.

Tuesday, September 20, 2005

எம்ஜிஆரும் காமராஜரும் இறந்துவிட்டனர்!

மன்னிக்கவும், உங்களைத்தொந்தரவு செய்யவில்லை. நீங்கள் உங்களது வேலையைத்தொடருங்கள்! ஆச்சரியப்படுவதற்கோ வினாடிகள் சில யோசித்து அஞ்சலி செலுத்துவதற்கோ இது நமக்கு புதிதல்ல. கால ஓட்டத்தில் இவையெல்லாம் பணத்தையும் அது தரும் வாழ்க்கையையும் விடவும் பெரிதாகத் தெரிய வேண்டிய அவசியமுடன் இருக்கிறதா என்ன?

எம்.ஜி.ஆர் என்றதும் சிலருக்கு, 'காயா இது பழமா கொஞ்சம் தொட்டுப்பாக்கட்டுமா?' என்பதோ இல்லை கையை முகவாயில் கொடுத்து பேனாவுடனும் புன்சிரிப்புடனும் இருக்கும் சுருட்டைமுடிக்காரரையோ இல்லை இரட்டை விரலைக்காட்டி தொப்பி கண்ணாடி சகிதம் கம்பீர புன்னகை தருபவராகவோ இருந்துவிட்டுப்போவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

கையில் சாட்டையுடன், 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்று கட்டளையிடப்போகும் காலத்தை உணர்ந்து நிற்கும் அவர்தான் என் கண்களூக்குள் எப்போதும் வருவார். நான் இன்றும் ரசிக்கும் காவியத்தலைவரும் அவர்தான். ஒரு ஏழைத்தாயின் மகனாகப்பிறந்து ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிய வாழ்க்கையை நம்பிக்கையோடு கெட்டியாகப்பிடித்து முன்னேறி அதையே ஒரு வழியாக்கி மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்; செலுத்திக்கொண்டிருப்பவர்.

வாழ்க்கையை வெற்றிகொள்ளத் திணரும் பலருக்கும் 'நான் ஏன் பிறந்தேன்' (என்ற கேள்வி) அவசியமானது. அத்தகைய கேள்வியிலிருந்து துவங்கியதுதான் இன்னொருவருடைய வாழ்க்கையும்!

தாமரைக்கனி. முன்வழுக்கை போக மோதிரத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்றவர். இங்கும் ஏழ்மைக்கதைதான். வாழவைத்தது தன்னம்பிக்கை. படம் பார்த்து உருப்படாமல் சுற்றித்திரிந்ததால் மந்திரியானாரோ கலாட்டா அல்லது பதவிவெறியில் அரசியலில் ஜொலித்தாரோ எனக்குத் தெரியாது. தன்னம்பிக்கை உள்ள மனிதர். அனைத்தையும் சாக்கடையாக்கிவிடும் அரசியலின் இயல்பிலிருந்து தப்பிக்க திறமையுள்ள சாக்கடைவாசி இல்லை இவர். சராசரியான மனிதர். கொஞ்சம் மூர்க்கத்தனம் நிறைந்த அப்பாவி. தமிழகத்தை உலுக்கிப்போட்ட அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் முடிவுகளில் இவரது தன்னமிக்கை இவருக்கு வெற்றி கொடுத்தது.

சில மாதங்களூக்கு முன் கூட, "இதோ எழுந்து நடமாடிவிட்டேன்; வருவேன், மீண்டும் வருவேன். கலைஞரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்காமல் இறந்துபோகமாட்டேன்" என்று உற்சாகம் ததும்ப பேசிய இவருக்கு காலன் இட்ட காலக்கெடு தெரியுமா என்ன?
*************************************

ரிச்சர்ட் மதுரம். 70 வயது. முன்னாள் அரசு அதிகாரி. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களீல் உயர் அலுவலராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர். ஊட்டியில் அவரது மகள் வீட்டில் இருந்துவந்திருக்கிறார். எதேச்சையாக ஒரு நபரை ஊட்டியில் ஒருநாள் சந்திக்க, அந்நபருக்கும் உடனே ஏதோ ஒரு பொறி தட்ட, வெளியில் வந்தார் கிங் மேக்கர். 'பொறி தட்டிய நபர்' தயாரிப்பாளர்-இயக்குனர் பாலகிருஷ்ணன். 'தட்டிய பொறி' காமராஜர் பிறந்து வந்தது.

'காமராஜ்' படத்தில் 'அய்யா காமராஜராக' நடித்தவர் அமரர் ரிச்சர்ட் மதுரம். பார்த்தவுடன் நிதானிக்கவைக்கும் கூரிய பார்வையும் எளிமைக்குச் சான்றாய் விளங்கும் தோற்றமுடையவருமாய் காமராஜ் படத்தில் நடித்திருந்தார், இல்லை மீண்டும் பிறந்து வந்தார். அவரது நடிப்பைப்பற்றி எதையாவது கூறி அப்பிம்பத்தை அனாவசியமாய் சிதைக்க விரும்பவில்லை. எனக்குப்பிடித்திருந்தது. கட்டபொம்மனும் பாரதியும் நினைவிலாடுவதைப்போல காமராஜரையும் இப்படி நினைவுக்குக்கொண்டு வரும் புத்திக்கு விளக்கங்கள் சொல்லி விளங்கவைக்கமுடியாது.

'அசைவம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுப்பு, இன்னக்கி சாப்பிடணுங்குறேன், ரெண்டு முட்டை வாங்கியாரச்சொல்லுப்பு' என்று அவர் சொன்னபோது காமராஜரின் மேல் இன்னும் ஒரு மதிப்பு வந்தது மறக்கமுடியாதது. அந்த உருவம் இன்னும் கன்ணுக்குள் நின்றுகொண்டிருக்கும்போது 'ஊட்டியின் கல்லறை' என் கண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மறக்கவைத்துவிடுமா என்ன?

பி.கு: இன்று அதாவது செப் 20, இளையோருக்கு வழிவிட எண்ணி தனது முதல்வர் பதவியை துறந்தாராம் காமராஜர். ம்ம். ! இவையெல்லாம் இருக்கட்டும், (வெறும் சிலைகலையும் சமாதிகளையுமே கட்டிவிட்டுச்செல்லாமல்) நான் படித்த கல்வி நிலையத்தைக் கட்டியதற்காகவாவது அவரும் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களும் என்றும் எனது நன்றிக்குரியவர்களாயிருப்பர். அவர்களால் இன்று வயிற்றுப்பிழைப்பு நகர்கிறது பாருங்கள்!

அன்பன்,
எம்.கே.

Monday, September 19, 2005

உடன்பிறப்புக்கு ஒரு கடிதம்!

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம்.

நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா?

வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!
அன்புடன்,
ம.கா.(கு)

மறுபதிப்பு.

இந்த வாரம் இவை!

இந்தவார ( நடுநிலைச்)செய்தி: தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி துவக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் வாரிய அங்கீகாரம் பெற்றதாய் பத்து கட்சிகளும் அங்கீகாரம் பெறாமல் 100 கட்சிகளுக்கும் மேல் இருக்கும் தமிழகத்தில், இன்று இன்னும் ஒரு புதுக்கட்சி துவக்கப்பட்டது. இதனை ரமணா, புலன்விசாரணை போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜயகாந்த் துவக்கியுள்ளார். (சன் டிவி செய்தி!)

இந்தவார கமெண்ட்:

அனாமிகா: "பீகார் தேர்தலுக்குப்பின் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகி புதியவர்களுக்கு வழிவிடுவேன்'னு அத்வாணீ சொல்லியிருக்கார் போல!"

சுனாமிகா: "நீ வேற, இப்படி சுத்தி வளச்சிச் சொல்லாம, பீகார் எலக்ஷன்லே தோத்ததுக்கு பொறுப்பு ஏத்து பதவி விலகுவேன்னு சுருக்கமா சொல்லியிருக்கலாம்"


இந்தவாரப்போராட்டம்: எவ்வளவு தைரியமும் ஆணாதிக்கமும் இருந்தால் எங்களைப் போய் இந்த சினிமா நடிகைகளோடு ஒப்பிட்டு பேசியிருப்பார் இந்த தங்கர்பச்சான்? என்று பாலியல்தொழிலாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்தவார ஆரூடம்: எம்ஜிஆரின் தீவிரத்தொண்டரும் அவரது மந்திரிசபையில் பணீயாற்றியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் விரைவில் இணைவார். அவருடன் ஆயிரம் அதி.மு.க.வினரும் அதில் இணைவார்கள்.

'இந்தவார' நிருபர் அப்புசாமி!

Tuesday, September 13, 2005

நல்ல காலம் பிறக்குது!

வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?

சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன். என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!

இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.

முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் அடுத்த வரும் சட்டம். குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.

இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!

இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?

மொத்தமய் இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.

தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கு, பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.

எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா?

விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.இருக்கட்டும்.

டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?

கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)

சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?

சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!

விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமாசார்? 'எத்தனை வீடு' இருந்தாலும் கவலை இல்லைதானே!அதுமட்டுமா?

உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)

ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.

வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.

டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?

வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.

உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்..ப்..ப்..பா!போதவில்லையா?

இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?

கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?'

சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?'

என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா?மனசாட்சி இல்லையா அவர்களுக்கு?

கேளுங்கள்!நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும்.

இல்லை குறைந்தது 'இரு' ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.

சரி, வேலைக்காலத்திலே அகாலமாய் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்..? கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா?
ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.

இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?

அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக்சபா ராஜ்யசபா உறுப்பினர்கள்!

எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

எழுதத்தூண்டிய மதுமிதாவுக்கு நன்றி.
(http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_08.html)

Friday, September 02, 2005

ஒரு கடிதம்!

வலைப்பூவிற்கு அறிமுகமாகி இரண்டு வருடங்கள். இரண்டு வருட வலைப்பூ வாழ்க்கையும் பதிவுகளும் ஆத்ம விசாரணைக்கு உட்படட்டும். அதுவரை..!
..................................................................................!

இது ஒரு கடிதம். உள்ளங்கை அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் நெல்லிக்காய் அளவுக்கு உண்மை இருப்பது உண்மை. அந்த உண்மையை ஆதாரமாக வைத்து படைக்கப்பட்ட கடிதம் இது.

சொர்க்கத்திற்குக்கடிதம்.

அன்புள்ள அண்ணாவிற்கு,
ஆத்மார்த்தமான வணக்கங்கள். வெளியே நானும் நலமாய் இருக்கிறேன்.

'தூண்டிற் புழுவினைப்போல்-வெளியேசுடர் விளக்கினைப்போல்நீண்ட பொழுதாக- எனதுநெஞ்சந்துடிப்பது' யாருக்கும் தெரியாது.

இந்தியாவின் நூறு கோடி முகங்களில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் பழகிய முகங்கள் கொல்லப்படுகின்றன. முப்பது கோடி முகத்தை நூறு கோடி ஆக்கியவர்களின் தீரம் மற்ற வீரச்செயல்களில் இங்கே எடுபடவில்லை. நதிகளை இணைக்கவே நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். தனியரு மனிதனுக்கு உணவென்ன? தவளையும் எலிகளுமே கிடைக்கவில்லை. தண்ணீர் வேறு. சொல்லவா வேண்டும்?இதெல்லாம் இருக்கட்டும். இது தெரிந்தகதை. உலகம் அறிந்த கதை. நம் கதைக்கு வருகிறேன்.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? நீங்கள் எப்படிச்செய்யலாம் இப்படி? நீங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டீர்களோ இல்லை தமிழுக்காக பாடுபட்டீர்களோ எனக்குத்தெரியாது. அதெல்லாம் இந்நாட்டில் அவசியமே இல்லாததாய் ஆகிவிட்டது. நான் கேட்கப்போவது அதுவன்று. எப்படி நீங்கள், தங்களை நம்பி வந்த பெண்ணை கஷ்டப்படுத்தி ஒரு நல்ல குடும்பத்தலைவனாய் இல்லாமல் போகலாம்?

ஞான மார்க்கத்தை அடைய எது சிறந்த வழி என்ற கேள்விக்கு நல் இல்லானாய் இருப்பதே என்பதை எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டிருக்க எப்படி நீங்கள் அதிலிருந்து மற்ற 'வெட்டி வேலைகளுக்காக' விலகி குடும்ப உறுப்பினர்களின் சுகங்களை மேம்படுத்தாமல் மொத்தமாய் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தலாம்? இது ஒன்றுதான் எனக்கு உங்கள்மேல் இன்னும் கோபத்தை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.'

பராபகாராத்தம் இதம் சரீரம்' என்றறிந்த தங்களுக்கு எப்படி தன் இல்லாளுக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் அது பொருந்தும் என்பது தெரியாமல் போயிற்று?மிகுந்த திறமை மிகுந்தவரான தங்களது தந்தை பணக்கஷ்டத்தினால் வருந்தி இறந்த பின் கூட தங்களுக்கு அதை நினைத்து பணத்தின் மேல் வெறுப்பு வந்ததே தவிர அதுவேதான் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பது எப்படி தெரியாமல் போயிற்று? ஆயினும் தாங்கள் கடைசிவரை பணத்தாசையைக்குறைத்துக்கொண்டாலும் கூட உடை நடைகளில் புதுமையையும் விதவிதங்களையும் விரும்பியவராய் இருந்தீர்களே அது எப்படி? இது இல்லாமல் அது எப்படி இருக்க முடியும் என்றபோதாவது தாங்கள் அதைப்பற்றி யோசிக்க முயன்றிருக்கவேண்டாமா?

நாளன்று போவதற்குள் நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்' என்றும் ஜீவியத்துக்காக திணறி, ஒரு வார்த்தையும் பேசாமல் நித்திரையும் செய்யாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து, ' தெய்வமே! ஒரு வழியுமில்லையா?" என்று அனுபவித்த தாங்கள் எப்படி இரண்டாம் நாளில் அத்தனையையும் மறந்து போனீர்கள்?

'தேடக்கிடையாத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே,மடவன்னமே, அரோசிக்குது பால் தயிரன்னமே,மாரன் - சிலைவேல்களை - கொலைவேலென - விரிமார்பினில்- நடுவே தொளைசெய்வது கண்டிலை யின்னமே- என்னசெய்தேனோ நான் பழி முன்னமே?கன்னத்தில் குயிற்சத்தமே கேட்கக்கன்றுது பார்எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப்பித்தமே,உடல் கனலேறிய மெழுகாயினும் உம் மடி பாதகிகட்டியணைத்தொரு முத்தமே தந்தால்கைதொழுவேன் உன்னை நித்தமே' என்று கட்டிய மனைவிமேல் காதல் கணைகள் வீசிய தாங்கள் எப்படி " ஓர் உயர்ந்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்தும் அதை அனுபவிக்கக்கொடுத்து வைக்க்காமற்போகுமோ" என்று அவள் புலம்பும்படி ஆக்கிவைத்தீர்கள்?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை உதறிய நீங்கள் எப்படி மனைவி நோக வாழ்ந்து பார்த்தீர்கள்?பூரண கர்ப்பிணியான அவரை விடுத்து எப்படித்திரிந்தீர்கள் உலகை சுற்றும் எண்ணத்தோடு?

சிறீ சங்கரகிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தினம் தண்டால் எடுத்து பஸ்கி பழகி கட்டுமஸ்தான உடம்போடு காரியம் மேற்கொள்ளும் அவனையும் அல்லவா கெடுத்தீர்கள்? கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் உள்ளே போன அவன் திரும்பி வரும் வரை அவன் இளம் மனைவி தாய் தந்தையர் பட்ட கஷ்டம் எப்படித்தெரியும் உங்களுக்கு? வெளியில் வந்து சில நாளில் இறந்து போய் விட வறுமைப்பேய் அவர்களை வாட்டியது மறக்கமுடியுமா? என்ன பலன் கண்டீர்கள்? அவரை எத்தனை பேருக்குத்தெரியும் இன்று?

தனக்கே ஆகாரத்திற்கு அடுக்களையில் பூனை விரட்டியபடி இருக்கும் மனைவியிடம் போய் 35 பேருக்கு தினமும் சமைக்கச்சொன்னால் எப்படி முடியும் அண்ணா? அண்ணி என்ன அள்ள அள்ளக்குறையாத பாத்திரமா வைத்திருந்தார்?சங்கர கிருஷ்ணனும் மற்ற 35 பேர்களுமா கஷ்டப்பட்டார்கள் உங்களால்?

செல்லம்மா அண்ணியின் அண்ணன் ரங்கூனில் இருந்து வந்தார் அவரையும் அல்லவா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமா அவரது தங்கை கணவர் பம்பாயில் படித்து வீட்டுக்கு வந்தபோது அவரையுமல்லவா கைது செய்து அக்குடும்பத்தை திக்குமுக்காடச்செய்தார்கள். 'மாப்பிள்ளை புதுச்சேரிக்கு போய்விட்டார், பிள்ளையும் தீவாந்திரம் போய்விட்டான், மற்றொரு மாப்பிள்ளையும் அப்படித்தான் அதேகதிதான்' என ஊரே அக்குடும்பத்தை எள்ளி நகையாட அல்லவா செய்தீர்கள்?கோயிலுக்குப்போகும் அவரது அம்மாவைக்கூட இரு போலீசார் அல்லவா பின் தொடர்ந்தார்கள்?வாசலில் 15 பேர் காவலுக்கும் புறக்கடைக்கப்புறம் 15 பேருமாக காவல் காக்க அவர்கள் எப்படித்தூங்கியிருக்கமுடியும் நிம்மதியாக?

வ.வே.சு.ஐயர் அவர்களின் மனைவி சிறீ மதி பாக்கியலஷ்மி அம்மாள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை?

அரிசி இல்லை என்று சொல்லாதே, அகரம் இகரம் என்று சொல் என்றால் எப்படிச்சொல்வாள் அண்ணி? அகரம் இகரம் பசி தீர்க்குமா அண்ணா?

செல்லம்மா! உன்னால்தான் உன் கணவன் கெட்டுப்போகிறான் அவன் எள் என்பதற்கு முன் நீ எண்ணையாக இருக்கிறாயே, என ஊர்ப்பெண்கள் அவரைத்தூஷிக்கும்போது அவரை உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியாவில்லையா அண்ணா?

எப்படி உங்களுக்கு இப்படித்தோணியது? சிங்கத்திற்கு இரையை இரண்டு நாட்கள் நிறுத்தியிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?சிங்கத்திற்கு நல்ல புத்தியைக்கொடு என மனைவி வெங்கடாசலபதியை வேண்டிக்கொள்ள, "மிருகராஜா! கவிராஜா வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும் வீரத்தையும் எனக்குக்கொடுக்கமாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவன் என்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப்போல உள்ளன்று வைத்துப்புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும் அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்கள் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்துகொள்ளும்படி உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து ராஜா" என எப்படிச்சொன்னீர்கள்?அது என்ன தேவர் ?பிலிம்ஸின் சிங்கமா அண்ணா?

தங்களைச்சந்தித்த பழைய நண்பர் ஒருவர், என்ன சுவாமி, இப்படிப்பாட்டு பாடிக்கொண்டு காலம் கழிக்கிறீகள், நான் வாழ்நாள் முழுவதும் அப்படி இப்படி பாடிவிட்டு பாரத நாட்டின் விடுதலைக்காக உழைத்து இன்று சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஏதேனும் கொடிய செயலில் இறங்கலாமா என மனம் யோசிக்கத்தூண்டுகிறது. தர்ம சிந்தனையால் பசி ஆறாது என்பது திண்ணம், எங்காவது திருட்டோ கொள்ளையோ செய்யத்துணியட்டுமா என கேட்ட போதும் அது உங்கள் மனதுக்குள் வலிக்கவில்லையா அண்ணா? வழி ஏதும் யோசிக்கவில்லையா?

கடைசிக்காலமும் உங்களுக்கு அப்படித்தானே வந்தது! எப்படி நெருங்கலாம் மதம் கொண்ட யானையை நீங்கள்? மனிதர்கள் விலங்குகளைப்போல நடந்துகொள்கையில் விலங்குகள் கூட மனிதர்கள் மாதிரி நடந்துகொள்ளும் என்பது எப்படி உங்களுக்குத்தெரியாமல் போயிற்று?

இருந்தவரை கஷ்டப்பட்டீர்கள். இருப்போரைக்கஷ்டப்படுத்தினீர்கள். எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் இருக்கையில் அண்ணி பட்ட கஷ்டங்கள் மட்டும் கடலலையாய் எனக்குள் பொங்குகிறதே என்ன செய்யட்டும் அண்ணா?

உங்கள் படைப்பைக்காசாக்கிவிட்டார்கள், ஒருவர் குத்தகை கூட எடுத்திருந்தார். உங்களைப்பற்றி எழுதிவிட்டு காரில் போகிறார்கள். மேல் நாட்டு நாகரிகம் பார்க்கிறார்கள். பாரதி பெயர்க்காரணம் ஆராய்ந்துவிட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை அடித்துவிரட்டிவிட்டு காரில் பெருமையோடு போய்விடுகிறார்கள் அண்ணா!

எத்தனை கண்ட போதும் அண்ணியை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா, நெஞ்சு பொறுக்குதில்லையே! ஒரு பிடி அரிசிக்காய் அழுத அண்ணி
யை மறக்கமுடியுமா அண்ணா?

அன்புத்தம்பியாய்,
எம்.கே.குமார்.

மறுபதிவு.
முதற்பதிவு: செப் 2003

Search This Blog