Saturday, June 12, 2004

தம்பிக்கு ஒரு கடிதம்...

உடன்பிறப்பே,

நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும்? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம்? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு திசைகளிலும் வெற்றி முரசு கொட்டியல்லவா நாம் வீற்றிருக்கிறோம். நமது ஆட்சி நாடெங்கும் நம் புகழ் பரப்பும் ஆட்சியாக அல்லவா நடந்துகொண்டிருக்கிறது! எப்படி நமக்கில்லாமல் போகும் நலம்? நெஞ்சினிக்கும் இவ்வேளையில் தமிழ் வாழும் செய்தி கேட்டு நலமில்லாமல் இருப்பாயா நீ? தமிழென்றால் நலம்தானே! நாமென்றால் தமிழ்தானே!

எத்தனை சதிக்கூட்டங்கள்? பழுவூர் சதியாலாசனைகளைக் குழிதோண்டிக் குப்புறப் புதைக்கும் அளவுக்கல்லவா அதைவிட பெரிய சதியாலோசனைகள் இங்கே நடைபெற்றன. சதிகாரத் தலைவிகளின் சவுரி முடி கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெள்ளிய நீரோடை போலல்லவா நாற்பதும் நமக்குக்காட்டியது! பேதைப் பெண்பூச்சிகளின் ஆதிக்கச் சூத்திரங்கள். நியாயங்கள் அறியாத நடுநாயகங்கள். பிராமணத்துவங்களின் பெருங்கூட்டங்கள். காவிகளின் மயானக்கூக்குரல்கள். நாமென்ன வரலாறியாத வெள்ளாடுகளா? வீரமில்லாத விட்டில் பூச்சிகளா? நயவஞ்சக நரிக்கூட்டங்களா? நாற்பதும் பறை சாற்றியதே நமது வீரத்தை! புறமுதுகு காட்டியல்லவா ஓடினார்கள் பெண்புலிகள்! அந்தோ! அஞ்சறைப்பெட்டியாடிய கைகள் ஆட்சிக்கட்டிலில் நடத்திய இடுகைகளெல்லாம் இதோ இன்று ஒன்றன் பின் ஒன்றாகவல்லவா புறமுதுகிட்டு ஓடுகின்றன்.

இதோ! வங்காள விரிகுடா எழுந்து வருகிறதே! அரபிக்கடலின் மீன்கள் கூட்டம் மொத்தமாக முத்தமிட்டுக் கொண்டல்லவா ஆடிப்பாடி சந்தோசத்தில் முழங்குகின்றன. தென்திசையிலிருந்து அதோ! வருகிறது! வருகிறது! அண்டார்டிக்கா கண்டம் வான் பிளந்து நமக்கு வாழ்த்துச்சொல்ல வருகிறது! இந்தியப்பெருங்கடல் போடும் முழக்கம் என்னவென்று கேட்கிறதா உனக்கு? வருகிறார்கள், மொத்தமாக வருகிறார்கள். வள்ளுவப்பெருந்தகை முதல் வாரியார் வரை வெற்றிக்களிப்பில் அவர்கள் ஆடிப்பாடி அகமகிழும் வாழ்த்தொலி கேட்கிறதா உனக்கு? வானமே எழுந்து வந்து வாழ்த்தும் குரல் கேட்கிறதா உனக்கு?

காவியங்கள் கொண்டதும் காவியங்கள் படைத்ததுமான நம் தமிழுக்கு வந்துவிட்டது அது. நேற்றுப்பெய்த மழையில் இன்று பூத்த காளானல்ல அது. எத்தனை தியாகம் செய்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயா தம்பி? 6-6-66 ல் அண்ணா அவர்கள் ஆரணியில் பேசிய கூட்டத்திலே எழுப்பிய அத்தீர்மானத்திற்கு எழுந்த ஆதரவுகளை இமயமலையிலும் எழுதமுடியாது தம்பி. இடிமுழக்கமென எத்தனை விண்ணைப்பிளக்கும் வாழ்த்துகள் எழுந்தது தெரியுமா உனக்கு? நெஞ்சு நெருப்பினிலே எரிந்த காலமல்லவா அது!

காவியத்தமிழில் இனி ஓவியங்கள் படைக்கலாம் வா. நடுவண் அரசு நம்முடையதாக இருக்கையில் எத்தனை இடையூறுகள் வந்து இவைகளைத்தடுத்து விடும் பார்க்கலாம். நாற்பது கோடி கொடுத்த பேசமுடியாத சமஸ்கிருதத்தை விட வாயினிக்கும் மொழியினிக்கும் வையகமாளும் தமிழுக்கு எப்படியும் அதன் இருமடங்காவது கிடைக்குமல்லவா? வையகத்தை கதைகளாலும் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பெருக்கி இன்பத்தமிழுக்கு இன்னுயிர் கூட்டி வானம் வரைக்கும் அதன் புகழ் பரப்பலாம் வா.

திருப்பதிநாயகர் நேசமுடன் ஆங்கிலம் படிக்கப்போகலாம், காஞ்சிபுர கடவுளர்கள் அரசாங்கத்தை நடத்த ஆசைப்படலாம். இதெல்லாம் எவ்வகையில் நம் கொள்கைகளை கோலமிழக்கசெய்யும்.? கொடிபிடிக்கும் தடியர்கள் தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கப்போனால் என்ன? கோலெடுத்தால் நடனமாடும் இக்கோமான்கள் படிக்காவிட்டால் என்ன? தமிழ் வளர்ந்துவிடாதா? இல்லை கோடிகள்தான் கிடைக்காதா? கனடா முதல் கைலாயம் வரை செம்மொழியை சேர்க்காமல் நாம் சோர்ந்து விடுவோமா என்ன? சிந்திய ரத்தத்தில் சிலப்பதிகாரம் எழுதி இமயமலை வரை அடுக்கி வைத்திருக்கலாமே தம்பி! செம்மொழியை இகழ்ந்து வெம்மொழியை படித்தால் கோட்டையைப்பிடித்து விட முடியுமா இவர்களால்? கொள்கைக்கோமான்களா இவர்கள்? கோபுரத்தூசி தம்பி இவர்கள்!

சிந்திய குருதியில் ஹிந்தியை அழித்தோமே! செப்பு மொழியாளுக்காகத்தானே தம்பி! சீற்றம் கொண்ட காளைகளாய் அன்று நாம் கொண்ட புரட்சி, பிணம் தின்னும் பேய்களை தண்டவாளயங்களை விட்டல்லவா விரட்டி அடித்தோம்! தலை வைத்தல்லவா காத்தோம் அதை! இன்று இதோ செப்பு மொழி நம் மொழி. சாதித்து விட்டோமடா தம்பி நாம் சாதித்து விட்டோமடா! ஹிந்தி வேண்டாம், வேற்று மொழிக்கு விசிறியாக வேண்டாம். காதலிப்போம் தமிழை. காப்போம் செம்மொழியை. பெறுவோம் பேறுகளையும் கோடிகளையும்!

ஹிந்தி அழித்ததற்காக நாம் என்ன கோட்டை வாயிலிலேயே நின்று விட்டோம்? செங்கோட்டை நமக்கு வெறுங்கோட்டை ஆகிவிட்டதா? நிதியும் வனமும் கிடைக்காமலா போய்விட்டது? தொலைத்தொடர்பும் கப்பலும் இல்லாமலா ஆகிவிட்டோம்? நமக்கு வேண்டாம் தம்பி அது. தமிழைப்படிப்போம். தமிழால் இணைவோம். தரணி போற்றும் தமிழ் என் தாயினுடையது என்போம். தாயை இகழ்ந்தவனை தமிழ் தடுத்தாலும் விடோம். தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடோம்.

முரசொலி மாறன் தமிழ் வளர்க்கப் பட்டபாடு தெரியுமல்லவா உனக்கு. செம்மொழியாக்கிப் பார்க்க அன்னாருக்குக் கொடுத்து வைக்கவில்லையே தம்பி! இதோ சேரமானின் வழித்தொன்றலாய் வந்துவிட்டானே தயாநிதி. விடுவானா தமிழை. தொடுப்பானா பிழையை.? எடுத்தானே! முடிப்பானே! கோடிகளல்லவா! கொடுத்து வைத்தவர்கள் நாமல்லவா? வருவது தமிழால்தானே! நாம் வாழ்வதும் அதனால்தானே!
வேண்டுமா பிறமொழி? கொடுக்குமா அது வெகுமதி?

வா தம்பி! உன் வாரிசுகளுக்காகவே தமிழாசிரியர்களை நியமிக்கிறேன். அவர்களின் வாசிப்புக்காகவே மாநகராட்சிப்பள்ளிகள் நின்றுகொண்டிருக்கின்றன. தமிழால் வா. தமிழ் படித்து வா. ஆங்கிலம் என்ன தரும்? ஹிந்தி என்ன தரும்? சப்பாத்திகள் செய்வதற்கு ஹிந்தி எதற்கு? சம்பாத்தியங்கள் தருவதற்கு அதெல்லாம் வேண்டுமா என்ன? நாம் வாழவில்லையா? வேட்டிக்குள்ளே புகுந்த வேங்கையை விரலால் கொன்றவர்களல்லவா நாம்! தமிழைப்படி. மடிப்பிச்சை எடுத்தாகிலும் தமிழைப்படி. மடிப்பிச்சை மட்டுமே வாழ்வாகும் பரவாயில்லை. மடிப்பிச்சை எடுத்து மடிப்பிச்சையால் மட்டுமே வாழ தமிழ் படி. எக்களம் கண்டாலும் வெறுங்கையோடு திரும்புமா வேங்கை?

கண்ணிலே கோளாறு சிலருக்கு. ஹிந்தி வேண்டுமாம். ஆங்கிலம் வேண்டுமாம். அதெல்லாம் எதற்கு? ஆங்கிலக்கல்வியிலா படித்தோம் நீயும் நானும்? பொன்னர் சங்கரும் புலவர் தொல்லும் ஹிந்தி படித்தா நாட்டையாண்டார்கள்? பண்பாடற்றவர்கள் பகலுவார்கள் அப்படி! காதிலே வாங்கினாலும் பாவம் தம்பி! காலைக்கடன் முடித்தவுடன் காலைக்கழுவுவது போல காதைக் கழுவி விடு தம்பி! செம்மொழி கேட்கும் இக்காதுகளுக்கு அம்மொழி வேண்டாம், அறிவுரைத்துவிடு.

காலம் போயினும் ஞாலம் அழியினும் ஞாயிறு காணும் பகலைப்போல தமிழைப்பார்த்து வளர்வோம் தம்பி. தமிழைக்காக்க வாழ்வோம் தம்பி!

அன்புடன்,
ம.கா.(கு)

2 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

நீங்கள் குமார் MK ஆ அல்லது குமார் DMKஆ

Anonymous said...

your parody is very good.

Search This Blog