Monday, August 22, 2005

ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!

ஒலி, ஒளிபரப்பு, அச்சு மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் சன் டிவி குழுமத்தின் அதிகாரப்போக்கை இந்திய அச்சுப்பதிப்பு உலகில் முதன் முறையாக கொஞ்சம் காட்டமாகவே கண்டித்துள்ளது காலச்சுவடு. இந்தமாத காலச்சுவடின் தலையங்கப் (பக்கத்திற்கு பக்கத்துப்) பக்கத்தில் 'சூரியன் விழுங்கும் நாடு' என்று தலைப்பிட்டு விளக்கமாகவும் காரமாகவும் எழுதியுள்ளார் காலச்சுவடு கண்ணன்.

உண்மையில் அக்கட்டுரையின் தன்மை 100 % ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே! முரசொலி மாறனின் இந்திய நற்பணிகளில் ஆரம்பித்து அவருக்காக அல்லது அவருடைய லாபத்திற்காக, தி.மு.கவின் கொள்கைகளை 'சங் பரிவாரோடு' பறக்கவிட்டு, 'கமாலாலயம்' பக்கத்தில் படுத்து கைகோர்த்துக்கொண்டது வரை அரசியல் சார்ந்தும், ஒரு ஒளிபரப்பு ஊடகமாக அப்போது அப்பாவின் தயவால் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது ஒளிபரப்பு ஊடகங்களாக விரவிக்கிடப்பதும் ஒலிபரப்புத்துறையில் விரிந்து போய்க்கொண்டிருப்பதும் அத்துடன் விட்டுவைக்காது 'பராசக்தி' கொண்ட 'குங்கும'த்தைக் கவர்ந்து தனது எல்லாக்கரங்கள் கொண்டும் அதை விற்று வருவது வரையென நீளும் அதன் போக்கு எல்லோரையுமே உள்ளுக்குள் அசைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்த முறை 'வணக்கம் தமிழகத்திற்கு' தங்களை அழைத்தாலும் அழைப்பார்கள் எதற்கு இப்போது ஏதாவதுசொல்லி அதில் கொள்ளிவைத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை 'விளம்பரமோ தொடர்நாடகமோ படவிமர்சனமோ' போட்டு நாலு காசு பார்க்கலாம் அதையேன் கெடுத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை உலகத்தமிழர்களிடையே உறவை இணைக்கும் பாலமாக இருக்கிற ஒன்றில்(!?) இடறுகள் செய்து தமிழ்த்தாயின் குரல்வளையைப்பிடித்து ஏன் நெறிக்கவேண்டும் என்றோ அமைதியாய் இருந்துவிட்டார்கள் தமிழர்களில் பலர். இன்னும் சிலர், 'சன்' யானைக்காலில் மிதிபட்டு 'வைகோ' போன்ற 'புலி'களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள், எங்களைப்போன்ற எலிகளெல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு? என்று அமைதியாய் இருந்துவிட, இந்தப் பூனைக்கு மணிகட்ட ஏன் இவ்வளவு தயக்கம் என்று தயங்காமல் முன் வந்து மணியையும் கட்டிவிட்டிருக்கிறது 'எஸ். ஆர். எஸ்' (கண்ணன்) என்ற எலி.

உண்மைதான், அண்மையில் படித்தேன். பினாமி மற்றும் போலிப்பெயரில் கடன் கொடுத்து ஊழல் செய்துவிட்ட கூட்டுறவு சங்க அலுவவலர்களை காவல்துறை கைது செய்ய, அதை, 'விவசாயிகள் கைது' என்று சன் டிவி அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாம். இதைப்பற்றி ஜு.வி யிலோ துக்ளக்கிலோ படித்ததாக ஞாபகம். இதுமட்டுமா? ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை, இன்று இரவு சன் செய்தியைப்பாருங்கள்! எத்தனை போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருப்புக்கொடிகாட்டுதல், பேருந்தை வழிமறித்தல் மற்றும் அரசு அலுவலர்களை 'கேரோ' செய்த காட்சி (என்று நால்வர் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள்.) என்று தமிழ்நாட்டில் ஏதாவது 'முக்கு முடுக்கில்' நடக்கும் அரசுக்கெதிரான மாபெரும் (!?) போராட்டங்களைக் காட்டுவார்கள், எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்! எலக்ஷன் நெருங்கும்போது இது இரண்டு, நான்கு அல்லது பதினாறு மடங்காகளாம்!

அடுத்து தினகரன் வந்துவிட்டது. இனி நாளுக்கு 24*60/10 தடவை, வாங்கிவிட்டீர்களா தினகரன்? மும்தாஜ் கர்ப்பமா, திரிஷா தமிழ்ப்பெயரில்லையா? சிவகாசி ஜெயலட்சுமியின் உண்மைக்கதையை அவரே எழுதுகிறார்! பக்கத்திற்குப்பக்கம் இலவச இணைப்பு.! என்று விளம்பரங்கள் வரலாம். (இனாமாய் தரப்படும் பொருட்களின்) விற்பனையில் தினகரன் டாப்புக்கு வரலாம். தினகரன் வசந்தத்தில் வரும் கேள்விக்கு பதில் சொல்லி இமயமலைக்கு ரஜினியுடன் சென்றுவிட்டு வரலாம்! இன்னும் என்னென்ன இருக்கிறதோ?

குங்குமத்தை என் வாழ்க்கையில் நான் காசுகொடுத்து வாங்கியதே கிடையாது, அப்படிப்பட்ட என்னையே 'ரஜினியின் அடுத்தபடம் ஆதிசேஷா, கௌதமி பற்றி கமல் பதில்!' என்ற இரண்டு வாக்கியங்களைச்சொல்லி வாங்க வைத்துவிட்டார்கள். (கடைசியில் இரண்டும் ஒருவரிச்செய்திகள் உள்ளே! இந்தப்பாவம் அவர்களைச் சும்மா விடாது!)

அரசியல் துறையில், தி.மு.கவின் எதிர்காலம் இருக்கட்டும். தளபதி ஸ்டாலினின் எதிர்காலம் முழுவதும் சன் டி வின் செய்திகளுக்குப்பின்னே தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையிலும், குறைந்தது இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு அதாவது தயாநிதி மாறன் வாய் குழறி நடை பிறளும் வரை டெல்லி அதிகாரத்தில் எப்பாடு பட்டாவது (எவர் கொள்கையை பட்டத்தில் விட்டு அல்லது ஏதாவது மாலையை எவர் படத்தில் மாட்டிவிட்டாவது) இருப்பார் என்ற நிலையிலும் சன் டி வி குழுமத்தின் அதிகாரம் இப்போது முடிவுக்கு வருவது அல்லது நேர்கோட்டுக்கு வருவது அசாத்தியம் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்.!

இந்நிலையில் அச்சு ஊடகமும் முழுவதும் அவர்களால் வளைக்கப்பட்டுவிட்ட (இப்போது கால்கட்டைவிரல் மாட்டிவிட்டது!) சூழ்நிலை வருமாயின் அது தமிழக அரசியலுக்கு மட்டுமின்றி இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட ஆபத்தாய் இருக்கலாம் என்பதும் அப்போது இருட்டை மட்டுமே கக்கும் சூரியனாய் கூட அது மாறிவிடலாம் என்பதும் காலச்சுவடு மட்டுமல்ல நாம் எல்லோரும் கூட அறிந்துகொள்ள உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

எம்.கே.குமார்

Thursday, August 18, 2005

கீரிப்பட்டி & பாப்பாபட்டி - தீர்வுதான் என்ன?

சென்ற வாரத்தில் ஒருநாள், விஜய் டிவியின் "குற்றம்- நடந்தது என்ன?" நிகழ்ச்சியில், மதுரை-மேலூர் பகுதியைச்சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிக் காண்பித்தார்கள். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளையும் அவர்களது வெறிச்செயல்களையும் மக்களுக்குக் காட்டி, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களையும் அதற்காகப் போராடுபவர்களையும் மகிழச்செய்வார்கள், மக்களுக்கு உண்மையைப் புரியவைப்பார்கள் என்று நிகழ்ச்சியைப்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் 'நடந்தது என்ன?'

ஆதிக்க சாதியினரின் அட்டகாசம், கொலைவெறிகள், மிரட்டல் இப்படியெல்லாம் அறியத்தரப்பட்டிருந்த அப்பிரச்சனையின் தன்மையை வெகு அழகாக அலசினார்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தனித்தொகுதிகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அப்போதிருந்த மக்களின் சராசரி விகிதம் அவர்கள் சார்ந்திருந்த இனங்கள் இவற்றையெல்லாம் விலாவாரியாக விளக்கியவர்கள், இப்போதிருக்கும் இம்மூன்று ஊராட்சிகளின் நிலையையும் சொன்னார்கள்.

அதன்படி, கீரிப்பட்டியில் இருக்கும் மொத்த ஓட்டுக்களில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் என்பதையும் மீதமுள்ள ஓட்டுகள் மற்றசாதிகளைச் சார்ந்தவர்கள் என்பதையும் கூறினார்கள் அவர்கள். இரு விகிதத்தாரிடேயும் கலந்து பேசியபோது, தாழ்த்தப்பட்ட மக்களே இவற்றை ஒப்புக்கொண்டார்கள். மேலும் 'இவற்றாலெல்லாம் எங்களுக்கோ எங்களது பிள்ளை குட்டிகளுக்கோ கிடைப்பது, கிடைக்கப்போவது எதுவுமில்லை' என்பதையும் இப்போதுள்ள இப்பிரச்சனைகளால் அவர்களது தற்போதைய வாழ்வும் கருகிக்கொண்டிருக்கிறது என்பதையும் வேதனையாக முன்வைத்தார்கள். ஆக அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளுக்குப்பயப்படுவது என்பதைவிட தற்போதுள்ள உண்மைச்சூழலை உள்வாங்கிக்கொள்வது என்பதில் அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என்று சொல்வதே சரியாகப்படும் போலிருந்தது.

அடுத்த ஊரான பாப்பாபட்டிக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமையையும் தெளிவாக விளக்கினார்கள் இவர்கள். அனைத்து இன மக்களிடமும் பேசிப்பார்த்ததில் இவ்வூரிலும் அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, மொத்த கிராம மக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான். தாழ்த்தப்பட்ட இன முன்னால் தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் உயர்சாதியின இளைஞர்கள் ஆகியோரிடமும் பேசிப்பார்த்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாததற்கு 'சாமி குத்தம்' ஏற்படுவதும் ஒரு காரணம் என்றும் சொன்னார்கள். தேர்தலில் நின்ற பலருக்கு அவ்வாறு 'தெய்வ குத்தம்' ஏற்பட்டு அவர்களின் 'ஆடுமாடுகள்' இறந்ததையும் முன்னுதாரணமாய் சில இளைஞர்கள் சொன்னார்கள். இந்த 'குத்தம் - கித்தம்' கதையெல்லாம் இருக்கட்டும்; உண்மை நிலவரம் அங்கு தாழ்த்தப்பட்ட இனத்தினர் குறுகிய அளவில் இருப்பதே!

'ஆதிக்க சாதியினத்தினர் இந்த அளவுக்கு வெறியோடு, 'இதில்' இயங்கத்தான் வேண்டுமா?' என்ற கேள்வி எழும்போது, 'நிலைமை தலைகீழாய் இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்கள் இங்கு போட்டியிடத்தான் வேண்டுமா?' என்ற கேள்வியும் அவர்களது பேச்சின் உள்ளாடல்களிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

"எலக்ஷனும் வேண்டாம்; ஒரு எளவும் வேண்டாம். பிழைக்கக்கூட வழியில்லை; இருக்கும் பிள்ளை குட்டிகளோடு இருப்பதை வைத்து, எப்போதும்போல சந்தோசமாக வாழவிரும்புகிறோம் எங்களை வாழவிடுங்கள்!" என்பதாக இருந்தது போராடியவர்களின் எண்ணங்கள். "இருக்கும் நிலைமையைச் சரிவரப்புரிந்துகொண்டு பிறகு புத்திசொல்ல வாருங்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும்!" என்பதாயிருந்தது தனித்தொகுதியை எதிர்ப்பவர்களின் குரல்கள்.

இக்கிராம மக்களுடன் நில்லாது, சில பல அரசியல் தலைவர்களையும் இந்நிகழ்ச்சியினூடே பேட்டி கண்டார்கள் விஜய் டிவியினர். பேசியவர்கள் எல்லோரும், ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் 'ஜனநாயகத்தை வாழவிடுங்கள்; நியாயத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுங்கள்' என்பதைப்போன்ற 'யாருக்கும் தெரியாத கோரிக்கைகளையும் உலகமறியாத நியாயத்தையும்' எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவை பின்வருமாறு சொன்னது நிகழ்ச்சியைப் படைத்த குழு.

"சில பத்தாண்டுகளுக்கு முன், தமிழகத்திலிருந்த நிலைமையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட உள்ளாட்சி, ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் இன்றுவரை திருத்தப்படாமலே இருந்துவருகின்றன. அதனால், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சில தனித்தொகுதிகளின் சூழல் தற்போது முழுவதுமாக மாறிவிட்டிருக்கிற பின்னும், இன்னும் அது அப்படியே கடைபிடிக்கப்பட்டுவருவதால் இப்பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன. இச்சட்டங்களையும் வரையறைகளையும் மீண்டும் திருத்தி இன்றுள்ள அடிப்படைகளின் படி ஊராட்சி சட்டங்கள் மற்றும் வரையறைகள் கொண்டுவருவதால் இப்பிரச்சனைகளை எளிமையாக தீர்த்துவைக்கமுடியும்!"
இப்படியாய் அமைந்தது அந்த நிகழ்ச்சியின் முடிவு.

ஆக இன்றுவரை அதை தனித்தொகுதியாய் வைத்திருப்பது யாருடைய தவறு? சமாதானம் பேசச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு எது எளிது என்பது தெரியாமலா நடந்துகொள்கின்றனர்? அதையெல்லாம் விடுங்கள், சில ஆதிக்க சாதியினருக்கும் தலித்திய போராளிகளுக்கும் இனிமேலாவது அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவந்தால் மெத்த சந்தோசம்!

எம்.கே.குமார்

Tuesday, August 16, 2005

பொன்னியின் செல்வனும் தேவி தியேட்டரும்!

கடந்த 12 ஆம் தேதி மாலை 5.30 மணி. சென்னை தேவி தியேட்டர் வாசலில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறார் அவர். கையில் செல்பேசி காதுக்கு சேதி சொல்லிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ரூபாய் டிக்கெட் இரண்டு எடுத்துவிட்டு வந்து 6.45 மணிக்காட்சிக்காய் காத்திருக்கும் போது அவரைக் காண நேருகிறது. எனது இரண்டாம் டிக்கெட்டுக்குரியவர், 'அவரை இப்படி பார்த்துக்கொண்டே இருப்பதால் என்ன பயன், ஒரு வார்த்தை பேசிவிடலாமே', என அவரருகில் நெருங்கி பேச ஆரம்பிக்கிறார்.

ஒரு சில தலையசைப்புகளுக்குப்பின் புன்முறுவலுக்குப்பின் அவர், TN 10 AF 100 (ஏ, எஃப் தவறாயிருக்கலாம்) என்ற எண்ணுடைய காரில் ஏறி பறந்துவிடுகிறார். நாங்கள் தியேட்டரை நோக்கித் திரும்புகிறோம்.

அவர், சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னம்! பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர். நடிகர் ரவிகிருஷ்ணாவின் தந்தை! 'பொன்னியின் செல்வன்' படம் அன்று அத்தியேட்டரில் ரிலீஸ்!

சரி, இனி பொன்னியின் செல்வனைப் பார்ப்போம்.

முகத்தில் பாதி (வெந்நீர் பட்டதால்) விகாரமுடைய ஒரு இளைஞன், சமுதாயத்தில் நிறைய வேதனைகளைச் சந்திக்க நேருகிறது. விளைவாக சுய தாழ்மையுணர்ச்சிக்குள் ஆட்பட்டுக்கொள்கிறான் அவன். அதிலிருந்து மீள, நிறைய சம்பாதித்து முகத்தைச் சரி செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்து இராப்பகலாய் உழைக்க ஆரம்பிக்கிறான். சொந்த பணப்பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் அவனை வேறு திசைக்குள் துரத்த, இறுதியில் எதை அடைகிறான் அவன் என்பதுதான் படம் சொல்லும் கதை!

படத்தின் கதையை இயக்குநர், தயாரிப்பாளரிடம் சொன்னபோது ஏகத்துக்கும் கண்ணீர் விட்டு கதையைப்பற்றிக் கதறியழுது (சான்ஸை வாங்கி) விட்டிருப்பார் போலும்! படம் முழுக்க சோகத்தையும் செண்டிமெண்டையும் வாரியிறைக்க முயன்றிருக்கிறார்கள். ஊனமுற்ற ஒருவனைக் கதாநாயகனாகக் கொண்டு அல்லது பாவப்பட வைக்கும் ஒருவனைப்பற்றிய கதையைக் கொண்டு படமொன்றை எடுத்தால், அப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு இப்படம் பெரிய அடியாய்க் கொடுக்கும்.

அடுத்து என்ன காட்சி வரும் என்பதை எவரும் சொல்லிவிடலாம். அவ்வளவு அபத்தம் நிறைய இடங்களில். 'அழகிய தீயே' ராதாமோகனுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.

ஹீரோவாய் வரும் ரவிகிருஷ்ணா, தனக்கு பாவப்பட்ட கேரக்டர்கள் நன்றாய் ஒத்துவருமென்று எவரோ சொல்லக்கேட்டு (கெட்டுப்)போயிருக்கிறார். டக்கென்று ஏதாவது நாலு படங்களில் ஆக்ஷன் செய்து நமது எண்ணத்தை இவர் மாற்றலாம். ஏதோ ஒன்று குறைகிறது இவரிடம். குரலா? என்ன எளவோ தெரியவில்லை!

இசை வித்யாசாகராம். முதல்முறையாய் கேட்டேன். ஒன்றும் நிற்கவும் இல்லை; நிலைக்கவும் இல்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

படத்தின் கதாநாயகியாய் வரும் கோபிகா, வருகிறார்; சிரிக்கிறார்; சீ என்கிறார்; ஜோக்கடிக்கிறார்; அழுகிறார் அப்புறம் கதாநாயகனுடன் சேர்ந்து நடக்கிறார். இவரது குடும்பம் எங்கிருக்கிறது, என்ன செய்கிறார்கள், இவர் அவரைக் காதலிப்பதை குடும்பத்தார் கண்டுகொள்ளவேயில்லையா இப்படியெல்லாம் கேள்வி கேட்பது ராதாமோகனுக்கு பிடிக்காது போலிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில், கோபிகாவின் பெயரைச்சொல்லி 'அவளா? உள்ளே இருக்கா போங்க' என்று கோபிகாவின் அப்பா டயலாக் பேசுகிறார். இவர்தான் அவருடைய அப்பாவா என்பதும் எனக்கு சரியாகத்தெரியவில்லை. மன்னித்துக்கொள்ளவும்.

ரேவதி பாவம். நண்பர்களாக வருபவர்கள், காமெடிக்காட்சிக்கு அல்லது ஜோக்குக்காகவே வருகிறார்கள்; போகிறார்கள். பிரகாஷ்ராஜ் மேக்கப் இல்லாமல் வந்து தத்துவம் பேசிவிட்டுப்போகிறார். புது ஹீரோயின் 'அளவான' கட்டழகி. இன்னும் சில மாதங்களில் ஒரு பாடலுக்கும் அப்புறம் வடிவேலுக்கும் ஜோடியாகலாம்.

இத்தனை களேபரத்துக்கிடையிலும் கொடுத்த பணத்திற்கு மோசம் வைக்காமல், போரடிக்கவும் விடாமல் ஒற்றை ஆளாய் படத்தைத் தனது தலையில் சுமந்து செல்வது வசனகர்த்தா (திரு.விஜி) மட்டுமே! (அழகிய தீயிலும் இவராய்த்தான் இருக்கவேண்டும். அதேபோன்ற ஜோக்குகள்.) தத்துவம் காமெடி இரண்டுக்கும் ஈடுகொடுத்து ரசிகர்களுக்கும் கொஞ்சம் தீனி போடுவது இவர் மட்டுமே. படம் கொஞ்சம் ஓடினால் அது சிரிக்க வைக்கும் வசனங்களுக்காக மட்டுமே இருக்கும்.

மிகப்பெரிய விஷயமான, படத்தின் தலைப்பை விட்டுவிட்டோமே! படத்தின் ஹீரோ ரவிகிருஷ்ணா ரேவதியின் பையன், அதாவது 'பொன்னியம்மா'வின் பையன். அதனால் தான் பொன்னியின் செல்வன். அடப்பாவிகளா! எவ்வளவு அருமையான காவியம் கொண்ட தலைப்பு. கெடுத்துவிட்டார்கள்! இன்றிரவு வந்தியத்தேவன் வந்து அவர்கள் வயிற்றில் குத்தட்டும்!

ஏ எம் ரத்னம் சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

எம்.கே.குமார்.

புதிய புகைப்படம்!

அண்மையில் எடுத்த புகைப்படம் இது. எந்த ஊர் அணைக்கட்டு இது என்று சொல்பவர்களுக்கு ஆயிரம் செம்பொன் காசுகள். பொன்னியின் செல்வன் ரவி கிருஷ்ணா தருவார்.

Search This Blog