சிங்கப்பூரில் தமிழ் பற்றிய கட்டுரைகளையும் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் ஒன்று மட்டும் புலப்படும். அது, சிங்கப்பூரில் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச்செல்வதில், தமிழ் பயன்படுத்துதலை மேம்படுத்துதலில், ஒருங்கிணைப்பை அதிகரித்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிவணிகர்களும் தமிழ்த்தொண்டர்களும் தொடருவதைத் தவிர மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று ஆழ்ந்துகிடக்கிறது என்பதுதான்.
தமிழ்முரசு அவ்வெற்றிடத்தை நிரப்பலாம் என்பதுதான் எனக்கிருந்த காலகால நப்பாசை. காரணம் அமரர்கள் கோ.சாவும், வி.டி.அரசு போன்றவர்களும்.
இதற்கிடையில், “பத்திரிகை மற்றும் இதழ்கள் மூலம் சிங்கப்பூரில் படைப்பிலக்கத்தை வளர்க்கமுடியாது” என்பதாக தமிழ்முரசு நாளிதழில் பணிபுரியும் கவிஞர் லதா ‘வல்லினம்’ இதழில் எழுதியபோது அசாதரண வியப்பும் அதிர்ச்சியுமாயிருந்தது எனக்கு. சிங்கப்பூரின் கவனித்தக்க கவிஞர்களில் அவர் ஒருவர். தமிழ்முரசுவில் வேறு பணிபுரிகிறார். தமிழ் முரசால் அவர் இப்படிச்சொல்கிறாரா இல்லை அதில் பணிபுரிவதால் இப்படிச்சொல்கிறாரா எனத்தெரியவில்லை.
ஆனால், என்னைப்பொறுத்தவரை சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் தமிழ்முரசு ஆணிவேரைப்போன்றது. தமிழ் மொழியின் வளர்ச்சியும் இலக்கிய இருப்பும் சிங்கப்பூரில், தமிழ்முரசை அச்சாணியாகக் கொண்டே தொடங்கியது. தொடரவேண்டும். தொடரும்.
தமிழ் முரசுவின் புதுவடிவம், மாறுபட்ட தோற்றம் குறித்தான எனது பார்வையை நான் முன்வைக்கவிரும்பவில்லை. 2005ல் திண்ணையில் எழுதிய கட்டுரை முதல், கலைஞருக்கு ஆகாத காலச்சுவடு போல ஆகிவிட்டது எனது நிலைமை. ஆனால் தலையங்கம், வாசகர் கடிதம் என தொடரும் அதன் மாற்றங்களை நான் கவனித்துவருவது எனக்குப்போதுமானதாக இருக்கிறது.
‘ஒலி 96.8 விமலா’வின் வலைப்பக்கத்துக்கு வருபவர்களில் 10% பேர் கூட சிங்கப்பூரின் தமிழ்முரசுவின் வலைப்பக்கத்துக்கு வரமாட்டார்கள். இணையமும் கணினியுமே யுகமாகிவிட்ட இக்காலத்தில் தமிழை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்புகொண்ட தமிழ்முரசு போன்றவை அதன் இணையப் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும்.
சிங்கப்பூரில் தொடரும் இலக்கியவறுமையை தனிமனிதர்களால் அல்லது குழுவால் தொடங்கப்பட்ட சில அச்சுபத்திரிகைகள் (உதா. நாம், செராங்கூன் டைம்ஸ்) களைய முயற்சித்தாலும் அது தொடருவது பல ஆண்டு நடத்துதலில் இருக்கும் சிரமத்தைப் பொறுத்தது.
இந்நிலையில் நண்பர் பாலுமணிமாறன் நாளை (அக்டோபர் 3 முதல்) தொடங்கும் புதிய மின்னிதழ் “தங்கமீன்” வெற்றிபெற பல சாத்தியங்கள் இருப்பது என் கண்கூடு.
காரணம், தமிழ் இணையவெளியில் “அ” போட்ட நா.கோவிந்தசாமி நாட்டில் இப்போதைய தமிழ் வளர்ச்சி இணையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதன் முதல் குறையை இது களையும்.
இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொண்டால் தமிழையும் வளர்க்கமுடியும்.
அச்சு இதழ்களில் இருக்கும் பல சிக்கல்கள் இதில் இல்லை. அதனால் தொடருவதில் சிரமம் இல்லை.
கடைசியாக, பாலுமணிமாறன் திட்டமிட்டு தெளிவாகச் செயல்படுத்தும் ஒரு சிறந்த காரியக்காரர். பாரதிராஜாவின் வருகை முதல் மனுஷ்யபுத்திரன், புத்தக பதிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்புகளைத் தன்னகத்தே கொண்டு துல்லியமாய் செயல்படுபவர். அவரின் முயற்சி ஜெயிக்கும்.
அன்பன்
எம்.கே.குமார்.
1 comment:
தமிழ் வளர்ச்சிக்குச் சிங்கைத் தமிழர்களின் பங்களிப்பு என்றுமே சிறந்து தான் இருந்திருக்கின்றது. சில தமிழர்கள் போட்டி வைத்திருந்தனர், இணையத்தில்.தமிழ் இணையத்தில் பல்லாயிரம் தமிழர்கள் பங்கேற்கின்றனர்.தரமான பதிவுகள் வர போட்டிகள் வைப்பது நல்ல முறை.ஆக்கபூர்வமானத் தமிழ் வளர்ச்சிக்குத் தகுந்தாற் போல போட்டிகள் வைப்பது பயன் தரும். ஆங்கிலத்தில் " சரி பார்த்தல் " (spell check) மாதிரி தமிழ் இலக்கணத் திருத்தம் ,முக்கியமாக ஒற்றுப் பிழை,ந,ன,ண , ல,ள,ழ , ர ,ற பிழைகள் களைய இணைய முறை இன்றைய முக்கியத் தேவை.
Post a Comment