Friday, October 14, 2011

தங்கமீன் – இணைய இதழ் ஆண்டு விழா - ஒரு பகிர்வு

தங்கமீன் இணைய இதழின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக அரங்கில் கடந்த 9 அக்டோபர் அன்று இனிதே நடந்தேறியது. கேசரி-வடையைத் தாண்டியும் விழாவில் இனிமை சேர்த்தன பலவிஷயங்கள்.

சிங்கப்பூர் தமிழ் விழாக்களில் சில ”கிளிஷேக்களை” நீங்கள் எப்போதும் காணமுடியும்.

 1. முதலில் ’கேசரி – வடை – காஃபி’. கேசரி எப்படியிருந்தாலும் இனிப்பிருந்தால் போதும், குறையொன்றும் சொல்லமாட்டார்கள்; வடை அப்படியில்லை. மெத்து மெத்தென்ற அத்தை மகளின் கன்னம் போல இருக்கவேண்டும், அதுதான் வடை (நான் சொல்லவில்லை; நண்பரொருவர் சொன்னது!).

 2. ’வியாபாரத்தில் வெற்றி பெற்ற தமிழார்வம் மிக்க ஒருவர்’ அந்த விழாவுக்குத் தலைமை தாங்குவார். இதில் எனக்கு சந்தோசமே! உண்மையில் சிங்கப்பூரைப்போல இந்த அளவுக்கு நாட்டம் கொண்டு செயல்படும் தமிழார்வம் கொண்ட வியாபாரஸ்தர்கள், வேறொரு நாட்டில் இருப்பார்களா என்பது சந்தேகமே!

 3. மூன்றாவது, அவ்வாறு தலைமை தாங்குபவர்கள் “நாம் தாங்க முடியாத” அளவுக்கு தலைமைப்பேச்சில் அல்லது சிறப்புப்பேச்சில் ’மொக்கை’ போடுவார்கள். இது ஒரு காலக்கொடுமை!

இத்தகைய கிளிஷேக்களிடையேயும், இந்த விழாவில் சில நிறைவுகள் இருந்தன.

விழாவில் தலைமையேற்ற ’வினாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ இயக்குனர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் வெகு இயல்பான நகைச்சுவையில் கவர்ந்தார். இவரது பேச்சை இப்போதுதான் கேட்கிறேன். மொக்கை வகையில் இது சேறாது.

அடுத்ததாய், செல்வன் பார்கவ் ஸ்ரீகணேஷ். சிங்கப்பூரின் இளைய தலைமுறை, ’டமில்’ பேசக் காணக்கிடைப்பதற்கே தானதவம் செய்திருக்கவேண்டும். அதிலும் இந்த நண்பர் அருமையான தமிழில் அளவாடினார். சினிமாவையும் அரசியலையும் சிறிது சாடினார். இன்னும் இருபது வருடங்களில் ஒரு தமிழ் மந்திரி அல்லது சிண்டா, குண்டா என ஏதாவதொன்றிற்கு இவர் சி.இ.ஓ ஆகத் தகுதியுள்ளது விளையும் பயிராய்த் தெரிகிறது.

எதிர்வீட்டு அழகி கொடுத்த எதிர்பார்பாரா முத்தம் போல எதிர்பாரா இன்ப அதிர்ச்சி ’தென்றல்’ ஆசிரியர் வித்யாசாகரிடமிருந்து எனக்கு. தென்றலைப் படித்தபோது எனக்குத் தெரியும், இவர் சினிமாவை ரசிப்பவர் என்று. அன்று மேடையில் எனது சினிமா விமர்சனத்தைப் புகழ்ந்தார். ரசித்ததைப் பகிர்ந்தார். கூட, ’சினிமா கதாநாயகன் போல இருக்கிறார் இந்த சினிமா விமர்சகர்’ என்று வேறு என்னைக் கொஞ்சம் பூரித்தார். தவிர, வழக்கம் போல நகைச்சுவையை வீசினார். கூட்டத்தைத் தன் பக்கம் அள்ளினார். கேட்கும் கூட்டம் சிரிப்பதைப் பார்த்து தன் மனம் புளகாங்கிதப்படும் பேச்சாளன், இன்னும் நகையாய்ப் பேசுவான். அந்த வகை இவர்! அருமையான மனிதர்.

கமல்ஹாசனின் பாடி லாங்குவேஜ்ஜையும் குரலையும் வார்த்தைகளையும் தேர்ந்து வெளிப்படுத்திய திரு.ஆர்.இராஜாராம் (துணைத் தலைவர், வளர்தமிழ் இயக்கம்) ஒரு இனிய வித்தியாசம்.

தினேஷ் – மலர்விழி நிலாப்பாடல்களை பாட முயற்சித்தார்கள். வெகுசிறப்பாய் இல்லாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாய் இருந்தன.

மணிமாறன் குழுவினரின் நடனம் நன்றாய் இருந்தது. எடுத்துச் சேர்ப்பதற்கு உபகரணங்கள் இல்லாததால் நிறைவாகத் தெரியவில்லை.

அடிக்கடி ’கடி’ கொடுத்த மைக்கையும் தாண்டி நிகழ்ச்சியை இனிமையாகவே நடத்தினார் வசந்தம் புகழ் ஜி டி மணி.

கைக்குக் கிடைத்த விழாமலர் தரம்; புகழ் நிரந்தரம். கண்ணுக்கு கிடைத்த நட்பு வட்டாரங்கள், வாய்க்குக் கிடைத்த கேசரி, காதுக்குக் கிடைத்த தீந்தமிழ் என எல்லாம் இனிமை மயம்; இன்பமயம்.

தங்கமீன் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.

எம்.கே.குமார்

Thursday, September 22, 2011

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் சொல்லும் சேதி

நாட்டுக்காக உழைத்த நல்லவர், வயதாகி, உயிரோடிருக்கும் காலத்தில் வழங்கப்படும் உயரிய பதவியாகத்தான் ஜனாதிபதி பதவி, இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் இருக்கின்றது. சிங்கப்பூரிலும் அப்படித்தான்! இந்தியாவில் எம்பிக்கள் ஓட்டு போடுவர்; இங்கு எல்லா மக்களும்! 12 வருடங்களாக அதிபராய் இருந்த திரு. செல்லப்பன் ராமநாதன் அவர்கள் தாம் இனி போட்டிபோடப்போவதில்லை என்று சொல்லும் முன்பே ஆங்காங்கு தான் போட்டியிடப்போவதாகக் குரல்கள் எழுந்தன. நான் வந்தால் நாய் தருவேன், ஆணையிட்டால் ஆனை தருவேன், போன் பண்ணினால் பூனை தருவேன் என்றெல்லாம் சில சவால்கள் வலம் வந்தன. சட்ட அமைச்சர் திரு கா சண்முகம் சாதரணமாய்ச் சொல்லிப்பார்த்தார். இது சாதாரண பதவி; எதையும் இதன்மூலம் உருவாக்கமுடியாது, ஆம் இல்லை என்று தான் சொல்லமுடியும் என்று ‘சொல்லாமல்’ சொன்னர். புரிந்தவர்களுக்குப் புரிந்தது. புரியாதவர்களுக்கும் புரிந்தது, ஆனால் அவர்கள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. சிங்கப்பூரில் ஜனாதிபதிக்குப் போட்டியிடுவதை விட, போட்டியிட அனுமதியளிக்கும் பத்திரத்தை, அதற்கான குழுவிடம் இருந்து வாங்குவதே ’இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது மாதிரி’ கடினம். தனம், கணம், வனம், பாரிய வளம் என்று ’மில்லியனில்’ பொருத்தம் பார்க்கப்படும். காரணம், சிறை காக்கும் காப்பு எவனும்செய்யும்; இது ’தனம்’ காக்கும் காப்பு. நாட்டின் பல பில்லியன் சொத்தைக் காக்கும் பொறுப்பு. ஏழாவது அதிபராகப் பதவியேற்க நான்கு ’டான்’கள் (திருவாளர்கள் டோனி டான், டான் செங் போக், டான் கின் லியான், டான் ஜீ சே) போட்டி போட்டார்கள். ’திரு டோனி டான்’ பல காலம் நாட்டுக்காய் உழைத்தவர். துணைப்பிரதமர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். அறிவிக்கப்படாத ஆளும் அரசாங்க வேட்பாளராய் நின்றார் அவர். ’திரு டான் செங் போக்’, ஆளும் கட்சியிலே 30ஆண்டுகள் இருந்தவர். இப்போது இல்லை. மருத்துவர். இலவச மருத்துவமனைக்குச் சொந்தக்காரராம். ’திரு டான் கின் லியான்’ அரசாங்கத்தின் நிறுவமொன்றில் பெரிய பதவியில் இருந்தவர். ’திரு. டான் ஜீ சே’ எதிர்க்கட்சி குழுமத்தைச் சேர்ந்தவர். மக்களின் நாடித்துடிப்பை பதம்பார்த்தவராய் களத்தில் குதித்திருந்தார். பிரச்சாரத்தில் இவர் பேசியதைப்பார்க்க பல ஆயிரம் மக்கள் திரண்டதைப் பார்த்து நாளிதழ்களே மிரண்டன. கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் (நானும்) எதிர்பார்த்ததைப்போலவே திரு டோனி டான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் ஏழாவது அதிபராகப்பொறுப்பேற்றார். வேறுபாடுகளைக் கடந்து எல்லா சிங்கப்பூரர்களையும் இணைக்கப்போவதாக, அவர் சொல்வதன் அர்த்தம் புரியாமல் அவர் பேசமாட்டார். அவருக்கு வாழ்த்துகள். இத்தகைய தேர்தல்கள் எனக்கு கொஞ்சம் பயத்தைத் தருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாய் அப்துல்கலாம் அவர்கள் ஆனதைப்போல மட்டுமே, சிங்கப்பூரில் இந்தியரோ மலாய்காரரோ அதிபராக ஆக முடியும். திரு. தேவன்நாயரும், திரு எஸ்.ஆர் நாதனும் அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடுமையான தேர்தல்கள் அதற்கான வாய்ப்பைக் குறைக்கவே செய்யும். எம்.கே.குமார்

கறிக்கு சண்டை போடலாம்; Curryக்கி சண்டையா?

’காதல்’ படம் பார்த்தீர்களா? 10வது படிச்சிக்கிட்டு இருக்கும் பொண்ணு பாலத்துக்குக் கீழே உக்காந்து ’காதல்’ பண்ணுமே அந்தப் படம். சரி, அது என்னமோ பண்ணிட்டுப்போவுது விடுங்க, நம்ம கதைக்கி வாங்க. அந்தப்படத்துல, பூப்புனித நீராட்டுவிழா (அடடா! எவ்வளவு அழகா நம்மாளுங்க பேரு வெச்சிருக்காய்ங்க இந்த விழாவுக்கு!) நடக்கிற விருந்துல, பிரியாணியில ரெண்டு துண்டு கறி, கூடப்போடச்சொல்லி அருவா காட்டுவான் ஒருத்தன். அதனால பின்னாடி சண்டையும் நடக்கும். அதுதான் கறிக்கி சண்டை! இப்போ சிங்கப்பூர்ல ரொம்ப ஃபேமஸா நடந்துக்கிட்டு இருக்க போட்டி curryக்கி சண்டை! சிங்கப்பூரில், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கூடுகளின் ஒரு மாடியில் அடுத்தடுத்த வீட்டில் ஒரு சிங்கப்பூர் இந்தியர் குடும்பமும் சீனாவிலிருந்த வந்த ஒரு சீனக்குடும்பமும் வசித்துவந்தது. ஒட்டுமொத்த சிங்கப்பூரில், வீட்டில் சமைத்துச் சாப்பிடும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரில், இந்த இந்தியர் குடும்பம் வைத்த மீன் குழம்பு பக்கத்து வீட்டிற்காரருக்கு வாசனையாய்ச் சென்று எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மிளகாய் தான் எரிச்சல் கிளப்பும், இங்கே மீன் மசாலா எரிச்சல் கிளப்பிவிட்டு விட்டது போலும். சரி, நம்ம வீட்டு ’டூரியன்’ எதிர்வீடு, எதிர் பிளாக் என ஏரியா முழுக்க, ஏகக்கலவரம் பண்ணவில்லையா என்று அவரும் இருந்திருக்கலாம். படி தாண்டி வந்து பங்காளிச்சண்டை போட்டுவிட்டார் போலிருக்கிறது. பத்திக்கொண்டது இணையதளத்தில். குழம்பு எங்களின் உரிமை, குழம்பு சமைப்பது எங்களது குலத்தொழில், குழம்பு சமைப்பது எங்களின் பாரம்பரியம், குழம்பு சாப்பிடுவது எங்களின் வீரம் என்று ஒரு பெண் வெப்கேமுக்கு முன்னால் வந்து வாயை வாயைக் காட்டிவிட்டுப்போனார். வெப்கேமிராவைக் கடிக்காத குறைதான். ’ஆன்லைனில்’ வந்த அதை ’பிரிண்ட்லைனில்’ போட்டுவிட்டது ஒரு பத்திரிகை. ஏரியா ஏடாகூடமாகிவிடுமோ என்று பயந்திருந்தவேளையில் அமைச்சர் தலையிட்டு துள்ளிக்கொண்டுருந்த மீன் கறி பிரச்சனையை துடைத்து எறிந்துவிட்டார். மீன் கறி முடிந்தது. மீன் எலும்பு இன்னமும் இருக்கிறது. இணையத்தில் இப்போதும் அது துடித்துக்கொண்டிருக்கிறது. எம்.கே.குமார்

Tuesday, August 02, 2011

வானம்

தனது பணக்கார காதலியுடன் புத்தாண்டை ஐந்துநட்சத்திர விடுதியில் கொண்டாடுவதற்கு 40,000 ரூபாய்க்கென (S$ 1111.11) தாறுமாறாய் அலையும் (பணக்காரன்போல நடிக்கும்) ஒரு இளைஞனின் கதை, கொடுக்கவேண்டிய வட்டி மற்றும் அசல் என அதே 40,000 ரூபாய்க்கு தனது ஒரே மகனை படிப்பை நிறுத்திவிட்டு கூலித்தொழிலாளியாய் கடன்கொடுத்தவர் அமர்த்திக்கொள்ள, அந்த பணத்தை எப்படியாவது கொடுத்து தனது மகனை மீட்டு படிக்கவைக்கவேண்டும் என்று கணவனை இழந்த ஒரு கிராமத்து எழைத்தாயும் அவரது வயதான மாமனாரும் படும் போராட்டக்கதை, ஒரு இந்துமத ஊர்வலத்தில் எதேச்சையாய் மாட்டிக்கொண்டு, சந்தேகக் கண்ணுடன் அவமானப்படுத்தப்பட்டதால் திசை திரும்பிப்போன தனது தம்பியைத் தேடும் ஒரு அப்பாவி முஸ்லீமின் கதை, தனக்குப் பிடித்த இசையில் தான் கண்டிப்பாய் வெல்வேன் என தன்னம்பிக்கையுடன் இருக்கும் சகமனித உணர்வுகள் குறித்த புரிதலற்ற ஒரு நவீன கலாச்சாரத்து மேல்தர இளைஞனின் கதை, தன்னை வைத்து சம்பாதித்தது போதும் தானே தன்னுடைய திருநங்கைத்தோழியுடன் சேர்ந்து தனியே தொழில் தொடங்கி கொஞ்சம் காசு சேர்க்கலாம் என்ற நினைப்பில் தனியே கிளம்பும் ஒரு உடல்வணிகப்பெண்ணின் கதை என ஐந்து சிறுகதைகளை ஒன்றாய் நேர்க்கோட்டில் செதுக்கியிருக்கிறது இந்த வானம்.

உண்மையைச் சொல்லப்போனால் தனித்தனிப் படமாய் இயக்கும் அளவுக்கு வீறுகொண்ட கதைக்களனும் செறிவும் கொண்ட விதைகள் இக்கதைகள். சிம்புவின் பகுதியைத் தவிர மற்ற நான்கு கதைகளும் நெஞ்சை உலுக்குகின்றன.

ஐந்து கதைகளில் ஒன்றுதானே என்று எந்த கதையிலும் இயக்குனர் சமரசம் கொள்ளாமல் எல்லாக் கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களையும் பொருத்தமானவர்களாய்த் தேர்ந்தெடுத்து போட்டிருப்பதே கதையின் வீச்சை நமக்குள் ஊடுருவிக் கொண்டுசெல்கின்றன.

சரண்யா, பிரகாஷ்ராஜ் போன்ற ’டாப் ஸ்டூடன்ஸ்’களை விட்டுவிட்டாலும் அனுஷ்கா, அவருடைய தோழியாக வரும் திருநங்கை, பரத், அவரின் காதலியாக வரும் ‘பசங்க’ படத்தில் வந்த ’சோபிக்கண்ணு’ வேதா (நம்பவே முடியவில்லை, நல்ல நடிப்பும் தேர்வும்) என அனைவரும் நடிப்பில் தேர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் மட்டுமே வரும் ராதாரவி, பசங்க ஜெயபிரகாஷ், டாக்டராக வரும் இன்னொரு நடிகர், ’நல்லா வெச்சு காப்பாத்துறேன்’ புகழ் பிரமானந்தம், பிரகாஷ்ராஜின் மனைவியாக வரும் சோனியா அகர்வால், கிட்னி புரோக்கராய் வரும் இருவர்கள் என ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஒவ்வொரு கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முழுமையான ஒன்றுதலுடன் படத்தை முன்னிறுத்தியிருக்கிறார்கள்.

நடிகர்களில் ஒரே ஒரு திருஷ்டியாய் சிம்பு. வேறு ஏதாவது ஒரு புது இளைஞனைப் போட்டிருந்தால் கூட இவரது கதைப்பகுதி இன்னும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்திருக்குமோ என்னவோ! ”என்ன வாழ்க்கையிடா இது..”என்று அவர் நம்மைப் (கேமிராவைப்) பார்த்துச் சொல்வது ’என்னப்பா செய்யிறது, உங்கப்பா டிரவுஸர் அவுத்த நேரம் அப்படி’ என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு எரிச்சல் வரச்செய்கிறது. அதுவும் இறுதி நேரத்தில் கூட அவர் அப்படி பேசுவது “ஓகே சார்.. ஷாட் ரெடி..ஆக்‌ஷன்” என்று டைரக்டர் சொல்வது போல நமது காதில் கேட்கிறது, அந்த அளவுக்குச் செயற்கைத்தனம்.

கூட, ’நயன் தாரா பேட்டி இருக்காம்பா டிவில, கண்டிப்பா பாக்கணும்’ என்பன போன்ற ’கொழுப்பு’களும் சிம்புவுக்குக் கூலி கொடுக்கும். (தனுஷப்பார்த்து கொஞ்சமாவது திருந்துங்க சார். அழுவுறது மட்டுமே நடிப்புன்னா, கமலுக்கு இந்நேரம் 50 தேசியவிருது கிடைச்சிருக்கணும்!!!)

வட்டிக்குக்கொடுத்தவன் பள்ளிக்கூடத்தில் வந்து குழந்தையை இழுத்துச்செல்லும்போது கையாளாகாத தனத்துடன் நிற்கும் ஆசிரியரில் இருந்து, ’நாங்க அவங்க இல்லையா.. ’என்று ஒரு முஸ்லீம் அப்பாவி, போலீஸ் அதிகாரியிடம் மன்றாடுவது வரை சமுதாயத்தின் விழுதுகளைத் துளிர்க்கச்செய்கிற காட்சிகள் அதிகம்.

40,000 ரூபாயில் ஒரு குடும்பத்தின் தலைமுறையும் கல்வியும் எதிர்காலமும் நாட்டமுடியுமென்கிற அவல நிலையில் ஒரு குடியானவன் இருக்கின்ற வாழ்க்கைச் சூழ்நிலையையும் அதே 40,000 ரூபாய்க்கு ஒரு இரவு புத்தாண்டுக்கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம் என்கிற அளவுக்கு சமுதாயத்தின் இரு நீண்ட அகன்ற பொருளாதார விளைவுகளையும் வேறுபாடுகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருப்பதிலும், ஒரு பெண் என்ன கொடுத்து உயிருக்குப் போராடும் தன் தோழியை காப்பாற்றுவாள், நகை, பணம் என்பதையெல்லாம் தாண்டி “விலைமாதாய்” இருந்தாலும் அவளாய் ’கொடுக்கும் அளவுக்கு” ”அவளுக்கென்று ஒரு கற்பு இருக்கிறது அவளிடம்” என்பதைக் காட்டும் இடத்திலும், தான் அவமானப்படுத்தியவனே தன்னைக் காப்பாற்றுவதை ஒரு புதிய புரிதலாக எடுத்துக்கொள்ளும் நவீன இளைஞனின் புன்னகைத்தலிலும் என, இயக்குனரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

ஆண்கள் – பெண்கள் கழிப்பறையைப் பார்த்துவிட்டு எங்களுக்குன்னு ஒண்ணு இல்லை , எந்தப்பக்கம் போறது என திருநங்கை, சலனமற்று கூறும் உடல்மொழியில் சில சிரிப்புகளும் எனது பின்னிருக்கையில் கேட்கத்தான் செய்தன. காலமே மாற்றும்.

கத்திமேல் நடக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திலும் ஒரு நெகிழ்ச்சியான உணர்வை படம் தரத்தவரவில்லை, இறுதிக்காட்சிகளைத் தவிர! இறுதிக்காட்சிகள் ஆஹாஓஹோவெல்லாம் இல்லை!

ரயிலில், போலீஸ் ஸ்டேஷனில் என படம் ஓரிரு இடத்தில் ஒன்றாகும்போது கமல்ஹாசன் ஞாபகம் வருகிறது. (யாரிடம் சொல்லாதீர்கள், நல்லவேளை கமல் இக்கதையைக் கேட்டிருந்தால் நானே எல்லாக் கேரக்டரிலும் நடிக்கிறேன் என்று சொல்லி 20 வேடங்களிலும் நடித்திருப்பார் என படம் பார்க்கும்போதே நினைத்தேன்... நானும் கமல்ரசிகன் தானாக்கும்!)

காசு பற்றிய ஒரு பாடலும் உடல்வணிகம் பற்றிய இன்னொரு பாடலும் கதைக்கேற்று சிறப்பிக்கின்றன. ’எவண்டி உன்னைப் பெத்தான் அவன் கையில கெடைச்சான் செத்தான்’ – கலக்குங்க சிம்பு!

இத்தகைய ஒரு பெரியவரிடமிருந்து காசைத் திருட மனம் வருவது அதுவும் அந்தப்பெண்ணுக்காய் என்பது கொஞ்சம் அதீத உணர்வோ என்று தோன்றியது, கஞ்சா, போதை வாலிபர்கள் தவிர! சிம்புவின் திருந்தும் இடம் தவிர (அதுவும் ஓவர் ஆக்டிங்!) அவருடைய வேறு எந்த கதைப்பகுதியும் நெஞ்சுக்கு நெருக்கத்தில் வரவில்லை.

சந்தானம் கலாய்க்கிறார்.

என்ன..லா...படம் எடுக்குறான், கதையப் போட்டு ’ரோஜாக்’ பண்ணி வெச்சிருக்கான் என்று ஒரு நண்பர் சிலாகித்துக்கொண்டார்.

சொல்லாத முடிவுகளே கணமிகுந்தவை. மூட்டைப்பூச்சிகளாய், அட்டைப்பூச்சிகளாய், கண்ணுக்குத்தெரியாத சமுதாயப் புற்றுநோய்களாய் அடுத்தவர் வாழ்வை உறிஞ்சும் கிட்னி புரோக்கர்களும், ஏமாற்றுப்போலீஸ்காரர்களும், வட்டிக்காரர்களும், பெண்ணுடல் வியாபாரிகளும் புரோக்கர்களும் என்ன ஆவார்கள் என்பதை யாரும் சொல்லவில்லை. இந்த வானமும் சொல்லவில்லை; ஆனால் அந்த ’வானம்’ பார்த்துக்கொண்டிருக்கிறது.

வானம் – அத்தனைக்கும் ஒரே சாட்சி!


எம்.கே.குமார்.

Friday, May 27, 2011

பயணம் - பறக்க மறந்த உச்சம்

ஒரு விஷயத்தை முதலில் சொல்லவேண்டும். அது, ’மொழி’ படம் ஏன் மகத்தான வெற்றிபெற்றது என்பது, அதை தயாரித்த பிரகாஷ்ராஜுக்கும் இயக்கிய ராதாமோகனுக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதை அறிந்துகொண்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.

அதை அறிந்துகொண்டதாக இருவரும் நினைத்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ ’அபியும் நானும்’ ’பயணம்’ போன்ற அரைகுறைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அரைகுறை ஆனாலும், தற்போதைய சமூக, சினிமா சார்ந்த அபத்தங்களுக்கும் ஆபாசங்களுக்குமிடையில் இவை, புறங்கையால் அப்புறப்படுத்தவேண்டியவை அல்ல என்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும். காரணம், ஒரு கல்யாணமண்டபம் கட்டலாம், அல்லது கட்சி ஆரம்பிக்கலாம் என்பதையெல்லாம் விடுத்து, சொந்த பணத்தில் ’நல்ல படம்’ எடுக்கவேண்டும் என்று நினைக்கும் ’பாவம்’ பிரகாஷ்ராஜுக்காக.

சென்னையிலிருந்து டெல்லி கிளம்பும் ஒரு விமானம் கடத்தப்படுவதும் அதை மீட்க, அதிரடிப்படை அதிகாரியும் தலைமைச் செயலாளரும் போராடுவதும் தான் கதை.

ராதாமோகனும் பிரகாஷ்ராஜும் தமிழ்ப்பட உலகில் நகைச்சுவை நுண்ணுணர்வு கொண்டவர்களில் சிலர் என்பது தொடர்ந்து வரும் அவர்களது எல்லாப்படங்களிலும் சில காட்சிகளை உருவாக்குவதையும் அதை ஆதரிப்பதையும் அறிந்திருந்தால் நாம் உணரமுடியும். கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்துத் தருவதாலேயேஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிடும் அளவுக்கு நாமும் இந்த சமுதாயமும் உருவாகியிருப்பதை அவர்கள் கையாண்டதும் இந்த நுண்ணுணர்வின் அடிப்படையில் தான்.

பத்திரிக்கை தர்மத்தை உயிரோடு கொளுத்தி ’கருமாதி’ பண்ணி பலவருடங்கள் ஆகிவிட்ட வேளையில், பத்திரிக்கைகள் படுத்தும் பாட்டை இப்படத்தில் காட்ட முனைந்ததில் உச்சம் இல்லை. மேலோட்டமே முன்னிற்கிறது. நான் பார்க்கவில்லை, இருந்தாலும் படித்த விமர்சனங்களிலிருந்து, ”பீப்ளி லைவ்” திரைப்படம் அதை மிகச்சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது என்றறிகிறேன். வசனங்களாலும் நேர்த்தியான காட்சிகளாலும் ”உன்னைப்போல் ஒருவன்” இதை சிறப்பாகக் கையாண்டதாக நினைக்கிறேன்.

சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவைக் கிண்டலடிப்பது, கலைஞரைத் திட்டிக்கொண்டே ’இலவச டிவி’க்கு நாம் வரிசையில் நிற்பதைப்போன்றது மட்டுமல்லாமல், கிண்டலடிக்கும் சினிமாவை ரசித்துவிட்டு வெளியில் வந்து “தலைவனுக்கு” பாலாபிஷேகம், பீராபிஷேகம் அல்லது கொடியாபிஷேகம் பண்ணுவதும் போலத்தான். தியேட்டரில் இது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு. தமிழர்களுக்கு தமிழில் ’பிடிக்காத’ வார்த்தை ’திருந்துவது’. நாமும் திருந்தமாட்டோம், நம்மைத் திருத்த வருவதாக நினைத்துக்கொண்டு வருபவர்களையும் திருத்த மாட்டோம்.

இப்படத்தில் வரும் ’ஷைன்ஸ்டார்’ ’காந்த்’ நடிகரும் அவரது பக்கத்து இருக்கைக்காரர் செய்யும் அபிநயங்களும் ரசிக்கத்தான் வைக்கின்றன.
போட் கவிழ்கிறது, கேப்டன் கடலில் குதிக்கச்சொல்கிறார் எனச்சொல்லவும், உடனே ஒருவன், கேப்டன்னா விஜயகாந்தா என்று சீரியசாய் கேட்பதும் நம் நினைவில் வரும் பிரகாஷ்ராஜ்ஜின் இன்னொரு படம். (இனிமேல் அப்படிக் கேட்கமுடியாது நண்பரே, 42 சீட்டாம்; டவுன் ஏரியாவில் தோற்றதெல்லாம் போக, பாதியாவது தேறும் போல இருக்கிறது.) ஆக, பிரகாஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணி இதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதே ஒரு கவன ஈர்ப்புதான்.

படைப்பாளர்களைக் குழுவாக்குவதில் பல உத்திகள் காலம்காலமாய்க் கையாளப்படுகின்றன. சில ’சுய’ உதவிக்குழுக்களை அவர்களே தமக்குள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கழிப்பறை, நவீனகழிப்பறை, அதிநவீன கழிப்பறை போல இலக்கியவாதி, நவீன இலக்கியவாதி, பின் நவீனத்துவ இலக்கியவாதி என, நண்பர் ”மானஸாசென்”னின் ஒரு கவிதையைப்போல குழு உருவாக்கம் படைப்பாளர்களிடையே விரிகிறது.

இது தவிர தற்போதைய படைப்பாளிகளில் படைப்பாளி, சுயசாதி மறுப்பாளரோ அல்லது சுயசாதி சார்புடையவரா என்பதும் அண்மையில் நடக்கும் ஒரு நவீனத்துவம். காண்க (http://www.kalachuvadu.com/issue-134/page22.asp)

இந்நிலையில் ராதாமோகன் போன்ற படைப்பாளிகளை எந்தக்கட்டுக்குள் கொண்டுவருவது எனத்தெரியவில்லை. கிறித்துவ மத கட்டமைப்பில் மன்னிப்பு வழங்குதலும் தன்னை இகழ்ந்தவனை பொறுத்து அமைதி காத்தலும் பெரும்பான்மையானவைகளாக நீண்டகாலம் முன்னிருத்தப்பட்டு வருகின்றன. இவற்றை இப்படத்திலும் பயன்படுத்தியிருப்பது மூலம் படைப்பாளி ராதாமோகன், எந்தக் குழுவுக்குள் வருகிறார் எனத்தெரியவில்லை. எந்த மதத்துக்கும் இழிவு வராது (கடத்துவது முஸ்லீம், மன்னிப்பது கிறித்துவம், நடப்பது திருப்பதியில்) என்பதாக இதை ஒரு ’பொதுப்புத்தியாக’ வடிவமைத்தாலும் விமான நிலையத்திற்கருகில் தேவாலயம் இருப்பதும் அதன் மணியொலியை ரகசிய ஒலியாக்க முனைவதும் ராதாமோகன் என்ற படைப்பாளியையும் அவரது இப்படைப்பையும் ஒரு குழுவுக்குள்ளே அடக்க ஏதுவாக அமைகின்றன.

ஒரு மாற்றத்துக்காக, ஒரு சாமியாரை விமானத்துக்குள்ளே வைத்து, அவசர நேரத்தில் தியானம் செய்யச்சொன்னால் என்ன என்ற குறுக்குச்சிந்தனைக்கு, சாமியார், சல்லாபம் செய்யாமல், தியானம் செய்வதாய்க் காட்டினால் நம்பிக்கைக்குறைவாக இருந்தாலும் இருக்குமோ என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ.

கார்ல்மார்க்சையும் காந்தியையும் படித்தவன் ’அல்பாயுசு’வில் போவான் என்பதும் காலங்காலமாக கொள்ளப்படும் புரட்சியாளனின் / புரட்சியின் முடிவுக்கு எடுத்துக்காட்டு என்பதாகவே அதையும் முன்மொழிந்திருக்கிறார் ராதாமோகன்.

விமானத்துக்குள்ளே அச்சச் சூழ்நிலை நிகழாதது பெருங்குறை, இறுதிக்காட்சிகளைத் தவிர.

ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கும் இதுபோன்ற ஒரு அவசர நிலையை ஒரு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பிரகாஷ்ராஜும் நாகார்ஜூனாவும் முடிப்பது போன்ற பிரமை, நிஜ உணர்வைக் குறைக்கிறது. பிரதமர் பேசுகிறார் என்று போனைக் கொடுக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஒருகாலத்தில் தான் அடித்த மனைவியிடம் இப்போது மன்னிப்புக் கேட்பது, கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்ற மனைவி திருந்தி திரும்பி வருவது போன்ற காட்சிகளை நினைத்தால் ’பெருமையாக’ இருக்கிறது.

விமானத்திற்குள் வேலைக்காரப்பெண்ணை, மிகுந்த எச்சரிக்கையோடும் அக்கறையோடும் முதன்முறை அனுப்பும் நாகார்ஜூனாவிற்கு, அந்தப்பெண் திரும்பி வந்து மறுமொழி எதுவும் கொடுத்ததாக காட்சி இல்லாமல் தொங்கி நிற்கிறது. அதேபோல போதை மருந்து வாலிபன். எதற்காக வந்தான், ஏன் வந்தான், ஏன் குதித்தான் என்ற கேள்விகள் போக, இவனும் கடத்தல்வாதிகளில் ஒருவனைப் போல இருப்பதும் குழப்பக்குறி.

நாகார்ஜுனா நச்சென்று பொருந்துகிறார். வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பாடல் இல்லாததும், வெடிச்சிரிப்புக்கு குறைவிருந்தாலும் ஆங்காங்கு அடிநாதமாய் நகரும் நகையும் புன்னகையை வரவழைக்கின்றன.

பிணைக்கைதி இறந்துபோவதும் அதற்குப்பதில் ஏற்பாடு செய்வதும் காமெடிக்கும் கதையின் போக்குக்கும் வழிவிடுகின்றன.

எல்லா ”சுய” போதைகளையும் அபிலாஷைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கிரேசிமோகன் போன்றவர்களுடன் கூட்டணி கொண்டால், ராதாமோகன் மிகச்சிறந்த ஒரு காமெடிப்படத்தைக் கொடுக்கமுடியும் என்று தோன்றுகிறது.

பாட்டுக்கள் இல்லாது, ஒரே களத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா என்பதே கமல்ஹாசன் உட்பட்ட சிலருக்கு மட்டுமே சிந்தனைக்குரியதாயும் செயலுக்குரியதாயும் சில காலங்களுக்கு முன்பிருந்த நிலையில், அத்தகைய முயற்சிகள் தமிழில் பிற தயாரிப்பாளர்களிடமிருந்தும் இயக்குனர்களிடமிருந்தும் வரத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியதுதான். இதையே நச்சென்று பொட்டில் அடித்தார்போல சொல்லவும் முடியும்.

கடல் பயணம், விமானப்பயணம், பேருந்துப்பயணம், ரயில்பயணம் என்பவைகளெல்லாம் போக, வாழ்க்கையே ஒரு பயணம் தானே. எல்லாப் பயணத்திலும் காலமாகவும் தூரமாகவும் உணர்வாகவும் ஏதோ ஒரு உச்சம் இருக்கிறது. அந்த உச்சத்தை இந்த ”பயணம்” எட்டாவிட்டாலும், இது எட்டிக்காய் இல்லை என்பது ஆறுதலே.


எம்.கே.குமார்

தங்கமீன் இதழில் வெளிவந்தது. (வெட்டப்பட்ட பகுதிகளும் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன)

ஆடுகளம் – சொல்ல மறந்த இன்னொரு கதை

ஆடுகளம் படத்தைப் பற்றி பலர் பேசி எழுதிய பிறகும், நான் எழுதவும் இன்னும் சில விஷயங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தாலும் அதுபற்றி எழுதாவிட்டால் நானும் கச்சேரிக்குச் சென்றேன் என்பதை இந்த அகில உலகத்திற்குச் சொல்லாமல் விட்டுவிடுவது போலாகும் என்பதால் இந்த குறும்பகிர்வு.

உண்மையில் பொல்லாதவனையும் ஆடுகளத்தையும் உற்றுநோக்கினால், இயக்குநரின் மேலாண்மையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தனுஷைத் தவிர்த்து, நட்பு அல்லது அன்பு தோரணையில், நெருங்கிய ஒருவர் துரோகம் செய்வதும் அதில் ஒன்று. மேலும் பொல்லாதவனைப் போலவே இப்படமும் கிளைமேக்ஸுக்கு சிறிது முன்னால் ஆரம்பிக்கிறது. பிறகு கதைசொல்லியின் வழியாக பின்நோக்கலாக கதை நகர்கிறது.

ஒரே மாதிரி கதையைக் கொண்டுபோவது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது. வெற்றிமாறன் அடுத்த படத்தில் யோசிக்கவேண்டும்.

சேரனை நினைக்கும்போதெல்லாம் “என் பேரு சிவக்குமாரு, அப்போ நான் பத்தாங்கிளாஸ், போரூர்ல படிச்சுக்கிட்டிருந்தேன், அப்போத்தான் அந்த பொண்ணு எங்க ஸ்கூலுக்கு வந்தான்னு” அவர் சொல்றமாதிரி ஒரு பிளாஷ்பேக் ஞாபகம் வருகிறதல்லவா? அதுமாதிரி ஆகிவிடக்கூடாது.

டாவடிக்கும் பெண்ணிடம் காசு வாங்கி (சத்தியமா இல்லேடா, சத்தியமா இல்லேங்க, அட சத்தியமா இல்லேங்க என்று எத்தனை சத்தியம் செய்தாலும் எங்கிருந்தாவது எடுத்துக்கொடுக்கும் காதலிகள் கிராமத்திலே மட்டும் உண்டு; டவுன் காதலிகள் எப்படி என்பதை அடுத்த பிறவியில் தான் தெரிந்துகொள்ளவேண்டும்) ஒரு ’நல்ல’ காரியத்தில் இறங்குவது என்பது எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் அவர்தம் உணர்வுகளுக்கும் நடைமுறைச் சபலம். எத்தனை படம் ஓட்டியிருக்கோம்!!!

’யாருப்பா அது? முத்துராமன் மவனா?’
’இல்லே, இது நமக்கு வேண்டிய பையன்; நம்ம பையன்.’
’அப்பிடியா, நம்மாளுங்களாப்பா? ஒண்ணு மண்ணா நின்னு இந்த சேவல்பந்தயத்துல ஜெயிச்சுப்புடுங்கப்பா..’ என்று சொல்வது மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டை அன்பில் தோய்த்து ஒருவனுக்குள் ஒளித்து வைப்பதற்குச் சமம் என்பதை அதுபோன்றதொரு சூழ்நிலையில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். படத்தில் வரும் போலீஸ்காரரின் கிராமத்து அம்மா சொல்கிற வசனம்.

’வாட் டு யு வாண்ட்? வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? என்று நாயகி கேட்கும்போது, ’கருப்பு, கே பி கருப்பு’ என்று (இங்கிலீஷ் கெட்ட கேட்டுக்கு இனிஷியல் வேற!) தனுஷ் கூறுவது தமாஷூ.

‘என்னய்யா வேணும்’ என்று வீட்டுக்குள் வந்த பந்தை நினைத்து நாயகி கேட்கும்போது, நம்ம தனுஷ், இங்கிலீசுல ’புலி’ கணக்கா, பால்ஸ், பால்ஸ் வேணும் என்று ’மெதப்பா’ கூறுவதும் (ஒரு பந்துக்கு, ரெண்டு பால்ஸ்ஸா?) அந்தப்பெண் அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்வதும் எப்போதும் என்னை புன்முறுவலிக்கச்செய்யும் ஒரு காட்சி.

வாழ்க்கையில பாதி தூரம் வந்துபுட்டோம்டா, மீதிய எப்படிச் சேக்குறதுங்குறது நம்ம வாழ்க்கையில் வரப்போறவ கையிலதாண்டா இருக்கு என்று பேட்டைக்காரன் சொல்வது இன்னொரு மிக இயல்பான வசனம். பேட்டைக்காரனுக்கு ரெண்டு ’ப்ளக்ஸ் போர்டு கட் அவுட்’ வைங்கப்பா.

அத்தாச்சியாய் வரும் அத்தாச்சி அசல் அத்தாச்சி. தீராத கலைவெறியால் மட்டுமே இப்படிக் காதல்கள் சாத்தியமாகும். பேட்டைக்காரனுக்கு (கிழவனாயிருந்தாலும்) பொண்டாட்டியாய் வாழ்த்தீர்மானிப்பது சொல்லமறந்த இன்னொரு கதை படத்தில். அவளுக்கு நாயகனுடன் கள்ளத்தொடர்பு (தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை இது) என்றதும், போய்யா, இதுக்கு மேல இங்க நான் இருக்கவே வேண்டாம்ன்னு போறா பாருங்க, அந்தக்கதை!!)

இன்னொரு முறை பெரியகருப்புத் தேவனுக்கு நல்ல வேடமும், வசனமும். இந்தியாவிற்கு வரும்போது இவரைக் கூட்டிப்போய் ஒரு பார்ல பார்ட்டி கொடுக்கணும் போல இருக்கு!

மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். வெற்றிமாறனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளிவந்தது.

நடுநிசி நாய்கள் – ஒரு சிறப்புப்பார்வை

தமிழ் வலைப்பூக்களை அண்மையில் அதிகமாய் மேய்ந்ததில், சூடும் காற்றும் மெல்ல சேர்ந்தேறி, நடுநிசி நாய்கள் என்ற புதிய படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என, வயிறு உப்பி, கும்பி சூடு கண்டிருந்தது. இதற்கு மேலும் காயவிட்டால் கும்பி என்னாவது என்பதால் பார்த்துவிடத் தீர்மானித்தேன்.

நடுநிசியில் தான் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என எனக்கு இருந்தது போலும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு சிங்கப்பூரின் ரெக்ஸ் திரையரங்க வாயிலை அடைந்து டிக்கெட் கேட்டேன். நள்ளிரவு1215க்கு காட்சி. அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ’இந்த நட்ட நடுராத்தியில படத்துக்கு வந்திருக்கு பாரு நாயி’ என்பதாய் கூடலின் உச்சஸ்தானத்தின் எரிச்சல் அடைந்தவரைப் போல பார்த்தார்.

நடுநிசி நாயின் இயக்குனர் ’கௌதம் வாசுதேவ மேனனை’ ’மின்னலே’ படம் வந்ததிலிருந்து எனக்குத்தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா எனக்கேட்பவர்களை ஆண்டவன் தண்டிக்கட்டும்.) அப்போது அவர் கௌதமாய் இருந்தார். அதற்குப்பிறகு சில போலீஸ் குட்டிக்கரணங்களையும், சித்தப்பாவை வைத்து ஒரு விரும்பத்தகாத படத்தையும், தனது அப்பாவை வைத்து ஒரு பாடல்படத்தையும் எடுத்த பின்பு, இந்த ந.நி.நா படத்துக்கு வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த “மேனனை” அவர் தன் பெயருடன் சேர்க்க பட்ட பாடு, எந்த நடுநிசி நாயும் படாத, வார்த்தையால் சொல்லமுடியாத பாடு. அதை விடுங்கள்.

கௌ.வா.மே மிகவும் நல்லவர். உணர்வுகளை அழகாய்ச் சொல்பவர். பெண்களை மதிப்பவர். எனக்கு அவரைப் பிடிக்கக்காரணம் ஜோதிகாவுக்கும் திரிஷாவுக்கும் புடவை கட்டிப் பார்த்தவர் என்பதால் மட்டுமல்ல; தாமரை என்ற பெண்கவிஞரை உச்சம் கொள்ளச்செய்தவர் என்பதால் மட்டுமல்ல; நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று சூடேற்றியவர் என்பதால் மட்டுமல்ல; அவர் செம்மொழிப்பாடலுக்கு இயக்குனர் என்பதால் தான். அந்த வகையில் தமிழர்களுக்கு விஜய் நம்பியார், சிவசங்கர மேனன் போல இவரும் நண்பர்தான்.

இந்த நடுநிசி நாய்கள் என்ற தலைப்பைப் பற்றி ரெண்டு வரியில் சொல்லிவிடலாம் எனத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமி என்று தென்தமிழ்நாட்டில், மலையாள தேசத்திற்கருகில் ஒரு மனிதர் இருந்தார். அவருடைய ’உடம்பில்’ பிறந்தவர்களில் மிக முக்கியமான இருவர் அண்ணன் பசுவய்யாவும் தம்பி ஜேஜேயும். அண்ணன் பசுவய்யா பெரிய கவிஞன். தம்பி ஜே ஜே பெரிய சிந்தனாவாதி. அந்த அண்ணன் படைத்து, 1975ல் முதற்பதிப்பாய் வந்த 29 கவிதைகளைக் கொண்டதுதான் இந்த நடுநிசிநாய்கள் கவிதைத்தொகுப்பு. (நடுநிசி நாய்கள் என்று எங்கே தேடினாலும் வாசுதேவ மகா மேனன் தான் தற்போது கிடைக்கிறார்; பசுவய்யாவை புத்தக புழுதிகளில் தான் எங்காவது தேடவேண்டும் போலிருக்கிறது.)

அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர், இப்படத்தில் நடித்த நடிகை சமீரா ரெட்டி. அவர் ஒன்றும் அழகெல்லாம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள்தான் நம்பப்போகிறீர்களா இல்லை கௌதம் வாசுதேவ மேனன் தான் ஒத்துக்கொள்ளப்போகிறாரா? அண்மையில் ஒரு தொ.கா நிகழ்ச்சியில் பேசிய கௌ.வா.மே, தனக்கு சமீராவைப் பிடிக்கும் என்றார். அதனால் எனக்கும் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர், உடலுக்கு மூஞ்சியைப் போல படத்துக்கு முக்கியமானவர். அந்த வகையில் மனோஜ் பரமஹம்சா விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கௌ.வா.மேயின் இப்படத்திலும் ஒளிஓவியம் செய்திருக்கிறார். (முதல் ஒளி ஓவியரே, எங்கேயிருக்கீங்க, 9ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடத்துக்கு அப்புறம் ஆளக்காணோம்?)

படம் தகாத உறவு பற்றியும் எல்லோருக்கும் கிடைக்காத தகுந்த உறவு பற்றியும் என்று சொல்லியது போதாதென்று, கலாச்சாரக்காவலர்களை மிகவும் அதிர்ச்சியாக்கும் என்று வேறு சொல்லியிருந்தார்கள். இதனால் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியானது. நான் கலாச்சாரக் ’காவலன்’ இல்லை, அது விஜய். இருந்தாலும், எனக்குக் கிடைக்காத எதுவும் அடுத்தவர்களுக்குக் கிடைத்தால் அந்த அதிர்ச்சி ஏற்படும். குறிப்பாய்....வேண்டாம் விடுங்கள். அதைப்பற்றியா பேசுகிறோம்?

சரி, ரெண்டு டிக்கெட் என்றேன். அருகிலிருந்த இன்னொரு ’கவுண்டர்’ பெண் (கவுண்டரா தெரியவில்லை, வேறு ஜாதியாகவும் இருக்கலாம்) அதே தியேட்டரில் ஓடும் ஒரு மலாய் படத்துக்கு (மலாய் ந.நி.நாயாய் இருக்குமோ) வந்த கூட்டத்துக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் ரெண்டு டிக்கெட் என்றேன். அந்த நண்பர் எழுந்து உள்ளே சென்றார். இப்போது என் பக்கம் திரும்பிய அந்தப்பெண் (மலேசியப்பெண்ணாக இருக்கவேண்டும்; அவ்வளவு அழகு!) சாரி டிக்கெட் இல்லை என்றார்.

என்ன? ஏன் டிக்கெட் இல்லை? நடு நிசி நாய்கள் படத்துக்கு நடுநிசியில் கூட கூட்டம் வருகிறதா, ஆச்சர்யமாய் இருந்தது.

மீண்டும் அதிர்ச்சியுடன் கேட்டேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் அனுமதி இல்லை என்றார். என்ன நானா குழந்தை, என் மனசைச் சொல்கிறாரோ என்று குழம்பிய வேளையில், அவன் தான் தூங்குகிறானே என்றார் என் மனைவி.

அவன் திடீரென விழித்து எழுந்து விட்டால், என்ன செய்வது என்று கேட்டார் அப்பெண்.

ம்ஹூம், என்ன சொல்வது, பெண்கள் தான் எவ்வளவு புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு ’பயணம்’ ஆனேன்.

நடுநிசி நாய்கள் படத்தை நான் மட்டுமே செல்லும் ’சிறப்புப்பார்வை’யில் தான் பார்க்கவேண்டும் போலிருக்கிறது.

எம்.கே.குமார்.

தங்கமீன் மார்ச் இதழில் வெளியானது

Friday, April 08, 2011

“Tragedy of the commons” தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.

“Tragedy of the commons”
தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.


அன்புச் சகோதரா,

இம்மடலை படிக்கும் முன் ஒரு பிளேட் பிரியாணி நீ சாப்பிட்டிருக்கலாம் அல்லது உனது வீட்டு வாசலில் திடீரென்று ராவோடு ராவாக வந்திருக்கும் ஒரு வெள்ளிவிளக்கைத் தேய்த்து, பூதம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கலாம். பூதத்தை நீ எதிர்பார்த்திருக்கையில் உனது வீட்டு வாசலில் கும்பிடு சகிதமாக ஒருவர் வருவதை நோக்கியிருக்கலாம். வந்தவர் படக்கென்று உன் காலிலோ உன் அம்மா காலிலோ விழுந்து வணங்கியிருக்கலாம். கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கண்ணகி குஷ்பு கதையையும் மாவீரன் வடிவேலு அல்லது அஞ்சா நெஞ்சன் சிங்கமுத்துவின் வரலாறையும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது எங்கேயிருந்தாவது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு பறந்து, பாக்கெட்டுக்குள் வருமா என விக்கித்து வேடிக்கை பார்த்திருக்கலாம்.

எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அலுப்பான உனக்கு, ஐந்தாண்டு காலம் உன்னை வழிநடத்துவதற்கு, உனக்காகப் பரிந்து பேசுவதற்கு நீயே தேர்ந்தெடுக்கும் ஒரு முறைதான் இப்போது நீ செய்யப்போவது ”இந்த தேர்தலில்” என்பதை நான் உனக்கு நினைவுபடுத்த நேர்ந்தது காலத்தின் கோலம்தான்.

உனக்கும் உன் குடும்பத்திற்கும் ராஜபாட்டை விரித்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். உலக வரலாற்றில், கடும் போரினாலும் வறுமையினாலும் அவதிப்படுகையில் கூட இலவசமாய்க் கிடைக்காதது எல்லாம் உனக்கு இனிமேல் இலவசமாய்க் கிடைக்கப்போகிறது.

மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம், ஆடு, மாடு, குடிக்கத்தண்ணீர் என்றெல்லாம் கிடைக்கும் என்று நீயும் சந்தோசத்தில் மிதந்துகொண்டிருப்பாய்; கூட, வீடும், வீடு கட்ட கடனும் தருகிறார்களாம். அரிசி தருகிறார்களாம். அப்படியே ஒரு பெண்ணையும் கொடுத்தால் நீ சந்தோசமாய் படுத்துக்கொண்டிருக்கலாம்.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், விஞ்ஞானத்தின் விழுதுகள் நம்மைத்தீண்டாத வேளையில், கல்வி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் திறந்த ’படிக்காத பெருந்தலைவர்கள்’ எங்கே, இன்று இலவசங்களை வாரி வழங்கும் முட்டாள்கள் எங்கே என்று கொஞ்சம் யோசிப்பாயா?

எந்த நாட்டிலும் ’இத்தனையாயிரம் வேலைகளை’ நான் எனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கினேன் என்று பெருமைப்படும் தலைவர்கள் எங்கே? எனது ஆட்சிக்காலத்தில் இதெல்லாம் இலவசமாகக் கொடுத்தேன் என்கிற அறிவற்ற நம் தலைவர்கள் எங்கே? இலவசமாக கிடைக்கும் எந்தப்பொருளையும் இலவசமாய் செய்யமுடியுமா என்று யோசித்துப்பார்ப்பார்களா? மிக்ஸி இலவசமாய் செய்ய முடியுமா? மிக்ஸியில் உள்ள இரும்பு இலவசமாய் வருமா? இலவசமாய் கிடைக்கும் ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு மின்சாரம் இலவசமாய் கிடைக்குமா? உள்ளதுக்கே மின்சாரம் இல்லாமல், அறிவிக்கப்படாத மின்சாரவெட்டு தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு பலமணிநேரம் பாடாய் படுத்தும்போது, மிக்ஸியை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?

சுகாதாரத்தையும், கல்வியையும், தொழிற்சாலைகளையும் மேம்படுத்தாத எந்தநாடும் இறுதியில் என்ன ஆகும் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் நம் கண்முன்னே உள்ளன!?

நீ குடித்தால் நீ மட்டும் ஆட்டம் போடுவாய். நீ குடியை நிறுத்தினால் அரசாங்கமே ஆட்டம் காணும் என்பதை நீ அறிவாயா? மக்களின் உடல்நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுத்து இலவசங்களை வாரியிறைப்பதால் என்ன ஆகும்?

வெளிநாட்டில் பிழைப்பு நடத்தும் எல்லா மனிதனுக்குமே ஏதாவதொரு ஏக்கம் சொந்த ஊரைப்பற்றி இருக்கும். சுத்தத்தில் ஆரம்பித்து, வாழ்க்கை வசதிகள், சுற்றுலா வசதிகள், மனநிறைவான வாழ்வு என ஏதாவதொன்றை சொந்த ஊரில் காணும் கனவை இணைத்து வாழ்ந்து கொண்டேயிருப்பதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. இவையெல்லாம் அற்ப மாயைகளாய் ஆடம்பர கனவாய் இனி காலாகாலத்திற்கும் அமைந்துவிடுமோ என்று ஆதங்கப்படுகின்றது மனது.

இப்போது தமிழ்நாட்டில் நடப்பது என்ன தெரியுமா உனக்கு? ”பொதுத்தனத்தின் பயங்கரம்” என்றால் என்னவென்று அறிவாயா? எல்லோருக்கும் பொதுவான ’இரண்டு ஏக்கர்’ இடத்தில் வீட்டுக்கு நாலு மாடு மட்டும் என, வாங்கி வளர்த்தால், பிரச்சனையில்லை. வேண்டும் அளவுக்கு ஒவ்வொருவரும் மாடு வாங்கிவிடலாம் என்றால் என்ன ஆகும்? எல்லா மாடுகளும் செத்துப்போய்விடும் அல்லவா? அவன் ரெண்டு இலவசம் தருகிறான்; நான் நாலு இலவசம் தருகிறேன் என்றால், இந்த நாடு என்ன ஆகும்?

ஒவ்வொரு வீட்டு கழிவுமே ஒரு கூவம் நதியை உருவாக்கியதைப் போல இந்த ’இலவச பொதுப்புத்தி’ எத்தகைய பாதை விட்டுவிட்டுச்செல்லும் அறிவாயா நீ? உனது சந்ததி இனி காலாகாலத்திற்கும் இலவசத்தை எதிர்பார்த்தே பழக்கப்பட்டு கோயில் வாசலில் அமர்வதைப்போல தேர்தல் வாசலில் அமர்த்தப்படும். இலவசங்கள் தருவதே அவர்களின் கடமை; பெறுவது உனது உரிமை என்றாகும்; இலவசமாய் கிடைக்காதபோது வெகுண்டெழுவாய்; கொள்ளைகளும் களவுகளும் நிகழும். சமுதாயம் அதை புரட்சி என்றழைக்கும், ஒரு பூகம்பமோ சுனாமியோ அனைத்தையும் வாரிக்கொண்டு போகும் வரையில்.

இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான். உன்னைச்சுற்றி வருபவர்கள் கண்ணீர் விடுவார்கள்; கலங்குவார்கள்; காரியமாய் நடிப்பார்கள்; உனக்கு அடிமை என்பார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பார்கள். காந்தி நோட்டுகளை அள்ளிவீசுவார்கள். கற்பு முதல் கல்லறை வரை அனைத்தும் இலவசம் என்பார்கள். காந்தியக்கூட்டணி என்பார்கள். முற்போக்கு என்பார்கள். அவன் குடிகாரன்; நான் யோக்கிவான் என்பார்கள்; நான் தமிழன்; தமிழனைக் காக்க வந்த தமிழன் என்பார்கள்; பரம்பரை வாழ்ந்த இடம் என்பார்கள்; படுத்து உறங்கிய தெரு என்பார்கள்; தன்மானம் என்பார்கள்; தமிழ் மானம் என்பார்கள்; சிறுத்தைகளாய் சிங்கங்களாய் ஜாதிக்கொடியுடன் வருவார்கள்; கல்வித்தந்தையர்கள் என்பார்கள்; இன்னும் என்னென்னவோ பிதற்றுவார்கள்.

யாருக்கு நீ ஓட்டுப்போடப்போகிறாய்? யாருக்கு நீ போட்டாலும் அவன் எவனுக்கோ ஜால்றா போடப்போகிறான். தமிழ் உணர்வு காக்கப்போகிறேன் என வருபவன் பதவியோடு அமர்ந்து சுகவாசியாகப்போகிறான். கூட்டணி இல்லை என்றவன் கூட்டணி ஆட்சிக்கு கோடிகளைப் பெறப்போகிறான்.

ஒன்றே ஒன்று மட்டும் செய். வைகோ என்ற மானத்தமிழன் செய்ததைச் செய். நேரே ஓட்டுச்சாவடிக்கு சென்று ”49ஓ” வை அழுத்தி விட்டு வா. வருங்கால சந்ததியினரின் மாபெரும் விடுதலைக்கு நீ இடும் முதல் கைரேகை அது!!


எம் கே குமார்

Thursday, March 03, 2011

இந்திரஜித் வந்திருந்தார்

அண்மையில் நான் படித்த இந்த கட்டுரை, என்னை மிகவும் கவர்ந்தது. காரணம், இந்திரஜித் ’ஒருமாதிரியான’ ஆள்தான் என்றாலும் இந்தக்கட்டுரையில் மிக உச்சத்தில் இருந்தார் என்றே நினைக்கிறேன்.

*************************
ந.பாலபாஸ்கரன் இலக்கியக்கூட்டம்
இந்திரஜித்

ஆறு மணிக்குக் கூட்டம் என்பதால் ஆறு மணிக்கே போய்விட்டேன். வாசலில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள் பற்றிய விவரம் இருந்தது. ஒன்று இன்று. ஒன்று நாளை. இன்றைய நிகழ்ச்சி எங்கே என்று தற்செயலாகத் திரும்பியபோது வாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது.

நடராசனும் இருந்தார். நானும் அவரும் உடனே நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டோம். இரண்டு விதமான வடைகளும், கேசரியும் இருந்தன. காபி, டீ இரண்டும். டீ மட்டும் எடுத்துக்கொண்டோம். பலகாரம் மூன்றும். தொடர்ந்து வரலாம் போலிருக்கிறதே என்றார்.

அறுபது பேர் உட்கார இடம் இருந்தது. ஆறு மணிக்கு இருபது பேர் இருந்தனர். ‘தங்கமீன்’, ‘இணைய இதழும்’, ‘மாதவி இலக்கிய மன்ற’மும் சேர்ந்து செய்த ஏற்பாடு.



பெண்கள் சரிசமமாக இருந்தனர். புஷ்பலதா, சீதாலெட்சுமி, சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கர், மீனாட்சி சபாபதி என்று அறிமுகமான முகங்களும், அறிமுகம் இல்லாத வேறு பல முகங்களும். மூத்த எழுத்தாளர்கள் பி கிருஷ்ணன், ஏ. பி. ராமன், ஓய்வுபெற்ற வானொலிச் செய்திப் பிரிவின் தலைவர் கண்ணப்பன், மொழிபெயர்ப்பாளர் சுப்ரா இப்படி மூத்தோர் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது.

ஜே. எம். சாலி என்னைப் பார்த்ததும் ஏற்கனவே உள்ளே வைத்திருந்த விரக்திகளைக் கொட்டினார். அருண் செங்குட்டுவன், அருண் மகிழ்நன் சகோதரர்கள் வந்திருந்தனர்.

உடல்நலக் குறைவினால் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்நெஞ்சர் என். ஆர். கோவிந்தன் வர முடியவில்லை என்று ‘தங்கமீன்’ ஆசிரியர் பாலு மணிமாறன் அறிவித்தார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன், முன்னைய தலைவர் அமலதாசன், செயலாளர் சுப அருணாச்சலம் மூவரும் வந்திருந்தனர்.

பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள் பலர் வந்திருந்தனர். வானொலியின் எஸ். பீட்டர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதே இல்லை. ‘பாஸ்கரனுக்காக வந்தேன்’ என்றார்.

மெல்ல கூட்டம் சேர்ந்தது. ஆறரை மணி வரை கேசரி, பிறகு நிகழ்ச்சியைத் தொடங்கிவிடலாம் என்று பேசிக்கொண்டனர். மெல்ல கேசரி கரைந்து கொண்டிருந்தது. ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875-1941’ என்ற தலைப்பில் பாலபாஸ்கரன் பேசுவதற்காகக் கூட்டம் காத்திருந்தது. ஆறு நாற்பதுக்கு அவர் பேச ஆரம்பித்தபோது கூடுதலாக நாற்காலி கொண்டு வந்து போட நேர்ந்தது.

இவ்வாண்டுப் பிற்பகுதியில் புத்தகமாக வரவிருக்கும் அவருடைய ஆய்வில் இருந்து சில தகவல்களை பாஸ்கரன் பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் பழனியப்பன் பதிவு செய்து கொள்ளலாமா என்று தன் கருவியைக் காட்டினார். பதிந்துகொண்டு கணினியில் இட்டு காரில் போகும்போது கேட்டுக்கொண்டு போகலாம் என்றார். ‘அப்படி கேட்க முடியாது. நான் என்ன பாட்டா பாடப் போறேன்?’ என்று பாஸ்கரன் கேட்டார். அப்படியும் அவர் பேசத் தொடங்கியதும் சில பல பதிவுகள் நடந்தன. ‘கொஞ்சம் நிமிர்ந்து அப்படியே பேசுங்க!` என்று ஒரு முதியவர் பாஸ்கரனைப் பாதிப் பேச்சில் அதிர வைத்துப் படமெடுத்தார். அந்தப் படம் வேறு யாருக்கும் கிடைக்காது.


மூன்று பேர் பேச்சு தொடங்கிய அரை மணி நேரத்தில் எழுந்து சென்றனர். நன்றாக அறிமுகமான அவர்களின் பெயர் இப்போது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

பொதுவாக 1875 முதல் 1941 வரை பத்திரிகைகளை நடத்தியவர்களும் அவற்றை மூடியவர்களும் பற்றி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் பாஸ்கரன். சீனப் பத்திரிகைகளைப் பெரும் கோடீஸ்வரர்கள் நடத்தினர். தமிழ்ப் பத்திரிகைகளைப் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே நடத்தினர் என்று சொன்னார். முஸ்லிம்களே அதிகம் பத்திரிகைகளை தொடங்குவதும் மூடுவதுமாக இருந்திருக்கின்றனர். சில பத்திரிகை ஆசிரியர்கள் வாங்காத ஜனங்களை ஜாதி வாரியாக, மதவாரியாகக் குறிப்பிட்டு திட்டித் திட்டித் தலையங்கம் எழுதியிருக்கின்றனர்.

கேள்வி நேரம் வந்ததும் கேள்வி கேட்பவர்களுக்கு ஏதுவாக அங் மோ கியோ நூலகத்தின் உயர்தரமான மைக் தரப்பட்டது.

முதல் கேள்வியை இலியாஸ் கேட்டார். கோ. சாரங்கபாணி முஸ்லிம்களோடு இணக்கமாக இருந்ததாகச் சொன்னீர்கள். மகிழ்ச்சி. ஆனால் செட்டியார்களோடு உரசல் இருந்ததாகச் சொன்னதை ஏற்க முடியாது. அவர்களோடும் அணுக்கமாகத்தான் இருந்தார் என்று சொன்னார். பாதிக் கேள்வியில் கொஞ்ச நேரம் இலியாஸ் பேசாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். பிறகு ‘விநோத சம்பாஷணை’ என்பது நினைவுக்கு வந்ததும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று கேட்டார்.

விநோத சம்பாஷணை மகுதூம் சாயபு எழுதிய தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்கனவே நா கோவிந்தசாமி சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

ஆனால் பாஸ்கரன் அதை சிறுகதையாக ஏற்கவில்லை என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறார். இங்கும் அதையே சொன்னார். சம்பாஷணை பாணியில் அந்தக் கால இதழ்களில் நிறைய வந்திருக்கிறது. சம்பாஷணை சம்பாஷணைதான், சிறுகதை சிறுகதைதான் என்றார்.

மூத்த பத்திரிகையாளர் மகுதூம் சாயபு படித்தவரா என்று பொன். சுந்தரராசு கேட்டார். தகுதி இல்லாதவர்களும், வசதி இல்லாதவர்களுமே பத்திரிகை நடத்தினர் என்று பாஸ்கரன் சொன்னதால் அந்தக் கேள்வி ஏற்பட்டது. சாயபு படித்தவர், நிறையப் பழமொழிகளை அவருடைய எழுத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பாஸ்கரன் சொன்னதை இங்கே எழுதும்போது அவர் சாயபுவைக் கிண்டல் செய்தது போல் இருக்கிறது. ஆனால் அவர் படித்தவர்தான் என்று பாஸ்கரன் உறுதியாகச் சொன்னார்.

1875 முதல் 1941 வரை சுமார் ஐம்பது தமிழ் இதழ்கள் வந்திருந்தன. ஏன் அத்தனை இதழ்கள் வந்தன? மற்ற சமூகத்தினரும் அவ்வளவு பத்திரிகைகளை நடத்தினார்களா? என்று மகிழ்நன் கேட்டார். மற்றவர்கள் பெரிய பத்திரிகைகளை நடத்தியதால் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தமிழில் சின்னச் சின்ன முயற்சிகள் அவ்வப்போது நின்று போனதால் நிறைய வர நேர்ந்தது என்றார் பாஸ்கரன்.


கடைசிக் கேள்வியை ஜே. எம். சாலி கேட்டார். பாஸ்கரன் சொன்ன எல்லா விவரமும் தனக்கும் தெரியும் என்றும் பாஸ்கரனோடு வேலை பார்த்ததாகவும் சாலி சொல்லும்போது அவருடைய குரல் ஓரளவு சரியத் தொடங்கியது, கோசாதான் என் தந்தை என்னை சிங்கப்பூருக்கு அழைத்தார். என்னை வளர்த்தார் என்று சொல்லும்போது தொண்டை கரகரத்தது.

கூட்டம் முடிந்து விடைபெறும் நேரத்தில் எதிர்பாராத அறிவிப்பு வந்தது. இலியாஸ் பொன்னாடை போர்த்த விரும்புவதாகத் தெரிவித்தார். பாஸ்கரன் தடுமாறினார். பொன்னாடையோடு மேடைக்குச் சென்ற இலியாஸ், செங்குட்டுவன் மூலம் பொன்னாடையைப் போர்த்த செய்தது நிகழ்ச்சிக்கு மிகவும் மெருகூட்டியது. தமிழ் இதழ்களின் வரலாற்றில் பாஸ்கரன், செங்குட்டுவன், இலியாஸ் மூவரும் இடம்பெற்றனர்.

தமிழில் மிகவும் அபூர்வமாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன. பொன்னாடை அங்கத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது தமிழ் நிகழ்ச்சிதானா என்று ஐயமாக இருந்தது. ஏதோ பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரஞ்சுக் கூட்டம் மாதிரி பேச்சாளர் மெல்லிய குரலில் விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்க் கூட்டம் என்றால் மைக்கே திகைக்கும் வகையில் பெரும் சத்தம் இருக்கும். அது இல்லாமல் இருந்தது பெருங்குறையாக இருந்தது.

நிகழ்ச்சியில் சொன்ன விவரங்கள் புத்தகத்தில் வரும். நான் புத்தகம் போடுவதற்கு முன்பு நீங்கள் எங்கும் பயன்படுத்திவிடாதீர்கள் என்று பாஸ்கரன் கேட்டுக்கொண்டார். அவருக்கு முன்பே யாராவது புத்தகம் போட விரும்பினால் இந்த விவரங்களை சொந்தமாக ஆராய்ச்சி செய்தது போல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.

இதுபோன்ற நிகழ்ச்சியில் பதிவு செய்வதுகூட ஒரு வகையான ஆராய்ச்சிதானே என்று வாதிடக்கூடும்.

தொலைக்காட்சியில் இருந்து வந்த ‘தாளம்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்பரசன் பேட்டிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அண்மையில் இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய புஷ்பலதா, ‘இந்திரஜித் ஒழுங்கை என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டார். அவரோடு இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியும் சேர்ந்து எனக்கு விளக்கம் தந்தனர்.

ஷாநவாஸ் ‘உயிர்மையில்’ வெளிவந்த என்னுடைய கவிதைத் தொகுப்பில் நான்கு பிரதிகள் கொண்டு வந்ததாகவும் எல்லாவற்றையுமே கடைக்கு வந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

அருண்மகிழ்நன் மின்கலம் பலவீனம் அடைந்து கொண்டிருந்த அவருடைய கைத்தொலைபேசியில் அண்மையில் செல்லில் வந்த என் கதைகளைக் காட்டினார்.

ஒரு சனிக்கிழமை மாலையில் பொருளும் நேரமும் செலவு செய்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்திய ‘தங்கமீன்’ மாத இதழுக்கும், ‘மாதவி இலக்கிய மன்ற’த்துக்கும் நன்றி சொல்லிக்கொண்டு விடைபெறலாமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாஸ்கரன் ‘இருங்கள் போகலாம்’ என்று சொன்னதையும் கேட்காமல் நண்பர் ராமநாதனுடன் வெளியே வந்தேன்.


நன்றி: உயிரோசை
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4006

Wednesday, February 02, 2011

கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்

வண்க்கம் தலீவா,

நாந்தான் கமல் குமார் பேசுறேன். சிங்கப்பூர்ல இருந்துதான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துல உன்னை நேர்ல பாத்தது. அப்போ, நம் சிங்கப்பூர் சித்ரா உன்னுகிட்ட கேட்ட கேள்வியில டென்ஷனாகிப்போன உன்னை பாக்கவே பயந்துட்டேன் தலீவா. அதுக்குப்பின்னாடி நாலைஞ்சி படம் நடிச்சிப்புட்டே. படத்துல பாக்குறதோட சரி. எப்புடிக்கீற தலீவா. கௌதமியக்கா நல்லா பாத்துக்குறாங்களா?

மன்மதன் அம்புன்னு ஒரு படம், நம்ம ஊர்ல ஆடியோ ரிலீஸ்ன்னு, ’வசந்தம்’ டிவிலெ, கூவிக்கூவி வித்தானுக. தலிவனை நேர்ல பாத்து ரொம்ப நாளாச்சே, நேர்ல பாக்காலாமேன்னு டிக்கெட் கேட்டேன் தலீவா. 37வெள்ளிதான் கொறைஞ்ச டிக்கெட்டேன்னானுக. நானும் என் சம்சாரம், ஒரு கொழந்த, கட்டுபடியாகாது தலீவான்னு வசந்தம் டிவி பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன் தலீவா.

சரி, பாட்டு கச்சேரிக்குத்தான் போகலை. சாரி....பாட்டு வெளியீட்டுக்குத்தான் போகலை, படம் வந்தா ஒடனே பாத்துடணும்ன்னு ஒரு ஆசை தலீவா. உட்லாண்ட்ஸ்லெ ”கதே” கொட்டகையில முன்னாடியே புக் பண்ணிட்டேன். 2 பேருக்கு 24வெள்ளி, புக்கிங் பணம் 1வெள்ளின்னு 25வெள்ளி மொத்தம். இன்னொரு சேதி என்னன்னா, என் சம்சாரத்துக்கும் காமெடிக்கும் காத தூரம். அவங்களோடு போறோமேன்னு வேற மனசுக்குள்ளே ஒரு ‘கிலி’ இருந்தாலும், தலீவனாச்சேன்னு போனேன்.

மிலிட்டரில ஓய்வுவாங்கிக்கினு வந்து பிரைவேட்டா டிடெக்டிவ் நடத்திக்கினு வாற உன்னை (மேஜர் ராஜ’மன்’னார்), சினிமா நாயகி ’அம்பு’ஷாக்ஸி (எ) நிஷாவை (த்ரிஷாவை) காதலிக்கும் கோடீஸ்வர ’மதன்’கோபால் (ஆர்.மாதவன்), அவள் மேல சந்தேகப்பட்டுக்கினு, அவளை ஃபாலோ பண்ணச்சொல்லி, பிரான்ஸில இருக்கும் தன்னோட தோழி தீபா வீட்டுக்கு அவ ரெஸ்ட்டுக்குனு போகச்சொல்ல, அவளுக்கே தெரியாமெ அனுப்புறான். அங்கே நீ எதுக்குப் போனே, என்னெ பண்ணுனே, இந்த கல்யாணம் நடந்தா இதுதான் கதை; கரெக்டா தலீவா?

முதல்லெ ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் தலீவா. எல்லாப்படத்திலேயும் ஏதாவது ஒரு சாகசம் செய்யணும்; இல்லாட்டி உன் உச்சி மண்டையில சுர்ருங்கும்ங்கிறது எனக்குத் தெரியும் தலீவா.

அதுல ஒண்ணா, இந்தப்படத்துல உன்னோட காதலு மற்றும் கல்யாணத்து ஃப்ளாஷ்பேக்கை ’ரிவர்ஸில்’ காட்டி மஜா பண்ணியிருக்க தலீவா. உண்மையிலே புதுசு தலீவா; அதுக்காக ஒன்னைப் பாராட்டிக்கிறேன். ஆரம்பிக்கச்சொல்ல கொஞ்சம் குழப்பமோட இருந்தாலும் முடியச்சொல்ல மனசைக் கரைக்கிது தலீவா அந்தக் காட்சி. உன் குரல்லெ பின் பாட்டு வேற! சொல்லவா வேணும். சூப்பர் தலீவா. பாட்டு வரிதான் ஞாபகம் இல்லை.

திரிஷாவோட சொந்தக்குரல்ன்னு சொன்னாய்ங்கெ. மாருல குத்தியிருக்கும் பச்சையைப் போல பளிச்சினு இருக்கு. இதுகூட உன்னோட புதுமைதான் தலீவா.

ஒளிப்பதிவிலும் வசனப்பதிவிலும் என்னமோ புதுமை தெரியுது தலீவா. ஆனா, டைரக்டா ஒலிப்பதிவு செஞ்சதாலே, அங்கங்கே ’எக்கோ’ அடிச்சு, கொஞ்சம் சுரத்து கம்மியாயிருச்சு தலீவா.

உன் வசனத்த (கொஞ்சம்) எப்பவும் பிடிக்கும் தலீவா. அதுவும் பார்லெ தண்ணி அடிச்சிக்கிட்டு, மதனகோபால் அண்ட் பிரண்ட்ஸ் பேசுற வசனம் சிறப்பு வசனம் தலீவா. சிரிப்பு வசனம் தலீவா. மூதலிக்கிறதுன்னா 'ப்ரூஃவ்' பண்றதுங்குற வார்த்தைய வெச்சி பண்ணின காமெடி கலக்கல் தலீவா.

ஒரு கப்பலெ காட்டியிருக்கெ. அதுவும் சொகுசுக் கப்பலெ.. ஊர் நாட்டுலெ உள்ளவனுங்க வாயத்தொறந்து பாக்குறங்குறதுக்காக. உன் புதுமையில இதுவும் ஒண்ணு தலீவா.

ஓரளவுக்கு சிரிப்பு வருது, மத்தபடி, படத்தப் பத்தி என்னத்த தலீவா சொல்றது?

ஒத்த வாக்கியத்துல சொல்லணும்னா, சிங்கத்துக்கு ஏன் இந்த ’சேவிங் செய்யிற வேலை’யின்னு தோணுது தலீவா.

கொஞ்சம் எலக்கியமா சொல்லணும்ன்னா, நம்ம ’கவிக்கோ’ சொன்னதுமாதிரி, ’அம்மிக்கொத்துறதுக்கு எதுக்கு சிற்பி’ன்னு சொல்லணும் தலீவா.

கதை, திரைக்கதை, வசனம், கவிதை மற்றும் பாடல்கள்ன்னு எல்லாத்தையும் நீயேதான் பாத்துக்கிட்ட போலயிருக்கு தலீவா, பெருமையா இருக்கு; ஆனா பெருமைப்படும்படியா இல்லியே தலீவா. இயக்கம் கே.எஸ். ரவிக்குமார் ன்னு போட்டான்ய்ங்களே உண்மையா தலீவா. இல்லெ முதல் சீன்லே, கே.எஸ். ரவிக்குமாரு மாதவன்ட்டெ ஏதோ பேச, அவரு அதைக் கண்டுக்காம போக, ரவிக்குமாரும் அடப்போங்கடான்னு, அப்படியே நழுவிடுறாரே...அதுதான் உண்மையிலே நடந்ததா தலீவா?

பாட்டு எழுதியிருக்கே...ஏன் தலீவா இப்படி சோதிக்கிறே?

கவிதை எழுதியிருக்கே, கல்லு மாதிரி மாரு வேணும், பளிங்கு மாதிரி நாத்தம் இல்லாத பல்லோட பொண்ணு வேணும் முத்தம் குடுக்க, படுத்து எந்திரிச்ச உடனே கழுவ கூட வரணும், எப்பவும் படுத்துக்கினே இருக்கானே அரங்கநாதன் சாமி, அவென் உன் ஆசையைத் தீத்து வைச்சானா லெட்சுமி சாமி, கல்லுல பதிச்ச காமத்த உங்கிட்ட செஞ்சு காட்டுனானான்னு கவிதை எழுதிப் படிக்கிறே, திரிஷாப் பொண்ணையும் படிக்க வைக்கிறியே தலீவா... என்னத்தை தலீவா சொல்ல.. சிங்கப்பூர்ல இருக்க 'கவிமாலைக் கவிஞர்கள்'ட்டே இதே தலைப்பைக் குடுத்தாக்கூட கலக்கிப்புடுவாங்கெ. நீ என்னடான்னா? இதெ கேட்டு வேற அந்தப்பொண்ணு உன்னை லவ் பண்ணுதுன்னு காட்டுறாய்ங்களே... என்னத்தெ தலீவா சொல்ல?

திரைக்கதையில உம்பேரு. நடிகையை அவ காதலன் சந்தேகப்படுறான்னு எங்களுக்குச் சொல்றதுக்கே பாதிப்படமா? உனக்கே இது நியாயமா தலீவா?

டிவில, விளம்பரத்துக்கு இடையில ’சீரியல்’ வாற மாதிரி, ரமேஷ் அரவிந்தும், ஊர்வசியும் அப்பப்போ வந்து அழுதுட்டும் சிரிச்சுட்டும் போறாங்கெளே..என்ன தலீவா இது. நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த படங்கள்லெ கூட இப்படி ஒரு சீனு இருக்காது தலீவா.

என்ன தலீவா ஆச்சு. சோற்றுக்கா வந்ததிங்கு பஞ்சம்ன்னு ஒரு பட்டாபட்டி மீசைக்காரன் சொன்னதுமாதிரி, நடிப்புக்கா வந்துருச்சி உனக்கு பஞ்சம்?

பாட்டுக்கு ஆடுனா ’பஞ்ச தந்திரம்’ ஞாபகம் வருது. பொண்டாட்டிய நாயி கடுச்சுடுச்சினு நீ அழுதா..சாரி.. பொண்டாட்டி தவறிட்டான்னு நீ அழுதா, எத்தனை படம்...இருந்தாலும் ’வேட்டையாடு விளையாடு’ ஞாபகம் வருது. ஆள்மாறாட்டக் காமெடின்னு நீ அரம்பிச்சா..சொல்லணுமா தலீவா..எத்தனை படம், எத்தனை படம்?

காந்தியெ ஒனக்கு புடிக்கும்ன்னு தெரியும் தலீவா, அதுக்காக ஒரு படம் கூட எடுத்தியே...ராணி மொகர்ஜியா, அபர்ணாவா அந்தப்பொண்ணை ஒரு பொட்டி மேல படுக்க வெச்சிக்கிட்டு மியூசிக் வாசிச்சியே...அந்தமாதிரி ஒரு காட்சியை எவனாவது இதுவரைக்கும் யோசிச்சுருப்பானா தலீவா. அஜந்தா, எல்லோராவிலேயே இல்லையாம்.

சரி, மேட்டருக்கு வாரேன். காந்தியெ உனக்குப் பிடிக்கும்கிறதுக்காக எத்தனை தடவைதான் அஹிம்சை... அஹிம்சையே வீரத்தின் உச்சம்ன்னு டயலாக் எழுதுவே தலீவா.

சரி, அதை விடு. மனசாட்சிதான் மண்ணாங்கட்டி..சாரி.. ’மனசாட்சிதான் சாமி’ன்னு எப்பவோ எங்களுக்குச் சொல்லிப்புட்டே... விருமாண்டில நெப்போலியன் சொல்வாறே...நா இன்னக்கி நிம்மதியாத் தூங்கிடுவேன்..பொய்ச்சாட்சி சொல்லிட்டு நீ நிம்மதியா தூங்க முடியுமான்னு... அதையே இன்னும் மறக்கமாம இருக்கோம், நீ அதையே திரும்பத் திரும்ப வசனமா சொன்னா நாங்க தூங்கமுடியுமா தலீவா?

அரசியல்வாதிங்களுக்கு ஆப்பு வெக்கிறது, சாமிய வசனத்துல கொண்டு வாறது, இதெல்லாம் இனிமே நீ செய்யவேணான்னு தோணுது தலீவா. எந்தப்பயலுகளும், உன் பேச்சை கேட்டு ஒட்டு போடாம இருக்கமாட்டானுவ. நம்பு தலீவா. பாகிஸ்தானெ நீங்க பிரிச்சா, அந்த சகோதரன் கூட சண்டை போடணும், நீங்களே சமரசமா போனீங்கன்னா, நாமளும் சகோதரன்னுனு நிக்கணும்ன்னு நீ எழுதுன/பேசுற வசனம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, சொன்னா கோச்சுக்காத தலீவா, ஒரு நாவலா எழுது தலீவா, சினிமாவுல வேணாம்.

கிளைமேக்ஸே குழப்பம். நீங்க போடுற நாடகமே எங்களுக்கு சுத்தமாப் புரியலை. வசனத்துனால காமெடி வருது. சிரிப்பு வருது.

ஜோடிய இப்படி மாத்திப்புட்டியே தலீவா. நீயாவது ஒரு கவித படிச்ச..காதல் வந்துச்சி. மதன்கோபால் என்ன தலீவா பண்ணுனாரு? அவருக்கு எப்படி அந்த தீபா (சங்கீதா) மேல காதல் வந்துச்சி. என்ன தலீவா இது திரைக்கதை?

வீட்ல காத்திருக்குற சுனந்தாவும் (ஓவியா) இந்த்ரா மாமியும் (உஷா உதுப்) சும்மா விடுவாங்களா அந்த மதனகோபால பயலை?

கொஞ்சம் யோசிச்சி பாரு தலீவா, திரைக்கதைய கே.எஸ் ரவிக்குமார்ட்டெ குடுத்துட்டு, வசனத்தை கிரேஸி மோகனையோ அல்லது வேற யாரையாவது எழுதச்சொல்லிட்டு நீ "சப்போர்ட்" மட்டும் பண்ணியிருந்தா எப்படி இருந்துருக்கும் இந்தப் படம் தலீவா? என்னமோ போ.

@@@@@

உனக்கு இன்னாதான் தலீவா வேணும்? இன்னாத்துக்கு தான் இப்புடிப்போராடுறே? நீயே தான் சினிமா; சினிமாதான் நீன்னு தெரியும். அதுல இன்னாதான் உனக்கு வேணும்?

இருக்கிறவரைக்கும் பரீட்சார்த்த முயற்சியா இல்லெ, சினிமாவில மொத்தமா மூழ்கி முத்தெடுக்குறதா, இல்லெ, ஊர் ஒலகமே மெச்சுறமாதிரி ஒரு படத்தைக் கொடுக்குறதா இல்லெ, ஒலக நாயகனா ஆகுறதா இல்லெ ஆஸ்காரு வாங்குறதா, இல்லெ பெரியாருக்கு பேரன்னு பட்டம் வாங்குறதா, இல்லெ, தேசப்பற்று தியாகின்னு பேரு எடுக்குறதா இல்லெ பாரத ரத்னாவா, இல்லெ, சொல்றேன்னு கோச்சுக்காதெ தலீவா, இன்னொரு சின்னப்பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி காதல்கீதல்ன்னு என்சாய் பண்றதா...இன்னாதான் தலீவா வேணும் உனக்கு?

பா’ படத்தையும் ’தாரே ஜமின் பர்’படத்தையும் ரசிக்கிற நம்ம கூட்டம் ’உன்னைப்போல் ஒருவனை’ ஏன் ரசிக்கலைன்னு யோசிச்சியா தலீவா?

லாஜிக்குன்னு ஒரு கருமமும் இல்லாத ’பாஸ் (எ) பாஸ்கரன்’ காமெடியில் கலக்கும்போது நம்ம ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஏன் தலீவா டிரெய்லு ஆகணும்?

படம் பாக்கவே லாயக்கில்லாத பயலுகன்னு நாம மண்ணுமுட்டித்தனமா திட்டுற நம்ம ஊர்க்காரப்பயலுக ’களவாணி’யையும், ’பருத்திவீரனையும்’ தூக்கிவெச்சிக் கொண்டாடுறப்போ நம்ம ’விருமாண்டி’ஏன் தலீவா மண்ணக் கவ்வணும்?

பருத்திவீரன்லெ பிரியாமணி கசக்கப்படுறப்போ துடிக்கிற மனசு, விருமாண்டியில அபிராபி தூக்குல தொங்கையில, துடிக்கலயே ஏன் தலீவா?

என்னமோ தெர்யலை தலீவா, கொஞ்சம் 'ரிஸர்ச்' பண்ணிப்பார்க்கச்சொல்ல, ரீசண்டா வந்த படங்கள்ல, நீ, 'நடிப்ப மட்டுமே' குடுத்து இன்னோரு டைரக்டரு கையில் உன்னைக் கொடுத்த படமெல்லாம் நல்லாப்போயிருக்கிறதா தோணுது தலீவா. உதா. இந்தியன், தெனாலி, அவ்வை ஷண்முகி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு. ஆனா, நீ காலு வெச்சதெல்லாம், அல்லது கூப்பிட்டுக் கொடுத்ததெல்லாம் கொஞ்சம் பிகிலாயிறுச்சி, கண்டுக்கினியா தலீவா. உ.தா.. ஆளவந்தான், விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், அன்பே சிவம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், தசாவதாரம.

தசாவதாரம் மாதிரி பெரிய பரொட்டா ரொட்டியை மனசுல நிக்க வெக்காட்டியும் ருசிச்சு சாப்பிடக்கொடுத்த ஆளு நம்ம கே. எஸ். ரவிக்குமார். அவரு மட்டும் இல்லேனா, நெனச்சி பாக்கமுடியுமா தலீவா, அந்தப் படத்த ரெண்டரை மணி நேரத்துல முடிச்சிப் பாக்குறதே? ஆனா, மன்மதன் அம்புல, அந்த ஆளையே காணோம்?

என்னத்த தலீவா சொல்ல?

வேணாம் தலீவா. இப்படியேப் போனா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போல ”அது ஒரு வசந்த காலமாய்” நிகழ்காலத்தில் போய்விடுவியோன்னு பயமாயிருக்குத் தலீவா.

உனக்குத்தெரியாததுல்லெ தலீவா. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா. நம்ம 'சிவாஜிராவ் கெய்க்வாட்' மாதிரி இல்லாட்டியும், டைரக்டரு ஷங்கரு மாதிரி, அவரு வழில போறதுதான் இருக்குற மிச்ச சொச்ச காலத்துக்கும் உனக்கு ஏத்ததுன்னு நெனைக்கிறேன் தலீவா.

என்ன வழின்னு தெரியுதா தலீவா? கதையில ஆரம்பிச்சு, கொட்டகையில படம் ஓட்டுறதுவரைக்கும் சினிமாவுல, உனக்கு எல்லாமே முடியும், தெரியும் தலீவா, ஒத்துக்கினம். ஆனா, நாங்க உங்கிட்டே எதை ரசிக்கிறோமோ, அதை மட்டும் சினிமாவில செஞ்சு, வேற எதிலேயும் 'இன்வால்வ்' ஆகாமே, கொஞ்சம் 'துட்டு' பாத்துக்கினு, ரெண்டு பொடிப்பசங்கள கூப்பிட்டு, உன்பேர்ல, நாலு நல்லபடம் குடுக்கச்சொல்லு தலீவா. அப்போத்தான் நீ நிம்மதியோடும் நாட்டத்தோடும் தொடர்ந்து வேலை பாக்க முடியும் தலீவா. அதை விட்டுப்புட்டு, அது பண்றேன் இது பண்றேன்னு கழுதை கணக்கா திரிஞ்சியனா, என் வாயாலே நான் சொல்லமாட்டேன் தலீவா. மன்னிச்சுரு.

கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்க தலீவா. குசேலனையும் பாபாவையும் கூட கவுத்த பயலுக நம்ம பயலுக. சூப்பரு ஸ்டாருன்னுல்லாம் படத்த ஓட்டமாட்டாய்ங்க. ஆனா, புதுசா வந்த பயலுகளக் கூட (மகேஷ் -அங்காடித்தெரு, விதார்த்-மைனா) வெற்றிப்பயலுகளா ஆக்கிப்புடுறானுக தலீவா.

இனிமேலும் ரசிகப்பயலுகளை, ரசிக்கத்தெரியாத மண்ணுமுட்டிகள்ன்னு மட்டம் தட்டுறதுல ஞாயம் இல்லை தலீவா.

ரொம்ப காலம் உன்னோட தோஸ்த்தா, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் தலீவா, உனக்கு என்னதான் வேணும்ன்னு நீயே உன்னை "ரீ-டெஸ்ட்" பண்ணிக்கவேண்டிய நேரம் வந்தருச்சி தலீவா.

இல்லாட்டி கத கந்தல் தான்.

சாரி தலீவா, உனக்குப் பிடிக்காதுதான், இருந்தாலும் உன்னை மறுத்துப்பேசுனதா நீ நினைச்சா என்னை மன்னிச்சுக்க தலீவா.

இப்படிக்கு
காமெடிக்கும் கமலஹாசனுக்கும் தாசன்,

கமல் குமார்.


தங்கமீன் ஜனவரி 2011 இதழில் எழுதியது.

Tuesday, January 25, 2011

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

பொங்கல் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.

மதுரை. ஜன. 15. (இந்தியா) தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டமான மதுரையின் தல்லாகுளம் பகுதியில் நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பதினான்கு மற்றும் பதினைந்து தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் ரேஷன் அரிசிக்கடை திடீர் என்று பூட்டப்பட்டதால் இப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை 'கொண்டாடப்படுமோ படாதோ' என்ற சந்தேகம் 'சமுதாய கவனிப்பாளர்களின்' பார்வையில் இருந்தது. மாவட்ட ஆட்சியாளரிடம் இதுபற்றி மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்த நேரம், அவர் இடமாற்றம் குறித்து செய்தி வந்த நிலையில் அவர் அப்பேச்சினை முடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று வந்த மர்மக்கும்பல் ஒன்று ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு மூட்டை அரிசியினை வீசிவிட்டுச்சென்றது. இதை அள்ளிக்கொண்ட மக்கள் சந்தோச பெருக்கோடு பொங்கலைக் கொண்டாட ஆரம்பித்தனர். பொங்கலில் போடுவதற்கு சர்க்கரை மூட்டைகளை வீசாத அம் மர்மக்கும்பலின் மேல் விசனப்பட்டும் அவர்களில் சிலர் திட்டித்தீர்த்தனர்.


இதற்கிடையே வீடுகளுக்கு 'குடிநீர் பாக்கெட்' போடும் தண்ணீர்வண்டி நேற்று வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். 'வீட்டிற்கு மூன்று பாக்கெட் இலவச தண்ணீர்' என்ற திட்டத்தைச் சொல்லி ’ஆட்சிக்கு வந்தவர்கள்’ இன்று அதைச் செயல்படுத்தவில்லை என்றும் அவர்களில் சிலர் கூறினர். மேலும் சிலர், சென்ற வாரம் கொடுத்த ’தண்ணீர் பாக்கெட்டின்’ அளவு குறைந்திருந்தது என்றும் புகார் செய்தனர்.



2005ல் எழுதியது

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

சென்னை. மே 10. சென்னையின் முக்கியச் சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நேற்று, 'முதலமைச்சரும் மந்திரிகளும்' கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்று அவர்கள் இப்போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சமீப காலமாய் எகிறி வந்துகொண்டிருந்தது நாம் அறிந்ததே! உலக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணையின் விலையை ஏற்றியதை ஒட்டி இந்தியாவிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையை மறுபரிசீலனை செய்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முந்தைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனால், அரசாங்கம் பெட்ரோலியப்பொருட்களுக்குத் தந்த மானியத்தை முழுமையாக நிறுத்தியபிறகும், தொடரும் கச்சா எண்ணெய் விலையேற்றம் அரசுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.

இதன்படி பெட்ரோல் விலையில், லிட்டர் ஒன்றுக்கு 5.80 (ஐந்து ரூபாய் எண்பது காசுகள்) ஏற்றப்படுவதாகவும் இனி பெட்ரோலின் விலை 'தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் எண்பது காசுக்கு (ரூபாய் 999.80)' விற்கப்படும் என்றும், டீசல் விலை பத்து ரூபாய்(ரூபாய் 10.00) ஏற்றப்பட்டு, 'எழுநூற்று எண்பது ரூபாய் முப்பதுகாசுக்கு (ரூபாய் 780.30)' விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(2005ல் எழுதியது.)

சென்னை டைம்ஸ் 2015 இதழில் இருந்து

தமிழகம் வந்தார் பிரதமர்!

சென்னை. மே 20. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில், கடலுக்கடியில் ஏற்பட்ட அதிபயங்கர நில அதிர்வினால், 'சுனாமி' எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை மிகவும் கொடூரமாகத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவில் இது, தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியதில் ஏராளமானோர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். இந்திய அரசும் இந்திய மக்களும் இதன் மீட்புப்பணியில் அப்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறந்த செயலாற்றினர்.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கென, அதி நவீன வசதிகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளை இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது கட்டி முடித்திருக்கின்றன. இவைகளைத் திறந்து வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் இந்தியாவின் பிரதமர் நேற்று சென்னை வந்தார். வீடுகளை மக்களுக்கு அளித்த அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'புயலாலும் கடலலைகளாலும் எளிதில் தாக்கமுடியாத அளவிற்கு ஜப்பானிய அரசின் திட்ட உதவியோடு இவ்வீடுகள் அமைந்திருக்கின்றன' என்று சொன்னார்.

இதற்கிடையில், நேற்றிரவு சன் டிவி செய்திகளில், 'நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள, காணாம்பட்டினம் கிராமத்தில் 'சுனாமி' தாக்கி பத்தாண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவித நலத்திட்ட உதவியும் வழங்கப்படவில்லை' எனவும் 'ஆட்சியிலிருக்கும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை' எனவும் காட்டப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் அவர்களுக்கு, கட்சியில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக கட்சித்தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கட்சியின் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.

(2005ல் எழுதியது!)

Saturday, January 01, 2011

மன்மதன் அம்பு - எய்தவன் ஏமாற்றம்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2011ம் வருடமானது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நலங்களையும் வளங்களையும் அளிக்க இயற்கையை வணங்குகிறேன். மன்மதன் அம்பு படத்துக்கான எனது எண்ணங்களை இந்தமாத "தங்க மீன்" இதழில் பதிந்துள்ளேன். ஒரே வார்த்தையில் அப்படம் பற்றிச் சொல்வதானால் கமலின் மீது ஏமாற்றமே வருகிறது. http://www.thangameen.com/Default.aspx

Search This Blog