Wednesday, July 22, 2009

அப்படி என்ன சார் பிஸி?

அண்மைக்காலங்களில் நான் அதிகமாகவே எழுதாமல் இருந்துவிட்டேன் என்றாலும் அதனாலோ என்னவோ நிறையவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன்.
உதாரணமாய் பல விஷயங்களைச் சொல்லலாம் எனினும் பின்வருவன இன்றுவரை விரட்டிக்கொண்டேயிருக்கின்றன.

சிங்கப்பூருக்கு வந்திருந்த ஞானியைப் பார்க்காதது, பேசாதது பெருங்குறையாய் மனதில் தொங்கிக்கொண்டேயிருக்கிறது. சிங்கப்பூரில் 'பஜாஜ் பல்சர்' பைக் வாங்கியவர்களில் 99% பேர் ஒருதடவையாவது சாலையில் சரிந்து விழுந்திருப்பது பற்றி, எனது 'மருதம்' சிறுகதைத்தொகுப்பில் அதிகமாய் நிரம்பியிருக்கும் குழந்தைக்காலங்களை அப்படியே அள்ளித்தந்த 'பசங்க' திரைப்படத்தை நிறைய நிறைய எழுதவேண்டும் என்பது பற்றி, மஹிந்த ராஜ பக்ஷேயின் கொலைவெ(ற்)றி பற்றி, அப்பாவித்தமிழர்களின் அவலம் பற்றி, குடிநீர்க்குழாயில் சாராயம் வந்தது பற்றி, அண்மையில் சந்தித்த சென்னை நண்பரின் இந்திய சுற்றுலாத்துறை குறித்தான ஆத்திரங்கள் பற்றி, சாரு நிவேதிதா எழுதியிருந்த இயற்கையை மனிதன் எதிர்கொள்ளும் மனப்பாங்கு குறித்தான ஒரு சிறந்த 'ஒப்புமை பற்றி, 'சொல்வனம்' வார இதழில் வெளிவரும் 'குளோபல் வார்மிங்' கட்டுரை பற்றி, ஏனென்று தெரியாமல் 'அயன்' படத்தை ஐந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தது பற்றி, அதில் வரும் (கிளிஷேக்கலுடன் ஒப்பிடக்கூடாத) சூர்யாவின் மிகச்சிறந்த ஒரு காட்சி பற்றி, 'நாடோடிகள்' படத்தைப் பற்றி, அண்மையில் வெளிவந்த 'நாம்' இதழின் தரம் பற்றி, சிங்கப்பூரில் நடைபெற்ற எந்த இலக்கிய, புத்தக சம்பந்தப்பட்ட கடந்த நான்குமாத நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாதது பற்றி, எதையும் சாராதிருந்தும் எல்லாமுமாய் இருக்கும் ஒரு இம்சை பற்றி, கவிஞரும் விமரிசகருமான ராஜமார்த்தாண்டன் மறைவு பற்றி, காலச்சுவடு இதழில் பணியாற்றி வரும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஓவியர் உமாபதி வீட்டிற்கு வந்தது பற்றி, அவர் தந்த ராஜ மார்த்தாண்டன் ஓவியம் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக ஆதித்யா பற்றி அவனுடனான நெகிழ்வான தருணங்கள் பற்றி......

பற்றுக பற்றினை பற்றற்று பற்றுக
பற்றி பற்றால் வரும். (இது திருக்குறள் அல்ல)

இதன் குத்துமதிப்பான விளக்கம்: பற்று இருந்தால் பற்றியவற்றைப் பற்றி பற்றிய நேரத்தில் பற்றில்லாமல் எழுதலாம் என்பதாகும்.

எம்.கே.குமார்.

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு

பெயர்: எம்.கே.குமார் என்று அழைப்படும் குமாரராஜா

வயது: எல்லாம் சின்ன வயசு

அடையாளம்: நல்ல கருத்த நிறம், சுருட்டை முடி, கண்கள் பெண்களைப் பார்த்தால் பளீரிடும்.

தேடுபவர்கள்: ஒருவர் ஊரை விட்டே போய்விட்டார்.(இவரை தேடி அலுத்து என்று நினைக்க வேண்டாம்)மற்றுமொருவர் தேடிக்.......கொண்டேயிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது.

பின் குறிப்பு: ஒரு புத்தகங்க்கள் காத்திருக்கின்றன.

முக்கியக் குறிப்பு: பத்து வெள்ளி தராமல் டபாய்ப்பது என்றெல்லாம் யோசிக்காமல் விரைவில் தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு: தொலைபேசி எண்: 999
விலாசம்: 007, துப்பாக்கி நகர், கொலைகாரன் பேட்டை, திருட்டூர், சதக் சதக் மாவட்டம்,

(அட, தொலைஞ்சி போனவனே, இதையாவது சொந்தமானதா சொந்தவலைப்பூவுல எழுதக்கூடாதா? அப்படியே எடுத்துப்போடணுமா?)

Search This Blog