Sunday, May 10, 2020

Lucy - English (2014)

Image may contain: 1 person, closeup

ஐ-போனையோ ஆன்றாய்டையோ விரலால் உருட்டிக்கொண்டிருக்கும் அழகான/வடிவான உங்களுடைய, முதல் மூதாதை மனிதப்பெண்குரங்கு லூசி இந்தப்பூமியில் தோன்றி 3.2 மில்லியன் ஆண்டுகளாகிவிட்டன தெரியுமா?

அதாவது இத்தனையாயிரம் வருடங்களில் இரண்டு விஷயங்களே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒன்று தன் தேவைக்கேற்ப தன் தகவமைக்கு ஏற்ப தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்வது அல்லது தேடிக்கொள்வது. இரண்டு, அதை அடுத்த சந்ததிக்குக் கடத்திவிட்டுச்செல்வது. தொடர்ந்து இவ்வாறாக நடந்து நடந்துதான் இப்போது நீங்கள் ஆன்றாய்டுக்கு வந்திருக்கிறீர்கள், அதுவும் மனித மூளையின் வெறும் பத்து சதவீத புத்திசாலித்தனத்தை மட்டுமே பயன்படுத்தி.

உலகில் வாழும் உயிர்களில் அதிக புத்திசாலித்தனமான விலங்கு டால்பின். அதுவே ஏறக்குறைய 15 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறது என்கிறார்கள். எண்ணற்ற நியூரான்களைக்கொண்டிருக்கும் இந்த மூளையின் செயல்பாட்டை மேலும் உயர்த்தினால்? டால்பினைப்போல நமக்கு நாமே ஒலியை உருவாக்கி அதை மீளொலியாய் திரும்பப்பெற்று ..இப்படி எதாவது சக்திபெற்று?

இந்தக்கற்பனையை அறிவியல் புனைவு திரில்லராக்கி கோடிகளைக் குவித்துவிட்டனர் பிரான்ஸைச் சேர்ந்த இயக்குனர் Luc Besson தம்பதியினர். 40 மில்லியனைப் போட்டு 450 மில்லியனை அள்ளிய படம்தான் இந்த லூசி.

தைவானின் தாய்பே நகரத்தில் படிக்கும் அமெரிக்க மாணவி லூசி Scarlett Johansson. புலிமீது தாவக் காத்திருக்கும் மான் போல வழுவழு சுறுசுறு. கவர்ந்திழுக்கிறார். (உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்.) Lucyயின் இரண்டு வார டேட்டிங்கில் இருக்கும் காதலன், அவளிடம் ஒரு ப்ரீப்கேசைக்கொடுத்து எதிரில் இருக்கும் ஹோட்டலில் நுழைந்து அங்கிருக்கும் Mr Jang என்பவரிடம் கொடுத்துவிட்டு வா. ரிசப்ஷனில் சொன்னால்போதும், அவரே வந்து வாங்கிக்கொள்வார் என்கிறான். டேட்டிங் கீட்டிங் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே, இந்தவேலைக்கு எனக்குக்கிடைத்த ஆயிரம் வெள்ளியில் ஆளுக்கு ஐநூறு என்று பிரித்தும்கொடுக்கிறான்.

ரிசப்ஷனில் பேரைச்சொன்னதும் தன் படையோடு கீழே வருகிறான் வில்லன் ஜாங். லூசியையும் அள்ளிக்கொண்டு போகிறான்.

பெட்டியில் இருப்பது CPH4 எனப்படும் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் செயற்கை போதைமருந்து. ஆறாவது வாரத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு- உடல் வேகமாக வளர இயற்கையாகவே சுரக்கும் ஒர் நுண்துளியின் பல்லாயிர மடங்கு வடிவம். ஒரு துண்டு உடலுக்கு ஒரு அணுகுண்டு.

நீலக்கலரில் பெட்டியில் இருக்கும் நான்கு பாக்கெட்டுகளையும் நால்வரின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்து பாரிஸ், ரோம் என்று அனுப்பிவிடுகிறார்கள். அதில் ஒருத்தி லூசி.

லூசியை அனுப்புவதற்குமுன் அடைத்துவைத்திருக்கும் இடத்தில் குண்டர்களில் ஒருவன் அவளை நெருங்க, எனக்கு மூடு இல்லை, கிட்டே வராதே என்கிறாள். கடுப்பில் ஓங்கி வயிற்றில் நாலு குத்துகுத்திவிட்டுப்போகிறான் அவன். லூசியின் வயிற்றிலிருக்கும் பாக்கெட் நெகிழ்ந்து உடலுக்குள் கலக்க ஆரம்பிக்கிறது அதிவேக மூளைபெருக்க போதைவஸ்து. அப்புறம் என்ன? சும்மாவே தீப்பிடிக்க வைக்கும் ஸ்கார்லெட் லூசி திருப்பாச்சி லூசியானால்? அட்டாசு பட்டாசுதான்.

உடலில் வலி உணர்வில்லை. மூளை ரேடியோ மேக்னெடிக் அலையை உணர்கிறது. தொட்டால் உடலை முழுதும் ஸ்கேன் செய்து என்ன நோய் என்கிறது. அதகளம்தான். குண்டர் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்று கன்பாயிண்டில் அனஸ்தீசியா இல்லாமல் ஆபரேட் செய்யச்சொல்லி மீதமுள்ள பாக்கெட்டை எடுத்துக்கொண்டு மற்ற மூவரையும் தேடுகிறாள்.

தன் நிலையைச் சொன்னால் உணர்ந்துகொள்ளும் விஞ்ஞானி/ ஆய்வாளர் யார் என கூகுளை ஸ்கேன் செய்து உலகப்புகழ்பெற்ற இயற்பியலாளர் Morgan Freeman ஐ பிடிக்கிறார். நான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்கிறாள்.

ஐரோப்பிய போதை மருந்து தடுப்பு பிரிவின் அதிகாரிக்கு அழைத்து மற்ற மூவரும் அங்கு வந்துகொண்டிருக்கும் செய்தியைச் சொல்கிறாள்.

தப்பிய தென்கொரிய வில்லன் Choi Min-sik ஐரோப்பாவில் அவளைத்துரத்த, பாக்கெட் உள்ள மூன்றுபேரையும் கடத்தல் பிரிவு அதிகாரிகள் துரத்த, லூசியை மரணம் துரத்த அவளோ, இதை என்ன செய்வது என்று பேராசிரியரைத் துரத்த... படம் ஜெட் வேகம்.

என்ன ஆனாள் லூசி? எதை இந்த உலகத்திற்கு விட்டுச்சென்றாள் என்பது மீதமுள்ள படம்.

சில காட்சிகளை மட்டும் படமே மறந்தாலும் மனம் மறக்காது. மிதக்கும் ராஃப்டில் கடலுக்குள் தொங்கியவாறு தலையை வைத்து ரோஸ்ஸுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜாக் (என்ன படம்?) அதிரடிக்கு முன்னால் ஒவ்வொரு சொட்டு நீர்த்துளியின் கணத்தைக் கணக்கிட்டுக் காத்திருக்கும் வீரன் விஸ் (என்ன படம்?) இப்படி...

அதேபோல, மூன்று மில்லியன் வருடத்துக்கு முன்னால் செல்லும் ஆன்றாய்டு காலத்து லூசி, அண்டர்வேர் கூட இல்லாத ஆதி 'ஏப்' லூசியின் விரலைத்தொடுவது அழகான என்றென்றும் நினைவில் நிற்கும்காட்சி.

எத்தனையோ மில்லியன் வருடங்கள் உங்களுக்கு இப்போது அந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது, நீங்கள் அதைவைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

நல்ல ஒரு சை-ஃபி படம் பார்த்த திருப்தி, ஸ்கார்லெட்டையும். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

#MK_Movies
#Lucy

Qarib Qarib Singlle (Almost single) 2017 (Hindi)

Image may contain: 1 person

இர்பான்- பார்வதி இருவருமே நடிப்பில் அசுரர்கள். இருவரையும் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். பெரிதாக ஒன்றுமில்லாத கதை. ஆனால் சிறுசிறு மென் உணர்வுகள் அவசியம். அதனால்தான் இவர்கள் தேவைப்பட்டார்கள்போலும். இருவரும் ஜஸ்ட் லைக் தேட் அதை டீல் செய்கிறார்கள்.

3 பெண்களுடன் காதலிலிருந்ததும் யாரும் மணந்துகொள்ளவில்லை யோகியை (இர்ஃபான்). மனம் முழுக்க அன்பிருந்தும் அவர் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஆள். இரவில் போனின் இன்னொரு முனையில் காதலிக்கும்பெண் பேசிக்கொண்டிருக்கும்போதே (என்னைப்போல) தூங்கிவிடும் ஆண். பத்துமணி இரயிலுக்கு வரச்சொல்லிவிட்டு பத்தரைக்கு வந்து பொறிகடலை வாங்க வண்டியைவிட்டு கீழே இறங்கிப்போவான். விமானத்தில் முதல்வகுப்பில் இருவருக்கும் டிக்கட் எடுத்துவிட்டு விமானத்தைத் தவறவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் போவான். எந்தப்பெண் இப்படிப்பட்டவனை(நம்மை)யெல்லாம் வைத்து வாழ்க்கை வண்டியோட்டும் சொல்லுங்கள். காதலித்த பெண்களனைவரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. (பின்னே என்ன லூசா அவர்கள்?)

இத்தகைய ஒருவனை மேட்ரிமோனியல் வழியாக சந்திக்கிறாள் விதவையான 35 வயது ஜெயா (பார்வதி). அலுவலகத்தில் தன்னம்பிக்கை நிறைந்த பெண். ஆனால் தனிவாழ்வில் விதவைப் பேரிளம்பெண்ணுக்கே உரிய தயக்கமும் பயமும் ஆர்வக்கூச்சமும் கொண்டவள். 'உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்' கணக்காய், 'என் முன்னாள் காதலிகளைப்பார்; நான் யார் என்று சொல்வார்கள்' என்று பார்வதியை அழைத்துக்கொண்டு போகிறார் யோகி.

குடும்பமாகிவிட்ட காதலிகள் எல்லாம் இர்ஃபானை மதிப்போடு கொஞ்சத்தான் செய்கிறார்கள், கூட வந்த பார்வதி?

இருவரும் சேர்ந்து செல்லும் எல்லாவற்றிலும் வழக்கம்போல சொதப்புகிறார் இர்ஃபான். அவ்வளவு பொறுமையாகவெல்லாம் புரிந்துகொண்டு காத்திருக்கப்போகிறார்களா என்ன?

கடுப்பான பார்வதி, நம் இருவருக்கும் ஒத்துவராது, பிரிவோம். நான் இப்படியே என் முன்னாள் கல்லூரிக்காதலனைப் பார்த்துவிட்டுவருகிறேன் என்று அவரை அப்படியே விட்டுவிட்டு கிளம்புகிறார்.

இர்பான் என்ன ஆனார்? இருவரும் சேர வாய்ப்பிருந்ததா? இதுதான் மீதிப்படத்தின் கிளைமேக்ஸ் கதை.

பார்வதியா இது? பார்வதிக்கெல்லாம் வயசாகலாமா சார்? ஆகுதே சார்...
நடிப்பில் இருவருக்கும் தீனி. அதிலும் இர்ஃபானை அலேக்காய் சாப்பிட்டுவிட்டுப்போகிறார் பார்வதி. மறைந்த இர்ஃபான், என்ன ஒரு எளிமையான அலட்டிக்கொள்ளாத நடிகன்!

கொஞ்சம் ஜாலி. பார்க்கலாம்.

#MK_Movies

World Famous Lover (2020) Telugu

World Famous Lover (2020)

விஜய் தேவரகொண்டா நடித்த படம். ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, இஸபெல்லா (பிரேசில் அழகி) என நாலு ஹீரோயின்கள். கடுப்பாகுமா ஆகாதா சொல்லுங்கள். முட்டை மந்திரித்து வைக்கலாம் போல வெறியாகத்தான் இருக்கு. 'பெயரில்' கொஞ்சம் தெரிஞ்சாளு மாதிரி இருக்கவும் போனாப்போகுதுன்னு விடுறேன். (ஸ்மைலி போட்டவர்களெல்லாம் இதுக்கு மட்டும் போட்டவர்கள்)

சரி படத்துக்கு வருவோம். கத நம்ம கதெ தான். சீனு (விஜய் தேவரகொண்டா) பிரில்லியண்ட் ஸ்டூடெண்ட். காலேஜ் படிக்கும்போதே எகனாமிக்ஸ் பத்தி புத்தகம் எழுதுறவர். வழியில் பின் கல்லூரியில் சந்திக்கும் யாமினியை (ராஷிகண்ணா) காதலிக்கிறார். கல்யாணத்துக்கு பணக்கார மாமா ஒத்துக்கொள்ளாததால் லிவிங் டுகெதரில் தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். சிறிதுகாலம் சென்றபின், வேலை செய்யப்பிடிக்கவில்லை எழுத்தாளனாவதே என் லட்சியம் என வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார். யாமினி வேலைக்குச்சென்றுவருகிறார். டிவி பார்ப்பது, சாப்பிடுவது, யாமினியோடு பெட்ரூமில் இருப்பது, தூங்குவது பிறகு எழுவது என சொகுசாய் ஓட ஆரம்பிக்கிறது வாழ்க்கை. தான் இங்கு இவன் வாழ்க்கையில் இருப்பதே அறியாமல் அவனாக மட்டுமே வாழ்கிறானே என மனதுக்குள் குமுறுகிறார் யாமினி. எழுதுன்னு சொன்னா எழுத்து உடனே வந்துருமா என எகிறுகிறார் சீனு. உன்னை நம்பி வந்தேன் என்னை ஏமாற்றுகிறாய், உன்னை விட்டுப்போகிறேன் என சீனுவை விட்டு பிறந்தகம் செல்கிறார் யாமினி.

சீனு எழுதினாரா? யாமினியுடன் சேர்ந்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

ரௌடிக்காதலன் அல்லது காதல்பித்தன் கேரக்டர்க்கு என பிறந்தவர்போலும் இந்த வி.தேவரகொண்டா. அப்படியே மாறிவிடுகிறார். நான்கு ஹீரோயின்களுடனும் கொஞ்சு கொஞ்சு என கொஞ்சுகிறார்.

படத்தில் சீனு எழுதும் கதைக்குள் 3 ஹீரோயின் வருகிறார்கள். லாஜிக்கில்லாத இந்த நாட் படத்தைக் கீழிறக்குகிறது. கதையின் ஆழத்தை அது சினிமாவாக்குகிறது.

(இந்நிலையில் எதேச்சையாக, (ஆம் தொடர்புள்ள இரண்டு கூறுகள் நம்மையறியாமல் நம்அருகில் வந்துபோகும்) சரோஜாதேவி எழுத்தாளராய் நடிக்கும் "தாமரை நெஞ்சம்" என்ற பழைய படத்தையும் இன்று டிவியில் பார்த்தேன். ஜெமினி, வாணி ஜோடி. இதேபோல அவர் கதையை அவரே எழுதி இறுதியில் கதையையும் முடித்து அவரும் மறைந்துபோகிறார். அப்போதே இப்படியெல்லாம் எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனை/ கலைஞனை எழுது/படை என்று யாரும் கட்டாயப்படுத்தி படைக்க வைக்கமுடியாது. அவனை ஒரு ஒழுங்குவாழ்க்கை முறைக்குள்ளும் பலசமயங்களில் கொண்டு வருவதும் கடினம். ஏன் இப்படி என்றெல்லாம் கேட்கமுடியாது. காதை அறுத்துக்கொள்வான். மதுரை வீதிகளில் வணிகையரோடு அலைந்துகொண்டிருப்பான். இதை சொல்ல முனைந்திருக்கலாம்.
எழுத்தாளன் - அவன் மனைவி என நல்ல ஒரு வாழ்க்கையை சிறப்பாக படைத்திருக்கமுடியும். படம் அதைத்தாண்டி வெறும் சினிமாவாகக் குதித்துவிட்டது. விஜய்தேவரகொண்டாக்கு கொண்டாட்டம். நமக்கோ திண்டாட்டம்.

எம்.கே.குமார்
#MK_Movies

Bird Box - (2018 - English)

Image may contain: one or more people, ocean, sky, outdoor, water and nature
கண்ணைத்திறந்தால் பார்வையின்வழி பரவி தற்கொலைக்குத்தூண்டும் மனோவியாதி. ஏறக்குறைய காதல்போல அல்லது மூக்கு வாய்வழி பரவும் வைரஸ் போல. நகர் கலவரமாகிறது. கண்ணை மூடிக்கொண்டால் தப்பிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு எப்படி வாழ்வது? எங்கே செல்வது?

கதாநாயகி தன் தோழியின் மற்றும் தன்னுடைய ஐந்துவயது குழந்தைகளுடன் தனியாக கண்களைக் கட்டிக்கொண்டு படகில் அந்நகரிலிருந்து தப்பித்துக் கிளம்புவதில் ஆரம்பிக்கிறது கதை.

'என்ன ஆனாலும் என்ன நடந்தாலும் கண்ணைத் திறக்கவோ கண்களில் கட்டியிருக்கும் துணியை நீக்கவோ கூடாது, டு யு அண்டர்ஸ்டாண்ட்?' என்று குழந்தைகளிடம் பேசும் முதல்காட்சியிலேயே ஆர்வத்தை உண்டுசெய்கிறார்கள்.

நான்லீனியராக மாறிமாறி வரும் கதைசொல்லலில் படம் திகிலாக நகர்கிறது.

தலைவி Sandra Bullock லீட்ரோல். அக்கறை, கலவரம், சீற்றம், அன்பு, நெகிழ்ச்சி என பரவசப்படுத்துகிறார்.

ஒரு ஆற்றில் நீண்டு பயணித்து அந்நோய் பாதிக்காத இடத்தைச் சென்று சேரலாம். கண்ணைக்கட்டிக்கொண்டு செல்லவேண்டுமே?

மூன்றுபேரும் சென்றார்களா, பிழைத்தார்களா? விறுவிறுப்பான படம் பதில் சொல்கிறது.

தன்னோடு ஒரு குருவிக்கூடு. ஆழ அகலமறியாத ஆறு. கண்மூடிப்பயணம். படிமமாய் பரவசம்.

நிச்சயமாய்ப் பார்க்கலாம்.

எம்.கே.குமார்
#MK_movies

The Boy Who Harnessed the Wind (2019) - English

Image may contain: 1 person, sitting

The Warm Heart of Africa என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு மலாவி Malawi. (ஆம், மலாவி என்றொரு தேசம் என்று சாரு எழுதிய அதே மலாவிதான்) பிரிட்டிஷ் காலனியாக இருந்து அறுபதுகளில் சுதந்திரம் பெற்றது. தனிநபர் வருமானத்தில் உலகிலேயே மிகக்குறைந்த ஏழை நாடுகளில் ஒன்று. விவசாயமும் காடழித்தலும் முழுநேரத்தொழில். அத்தகைய கிராமமொன்றில் ஒரு ஏழைச்சிறுவன் சுமக்கும் கனவு இப்படம்.

மின்சாரம் கிராமப்புறங்களுக்கு வருமுன் மழைப்பொழிவை நம்பி வாழும் விவசாயக்குடிமகன் Trywell. தன் மனைவி, கைக்குழந்தை, மகன் William மற்றும் மகளுடன் வறுமையில் வசித்துவருகிறான். வறுமையில் வாடினாலும் தன் மகனை எப்படியாவது படிக்கவைத்துவிடவேண்டும் என அருகிலிருக்கும் பள்ளியில் சேர்த்துவிடுகிறான். தொடர்ந்து பள்ளிக்கு செலுத்த பணமில்லாததால் பள்ளியிலிருந்தும் அவன் நிற்க நேரிடுகிறது. பள்ளியையே இப்படி மாணவர்கள் இல்லாமல் மூட நேருகிறது

பொய்த்த விவசாயம். மரங்களை வெட்டிக்கொள்ள நிறுவனங்களுக்கு சட்டமியற்றும் ஊழல் அரசாங்கம். தொடர் பஞ்சம். அரிசிக்கும் சோளத்துக்கும் ஆளாய்ப்பறக்கிறார்கள். திறந்து கிடக்கும் வீட்டுக்குள் வருபவன் என்னை மன்னித்துவிடு சாப்பிட்டு நான்கு நாட்களாகின்றன என்று அங்கிருக்கும் அரிசியை திருடிக்கொண்டு ஓடுகிறான்.

இத்தகைய வறுமைச்சூழலில் படிப்பை விட்ட சிறுவன் வில்லியம்ஸுக்கு டைனமோ வைத்த சைக்கிள், பேட்டரியால் இயங்கும் ரேடியோ, பேட்டரியால் இயங்கும் விளக்கு ஆகியவற்றின்மீது ஆர்வம் வருகிறது. பள்ளி நூலகத்தில் (திருட்டுத்தனமாக நூலகத்திற்கு வருகிறான்) இருக்கும் மின்சக்தி குறித்த புத்தகமும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஏதோ ஒன்று அவனை முன்னோக்கித்தள்ளுகிறது. இவைகளைப்பயன்படுத்தி காற்று அதிகம் வீசும் அப்பகுதியில் மின்சாரத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறான். அதைக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கமுடியும் என்றும் அதை வைத்து விவசாயம் செய்யமுடியும் என்றும் முயற்சி செய்கிறான். நண்பர்கள் நம்பவில்லை. தந்தையும் வேதனையின் உச்சத்தில், இவன் இப்படி விளையாட்டுப்பையனாய் இருக்கிறானே என்று திட்டி அடிக்கிறார்.

ஆனாலும் பிடிவாதமாய் இருக்கும் வில்லியம் காற்றிலிருந்து மின்சாரம் எடுத்தானா, அப்பாவுக்கு தன்னை நிரூபித்தானா என்பதுதான் இந்தப்படம்.

டைனமோ வைத்த சைக்கிள், இலண்டியம் விளக்கு என்று மின்சாரம் இல்லாத ஒருகாலத்தைக் கண்முன் கொண்டுவருகிறார்கள், வீட்டுக்குள் குவித்துக்கிடக்கும் சோளம், சாவுக்கு வரும் (வறுமையில் வாடும்) மலாவி ஆதிவாசி நடனக்குழு, காடுகள் அழிப்பு, ஊழல் அரசாங்கம் இப்படி வரலாற்று பண்பாட்டு அங்கங்களையும் கதைக்குள் கொண்டுவருகிறார்கள்.

William Kamkwamba and Bryan Mealer எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இதை எழுதி, தயாரித்து இயக்குனராக அறிமுகமாயிருக்கிறார்
ஆங்கில நடிகர் Chiwetel Ejiofor. அவரே தந்தையாகவும் நடித்திருக்கிறார்.

சாப்பாட்டிற்குத் தவிக்கும் துயரமாய் கடைசியாய் பார்த்த சினிமா வறுமையின் நிறம் சிகப்பு. அதற்குப்பிறகு பஞ்சம் பட்டினி குறித்த வாழ்வியலை முன்வைத்த சினிமாக்கள் அவ்வளவாய் இல்லையென நினைக்கிறேன். (இது ஒரு சினிமா ஆய்வுக்கட்டுரைக்குரிய முக்கிய சிந்தனை) பஞ்சம் சார்ந்த ஏதோ நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பிவிட்டுவிட்டது இந்தப்படம்.

Maxwell Simba என்னும் நைரோபிய சிறுவன் வில்லியமாக நடித்திருக்கிறான். அவனுடைய கனவு நம் கண்களில் நிற்கிறது.

எம்.கே.குமார்
#MK_movies

கொலையுதிர்காலம் -தமிழ்

Image may contain: 1 person, text and closeup

மெயின் நயன்தாரா, இயக்கம் சக்ரி டோலட்டி (அமெரிக்க இந்திய இயக்குனர்- உன்னைப்போல ஒருவன், கமல்-மோகன்லால் நடித்தது. மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல் இடம்பெற்ற படம்) என்ற எதிர்பார்ப்பில் உட்கார்ந்தேன்.

நல்லாத்தான் ஆரம்பித்தது. பலகோடி மதிப்புள்ள தன் சொத்து மற்றும் ட்ரஸ்டுகளைத் தான் எடுத்து வளர்த்த மகள் நயன்பேரில் எழுதிவைத்துவிட்டு போய்விட்டார் இலண்டனில் வசித்த இந்திய வம்சாவளிப்பெண்ணை மணந்த ஆங்கிலேயர். அவர்கள் இருவரும் இறந்தபின், அதைப் பராமரிக்க லண்டனுக்கு வருகிறார் நயன். அந்தச்சொத்தை எனக்குக்கொடுத்துவிடு என இந்திய வம்சாவளிப்பெண்ணின் சகோதரன் மகன் வந்துநிற்கிறான். நயன் முடியாது என்க, முகமூடி கிளவுஸ் என கொலைகாரனும் வந்து நிற்கிறான்.

தத்து எடுத்த சின்னப்பெண்ணுக்கு முதலில் மச்சம் இல்லை. நயன்தாரா ஹீரோயின் என்றானதும் அடுத்த காட்சியில் உதட்டுக்கு மேலே புள்ளியை வைத்துவிட்டார்கள் அந்தச்சிறுமிக்கு, மச்சமாம்.

நாய் உட்பட இருந்த நாலைந்து கேரக்டர்களை பாதிப்படத்துக்குள்ளே கொன்றுவிட்டான் கொலைகாரன். இனி எஞ்சியிருப்பது நயனும் அவனும் நாமும்தான் என்னும்போது, நயனைக்கொல்லவந்தவன் டேட்டிங் வந்தவன்போல ஓவியம் வரைந்து, பிரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு, அந்தப்பெண்ணுக்கு வீட்டைச்சுத்திக்காட்டி, விதவிதமான சுத்தியலையும் வேல்களையும் காட்டி கிளாஸ் எடுத்து.... உஸ்.....
டேய், ஒண்ணு அவளைக்கொன்னுடு இல்லாட்டி நீ செத்துடு எங்களையேண்டா இப்டி கொல்ற அப்டின்னு சொல்ற அளவுக்கு ரெண்டுபேரும் ஒளிஞ்சு விளையாடுகிறார்கள் பாதிப்படத்துக்குமேல்.

படம் இன்னுமா போகும் என்று மிச்ச நேரத்தை 'மவுஸால்' கிளிக்கிப் பார்க்கவைத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர்.

சுஜாதாவோட நல்ல டைட்டில் கொலையுதிர்காலம்.. அதையும் வெறுக்கவெச்சுட்டீங்களேடா குண்டூஸ்.

#mk_movies
#Kolaiyuthirkalam

16 வயதினிலே

16 வயதினிலே படம் மீண்டும் பார்த்தேன். எத்தனைமுறை பார்த்தாலும், வசனங்கள் மனப்பாடமாய் ஓடினாலும் பார்க்கப்பார்க்க சலிக்காத படம். படத்தை யாரும் வெளியிட விரும்பாததால் தயாரிப்பாளரே (எஸ்.ஏ ராஜ்கண்ணு) வெளியிட்டதாய்ச் சொல்வார்கள். படம் மெஹா ஹிட்.
3 பேருக்கு கண்டிப்பாக தேசியவிருது என்ன அதற்கு மேலே கூட கொடுத்திருக்கலாம். கிடைத்ததா தெரியவில்லை.

தேவையில்லாமல் இங்கு ஏன் ஒரு சூர்யகாந்திப்பூவை ஷாட்டில் வைக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த காட்சியில் மயில் குளிக்கப்போகிறார். மயில் மேலே தூக்கிக் கட்டும் பாவாடை சூர்யகாந்திப்பூக்களால் ஆனதாய் இருக்கிறது. என்னவொரு ரசனையும் இயக்குனரின் தனித்துவமும்!
(படத்தின் முக்கியமான காதல் காட்சிகளில் சூரியகாந்தி பூ வைக்கப்பட்டிருக்கிறது) ஒவ்வொரு உணர்வுக்காட்சிக்குப்பிறகும் அதை மீண்டும் (பொழிப்புரை சொல்வதுபோல தோன்றினாலும்) பார்வையாளனுக்குக் கடத்தும் விதவிதமான திரைக்கதை உவமையுத்திகள். இதுதான் முதல் படம். அசாதாரணமான இயக்குநர் பாரதிராஜா.
கிராமத்துக்கு வரும் டாக்டருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்தில் ஒரு மறைவில் மயில் அந்த டாக்டரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். டாக்டரும் பார்த்துவிடுகிறான். கோட்டுசூட்டு போட்ட மாப்பிள்ளைக் கனவு பலித்த வெட்கத்தோடு, அவள் வீட்டுக்குள் ஓட, தொடரும் பின்னணி இசை இறைவா. என்னவொரு அற்புதமான இசைஞன் இளையராஜா.
தனக்கு பேண்ட் சட்டை அளித்த டாக்டருடன் மயில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தபின் வரும் எரிச்சலும் அவமானமும், மயிலுக்கும் டாக்டருக்கும் இடையில் தூது செல்கிறோம் என்றறியாது பட்டத்துடன் டபக்கு டபக்கு என்று உவகையோடு மயிலின் பேச்சுக்கு இணங்கி நடப்பது, கோபாலகிருஷ்ணன் ஆனபின் வரும் உடல்மொழி...அடடா என்னவொரு மகத்தான நடிகர் கமல்.

தொழிலாளர்களிடையே தொற்று - எப்படி நடத்தப்படுகின்றனர்?

Image may contain: one or more people, people sitting, people standing, child and outdoor

நண்பர் அழைத்தார். அவருடைய நிறுவனத்தில் இரு இந்தியத் தொழிலாளர்களுக்கும் மூன்று பங்களா தேசிகளுக்கும் ஒரு மியான்மர் பணியாளர்க்கும் கோவிட்-19 கிருமித்தொற்று உறுதியாகிவிட்டது என்றார். ஏறக்குறைய பதினைந்து நாட்களாக அவர்கள் வெளியே செல்லவில்லை. சாப்பாடுகூட உள்ளேதான் வந்தது. எப்படி தொற்றுக்கு ஆளானார்கள் தெரியவில்லை என்று அதிர்ச்சியானார். மொத்தமாக தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பொதுவிடுதி இல்லாமல் இது தொழிற்சாலைக்குள்ளேயே அனுமதி பெற்று நடத்தப்படும் தங்கும்விடுதி. இதுபோன்ற தனிவிடுதிகளிலும் இப்போது தொற்று பரவிவருகிறது.

அத்தியாவசியத்தேவை பிரிவில் உள்ள நிறுவனம் என்பதால் பதினைந்து நாட்களாக அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள் என்றார். ஆனால் அவர்களில் யாருக்கும் காய்ச்சல், தொண்டைவலி, இருமல் என ஒரு அறிகுறியும் இல்லை, அதுதான் ஆச்சர்யம் என்றார். திடீரென அன்று காலை கடும்காய்ச்சல். கம்பெனி கிளினிக் அனுப்பிவைத்திருக்கிறார்கள். வெப்பநிலையை சோதித்த அவர்கள், 38டிகிரி செல்சியஸுக்குமேலிருக்க, அவர்களை வெளியே அமரச்சொல்லி ஆம்புலன்ஸை அழைத்துவிட்டார்களாம். நேரடியாக மருத்துவமனைக்குக்கொண்டுசெல்ல. அனைவரும் நிதானமாகத்தான் இருந்துள்ளார்கள்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஏறக்குறைய நூற்றிநாற்பது பேர் இருக்கிறார்களாம். அனைவருக்கும் மேலே கீழே என இரு இடங்களில் சில கழிப்பறைகள். அறிகுறி ஏதும் இல்லாததால் பதினைந்து நாட்களாக கலந்துதான் இருந்திருப்பார்கள். எத்தனை பேருக்குப் பரவியிருக்குமோ என்று பயந்தார்.

அழைத்துச்சென்று என்ன செய்தார்கள் என்று கேட்டேன். ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். சிறிது நேர காத்திருப்புக்குப்பின் அனைவருக்கும் தொற்று ’பாஸிட்டிவ்’ என்று அட்மிட் செய்துவிட்டார்கள்.
அட்மிட் செய்தவுடன் அடுத்து என்ன செய்தார்கள் என்றேன். உடனடியாக பணிபுரிந்த நிறுவனத்துக்குச் சொன்னார்களாம். மேலும் நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தில் யாரைத்தொடர்புகொள்ளலாம் என ‘பாய்ண்ட் ஆப் காண்டாக்ட்’ யார் என்று சுகாதார அமைச்சு அலுவலர்கள் கேட்டுக்குறித்துக்கொண்டார்களாம். அடுத்தடுத்து மின்னல்வேகப் பணிகள்.

சிலமணிநேரத்துக்குள் மருத்துவ சோதனை டீம் ஒன்று (மருத்துவர், சுவாப் டெஸ்ட் நர்ஸ்கள், உதவியாளர்கள் என ஐவரும்) மனிதவள அமைச்சு அதிகாரிகள் இருவரும் நேரடியாக, , அந்தத்தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்துவிட்டனராம். தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள (குளோஸ் காண்டாக்ட்) அத்தனை பேருக்கும் ஸ்வாப் டெஸ்ட். மற்றவர்களில் மேலும் ரேண்டமாக 20 பேருக்கு ஸ்வாப் டெஸ்ட் என எடுத்துச்சென்றார்களாம். குளோஸ் காண்டாக்ட் உள்ளவர்களைத் தனியாக தங்கும்படி அறிவுறுத்தினார்களாம். டெஸ்ட் ரிசல்ட் வர 2-3 நாட்கள் ஆகும் என்றார்களாம்.

அவர்கள் சென்ற சிலமணி நேரத்துக்குள் அடுத்த இருவர் மனிதவள அமைச்சலிருந்து வந்தார்களாம். தங்குமிட சுத்தம், வரைமுறைகள் பற்றிப் பார்க்க, ஆலோசனை சொல்ல. பணியாளர்கள் தங்கியிருந்த இடம், கழிவறைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அறையின் சுத்தம், ஒழுங்கு அனைத்துக்கும் மின்னல்வேக ஆலோசனைகள். உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவுகள்.

அடுத்தநாள் காலை இரு போலீஸ் அதிகாரிகள். பணியாளர்களிடையே ஏதும் குழப்பம், மோதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளா என்று பரிசோதனை செய்தார்களாம்.

தொற்றுக்கு ஆளானவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்டேன். இடமிருந்த வெவ்வேறு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனராம். மருந்துகள் கொடுக்கப்பட்டனவாம். வெண்டிலேட்டரெல்லாம் இல்லை. 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்குப்பிறகு சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தனியறைக்கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்படுகிறார்களாம். தினமும் உணவு மூன்றுவேளை உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறதாம். ஏறக்குறைய 1500பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

ஒட்டுமொத்தமாக, இந்தியத்தொழிலாளர்கள் உட்பட வெளிநாட்டுத்தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர்க்கு மிக லேசான தொற்றுதான். வெண்டிலேட்டர் வைக்கும் அளவுக்கோ அல்லது ஐசியுவில் வைக்கும் அளவுக்கோ சிக்கலில்லை. எனவே மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்தால்மட்டுமே மருத்துவமனையில் தங்குதல். அப்படி இல்லாவிட்டால் எக்ஸ்போ போன்ற தனிமைப்படுத்தபட்ட பகுதிகள். பொதுவாக வயது அதிகமான, வேறு ஏதேனும் நோய் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று மேலும் கடுமையான சிக்கலை உருவாக்குகிறது.

ரிசல்ட் வந்தபிறகும் அதேபோலத்தான். தங்கியிருக்கும் இடத்தில் தனித்தனியாக வைக்க வசதியிருந்தால் அப்படி. இல்லையேல் வெளியில் தங்க ஏற்பாடு. நலமாயிருப்பவர்களையும் கொஞ்சம்கொஞ்சமாக தனியே பிரித்து வைக்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதி உள்ளிட்டவைகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

மருத்துவ குழுவினர், மனித வள அமைச்சு அதிகாரிகள், காவல்துறையினர் என பல்வேறு குழுக்களை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளதை நன்கு உணரமுகிறது. மிகுந்த அவசர உணர்வோடும் மிகதுரிதமாகவும் பம்பரமாகச் சுழன்று அவர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளுக்கு ஆயிரம் பேர் என தாவும் தொற்று எண்ணிக்கையும் அதனைச் சுற்றியுள்ளோர் பாதுகாப்பையும் என பல்வேறு சவால்களைச் சந்திக்க அவர்கள் பாடுபடுகின்றனர்.

தொற்று ஆரம்பத்தில் பல தொழிலாளர்கள் மிகுந்த அச்ச உணர்வோடும் மன உளைச்சலோடும் காணப்பட்டனர். தற்போது அது குறைந்துள்ளது. அரசாங்கத்தின் உச்சகட்ட கவனிப்பும், அக்கறையும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அச்சத்தை நீக்கி நிம்மதியைை அளித்துள்ளது. தொற்றுக்கு ஆளானோரும் அரசாங்கம் தம்மை கைவிட்டுவிடாது என்று நம்பிக்கையோடு காணப்படுகின்றனர்.

அனைவரும் ஒன்றுபட்டு இச்சவாலை முறியடிப்போம். மருத்துவக்குழுவினர்க்கு முழுஒத்துழைப்பு அளிப்போம்.

- எம்.கே.குமார் MK Kumar

#SGUnited
#MaydayWishes

படம்: தொழிலாளர்க்கு Swab Test செய்யப்படும் காட்சி (நன்றி: MOH)

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெளிநாட்டுத்தொழிலாளர்களின் நோய்த்தொற்று - குறையுமா?

Image may contain: food

ஏப்ரல் 22 நேற்று பாதிக்கப்பட்டுள்ள 1016 பேருடன் கோவிட்19ஆல் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 10,141 ஆகிவிட்டது. நேற்றைய 1016 பேரில் 999 பேர் வெளிநாட்டுத்தொழிலாளர்கள். நேற்றுமட்டுமல்ல, சில நாட்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்ட பத்தாயிரம் பேரில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் வெளிநாட்டுத்தொழிலாளர்கள். எப்போதும் எதையும் கட்டுக்கோப்பாக முன்தயாரிப்புடன் நடந்துகொள்ளும் சிங்கப்பூர், கோவிட் 19-ஐ கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதா? குறிப்பாக வெளிநாட்டுத்தொழிலாளர்களின் வசிப்பிடத்தில்? என்ன நடக்கிறது என ஒரு பறவைப்பார்வை பார்ப்போம்.
வூஹானில் சிக்கலான நுரையீரல்தொற்று ஒன்று உருவாகியிருப்பதாக முறைப்படி உலக சுகாதார நிறுவனத்திடம் சொல்கிறது சீனா, டிசம்பர் 31 அன்று.
ஜனவரி 2 அன்று அதுகுறித்துத் தனக்குத்தெரிவதாகவும் ஜனவரி 3 முதல் வூஹானிலிருந்து வரும் அனைவரும் உடல்வெப்பச்சோதனைக்கு ஆளாகுவார்கள் என்கிறது சிங்கப்பூர். ஜனவரி 4 அன்று சீனாவிலிருந்து வந்த குழந்தைக்கு நுரையீரல்தொற்று இருப்பதாகச் சந்தேகித்து பிறகு அது சாதாரண இழுப்புப்பிரச்சனை என்று மருத்துவமனை சொல்கிறது.
இடையில் தென்கொரியா, பிலிப்பின்ஸ், ஜப்பான் என ஆங்காங்கு சீனாவிலிருந்து சென்று குவியும் மக்களால் உலகளாவிய பாதிப்பு எண்ணிக்கை ஆரம்பமாகிறது.
ஜனவரி 23 அன்று தன் முதல் கிருமித்தொற்று சம்பவம் சிங்கப்பூரில் பதிவாகிறது. சீனாவின் வூகானிலிருந்து வந்த 66 வயது சீனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கடல், நிலம் என அனைத்து குடியுரிமை சாவடிகளிலும் உடல்வெப்ப சோதனையை சிங்கப்பூர் அறிவிக்கிறது. அனைத்து வேலையிடங்களிலும் அலுவலகங்களிலும் உடல்வெப்ப சோதனையும் உடலநலசுய அறிவிப்புப்படிவத்தையும் பின்பற்ற அறிவுறுத்துகிறது.
முதல் தொற்று நபர் தங்கியிருந்த ஷாங்ரிலா செந்தோசா ஹோட்டல் உடனடி கிளீனிங் சோதனைக்கு உள்ளாகிறது. அவருடன் வந்த ஒன்பது பேர், மற்றும் ஹோட்டல்.பணியாளர்கள் உடபட அனைவருடைய தொடர்பைத்தேடி, அனைவரையும் சோதனைசெய்து படுசீரியசாக தன் பணிகளை முடுக்கிவிடுகிறது. அதே நாளில் வூகான் நகரை முழுவதும்.மூடுவதாக அறிவிக்கிறது சீனா.
ஜனவரி 28 வரை மொத்தம் 6 நோயாளிகள் எனவும் அனைவரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் எனவும் பதிவாகிறது. அதே நாளிலிருந்து சீனாவின் ஹுபே பகுதியிலிருந்து வரும் எவரும் நாட்டுக்குள் புக அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதிரடியாய் களத்தில் குதிக்கிறது. மொத்தம் 170பேர் தனிமைப்படுத்தப்பட்டு சந்தேகத்தொடர்பு சோதனை செய்யப்பட்டு 91 பேர் விடுவிக்கப்படுகிறார்கள்.
அதுவரை உள்ளூரில் மனிதருக்கிடையே பரவல் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை என்று கவனமாயிருந்த சிங்கப்பூருக்கு முதல் அதிர்ச்சியாய் வருகிறது சீனமூலிகைக்கடை.
ஜனவரி 22 அன்று சீனாவின் Guangxi மாகாணத்திலிருந்து வந்திறங்கியது 20 பேரைக்கொண்ட ஒரு சுற்றுலாக்குழு. (அவர்களில் இருவருக்கு அப்போதே தொற்று இருந்ததாகச்சொல்கிறது சீனா அலுவலகம்.) ஜனவரி 22-23 சிங்கப்பூர்லிருந்துவிட்டு, 24 அன்று மலேசியா சென்று மீண்டும் ஜனவரி 27 சிங்கப்பூருக்கு வந்து, அன்று காலை 3 மணி அளவில் சீனா திரும்புகிறது அக்குழு. (ஜனவரி 25-27 சீனப்புத்தாண்டு விடுமுறை) சிங்கப்பூரில் தங்கியிருந்த நாட்களில் ஆறு இடங்களுக்குச்செல்கிறது அச்சுற்றுலாக்குழு. அவற்றில் ஒன்று, சீனப்பயணிகளிடையே பெருமைபெற்ற, ஜலான் பெசாருக்கு அருகிலிருக்கும் Cavan சாலையில் உள்ள Yong Thai Hang எனும் சீனமூலிகைக்கடை. அங்கு செல்கிறார்கள் அவர்களில் சிலர். அந்தக் கடையில் விற்பனைப்பிரதிநிதியாகப் பணியாற்றும் சிங்கப்பூர் நிரந்தர குடிவாசிப்பெண் தொற்றுநோய்க்கு ஆளாகிறார். (நோயாளி 19). சிங்கப்பூரின் முதல் உள்ளூர் தொற்று சம்பவம் உறுதியாகிறது.
மனிதர் - மனிதர் இது பரவக்கூடும் எனவும் தெரியவந்தவுடன் அடுத்தடுத்து தொற்றுதொடர்புகளை மின்னல்வேகத்தில் களமிறங்கி வளைத்து தனிமைப்படுத்துகிறார்கள்.
சீனமூலிகைக்கடையில் வேலைபார்த்த பெண்ணின் கணவர், குழந்தை உட்பட அனைவரும் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அவர்களுடைய பணிப்பெண்ணும் (நோயாளி 21) பாதிக்கப்படுகிறார். இவரே வேலையிடத்தில் பாதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத்தொழிலாளர் (பணிப்பெண்) ஆவார்..
பிப்ரவரி 9 அன்று சிங்கப்பூரின் முதல் வெளிநாட்டு ஒர்க்கர் பாதிக்கப்படுகிறார். அவர் சிலேத்தார் ஏரோஸ்பேஸ் கட்டுமானத்தில் பணியாற்றியவர். அந்நிறுவனத்தில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள் யாருக்கும் அப்போது கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆக, அந்த ஒர்க்கர் வேறெங்கோ கிருமித்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார். அவருடைய பணியிடத்தைத்தவிர வெறெங்கெல்லாம் அவர் சென்றார் என்று கட்டாயம் அலசப்பட்டிருக்கும். ஆனால் அவர் உண்மைகளைச்சொன்னாரா என்று தெரியவில்லை. அப்போது அவர் சென்ற இடங்கள் குறித்த எந்த எச்சரிக்கையும் சொல்லப்படவில்லை.
பிப்ரவரி 14 அன்று சிங்கப்பூரின் தொற்றுமையங்களாக பாயாலேபரில் உள்ள The Life Church and Missions (146B Paya Lebar Road), சீன மருந்துக்கடை Yong Thai Hang (24 Cavan Road), சீனாவிலிருந்த வந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டோர் கலந்துகொண்ட Grand Hyatt ஹோட்டலில் நடந்த தனி வியாபார கூட்டம், வெளிநாட்டுத்தொழிலாளர்கள் (நான்கு பங்களாதேசிகள்) வேலைசெய்த Seletar Aerospace Heights construction site, சீனர் ஒருவர் சென்று பரப்பிய Grace Assembly of God சர்ச் ஆகியவை என அறிவிக்கப்படிருந்தது.
பிப்ரவரி 18 அன்று, Seletar Aerospace Heights construction கட்டுமானத்தின் ஒட்டுமொத்த கான்ராக்டரான Boustead நிறுவனம், தன்னிடம் subcontractorஆக வேலைசெய்த அந்த நான்கு பங்களாதேசிகள் (நோயாளி 42, 47, 52, 56 & 69) உட்பட ஐந்துபேருக்கும் கிருமித்தொற்று அங்கு ஏற்பட்டதாகவும் தொடர்பில் இருந்தவர்கள் தனைமைப்படுத்துள்ளார்கள் எனவும் அறிவிக்கிறது.
ஆக, வெளிநாட்டுத்தொழிலாளர்களிடையே கிடுகிடு வேகத்தில் பரவிய முதல் தொற்று, பிப்ரவரி 9-18 க்குள் தொடங்கியிருக்கவேண்டும்.
எப்படி பரவியது?
Purpose-built dormitories எனப்படும் வெ.நா.தொ (வெளிநாட்டுத்தொழிலாளர்) தங்குவதற்கென்றே மொத்தம் 13 விடுதிகள் இங்கு உள்ளன. BCAவின் மேற்பார்வையில் உள்ள இவற்றில் குறைந்தது 1,500 முதல் அதிகபட்சம் 25,000 பேர் தங்க முடியும். ஒவ்வொன்றிலும் சமைக்கும் வசதிகள், துணிதுவைக்கும் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், உடல்நலக்குறைவுக்கு ஒதுங்கும் பகுதி, சாப்பாட்டுக்கடைகள், சிறுமளிகைக்கடை, பொழுதுபோக்குக்கூடங்கள், முடிவெட்டும்கடை ஆகியவைகளை உள்ளடுக்கி இருக்கும்.
வெ.நா தொழிலாளர்களுக்கென்றே கட்டப்பட்ட ஏறக்குறைய அனைத்து தங்கும்விடுதிகளிலும் கொரோனா இப்போது தலைதூக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலைசெய்துவிட்டு வேறுவேறு விடுதிகளுக்குத்திரும்பும்போது அங்குள்ளவர்களுக்கும் பரவிவிட்டது. உதாரணமாக, சிலேத்தார் வேலையிடத்தில் பாதிக்கப்பட்ட அந்த நால்வரோடு இன்னும்பலர் இருந்திருக்கலாம், அவர்கள் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருந்திருப்பார்கள். இவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்று என பரவியிருக்கூடும்.
விடுதிகளில் ஒரே அறையில் 8-12பேர் வசிப்பதும், அதிலும் அவர்களுக்கு ஓரிரு கழிவறைகளே இருப்பதும், சமைக்க, சாப்பிட என்று அவர்கள் புழங்கும் அறைகளும் நெருக்கமாக, ஒரே தொடர்புகளுக்குள்ளேயே இருந்ததாலும் மேலும் வேகமாக இது பரவிவிட்டது. இதுபோக, வேலையிடத்துக்குச் செல்லும்போதும் வேலைமுடிந்து திரும்பும்போதும் லாரிகளில் அவர்கள் அழைத்துவரப்பட்டபோது நெருக்கடியாக இருந்ததால் பரவல் மேலும் சுலபமாயிருக்கூடும்.
இன்றைய நிலை எப்படி?
சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு, சுற்றுப்புற சுகாதார அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு, தன்னார்வலர்கள் என அனைவரும் உக்கிரமாகக் கைகோர்த்து களத்தில் நின்று பணியாற்றுகின்றனர்.
1. பாதிக்கப்பட்ட விடுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக சட்டமாக்கப்பட்டுள்ளன
2. பாதிக்கப்பட்ட விடுதியிலிருந்து யாரும் வெளியேறவோ உள்ளேயே வலம்வரவோ முடியாது. இதன்மூலம் பெரும்பான்மையான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்கள் அங்கிருந்து பிரிக்கப்பட்டு மருத்துவ வசதிக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
4. தொற்று ஏற்பட்டவர்களுடன் ஒரே அறையில் இருந்தவர்களில் பலர், தனிமைப்படுத்தப்பட்டு தனித்தனி அறைகளில் (ஹோட்டல்கள், இராணுவ பயிற்சி தங்குமுகாம்கள், கப்பல்கள், இதற்கெனவே ஏற்படுத்தப்பட்ட தனியறைக்கூடங்கள்) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
5. இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு, மருத்துவச்சேவைகள், கண்காணிப்புகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இவை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் ஏற்பாடுகள்.
6. விடுதிக்குள்ளேயே மருத்துவ வசதிகள் அரசாங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. ஏதேனும் தொற்று அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
7. சைவம் அசைவம், முஸ்லீம் என எல்லா தொழிலாளர்களுக்கும் சாப்பாடு குறித்த நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
8. இதுபோக எல்லா விடுதிகளிலும் வைஃபை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச சிம் கார்டுகளும் வழங்கப்படுகின்றன
9. இலவசமாக தெர்மாமீட்டர்களும் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
10. அனைத்துத்தொழிலாளர்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
11. இவர்கள் அனைவருக்கும் அடிப்படை மாதச்சம்பளத்தைக் கட்டாயம் வழங்கவேண்டும் என்று முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12 அவர்கள் பணிபுரியும் நிறுவனம், மாதாமாதம் மனிதவள அமைச்சுக்குக் கட்டவேண்டிய லெவி எனப்படும் தொழிலாளர் வரித்தொகையை, ஏப்ரல், மே என இரண்டுமாதங்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது அரசாங்கம். இதனால் வெளிநாட்டுத்தொழிலாளர்களை வைத்திருந்ததால் ஏற்பட்ட சுமையை நீக்கியிருக்கிறது அரசாங்கம்.
13 மேலும் ஒவ்வொரு வெளிநாட்டுத்தொழிலாளருக்கும் சராசரியாக $750 வெள்ளியை ஒருதவணைத்தொகையாக நேரிடையாக முதலாளிகளுக்கு வழங்குகிறது. இதன்மூலம் சம்பளம் வழங்கவேண்டிய அவர்களுடைய சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
14. ஒவ்வொரு நாளும் முதலாளிகள் தங்கள் வேலையாட்களைக் கண்காணித்து சாப்பாடு, உடல்நலம் என அவர்கள் பேணப்பட்டு வருகிறார்கள் என்னும் தகவலை நேரிடையாக மனிதவள அமைச்சிடம் தினமும் தெரிவிக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது.
பயப்படவேண்டுமா?
இத்தகைய நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் மிக துரிதமாகச்செயல்பட்டு வெளிநாட்டுத்தொழிலாளர்களிடையே மேலும் பரவாமல் இருக்க பெரும் நடவடிக்களை எடுத்துவருகிறது. பிரதமர் தன் உரையில் சொன்னதைப்போல வெளிநாட்டுத்தொழிலாளர்களையும் சொந்த குடிமக்களாய் பாவித்து உடல்நலத்தைப் பேணிவருகிறது. இதுவரை வந்த தொற்று அதிகரிப்பு எண்ணிக்கை யாவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டோ அறிகுறி தெரிந்தோ மருத்துவக்கண்காணிப்பில் இருந்தவர்கள்.
தக்க நேரத்தில் வெளிநாட்டுத்தொழிலாளர் விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல், தொடர்கண்காணிப்பு, நகருவதைக் கட்டுப்படுத்துதல், அனைத்து கட்டுமான தொழிலாளர்களையும் இருப்பிடத்துக்குள்ளே இருக்கச்சொன்னமை, இருப்பிடத்துக்கே வரும் உணவு, மருத்துவவசதிகள் என மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கிடையேயான பரவலைக் கட்டுப்படுத்தி தொற்று எண்ணிக்கையை விரைவில் குறைந்திடும் என்று கட்டாயம் நம்பலாம்.
தேவையற்ற பயத்தை விலக்கி, சுத்தமாகவும் சுய பாதுகாப்பு முகக்கவசங்களை பின்பற்றியும், சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியும் சிங்கப்பூருடன் ஒன்றிணைந்து கண்ணுக்குத்தெரியாத எதிரியை வெல்லப்போராடுவோம்.
எம்.கே.குமார் MK.Kumar
#StayhomeforSG
#SGUnited
#SingaporeTogether
படம்: இன்று வழங்கப்பட்ட உணவு; நன்றி: சி.பி.

Search This Blog