Friday, October 29, 2010

உலகம் சுற்றும் 'களவாணிகள்'

(நாலு காசு OT பாத்தாதான் கடனைக்கிடனை அடைச்சு, கரைசேர முடியும் என்று நிலையில் இருக்கும் மாப்பிள்ளையும், மாமனும், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் தேக்காவில், லேட்டா சந்திச்சு, லேட்டாஸ்டா 'களவாணி' படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இது விமர்சனமல்ல - அவர்களது வாழ்க்கை!)

என்ன மாப்ளே, 'களவாணி'ல உன் கதையைப் படமா எடுத்திருக்காங்கெ போல, டைரக்டர் சற்குணம் உங்களுக்குச் சொந்தக்காரரா?

ஏ மாமா, இப்புடி நீ வேற நான் வேறன்னு பிரிச்சிப்பேசுற, நம்ம கதைய எடுத்திருக்காங்கென்னு சொல்லு.

அடங்கொங்காமக்கா, என்னைய ஏன் மாப்ளே இதுல இழுக்குற? படிச்சுட்டு இருந்த புள்ளைய பல்லக்காட்டி பல்லக்காட்டி கெடுத்து ராத்திரி கடைசி பஸ்ஸுல போயி கூட்டியாந்து குடும்பம் நடுத்துறது யாரு, நானா மாப்ளே?

அட, அது என்னவோ நாந்தான் மாமா; ஆனா, பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு சொல்லிக்கிட்டு ஊர்ல வெள்ளையுஞ்சொள்ளையுமா திரிஞ்சிபுட்டு இப்போ சிங்கப்பூர்ல கப்பலுக்குக் கீழே படுத்து காஞ்ச நத்தையை தேய்க்கிறது யாரு மாமா, நீருதானே! அதைத்தான் சொன்னேன்.

காய்ஞ்ச நத்தையோ, கரி மண்ணை கூட்டி அள்ளுறதோ, கப்பல்கட்டுற தொறக்கி வேலைக்கின்னு வந்துட்டா இதெல்லாம் செஞ்சுதானெ மாப்ளே ஆகணும்.

அதுசரி மாமா. படத்துல கஞ்சா கருப்பு காமெடி, உங்க காமெடி போல கல்லா கட்டுது.

பிச்சுப் புட்டாய்ங்க மாப்ளே. கஞ்சா கருப்பு செத்துப்போனதா வெளம்பரம் பண்ணிக்கிட்டு போறதும் கதாநாயகி மருந்தக்குடிச்சுட்டுதா கெடக்கும்போது அவ குடிக்கலடா, நடிப்புன்னு உண்மையைச் சொல்ல, ஒருபயலும் கண்டுக்காம இருக்குறதப் பாத்துட்டு, அதுதான் நா அப்போவே சொன்னேன்லடா என்கிறதும் கலக்கல் மாப்ளே.

இது போதாதுன்னு சரண்யா, அதான் கதாநாயகன் அம்மா, புள்ளய காப்பாத்த தற்கொலைன்னு ஒரு நாடகத்தப் போடுறதும் நல்லாத்தான் மாமா இருக்கு.

இதெல்லாம் நம்ம ஊர்க்காட்டுல நடக்குறதானே மாப்ளே. உலகம் பூரா இதுதானே நடக்குது. வீட்டுக்கு வீடு வாசப்படி. சிங்கப்பூர்லயும் ஒரு காரியம் ஆகணும்ன்னா, பன்னெண்டாவது மாடியிலெர்ந்து குதிச்சிருவேன்னு சொல்லுற ஆளுங்களும் இருக்கத்தானே செய்யுறாக.

அதேதான், அதேதான். படம் முழுக்க காமெடி ரவுண்டி கட்டி கலக்குறது மாதிரி இந்த தற்கொலை, வெத்து மிரட்டல் செஞ்சி காரியம் சாதிக்கிறதுங்குறதும் பொளந்துகட்டிதான் வருது.

கரெக்டாச் சொன்னே மாப்ளே. வீட்டுல உள்ள சாமான ஒடச்சி ஒடச்சி அல்லது ஒடைக்கிற மாதிரி மிரட்டியே பொழப்ப ஓட்டுற கதாநாயகன் விமலும் அப்படித்தான்.

மெரட்டி மெரட்டி காரியம் சாதிக்கிறது புதுசா மாமா, உங்க சூப்பர்வைசரு என்ன சொல்லுவான்? நாம என்ன கேட்டாலும், ஒழுங்கா இரு, இல்லாட்டி பெர்மிட்டை வெட்டி ஊருக்கு அனுப்பிருவென்னு சொல்லிச்சொல்லியே ஓட்டலையா..அந்த மாதிரிதான்.

செரி செரி மாப்ளே.. உன்போனைக்குடு, ஒரு போன் போட்டுட்டுத்தாரேன் ஊருக்கு..

பெர்மிட்டை வெட்டுறதுன்னும் உமக்கு ஊரு ஞாபகம் வந்திருச்சாக்கும். காசு கொஞ்சந்தான் மாமா இருக்கு. இன்னும் டோப்-அப் பண்ணல. அதுசரி, ஊர் ஞாபகமா இல்லை பொஞ்சாதி ஞாபகமா மாமா?

யாம் மாப்ளே இப்புடிக்கேக்குறெ, படத்துல வாறது மாதிரி, துபாய், சிங்கப்பூர், மலேசியா-ன்னு கெடக்குற பயலுக நாம. நாலைஞ்சி வருஷம் அப்புடி இப்புடி கெடந்து போராடி கொஞ்சம் காசுபணம் சேத்துப்புட்டு ஊருபக்கம் போறதுதானே மாப்ளே நம்ம பொழைப்பு.

அதைத்தான் படத்துலே ஒரு கேரக்டராவே செஞ்சு காட்டிப்புட்டாங்களெ மாமா. அப்பன் போயிக்கெடக்குறான் துபாயில. அவன் காலத்துக்கப்புறம் மவன் போறான். இப்படியே இவங்க பொழப்பு போகுதுன்னு.

சரியாச் சொன்னே மாப்ளே, இதுக்குப்பின்னாடி உள்ள சோகத்தையும் சொமையையும் சொல்லாம சொல்லிப்புட்டாய்ங்க மாப்ளே.

சோகம் இருக்கட்டும் மாமா, படத்துல வாற கதாநாயகி ஓவியா பத்தி சொல்லுங்க..

ஏலேய் மாப்ளே, என்ன சொல்லச் சொல்லுறெ, எம்ப்பொண்ணு வயசுடெ அந்தப்பொணுக்கு..

அடடா, கலைக்கண்ணோட பாத்து ஏதாச்சும் சொல்லுங்க மாமா.,

ஓவியாவும் கிராமத்துக்கு ஏத்த முகம், நடிப்புன்னு நல்லாத்தான் இருக்கு மாப்ளே.. அதுமட்டுமில்லாம 'வெதை நெல்லு விக்கிற அவுங்க அப்பா', 'தனியா வளர்ந்து நிக்கிற கதாநாயகி வெச்ச நெல்லுப்பயிறு', அதை தனியா அக்கறையோட வளக்குற கதாநாயகன்'ன்னு 'பாரதிராஜா'வோட ஐட்டமும் நெறையத்தான் இருக்கு.

உங்களுக்கு 'பாரதிராஜா' ஞாபகம் வெந்துச்சாகும். எனக்கு 'ஆண்பாவம்' படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த மாதிரி படம்ன்னு தோணுச்சி மாமா.
அதுமாதிரி, கலகலன்னு போற படம் தான். வெட்டருவா, வீச்சுக்கம்பு இல்லாம நல்லாத்தான் போகுது.

அதுமட்டுமில்லாம, எததுக்கெல்லாம் மாலைய கழட்டி வெச்சிட்டு நம்ம பயலுக களத்துல எறங்குறானுவ, எததுக்கெல்லாம் நம்ம பயலுவ சண்டைக்கி நிக்கிறானுவ, எப்போல்லாம் சிங்கப்பூர் மாப்புளக்கி பொண்ணு தாறான்னுவன்னு கரெக்டா காட்டிப்புட்டாய்ங்க மாமா.

வெளிநாட்டுல வேலை பார்த்துட்டுப் போறவங்களுக்கெல்லாம் இந்தமாதிரி காதல்ல மாட்டுனது கசங்குனதத்தான் கட்டிவெக்கிறங்கெ போலெ; அப்புடித்தானெ மாப்ளே சொல்றே.

மாமோய்.. 'பதினாறு வயதினிலே' படம் வந்தபோது நீ ஆரம்பிச்ச தொழிலு, இன்னும் 'பத்தவெக்கிறதே' நீரும் விடவேயில்லையா?

எங்குட்டு மாப்ளே விடுறது. விட்டுட்டா பொழைப்பு ஓடாதே, சரி, படத்துல பாட்டு ஒண்ணும் மனசுல நிக்கலயே மாப்ளே..

ஆமாம் மாமா, பாட்டு மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்தா படம் 'எவர்கிரீன் மெஹா ஹிட்' ஆயிருக்கும் தோணுது. ஒரே ஒரு பாட்டு மட்டும் மனசுல நிக்கிது மாமா...அதான்... நம்ம ஏரியாவுல நடக்குற வள்ளி திருமணம், அரிச்சந்திரா மயான காண்டம் நாடங்கங்கல்ல வாற "ஊரடங்கும் சாமத்துல ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒருத்தி மட்டும் விளிச்சிருந்தா ஒறங்காம தவிச்சிருந்தா" பாட்ட எடுத்து படத்துல போட்டுட்டாய்ங்க. அந்தப் பாட்டுதான் இன்னும் மனசுல நிக்கிது.

சரி மாப்ளே...போனு கேட்டேனே... குடு மாப்ளே, ஒரு கால் போட்டுட்டுத்தாரேன்.

அட, இருங்க மாமா, ஊரை விட்டு வந்து ஒரு நாலைஞ்சி வருஷமாச்சிம் இருக்கும்ல நீங்க.

ஆமாம் மாப்ளே, நாலு வருஷம் ஆச்சு. நாலு வருஷம் என்ன மாப்ளே, ஒரு வீட்டைக் கட்டிப்புட்டு, நம்ம பயல ஒரு நல்ல படிப்பு படிக்கவெச்சுப்புட்டா ஊரு பக்கம் போயிரலாம்ன்னு பாக்குறேன்.

(மனசுக்குள்) ம்ம்..வரும்போது எல்லாரும் இதச்சொல்லிக்கிட்டே வாங்கடே...வந்து பதினாலு வருஷம் ஆனாலும் திரும்பிப்போகாதீங்க.)

என்ன மாப்ளே யோச்சிக்கிறெ....?

இல்ல மாமா.. உங்க பையன் என்ன படிக்கிறான்னு சொன்னீரு?

கும்பகோணத்து காலேஜ்ஜுல ஏதோ கம்புயூட்டர் படிக்கிறான்னு சொன்னா எம்பொஞ்சாதி.

இந்தப் பொஞ்சாதிய நம்பாதீரும்.. இந்தப் படத்துல வாறது மாதிரி பயலுகள கண்டிக்காம கோயில்காளை மாதிரி விட்டுப்புட்டு நம்மகிட்ட நல்லாப் படிக்கிறாய்ங்கன்னு சொல்லியே ஏமாத்திருவாங்க மாமா. எப்போதும் புள்ளங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கணும் போல மாமா.

சரிதான் மாப்ளெ.. இருந்தாலும் அந்த வயசுல இதெல்லாம் சகஜம்ன்னுதான் தோணுது மாப்ளே. கொஞ்சம் காலநேரம் ஒத்துவந்தா சரியாயிருவாய்ங்க.

சரி நமக்கும் அந்த ஞாபகம் வெந்துருச்சி மாமா... படத்துல வாற 'ஆடல் பாடல்' பாத்தியளா?

ஆடல் பாடலுக்கு பாய் விரிச்சிப்போடுறதும் அதிலே உக்காந்து ரவுசு விடுறதும் பாத்தேன் மாப்ளே. என்னதான் ஆடல் பாடல்ன்னாலும் நம்ம 'மதுர அகல்யா குரூப்' மாதிரி வருமா மாப்ளே?

அப்படிச்சொல்லும் மாமோய்.. வெட வெடன்னு ஒரு குட்டி, கூந்தலை எடுத்து முன்னாடி போட்டுக்குட்டு, கழுத்தச் சாச்சி, ஒரு வெட்டு வெட்டுவாளெ ஞாபகம் இருக்கா?

ம்ம் ஞாபகம் இருக்கு மாப்ளே.. என்ன, ரொம்ப ஏக்கமா பேசுறது மாதிரி இருக்கு.
அட என்ன மாமா? எங்க இருந்தாலும் நம்ம ஊரு ஞாபகம் போகுமா?

களவாணிப்பயலுக மாப்ளே... நீங்கள்ளாம்.

என்ன மாமா…. நாமெல்லாம்ன்னு சொல்லும் மாமா..

ஏண்டா மாப்ளே என்னைச் சேக்குறே..? நானு நெனைக்கிறேன்... நீரு பேசலை மாப்ளே; படத்துல சரண்யா சொல்லுற மாதிரி, வாற ஆனி போயி ஆடி முடிஞ்சி ரெண்டு வருஷம் போனா எல்லாம் உமக்கு செரியாயிரும்.

அடடா, ஆனி முடிஞ்சி ஆடி போனா இல்ல மாமா... வாற மே, ஜூன் முடிஞ்சு 'ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சா' எல்லாம் சரியாயிப்போயிரும்..

அது....!

நன்றி: தங்கமீன் மின்னிதழ்
http://www.thangameen.com

தங்கமீன் மின்னிதழில் (அக்டோபர்) வெளியானது.

Monday, October 25, 2010

டயலாக் 25/10

நியாயம் மனுஷனுக்கு மனுஷன் மாறலாம்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஊருக்கு ஊரு அது மாறும்னு இப்போ நம்புறேன்டா பாபு.

எப்படிடா, இப்போ மட்டும் நம்பிக்கை வந்ததுட்டதா சொல்றெ கோபு?

அட, தர்மபுரி பேருந்தில் 3 உயிர்களை தீவைத்துக்கொளுத்திய மூவருக்கும் மணதண்டனையாம். மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 உயிர்களைத் தீவைத்துக் கொளுத்தியவர்களுக்கு பதவியும் பரிசுமாம்.

இப்போ புரியுதா ஊருக்கு ஊரு நியாயம்? அது தர்மபுரி; இது மதுரை!

தங்கமீன் முதல் இதழ்- ஒரு பார்வை.

சிங்கப்பூரிலிருந்து வரும் ஒரு இதழில் சிங்கப்பூரைப் பற்றிய செய்திகளும் சிங்கப்பூர் படைப்பாளிகளின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டவாறே வந்திருக்கிறது தங்கமீன் முதல் இதழ்.

கவிதை முதல் கட்டுரை, கதை, சமூகம், பொது, இளைஞர் பக்கம் என அனைத்திலும் சிங்கப்பூர் செய்திகளும் தளமுமாய் இருப்பது நிறைவு. சிங்கப்பூரில் இத்தனை படைப்பாளிகளா என ஆச்சரியமும் வந்தது. இந்த ஆச்சரியத்தை பாலுமணிமாறன் இன்னும் தொடர்வார் என நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்.

சில கட்டுரைகள் ரொம்பவும் நிறைவு.

வள்ளல் கோவிந்தசாமி பற்றிய செய்திகள் எனக்குப்புதிது.

மரத்தைப் பற்றி எழுதியவர் முதலில் புளிய மரத்தை எடுத்தது எனக்கு ஆச்சரியம். ஏனெனில் சிங்கப்பூரில் புளியமரம் காணக்கிடைப்பது மிகவும் அரிது என நினைத்திருந்தேன். ஆனால் அதில் சொல்லியிருக்கின்றபடி இப்போது கூர்ந்து கவனித்தால் நிறைய புளிமரங்கள் காணக்கிடைக்கின்றன. நேற்று மாலை நடந்துவரும்போது கவனித்த விஷயம், முஸ்தபாவிற்கு எதிரில் இருக்கும் மசூதி அருகே ஒரு 'வெடல' புளியமரம் இருக்கிறது.

"மினி என்விரான்மெண்ட் செர்வீஸஸ்" உரிமையாளர் திரு அப்துல் ஜலீல் அவர்களின் பேட்டி சிறப்பாயிருந்தது. நோன்பு விருந்துக்கென ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வரும் ஆடுகளை கொட்டும் மழையில், கப்பலின் மேல் நின்றுகொண்டு இறக்கிக்கொண்டிருந்தவாறு, ஒரு புகைப்படம் கடந்த வருடம் ஒன்றில், ஆங்கிலநாளிதழில் பார்த்தேன். கோடீஸ்வரரான பிறகும் இப்படி "தரையில் இறங்கி" வேலை பார்ப்பவர்கள் அடிமட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்களாக இருக்கக்கூடும். கோடீஸ்வரராயிருந்தாலும் இன்னும் 10 வெள்ளியே செலவு செய்யும் அசாத்தியம் அறிந்துகொள்ளவேண்டியதே.

தமிழகத்திலுருந்து தேர்தல் வருகிறது மாலனின் கட்டுரையும் சாருவின் சமகாலத்து இலக்கியவாதிகளின் தொடர்பு குறித்தான பங்களிப்பும் சிறப்பு.

இந்திரஜித்தின் கட்டுரை எனக்குப்பிடித்திருந்தது. 'அறச்சீற்றமாக' இருந்தபோது எழுதியது என நினைக்கிறேன்.

இளவழகன் முருகன் எழுதிய எந்திரன் விமர்சனம் நிறைய கவனிப்புகளுடன் நிறைவாக இருந்தது.

சுப்ரமணியன் ரமேஷின் குட்டி தேவதை திரும்பவும் தீண்டிய தென்றல்.

டாக்டர் சபா நடராஜன், ஷானவாஸ் கட்டுரைகளும் யதார்த்தம் கலந்த இனிமை.

புதுமைத்தேனியாரின் சினிமா அனுபவங்கள் படிப்போரை மகிழ்விக்கும் என நம்பலாம். கிசுகிசு அல்லது சொல்லாத சேதிகள் இருந்தால் அள்ளிவிடுங்கள் என 'தெரிந்த நண்பர் ஒருவர்' சொல்லச்சொன்னதை அவரிடம் சொல்லலாமா எனத்தெரியவில்லை.

கேள்வி பதில், சினிமா செய்திகள், நிகழ்வுகள், இளைஞர் பக்கம், வசந்தம், ஒலி & ஓளி என அனைத்தையும் இணைத்திருக்கும் போக்கு பாராட்டக்கூடியது.

சிறுகதைகளை இனிமேல் தான் படிக்கவேண்டும்.

தங்கமீன் இணைய இதழ் வெளியீட்டில் தமது பத்தாண்டு கனவு என்று திரு ஆண்டியப்பன் அவர்களும், சிங்கப்பூர் மார்க்கண்டேயர் (எப்படி சார் எப்பவும் இளமையோட இருக்கீங்க என நான் பார்க்கும்போதெல்லாம் கேட்கும்) திரு. அருண்மகிழ்நன் அவர்களும் சொன்னதாகப் படித்தேன். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அக்கனவு இன்று நிஜமாயிருப்பதில் மகிழ்வு.

முதல் பக்கம் பளிச்சென்று இருந்தால் நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.

தங்கமீன் மென்மேலும் பலவெற்றிகளைப்பெற வாழ்த்துகள்.

அன்பன்
எம்.கே.குமார்.

Thursday, October 14, 2010

மண்ணாய்ப்போவார்கள் இவர்கள்.

ராஜபக்ஷே காமன்வெல்த் நிறைவு விழாவிற்கு வருகிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து தூக்கம் இல்லை. மனம் எரிகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புகளின் குளறுபடி அலங்கோலங்களை உலகமே கைகொட்டிச்சிரிக்கும் காட்சிகள் மனவேதனை அளிக்கும்
வேளையில், இந்த செய்தி என் நெஞ்சை உலுக்குகிறது. சீனாவின் பிடியிலிருக்கும் இலங்கையை கைக்குள் அடக்குகிறேன் பேர்வழி என்று இந்தியா ராணுவத்தடவாளங்களையும்
ரேடார்களையும் பல மில்லியன் பணத்தையும் அளித்து பல உயிர்கள் அழிப்புக்கும் துணைநின்றது போதாதென்று இப்போது காமன்வெல்த் நிறைவுவிழாவுக்கு கொலைமன்னன்
ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறதாம். சுயபுத்தியுள்ள எந்த நாடாள்பவனும் இதைப்போன்ற முட்டாள்தனங்களைச் செய்யமாட்டான்.

இவ்வாறு செயல்படுவது மூலம் என்ன செய்யப்பார்க்கிறது இந்தியா? சீனாவை கோபப்படுத்த அல்லது அட, உன் கைப்பாவை என்கைப்பாவைக்குள் என்று காட்ட, அல்லது, பார்
அண்டை நாட்டுடன் நான் எவ்வளவு அன்னியமாய் இருக்கிறேன் என்று காட்ட, அல்லது ஒரு வெற்றிவீரனை விளையாட்டுவீரனை கௌரவப்படுத்த அல்லது ஒரு மகாத்மாவை
கௌரவிக்க... இப்படி எது செய்யநினைத்தாலும் அது ராஜபக்ஷேவை அழைத்துவருவதன் மூலம் நடக்காது என்பது என்னைப்போன்ற அரசியல் தந்திர ஞானசூன்யங்களுக்கே புரியும்போது மன்மோகன் ஐயாவுக்கு புரியாமல் போனதென்ன? பக்கத்து வீட்டுக்காரன் கொழுந்தியாளைக் கொஞ்சுகிறான் என்று இவன் நல்லபாம்பை எடுத்து கொஞ்சினானாம். அந்தக் கதைதான்.

சீனாவைக் கோபப்படுத்தவேண்டுமா? தற்போது நோபல் பரிசு வாங்கியிருக்கும் அந்த சீன அமைதிபோராட்ட வீரரை அழைத்துவா, நிறைவு விழாவுக்கு. பாகிஸ்தானின் அதிபரை
அழைத்து வந்து 'பார் நான் சமாதானப்புலி' என்று காண்பி. மாமனிதரைக் கௌரவிக்க வேண்டுமா? மியான்மரின் மேடம் ஆங் சு கியை அழைத்துவா, திபெத்தின் திரு. தலாய்லாமை அழைத்துவா. சிங்கப்பூரின் திரு. லீகுவான்யூவைக் கூப்பிடு. இதையெதையும் செய்யாமல் ஒட்டுமொத்த உலகமே அறியும் அதிலும் ஐ.நா சபையே அங்கீகாரம் அளிக்க மறுக்கும் ஒருவனுக்கு இந்தக் கௌரவத்தை அளிப்பது இந்தியா செய்ய நினைக்கும் எதிலும் அடங்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் மனத்தையும் ரணமாக்கவே செய்யும்.

திருமாவளவன் போராட்டமாம். ராஜபக்சேயை நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிவிட்டு இப்போது போராட்டமாம். கொழும்பில் குலுக்கிய கையை டெல்லியிலும் போய் குலுக்கிவிட்டுவா. என்ன இருக்கிறது?

கலைஞர் ஐயா, தமிழ்நாட்டில் கூட்டணி பற்றி காங்கிரஸ் "ஒருமாதிரி" பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களுக்கு வந்திருக்க வேண்டாமோ தமிழ்ப்பற்று? என் நெஞ்சம் எரிகிறதே,
ஒரு கொலைஞனை எப்படியய்யா கலைஞன் என காமவெல்த்திற்கு தலைமை தாங்கச்செய்யலாம், என் நெஞ்சு பதறுகிறதே என டெல்லிக்கு அனுப்பியிருக்கவேண்டாமோ உங்களது மந்திரிகளையும் எம்.பி.களையும்?

ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிற்கு எதிரி பாகிஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். அது இல்லை! இந்தியாவிற்கு எதிரி தமிழினம் தான் என்று இப்போதுதான் புரிகிறது. என்ன
செய்ய? எமது தலையெழுத்து அப்படி, தமிழ் தலையெழுத்தல்லவா?

Tuesday, October 05, 2010

எந்திரன் - 25 (விமர்சனமல்ல)

எந்திரன் - 25

1. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

2. ரஜினி படத்தை இப்படி முதல் இரண்டு நாட்களில் தியேட்டர்க்குச் சென்று பார்ப்பது எனக்கு இது முதல் முறை. எப்போதும் ஆகாத ஒன்று என்று நினைத்திருந்தாலும் எந்திரனுக்குச் செல்ல நேர்ந்தது குடும்பத்தினருக்காக.

3. செல்லக்குட்டி ஆதித்யா(3) இது திரையில் பார்க்கும் முதல்படம். சேட்டை பண்ணுவான் என நினைத்து பயந்திருந்த வேளையில் படம் முழுவதும் கண்களை திரையில் விட்டு அகலாமல் பார்த்தது எங்களுக்கே ஆச்சரியம். ரஜினியா கொக்கா அல்லது கார்ட்டூனா கொக்கா?

4. சிங்கப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கிறார்கள் தியேட்டரில். வழக்கம்போல விசில் சத்தம் காதைப் பிளந்தது.

5. ரஜினியின் அறிமுகம் படத்தில் மிக இயல்பாக இருந்தது. வண்டுசிண்டு பண்ணுவது போல பறந்து வராமல், தாவிக்குதிக்காமல், விரலை ஒடித்து வித்தை காட்டாமல் சாதாரண அறிமுகம் சிறப்பாய் இருந்தது.

6. ஐஸ்வர்யா ராய் மிக அழகாக இருந்தார். மனம் லயித்து அவர் ஒவ்வொரு காட்சியிலும் இணைந்திருந்தார் என்று தோன்றியது.

7. சுஜாதா என்ற மேதைக்கு எப்போதும் ஒரு குறும்புத்தனம் உண்டு. சீரியஸான நேரத்தில் சிறுபிள்ளைத்தனமோ என்று சந்தேகிக்கும் அளவு அவர் அதை வெளிக்காட்டுவார். அதை அவரிடமிருந்து கற்ற ஷங்கர், அமரராகிவிட்ட அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லியிருக்கலாம்.

8. என்னதான் 'ரஜினி ரோபோ'வாக இருந்தாலும் இப்படியெல்லாம் உடலை வளைத்து பிரபுதேவா மாதிரியெல்லாம் ஒரு ரோபோ செய்யுமா என்ன? (சோனி நிறுவனத்தார் கவனித்திற்கு)

9. சுல்தான் த வாரியர் படத்திலிருந்து பல காட்சிகளைச் சுட்டு விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

10. ரஜினியின் குரல் கதாநாயகனுக்குப் பொருத்தமாக இல்லாமல் வில்லனுக்குப் பளிச்சென பொருந்துகிறது.

11. ரஜினி மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்பதை நான் இன்னொருமுறை இங்கே பதிவு செய்கிறேன்.

12. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக் சமாச்சாரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியதும் உலகத்தரத்துக்கு இணையானதும் ஆகும். ஆனால் ஆங்கிலப்படங்களை ஒப்பிடக்கூடாது.

13. ரோபோவின் செயல்பாடுகளைத் திரையில் ஆங்கில எழுத்தாகக் காட்டுவதால் (உதா. மேக்னெட் மோட் ஆக்டிவேடெட்) சி சென்டரில் புரிவதில் சிக்கல் ஆகலாம்.

14. கொசு தேசியபறவையாக ஆசைப்படுவது (சுஜாதாவின் குறும்புத்தனம் என நினைக்கிறேன்) என்ன, கொடுத்தே விடலாம். நாடு அப்படித்தான் இருக்கிறது. டெங்குலட்சுமி பாத்தும்மா.

15. ஒண்ணுமேயில்லாததை இப்படிச்செய்ய முடியுமாதலால், "தசாவதாரத்தை" ஷங்கர் இயக்கியிருந்தால் இன்னும் பெரிதாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்தது ஆச்சர்யம் அல்ல.

16. செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு இப்படி யாரும் பணம் செலவு பண்ண முன்வந்திருந்தால் அது உலகத்தரத்துக்கு எட்டியிருக்கும் என்பதும் எனக்கு வந்த இன்னொரு எண்ணம்.

17. வசனம் சுஜாதா, ஷங்கர் மற்றும் கார்க்கி. ஜெயமோகனையும் சேர்த்திருக்கலாம், 90சதவீத வசனங்களில் நகைச்சுவையே மிஞ்சியிருக்கும் இந்தப் படத்துக்கு அவர் பொருந்தியிருப்பார்.

18. கலாபவன் மணி, கொச்சின் ஹனிஃபா, சந்தானம், கருணாஸ் ஆகியோரும் உண்டு. கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.

19. உணர்வுகளைப் பரிணமிக்கும் சினிமா என்கிற கலையில் காசு பண்ணிக்கொடுப்பது என்பதைத் தொடர்ந்து காட்டிக்கொடுத்து ஆதரவளித்துவரும் ரஜினி, இனி உண்மையிலேயே நல்ல கதையை தேடி நடிப்பது காலம் கடக்கும் அவசியம்.

20. இயந்திரத்தையும் மனிதன் தனது காமகுரோத பேராசை எண்ணங்களினால் கெடுத்துவிடுகிறான் என்பதே ஷங்கர் சொல்லவரும் கடைசிச்செய்தி.

21. கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் ஓர் படம் வந்தால் (என்னிடமும் ஒரு கதை இருக்கு) அது தமிழ்சினிமாவின் மகா வெற்றியாக இருக்கும்.

22. எந்திரன் - காஸ்ட்லி கார்ட்டூன்.

23. லாஜிக் பார்க்காவிட்டால் மேஜிக்.

24. சிவாஜி மறந்துபோனது போல எந்திரனும் மறந்து போகும்.

25. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

Saturday, October 02, 2010

சிங்கப்பூரிலிருந்து புதிய மின்னிதழ் - எனது எண்ணங்கள்

சிங்கப்பூரில் தமிழ் பற்றிய கட்டுரைகளையும் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் ஒன்று மட்டும் புலப்படும். அது, சிங்கப்பூரில் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்துச்செல்வதில், தமிழ் பயன்படுத்துதலை மேம்படுத்துதலில், ஒருங்கிணைப்பை அதிகரித்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிவணிகர்களும் தமிழ்த்தொண்டர்களும் தொடருவதைத் தவிர மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று ஆழ்ந்துகிடக்கிறது என்பதுதான்.

தமிழ்முரசு அவ்வெற்றிடத்தை நிரப்பலாம் என்பதுதான் எனக்கிருந்த காலகால நப்பாசை. காரணம் அமரர்கள் கோ.சாவும், வி.டி.அரசு போன்றவர்களும்.

இதற்கிடையில், “பத்திரிகை மற்றும் இதழ்கள் மூலம் சிங்கப்பூரில் படைப்பிலக்கத்தை வளர்க்கமுடியாது” என்பதாக தமிழ்முரசு நாளிதழில் பணிபுரியும் கவிஞர் லதா ‘வல்லினம்’ இதழில் எழுதியபோது அசாதரண வியப்பும் அதிர்ச்சியுமாயிருந்தது எனக்கு. சிங்கப்பூரின் கவனித்தக்க கவிஞர்களில் அவர் ஒருவர். தமிழ்முரசுவில் வேறு பணிபுரிகிறார். தமிழ் முரசால் அவர் இப்படிச்சொல்கிறாரா இல்லை அதில் பணிபுரிவதால் இப்படிச்சொல்கிறாரா எனத்தெரியவில்லை.

ஆனால், என்னைப்பொறுத்தவரை சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் தமிழ்முரசு ஆணிவேரைப்போன்றது. தமிழ் மொழியின் வளர்ச்சியும் இலக்கிய இருப்பும் சிங்கப்பூரில், தமிழ்முரசை அச்சாணியாகக் கொண்டே தொடங்கியது. தொடரவேண்டும். தொடரும்.

தமிழ் முரசுவின் புதுவடிவம், மாறுபட்ட தோற்றம் குறித்தான எனது பார்வையை நான் முன்வைக்கவிரும்பவில்லை. 2005ல் திண்ணையில் எழுதிய கட்டுரை முதல், கலைஞருக்கு ஆகாத காலச்சுவடு போல ஆகிவிட்டது எனது நிலைமை. ஆனால் தலையங்கம், வாசகர் கடிதம் என தொடரும் அதன் மாற்றங்களை நான் கவனித்துவருவது எனக்குப்போதுமானதாக இருக்கிறது.

‘ஒலி 96.8 விமலா’வின் வலைப்பக்கத்துக்கு வருபவர்களில் 10% பேர் கூட சிங்கப்பூரின் தமிழ்முரசுவின் வலைப்பக்கத்துக்கு வரமாட்டார்கள். இணையமும் கணினியுமே யுகமாகிவிட்ட இக்காலத்தில் தமிழை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்புகொண்ட தமிழ்முரசு போன்றவை அதன் இணையப் பங்களிப்பை அதிகப்படுத்தவேண்டும்.

சிங்கப்பூரில் தொடரும் இலக்கியவறுமையை தனிமனிதர்களால் அல்லது குழுவால் தொடங்கப்பட்ட சில அச்சுபத்திரிகைகள் (உதா. நாம், செராங்கூன் டைம்ஸ்) களைய முயற்சித்தாலும் அது தொடருவது பல ஆண்டு நடத்துதலில் இருக்கும் சிரமத்தைப் பொறுத்தது.

இந்நிலையில் நண்பர் பாலுமணிமாறன் நாளை (அக்டோபர் 3 முதல்) தொடங்கும் புதிய மின்னிதழ் “தங்கமீன்” வெற்றிபெற பல சாத்தியங்கள் இருப்பது என் கண்கூடு.

காரணம், தமிழ் இணையவெளியில் “அ” போட்ட நா.கோவிந்தசாமி நாட்டில் இப்போதைய தமிழ் வளர்ச்சி இணையத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதன் முதல் குறையை இது களையும்.

இணையத்தில் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொண்டால் தமிழையும் வளர்க்கமுடியும்.

அச்சு இதழ்களில் இருக்கும் பல சிக்கல்கள் இதில் இல்லை. அதனால் தொடருவதில் சிரமம் இல்லை.

கடைசியாக, பாலுமணிமாறன் திட்டமிட்டு தெளிவாகச் செயல்படுத்தும் ஒரு சிறந்த காரியக்காரர். பாரதிராஜாவின் வருகை முதல் மனுஷ்யபுத்திரன், புத்தக பதிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்புகளைத் தன்னகத்தே கொண்டு துல்லியமாய் செயல்படுபவர். அவரின் முயற்சி ஜெயிக்கும்.

அன்பன்
எம்.கே.குமார்.

Search This Blog