Sunday, May 10, 2020

16 வயதினிலே

16 வயதினிலே படம் மீண்டும் பார்த்தேன். எத்தனைமுறை பார்த்தாலும், வசனங்கள் மனப்பாடமாய் ஓடினாலும் பார்க்கப்பார்க்க சலிக்காத படம். படத்தை யாரும் வெளியிட விரும்பாததால் தயாரிப்பாளரே (எஸ்.ஏ ராஜ்கண்ணு) வெளியிட்டதாய்ச் சொல்வார்கள். படம் மெஹா ஹிட்.
3 பேருக்கு கண்டிப்பாக தேசியவிருது என்ன அதற்கு மேலே கூட கொடுத்திருக்கலாம். கிடைத்ததா தெரியவில்லை.

தேவையில்லாமல் இங்கு ஏன் ஒரு சூர்யகாந்திப்பூவை ஷாட்டில் வைக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த காட்சியில் மயில் குளிக்கப்போகிறார். மயில் மேலே தூக்கிக் கட்டும் பாவாடை சூர்யகாந்திப்பூக்களால் ஆனதாய் இருக்கிறது. என்னவொரு ரசனையும் இயக்குனரின் தனித்துவமும்!
(படத்தின் முக்கியமான காதல் காட்சிகளில் சூரியகாந்தி பூ வைக்கப்பட்டிருக்கிறது) ஒவ்வொரு உணர்வுக்காட்சிக்குப்பிறகும் அதை மீண்டும் (பொழிப்புரை சொல்வதுபோல தோன்றினாலும்) பார்வையாளனுக்குக் கடத்தும் விதவிதமான திரைக்கதை உவமையுத்திகள். இதுதான் முதல் படம். அசாதாரணமான இயக்குநர் பாரதிராஜா.
கிராமத்துக்கு வரும் டாக்டருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்தில் ஒரு மறைவில் மயில் அந்த டாக்டரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். டாக்டரும் பார்த்துவிடுகிறான். கோட்டுசூட்டு போட்ட மாப்பிள்ளைக் கனவு பலித்த வெட்கத்தோடு, அவள் வீட்டுக்குள் ஓட, தொடரும் பின்னணி இசை இறைவா. என்னவொரு அற்புதமான இசைஞன் இளையராஜா.
தனக்கு பேண்ட் சட்டை அளித்த டாக்டருடன் மயில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தபின் வரும் எரிச்சலும் அவமானமும், மயிலுக்கும் டாக்டருக்கும் இடையில் தூது செல்கிறோம் என்றறியாது பட்டத்துடன் டபக்கு டபக்கு என்று உவகையோடு மயிலின் பேச்சுக்கு இணங்கி நடப்பது, கோபாலகிருஷ்ணன் ஆனபின் வரும் உடல்மொழி...அடடா என்னவொரு மகத்தான நடிகர் கமல்.

No comments:

Search This Blog