Saturday, October 02, 2004

ஒரு ஷாம்பும் ஒரு நிகழ்வும்

சென்ற வாரத்தில் ஜெயலட்சுமி எத்தனை முறை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். (தெரியவேண்டுமல்லவா?! சரித்திரத்தில் இடம் பிடிக்கும் முக்கிய நிகழ்வு அல்லவா அது?) ஜெயலட்சுமி கமகமவென்று ஷாம்பு போட்டு குளித்து கூந்தல், காற்றில் மோகனராகம் பாட பளிச்சென்று காட்டன் சேலையில் வந்து விரிந்த இதழ்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறங்கிய செய்தியை படித்தபோதும் பார்த்தபோதும் எரிச்சல் அதிகமாக, அட! என்னமா (இன்னும்) இருக்காய்யா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் சக அறைவாசிகள். அதெல்லாம் இன்றைய இன்றுக்கு நிரம்ப முக்கியம் பாருங்கள்! இனி என்ன ஷாம்பூ போட்டார், எப்போது குளித்தார், எத்தனை முறை குளித்தார் என்றெல்லாம் விளம்பரம் வரலாம். சினிமாவில் நடிப்பீர்களா என்று வேறு அந்த மாதுவிடம் கேட்கிறார்கள்!

அதெல்லாம் பற்றி நான் சொல்ல வரவில்லை.

ராஜா ராமண்ணா என்றொருவர் கடந்த வாரம் இறந்து போனார் அது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே? அந்த ராஜா ராமண்ணா யார் தெரியுமா?

1925 ல் கர்நாடகாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று லண்டன் சென்று ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்து (கவனிக்கவும், மீண்டும் இந்தியாவிற்கு வந்து) டாக்டர் பாபா ஆராய்ச்சிக்கூடத்தில் இணைந்தவர்.

1965 முதல் 1968 வரை இந்திய அணுகுண்டு வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

1974ல் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது (இந்திராவின் ஆட்சிக்காலத்தில்) முக்கிய பொறுப்பில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

1990களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரத முதல் குடிமகனின் ஆசான் வேறு!

அப்படிப்பட்டவர் இறந்து போன செய்தி ஜெயலட்சுமியின் கூந்தல் வாசத்தில் தடம் பிறழ்ந்து போகிறது! என்னே மரபு இது! கேவலம்!

எம்.கே.

2 comments:

அன்பு said...

அண்ணே... இங்கயே எழுதவந்த ராஜாராமண்ணா விஷயத்தை ஷாம்பு வாசம் தூக்கிச்சாப்பிட்டுடுச்சுன்னா பாத்துக்குங்களேன்...!

எம்.கே.குமார் said...

வாங்க அன்புத்தம்பி, அதுலே பாருங்க, இப்போலாம் கோயிலுக்கு விக்கிற ஊதுபத்தில கூட சிம்ரன் படத்தை போட்டு விக்கவேண்டியிருக்கு. ராத்திரி ·புல்லா விடிய விடிய கொசுவ வெரட்டும்ன்னு சொல்லி மும்தாஜ் படத்தைப் போட வேண்டியிருக்கு. (மும்தாஜ்க்கும் கொசுவுக்கும் என்ன சம்பந்தம்?!) இதெல்லாம் ஒரு வெளம்பரம்தான் தம்பி! நாங்களெல்லாம் இனிப்பத்தடவி சரக்கெ விக்கிற ஆளுக! அதான்! :)

எம்.கே.

Search This Blog