Monday, January 19, 2004

ஒரு நிரபராதியின் வேண்டுதல்..

கதை 1.

லாயருக்குப் படிக்கவேண்டும் என்றிருக்கிற அஞ்சலா காத்தமுத்து, ஜேம்ஸைக் காதலித்து மணம் செய்துகொண்டு அஞ்சலாஜேம்ஸ் ஆகிறார். இருவருக்குமிடையில் பிரச்சனைகள் பெரிதாக ஜேம்ஸைக் கொலைசெய்துவிடுகிறார் (வேண்டுமென்றேயில்லை). தானே அக்கொலையைச்செய்ததாக காத்தமுத்து சொல்ல, போலீஸ் அவரைக்கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்டு காத்தமுத்து உயிர்விடுகிறார். அஞ்சலா மறுபடியும் அஞ்சலா காத்தமுத்தாகி, பி.எச்.டி முடித்துவிட்டு, நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்தே தூக்குத்தண்டனையை தூக்கவேண்டும் என்று அது சம்பந்தமாகப்போராடுகிறார். அதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி சிலரையும் இன்னபிற தூக்குத்தண்டனைக்கைதிகளையும், மற்ற கைதிகளையும் அதிகாரிகளையும் பேட்டி காண்கிறார். அப்படிப் பேட்டி காணும்போது எதிர்பாராவிதமாக ஒரு வழக்கின், தண்டனையின் முக்கிய சாட்சியாகி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, உயிருக்குப்போராடும் வேளையில் நல்லவனான தூக்குத்தண்டனைக் கைதி ஒருவன் அவரைக்காப்பாற்றுகிறான்.

கதை 2.
திரைகடல் தாண்டி திரவியம் தேட சிங்கப்பூருக்குச்செல்கிறான் ஒரு தேனிப்பகுதி கிராமவாசி. நண்பனொருவன் செய்த தவறைத் தான் செய்ததாக ஏற்றுக்கொண்டு தண்டனை பெற்று சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்புகிறான். பத்து லட்சத்தைப் பேங்கில் போட்டுவிட்டு சின்னதாய் வீடு ஒன்றும் அருகில் உள்ள நகரத்தில் வாங்கி விட்டு தனது சொந்த கிராமத்தில், முறுக்கி விட்ட மீசையோடும் கிருதாவோடும் யாருக்கும் அடங்காத காளையாக தனது அப்பத்தாவோடு வாழ்ந்து வருகிறான் அவன்.

சுத்துப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் முதலில் சென்று களத்தில் இறங்கும் ஆளாக அலையும் அவன், ஒரு போட்டியில் தனது கிராமத்து மாட்டையே 'யாரும் அடக்க முடியாது' என்ற சவால் வர, தனது ஊர்ப்பெரியவரான கொத்தாளத்தேவரின் அந்த மாட்டைப்பிடிக்க களம் இறங்குகிறான். கொத்தாளத்தேவரின் அண்ணன் மகளான அன்னலஷ்மி வளர்க்கும் மாடு அது. மாட்டைப்பிடித்து மெதுவாக கொத்தாளத்தேவரின் பகை வட்டத்துக்குள் நுழைகிறான். அப்படியே அன்னலஷ்மியின் காதல் வட்டத்துக்குள்ளும் சண்டியராய்ப்போய் விழுந்து சபலம் கொள்ள, கொத்தாளத்தேவர் யோசிக்கிறார். நல்ல நீர் கிடைக்கும் அவனது கிணற்றையும் வயல்களையும் கணக்குப்போட்ட கொ.தேவர், அப்படியே அவனையும் கணக்குப்பண்ணுகிறார்.

கணக்குப்பண்ணுவது மாப்ளே ஆக்குவதற்காகத்தான் என அவன் நினைக்க, ஆனால் அவனை வைத்து பக்கத்து ஊரின் தனது பரம வைரியான நல்லம்ம நாயக்கரைத்தீர்க்கத்தான் என்பது அவனுக்குத்தெரியவில்லை. திட்டமெல்லாம் சரியாகி, அவனை வைத்தே அத்தனை கொலைகளையும் செய்து (உண்மையில் செய்பவர் கொ.தேவர். மாட்டிக்கொள்வது அவன்.) அவனை மாட்டிவிடுகிறார்.

இதற்கிடையில் சித்தப்பாவின் முகமூடி கிழிந்து பொங்கியெழுந்து அவனோடு செல்லும் அன்னலஷ்மியும் முதலிரவு முடிந்த கையோடு கொ.தேவரால் கொல்லப்பட, விருமாண்டி பொங்கியெழுந்து கொத்தாளத்தேவரின் ஆட்களை வெட்டிக்கொல்கிறான்.

போலீசாரால் பிடித்துச்செல்லப்படும் விருமாண்டி, மொத்தகொலைகளுக்கும் பலிகடாவாக்கப்பட்டு மரணதண்டனையை எதிர்பார்த்துக்காத்திருக்கிறான். அப்போதுதான் முதல் கதையில் சொல்லப்பட்ட அஞ்சலா காத்தமுத்து அவனைச்சந்திக்கிறாள். இருவரும் சேர்ந்து உண்மைகளை எப்படி வெளிக்கொணர்கிறார்கள், எப்படி எதிரிகளைப் பழிவாங்குகிறார்கள் என்பது கிளைமேக்ஸ்.

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்கள், மரணதண்டனை எப்படி எதற்காக விலக்கப்படவேண்டியது என்பது குறித்து செய்திப்படம் போல தனது கருத்துக்களைச்சொல்கிறார்கள் சிலர். காமிரா சிறைச்சாலைக்குள் நுழைந்து ஆங்காங்கு திரும்ப, 'மை நேம் இஸ் பேய்க்காமன். 2000 லே பாஸ் பண்ணி தேனிலெ கொஞ்ச நாள் வேலைபாத்துட்டு இப்போ இங்கே ஜெயிலரா இருக்கேன்' என்றவாறு அறிமுகமாகிறார் சண்முகராஜன். (அறிமுகம்) மிரட்டும் கண்களும் பயமுறுத்தும் தோரணையுடனான முகத்துடன் பேய்க்காமன் கதிகலங்க வைக்கிறான்.

முறுக்கி விடப்பட்ட மீசை, கிருதாவுடன் கைகோர்த்து வாலிப விளையாட்டு ஆடும் விளையாட்டுக்கமல், அப்பத்தா இறக்கும்போது மொட்டைக்கமல், அஞ்சலாவுடம் தனது கதையைச்சொல்லும் சத்யாக்கமல், கூண்டில் இருந்துதாவி கொத்தாளத்தேவரை எட்டிப்பிடிக்கும் தாடிக்கமல், கொலைவெறியோடு பேய்க்காமனைத்தாக்கும் முடிவளர்ந்த தாடிக்கமல் என ஏராளமான கெட்டப்புகள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்பதெல்லாம் எப்போதுமே சொல்லத்தேவையில்லாத விஷயம். ஆனால் அப்பத்தா சாவும்போது மண்ணை அள்ளிபோட்டுக்கொண்டு போடும் ஆட்டம் அசத்துகிறார் மனிதர். மாட்டுக்கொம்பில் சுழன்று விளையாடும் அந்தக்கமலுக்கு ஐம்பது வயது என்று யாராவது சொன்னால் காதைப்பிடித்து திருகலாம். அந்த அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது.

மறக்கமுடியா நடிப்பை அள்ளி வழங்கியிருக்கும் இன்னும் சிலரில் முதன்மையானவர் கொத்தாளத்தேவர். பசுபதி. என்ன எகத்தாளம்! என்ன கோபம்! என்ன வெறி! என்ன அப்பாவித்தனம்! என்ன நரித்தனம்! ஆஹா! கமலின் பிடியில் சிக்கி தன்னுடைய சரக்கைக் கச்சிதமாக வெளியெடுத்திருக்கிறார் பசுபதி.

கதாநாயகியாய் வந்தாலும் தேனி ஏரியாவில் பார்க்கும் ஒரு கிராமத்து தேவதையாக+ கட்டையாக வந்து கலக்குகிறார் அபிராமி. சிணுங்கல்களும் கொஞ்சல்களும் கோபங்களும் சில உண்மைகளை மாட்டைப்போலவே ஒன்றும் தெரியாத விருமாண்டியிடம் தெளிவாகச் சொல்லும்போதும் இப்போவே ரெண்டு பேரும் போயிடலாம் என்னும்போதும் முதலிரவிலும் குளத்துக்குள்ளும் காட்டும் வேகமான மோகத்திலும் தாலியை இன்னொருவன் தொட்டுத்தீண்டி அமங்கலப்படுத்தும்போதும் இரட்டை அர்த்த வசனங்களைக் கமலிடம் கிராமத்துப்பெண்ணாக எதிர்க்கும்போதும் அங்கீகரிக்கும்போதும் கமலின் கைவண்ணம் ஒரு நல்ல நடிகையை அடையாளம் காட்டியிருக்கிறது. வாழ்த்துகள் அபிராமி.

அடுத்ததாய் அஞ்சலா காத்தமுத்து ரோகிணி. ஒரே ஒரு காட்சியில் குளோஸ் அப்பில் வந்து போகும் அவரின் முகம் நமது கண்களைக் கலங்க வைக்கிறது. தெளிவான நடிப்பு.

நல்லம்ம நாயக்கராக நெப்போலியனும் ஜெயில் அதிகாரியாக நாசரும் அப்பத்தாவாக (கமலின் ஆஸ்தான) எஸ் என். லட்சுமியும் கலக்குகிறார்கள். இன்னபிற வில்லன்களும் துணை நடிகர்களும் வேடத்துக்கேற்றவாறு பொருந்துகிறார்கள். ( பொய் சாட்சி சொல்லும் அந்த நபர் நல்ல தேர்வு. )

படத்தின் டாப் 3 யில் முதலில் இயக்குனர் கமல். ஒரே சம்பவத்தை இருவரது பார்வையில் போகவிட்டு இயல்பாக அவற்றைக்கலந்திருப்பதில் மிகத்தெளிவு. தேனிவாடை வசனங்களும் இரட்டை அர்த்த நகைச்சுவை வசனமாகவும் கமலின் பேனா(வும்) முழங்கியிருக்கிறது. பாட்டு வரிகளிலும். படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலையில் படக்கென வந்து மின்கம்பத்தில் உட்கார்ந்து களத்தில் குதிக்கும் கமல் அடுத்த பதினைந்து நிமிடங்களில் தியேட்டரை அலற வைக்கிறார் இயக்குனராக. இவ்வளவு நேர்த்தியாக ஜல்லிக்கட்டை யாரும் காட்டியது இல்லை.

அடுத்தது இளையராஜா. பாட்டைத் தனியாகக்கேட்கும்பொழுது எப்படி இவற்றைக்கதையில் பொருத்தப்போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததை கமல் ஏமாற்றவில்லை. பாட்டு தேனாகத் தித்திக்கிறது. ஜல்லிக்கட்டின் போதும் சரி, கமல் ருத்ரதாண்டவமாய் பழி வாங்கும்போதும் சரி, அன்னலஷ்மி தூக்குப்போடும்போதும் சரி பின்னணி இசையில் மனதுக்குள் திடும் திடுமென்கிறது. கமலுக்கு மிகப்பெரிய பலம் கொடுத்திருப்பவர் இளையராஜா.

மூன்றாவதும் மிக பிரமிக்கத்தக்கதுமானது கேமரா. கேசவ் பிரகாஷ். ரவி.கே.சந்திரனின் உதவியாளராம். கேமிரா ஓடுகிறது. நடக்கிறது. குழந்தையாய்த் தவழ்கிறது. சிங்கமாய் முழங்குகிறது. மாட்டின் கொம்புகளில் சிக்கிச் சுழல்கிறது. ஒன்னை விட பாட்டுக்காட்சியில் முழுநிலவின் பின்னணியில் மிக ரம்மியமாக நகர்கிறது கேமிரா. அந்த ஒரு பாட்டுக்கு மட்டுமே அவருக்கு விருது வழங்கலாம்.

எடிட்டர் கமலுக்குக் கை கொடுத்திருக்கிறார். அவருக்கும் கமலுக்கும் சண்டை ஏதாவ்து கூட வந்திருக்கலாம். நிறைய இடங்களில் வெட்டு தெளிவாகத்தெரிகிறது. ஆனால் அந்த வெட்டும் இல்லை என்றால் இன்னொரு ஹேராம் மாதிரி இருந்திருக்கும். (வழ வழா!) எந்த இடத்திலும் தொய்வில்லாத கட்டிங் நமக்கு நல்லது செய்திருக்கிறது. அலுப்பெதுவுமில்லை. காட்சிகள் அடிக்கடி மாறி படம், அரிவாளும் கத்தியும் காதலும் முத்தமும் கிணறும் தீபமும் காண்டாமணியுமாக அலைவது ஈர்ப்பை அதிகமாக்குகிறது.

கிளைமேக்ஸ் ரொம்ப நேரம். கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனத்தோன்றியது. அபிராமியை டீச்சராகக்காட்ட முனைந்திருப்பது வெட்டிய பகுதியில் போயிருக்கவேண்டும்! நல்லதுதான்.

கொலை செய்யாத விருமாண்டிக்குத்தூக்குத்தண்டனை வேண்டாம். அஞ்சலா அப்பாவுக்கும்.! ஆனால் இனிக்க இனிக்கக் கொலை செய்த கொத்தாளத்தேவருக்கு? விடிய விடிய ராமாயணம் பார்த்து என்காதீர்கள். :)

மரண தண்டனையை தூக்கிவிட்டு வேண்டுமானால் 300, 400 வருடங்கள் சிறைத்தண்டனை தரலாம். எவருடைய பிறந்த நாளுக்கும் கழித்துக்கொள்ளாமல். என்ன செய்வது கமல் சொல்லிவிட்டாரே!

தேவர் மகனை விட இரண்டு மடங்கு வன்முறை, ரொமான்ஸ். ஆனால் நான்கு மடங்கு யோசிக்க வேண்டிய விஷயங்கள் படத்தில். அன்பே சிவ தரத்திலிருந்து குறையாமல் பார்த்துக்கொண்டு விலைபோகச் சில விஷயங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

கமலின் கதையில் ஏகப்பட்ட கதைகள் இருக்கலாம். கரு ஒன்றுதான். "வேண்டாம் மரண தண்டனை."

ஏகப்பட்ட வன்முறைகள் படத்தில். செய்முறை இல்லாமல் செய்யவேண்டாததைத் தெளிவாகச்சொல்ல முடியாது என்றார் கமல் ஒரு பேட்டியில். பரதன் தான் மிகப்பெரிய வன்முறை டயரெக்டராம். கமல் அந்தப்பெயரைத்தட்டிப்பறித்துவிட்டார்.

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog