Friday, December 21, 2007

சிங்கப்பூரில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விழா - பதில்!

பதில் வந்துவிட்டது! தன்னார்வத்தொண்டு நிறுவனம்(மாய் இருந்தால்) அதன் உள்நாட்டு பதிவு குறித்தும் சேகரிக்கப்படும் நிதி குறித்தும் அனுமதிச்சீட்டு பெறாமல், நிதி சேகரிப்பு எதிலும் ஈடுபட்டால் புகார் செய்யலாமாம். பார்க்க பதில்!

Photobucket
நன்றி "டுடே" (Today)

இதுவரை நடந்த எல்லா விழாவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலைவிழா என்ற பெயரிலேதான் நடந்தன. கட்டிடம் கட்டுவதற்கு என்று சரத்குமார் அவ்வப்போது சொன்னதைத் தவிர வேறு எங்கும் அவ்வாறு எழுத்துப்பூர்வமாய் குறிப்பிடப்படவில்லை. அதனால் இவ்விழா நடக்கலாம்.

Tuesday, December 18, 2007

தென்னிந்திய நடிகர் சங்கம் சிங்கப்பூரில் நடத்தும் நிகழ்ச்சி - நடக்குமா?

"டுடே" நாளிதழில் வரும் வாசகக்கடிதங்கள்/சந்தேகங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து / துறையிடமிருந்து உடனுக்குடன் பதில் பெறும். அவ்வகையில் இன்றைய "டுடே" யில் ஒரு வாசகர், வெளிநாட்டு கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் நடத்தலாமா? என்பது பற்றி ஒரு மடலை எழுதியிருக்கிறார். பார்க்க மடல்:
Photo Sharing and Video Hosting at Photobucket
நன்றி: "டுடே"

எனக்குத் தெரிந்தவரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திரட்டும் நிதியைத்தவிர மற்ற நிதிக்காக நிகழ்ச்சி ஏதும் நடத்தக்கூடாது. காவல்துறை என்ன சொல்கிறது, பார்ப்போம்.

Sunday, December 16, 2007

காகிதமலர்கள் நாவல் - மூன்றாவது கோணம்

இந்நாவலைப் படித்து முடித்த பின் எனக்குத்தெரிந்த சிலபேர் சொன்னது:

பாக்கியம் மாமி:

ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? ஒரு ஆம்பிளை ரெண்டு ஆம்பிளை சரி; இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப்பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?

பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!

பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!


விசுவத்தின் அப்பா:

ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!

வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!

நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.


விசுவத்தின் மனைவி:

யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.

யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?

விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம்மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகண்ணனா என்ன?

பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!

சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?

செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.

மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.


செல்லப்பாவின் அண்ணன்:

இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!

பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?

புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!

கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!

பத்ரியின் நடு அண்ணன்:

இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்! இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!

படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப்படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.

எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!

செல்லப்பாவின் தம்பி:

இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).
ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னதுமாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'

பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.

காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:

அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக்கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.

ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?

சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும் தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம் ண்ணே. பத்மினிக்கு..அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!

டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....

ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே... படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க. அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.

இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள்ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!

முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!


அன்பன்
யெம்.கே.குமார்.

நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.

Friday, November 16, 2007

சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!

சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாச்சலம் நெறிப்படுத்தினார்.

மேடையில் அமர்ந்திருந்த மூவர் - புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.கலாமோகன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முஸ்தபா மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன்.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரை வரவேற்புரை வழங்க அழைத்தார் திரு. அருணாச்சலம். தனது நீண்ட நாள் கனவை மிகுந்த அக்கறையோடு சட்டரீதியாக வடிவமைத்துத் தந்த கலாமோகன் அவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய திரு.ஆண்டியப்பன் அவர்களுக்கும் நன்றி சொன்ன திரு.முஸ்தபா அவர்கள், இவைகளைப்பற்றி பேசுமாறு அவர்களை வேண்டிவிட்டு, இந்த அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட அனைவரது ஆதரவையும் வேண்டி அமர்ந்தார்.

வழக்குரைஞர் திரு. கலாமோகன், சிங்கப்பூரில் அரசு சாராது அறக்கட்டளைகள் இயங்குவதன் சிரமத்தைச் சொல்லி, அதுவும் தமிழிலேயே அதன் கொள்கைகளை வரையறுத்திருப்பதையும் சொன்னார். அடுத்துப் பேசிய திரு.ஆண்டியப்பன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

தஞ்சைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கப்பூர்-மலேசிய நூல்களுக்காகவே அமையும் தனிப்பிரிவிற்கு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பணி அடுத்து தொடங்கியது. முதல் நூலை கவிஞரேறு அமலதாசன் அவர்கள் வழங்க திரு.முஸ்தபா பெற்றுக்கொண்டார். அந்நூல் தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி பற்றியதாக இருக்க திரு.முஸ்தபா அவர்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வெளிப்பட்டது.

கலந்துரையாடலுக்கு முப்பது நிமிடம் என்றார்கள். திரு. முஸ்தபா அவர்களை அனைவரும் புகழ்ந்தனர். சிங்கப்பூர இளையர்களை தமிழ்பக்கம் இழுக்க ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். இதுபற்றி விரிவான தளத்திற்கு திட்டங்கள் செயலாக்கம் நடந்துகொண்டிருப்பதகச் சொன்னார் திரு. முஸ்தபா. இதன் பொறுப்புகளை திரு.சிவசாமி அவர்கள் செய்வதாய் சொன்னார். நாளிதழ் வெளியிடும் யோசனையைச் சொன்னாரொருவர். காலாண்டிதழ் வெளியிடும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாய்ச் சொன்னார் திரு. முஸ்தபா.


மனமும் பணமும் ஒருங்கே இருப்பதால் தமிழுக்கு மணம் கிடைப்பது உறுதி என்றார் ஒருவர். மறைந்த எழுத்தாளர் உதுமான் கனியின் கவிதை நூல்களை வெளியிட உதவி கேட்டார் அவர். உடனுக்குடன் அவைகளை ஆமோதித்து ஆவன செய்தார் திரு.முஸ்தபா. ஏதோ "ஒருநாள் முதல்வன்" படம் பார்ப்பது போலிருந்தது. உண்மையில் பெரிய மனதுதான் அவருக்கு.

சிங்கப்பூர் "சிம்" பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். கலைஞரைச் சந்தித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தபால்தலையை வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார் ஒருவர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மலேசியாவின் நூல்களைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாக இன்னொருவர் சொன்னார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முருகன் என்பவர் முனைவருக்காய சிங்கப்பூர இலக்கியம் பற்றிச் செய்யும் ஆய்வுக்கு உதவும்படி கேட்டர் ஒருவர்.

திரு. முஸ்தபா அவர்களின் பல ஆண்டு கனவு இது என்றார் ஒருவர். தமிழ் வளர தமிழில் பேசுவோம் என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னே திரு.முஸ்தபா அவர்களின் நிறுவன ரசீதுகளில் அச்சடித்திருப்பதைச் சொன்னார். சென்னையில் இருக்கும் அவரது கண்ணாடி நிறுவனத்தில் "தாய்மொழி கண் போன்றது; பிறமொழி கண்ணாடி போன்றது" என்ற புகழ்பெற்ற வாசகத்தை வடிவமைத்ததிலிருந்து அவரது ஆர்வத்தை எடுத்துச்சொன்னார்.

நிறுவனரான திரு.முஸ்தபா தலைவராய் இருந்து பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி மேலும் இவற்றை மேம்படுத்தவேண்டும் என்று சொன்னார் ஒருவர். இதற்கு பதில் சொன்ன திரு.கலாமோகன், ஏறக்குறைய எல்லா தமிழ் பற்றாளர்களும் ஏதாவது ஒரு முழுவில் அல்லது பல குழுவில் இருக்கின்றனர். "இருக்கின்றனர் என்றால் வெறுமனே இருக்கின்றனர்"- அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து இங்கேயும் இணையவேண்டாம் என்றார். உண்மையிலே ஆக்கப்பூர்வமாய் இயங்க முனைந்தால் இணையலாம் என்றார் அவர்.

இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்பதாய்ச் சொன்னார் ஒருவர்.

இறுதியில் பொதுமக்களிடமிருந்து அல்லது நன்கொடையாளர்களிடமிருந்து அன்பளிப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமே; சிறப்பாய் இயங்க அது உதவுமே என்றார் ஒருவர். பட்டென்று பதில் சொன்ன திரு. முஸ்தபா, எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய செல்வத்தையும் அளிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்றார்.

யோசனை என்றால் கேட்கவே வேண்டாம் என்ற அளவுக்கு தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் போலும். கலந்துரையாடலில் சில காமெடி டயலாக்குகளும் வெளிப்பட்டன.

எல்லாவற்றையும் விடுங்கள். இந்த அறக்கட்டளையின் துவக்கம் பற்றியும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசலாம் கொஞ்சம்.

சிங்கப்பூரில் அரசாங்கம் சாராது இயங்கும் அறக்கட்டளைகள் மிகவும் அரிது; சிரமமிக்கது. அதிலும் தமிழுக்காய் இயங்கும் அறக்கட்டளை இல்லவே இல்லை. இந்நிலையில் தமிழுக்காய் தனியொரு மனிதரால் புத்தம் புதியதாய் உருவெடுத்திருக்கிறது இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. நிறுவனரான திரு. முஸ்தபா அவர்களை நெஞ்சார பாராட்டலாம்!

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

அதன்படி,

1. சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியும் தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் நிரைஞர், முனைவர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்குதல்

2. தெற்காசிய, குறிப்பாக சிங்கப்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குதல்

3. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தல்.

4. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தனிப்பிரிவாக தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் உருவாக்குதல்.

இவைகளையே தற்போது ஆய்விருக்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வொப்பந்தம் செயல்படும்.

தமிழ்ப்பற்றாளர்களை விட தமிழ்ச்சங்கங்கள் அதிகமாய் இருக்கும் சிங்கப்பூரில் தமிழுக்காய் தனியொரு மனிதராய் தனது சொந்த பணத்திலிருந்து இதுபோன்ற அறக்கட்டளைகளை அமைப்பது மிகுந்த சிறப்புடையது. குறிப்பாய் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கை இத்திசையில் ஆட்சி மொழியாக்கிப் பார்த்த திரு.கோ.சாரங்கபாணி அவர்களைப்போல எந்தவித பாசாங்கும் இன்றி, தனிப்பட்ட புகழுக்காய் அன்றி மிகுந்த மன ஒன்றுதலோடு மன விருப்பத்தோடு இக்காரியத்தில் திரு. முஸ்தபா அவர்கள் இறங்கியிருப்பதாய்த் தெரிகிறது.

மேற்சொன்ன ஒப்பந்தம் மற்றும் இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தோற்றம் மூலம் என்னென்ன பயன்கள் நேரலாம் என்பதைப் பார்ப்போம்.

v தமிழக இலக்கிய உலகிற்கும் சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கும் பூதாகர இடைவெளி உள்ளது. அதை இவ்வொப்பந்தம் குறைக்கும். அல்லது அதற்கான தளத்தை கொஞ்சமாது நிறுவ முயலும்.

v தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவாக்குவதன் மூலம் சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை யாவரும் எளிதில் உணரும் வாய்ப்பமையும்.

v சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை ஆய்வு செய்யும் மாணவர்கள் தரும் முடிவுகள் அதன் தற்போதையை நிலையை எடுத்துச்சொல்லும்; விளைவு தரம் மேம்படலாம்.

v தமிழவேள் கோ சாரங்கபாணி பெயரில் அமையும் விருது அவரது சிறப்பை இன்னும் எடுத்துக்கூறும். தமிழுக்கென வாழ நினைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.

v சிறந்த நூலுக்குப் பரிசு தருவதன் மூலம் மேலும் எழுத்தாளர்கள் உருவாவார்கள். (பரிசு கொடுக்கப்படும் நூலின் தரம் கணக்கெலெடுக்கப்பட்டால்!)

v சங்கம் அமைத்து நடிகைகளை அழைத்து டிக்கெட் அடித்து கூட்டம் போடுவதைத் தவிர்த்து தனிமனித சேவைகள் மூலமும் வருமானம் மூலமும் தமிழுக்குச் சேவை செய்யலாம் என்ற ஒரு பார்வையை விதைக்கும்.

v சிங்கப்பூர் - மலேசிய எழுத்தாளர்களின் கருத்தரங்கம் நடத்துவதன் மூலம் அடுத்த கட்டத்தை அது அடைய முற்படலாம்.

v வெறும் பேச்சு மூலமே போய்க்கொண்டிருக்கும் தமிழ் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் செயல்வடிவில் நிலைமாற்றம் அடைய தன்னலமற்ற இதுபோன்ற சேவைகள் உதவும்.

v பல்வேறு நபர்களை இணைத்து செயல்படும் அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாய் இல்லாதபோது இதுபோன்ற அறக்கட்டளைகள் சிறப்பாக இயங்கலாம்.

v எல்லாவற்றிற்கும் மேலாய் குழு மனப்பான்மைகளையும் சச்சரவுகளையும் இதுபோன்ற தனிநபர் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் ஊக்குவிக்காது உண்மையிலேயே நல்ல மனமிருந்து ஆரம்பிக்கப்பட்டால் நல்லது நடக்க முயற்சி செய்யும்.


சிங்கப்பூர்த் தமிழ்மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எடுத்துக்கொண்டு தமிழை மேம்பட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லவும் படைப்புகளில் அதன் தரத்தை உயர்த்தவும் முயலலாம். முயன்றால் நம்மால் முடியாதது என்ன?

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு-


என்ற குறளுக்கேற்ப தனது வியாபாரத்தின் மூலம் அடைந்த பொருளாதார நிலையின் மூலம் தமிழுக்குத் தொண்டு செய்ய நினைக்கும் திரு.முஸ்தபா அவர்களுக்கு எல்லாம் வல்ல தமிழணங்கு நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் கொடுக்கட்டும்.

அன்பன்
எம்.கே.குமார்


நன்றி: திண்ணை.காம்.

Tuesday, November 13, 2007

குறள் வெண்பா - ஒரு முயற்சி (தவறுகள் திருத்திக்கொள்ளப்படும்!)

தமிழின் சிறப்பைக்கூறுவதாய் அமைந்த குறள் வெண்பாக்கள் இவை. வெண்பாக்களின் கட்டமைப்புகளில் குறையெனவும் ஏன் வெண்பாவே இல்லை எனவும் பலவாறாக கருத்துகள் எழலாம். சொல்லுங்கள், பிழை ஏதும் இருக்கிறதா? என்ன பிழை?


1 பொதிகை மலையின் புதுத்தென்றல் தாம்உணர
ஆதியாம் தாய்மொழியில் பேசு.

2 அகத்தியன் தந்த அருமை தமிழ்த்தேன்
உகந்து பருகு உணர்ந்து

3 தொல்காப்பு செய்தான் துறைசீர் இலக்கணம்
தோழனே தூயதமிழ் பேசு

4 வள்ளுவம் கூறும் அறம்பொருள் யாவையும்
அள்ளக் குறையுமோ சொல்

5 கல்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்ததேனும்
சொல்லினிமை குன்றாத் தமிழ்

6 ஆயுதம் மெய்யுயிர் ஆக்கும் உயிர்மெய்யாம்
பாய்ச்சுமே காதினில் தேன்

7 சொன்னால் சுவைக்கும் இனிக்கும் தமிழமுதம்
கன்னல் சுவைதான் உணர்

8 பிறமொழி பேசுபவர் மேலோராம் என்னும்
அறியாமைக் கீழ்மை அகற்று

9 மண்ணும் மரமும் மரித்திடினும் இன்றுபோல்
என்றும் சிறக்கும் தமிழ்.

10 அம்மா ஒருவார்த்தை அன்புடன் சொல்லிப்பார்
சும்மா கிடைக்கும் சுகம்

11 எத்தனை பேச்சுமொழி எங்கெல்லாம் வாழ்ந்திடினும்
அத்தனைக்கும் மேலே தமிழ்

12 பேசு தமிழா தமிழில் பெருமையாய்
காசுபணம் தாரா தது

Monday, November 12, 2007

அழகிய தமிழ்மகன் - அபத்தம்!

ஒரு சண்டையோடும் சாகசத்தோடும் கதாநாயகன் அறிமுகமாகவேண்டும் என்பதற்காய் அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்பக் காட்சிகள் அபத்தம்.

சிரிப்பு வரவைக்கவேண்டும் என்பதற்காய் ஷகீலா அவர்களை வீட்டுக்கார முதலாளியாய் வைத்து
அடிக்கப்படும் பரங்கிமலை ஜோதி டயலாக்குகள் அபத்தம்.

சின்ன ஸ்டிக்கர் மச்சம் கூட வைக்காது டுயூவல் கேரக்டர் பண்ணியிருக்கும் விஜய் - (ஸ்டைல் செய்வதற்காய் ரஜினி, சிவாஜி படங்களின் படிகளை ஏறியிறங்கியிருப்பதைத் தவிர ஏனுங்கண்ணா, இன்னும் கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? சும்மா, எவ்வளவோ பண்ணுறோம், இது பண்ண மாட்டோமான்னு எங்களை ஏமாத்துறீங்களே!

இரட்டையரில் ஒருவரைக் கண்டுபிடிக்க நடத்தப்படுபவை ஆண்டாண்டுகால அபத்தங்கள்.

ஸ்ரேயா- பின்பக்கத்தை ஆட்டுவதற்காய் மட்டுமே ஒரு ஹீரோயின். நல்லா பண்ணுறீங்கம்மா!

இசை யாரோ ஏஆர் ரகுமானாம்? புதுசா?

முன்கூட்டியறியும் வித்தை - எடிட்டர் ஆண்டனிக்கும் பின்னணி இசையாளருக்கும் ஒரு ஷொட்டு.

புதுக்கவிதைத்தாத்தா - அழகிய தமிழ்மகன் பட்டம் தருகிறார்! நியாயமா இது மு.மேத்தா?

எப்போது வில்லனாவாரோ - என பணக்கார கதாநாயகியின் தந்தை! நல்லவேளை!

நமீதா - இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து சென்னை மாநகர காவல்துறையில் மாட்டாமல் இருந்தால் சரி.

பொன்மகள் வந்தாள் - ஏஆர் ரகுமான் மீது எரிச்சலாய் வருகிறது.

கதாநாயகன் - நாயகி, தோளோடு தோள் உரசினதும் - ஒரு டூயட்! திருந்தவே மாட்டீங்களாடா?

திருவான்மியூர் குளத்துல ராதா விட்ட குடத்தை மைசூர்ல திரும்ப எடுத்தது பாரதிராஜா காலம். காட்சிகளின் தொடர்ச்சியில் முதிர்ச்சியில்லை. அறிமுக இயக்குனர் அறிந்துகொள்ளவும்.

எப்படா படத்தை முடிப்பீங்கன்னு - ஒரு குரல்

கதாநாயகி - மருத்துவமனைக் கட்டிலில் - கற்பு வசனம் - ஞப்பா, விடுங்கடா!

வசனகர்த்தா பரதன் - பாராட்டுகள் உங்களுக்கு!
இயக்குனர் பரதன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


அன்புடன்,
எம்.கே.

Saturday, November 03, 2007

நெஞ்சை எரிக்கிறது நீயில்லாது போன இத்தருணம்!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

நெஞ்சை எரிக்கிறது நெருங்கிய நண்பனை இழந்ததொரு சோகம்.

நின்னது புன்னகையோடு நான் கொண்ட நட்பை எதுவென்று சொல்ல?

நெஞ்சை எரிக்கிறது நீ இல்லாது போன இத்தருணம்.

நண்ப, சென்று வா.


துயரில் வாடும்
ஒரு தோழமை!

Monday, July 30, 2007

பாலி - 6

மஹாபாரத கிளைக்கதையொன்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் நாடகத்தில் ஒரு காட்சி.


ஒரு ஓவியம்!


மஹாபாரத நாடகத்தின் இன்னொரு காட்சி.


2002 ஆம் ஆண்டு குண்டு வெடித்த ஹார்டுராக் கஃபே உள்ள கடற்கரை!


பாலி பெண்கள் கோயில் திருவிழாவிற்கு செல்லும் காட்சி. நம்மூரில் முளைப்பாரி சுமப்பது போல!

Wednesday, July 18, 2007

புத்தக வெளியீடு- நன்றி நவிலல்!


புத்தக வெளியீடு முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. எனினும் அதைப்பற்றி எழுதாதது ஒரு குறையாகவே இருந்தது. எனவே அதை இன்று எழுதிவிடலாம் என்றிருக்கிறேன்.

புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் மெச்சும்படியாய் இருப்பதாய் பலர் சொன்னார்கள். இதை இவ்வளவு அழகாய் வடிவமைத்த வகையில் முதலில் நன்றி சொல்லவேண்டிய ஒருவர் திரு. சி.மோகன் அவர்கள். அவருடைய முழுமுயற்சி இல்லாவிட்டால் இந்த அளவிற்கு சிறப்பாய் அது இருந்திருக்காது. எனது நெஞ்சார்ந்த நன்றி இவருக்கு.

சென்னையில் வெளியிட்டு பல நாட்களுக்குப்பிறகே சிங்கப்பூரில் என் கைகளுக்கு இது கிடைத்தது. புத்தகத்தைக் கண்ட தருணம் மறக்கமுடியாததாய் இருக்கிறது. 'அடடா, ஒரு போட்டோ பிடித்திருக்கலாமே' என்றார் ரமேஷ். இதை தவறவிடக்கூடாது என்பதற்காகவே அப்பாவின் கையில் புத்தகத்தைக் கொடுத்து அவரைப்பற்றிய குறிப்பை வாசிக்கச்சொல்லி வாசிக்கும்போது படம்பிடித்தேன்.

சிங்கப்பூரில் புத்தக வெளீயீடு செய்வது என்றவுடன் நானும் நண்பர் ரமேஷும் நூலகத்தையே அணுகலாம் என முடிவு செய்தோம். இதற்கு பெருமளவில் உதவிய கவிஞர் இந்திரஜித், தேசிய நூலக அதிகாரிகள் திருமதி.புஷ்பலதா மற்றும் திரு.மணியம் ஆகியோருக்கும் இநேரத்தில் நன்றி.

புத்தக அறிமுகம் செய்து பேசவேண்டும் என்றவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் இசைந்த சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் திரு. இராம.கண்ணபிரான் அவர்கள், முனைவர். எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி. ரம்யாநாகேஸ்வரன் மற்றும் கவிஞர் ரெ.செல்வம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. எனது வரவேற்புரையில் திருமதி.ரம்யா அவர்களையும் திரு.செல்வம் அவர்களையும் தவறவிட்டதற்காய் இப்போதும் வருந்துகிறேன்.

இயற்கைக்கும், தமிழுக்கும் வணக்கம் சொல்லி ஆரம்பித்த என் வரவேற்புரையில் இத்திசைக்கு வந்து இசைவாய் தமிழ்வளர்த்த தமிழவேள்.கோ.சாரங்கபாணி அவர்களையும் அமரர்.நா.கோவிந்தசாமி அவர்களையும் வணங்கினேன்.

ரமேஷின் சித்திரம் கரையும் வெளி கவிதைத்தொகுப்பை திரு.இராம.கண்ணபிரான் வெளியிட நூலக முதன்மை அதிகாரி திருமதி.புஷ்பலதா பெற்றுக்கொண்டார். எனது மருதம் சிறுகதைத்தொகுப்பை சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களான திரு.பொன்.சுந்தரராசு வெளியிட, திரு.மா.இளங்கண்ணன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியை மிக நிறைவாய் வழிநடத்தினார் திருமதி.சித்ரா ரமேஷ். எந்தவித பாசாங்கும் இல்லாமல் மிக இயல்பாய் நடக்க ஆவனசெய்தார்.

ரமேஷின் சில கவிதைகளை மிகவும் ரசித்து அது தரும் பொருளை சிலாகித்துப்பேசினார் திரு. கண்ணபிரான் அவர்கள். அவர் வாசிக்கும்போதே ஒரு கவிதை மனதில் படிந்துபோனது. எனது புத்தகத்தை மிகவும் ரசித்துப் படித்ததை அப்படியே பகிர்ந்துகொண்ட முனைவர் எம்.எஸ்.எஸ், குறிப்பை எடுக்காமலேயே பல கதைகளின் பெயரையும் அது எழுதப்பட்டிருக்கும் உத்தியையும் சொன்னார். 'எல்லா புன்னகைகளும் எலும்புக்கூட்டில் போர்த்தப்பட்டிருக்கும் முகமூடிகளே' என்று கவிஞர் சுகுமாரனை மேற்கோள் காட்டி பேச வந்த கவிஞர் திரு.ரெ.செல்வம் தனது பேச்சின் மூலம் சிந்தனையை ஊற்றினார். இக்கதைத் தொகுப்பைப் பற்றிப்பேச சிலமணி நேரங்கள் வேண்டும் எனவும் ஆனால் தான் பேச நினைத்ததையெல்லாம் முனைவர் பேசிவிட்டதாய்ச் சொல்லி ஒரு எழுத்தாளராய் இக்கதைகளின் போக்கை விவரித்தார் திருமதி.ரம்யா. நகைச்சுவைக்கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் எனவும் அது இதில் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொன்னார்.

எண்பது பேர் அமரக்கூடிய அரங்கத்தில் ஏறக்குறைய அறுபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். சிங்கப்பூரின் இதுபோன்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் (சினிமா/முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளாத வகையில்) இது பெரும் எண்ணிக்கைதான் என நினைக்கிறேன். அன்று மாலை நடந்த "மீடியா கார்ப்" நிறுவனத்தின் குடும்பவிருந்து நிகழ்வால் பலர் வரமுடியாமல் போய்விட்டது. எனினும் பல புது நண்பர்களையும் இலக்கியதாகம் மிகுந்தவர்களையும் அன்று சந்திக்க நேர்ந்ததில் இறைவனுக்கு நன்றி.

திரு.ரெ.பாண்டியன், திரு.இராம.வைரவன், சிறந்த ஓவியரான திரு.பாஸ்கர்(அவர்தான் இவர் என்று அப்போது தெரியாததில் கொஞ்சம் வருத்தமே!) தமிழாசிரியர் திரு.சோமு அவர்கள், மறைந்த நடிகர் எம்.கே.ராதாவின் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்துகொண்டது நிறைவாக இருந்தது.

நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வராவிட்டால் என்ன, நான் வருகிறேன் என்று வந்தார் கவிஞர் பாலு மணிமாறன். அன்புக்குரிய எழுத்தாளர்கள் திருமதி.ஜெயந்திசங்கர், திருமதி.மாதங்கி, நண்பர்களும் முக்கிய வலைப்பதிவாளரான திரு.அன்பு, (எனது ஆசிரியரும் தனது தந்தையுமான திரு.ரகுநாதன் அவர்களுடன் கலந்துகொண்ட) திரு.அருள்குமரன், சென்னையிலிருந்து வந்திருந்த தாய்-தந்தையரை 'சர்ப்ரஸாய்' அனுப்பிவைத்த நண்பர் திரு.ஜயராமன், தம்பி நீதிப்பாண்டி, நண்பர் இரா.பிரவீன் ஆகியோருக்கும் இந்நேரத்தில் நன்றி.

செய்தி வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழுக்கும் விளம்பரம் வெளியிட்ட திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.

நன்றி சொல்லி தூரத்தில் இருப்பவர்களை அருகில் கொண்டுவரவும் அருகில் இருப்பவர்களை தூரத்தில் போகச் செல்லவும் முடியும் என்று தனது நன்றியுரையில் சொல்லி, நன்றி சொல்ல விரும்பாத ரமேஷ்க்கு நான் நன்றி சொல்ல வேண்டும். காரணங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று, தனது அயராத பணிகளுக்கிடையிலும் புத்தகத்திற்கு அட்டைப்படம் செய்து, பதினைந்து இருபது படங்களை மளமளவென்று அனுப்பி ஏதாவது மூன்றை 'செலெக்ட்' செய்யுங்கள் என்றவராயிற்றே!

நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த அளவில் எல்லாவிதத்திலும் துணைநின்ற திருமதி.ஷீலாரமேஷ் மற்றும் திருமதி.நிர்மலாகுமார் ஆகியோருக்கும் இங்கு நன்றி சொல்வது அவசியம்.


அன்புடன்
எம்.கே.
18/07/07

Friday, July 06, 2007

பாலி - 5அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?

நீரால் சூழ்ந்தது உலகு!

கடலிலே ஒரு கோயில்!!!வானத்திற்கு அப்பால்!
நாடே கோயில், கோயிலே நாடு! இது விமான நிலையம்!
கல்லிலே என்ன கலைவண்ணம்? மரத்திலேயும்! பாலி விமான நிலையத்திற்குள்!பாலி-தொடரும்!!!

பாலி- 4

பாலியின் குகைக்கோவில் ஒன்றின் உள்ளிருக்கும் லிங்கம்!
(மொத்தம் மூன்று)

Photo Sharing and Video Hosting at Photobucket


அன்பன்
எம்.கே.

Thursday, June 14, 2007

தயாநிதி என்னைத் திட்டலாம், நல்லா வெச்சாய்ங்கய்யா வாயையின்னு!

இருவருடங்களுக்கு முன் எழுதிய பதிவுதான்.

இப்போது படிக்க சுவாரஸ்யமாய் இருக்கிறது.

நீங்களும் படித்துப்பாருங்கள், மறக்காமல் பின்னூட்டங்களையும்!

http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_21.html

"பிரின்ஸ், கலைஞர் என்னை தம்பி என்றழைப்பது இருக்கட்டும். கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் முதலில் அவர்!
தி.மு.க வின் கிளைகளில் ஒன்றாக இருந்த சன் டிவிகுழுமம போய் சன்டிவியின் அதிகாரமையங்களூல் ஒன்றாக தி.மு.க ஆகிவிடப்போகிறது பாவம்!"

எம்.கே.குமார்
(ஆகஸ்டு 2005)


அன்புடன்,
எம்.கே.

Thursday, May 10, 2007

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

இனிய நண்பர்களுக்கு,

சுப்பிரமணியன் ரமேஷின் "சித்திரம் கரையும் வெளி" கவிதைத்தொகுப்பும்
எனது "மருதம்" சிறுகதைத்தொகுப்பும் வருகிற 19, சனிக்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் பீஷான் சமூக நூலகத்தில் வெளியீடு காண்கின்றன.

சிங்கப்பூரின் மூத்த படைப்பாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான திரு. இராம கண்ணபிரான் அவர்களும், பல்வேறு திறனாய்வுகள் படைத்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களும், கவிஞர் திரு. ரெ.செல்வம் அவர்களும் எழுத்தாளர்/கட்டுரையாளர்/வழக்கறிஞர் திருமதி. ரம்யா நாகேஸ்வரன் அவர்களும் இப்புத்தகங்களை அறிமுகப்படுத்தி தங்களது வாசகப்பார்வையை பகிர்ந்துகொள்ள விழைந்துள்ளனர்.

நண்பர்களைனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நன்றி.

அன்புடன்
எம்.கே.

Friday, April 20, 2007

பாலி- புகைப்படக்கண்காட்சி (3)

ஏலேய், ஏனத்தான்பட்டியிலயோ, கானத்தான்பட்டியிலயோ எடுத்த போட்டோவ போட்டுட்டு ஏம்புலெ பாலில எடுத்த போட்டோன்னு கத விடுறேன்னு ரெண்டு மூணு பேரு கேட்டதுன்னால, இனி அந்தக்கோயிலின் அடுத்தடுத்த புகைப்படங்கள் தொடரும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இடதுபுறம் சிலையின் கைகளிலிருக்கும் குடத்திலிருந்து 'சப்தகங்கை' வழிகிறது.
வலதுபுறம் மண்டபத்தின் உள்ளே அமைந்த அரியணையில் சோழர்குலத்தின் மாணிக்கமாம் கடாரம் வென்ற ராஜேந்திர சோழன் அமர்ந்திருக்கிறார். (!)


அன்பன்
எம்.கே.

Friday, April 13, 2007

பாலி - புகைப்படக்கண்காட்சி (2)

அனைவருக்கும் இனிய சர்வஜித் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Photo Sharing and Video Hosting at Photobucket

பாலியின் மிகப்பழமையான கோயிலொன்றில் உள்ள விநாயகர்!


அன்பன்,
எம்.கே.

Tuesday, April 10, 2007

வியர்டு-கிறுக்குத்தனமும் மனநோயும்

"சராசரியாய் வாழ்வதென்று முடிவுசெய்துவிட்டீர்கள், நன்று. ஆனால் உண்மையைச் சொல்லுங்கள், அதைக்கூட நீங்களாகவா முடிவுசெய்தீர்கள்?"

ரெண்டு பேரு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்புனாங்க. ரெண்டு பேருல ஒருத்தரான அந்தப்பொண்ணுக்கு அவங்க வீட்ல வேற மாப்பிள்ளையப் பாத்து கல்லாணம் கட்டிவெச்சுட்டாங்க. மனசொடிஞ்ச போன அந்த நபர் வேற ஊருக்கு இல்லெ, வேற நாட்டுக்கே போய் மொத்தமா செட்டிலாயிட்டார்.

காலம்போன போக்குல பதினைஞ்சு வருஷம் கழிச்சி, அந்தப்பொண்ணு, கணவனை இழந்துட்டு ரெண்டு கொழந்தையோடவும் இவரு இன்னும் தனிமரமாவும் சந்திக்கிறாங்க ஒருநா. மனசு விட்டுப்பேசி மீண்டும் அந்தப்பொண்ண கல்லாணம் கட்டிக்கலாம்ன்னு அந்த நபர் முடிவு பண்ணி, நம்ம சுஜாதா சார்ட்டெ சொல்ல, சுஜாதா சார் அவருக்குத்தெரிஞ்ச டாக்டர்ட்ட சொல்ல, அந்த டாக்டர் சொன்னாராம், இதெல்லாம் ஒருவித மனநோயின் அறிகுறின்னு!

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி சுஜாதா சார் எழுதுன ஒரு தொடர்ல, டாக்டர் சொன்னதோட ஒரு தொடரும் போட்டு அடுத்தவாரம் அதுபத்தி எழுதுறேன்னு முடிச்சுட்டார். அடுத்தவாரம் நானும் படிக்கலை. ஏன் அப்படின்னு இதுவரைக்கும் காரணமும் புரியலை.

மூக்கன் சார் சொன்னமாதிரி தேடிச்சோறு நிதந்தின்று..ன்னு யார் பாடும்போதும் சரி, ஒரு சரவெடிய உசுருக்குள்ளெ கொளுத்துன மாதிரி சரட்டுன மனசும் உடம்பும் எம்பி உக்காந்தது ஒரு காலம். மனநோயி கொண்டலைஞ்ச காலம். கமல் கட்டக்குரல்லெ வாசிக்கும்போது அலைகளெல்லாம் ஆர்ப்பரிக்க கடல்மேலே இருக்குற மணப்பாடு பாறை மேல நின்னுக்கிட்டு நானே பாடுறதா அலைஞ்ச மனநோயிக்காலம்.

விவேகானந்தர் பாறையில மனசெல்லாம் காத்தோட பறக்குற வேளையில செவப்பு விரிப்பு பரவியிருக்கும் தியானஞ்செய்யுற ரூமுக்குள்ளெ மோகத்தைக் கொன்றுவிடு இல்லை மூச்சை அடக்கிவிடுன்னு கண்ணைமூடி காட்டெருமையோட கட்டிப்புரண்டதொரு காலம். காட்டெருமை, கிராமத்தை கவுச்சி வாசனையோட விட்டுப்புட்டு நகரத்துக்கு வந்து கனவுல பொரண்டு நகரத்துல இருந்து வேற நாட்டுக்கு வந்து இப்போ காடேறவும் ஆரம்பிச்சிடுச்சி. காட்டெருமைக்கிம் பசி. காட்டுக்கும் பசி. எப்பவும்!

மூஞ்சப்பாத்து வாறது காதலா? மனசப்பாத்து வாறது காதலா? காதல் வாறதுக்கும் அதுக்குப்பின்னே கல்லாணம் வாறதுக்கும் இடையில கணக்குப்புள்ளை படும் பாடு எதுக்குச்சொந்தம், காதலுக்கா, கல்லாணத்துக்கா? பொன்னை விரும்பும் பூமியிலேன்னு டிஎம்எஸ் உருகும்போதும் பிறக்கும்போதும் அழுகின்றார்ன்னு சந்திரபாபு அழும்போதும் உன்னைவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லேன்னு கமல் மருகும்போதும் உனக்கென இருப்பேன்னு ஹரிசரண் தாலாட்டும்போதும் மனசுக்குள்ளேயிருந்து எழுந்து ஓடிவந்து கண்ணுல கலங்கி நிக்கிறது என்னன்னு இந்த மனநோயிக்காலத்துல எப்பவும் புரியலை.

வேடிக்கை மனுஷனல்லடா, விதியோடும் மதியோடும் போராடி இந்த வேஷங்காட்டும் சமுதாயத்தின் முன்னே 'மாதிரியா' மறுமலர்ச்சி படைக்கப்போறேண்டான்னு சொன்னபோது செந்தூர் நண்பனொருவன் விதியைக் கண்ணுமுன்னாடி விரிச்சிக் காட்டுனத மறுத்தது, மனப்புண்ணு கண்ட கனவுக்காலம்ன்னா, அகஅழகு கொண்ட பொண்ணை உயிரோட இணைச்சுக்கிட்டதும் உயிரோட இணைஞ்சதைப் பிரிய நேர்ந்ததும் கைப்புண்ணு கண்ட இன்னொரு கனவுக்காலம். போறவழி வேறன்னாலும் போறஊரு ஒண்ணுதான்னு மண்ணு மக்களை விட்டுவிலகி மாற்றாந்தோட்டம் போனதும் குரோட்டன்ஸ் பார்க்குக்குப் போனாலும் கோயிலையும் குளத்தையும் அது நிறைக்கும் மீனையும் மருதாணியையும் மறக்கவே முடியாது என்பதும் நேற்றுவரையான காலத்தின் காட்சி.

சலசலக்கும் காட்டோடைக்குள்ளே முங்கி குளிந்து கெடக்கும் கூழாங்கல்லாட்டம் ஜில்லுன்னு இருக்குறதும் இன்னொரு நொடிமுனையில எரிமலையாப் பொங்கி உமிழ்ந்து அடங்கிப்போவதும் எனக்குள்ளே நடக்கும். மொதல்ல பாக்குறப்போ வழிஞ்ச எண்ணத்தாலே பத்து வருஷமானாலும், கண்ணெதிரிலெ திரிஞ்சாலும் சிலர்கூட பேச மறுக்குறதும் கண்மறைவிலே இருந்தாலும் அம்மாவப்பத்தி எப்பவோ சொன்ன ஒரு வார்த்தைக்காக மனசுல வெஞ்சினத்தோட அவனுக்காகக் காத்திருக்கிறதும் எனக்குன்னே இருக்குற இன்னொரு கிறுக்குத்தனம். குப்புறக்கவுத்த கூடை மாதிரி மனசு நெறைய அன்பை வெச்சிக்கிட்டு அடிக்கடி சீண்டுறதும் சின்னதா ஊசி வெச்சி அப்பப்போ குத்திக்கிட்டே இருக்குறதும் கூடப்பொறந்த இன்னொரு கொணம். அதுல அடிக்கடி படுறது அம்மா.

வெவரம் தெரிஞ்ச நாள்ளெயிருந்து என்னப்பாங்குறதைத் தவிர்த்து என்னடா, ஏண்டான்னு ஒரு வார்த்தை கூட வையாத அப்பாவைப் பாத்து பெத்துக்க/தத்துக்கப்போற கொழந்தைங்ககிட்டே அப்படியே காட்டணும்ன்னு நெனைக்கிறதும் குழந்தைங்ககிட்டே அப்படியே குழந்தையா உருமாறி மனமாறுறதும் குட்டிங்கிற அண்ணமககிட்டேயும் ஸ்னேக்ஸ்ன்ற தோழர் மககிட்டேயும் எப்போ பேசுனாலும் மனசுல ஒரு இலை உதிர்கிற அதிர்வை உணரும்போதும் இன்னும் நான் குழந்தைதானோன்னு ஒரு கிறுக்கு இருக்கு.

அம்மா திட்டுனுச்சுன்னு காட்டுக்குள்ளே போயி மணிக்கணக்கா இருந்து திரும்புறதும் பட்டை வளந்து பெயர் சுருங்கிப்போனாலும் அங்கே இருக்குற மரத்து மேல இன்னைக்கிம் எம்பெயரைப்பாக்க முனையுறதும் பனைமரமா தேடிப்பாத்து அரசங்கன்னு பிடுங்கி கோயிலுக்கெதிரே நட்டுவெச்சி இன்னைக்கி பெரியமனுசனானவனை செல்லமா தடவிப்பாக்குறதும் சிலிர்ப்பா இருக்குற கிறுக்கு. நடுராத்திரிலெ எழுந்து சித்தார்த்தனா கிளம்ப ஆசைப்படுறதும் அடுத்த நிமிஷமே ஊறுதராத விலங்கு, கையால பறிக்கிற அளவுக்குத் தொங்குற சாப்பிடுறபழம், பாக்க மட்டுமில்லாம குளிக்கவும் முடியுற அருவி, பாம்பு பூச்சி, வண்டு இல்லாத காடு இதெல்லாம் எப்போ கெடைக்குதோ அப்பொ ஆகலாம்னுன்னு பூனை வளத்து அதுக்கு பாலுக்கு மாடு வளர்த்து மாட்டைப் பாத்துக்க ஒரு பொம்பளைய வெச்சிக்கிட்டு, சாமியாரு சம்சாரி ஆன கதை மாதிரியும் இருக்கு இன்னொருபக்கம் கிறுக்கு.

தேங்கா புடுங்கிப்போடும்போது சத்தம் கேக்காம இருக்க எல்லாரும் கத்தணும், மாங்கா புடுங்கி துண்டுல கட்டி வெரணும்ன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து தண்ணி இல்லாத கெணத்துக்குள்ளே அடுப்பு செஞ்சி மாங்கா பச்சடியும் முருங்கைக்கீரையும் அவிச்சு திண்ண கதைக்கி முன்னால பொத்திப் பாதுகாத்த நல்ல பைய, பலவருஷம் பள்ளிக்கூடத்திலே மொதல்மாணவன்ற மூடி. அதனாலேயே பல அழகிங்க. சாவுறவரைக்கும் மறக்காத ஆம்பளைச்சட்டை அழகிங்களும் உலகத்திலேயே அழகுன்னு நெனைக்கிற அவங்களோட மொட்டு பார்வைங்களும் வாழ்க்கையில அனுபவச்ச வரம். ரே, சை, ஷினின்னு மனசைப் பிசைந்த தோழிகள்ன்னு வாழ்க்கை ரயில் ஓட்டம். எல்லாரும் அங்கங்கே எறங்கிப்போக இது மட்டும் இன்னும் ஓட்டம்.

உயரமான கெளைமேல உக்காந்து ஓ தோழர்களேன்னு காட்டுக்குள்ளே தனிமையில் மாநாடு போடுறது சிங்கப்பூரின் புகித்பாதோக் வரைக்கும் உண்டான கதை.

யோசிச்சி யோசிச்சு நாமே முடிவு பண்ணுனதா இருந்தாலும் நேத்துவரைக்கும் செஞ்ச பலகாரியங்கள் நாந்தாண்ட்டா உன்னை அப்படிச் செய்யவெச்சேன்னு இன்னைக்கிச் சொல்லிக்காட்டுறமாதிரி இருக்க, இதோ அடுத்து செய்யப்போறதை நாம தீர்மானிக்கணுமா இல்லை அது தீர்மானிக்குமான்னு குழம்புறதும் விதவிதமான வழிகளைத்தேடி ராமகிருஷ்ணம், காயகல்பம், வாழும்கலை, சகஜமார்க்கம், அம்மான்னு அலையிறதும் ஆனாலும் வளைவுகளையும் அது தரும் வாழ்க்கையையும் தொடர்றதும் எங்க புடிச்ச கிறுக்குன்றதும் எப்போ அது தெளியின்றதும் இன்னக்கி வரைக்கிம் தெரியலை!

நெனச்சிப்பாத்தா எல்லாம் ஒருமாதிரி கிறுக்குத்தனமாத்தான் இருக்கு, இல்லெ?!


அன்பன்
எம்.கே.

இந்த விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்ட மூக்கன் அவர்களுக்கு நன்றி.


Monday, April 09, 2007

பாலி - ஒரு புகைப்படக்கண்காட்சி (1)

ரொம்ப நாளா எதுவும் எழுதத்தான் நேரமில்லை, அதுக்காக இப்படிச் சும்மாவே போடலாமான்னு முடிவு பண்ணி போட ஆரம்பிச்சாச்சி.

இனி அப்பப்போ இதுமாதிரி நான் எடுத்த படங்களைப்போடலாமுன்னு இருக்கேன். பாத்துட்டுச்சொல்லுங்க.

Photo Sharing and Video Hosting at Photobucket

மலைமேல ஒரு ஏரி, அதனுள்ளே ஒரு கோயில்!copyright(c)

Sunday, January 14, 2007

சென்னைப் புத்தகக்காட்சியில் எனது புத்தகம்.

நீண்டநாள் கனவு நிஜமாயிருக்கிறது. சென்னை புத்தகக்காட்சியில் எனது முதல் சிறுகதைத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தலைப்பு மருதம். அன்னம் பதிப்பக்கத்தாரின் வெளியீடு. நான் மிகவும் ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான திரு.நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து இன்னும் இரண்டு வெளியீடாக சுப்பிரமணியன்ரமேஷ்(மானஸஜென்) எழுதியிருக்கும் கவிதைத்தொகுப்பு ஒன்றும் திரு.இந்திரஜித் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

புத்தகக் காட்சிக்குச் செல்லும் நண்பர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்தில் இப்புத்தகங்களைக் காணலாம்/வாங்கலாம். நன்றி.

வாழ்வின் நெகிழ்ச்சியான இத்தருணத்தில் 'கை நிறைய கோதுமை அள்ளிக்கொடுத்தவர்களுக்கு' நான் நன்றி சொல்லுவது அவசியமாகிறது. அது தனிமடலாய் வரும்.

அன்புடன்
எம்.கே.குமார்.

Search This Blog