Sunday, May 10, 2020

தொழிலாளர்களிடையே தொற்று - எப்படி நடத்தப்படுகின்றனர்?

Image may contain: one or more people, people sitting, people standing, child and outdoor

நண்பர் அழைத்தார். அவருடைய நிறுவனத்தில் இரு இந்தியத் தொழிலாளர்களுக்கும் மூன்று பங்களா தேசிகளுக்கும் ஒரு மியான்மர் பணியாளர்க்கும் கோவிட்-19 கிருமித்தொற்று உறுதியாகிவிட்டது என்றார். ஏறக்குறைய பதினைந்து நாட்களாக அவர்கள் வெளியே செல்லவில்லை. சாப்பாடுகூட உள்ளேதான் வந்தது. எப்படி தொற்றுக்கு ஆளானார்கள் தெரியவில்லை என்று அதிர்ச்சியானார். மொத்தமாக தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பொதுவிடுதி இல்லாமல் இது தொழிற்சாலைக்குள்ளேயே அனுமதி பெற்று நடத்தப்படும் தங்கும்விடுதி. இதுபோன்ற தனிவிடுதிகளிலும் இப்போது தொற்று பரவிவருகிறது.

அத்தியாவசியத்தேவை பிரிவில் உள்ள நிறுவனம் என்பதால் பதினைந்து நாட்களாக அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள் என்றார். ஆனால் அவர்களில் யாருக்கும் காய்ச்சல், தொண்டைவலி, இருமல் என ஒரு அறிகுறியும் இல்லை, அதுதான் ஆச்சர்யம் என்றார். திடீரென அன்று காலை கடும்காய்ச்சல். கம்பெனி கிளினிக் அனுப்பிவைத்திருக்கிறார்கள். வெப்பநிலையை சோதித்த அவர்கள், 38டிகிரி செல்சியஸுக்குமேலிருக்க, அவர்களை வெளியே அமரச்சொல்லி ஆம்புலன்ஸை அழைத்துவிட்டார்களாம். நேரடியாக மருத்துவமனைக்குக்கொண்டுசெல்ல. அனைவரும் நிதானமாகத்தான் இருந்துள்ளார்கள்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஏறக்குறைய நூற்றிநாற்பது பேர் இருக்கிறார்களாம். அனைவருக்கும் மேலே கீழே என இரு இடங்களில் சில கழிப்பறைகள். அறிகுறி ஏதும் இல்லாததால் பதினைந்து நாட்களாக கலந்துதான் இருந்திருப்பார்கள். எத்தனை பேருக்குப் பரவியிருக்குமோ என்று பயந்தார்.

அழைத்துச்சென்று என்ன செய்தார்கள் என்று கேட்டேன். ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். சிறிது நேர காத்திருப்புக்குப்பின் அனைவருக்கும் தொற்று ’பாஸிட்டிவ்’ என்று அட்மிட் செய்துவிட்டார்கள்.
அட்மிட் செய்தவுடன் அடுத்து என்ன செய்தார்கள் என்றேன். உடனடியாக பணிபுரிந்த நிறுவனத்துக்குச் சொன்னார்களாம். மேலும் நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தில் யாரைத்தொடர்புகொள்ளலாம் என ‘பாய்ண்ட் ஆப் காண்டாக்ட்’ யார் என்று சுகாதார அமைச்சு அலுவலர்கள் கேட்டுக்குறித்துக்கொண்டார்களாம். அடுத்தடுத்து மின்னல்வேகப் பணிகள்.

சிலமணிநேரத்துக்குள் மருத்துவ சோதனை டீம் ஒன்று (மருத்துவர், சுவாப் டெஸ்ட் நர்ஸ்கள், உதவியாளர்கள் என ஐவரும்) மனிதவள அமைச்சு அதிகாரிகள் இருவரும் நேரடியாக, , அந்தத்தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்துவிட்டனராம். தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள (குளோஸ் காண்டாக்ட்) அத்தனை பேருக்கும் ஸ்வாப் டெஸ்ட். மற்றவர்களில் மேலும் ரேண்டமாக 20 பேருக்கு ஸ்வாப் டெஸ்ட் என எடுத்துச்சென்றார்களாம். குளோஸ் காண்டாக்ட் உள்ளவர்களைத் தனியாக தங்கும்படி அறிவுறுத்தினார்களாம். டெஸ்ட் ரிசல்ட் வர 2-3 நாட்கள் ஆகும் என்றார்களாம்.

அவர்கள் சென்ற சிலமணி நேரத்துக்குள் அடுத்த இருவர் மனிதவள அமைச்சலிருந்து வந்தார்களாம். தங்குமிட சுத்தம், வரைமுறைகள் பற்றிப் பார்க்க, ஆலோசனை சொல்ல. பணியாளர்கள் தங்கியிருந்த இடம், கழிவறைகள், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அறையின் சுத்தம், ஒழுங்கு அனைத்துக்கும் மின்னல்வேக ஆலோசனைகள். உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவுகள்.

அடுத்தநாள் காலை இரு போலீஸ் அதிகாரிகள். பணியாளர்களிடையே ஏதும் குழப்பம், மோதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளா என்று பரிசோதனை செய்தார்களாம்.

தொற்றுக்கு ஆளானவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்டேன். இடமிருந்த வெவ்வேறு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனராம். மருந்துகள் கொடுக்கப்பட்டனவாம். வெண்டிலேட்டரெல்லாம் இல்லை. 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்குப்பிறகு சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தனியறைக்கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தினமும் கண்காணிக்கப்படுகிறார்களாம். தினமும் உணவு மூன்றுவேளை உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறதாம். ஏறக்குறைய 1500பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

ஒட்டுமொத்தமாக, இந்தியத்தொழிலாளர்கள் உட்பட வெளிநாட்டுத்தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர்க்கு மிக லேசான தொற்றுதான். வெண்டிலேட்டர் வைக்கும் அளவுக்கோ அல்லது ஐசியுவில் வைக்கும் அளவுக்கோ சிக்கலில்லை. எனவே மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்தால்மட்டுமே மருத்துவமனையில் தங்குதல். அப்படி இல்லாவிட்டால் எக்ஸ்போ போன்ற தனிமைப்படுத்தபட்ட பகுதிகள். பொதுவாக வயது அதிகமான, வேறு ஏதேனும் நோய் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று மேலும் கடுமையான சிக்கலை உருவாக்குகிறது.

ரிசல்ட் வந்தபிறகும் அதேபோலத்தான். தங்கியிருக்கும் இடத்தில் தனித்தனியாக வைக்க வசதியிருந்தால் அப்படி. இல்லையேல் வெளியில் தங்க ஏற்பாடு. நலமாயிருப்பவர்களையும் கொஞ்சம்கொஞ்சமாக தனியே பிரித்து வைக்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதி உள்ளிட்டவைகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனராம்.

மருத்துவ குழுவினர், மனித வள அமைச்சு அதிகாரிகள், காவல்துறையினர் என பல்வேறு குழுக்களை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளதை நன்கு உணரமுகிறது. மிகுந்த அவசர உணர்வோடும் மிகதுரிதமாகவும் பம்பரமாகச் சுழன்று அவர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளுக்கு ஆயிரம் பேர் என தாவும் தொற்று எண்ணிக்கையும் அதனைச் சுற்றியுள்ளோர் பாதுகாப்பையும் என பல்வேறு சவால்களைச் சந்திக்க அவர்கள் பாடுபடுகின்றனர்.

தொற்று ஆரம்பத்தில் பல தொழிலாளர்கள் மிகுந்த அச்ச உணர்வோடும் மன உளைச்சலோடும் காணப்பட்டனர். தற்போது அது குறைந்துள்ளது. அரசாங்கத்தின் உச்சகட்ட கவனிப்பும், அக்கறையும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அச்சத்தை நீக்கி நிம்மதியைை அளித்துள்ளது. தொற்றுக்கு ஆளானோரும் அரசாங்கம் தம்மை கைவிட்டுவிடாது என்று நம்பிக்கையோடு காணப்படுகின்றனர்.

அனைவரும் ஒன்றுபட்டு இச்சவாலை முறியடிப்போம். மருத்துவக்குழுவினர்க்கு முழுஒத்துழைப்பு அளிப்போம்.

- எம்.கே.குமார் MK Kumar

#SGUnited
#MaydayWishes

படம்: தொழிலாளர்க்கு Swab Test செய்யப்படும் காட்சி (நன்றி: MOH)

No comments:

Search This Blog