
'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.
'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.
லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.
குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.
சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.
'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.
'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.
'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.
கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.
சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!
(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)
எம்.கே.குமார்











