Monday, November 06, 2017

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2016 – அனைத்துலக அறிவுண(ர்)வு புஃபே.

இலண்டனின் புகழ்பெற்ற எழுத்தாளரைச் சந்திக்கவேண்டுமா, இந்தோனேசியாவிலிருந்து முதன்முறையாய் ஆங்கிலத்தில் எழுதி கவனம்பெற்ற எழுத்தாளர் என்ன சொல்கிறார்சிறுகதையையோ நாவலையோ படமாக்குவது பற்றி என்ன தெரியவேண்டும் உங்களுக்குகவிதையின் மொழியும் வகைகளும் என்ன, மொழிபெயர்ப்புப் பற்றி தெரியவேண்டும் உங்களுக்கு, புலம்பெயர் வாழ்வின் அவலம் இலக்கியத்தில் எப்படிச்சொல்லப்பட்டிருக்கிறது, குழந்தைகளுக்கான இலக்கியம் பற்றியோ, அவர்களுக்கான பயிற்சியோ வேண்டுமா? பல்வேறு எழுத்தாளுமைகளின் பேச்சையோ கருத்தையோ ஒரேஇடத்தில் கேட்க இயலுமா? இவை அத்தனைக்கும் ஒரே பதிலாய் அமைந்தது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2016.

இருவருடங்களுக்கு ஒருமுறைஎன 1986ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, 2011முதல் வருடம் ஒருமுறைஎன மாற்றம்கண்டு இந்தவருடம் 19வது விழாவாக நவம்பர் 4முதல் 13வரை பத்துநாட்களுக்கு நடந்தேறியது.

சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் (National Arts Council) பல்வேறு ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், உலகமிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் ஏறக்குறைய 330 எழுத்தாளர்களும் கலைஞர்களும்  பங்குபெற்றனர்.

எப்போதும் ஆங்கில வார்த்தையொன்றே பின்புலபொதுக்கருவாகக் (theme) கொள்ளப்படும் இந்நிகழ்வில், இவ்வாண்டு ரு முக்கிய மாற்றம் செய்ய்ப்பட்டது. உலகத்தை இணைக்கும் ஒற்றைச்சொல்லும் தெற்காசிய நாடுகளில் அன்பையும், காதலையும், கனிவையும் குறிக்கும், மலாய் வார்த்தையான ஸயாங்’ (Sayang) என்ற வார்த்தை, 2016 எழுத்தாளர் விழாவின் பின்புலபொதுகருவாகக் கொள்ளப்பட்டது. சென்றவருடம், ”கனவுகளின் தீவு” (Island of dreams)  என்பது தீம்வார்த்தையாகக் கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்பத்திரிகையாளர் Lionel Shriver  (We Need to Talk About Kevin,  The Mandibles: A Family, 2029-2047) புலிட்சர் விருதுபெற்ற அமெரிக்க இந்தியர கவிஞர்  Vijay Seshadri  (The Disappearances), கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற புலம்பெயர் வாழ் எழுத்தாளர்நடிகர் ஷோபாசக்தி (பிரான்ஸ்/இலங்கை), அமெரிக்க இந்திய எழுத்தாளர்  Karan Mahajan (The Association of Small Bombs), ’பனாமா பேப்பர்ஸ்தகவல்திருட்டுகசிவு குறித்து ஜெர்மானிய துப்பறியும் பத்திரிக்கையாளர்  Frederik Obermaier ஆகியோர் இந்தவருட நிகழ்வில் உலக அரசியல், சமூகப்பார்வை குறித்து தன் பார்வைகளைப் பரிமாறிக்கொண்ட முக்கியமானவர்கள்.

புனைவுப்பிரிவு, அனைத்துல எழுத்தாளர்கள் வரிசையில், இந்தோனேசியாவிலிருந்து முதன்முறையாக புக்கர் பரிசுக்குத் தேர்வான Eka Kurniawan,  இங்கிலாந்தின் மில்லியனர்ஸ் கிளப்பில் இடம்பெற்ற எழுத்தாளரான Joanne Harris, Gail Carriger (அமெரிக்கா), Shawna Yang Ryan(அமெரிக்கா-தைவான்), Andrew Michael Hurley(இங்கிலாந்து),  Sabata-mpho Mokae(தென் ஆப்பிரிக்கா);  Mamle Kabu (கானா), A Yi(சீனா), Li Ang(தைவான்), Timothy O’Grady(அமெரிக்க ஐரிஸ்), Sara Baume (ஐரிஸ்), அ.மங்கை(இந்தியா), Jung Young-Moon (கொரியா) Cole Swensen (அமெரிக்கா), Sarah Howe(டி.எஸ் எலியட் பரிசு பெற்ற இங்கிலாந்து கவிஞர்), Gerður Kristný (ஐஸ்லந்து),  Fynn Jamal(மலேஷியா),  Philip Terry (இங்கிலாந்து) ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

அபுனைவு வரிசையில் அமெரிக்காவின் Marjorie Perloff, Frank Dikötter (நெதர்லாந்து),  Jonathan Friesen (அமெரிக்கா),  Alberto Manguel (கனடா), Lyn Gardner(இங்கிலாந்து), Mabel Lee (ஆஸ்திரேலியா), Max Lane (ஆஸ்திரேலியா) மற்றும் Marie Silkeberg (சுவீடன்) ஆகியோர் பங்களித்தனர்.

சென்றவருட விழாவின் சிறப்புப்பங்களிப்புக்கு, தீவுகளின் தேசம் இந்தோனேஷியாஎடுத்துக்கொள்ளப்பட்டதைப்போல, இந்த ஆண்டு விழாவிற்கு, சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொன்விழா ஆண்டைக்கொண்டாடும்விதமாக, ”ஜப்பான்” (SWF COUNTRY FOCUS) எடுத்துக்கொள்ளப்பட்டு, பத்து படைப்பாளர்கள் அங்கிருந்து வந்து கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

எழுத்தைத்தாண்டி, நிகழ்கலையின் வடிவமாக இரண்டு நாடகங்களும்  (Between The Lines: Rant and Rave II, மற்றும் Siti Khalijah: An Actress Prepares) அரங்கேற்றம் கண்டன.

இவைதவிர, கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற தீபன் (Dheepan)  தைவான் டாக்குமெண்டரியான  ”Flowers of Taipei: Taiwan New Cinema” படங்களும் திரையிடப்பட்டு, அதன் படைப்பாளிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர்களது சிறுகதைகளை அடிப்படையாகக்கொண்ட “One Hour to Daylight” என்ற படமும் திரையிடப்பட்டது.

இவைதவிர இந்த ஆண்டு எழுத்தாளர் விழாவின் புது அங்கமாக, வரைகலை நாவல்கள், கார்ட்டூன் சித்திரங்களை அடிப்படையாகக்கொண்ட உலக படைப்பாளிகள் Miriam Katin (அமெரிக்கா), Mattias Adolfsson (சுவீடன்), Chihoi (ஹாங்காங்), Tita Larasati (இந்தோனெஷியா), Peter Van Dongen (நெதர்லாந்து), Sonny Liew (சிங்கப்பூர்), Troy Chin (சிங்கப்பூர்), Foo Swee Chin (சிங்கப்பூர்) மற்றும் Lim Cheng Tju(சிங்கப்பூர்) ஆகியோரும் கலந்துகொண்டு பங்குபெற்றவர்களுக்கு குறிப்புகளும் பயிற்சியும் வழங்கினர்.

சிங்கப்பூரிலிருந்து நான்குமொழிகளிலும் ஏறக்குறைய 240 படைப்பாளிகள் கலந்துகொண்ட இந்தவருடத்தின் விழாவில், இன்னொரு சிறப்பம்சமாக, சிங்கப்பூர் மலாய் படைப்பாளிகளான தாய்மகள் (Noor HasnahAdam & Nur Aisyah Liyana) இருவரும் இணைந்து தயாரித்து வழங்கிய ‘Genggaman Sayang’ (Love’s Grasp) காட்சியிடலும் ரசிக்கும்படியிருந்தது.

பயிற்சிப்பட்டறை, கலந்துரையாடல், விவாதம், திரையிடல் என சிங்கப்பூரின் நான்குமொழிகளிலும் நடக்கும் நிகழ்வுகளைக் காண, பொதுவாக கட்டணமும் சில நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியும் வழக்கம்போலிருந்தன.

தமிழிலக்கியத்தைப் பிரதிநிதித்து வந்திருந்தார்கள் இலங்கை-பிரான்ஸ் ஷோபாசக்தி, தமிழ்நாடு, இந்தியா அ.மங்கை, மலேஷியா பூங்குழலிவீரன் ஆகியோர். இவர்கள் தவிர சிங்கப்பூர் சார்பில் கண்ணபிரான், பொன்.சுந்தரராசு, அ.கி.வரதராஜன், லதா, ஷானவாஸ், நெப்போலியன், சித்துராஜ் மற்றும் மாதங்கி ஆகியோர் கலந்துகொண்டனர். சென்றஆண்டு நடந்த சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ஜெயமோகன், நா முத்துக்குமார் ஆகியோர் தமிழகத்திலிருந்தும், மலேசியாவிலிருந்து ம.நவீன், அ.பாண்டியன், ஜெயலக்ஷ்மி ஆகியோரும், சிங்கப்பூரிலிருந்து பலரும் கலந்துகொண்டார்கள்.

சென்றவருடம் ஜெயமோகனோடு, நா.முத்துக்குமாரும் சிங்கப்பூரின் மூத்த கவிஞர் கதுமு இக்பால் அவர்களும் அமர்ந்து கவிதையின்போக்கு குறித்து விவாதித்த அதே அரங்கில், இவ்வருடம் "சொல்லாடல்: விமர்சனம் எனும் இலக்கியப்பரிமாணம்" என்ற விவாதம். பங்குபெற்றார்கள், சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் மூவரான, திரு இராம கண்ணபிரான், திருமதி சித்ரா ரமேஷ் மற்றும்  எழுத்தாளர் லதா ஆகியோர்.

சிங்கப்பூரின் இன்றைய எழுத்துலகில் விமர்சனத்தின் நிலை, எதிர்காலத் தேவை ஆகியவை பற்றிய கலந்துரையாடலில் சிங்கையின் ஆரம்பகால விமர்சனப்போக்கையும் வரலாறையும் சிறப்பாக பட்டியலிட்டார் திரு.கண்ணபிரான். புதுமைப்பித்தன் எழுதிய விபரீத ஆசைஎன்னும் சிறுகதை ஆபாசாமானது என்றும் அருமையானது என்றும் இருசாரார் இலக்கிய சர்ச்சையை திரு கந்தசாமி வாத்தியார் உள்ளிட்டவர்கள் நடத்த, அதனையொட்டி சிங்கையில் உருவாகிய புயலையும் அதை வெட்டி-ஒட்டி வந்த கருத்துக்களைப்பிரசுரித்து விமர்சனக்கலையை வெகுவாக வளர்த்த மலாயாவின் விமர்சனப் பொற்காலம் குறித்து சபையில் தெளிவாக வைக்க, எண்பதுகளில் படைப்புலகிலும் விமர்சன உலகிலும் ஏற்பட்ட தேக்கத்திற்கான காரணத்தை முக்கியமாய் வைத்து, அதனை ஆராய்ந்து அதனின்று முன்னேற வேண்டிய அவசியத்தை வைத்தார் லதா. தற்கால விமர்சனப்போக்கில் ஏற்படும் மாற்றங்களையும் அதனை ஏற்றுக்கொள்ளமறுக்கும் அல்லது தனிமனிதசுதந்திரத்தைப் பாதிக்கும் விதமாய் எடுத்துக்கொள்ளப்படுவதையும் சொல்லி, படைப்பாளர்களின் முன்னேற்றத்திற்கு விமர்சனம் எவ்வள்வு முக்கியமானது என்பதைச் சொல்லிமுடித்தார் சித்ரா ரமேஷ். நிகழ்ச்சியை மிகச்சரியாய் லகான் இழுத்துக்கட்டி வழிநடத்தியவர் திருமதி சித்ரா சங்கரன்.

நவம்பர் 5 மாலையில் ஷோபாசக்தியும் ஆன்மாவின் அகதியும்என்று தலைப்பிடப்பட்ட ஷோபாசக்தி அவர்களுடனான கலந்துரையாடல் அண்மைய காலங்களில் தமிழில் நடந்த சிறப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றாயிருக்கும். தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் தனது சாட்சியத்தை மிகவும் கனமாகப் பகிர்ந்துகொண்ட ஷோபாசக்தி, ஒரு கேள்விக்கு, இப்போது காந்தியைப்பற்றியே அதிகம் நினைப்பதாகவும் படிப்பதாகவும் சொன்னபோது அவை ஒருநிமிடம் கனத்து நிறைந்தது. நிகழ்ச்சியை இறுக்கிப்பிடித்து சிறப்பாய் வழிநடத்திய கவிஞர் நெப்போலியனும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கியக்காரணம்.

நவம்பர் 6 அன்று நடந்த மற்றுமொரு நிகழ்ச்சியில், தமிழ் எழுத்துலகில் இலக்கிய வகைகள் (கிரைம், மர்மம், அறிவியல் புனைவு கதைகள் போன்றவை) குறைந்துவிட்டனவா? தமிழ்ப் புனைவுக்கதைகள் சராசரி வாசகனை ஈர்க்கும் திறனை இழந்துவிட்டனவா? அனைத்துலக அரங்கிலும் உள்ளூர் எழுத்திலும் தமிழில் இலக்கிய வகைகள் மீண்டும் பெருக்க அவசியம் ஏற்பட்டுள்ளதா? என்று நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு பொன்சுந்தரராசு, ஷோபாசக்தி மற்றும் நெப்போலியன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை வழிநடத்தினார் திருச்செல்வி.

நவம்பர் 6 அன்று மாலையின் திரையிடல் நிகழ்வில், பிரான்ஸ் கேன்ஸ் படவிழாவில் பரிசுபெற்ற தீபன்படம் திரையிடப்பட்டு திரு ஷோபாஷக்தியுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

நவம்பர் 8 மாலை நடந்த கலந்துரையாடலில் பங்குபெற்ற சிங்கப்பூர் இலக்கிய பரிசு (2016) வெற்றியாளர்களான சித்துராஜ் பொன்ராஜ், .கி.வரதராஜன், ஷா நவாஸ் ஆகியோர், உள்ளூர் வாசகர்கள் தம்படைப்புக்களை வாசிக்கச்செய்யுமாறு,  என்ன உத்திகளைக் கையாள்கிறார்கள் என்பதுபற்றியும், உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பித்தல் விற்றல் சம்பந்தப்பட்ட சவால்களைப்பற்றியும் அலசினார்கள். நிகழ்ச்சியை வழிநடத்தினார் முனைவர் சீதாலஷ்மி. பேச்சின் பெரும்பகுதி புத்தகம் பதிப்பது குறித்தே கழிந்ததுபோக, பார்வையாளர்களில் ஒருவராயிருந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு முஸ்தபா, சிங்கப்பூரில் புத்தகம் பதிப்பிக்க விரும்புவோருக்கு தமது அறக்கட்டளை அதனைச் செய்துதரும் என்று குறிப்பிட்டது முக்கியமானது.

நவம்பர் 12, காலை பத்து மணிக்கு இந்திய மரபுடமை நிலையத்தில் நடந்த ஏட்டிலிருந்து மேடைக்கு: சிறப்புப்பயிலரங்குநிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார் தமிழகத்திலிருந்து வருகை புரிந்த பெண்ணிய நாடக ஆசிரியரும் இயக்குனருமான அ.மங்கை.

நவம்பர் 12, மாலை 7 மணிக்கு நடந்த தமிழில் உடல்மொழிக்கவிதைகள்கருத்தரங்கில், இந்தியாவின் அ.மங்கை, மலேஷியாவின் பூங்குழலி வீரன், சிங்கப்பூரிலிருந்து மாதங்கி ஆகியோர், பெண்ணுடல் மற்றும் பாலுணர்வைப் பற்றி எழுத்தப்படும் எழுத்துக்கள் தமிழில் ஏன் சர்ச்சையைக் கிளப்புகின்றன என்பது பற்றியும் தமிழில் உடலைச் சார்ந்த கவிதைகளின் வரலாற்றையும், அவை அமைத்துள்ள புது வரையறைகளையும் ஆராய்ந்தனர். சிங்கப்பூரில் லதா, எம்.கே.குமார், மாதங்கி உள்ளிட்ட சிலர் மட்டுமே உடல் சார்ந்த கவிதைகள் எழுதியுள்ளது பற்றியும் குறிப்பிடப்பட்டது. நிகழ்ச்சியை சிறப்பாய் வழிநடத்தினார் எழுத்தாளர் லதா.

சிறுவர்களுக்கான 14 நிகழ்ச்சிகளில் 11 நிகழ்ச்சி முற்றிலும் நிரம்பியிருந்தது. சிறார்களுக்கான படைப்புத்திறன் குறித்து பலநிகழ்ச்சிகள் நடந்தாலும் கலந்துகொண்ட தமிழ்க்குடும்பங்களின் எண்ணிக்கை மிகக்குறைவாய்க் காணப்பட்டது. மாலையில் அகன்றதிரையில் குடும்பம் மற்றும் சிறுவர்களுக்கான ஒன்றுகூடலாக, இலவசத்திரையிடலும் நடந்தது. பாப்கார்னும் பஞ்ஜுமிட்டாயும்கூட வந்திருந்த அனைவருக்கும் இலவசமாய் வழங்கினார்கள். ஆனாலும் அங்கும் தமிழ்க் குடும்பங்களின் கூட்டம் குறைவுதான்.

மொத்தம் 352 நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய 330 படைப்பாளிகளும் கலந்துகொண்ட இந்தவருட விழாவில், விழாக்குழு அளித்த தகவலின்படி, இந்தவருடமே மிகஅதிகபட்சமாக, ஏறக்குறைய 20,350 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர் (சென்ற வருடம் 19,700பேர்) என்ற தகவல் நமக்கு மகிழ்ச்சித்தந்தாலும், பல்வேறு தமிழ்நிகழ்ச்சிகளின் இருக்கைகள் அடுத்தவருடமாவது நிரம்பவேண்டியது அவசியம் என உணருவோம்.


2017 நவம்பர் 3 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் அடுத்தவருட சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு, இப்போதே நாமும் தயாராவோம், ஏனெனில் இது அகில உலக அறிவுத்திருவிழா, நமது சிங்கப்பூரில்; நமதுமொழியில்.

எம்.கே.குமார்.


”நைலான் வலையில் சிக்கியவர்கள்: “

 

எம்.கே.குமாரின் கவிதைகளூடேயும் சிறுகதைகளூடேயும்
  
சுப்ரபாரதிமணியன்

சாதாரண வலை என்றால் அகப்படும் மீனகள் சாதாரணமாய் பலியாகும். பல தப்பித்துப் போகும். ஆனால் நைலான் வலையில் சிக்கிய மீன்களின் ஆதாரமே பாதிக்கப்படும். மூலமே அறுந்து போகும் அப்படி மூல ஆதார வாழ்க்கை, புலம் பெயர்ந்த - வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட பல மனிதர்களை தன் படைப்புகளில் இடம் பெறச் செய்கிறவர் சிங்கப்பூர் எழுத்தாளாரான எம்.கே.குமார் என்றறியப்பட்ட ஆவுடையார்கோவில் தீயத்தூர் மகாலிங்கம் காளிமுத்து குமார்.

புலம் பெயர்ந்து வாழ்கிறவர்களின் சிக்கலில் , படைப்பில் தென்படுவதாக ஈரமண்ணின் வேர் வாழ்க்கை , புலம் பெயர்ந்த மண்ணின் சல்லி வேர்கள், அந்நியமாக்கப்பட்ட சூழல், ஊருக்கே திரும்ப எத்தனிக்கும் மனம், ஆனால் மனதை இறுக்கிப் பிடித்திருக்கும் தளைகள் என்பது  போல்தான் குமாரின் படைப்புகளும் அமைந்திருக்கின்றன. பெரிய நகரத்திலிருந்து ஓடி வந்தவர்கள் இவர்கள். கிராமியத்திற்கு ஏங்குபவர்கள், தங்களின் அடையாளங்களை இழந்து விட்டு புது அடையாளங்களை நிரந்தரமாய் அணிந்து கொள்வதில்  கொஞ்சம் தயக்கம் உள்ளவர்கள்.   தாங்கள்,  தங்களில் பதித்த பிம்பத்தை அழித்து விடுகிறவர்கள் என்றும் சொல்லலாம்.

“ எல்லா மழைத்துளியும்
மண்ணிற்கு வருகிறது
சாக்கடையில் கலந்தும்
பாறையில் விழுவதாயும்..
மனிதர்களும் இப்படித்தான் “ என்கிறார் அவரும் ஒரு கவிதையில்.(வரையா மரபு)

இந்த நகர, கிராம, பெருநகர, அயல் அனுபவச் சிதைவை அவர்கள் உள்ளுணர்வு கொண்டு யோசிக்க அவகாசம் கிடைப்பதில்லை. ஆசுவாசமும் இருப்பதில்லை. ஆனாலும் ஒரு துளி  எப்போதாவது தென்பட்டு விடுகிறது.பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் உறவு கொள்கிற தமிழனுக்கு கிராமத்து உறவும், கிராமத்து பரம்பரை தூய்மையும் உறுத்துவதாக பல சமயங்களில் அமைந்து விடுகின்றன. அவற்றையும் கடந்து போகிறான். (மஹால் சுந்தர் கதையில்). அவன் விளையாடிய விளையாட்டுகள்தான். ஆனால் தன் வாரிசானப் பெண்  அதையெல்லாம் செய்யும்போது கட்டுப்பாடுகள் , வரைமுறைகளை விதிக்கிறான். ஆண் என்பவன் தந்தையை  விட மேலோங்கி நிற்கிறான். (கோவில் வீதி) . இது ஆண் இயல்பு என்று எந்தப் பெண்ணும் சுலபமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் விளையாடவே இப்படி அனுமதி மறுக்கப்படுகிற போது கணவனைத் தேர்வு செய்வதில் இருக்கும் சங்கடங்கள் சொல்லி மாளாது. காதல் உணர்வுகள் சிதறடிக்கப்படுகின்றன. கர்ப்பங்கள் கலைக்கப்பட வேண்டும் என்பதில்  எந்த வித இரண்டாம் பட்சக் கருத்துக்கும்  இடமில்லை அவையெல்லாம் சாதாரணமாகவே பெண்களுக்கு நடந்தேறுகின்றன. (கருக்கு கதை ). பெரும்பாலும் உரையாடல்களாக, தொன்மமாக என்று கதையை வடிவமிக்கிற போது ஒரு பனையின் சொல்லாடலாக இதை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

“ அன்றொரு நண்டு
நேற்றொரு ஆமை
இன்றைக்குப் பாம்பு
வளையாய் இருப்பதிலும் சுமையாய் “ ( இருத்தலின் வலி )

என்று உணரும் நிறையப் பெண்களை குமார் காட்டுகிறார். கைவிடப்பட்ட பெண் திரைப்பட உலகில் அடைக்கலமாகிறாள். ஆனால் அவளை துரதிஷ்டம் துரத்திக் கொண்டே இருக்கிறது. கணவன் மரணமும் துரத்துகிறது. அவளுக்கு வாய்ப்பளிக்கிற      “ அந்த அதிகார ஆண்” இறுதியில் வைக்கும் கேள்விதான் என்ன….. அதை குமார் சொல்வதில்லை.( பிறை நிலவுகள் ) வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறார். தலைக்கேசம் சீர்திருத்தும் இடத்தில் நடைபெறும் உரையாடல்  வெகு சாதாரணமாகவே அமைந்து  இதிலென்ன என்று ஆச்சர்யப்படும்போது இறுதி வரியாய் ஒரு பெண்ணை மையமாக வைத்து  என்றாகிற போது கதை திருப்படைகிறது (சூடிக்கொடுத்த சுடர் முடி). இந்தத் திருப்பமடைதலை முன்னர் குறிப்பிட்ட கதையிலும் கண்டு கொள்ளலாம்.
கள்ள  நோட்டும், மந்திரிப்பதவியும் அதிகாரமும்  புருவம் உயர்த்தி பயப்பட வைக்கின்றன. “ வேட்டை “ என்பதை   பல தளங்களில் கொண்டு சென்று ஒருங்கிணைப்பது விசேசமாக இருக்கிறது. ‘எரியும் சட்டையைப் போட்டுக் கொண்டவர்களாய் ‘ மனிதர்கள் அலைக்கிறார்கள். மூக்கையன் பேரும், காவல்துறை அதிகார உச்சம், சொத்து ,பணம்  என பல தளங்களில் வேட்டையாடபடுகின்றன..பெரியவர்கள் பறவைகளின் கலகலப்போடு பாலியல் சமாச்சாரங்களை உரையாடல்களாக்கி ஆசுவாசம் பெற்றுக் கொள்கிறார்கள், (புரியாத புதிர்).

“ மிருகவதை ” கவிதை முரண் பல சிறுகதைகளில் காணக்கிடைக்கிறது.

”நிலமகள் படும்
பாட்டின் இரகசியம்
எனக்கு மட்டும் தெரியும் ” என்ற கவிதையில் ரகசியம் சொல்லும் குமார் “ மருதம் “ சிறுகதையில் நிலத்தை விற்று விடல், அல்லது கை விடல் அல்லது திரைப்படம் போன்ற கேளிக்கைக்காக கைமாற்றலைக் கூட தற்கொலைக்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளும்போன தலைமுறை விவசாயம் ஏர்பின்னது உலகம் என்பதைக் கசப்புடன் சொல்லிப் போகிறது.

இதை இன்னொரு ரூபமாய் விமர்சனத்துடன் கவிதையிலும் முன் வைக்கிறார்,. நீரின் விலையைக் கேட்டு அதிர்ச்சியாகி மாட்டை விற்று தண்ணீர் விவசாயத்திற்குப் போகிறான் விவசாயி. ( சிங்கை , மலேசியாவில் உணவுப்பொருட்கள் வாங்கும்போது தண்ணீர் போத்தலும் தவறாமல் வாங்க வேண்டியிருக்கிறது எனும்போதுதான் இக்கவிதை முழு அர்த்தம் பெறும் )

ஒரு எழுத்தாளனை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை நாச்சாரம்மாள் என்ற  மனைவியும் அவள் எழுத்தாளக் கணவனின் அவஸ்தையிலும் “ நகைச்சுவையாகவே “ சொல்லப்பட்டிருக்கிறது….( கவிஞரேறுவின் கதை ). குரூர நகைச்சுவை.

 மறுபுறமாய் 
“ உடலைத் தின்னக்
கொடுத்த ஓவியங்கள் “-பெண்கள் குரூரங்களுக்குள் இருந்தே இவரின் கதைகளில் நடமாடுகிறார்கள்.(திணறல்கள்) .கணவனின் கொடுமையால் வீட்டிற்குப்போகாமல்  மருத்துவ மனையிலேயே தங்கிப் பணிபுரியும் நர்ஸ்  பெண் ஒருத்தியின் அவஸ்தைக்கு முன் இந்த கவிஞரின் ஆண் அவஸ்தை  ஒரு பங்கு குறைவுதான்.சிங்கப்பூரில் ” சார்ஸ் “ வியாதி தந்த அந்த நர்ஸ் பெண்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. .. சிங்கப்பூர் வாழ்நிலை அனுபவங்களில் காமமும் காசும் தொழிலும் என்று அல்லாடுகிற ஆண்கள் நிறையவே தென்படுகிறார்கள்.. சேரி சிம்ரன் சிதைந்து போவது, மனைவியின் உடல் பிணவறையில், உருக்குலைந்து போகும் தாய்களின் கதை என்று பல கதையம்சங்களை கதைக்கவிதைகளாக விரித்துக் கொண்டு போய் எழுதியும் பார்த்திருக்கிறார்.  சிறுகதைகள் எழுத நினைத்து நேரமின்மை அல்லது அவசரம் தந்தக் கவிதைகள் அந்தக் கதைக்கவிதைகள் எனலாம் அவை. அல்லது நாலு வரிக்கவிதை ஒற்றைப்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலையில் நீள் கவிதைகள் காசு கொடுத்து புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு   பலபக்கங்களில் நீள் கவிதைகள் தென்படுவது , பல பக்கங்கள் கவிதைகளால் நிரப்பப்பட்டிருக்கிற ஆறுதலையும் தரக்கூடும்.“செத்த மீன்
என்றாலும்
குத்துகிறது  முள் “; ( ரணம்)

ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த வகையில்  ஒரு மாதிரிக் கவிதை இது. இந்த வகையில் குறும்பாக்கள் போல் அமைந்திருக்கும் சில சிறுகதைகளையும் சொல்லலாம்.. சமூக முரண்களுடன் அவை சிறுகதைகளாகி நிற்பதையும்.

இவரின் சிறுகதைகளில் அரசியல் நெருக்கடிகளையும் மன அவஸ்தைகளையும் உலகமயமாக்கலின் விளைவுச் சிதைவுகளையும் தேடிப்பிடித்துக் கண்டடைவது பெரிய ஆசுவாசம்.. படைப்பில் ஒரு தலைப்பரிமாணமாய் மன அவசமே ஆக்கிரமித்த சூழல்களில் அந்த ஆசுவாசம் நிச்சயம் புரியும்.  நிச்சயம் பிடிபடும்.

எம்.கே. குமாரின் சிறுகதைகளும், கவிதைகளும் என்று இரு நூல்களையும் அப்படி சமூக அவல நிலையிலானதாக இனம் கண்டு கொண்டதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசமும் உள்ளது. மொழியில் கிராமிய அனுபவங்களை நாட்டாரியப் பாணியிலும் நகர அவஸ்தையை மூச்சுத்திணறும்  இறுக்கமான சொற்களின் கட்டமைப்பிலும் வெளிப்படுத்தியிருப்பதும்  இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் என்றும் சொல்லலாம்,முந்தியசிறுகதைத் தொகுப்பு  வெளிவந்து பத்தாண்டுகள் கடந்த பின் அவர் முன் நிறுத்தும் கலை அனுபவகளை  இன்னும் தொகுப்பாக வெளியிடப்படாத பத்துக் கதைகளிலும் வைத்திருக்கிறார்   என்பது சாதாரணமல்ல. .கீழேக்குறிப்பிடப்பட்டுள்ள புதிய கவிதைத் தொகுப்பிலும் கூட…..

எம்.கே. குமாரின் இரு நூல்கள்

  1. சூரியன் ஒளிந்தணையும் பெண் ( உயிர்மை வெளியீடு சென்னை ரூ110. 2013 )
  2. மருதம் ( சிறுகதைகள் –  , சென்னை வெளியீடு ரூ100 2006 )


Search This Blog