Tuesday, February 17, 2004

ஓநாயிடம் மண்டியிடும் சிங்கம்.

உ.பி. யிலிருந்து இன்னும் நாலு சீட் கூடுதலாக வந்தால் போதும். இல்லையேல் மஹாரஷ்டிராவிலிருக்கும் அரசியல் குழப்பத்தையும் காங்-தேசிய காங்கிரஸ் பிரச்சினைகளையும் நன்றாகப் பயன்படுத்தி சிவசேனா - பி.ஜே.பி கூட்டணி நாலு சீட் அதிகம் பெற்று விட்டாலும் ஓகேதான். இல்லை பி.ஜே.பி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் கர்நாடகத்தில் ஒரு இரண்டு மூன்று சீட் பெற்றால் போதும். அதுவும் இல்லையா.. இருக்கவே இருக்கிறது பா.ம.க.

ரஜினி ரசிகர்களும் ரஜினியை மாதிரி மறப்போம் மன்னிப்போம் என்று ஆறு தொகுதிகளிலும் மறந்து ஓட்டுப்போட்டார்கள் என்றால் புதுச்சேரியை விட்டுவிடாலும் கூட ஐந்தில் எப்படியும் மூன்று நான்கு ஜெயித்துவிடும். பிறகு, வேறென்ன? அதில் ஒருவரான அன்புமணிக்கு மந்திரி பதவி தருகிறேன் என்றால் டாக்டரய்யாவுக்கு கூலி வேறு கொடுக்க வேண்டுமா என்ன? கரும்புக்கு! பறந்து வருவார்.

இதற்கிடையில் வட மாநிலங்களில் இம்முறை பி.ஜே.பி வழக்கத்தை விட பெரிய அலை கொண்டதாக ஜெயித்து 350 தொகுதிகள் கிடைக்கும் என்பதாயும் பத்திரிகை கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

நிலைமை இப்படியிருக்க, கிடைக்கும் பத்தோ ஆறோ எப்படியாயினும் அதில் இரண்டு மூன்றுதான் பி.ஜே.பி ஜெயிக்கப்போகிறது தமிழ்நாட்டில். இதற்கு ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய உதவித்திட்டங்கள் எதுவும் செய்யாத மக்கள் விரோத ஆட்சி என்று ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டும் அதிமுக வுடன், வாஜ்பாய் ஆட்சியை முன்னால் கவிழ்த்த, அத்வாணியை செலக்டிவ் அம்னீஷியா கொண்டவர் என்று திட்டிய, கூட்டணி தர்மங்களும் நட்புகளும் உணரத்தெரியாத அதிமுக வுடன் அதன் தலைவி ஜெயலலிதாவுடன் மத்திய பி.ஜே.பி (மத்தியில் உண்மையில் வெற்றிகொடி நாட்டி வரும்) கூட்டணிக்காக ஏன் அலைகிறது, அவரிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது என்பது தெரியவில்லை.

நிலைமையை நன்கு பி.ஜே.பி உணருமானால் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுதல் மிக நலம். யாருடைய தயவையும் கோராமல்.

அதிமுக வுடன் கூட்டு வைத்து (அவருக்கு கண்டிஷன் போடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.) அவர் போடும் கண்டிஷன்களுகெல்லாம் கட்டுப்பட்டு மீண்டும் ஒருமுறை அவரிடம் குட்டு வாங்கித்தான் உணருவேன் என்று பி.ஜே.பி அடம் பிடிப்பது அதன் தனித்துவத்துக்கு அழகல்ல. அப்படியே கூட்டணி வைத்து ஜெயித்து 'அரசில் அதிமுக வை சேர்த்தால்தான்' ஏன் 'எனக்கு துணைப்பிரதமர் தந்தால்தான் ஆதரிப்பேன்' என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவை அனைத்தையும் உணர்ந்து, பி.ஜே.பி தேர்தலை எதிகொள்ளுதல் நலம்.

(நண்பரிடமிருந்து)

Monday, February 16, 2004

மதச்சார்பற்ற கூட்டணியா? மானங்கெட்ட கூட்டணியா?

ஆஹா. மறுபடியும் அந்த வார்த்தையைக் காதார கேட்டுவிட்டேன். எங்கே தமிழ்நாட்டில் இந்த வார்த்தை இல்லாமல் ஒரு கூட்டணியோ அரசியல் நிகழ்ச்சிகளோ நிகழ்ந்துவிடுமோ என்று எனக்கு உண்மையிலே கொஞ்சம் கிலியும் வந்துவிட்டது. அப்படியெல்லாம் நடந்தால் அப்புறம் என்னாகும் தாய்த்தமிழ்நாட்டின் தெருக்கோலங்கள்.?

ஐந்து வருடங்கள் தன்னை அதுக்குள்ளே நுழைத்துக்கொண்டு செல்வச்செழிப்பாக்கிவிட்டு (தமிழ்நாட்டையோ இந்தியக்கண்டத்தையோ அல்ல!) கழன்று கொண்டது தி.மு.க. நுழையும் போதும் வெளியேறும்போதும் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழருக்கும் தமிழ் நெஞ்சங்களின் அடுத்த தலைவரான தளபதிக்கும் விளக்கி டியூசனெல்லாம் எடுக்க அவசியமில்லாமல் இப்போதும் சொல்லிவிட்டார்.

செத்துப்போன மாறனுக்கு அளித்த அமெரிக்க பயணமும் இன்னபிற வஸ்துகளும் செய் நன்றி மறவாத கலைஞருக்கு மாறன் தான் வந்துதான் சொல்ல வேண்டும் கனவில்.

'நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக' என்பதெல்லாம் பழைய வாசகம் இல்லை. அடுத்து கொஞ்சம் பொலிவுற்று வருகிறது. 'நேருவின் பேத்தியே வருக..நிலையான ஆட்சி தருக.' என்ற அந்த வாசகம். கலாநிதிமாறனின் தம்பிக்கு தென்சென்னையை(அல்லது மத்தியசென்னையை) ஒதுக்கி இத்தாலிய ராணிக்கு இந்திய மகுடத்தை அள்ளித்தலையில் வைத்துவிட்டு டி ஆர் பாலுவுக்கு ஏதாவது சுற்றுப்புறத்தைக்கொடுத்துவிட்டு தென்(மத்திய)சென்னைக்கு தொழில்துறையைக்கேட்பார் தானைத்தலைவர். அப்படியே சில மாதங்களில் சரத் பவாரின் உதவியாலோ இல்லை மாயாவதியின் திடீர்ப் பேராசையாலோ சோனியா ஆட்சி கவிழ்ந்து நிற்கும்போது நிறங்கள் மீண்டும் மாறும்.

ராஜூவின் மரணத்துக்கும் தி.மு.க வுக்கும் 0.0000001 அளவு கூட சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்வார்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள். அதை ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ புலி போல முழங்கி தனது துண்டை இருக்கிக்கட்டி நாலு பக்கமும் இழுத்து இருமாப்போடு ஆமோதிப்பார். ஆமோதித்துவிட்டு "ஆகவே, ஈழத்தில் நமது பிரபாகர வழிச்சொந்தங்கள் இன்னும் அமைதியாக வாழ இப்போது நமக்கு வேண்டும் நமது ஆட்சி" என்று முழங்குவார். வாசனும் இளங்கோவனும் எதிர் எதிர் திசையில் நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் தலையை ஆட்டுவார்கள்.

ஓடுகிற நாயின்...... சேர்ந்து ஆடுவது போல இப்போதுதான் திடீரென்று புத்தி வந்தது போல பா.ம.க வும், ம.தி.மு.க வும்.

ம.தி.மு.க வின் லெட்சணத்துக்கு அவர்களை வாஜ்பாயைத்தவிர யாரும் இந்த அளவுக்குக் கண்டுகொள்ளமாட்டார்கள். இது அவர்களுக்குத்தெரிய காலம் வரும். நரியின் விளையாட்டு நயம் படத்தான் தெரியும் போல மெதுவாக தன் வாலைத்தூக்கிக் காட்டி ஹெ..ஹெ. எனச்சிரிப்பார் கலைஞர்.

செத்து மண்ணோடு மண்ணாகி விட்ட வைகோவின் ரத்தத்¢லகங்கள் பூரிப்பார்கள் தலைவரின் முடிவைக்கேட்டு. "தி.மு.க.வின் தோழமையை தாங்கள் இழந்துவிடுவோம் எனப்பயமாயிருப்பதால், அதுவும் அ.தி.மு.க பி.ஜே.பியை நெருங்கி வருவதால் நாங்கள் தி.மு.க பக்கம் சாய்கிறோம்" ஆஹா! என்ன உணர்வுப்பூர்வமான வாசகமடா இது! எச்சில் தெறிக்க எல்.கணேசன் பேசும்போது எரிச்சல் தான் மிஞ்சுகிறது.

தோழமை எதற்கய்யா உமக்கு? தாய்க்கட்சியோடு தோழமை வைத்துக்கொள்ள ஏன் தனிக்கட்சி.? தாய்க்குணம் படைத்தவர்களுடன் சேர்ந்து விட வேண்டியதுதானே! மேடையில் சிங்கம் போல முழங்க ஸ்டாலினிக்குத்தெரியுமா? சின்னப்பையன்! 'வா சிங்கமே!' வந்து விட்டார் வைகோ. ரொம்ப நாளாய் வரமாட்டேன் என்று சொன்னவர். கூப்பிடுவது யார்? தனக்குத்தானே எரித்துக்கொண்ட சாந்தனும் உதயனுமா? குலம் காத்த ( வைகோ வின் பிச்சைக்காரக்கதையைச்சொன்ன) கோமான். கலைஞர்.

உங்களோடு சேர்ந்து கொள்ளையடித்தால் எவ்வளவு தருவீர்கள்? பத்து சதவீதம்? உடனே களத்தில் குதித்தார் தன்மானத்துக்குப்பெயர் போன டாக்டரய்யா. வந்த வேகத்தில் அவரும் சொல்வார்... நான் கேட்க ஆசையாயிருந்த வார்த்தையை......"மதச்சார்பற்ற கூட்டணி"

தயவுசெய்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். "மானங்கெட்ட கூட்டணி" இது நன்றாயிருக்கும் உங்களுக்கு.

(நண்பரிடமிருந்து.)

Friday, February 06, 2004

ஒரு அயோக்கியனும் சில நல்லவர்களும். (!?)

மூன்று சாமியார்கள் மௌனவிரதம் இருக்க நினைத்தார்கள். மூவரும் அப்படியே இருந்துகொண்டிருந்தபொழுது ஒரு அழகான பெண் வந்து முகவரியைக்காட்டி வழி கேட்டாள் அவர்களிடம். முதலாமவர் சற்று யோசித்து, தான் மௌனவிரதம் இருப்பதாகவும் அதனால் முகவரியைச்சொல்ல முடியாமைக்கு வருந்துவதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இரண்டாமவர் லேசாகப் புன்னகைத்து, 'பார்த்தாயா நீ அப்படி சொல்லிவிட்டு வாய் திறந்து பேசி விட்டாயே இப்போது மௌனவிரதம் கலைந்து விட்டதே' என்று நக்கலாகச் சொல்லிச்சிரித்தார்.

மூன்றாமவர் மெதுவாகப்புன்னகைத்து, 'அடப்பாவிகளா எல்லோரும் பேசிவிட்டீர்களா? நல்லவேளை. நான் மட்டுமே கொஞ்சமாய்ப்பேசியிருக்கிறேன்' என்றார் அப்பாவியாக.

கமலஹாசனை வன்முறையின் உச்சம் என்கிறார் வரதன் என்பவர். கமல் மிகவும் வக்கிர புத்தி கொண்டவராம். வெட்டவெளியில் உடலுறவு கொள்ளும் காட்சி வக்கிரத்தின் உச்சமாம். சம்பந்தாசம்பந்தமேயில்லாமல் கிருஷ்ணசாமி எதிர்த்தது சரிதான் என்கிறார். இன்னும் திருமாவளவன் ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை என்றும் அவர் கேட்கிறார். (படிக்க: திண்ணை- விருமாண்டி கட்டுரை.)

மதுரை உருப்படாமல் போனதற்கு கமலும் காரணம் என்பதாயும் குற்றஞ்சாட்டுகிறார். மொத்தத்தில் கேணத்தனத்தின் உச்சகட்டமாக இதை நான் கருதுகிறேன். விருமாண்டி படத்திற்குப்பதிலாக வேறு எதையவது பார்த்து விட்டு வந்து பினாத்துகிறாரா இவர்?

அய்யா, புண்ணியவான்களே.....ஒத்துக்கொள்கிறோம். திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் நல்லவர்கள். கமல் கெட்டவர்தான்.

கிருஷ்ணசாமி உண்மையிலே டாக்டருக்குப்படித்தவர்தான் என்றால் அவர் கமலிடம் போய் மன்னிப்புக்கேட்கவேண்டும். எதுவுமே தெரியாமல் படப்பிடிப்பை நிறுத்தி ஒரு கோடி ரூபாய் அவருக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக. இப்போது போய் படத்தைப்பார்த்துவிட்டாவது.

செய்வாரா டாக்டருக்குப்படித்தவர்? இல்லை கோட்டாவில் படித்தவர்தான் என்பதை தனது முட்டாள்த்தனத்தால் இதிலும் நிரூபிப்பாரா?

எம்.கே.குமார்.
நல்ல ஆரம்பம்.

எந்தவித தயக்கமுமில்லாமல் என்னால் சொல்லமுடியும். இளைய எழுத்தாளர்களுக்கு இவர் ஒரு 'முதன்மைவழிகாட்டி' என்று.

இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவரைப்போன்றவர்கள் மிகவும் அவசியம். வளரும் இளைய தலைமுறையினரை எந்தவித மேதாவித்தனங்களும் மேற்பார்வைத்தனங்களும் இன்றி தன்னோடு சகதோழனாய் ஊக்கங்காட்டி அழைத்துச்செல்பவர்களில் இவரது ஈடுபாட்டைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். வாய்யா..என்று தோழமையோடு தோளில் கை போட்டுச்செல்லும் நேரத்திலும், 'எழுதுய்யா..ஒரு புதுப்புரட்சியை சக்தியை நாமெல்லாம் சேர்ந்து கொண்டுவரணும்'ங்கிற அவரது உணர்வு என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையில் மாலனுக்கு அடுத்தபடியாக இவரது நடவடிக்கைகள் என்னைப்போன்றவர்களுக்கு
மிகவும் சந்தோசத்தையும் வழிக்காட்டுதல்களையும் அளித்துக்கொண்டிருக்கின்றன என்றால் அதில் துளியும் மிகையில்லை.

இளைய தலைமுறைக்கு இவரது தேர்ந்த எழுத்தும் சரளமான நடையும் எப்போதும் கவனிக்கக்கூடியன. பாகிஸ்தான் ஒரு புதிரின் சரிதம் படித்து வரலாற்றின் முனைகளில் இவரது விஷய ஞானத்தை அறிந்து கொண்ட நான், '154 கிலோபைட்' புத்தகத்தைப்படித்துவிட்டு இவரது நகைச்சுவை உணர்ச்சி குறித்து மிகவும் சிலாக்கியமடைந்தேன்.

இப்போது பாரதிய பாஷா பரிஷத் கிடைத்திருக்கிறது. ஜெ.கே, சிவசங்கரி, பிரபஞ்சன், ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அடுத்து தமிழில் இவருக்காம்.

தயங்காமல் சொல்வேன், இது ஒரு ஆரம்பம்தான்.

வாழ்க.. பாரா அவர்களின் எழுத்துப்பணி.

எம்.கே.குமார்.

Search This Blog