Thursday, October 21, 2004

தவறு கண்ணா தவறு!

"சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போல் ஒரு பொண்டாட்டி. வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட!" இப்படி ஆரம்பிக்கும் ஒரு விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி பார்க்க நேர்ந்திருக்கும். பார்த்திருக்கிறீர்களா? முதல் வரிப்பாட்டுக்குள் தூங்கும் கணவனுடனான (அழகான) அவளின் புகைப்படத்தைக் காட்டி, சேலையை பின்னிழுத்துச் செருகி 'கை வலிக்குது கை வலிக்குது மாமா' ரேஞ்சில் அவள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதையும் காட்டுவார்கள். அப்போதுதான் வருவான் 'வடுகப்பட்டி ராஜா!' (வைர முத்து இல்லப்பா. நிழல்கள் சந்திரசேகர் மாதிரி!) ஓஹோ...வென்று பின்னணி இசையோடு ஹிப்பித் தலையுடன் அழகான வேலைப்பாடுள்ள சைக்கிளுடன்! இரண்டாம் வரிப்பாட்டுக்குள், கிழவர் கடையிலே 'மிண்ட்-ஓ-பிரஷ்' வாங்கித்தின்றுவிட்டு பாட்டு முடியும்போது சைக்கிளில் அவளையும் கூட்டிகொண்டு போய்விடுவான். இருவரும் போவதைத் தன் கண்ணாடியைத் துடைத்து மாட்டிப் பார்த்து விழிப்பார் முதியவர்.

நான் முதலில் அவ்விளம்பரத்தைக் காண நேர்ந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். கேட்சிங் வாசகங்களோடும் இசையோடும் வந்த அவ்விளம்பரத்தின் சில விஷயங்கள் பிடித்திருந்தாலும் விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட செய்தி சரிதானா? உகந்ததுதானா எனவும் யோசித்தேன். என்ன இருந்தாலும் இந்தியாவில் இப்படியெல்லாம் காண்பிப்பது சரியில்லை எனத்தான் நினைத்துக்கொண்டேன். விளம்பரத்தைத் தயாரித்தவர்களின் எண்ணப்படி எனது நிலையும் இப்போது எழுதும் நிலையும் வெற்றியின் அறிகுறியாகவே இருக்கலாம். ஆனால் விளம்பரத்தின் கண்ணோட்டம் தவறானது தானே! (ஏம்ப்பா...இப்போ வாற சீரியல்லாம் பாக்குறியா? அதை விடவா இதுல மோசமா காமிக்கிறாங்கன்னு என் மனசாட்சி சொல்லும். கண்டுக்காதீங்க!)

ஒன்றுமில்லை. அவ்விளம்பரத்தில் காண்பிக்கும் அத்திருமண புகைப்படத்தை மட்டும் காண்பிக்காமல் இருந்தால் அவளுடைய கணவன், அப்பாவாகவும் இருக்கலாம் என்ற நிலை இருக்குமல்லவா? கொஞ்சம் யோசிக்கிற மாதிரியே விடலாமே! விளம்பர நிர்வாகிகளே இப்படியும் கொஞ்சம் யோசிங்க!
அதிருக்கட்டும், நீங்க என்ன யோசிக்கிறீங்க? சொல்லுங்க!
எம்.கே.

3 comments:

யோசிப்பவர் said...

அட! நீங்களும் என்னை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களே!!(கருத்தை சொன்னேம்பா). ஆனால் நீங்கள் இதை இன்னமும் கடுமையாக கண்டித்திருக்கலாம். நான் இது மாதிரி விஷயங்களுக்காக தனியா ஒரு வலைப் பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?

அன்பு said...

சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போல பொண்டாட்டி. வந்தான் ஹீரோ பாட்டோட வருகாட்டி... அதுக்கப்புறம் என்னப்பா? என்று நேற்றிரவு எனது மகள் கேட்டபோதுதான் தெரிந்தது, அந்த விளம்பரம் எவ்வளவு கேட்சி-யென்று?

Anonymous said...

சொல்பவரே, வணக்கம். வாங்க. நன்னா பேஷா ஆரம்பிங்க. காசா பணமா? இன்னும் கொஞ்சம் கடுமையா எழுதியிருக்கலாமா? எழுதலாம். நாட்டுல இதைவிட என்னென்னமோ நடக்குது. அப்படி இல்லாத ஒரு சீரியலாவது சொல்லுங்க பாக்கலாம். :(

ஆனாலும் என்னைப் பத்தி நன்னா தெரிஞ்சு வெச்சிருக்கேள்! நூற்றுக்கு நூறு படம் இன்னும்பாக்கலை. பாத்துட்டு பதில் சொல்லலாமா? :)

நன்றி அன்பு. எனக்கும் அந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சிருக்கு. :)

எம்.கே.

Search This Blog