Tuesday, September 20, 2005

எம்ஜிஆரும் காமராஜரும் இறந்துவிட்டனர்!

மன்னிக்கவும், உங்களைத்தொந்தரவு செய்யவில்லை. நீங்கள் உங்களது வேலையைத்தொடருங்கள்! ஆச்சரியப்படுவதற்கோ வினாடிகள் சில யோசித்து அஞ்சலி செலுத்துவதற்கோ இது நமக்கு புதிதல்ல. கால ஓட்டத்தில் இவையெல்லாம் பணத்தையும் அது தரும் வாழ்க்கையையும் விடவும் பெரிதாகத் தெரிய வேண்டிய அவசியமுடன் இருக்கிறதா என்ன?

எம்.ஜி.ஆர் என்றதும் சிலருக்கு, 'காயா இது பழமா கொஞ்சம் தொட்டுப்பாக்கட்டுமா?' என்பதோ இல்லை கையை முகவாயில் கொடுத்து பேனாவுடனும் புன்சிரிப்புடனும் இருக்கும் சுருட்டைமுடிக்காரரையோ இல்லை இரட்டை விரலைக்காட்டி தொப்பி கண்ணாடி சகிதம் கம்பீர புன்னகை தருபவராகவோ இருந்துவிட்டுப்போவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

கையில் சாட்டையுடன், 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்று கட்டளையிடப்போகும் காலத்தை உணர்ந்து நிற்கும் அவர்தான் என் கண்களூக்குள் எப்போதும் வருவார். நான் இன்றும் ரசிக்கும் காவியத்தலைவரும் அவர்தான். ஒரு ஏழைத்தாயின் மகனாகப்பிறந்து ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிய வாழ்க்கையை நம்பிக்கையோடு கெட்டியாகப்பிடித்து முன்னேறி அதையே ஒரு வழியாக்கி மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்; செலுத்திக்கொண்டிருப்பவர்.

வாழ்க்கையை வெற்றிகொள்ளத் திணரும் பலருக்கும் 'நான் ஏன் பிறந்தேன்' (என்ற கேள்வி) அவசியமானது. அத்தகைய கேள்வியிலிருந்து துவங்கியதுதான் இன்னொருவருடைய வாழ்க்கையும்!

தாமரைக்கனி. முன்வழுக்கை போக மோதிரத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர்பெற்றவர். இங்கும் ஏழ்மைக்கதைதான். வாழவைத்தது தன்னம்பிக்கை. படம் பார்த்து உருப்படாமல் சுற்றித்திரிந்ததால் மந்திரியானாரோ கலாட்டா அல்லது பதவிவெறியில் அரசியலில் ஜொலித்தாரோ எனக்குத் தெரியாது. தன்னம்பிக்கை உள்ள மனிதர். அனைத்தையும் சாக்கடையாக்கிவிடும் அரசியலின் இயல்பிலிருந்து தப்பிக்க திறமையுள்ள சாக்கடைவாசி இல்லை இவர். சராசரியான மனிதர். கொஞ்சம் மூர்க்கத்தனம் நிறைந்த அப்பாவி. தமிழகத்தை உலுக்கிப்போட்ட அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் முடிவுகளில் இவரது தன்னமிக்கை இவருக்கு வெற்றி கொடுத்தது.

சில மாதங்களூக்கு முன் கூட, "இதோ எழுந்து நடமாடிவிட்டேன்; வருவேன், மீண்டும் வருவேன். கலைஞரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்காமல் இறந்துபோகமாட்டேன்" என்று உற்சாகம் ததும்ப பேசிய இவருக்கு காலன் இட்ட காலக்கெடு தெரியுமா என்ன?
*************************************

ரிச்சர்ட் மதுரம். 70 வயது. முன்னாள் அரசு அதிகாரி. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களீல் உயர் அலுவலராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர். ஊட்டியில் அவரது மகள் வீட்டில் இருந்துவந்திருக்கிறார். எதேச்சையாக ஒரு நபரை ஊட்டியில் ஒருநாள் சந்திக்க, அந்நபருக்கும் உடனே ஏதோ ஒரு பொறி தட்ட, வெளியில் வந்தார் கிங் மேக்கர். 'பொறி தட்டிய நபர்' தயாரிப்பாளர்-இயக்குனர் பாலகிருஷ்ணன். 'தட்டிய பொறி' காமராஜர் பிறந்து வந்தது.

'காமராஜ்' படத்தில் 'அய்யா காமராஜராக' நடித்தவர் அமரர் ரிச்சர்ட் மதுரம். பார்த்தவுடன் நிதானிக்கவைக்கும் கூரிய பார்வையும் எளிமைக்குச் சான்றாய் விளங்கும் தோற்றமுடையவருமாய் காமராஜ் படத்தில் நடித்திருந்தார், இல்லை மீண்டும் பிறந்து வந்தார். அவரது நடிப்பைப்பற்றி எதையாவது கூறி அப்பிம்பத்தை அனாவசியமாய் சிதைக்க விரும்பவில்லை. எனக்குப்பிடித்திருந்தது. கட்டபொம்மனும் பாரதியும் நினைவிலாடுவதைப்போல காமராஜரையும் இப்படி நினைவுக்குக்கொண்டு வரும் புத்திக்கு விளக்கங்கள் சொல்லி விளங்கவைக்கமுடியாது.

'அசைவம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுப்பு, இன்னக்கி சாப்பிடணுங்குறேன், ரெண்டு முட்டை வாங்கியாரச்சொல்லுப்பு' என்று அவர் சொன்னபோது காமராஜரின் மேல் இன்னும் ஒரு மதிப்பு வந்தது மறக்கமுடியாதது. அந்த உருவம் இன்னும் கன்ணுக்குள் நின்றுகொண்டிருக்கும்போது 'ஊட்டியின் கல்லறை' என் கண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மறக்கவைத்துவிடுமா என்ன?

பி.கு: இன்று அதாவது செப் 20, இளையோருக்கு வழிவிட எண்ணி தனது முதல்வர் பதவியை துறந்தாராம் காமராஜர். ம்ம். ! இவையெல்லாம் இருக்கட்டும், (வெறும் சிலைகலையும் சமாதிகளையுமே கட்டிவிட்டுச்செல்லாமல்) நான் படித்த கல்வி நிலையத்தைக் கட்டியதற்காகவாவது அவரும் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களும் என்றும் எனது நன்றிக்குரியவர்களாயிருப்பர். அவர்களால் இன்று வயிற்றுப்பிழைப்பு நகர்கிறது பாருங்கள்!

அன்பன்,
எம்.கே.

7 comments:

Anonymous said...

Kumar,

Its a nice posting...

Regards,
Christopher

ஜோ/Joe said...

//'காயா இது பழமா நான் கடிச்சிப்பாக்கட்டுமா?' //

குமார்,
என்ன இப்படி வாத்தியார் பாட்டு வரிய கடிச்சு துப்பிட்டீங்க?

"காயா இது பழமா ? கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமா"- னு தானே வரும்!

ஜோ/Joe said...

//மக்கள் மனதிலும் நீண்ட காலம் ஆட்சி செலுத்தியவர்.//

நீங்க உண்மையிலயே வாத்தியார் ரசிகர் தானா? (நான் சிவாஜி ரசிகனானாலும் வாத்தியார் பட பாடல்களுக்கு தீவிர ரசிகன்) .அது என்ன "செலுத்தியவர்" ?"செலுத்துபவர்"-ன்னு இருக்க வேண்டாமோ?

எம்.கே.குமார் said...

மிக்க நன்றி கிறிஸ்டோபர் மற்றும் ஜோ.

ஜோ இருமுறை என்னை மன்னித்துவிடுங்கள். செலுத்தியவர்..செலுத்துபவர் என்றும் இருக்கவேண்டும். உடனே மாற்றிவிடுகிறேன்.

பாடல் பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.
எம்.கே.

துளசி கோபால் said...

ஆமாம் குமார். மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்து, வசதி இல்லாத புள்ளைங்க குறைஞ்சபட்சம் உணவுக்காவது பள்ளிக்கூடம்
போனதுக்கு ஈடா வேற என்ன திட்டத்தைச் சொல்லமுடியும்?

கல்விக் கண்ணை திறந்தது முக்கியமான செயல்.

நல்ல பதிவு.

Anonymous said...

All were dreams!

Some Time They(Kamaraj, M.G.R) will alive now what happend?

Tamil Nadu Needs another one Kamaraj.

எம்.கே.குமார் said...

துளசியக்கா மற்றும் இறைநேசருக்கு எனது நன்றிகள்.

எம்.கே.

Search This Blog