Thursday, February 17, 2005

'ஜி' சொல்லும் சேதி!

தமிழ் சினிமா வரலாற்றில் நல்ல டைரக்டர்கள் கூட ஏதோ நடுராத்திரியில் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர்களைப்போல அதீதமாய் சில அரசியல் படங்கள் எடுப்பதுண்டு!

கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், விக்கிரமன் இப்படி நிறைய பெரிய ஆட்கள் கூட எதிர்பார்த்த அளவு அதில் வெற்றியடையவில்லை. இந்த வரிசையில் இப்போது ஆனந்தம் லிங்குசாமியும் சேர்ந்திருக்கிறார்.

கீரோ, அரசியலில் நாயகனாய் நின்று ஜெயித்து கோட்டைக்குப்போவதாய் காட்டி அதை ஓடவைப்பதற்கு பலபேர் கரணம் போட்டும் பார்த்துவிட்டாலும் அதில் மிகச்சிலர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் படம் ஆந்திராவில் ஓடுவதைப்போல இங்கு ஓடாதா? ஓடும்!

தகுந்த அளவு மசாலா சரியான கலவையில் இருந்தால் சாதிக்கலாம் என்று தலைவர் எம்ஜிஆர் எப்போதே செய்து காட்டி விட்டார். அரசியல் படம் எடுத்து ஓடுகிறது என்றால் அதில் இருக்கவேன்டிய காரம், மணம் அனைத்தும் சரியாய் இருக்கவேன்டும்.

அமைதிப்படையில் கூட கதாநாயகன் முதல்வராக ஆகமுடிவதில்லை.

முதல்வராய் ஆகவேண்டும் என்றால் அவருக்கு உப்புக்கருவாட்டையும் ஊறவெச்ச சோத்தையும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதை ஷங்கர் கண்டு கொண்டிருந்தார். அதனால் அவரால் அதில் வெற்றி பெறமுடிந்தது.

இந்நிலையில் இதெல்லாம் தெரிந்தும் எந்த நம்பிக்கையில் இப்படியொரு படத்தை லிங்குசாமி எடுத்தார் என்பது புரியவில்லை.

மைனஸ்: கதை
திரைக்கதை
டைரக்ஷ்ன்
திரிஷா
அஜித்
சுத்தமாக காமெடியே இல்லை!


பிளஸ்: கொஞ்சம் டயலாக்ஸ்
தாவணி போட்ட பெண்கள்! :-)
ஒரு பாட்டு
விஜயகுமார் (கெட்டப்)
எவ்வளவு தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை.


எம்.கே.குமார்

Saturday, February 12, 2005

சாருவுடன் ஒரு பொன் மாலை!

சாருவும் நானும்!


_______________
அருள்குமரன், எம்.கே.கே, சாரு மற்றும் ஈழநாதன்

__________________
"புதுமைப்பித்தன் ஒன்றும் இவர்களெல்லாம் புகழ்வது போல பெரிய ஆள் கிடையாது. ஜாதீயத்தையும் அது சார்ந்த கட்டுப்பாடுகளையும் விட்டு வெளிவந்து அவரால் எதுவும் படைக்கமுடியவில்லை" --சாரு.

_____________________
"சுஜாதாவின் வெகுஜன எழுத்து எனக்குப்பிடிக்கும், ஆனால் அதை வைத்து அவர் எதையும் சாதிக்கவில்லை. ஆரம்பத்திலேயே அவர் நின்றுகொண்டிருந்தார். அதைவிட்டு அவர் நகராததில் எனக்கு வருத்தம். உண்மையில் சொன்னால், கமல், வெகுஜன ஊடகமான சினிமாவில் செய்துபார்த்த நவீனத்துவம் எதையும் இவர்களில் யாரும் எழுத்தில் செய்யவில்லை!"--சாரு.

எம்.கே.குமார்.

சிங்கை நண்பர்கள் சந்திப்பு.

சிங்கை நண்பர்கள் சந்திப்பு.

எத்தகைய நீண்ட பயணமும் ஒரு முதல் அடியிலிருந்துதான் துவங்கும்!

முதல் அடிக்கு வித்திட்ட நண்பர்கள் மூர்த்தி, அன்பு, திறம்பட நடத்திக்காட்டிய (இரவு உணவையும் இனிமையாக சரவணபவனில் வழங்கிய) திரு மற்றும் திருமதி சித்ரா ரமேஷ், உடல்நிலைக்குறைவையும் பொருட்படுத்தாது (கையில் குளோப் ஜாமூனோடு) கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயந்தி சங்கரி, திடீர் வரவாய் யாரும் எதிர்பாரா வண்ணம் வந்து கலந்து அசத்திய திரு. நா. கண்ணன், அவரை அழைத்து வந்த நண்பர் ஈழநாதன், எதிர்பாராவிதமாய் கலந்துகொண்ட திரு. மாகோ, திரு. அருள்குமரன், திரு.பாலு மணிமாறன், திரு.விஜய், திரு. செந்தில்நாதன், திரு. தாமரைக்கண்ணன் மற்றும் இடவசதி மற்றும் சூடாக டீயும் பரிமாறி எல்லா விதத்திலும் உதவிய திரு. திருமதி ராம்ஜி ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நண்பர்கள் இச்சந்திப்பு பற்றி விரிவாக வலைப்பூக்களில் பதிந்துள்ளதால் நான் இப்போதைக்கு ஒன்றும் எழுதப்போவதில்லை. தவறிய விஷயம் ஏதும் இருப்பின் பிறகு எழுதுகிறேன்.

நான்கு மணி நேரங்கள் ஏதோ நான்கு நிமிடங்கள் போல கடந்து போக இனிமையான மாலையை நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்!

எல்லாம் வல்ல இயற்கையின் அருளால் மீண்டும் விரைவில் இணைவோம்.
நன்றி!

எம்.கே.குமார்.

Sunday, February 06, 2005

சிங்கப்பூர் இணைய நட்புகளின் சந்திப்பு!

சிங்கப்பூர் இணைய அன்பு நெஞ்சங்களே!

ஏற்கனவே தனிமடல்களில் நாம் பேசியவாறு, வருகிற வியாழன் மாலை 4.30 க்கு நமது இணைய நட்புகளின் முதல் கூட்டம் நடக்க இருக்கிறது.

இடம்: ஃபேரர் பார்க் எம் ஆர் டி அருகில் உள்ள கான்டோமினியம். (திருமதி.சித்ரா ரமேஷ் அவர்களின் சகோதரர் இல்லம்)

நேரம்: மாலை மணி 4:30

கண்டிப்பாக அனைவரும் கலந்துகொன்டு இச்சந்திப்பை இனிமையானதாக உருவாக்குங்கள்.

நமது வலைப்பூ மற்றும் மரத்தடி நண்பர்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
பொதுவான அறிமுகங்கள், படித்துச் சுவைத்த புத்தகங்கள், கவிதைகள் தமிழ் இணைய உலகின் அண்மைய விவாதங்கள், மரத்தடி மற்றும் வலைப்பூ பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியனவும் இடம்பெறும்.

சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கரி, நம்பி, ஈழநாதன், அருள்குமரன், அன்பு, மூர்த்தி, விஜய், பாலு மணிமாறன், குமார் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

மானஸசென் ரமேஷ் மற்றும் ரமா சங்கரன் அவர்களும் கலதுகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வாருங்கள்! ஒரு இனிமையான மாலையை உருவாக்குங்கள்!

எம்.கே.குமார்.

Tuesday, February 01, 2005

சூப்பர் தலைவி சூப்பர்!

தமிழக முதல்வர் ஜெ.ஜெ அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையா அது? அடி! நெத்தி அடி!

கமல், 'விருமாண்டி' படம் எடுத்துக்கொண்டிருந்த பொழுது "சண்டியர்" என்ற அதன் அப்போதைய பெயரும் கதையும் ஜாதிப்பிரச்சனையைக் கிளப்புவதாகக்கூறி தற்கொலைத் தாக்குதல் நடத்துப்படும் என்று படப்பிடிப்பை தடுத்தார் 'ஜாதி உத்தமர்' திரு. கிருஷ்ணசாமி. படம் ஆரம்பித்த நிலையில் வெறுமனே ஒரு அடி கூட நகராமல் கமலுக்கு அதன் மூலம் வந்த இழப்பு ஒரு கோடி ரூபாயாம்! ஒரு நல்ல நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு படத்தைப் பார்த்தபிறகாவது கிருஷ்ணசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எனது முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

முதல்வரின் கவனத்துக்குப் போன பிறகு தலைப்பை மட்டும் மாற்றும் படி கமலிடம் கோரப்பட்டது. அது கூட முதல்வருக்காகத்தான் செய்தார் கமல்!

அதிலிருந்து ஆரம்பித்துவிட்டது இவர்களின் அராஜகம்! ரஜினிக்கு, விஜயகாந்திற்கு, கமலுக்கு இப்போது எல்லா நடிகர்களுக்கும் எதிராக ஏதோ இவர்கள் தான் தமிழைக் கட்டிக் காக்க வந்த கோமான்கள் மாதிரி 'சினிமாரசியல்' பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது நமது பேர் நாலு பத்திரிகையில் வரவேண்டும் என்பதையடுத்து இதன்மூலம் இவர்களுக்கு என்னதான் பெரிதாய் கிடைக்கப்போகிறது? அந்த அல்பத்திற்காக இப்படியெல்லாம் ஆடவேண்டுமா?

இன்னொரு வேலை வெட்டி இல்லாத இருவர் தமிழைக் காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்களாம். அவர்களது வேலையில் இப்போது சுபமில்லை. ஒருவருக்கு இனிமேல்தான் மரம் வளர்ந்துவரவேண்டும். (இப்போதுதான் பசுமைத்தாயகமாய் மரம் நடுகிறார்கள்; அது வளரவேண்டாமா? அதுவரைக்கும் சும்மாவா இருக்கமுடியும்?!) இன்னொருவரின் அடிவயிற்றிலே கை வைத்து அவரது அந்தரத்தைக் கிழித்து விட்டார் டாக்டர். இனி அரசியல் பண்ணுவது ரொம்பவும் கடினம். என்ன செய்வது? பிடித்துக்கொண்டார் சினிமா வாலை!

முதலாமவர் 'முதலில் பெயரை அவர் பெயரை மாற்றட்டும்' என்றார் ஜெ. அவருக்கு சாட்டையடியாய்! இரண்டாமவருக்கு 'பேனாவும் ஆயுதமும்' தமிழ் வார்த்தைகளா என்று கேட்டிருக்கிறார்.

முதலில் இவர்கள் திருந்தட்டும்! பிறகு திருத்துவதற்கு வரட்டும்!

எம்.கே.குமார்

Search This Blog