Tuesday, December 23, 2003

விருமாண்டி உருவான கதை.

அண்மையில் சன் டிவியில் இது பற்றி பேசினார் கமல்.

இப்படியெல்லாம் பரபரப்பாய்ப் பேசி படம் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டு பண்ணி, கடைசியில் அதிக எதிர்பார்ப்பிலும் படம் ஊத்திக்கொள்வதை நான் விரும்பவில்லை. ஒருவேளை வியாபாரத்திற்கு இது ஒரு காரணி என்றால் இட்ஸ் ஓகே.

ஆனால் ரோகிணி ( நிருபராய் வருகிறாராம்.) சம்பந்தப்பட்ட காட்சிகள், மரண தண்டனையையே கேள்வி கேட்கிறார் (என்று எங்காவது படிக்கும்போது) என்று இதையெல்லாம் பார்க்கும்போது அய்யோ! தமிழ் கூறும் நல்லுலகம் அந்த அளவிற்கா அவரை அரவணைத்துக்கொள்ளும் என்று புலம்பத்தொடங்கிவிட்டேன். எல்லோரும் சொன்னார்கள். "கடவுளை வணங்குகிறோம். இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று". எல்லோருக்கும் வந்த பயம்தான் எனக்கும். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

இன்னொரு பயமும் வந்துவிட்டது. கமல் டைரக்ஷன் என்றாலே மொகஞ்சதாரோவில் எலும்பைத் தோண்டிப்பார்க்கும் காட்சியை பத்து நிமிடங்கள் (அதற்கும் கூடவா?) வைப்பாரே. அப்படி இப்படி எதையாவது வைத்து 100% பெர்·பெக்ஷனிஸ்டாய் சொதப்பி விடப்போகிறார் என்று..

'சத்யா' படம் அண்மையில் பார்த்தேன். கிரேட். அந்தப்படம் இப்போ வந்தால் இன்னும் கொஞ்சம் ஓடும் என நினைக்கிறேன். (குணா, மைக்கேல் மதன..., மஹாநதி என எல்லாவற்றிற்கும் இப்போது அப்படித்தான் தோணுகிறது என்பது வேறு விஷயம்.!)

படம் பார்த்து முடிக்கும்போது, 'கிரேட். சான்சே இல்லை. கண்டிப்பா அவார்டு கிடைக்கும்' என்று எப்போதும் சொல்வதை மட்டும் இந்த தடவையும் நான் சொல்லக்கூடாது என்றும் கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்.
ஒரு பொன் மாலைப்பொழுது.

'ஆத்மரச்மி' என்றொரு பெயரை விகடனிலும் கணையாழியிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். '88 வாக்கில் கதை எழுத ஆரம்பித்த இவர் ஆனந்த விகடன், கணையாழி, தினமணி கதிர் போன்ற பத்திரிகைகளில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். 1991 ல் இவரது குறுநாவல் ஒன்று (வலி உணரும் தந்திகள்.) தி. ஜா நினைவு குறுநாவல் போட்டியில் கணையாழியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அருமையான ஒரு குறுநாவலாக அது வடிவெடுத்திருக்கிறது. (இந்தக்கதை வெளியான அந்த இதழில்தான் பா. ரா தனது இருபத்தைந்தாவது வயதில் முதன் முதலாய் (அவளுக்கு ஒரு அம்மா) எழுதியிருக்கிறார். அமுதசுரபி விக்கிரமன் வளர்க்கும் கன்று என்று பாராவுக்கு முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.)

அதற்குப்பிறகு ஆத்மரச்மி நிறைய சிறுகதைத்தொகுப்புகளுக்கும் நாவல்களுக்கும் அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். 'கிரீஷ் கர்னாட்'டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'நாக மண்டலத்'திற்கும் 'நிழல்களின் உரையாடல்' என்ற 'அமர்ந்த்தி'யின் புத்தகத்திற்கும் இவரே அட்டைப்பட ஓவியர். இதுதவிர காலச்சுவடு, தமிழ் அரசி போன்றவற்றிலும் கதைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

சிறிது காலம் கதையெழுதுவதை ஒத்தி போட்ட இவர் மிக அருமையான ஓவியராகத்தன்னை அதற்குள் ப்¢ரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார். காலச்சுவடு ஓவியங்கள் அதை நமக்குச்சொல்கின்றன. அதைப்போல கிட்டத்தட்ட 40 கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைகளில் அவரது அக்னிப்பிரவேசம் கட்டவிழ்த்த ஆறாக அவதாரம் எடுத்திருக்கிறது. சில கவிதைகள் மிகவும் ஆழம். கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷயபுத்திரன், பிரமிள் வகையில் யோசிக்கவைக்கின்றன.

அந்த 'ஆத்மரச்மி'யின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் ரமேஷ். சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். வார்த்தைகளை எண்ணிக்கையில் பேசுகிறார். மிகவும் பண்பட்டதாய் வருகிறது பேச்சு. இலக்கிய உலகச் சண்டைகள் பற்றிக்கேட்டால் மென்மையாக சிரிக்கிறார். 'ஜெயமோகனிடம் கொஞ்சமாய் பழகியிருந்தாலும் அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட்டுப் பேசமுடியாது' என்கிறார். விவாதங்கள் மாட்டை விட்டு விலகி தென்னைமரத்துக்குச் செல்வதைச் சொல்லி, வருந்தி நமக்கும் ஞாபகப்படுத்துகிறார்.

வரவேற்பறையில் இருக்கும் 'enchanting' பெண்ணின் ஓவியம் அவரது திறமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. அதேபோல சிவனின் ஓவியமும். மகாத்மாவின் பொக்கைச்சிரிப்பில் இருக்கும் பிரமிப்பு ஏனோ இப்போது இந்தமாதிரி ஓவியங்களிலும் எனக்கு வருகிறது.
புத்தக அலமாரி ஒரு நூலகத்தையே எனக்குக் காட்டுகிறது. நிறைய ஆங்கிலப்புத்தகங்கள்.

'An autobiogrpy of an yogi' புத்தகத்தை விவரித்துப்பேசுகிறார். சமையலறைக்குள் புகுந்து அவரே சமைக்கிறார். 'தனது மனைவியின் சமையலுக்கு முன்னால் இதெல்லாம் தூசு' என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது அவரது சமையல். மனைவி சமையல் மட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் மிளிர்வதை பெருமையோடு சொல்கிறார்.

அண்மையில் திண்ணையிலும் திசைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற சிங்கப்பூர் சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசைப்பெற்றார். கவிதைக்கு மூன்றாம் பரிசு. இரு ஓவியக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

தற்போது இணையத்தளங்களில் குளோபல் தமிழ், தமிழா. காம் உட்பட பலவற்றிற்கு முதன்மையான தனது பங்குகளை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். கலாப்ரியா, சிவகாமி போன்றவர்களோடு உரையாடிய அனுபவத்தைச் சிலாகிக்கிறார். சுஜாதாவின் கடிதத்தை ரசித்துச்சொல்கிறார். சாரு நிவேதிதாவுடன் பழகிய பழைய ஞாபகங்களைக்கிளறுகிறார்.

"சோம்பேறித்தனமே தவிர்க்கமுடியாத எனது முதல் எதிரி" என்கிறார் சிரித்துக்கொண்டு. எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையைக்காட்டுகிறார். இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் விகடனில் பார்க்கலாமா என்றால், 'சொல்லமுடியாது முடிக்கவே ஒரு சில மாதங்களாகும் ' எனச்சிரிக்கிறார்.

இன்னொரு அருமையான கவிதையைப்பற்றிச்சொல்ல மறந்துவிட்டேன். அது, அழகான ஒரு ஓவியத்தை (அப்பாவும் புலி. அம்மாவும் புலி..குட்டி மட்டும்?) வரைந்து 'இதுதான் அப்பா- அம்மா' என்னும் சினேகா. அப்பாவின் பங்கையும் அப்படியே எடுத்துக்கொண்டு நிமிடத்திற்கு நூறு வார்த்தை பேசுகிறாள். ஓவியத்தைப்பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் அந்த கேள்வியைக்கேட்கிறாள். தனது கையிலிருக்கும் அந்த பொம்மையை வைத்துக்கொண்டு, 'இதற்கு என்ன பெயரை வைக்கலாம்?'

ரேகா, உமா, நூர்ஜஹான் என நானும் என்னென்னவோ சொல்ல, ரொம்பக்கூலாக சொல்கிறாள், சிண்ட்ரெல்லான்னு வைக்கலாம்.

அவர் எழுதிய கவிதைகளில் அருமையானது இதுதான் என நினைத்துக்கொண்டு வயிறார சாப்பிட்டும் விட்டு வந்தேன்.

எம்.கே.குமார்.

Search This Blog