Tuesday, September 27, 2005

குடிமுந்திரி & ஒன்பது ரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்.

சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச் செல்லும் நெற்கருதுக்கட்டு.

நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.

அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள்.

செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும்.

காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.

கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.

மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப் புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக.

தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.

குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன. அவற்றில் ஒன்று 'பசு.'

கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர். முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.

இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக. மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.

யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?

பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)

கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.

கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை. அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன. இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான். கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.

இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல். மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை.

பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது. தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.

பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.

ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை. படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

11 comments:

வன்னியன் said...

ம். ஒன்பது ரூபா நோட்டு, நானும் மிக இரசித்த நாவல். அதைப் படமாக்குகிறேன் பேர்வழியென்று பெரிய தடல்புடலாக விழாவும் வைத்தார் தங்கர்பச்சான். ஆனால் அத்தோடு முடிந்ததுதான்.

எம்.கே.குமார் said...

உண்மைதான். அக்கதாபாத்திரத்திற்கு யார் யாரையோ கேட்டு அலைந்து, பிறகு சத்யராஜையும் அணுகி அவரும் ஒத்துக்கொண்டு படபூஜை போடும் நிலைமையெல்லாம் உருவானது.

எனக்கென்னமோ அக்கதையை நாவலின் தரத்துக்கு இணையாக படமாக்க முடியாது என்றுதான் தோணுகிறது.

பின்னூட்டத்திற்கு நன்றி வன்னியன்.

எம்.கே.

Kannan said...

//இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது.//

முதல் ஆட்டம் - இரா.மு.வின் நல்ல படைப்பு.

Thangamani said...

kudi munthiriyum, 9 rubaai notemthaan avaridam enakku ethirpaarppai undaakina.

Anonymous said...

It's when you talk about Anna and Ki.Ra in the same post, that your taste becomes highly suspect! :)

Thanks though for a good introduction to Thangar's s.stories and novel.

Unknown said...

குமார், செவ்வாழை கதையை பல வருடங்களுக்கு முன்ப்ய் தூர்தர்ஷனிலோ சன்னிலோ நாடகமாக ஒளிபரப்பினார்கள். கதையை குலைக்காமல் நன்றாக இருந்தது.

எழுதுறது எல்லாம் ஒகே, அது என்ன ஃபோட்டோல அரடவுசர் போட்டுக்கின்னு நிக்கிறிங்க. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு :-).

குழலி / Kuzhali said...

தங்கர்பச்சான் என்ற பெயரை கேட்டாலே எட்டிகாயை கடித்தது போல இருக்கும் நிலையிலே தங்கரின் நாவலை சிலாகித்து எழுதியுள்ளீர் எத்தனை அடி வாங்கப்போகின்றீரோ, மிகைப்படுத்தல் இல்லாமல், கதாநாயகன் புகழ் பாடாமல் எதார்த்தமான ஒரு நாவல் அது

//ஒன்பது ரூபா நோட்டு, நானும் மிக இரசித்த நாவல். அதைப் படமாக்குகிறேன் பேர்வழியென்று பெரிய தடல்புடலாக விழாவும் வைத்தார் தங்கர்பச்சான். ஆனால் அத்தோடு முடிந்ததுதான்.
//
நானும் கேள்விப்பட்டேன், பல நடிகர்களை இதில் நடிக்க அணுகியதாகவும் யாரும் இதில் நடிக்க விரும்பவில்லையென்றும் செய்திகள் வந்ததே, பின்ன சுவற்றில் கால் வைத்து அடிக்க நாலு சண்டை காட்சி இல்லை, 20 வயது கதாநாயகியோடு வெளிநாட்டில் கட்டித்தழுவி பாட்டுபாட பாடல் காட்சிகள் இல்லை, சுய தம்பட்டம் அடிக்கும் வசனங்களோ பாத்திரப் படைப்புகளோ இல்லை, பிறகு எந்த தமிழ் நடிகன் நடிக்க வருவான்...

எம்.கே.குமார் said...

ம்ம், நினைவு படுத்தியதற்கு நன்றி கண்ணன். அக்கதையின் பெயரும் அதுதான், அச்சிறுகதைத்தொகுப்பின் பெயரும் அதுதான். முதல் ஆட்டம்!
நல்ல கதை.

எம்.கே.

எம்.கே.குமார் said...

பின்னூட்டத்திற்கு நன்றி தங்கமணி.

அழகி படம் பார்த்துவிட்டுத்தான் குடிமுந்திரீயில் இருக்கும் தனலட்சுமி கதையைப் படிக்க நேர்ந்தது. இருந்தாலும் சுவை!

எம்.கே.

எம்.கே.குமார் said...

அன்பின் அனானிமஸ்,
பின்னூட்டத்திற்கு நன்றி.

அண்ணா இலக்கியவாதியா இல்லையா என்று நாமெல்லாம் விவாதிக்கவேண்டாம், விட்டுவிடுவோம் அவரை! அவரைப் பொறுத்தவரை செவ்வாழை கதை நாலு குடியானவனின் 'ஓட்டை' அவருக்கு பெற்றுக்கொடுத்திருந்தால் அதுவே அவருக்கும் மிகப்பெரிய வெற்றி.

அண்ணா மற்றும் கி.ரா இவர்களை இப்படைப்பினோடு ஒப்பிடுவதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பதை ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் இக்கதைகளைப் படித்து முடித்த ஓவ்வொரு காலகட்டத்திலும் நான் மிகவும் வருந்தினேன் என்பதே செய்தி.

எம்.கே.

எம்.கே.குமார் said...

அன்பின் கேவிஆர்,

குலைக்காமல் ஆக்கிய செவ்வாழை நன்றாகத்தான் இருந்திருக்கும். உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

அடடே.. எல்லாம் உங்க (மரத்தடி) வழிதான் மக்கா. அப்போ நாலு வயசை கூட்டிச்சொல்லுவோம், இப்போ நாலு வயசைக் குறைச்சுச்சொல்லுவோம். குறைச்சு காட்றோம்ல!

எம்.கே.

அன்பின் குழலி,

உண்மைதான். நீங்கள் சொன்ன அதெல்லாம் இல்லாமல் இந்தப்படம் எடுக்கப்படவேண்டும். நடக்கிற காரியமா இது இன்றைய தமிழ் சினிமாவில்?

பின்னூட்டங்களுக்கு நன்றி ராஜா, குழலி.

எம்.கே.

Search This Blog