Tuesday, January 25, 2005

டாக்டராய் நடித்தவர் இப்போது டாக்டர்!

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இனி தனக்கு பெருமை மாலை போட்டுக்கொள்ளலாம். ஒரு நல்ல கலைஞனுக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. ஜேப்பியாரின் கையில் துண்டு போட்டு விலை பேசப்போகிறவர்கள் இருப்பார்கள்; இருக்கட்டும். அது நமக்கு அவசியமில்லை. இது மிகவும் நல்ல செய்தி.

'ஒரு மிகச்சிறந்த நடிகர், நல்ல படங்களின் தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர் மற்றும் நல்ல எழுத்தாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு மனிதனுக்கு ஏன் டாக்டர் (ஹானர்ஸ்) பட்டம் வழங்கக்கூடாது' என்று அண்மையில் ஒரு மேடையில் வைரமுத்து கேட்டாராம். வைரமுத்து எதை நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவரது வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.

'வாழும் சினிமா அகராதி' கமலுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது. பட்டம் வந்த வழி சாதாரணமாய் இருக்கலாம். பெரிதாய் பேசப்படாததாய் இருக்கலாம். (இதன்மூலம் அது அதற்கு கிடைக்கட்டும்!) ஆனால் பட்டம் பெற்றவர் சகல(கலா) மரியாதைக்கும் உரியவர். திறமையானவர். இன்னும் பலப்பல ஆண்டுகளுக்குப்பின்னும் தமிழ் சினிமா பற்றி யார் பேசினாலும் அதில் 'கமலாயனம்' இல்லாமல் இருக்கமுடியாது என்பது என் கணிப்பு.

'தேவர் மகனில்' ஒரு காட்சி.

"இன்னக்கி நா மரம் வெப்பேன், அது பெருசா வளரும், காய்க்கிம், கனியும். ஆனா அத சாப்புட நா இருக்க மாட்டேம்பு, நீங்க சாப்பீடுவீய, உங்க மகன் சாப்பிடுவாக! அவுங்க மகன் சாப்பிடுவாக! வழி வழியா வாறவக எல்லாரும் சாப்பிடுவாக. நா சாப்பிடலையேங்குறதுக்காக நா மரம் வெக்காமெ போக முடியுமா? வருத்தப்படமுடியுமா? எல்லாம் அப்புடித்தாம்பு. ஒரே நாளையில எல்லாம் நடக்கணுமுன்னு பாத்தா வேலைக்கு ஆகாதுப்பு. அப்படித்தானே வந்துச்சி, அப்படித்தாம்பு போகணும்! படிப்படியாத்தாம்பு எல்லாம் மாறணும்!"

இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளுக்கு இதைவிட யாரும் நல்ல முடிவாய்ச் சொல்ல முடியாது. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருப்பவன் வேண்டுமானால் எல்லாம் உடனே நடக்கவேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் மேல்தட்டிலிருப்பவன் என்ன யோசிப்பான்? இப்பிரச்சனை எப்படித் தீரும்? எப்படித் தீர்க்கமுடியும்?

"ஆமாம், சந்திரபோஸ் எங்க சதம் அடிப்பாரு? அவரு வெள்ளக்காரனைத்தான் அடிப்பாரு, அதுக்குத்தான் அவரு லாயக்கு. பாவம்!"

'விருமாண்டி'யில், ஒரு மறந்துபோனவனை ஞாபகப்படுத்தும் முயற்சி இது. ஒரு கிராமத்து பெண்ணுக்கு கிடைத்த சச்சினின் பிரபல்யம் ஏன் சந்திரபோஸ¤க்கு கிடைக்கவில்லை என்பதை ஒவ்வொரு இந்தியனையும் எண்ணிப்பார்க்கவைக்கும் தந்திரம் இது.

"நீ இன்னைக்கி ஜெயிச்சிருக்கலாம் தம்பி. தோத்தாலும் நா போயி நைட்டு நிம்மதியா தூங்கிடுவேன். ஆனா பொய் சொல்லி ஜெயிச்சிட்டு நீ போயி நிம்மதியா தூங்க முடியுமா?"

இதைவிட ஏது கடவுள்? இதைவிட ஒருவனை மனிதனாக்க என்ன பெரிதாய் எழுதவேண்டும்? மீண்டும் 'விருமாண்டி'யிலிருந்து!

இந்த வசனங்களை எழுதியவர் திரு. கமல்ஹாசன். இப்படி ஒவ்வொரு படத்திலிருந்தும் எத்தனையோ வசனங்களை எடுத்து மனித மனங்களுக்கு உரமேற்ற முடியும் கமல் படங்களிலிருந்து. 'இன்றும் நேற்றும் நாளையும்' எப்போதும் பளிச்சென்று துளிர்விடும் எழுத்து அவருடையது. வாழ்க டாக்டர் கமல் அவர்கள்.

"படித்தவர்களெல்லாம் சேர்ந்து இப்பாமரனை கௌரவிக்கிறார்கள். அதற்காக நான் மகிழ்கிறேன்" என்கிறார் கமல் மிக அடக்கமாக!

'இதப்பத்தியும் உம்மைப்பத்தியும் அய்யன் எங்களுக்கு எப்பவோ சொல்லிட்டுப்போயிட்டான்வெ. நீரு மனீஷாவைப் பாரும்! சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பும், எல்லாரும் நல்லா சிரிக்கிற (ரசிக்கிற) மாதிரி'ன்னு சொல்லுறாரு நம்ம சித்தப்பு! கமல் சார் கண்டுக்குங்க!

பி.கு: வலைப்பதிகளில் எங்கும் இச்செய்தி குறித்து பதிவுகளைக் கண்டது போல எனக்குத் தெரியவில்லை. என்ன காரணம்?

எம்.கே.குமார்.



8 comments:

Arun Vaidyanathan said...

http://arunviews.blogspot.com/2005/01/blog-post_17.html

எம்.கே.குமார் said...

மறுமொழிக்கு நன்றி அருண் & கதிரவன்.

அன்பின் கதிரவன்,

சமுதாய கடலில் ஒரு தனித் தீவாய் எங்கோ மிதந்து வரும் கலப்பு காதல் மணங்களும் சரி, 'பொருளாதார ரீதியாக உயர்ந்த' தாழ்ந்தோர்களும் உயர்ந்தோர்களும் புரிந்துகொள்ளும் சமத்துவ மணங்களும் சரி, கலப்பு மணம் புரிந்த பெற்றோர்கள் தங்களது வாரிசுகளுக்கு ஏற்படுத்தும் கலப்பு (அ) கலப்பற்ற மணங்களும் சரி எல்லாமே ஜாதி பிரச்சனை தீர்வதற்கு இன்றைய நிலையில் சிறு செடிதான். அது ஆரோக்கியமாக செழித்து வளர்ந்து காய்த்து கனிந்தால் மட்டுமே ஜாதிப் பிரச்சனை தீரும். அதுவரை உடனடித் தீர்வை ஏற்படுத்துவது மிகவும் கடினம். (இரு ஜாதி பிரச்சனை மட்டும் இல்லை, ஒரு ஜாதியில் ஏற்படும் வெட்டு குத்து கூட!)

இதைத்தான் கமல் அந்த வசனத்தில் சொல்லுகிறார் என்று நான் புரிந்துகொன்டிருக்கிறேன். (எனக்கும் அதே கருத்துதான்!) அது தவறு, அப்படி பொருள் தரும்படி கமல் சொல்லவில்லை என்று நீங்கள் சொன்னால் எனது புரிதலில்தான் தவறு இருக்கும். எனினும் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

எம்.கே.

மாலன் said...

நானறிந்தவரை கமலஹாசனை சாதீய எண்ணம் கொண்டவர் எனச் சொல்ல இயலாது. அவரது திரைப்படத்திலும் சரி, அல்லது அவரது அலுவலகத்திலும் சரி சாதி அடிப்படையில் வாய்ப்புக் கொடுத்ததில்லை. சாதிய அடையாளங்களை அணிந்தும் பார்த்ததில்லை. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததும் ஒரு சிறுபான்மை மதக் கல்லூரி நிர்வாகம்தான். அவர் Letter Headல் அச்சிட்டுக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்துள்ள ஒரு வாசகம்: "யாதும் ஊரே யாவரும் கேளீர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா"

அவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்ட நேரம் அவர் எனக்கு ஒரு மடல் அனுப்பியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறேன்: அவரது அடக்க உணர்வை அது உங்களுக்கு சொல்லலாம்:

"அன்பு திரு. மாலன் அவர்களுக்கு,
திரவியம் தேட நாடோடினாலும், என் நாட்டவர், கொஞ்சம் அன்பை எனக்காக வைத்திருப்பர்.
மாட்டுக்கும் ஒரு பிடி பொங்கலை அளிப்பது போல
நானறிவேன்

வடநாட்டில் 'மும்பை xpress' அதி துரிதமாக நிறைவு பெற்றுக் கொண்டிருப்பதால் எனது புது வருடமும் பொங்கலும உங்கள் வாழ்த்துக்களுடன் விந்திய மலைக்கு இப்புறம் நிகழும். உங்களுக்கு எனதன்பான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜனவ்ரி17, 2005ல் சத்யபாமா பல்கலைக் கழகம் அளிக்கும் டாக்டர் பட்டம் பெற சென்னை வருவேன்.அன்று உங்களை நேரில் காணும் வாய்ப்பிருக்கும் என்று நம்புகிறேன். வந்திருந்து வாழ்த்துக்கள். மீண்டும் நினைவுபடுத்த ஒரு அழைப்பிதழும் வரும்.
அன்புடன்
கமல்ஹாசன் (கையொப்பம்)

இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகும் அவர் தன்னை மாடுகளோடுதான் ஒப்பிட்டுக் கொள்கிறார்.

அன்புடன்
மாலன்

எம்.கே.குமார் said...

வணக்கம் மாலன் சார்.

இப்பதிவிற்கு தங்களது பின்னூட்டம் நான் எதிர்பாராதது. சந்தோசபடுத்தக்கூடியது. மிக்க நன்றி.

ஒரு வாழ்த்து கடிதத்தில் கூட கமலின் தமிழ் என்னை இப்போதும் ஆச்சரியப்பட வைக்கிறது. நன்றி. கமலிடம் சாதீய உணர்வுகளும் அடையாளங்களும் இல்லை என்பதை இப்போது தங்களின் மூலமும் அறிந்ததில் மகிழ்ச்சி. அவரிடம் இருக்காது என்றுதான் நானும் நினைத்திருந்தேன். வாழ்க்கையைப் புரிந்துகொன்டவனுக்கு இதெல்லாம் அற்பம்! கமல் அந்த வகையில் நிறைய புரிந்துகொண்டிருப்பவர் தெரிந்துகொண்டிருப்பவர்.

நல்ல உள்ளம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

(எனது காதல் கலப்பு மணத்திற்கு அவரைத்தான் தலைமை தாங்க அழைக்கலாம் என்றிருக்கிறேன். ஏற்கனவே நான் அவருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதிலில்லை. தலைவர் பிஸியான ஆளாச்சே!)

தங்களின் பதிலுக்கும் அன்புக்கும் நனறி.

எம்.கே.குமார்.

எம்.கே.குமார் said...

அன்பு கதிரவன்,
வாங்க வாங்க.

உங்க மூலம் எனக்கு இப்படியாவது ஒரு நல்லது நடந்தால் சரி. :-) (அது என்னன்னு போன பதிலைப் படிச்சிருந்தா உங்களுக்குத் தெரிந்திருக்கும்!)

அய்யா, எனக்குத் தெரிந்த ஒருவன் இருக்கிறான். இடைசாதி அவன். அதாவது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடைப்பட்டவன். (எனினும் தாழ்ந்த சாதிக்கு அவன் உயர்ந்த சாதிதானே! ஓகே, உங்கள் மனது சமாதானமடையட்டும்! :-)}

சரி நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். அவன் வசிக்கும் ஊரில் ஒரு உயர்ந்த ஜாதி குடும்பம். தலைமுறை தலைமுறையாய் வாழும் குடும்பம். அவன் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தில் அந்த வீட்டுக்குள்ளே சென்று பேச நினைபதெல்லாம் பெரிய அபச்சாரம்! சான்சே இல்லை!

இதோ இன்று அவனும் உள்ளே செல்கிறான், அவர்களோடு அமர்ந்து சாப்பிடுகிறான். எல்லாவற்றைப்பற்றியும் அவர்களோடு பேசுகிறான். நந்தியாவட்டைச் செடியை ரசிக்க கற்றுக்கொண்டிருக்கிறான். எப்படிய்யயா இதெல்லாம் வந்தது? இது ஒரு மாற்றமில்லையா? உயர்ந்த ஜாதிக்கும் தாழ்ந்த ஜாதிக்கும் இடையிலான உறவின் முறையில் வந்த மாற்றம் அல்லவா!

இனி இரண்டாவதைப் பார்ப்போம்! 'அவன்' சாதியை விட தாழ்ந்த சாதியினரை ஊருக்குள் (வயதால் எவ்வளவு பெரிய ஆளானாலும்) டேய், வாடா, போடா, என்னடா என்றுதான் அழைப்பது வழக்கம். வயதானவர்களை 'அவன்' சார்ந்த சிறுவர்கள் கூட கை நீட்டி அடிப்பதெல்லாம் நடக்கும்! அவர்கள் வீடு சார்ந்த பகுதிகளுக்குள் போவது பெரிய அவமானமாகக் கருதப்படும். இப்போது?

இதோ, அவன் அவர்களை மரியாதையொடு நடத்துகிறான். வாங்க போங்க என்று மரியாதையோடு பேசுகிறான். கல்யாண வீட்டில் ஒரே இருக்கையில் அமர்ந்து சாப்பிட வழி செய்கிறான். அவர்கள் சாப்பிட்ட இலையை இப்போது அவர்களே எடுப்பதில்லை. அவர்களின் குழந்தைகள் படிஉப்பதற்கு அவனால் இயன்ற உதவி செய்கிறான். வழிகளைச் சொல்கிறான். இதுவ்ம் ஒரு தாழ்ந்த சாதிக்கும் உயர்ந்த சாதிக்கும் வந்த மாற்றம். இதனையும் கவனத்தில் கொள்ளூங்கள்.

ஆக, இரண்டு முறைகளிலும் மாற்றம் வந்திருப்பது உண்மை! இதில் பிரச்சனை எப்போது யாரால் வருகிறது தெரியுமா, 'அதெல்லாம்' எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உடனடியாக எல்லாவற்றிற்கும் ஆசைப்படும் சிலரால் வருவதுதான். 'அவன்' கூட அவனைவிட உயர்ந்த ஜாதியினரிடையே இப்படி ஆசைப்பட்டால் எதுவும் நடக்காது. மனித உறவுகளிடையே மனச்சஞ்சலமும் அகங்கார கோபங்களும் பிடிவாதங்களும் பழிவாங்கலுமே நிலைத்து நிற்கும். வெட்டுக்குத்தாய் முடியும்!

ஆக, ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாய் காரியத்தில் இறங்குபவர்களால் இரண்டு ஊரில் அல்லது இனத்தில் பத்து கொலை நடக்கும்! அதுதான் இன்று ஜாதித் தலைவர்களால் நடந்துகொன்டிருக்கிறது. சக மனிதனை நேசியுங்கள் என்ற ஒன்றை மட்டும் எல்லோரும் உணர்ந்தால் போதும். அதற்கு ஜாதியின் பெயரால் தலைவர்கள் இருக்கவேண்டியது அவசியமில்லை. அல்லது கொஞ்சம் படிக்க வைத்தால் போதும்! (இதைத்தான் கமல் தேவர் மகனில் கிளைமேக்ஸாக சொல்லியிருப்பார்! இப்போது நான் சொல்லிய 'அவன்' சார்ந்த மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்!)

ஆக யாரும் இங்கே பழமையின் பலனை ரசித்து அனுபவித்து மாற்றத்தை விரும்பாமல் இல்லை!

100 சதவீதம் இல்லாவிட்டாலும் கலப்புத்திருமணங்கள் அவற்றைக் கொஞ்சமாவது சாதிக்கும் என்று நான் நம்புகிறேன்!

இயற்கை எல்லாவற்றிலும் சமநிலை வைத்திருகிறது. அதை அதுவே மெதுவாய் அழகாய் கொன்டு வரும்! உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டும் அமைதியாயிஉர்ந்து அதனைப் புரிந்துகொன்டால் போதும்!

அதுசரி, பழமையின் பலனை வெறுத்து உடனடி மாற்றம் வேன்டும் என்று விரும்பிகிறீர்கள். ஆசையில் தவறில்லை. அதை எப்படிச் செய்யமுடியும் என்று கொஞ்சம் சொல்லுங்கள். என்னாலும் அது செய்யப்படலாம் அல்லவா? நானும் அதைத் தெரிந்துகொள்கிறேனே!

நல்ல விஷயங்களை யார் சொன்னால் என்ன? செய்தால் என்ன? ஒன்றும் தவறில்லை!

எம்.கே.குமார்

எம்.கே.குமார் said...

போன பதிலில் இணைக்கவேண்டிய ஒன்று மறந்து போய் விட்டது. ஊரெல்லாம் பிராமணர்களே என்று ஆன பின் அங்கே ஜாதிப்பிரச்சனை எப்படியய்யா வரும்? செட்டியார்-சக்கிலியன் மகனும் தேவர்- பள்ளர் மகளும் திருமணம் செய்துகொண்டு அவர்களது மகனுக்கு பிராமின் வீட்டில் பெண் எடுத்தால் எல்லாம் உயர்ந்த ஜாதிக்கு தானே போகிறது என்கிறீர்கள்! தவறு. உலகம் சமநிலையாகிறது என்று அர்த்தம். எல்லாம் எல்லாவற்றோடும் கலந்துவிட்டது என்று அர்த்தம். பிராமணர்களும் தனித்து உயர்ஜாதியாய் விடப்படவில்லை என்று அர்த்தம்.

இல்லை, அப்படியெல்லாம் இல்லாமல் இன்னும் பிராமின் வீட்டுக்குத்தான் பெண் கேட்கப் போகிறார்கள் என்றால் என்ன காரணம் என்று யோசியுங்கள். எப்படி பணம் சம்பாதிப்பது என்றோ எப்படி பெண்களை அழகாய் பெறுவது என்றோ எப்படி கர்நாடக சங்கீதம் பாடவைப்பது என்றோ எப்படி பெண்களை சுதந்திரமாய் நடத்துவது என்றோ அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதனை எல்லா இடத்திலும் நிரப்புங்கள்!

அப்புறமும் எதற்காக அங்கு அவர்கள் போகிறார்கள் என்று பார்ப்போம்! இதைவிட வேறு காரணங்களும் இருக்கலாமில்லையா?

நல்ல குணங்களும் நல்ல வாழ்க்கை முறைகளும் எந்த ஜாதியில் இருந்தாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவோம். அப்புறம் எப்படி பிரிவுகள் வரும்?

பி.கு: எனக்குத் தெரிந்து ஜாதிப்பிரச்சனைக்கு முதல் காரணம் என்ன தெரியுமா? வறுமையும் அறியாமையும் தான்! இரண்டு கோடீஸ்வரர்கள் ஜாதிகளை மறந்து எளிதாய் திருமணம் செய்துகொள்ளமுடியும்; கொள்கிறார்கள்! இரண்டு படித்தவர்கள் எல்லாவற்றையும் மறந்து திருமணம் நடத்திக்கொள்கிறார்கள். இடையில் இருக்கிறான் பார்த்தீர்களா? அவன் பாடுதான் திண்டாட்டம். வறுமைக்கும் அறியாமைக்கும் அடிமையாகி தன்மானம் என்பதே அப்படி வாழ்வதுதான் என்று தனக்குத்தானே அவன் முடிவு செய்துகொள்கிறான். அவையே எல்லாவ்ற்றிற்கும் மூல காரணம் என்றறியாமல்!

யப்பா பாரதி! வா! பணத்தோடு வா!

வாழ்க வளமுடன்!
எம்.கே.குமார்.

எம்.கே.குமார் said...

ரொம்ப நன்றி கதிரவன்!

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே?!

எம்.கே.குமார்

மாலன் said...

அன்புள்ள கதிரவன்,
உங்கள் விமர்சனம் கமலைப் பற்றியது என்ற நினைப்பில், தன்னைப் பற்றி விளக்கமளிக்க அரங்கில் இல்லாத ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில். அவரைப் பற்றி நானறிந்ததை அரங்கில் வைக்க வேண்டும் என்ற உணர்வில் அந்தப் பின்னூட்டத்தை எழுதினேன்.

குமார் தன்னுடைய விளக்கத்தை எழுதிவிட்ட பின் அதைக் குறித்து மேலும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன்.

என்னைப் பொறுத்தவரை உரிமை மறுக்கப்பட்டவர்கள் யாராயினும் ( பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், மொழி/ மதச் சிறுபான்மையினர்) அவர்கள் எழுந்து வந்து தங்கள் உரிமைகளை அடைய முற்பட வேண்டும் என நினைப்பவன்.

சாதி என்ற அடையாளங்களைத் துறப்பது சாதி சார்ந்த நினைப்புக்களைத் துறப்பதற்கு முதல் படி.
அன்புடன்,
மாலன்

Search This Blog