Thursday, March 03, 2011

இந்திரஜித் வந்திருந்தார்

அண்மையில் நான் படித்த இந்த கட்டுரை, என்னை மிகவும் கவர்ந்தது. காரணம், இந்திரஜித் ’ஒருமாதிரியான’ ஆள்தான் என்றாலும் இந்தக்கட்டுரையில் மிக உச்சத்தில் இருந்தார் என்றே நினைக்கிறேன்.

*************************
ந.பாலபாஸ்கரன் இலக்கியக்கூட்டம்
இந்திரஜித்

ஆறு மணிக்குக் கூட்டம் என்பதால் ஆறு மணிக்கே போய்விட்டேன். வாசலில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள் பற்றிய விவரம் இருந்தது. ஒன்று இன்று. ஒன்று நாளை. இன்றைய நிகழ்ச்சி எங்கே என்று தற்செயலாகத் திரும்பியபோது வாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது.

நடராசனும் இருந்தார். நானும் அவரும் உடனே நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டோம். இரண்டு விதமான வடைகளும், கேசரியும் இருந்தன. காபி, டீ இரண்டும். டீ மட்டும் எடுத்துக்கொண்டோம். பலகாரம் மூன்றும். தொடர்ந்து வரலாம் போலிருக்கிறதே என்றார்.

அறுபது பேர் உட்கார இடம் இருந்தது. ஆறு மணிக்கு இருபது பேர் இருந்தனர். ‘தங்கமீன்’, ‘இணைய இதழும்’, ‘மாதவி இலக்கிய மன்ற’மும் சேர்ந்து செய்த ஏற்பாடு.பெண்கள் சரிசமமாக இருந்தனர். புஷ்பலதா, சீதாலெட்சுமி, சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கர், மீனாட்சி சபாபதி என்று அறிமுகமான முகங்களும், அறிமுகம் இல்லாத வேறு பல முகங்களும். மூத்த எழுத்தாளர்கள் பி கிருஷ்ணன், ஏ. பி. ராமன், ஓய்வுபெற்ற வானொலிச் செய்திப் பிரிவின் தலைவர் கண்ணப்பன், மொழிபெயர்ப்பாளர் சுப்ரா இப்படி மூத்தோர் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது.

ஜே. எம். சாலி என்னைப் பார்த்ததும் ஏற்கனவே உள்ளே வைத்திருந்த விரக்திகளைக் கொட்டினார். அருண் செங்குட்டுவன், அருண் மகிழ்நன் சகோதரர்கள் வந்திருந்தனர்.

உடல்நலக் குறைவினால் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்நெஞ்சர் என். ஆர். கோவிந்தன் வர முடியவில்லை என்று ‘தங்கமீன்’ ஆசிரியர் பாலு மணிமாறன் அறிவித்தார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன், முன்னைய தலைவர் அமலதாசன், செயலாளர் சுப அருணாச்சலம் மூவரும் வந்திருந்தனர்.

பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள் பலர் வந்திருந்தனர். வானொலியின் எஸ். பீட்டர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதே இல்லை. ‘பாஸ்கரனுக்காக வந்தேன்’ என்றார்.

மெல்ல கூட்டம் சேர்ந்தது. ஆறரை மணி வரை கேசரி, பிறகு நிகழ்ச்சியைத் தொடங்கிவிடலாம் என்று பேசிக்கொண்டனர். மெல்ல கேசரி கரைந்து கொண்டிருந்தது. ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875-1941’ என்ற தலைப்பில் பாலபாஸ்கரன் பேசுவதற்காகக் கூட்டம் காத்திருந்தது. ஆறு நாற்பதுக்கு அவர் பேச ஆரம்பித்தபோது கூடுதலாக நாற்காலி கொண்டு வந்து போட நேர்ந்தது.

இவ்வாண்டுப் பிற்பகுதியில் புத்தகமாக வரவிருக்கும் அவருடைய ஆய்வில் இருந்து சில தகவல்களை பாஸ்கரன் பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் பழனியப்பன் பதிவு செய்து கொள்ளலாமா என்று தன் கருவியைக் காட்டினார். பதிந்துகொண்டு கணினியில் இட்டு காரில் போகும்போது கேட்டுக்கொண்டு போகலாம் என்றார். ‘அப்படி கேட்க முடியாது. நான் என்ன பாட்டா பாடப் போறேன்?’ என்று பாஸ்கரன் கேட்டார். அப்படியும் அவர் பேசத் தொடங்கியதும் சில பல பதிவுகள் நடந்தன. ‘கொஞ்சம் நிமிர்ந்து அப்படியே பேசுங்க!` என்று ஒரு முதியவர் பாஸ்கரனைப் பாதிப் பேச்சில் அதிர வைத்துப் படமெடுத்தார். அந்தப் படம் வேறு யாருக்கும் கிடைக்காது.


மூன்று பேர் பேச்சு தொடங்கிய அரை மணி நேரத்தில் எழுந்து சென்றனர். நன்றாக அறிமுகமான அவர்களின் பெயர் இப்போது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

பொதுவாக 1875 முதல் 1941 வரை பத்திரிகைகளை நடத்தியவர்களும் அவற்றை மூடியவர்களும் பற்றி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் பாஸ்கரன். சீனப் பத்திரிகைகளைப் பெரும் கோடீஸ்வரர்கள் நடத்தினர். தமிழ்ப் பத்திரிகைகளைப் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே நடத்தினர் என்று சொன்னார். முஸ்லிம்களே அதிகம் பத்திரிகைகளை தொடங்குவதும் மூடுவதுமாக இருந்திருக்கின்றனர். சில பத்திரிகை ஆசிரியர்கள் வாங்காத ஜனங்களை ஜாதி வாரியாக, மதவாரியாகக் குறிப்பிட்டு திட்டித் திட்டித் தலையங்கம் எழுதியிருக்கின்றனர்.

கேள்வி நேரம் வந்ததும் கேள்வி கேட்பவர்களுக்கு ஏதுவாக அங் மோ கியோ நூலகத்தின் உயர்தரமான மைக் தரப்பட்டது.

முதல் கேள்வியை இலியாஸ் கேட்டார். கோ. சாரங்கபாணி முஸ்லிம்களோடு இணக்கமாக இருந்ததாகச் சொன்னீர்கள். மகிழ்ச்சி. ஆனால் செட்டியார்களோடு உரசல் இருந்ததாகச் சொன்னதை ஏற்க முடியாது. அவர்களோடும் அணுக்கமாகத்தான் இருந்தார் என்று சொன்னார். பாதிக் கேள்வியில் கொஞ்ச நேரம் இலியாஸ் பேசாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். பிறகு ‘விநோத சம்பாஷணை’ என்பது நினைவுக்கு வந்ததும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று கேட்டார்.

விநோத சம்பாஷணை மகுதூம் சாயபு எழுதிய தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்கனவே நா கோவிந்தசாமி சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

ஆனால் பாஸ்கரன் அதை சிறுகதையாக ஏற்கவில்லை என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறார். இங்கும் அதையே சொன்னார். சம்பாஷணை பாணியில் அந்தக் கால இதழ்களில் நிறைய வந்திருக்கிறது. சம்பாஷணை சம்பாஷணைதான், சிறுகதை சிறுகதைதான் என்றார்.

மூத்த பத்திரிகையாளர் மகுதூம் சாயபு படித்தவரா என்று பொன். சுந்தரராசு கேட்டார். தகுதி இல்லாதவர்களும், வசதி இல்லாதவர்களுமே பத்திரிகை நடத்தினர் என்று பாஸ்கரன் சொன்னதால் அந்தக் கேள்வி ஏற்பட்டது. சாயபு படித்தவர், நிறையப் பழமொழிகளை அவருடைய எழுத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பாஸ்கரன் சொன்னதை இங்கே எழுதும்போது அவர் சாயபுவைக் கிண்டல் செய்தது போல் இருக்கிறது. ஆனால் அவர் படித்தவர்தான் என்று பாஸ்கரன் உறுதியாகச் சொன்னார்.

1875 முதல் 1941 வரை சுமார் ஐம்பது தமிழ் இதழ்கள் வந்திருந்தன. ஏன் அத்தனை இதழ்கள் வந்தன? மற்ற சமூகத்தினரும் அவ்வளவு பத்திரிகைகளை நடத்தினார்களா? என்று மகிழ்நன் கேட்டார். மற்றவர்கள் பெரிய பத்திரிகைகளை நடத்தியதால் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தமிழில் சின்னச் சின்ன முயற்சிகள் அவ்வப்போது நின்று போனதால் நிறைய வர நேர்ந்தது என்றார் பாஸ்கரன்.


கடைசிக் கேள்வியை ஜே. எம். சாலி கேட்டார். பாஸ்கரன் சொன்ன எல்லா விவரமும் தனக்கும் தெரியும் என்றும் பாஸ்கரனோடு வேலை பார்த்ததாகவும் சாலி சொல்லும்போது அவருடைய குரல் ஓரளவு சரியத் தொடங்கியது, கோசாதான் என் தந்தை என்னை சிங்கப்பூருக்கு அழைத்தார். என்னை வளர்த்தார் என்று சொல்லும்போது தொண்டை கரகரத்தது.

கூட்டம் முடிந்து விடைபெறும் நேரத்தில் எதிர்பாராத அறிவிப்பு வந்தது. இலியாஸ் பொன்னாடை போர்த்த விரும்புவதாகத் தெரிவித்தார். பாஸ்கரன் தடுமாறினார். பொன்னாடையோடு மேடைக்குச் சென்ற இலியாஸ், செங்குட்டுவன் மூலம் பொன்னாடையைப் போர்த்த செய்தது நிகழ்ச்சிக்கு மிகவும் மெருகூட்டியது. தமிழ் இதழ்களின் வரலாற்றில் பாஸ்கரன், செங்குட்டுவன், இலியாஸ் மூவரும் இடம்பெற்றனர்.

தமிழில் மிகவும் அபூர்வமாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன. பொன்னாடை அங்கத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது தமிழ் நிகழ்ச்சிதானா என்று ஐயமாக இருந்தது. ஏதோ பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரஞ்சுக் கூட்டம் மாதிரி பேச்சாளர் மெல்லிய குரலில் விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்க் கூட்டம் என்றால் மைக்கே திகைக்கும் வகையில் பெரும் சத்தம் இருக்கும். அது இல்லாமல் இருந்தது பெருங்குறையாக இருந்தது.

நிகழ்ச்சியில் சொன்ன விவரங்கள் புத்தகத்தில் வரும். நான் புத்தகம் போடுவதற்கு முன்பு நீங்கள் எங்கும் பயன்படுத்திவிடாதீர்கள் என்று பாஸ்கரன் கேட்டுக்கொண்டார். அவருக்கு முன்பே யாராவது புத்தகம் போட விரும்பினால் இந்த விவரங்களை சொந்தமாக ஆராய்ச்சி செய்தது போல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.

இதுபோன்ற நிகழ்ச்சியில் பதிவு செய்வதுகூட ஒரு வகையான ஆராய்ச்சிதானே என்று வாதிடக்கூடும்.

தொலைக்காட்சியில் இருந்து வந்த ‘தாளம்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்பரசன் பேட்டிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அண்மையில் இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய புஷ்பலதா, ‘இந்திரஜித் ஒழுங்கை என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டார். அவரோடு இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பெண்மணியும் சேர்ந்து எனக்கு விளக்கம் தந்தனர்.

ஷாநவாஸ் ‘உயிர்மையில்’ வெளிவந்த என்னுடைய கவிதைத் தொகுப்பில் நான்கு பிரதிகள் கொண்டு வந்ததாகவும் எல்லாவற்றையுமே கடைக்கு வந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

அருண்மகிழ்நன் மின்கலம் பலவீனம் அடைந்து கொண்டிருந்த அவருடைய கைத்தொலைபேசியில் அண்மையில் செல்லில் வந்த என் கதைகளைக் காட்டினார்.

ஒரு சனிக்கிழமை மாலையில் பொருளும் நேரமும் செலவு செய்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்திய ‘தங்கமீன்’ மாத இதழுக்கும், ‘மாதவி இலக்கிய மன்ற’த்துக்கும் நன்றி சொல்லிக்கொண்டு விடைபெறலாமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாஸ்கரன் ‘இருங்கள் போகலாம்’ என்று சொன்னதையும் கேட்காமல் நண்பர் ராமநாதனுடன் வெளியே வந்தேன்.


நன்றி: உயிரோசை
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4006

Search This Blog