Wednesday, January 12, 2005

'காதல்' - ஒரு காவியம்.

எதேச்சையாக பார்க்க நேரிடும் ஒருசில நிமிடங்களில் பறந்துபோகும் பட்டாம்பூச்சியின் நிழல் போல படக்கென்று வந்து, பறந்து போகும், சில உள்ளம் கொள்ளும் பதிவுகள். ஏதோ ஒரு காய்கறி (முட்டைக்கோஸ் என நினைக்கிறேன்) சமையலுக்காய் நறுக்கிக்கொண்டிருந்த நேரம் செல்பேசி அழைக்க, அதை எடுப்பதற்காக என் அறைக்கு வந்தேன். ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் சன் டிவியின் 'மறுநாளைய திரைவிமர்சன'த்திற்காய் இப்படத்திலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன. முதல் முறை பார்த்தபோது பட்டாம்பூச்சியின் நிழல் கண்களில் நின்று போனது. எல்லா காட்சிகளையும் பார்த்துவிட்டுத்தான் முட்டைக்கோஸ¤க்கு போனேன்.

மதுரையின் பிஸியான தெரு ஒன்றில் மெக்கானிக்காக இருக்கிறான் ஹீரோ. மூன்று முறை அவனை தவறுதலாக விபத்திற்குள்ளாக்குகிறாள் ஹீரோயின். அதை அவள் ஹாஸ்யமாக எடுத்துக்கொண்டுவிட்டுப்போக ஹீரோவுக்கு எரிச்சலாகிறது. மோதுகிறான் அவளோடு. மோதல் காதலாகிறது. பிளஸ் டு படிக்கும் அப்பெண் தான் 'பெண்மையடைவது உணரும் கணம்' அம்மோதல் காதலாகிறது. பிறகென்ன? கவிதையாக எடுக்கப்பட்டிருக்கின்றன அக்காட்சிகள்.

செல்வம் கொழிக்கும் பிராந்திக்கடைக்காரரின் ஒரே மகள் தான் ஹீரோயின். வறுமையை போக்க பழனிக்கு பாதயாத்திரை போகும் தாயின் மகன் ஹீரோ. காதல் எப்படி ஜெயிக்கும்? வீட்டிற்கு இவையெல்லாம் தெரியும் முன்னே நாயகிக்கு நிச்சயமாகும் திருமணத்தைத் தவிர்க்க நாயகனும் நாயகியும் மதுரையிலிருந்து வீடியோ கோச் பஸ்ஸில் சென்னைக்கு வருகிறார்கள் வீடியோ பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஆரம்பிக்க! வாழ்க்கை ஒன்றும் வீடியோ படம் அல்லவே? சென்னையில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் யார்? அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? காதல் ஜெயிக்கிறதா என்பதுதான் படம்.

நிஜங்களைக் காட்சிகளாகக் கொட்டி கவிதையாய்ப் படம் எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க யதார்த்தம். படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும்பொழுதே தாலாட்டுடன் ஆரம்பிக்கிறது படம். மதுரை நகர் வீதிகளையும் மனிதர்களையும் சிங்கப்பூரிலிருந்து பார்க்கும் பொழுது சில கணங்களில் அதிர்ச்சியும் பல கணங்களில் சந்தோசத்தையும் உணர முடிந்தது.

முகமெல்லாம் அம்மை போட்டதன் தழும்பாய் பார்க்கும் கணத்தில் பயமுறுத்தி கொஞ்சம் நேரம் மென்மை காட்டி பிறகு சுயரூபம் காட்டி 'கேரக்டர்க்கு' உயிரூற்றுகிறார் நாயகியின் அப்பா. உள்ளத்தின் கொடூரத்தை 'ஒரு கையில்' மறைத்து மென்மை பேசி கண்கள் வழி சாதிய அதிகாரத்தின் வாழ்க்கை காட்டுகிறார் அவரது தம்பி நாயகியின் சித்தப்பா. இருவரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டு 'மெட்டி ஒலி' பார்த்தாலும் அடங்குவதற்கு அடங்கி எப்போதும் புலம்பிக்கொண்டிருக்கும் மாமியார்க் கிழவியை அதட்டி குடும்பத்தை நடத்துகிறார்கள் அவர்களின் மனைவியர். பிராந்திக்கடையைத் தொழிலாகக் கொண்டவர்களின் போக்கு அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இக்குடும்பத்திலிருந்து அதுவும் பணபலமும் சாதீய பலமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் ஒற்றை மகளாய் ஒரு பெண் இருந்தால் அவருடைய செல்வாக்கு பற்றிச் சொல்லவா வேண்டும்? ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அன்பைக்கொட்டி வளர்க்கிறார்கள். பேத்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதை அவள் அணிந்து வரும் செருப்பைத் தடவிக்கண்டுபிடித்து புலம்பும் கிழவிக்கு நிகரான யதார்த்த மனிதர்களும் காட்சிகளும் ஏராளம். இவர்களின் மீது தாராள அன்பு கொண்டிருந்தாலும் நாயகி பார்த்த கணத்தில் உயிருக்குள் கலந்துகொள்கிறான் அழுக்குச்சட்டையும் கிரீஸ் கலந்த கன்னமுமாய் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு பைக் ஓட்டும் சாதாரணமாய் தெருக்களில் நாம் பார்க்கும் ஒரு மெக்கானிக் பையன். பரத்துக்கு நமது இருக்கையிலிருந்து எழுந்து வந்து கை கொடுக்கலாம். அவ்வளவு இயல்பான நடிப்பு. நாயகி ஜிகிர்தண்டா கேட்க அவளது அப்பாவோடு வரும் நேரம் வியர்த்து விறுவிறுத்துப்போனவனாய் பின்வாங்குவது மிகவும் எதார்த்தம். நம்மிலும் 'பலபேர் பின்வாங்கியிருப்பார்கள்.'

நாயகி சந்தியாவுக்கு இது முதல் படமாம். கையில் சூடம் கொழுத்திப்போட்டாலும் நம்ப முடியாது. காட்சிகளின் வழி கரைந்து போகிறாள். உருகிப்போகிறாள். நிஜமாய் ஒரு பதின்ம வயதுப்பெண்ணையும் அவளின் விபரீதமறியா 'ஒரே சிந்தனை' கொண்ட காதலால் ஆன வாழ்க்கையையும் கண்முன்னே காணமுடிகிறது. வரும் அத்தனை காட்சிகளிலும் நிஜமாய் வாழ்ந்துவிட்டு அழுகிறாள். காதலின், காதலனின் முடிவைப் பார்த்து அவள் கண்ணீர் விட்டுக் கதறும் தருணங்கள் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்தானா என்பதை யோசிக்க வைக்கிறன.

மூன்றாவது இடத்திலிருப்பவன் கரட்டாண்டியாய் வரும் (கோபால கிருஷ்ணன்?!) மெக்கானிக் செட் எடுபிடி பையன். அச்சு அசலாய் அதே மாதிரிப் பையன்களை நாம் காணமுடிவதால் இவனும் நடிப்பதாகவே தெரியவில்லை. மதுரையில் ஏழாம் வகுப்பு படிக்கிறானாம். மதுரைப்பாஷை அப்படியே ஓடுகிறது.

நாயகனின் அம்மா, ஜோசப்பாக வரும் நண்பன் சுகுமார் (வடிவேலு போன்றிருப்பவர்), அந்த மேன்சனின் இனிமையான வித்தியாசமான சில மனிதர்கள், மற்றும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்குள் நிற்கின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் மனம் நிறைந்த பாராட்டுகளுக்குரியவர். ஒரு நிஜ வாழ்வினை காட்சி, இசை, எடிட்டிங் என முழுமை கொஞ்சும் அழகான எதார்த்தங்களோடு கொடுத்திருக்கிறார். பதிவுத்திருமணம் செய்துகொள்ள என்ன வேண்டும் என்பது கூடத் தெரியாதவர்களுக்கு அதையும் சினிமா வழி சொல்கிறார். நல்ல விஷயம். வயதுக்கு வந்ததைக் கொண்டாடும் விழாவில் வரும் குடி-சாப்பாடு- ஒன்று கலந்த அன்பு-சண்டை- காட்சிகள், மாலை எடுத்துப்போட வரும் மாமன் போதையில் தடுமாறுவது என அனைத்தும் அக்மார்க் வில்லேஜ் விருமாண்டிச்சமாச்சாரங்கள். அழகாகப் பதிவு செய்திருக்கிறார். சித்தப்பா வில்லன் மென்மையாகப்பேசி காரியம் சாதிக்கும் போதெல்லாம்அவரது நிஜத்தைச் சொல்வது போல வருகிறது பின்னணி இசை. இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள்.

காட்சிகளும் இசையும் மனதைத் தொடுகின்றன. காட்சிகள் அப்படியே பட்டாம்பூச்சியின் ரசனையான பறத்தலை நம் கண்ணுக்குள்ளும் மனதுக்குள் உள்வாங்கச்செய்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. அறிமுகம். பூப்புனித நீராட்டு விழாவில் வரும் பாடலுக்கும் இடையிடையே அப்பாட்டில் வரும் மென்மையான இசைக்கும் 'தொட்டுத்தொட்டு' பாடலுக்கும் நிறையவே பாராட்டலாம். நா. முத்துக்குமார் சில இடங்களில் தனித்துத் தெரிகிறார்.

இயக்குனருக்கு இது இரண்டாவது படமாம். சாமுராய் எடுத்து வாழ்க்கையைத் தொலைத்திருந்தவருக்கு ஷங்கர் கை கொடுத்திருக்கிறார். நிறையவே யோசித்து இந்த படத்திற்கு தயாரிப்பாளராயிருக்கிறார். இயக்குனராய் 'ஐந்து பையன்களை' வைத்து (பாவம் பண்ணியதற்கு) தான் சொல்ல வந்ததை ஒரே ஒரு பையனைக் காட்டி தயாரிப்பாளராகி பாப விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்.

பிளஸ் டூ படிக்கும் பெண்ணாய் சீருடையில் கதாநாயகி வருவது, வளர்ந்து வரும் பெண்குழந்தைகளின் தந்தைகளில் சிலருக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதாய்ச் சொன்னார்கள். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான உறவின் சரியான அணுகுமுறை தெரிந்திருக்கவேண்டும் எல்லோருக்கும். சுனாமியும் நிலநடுக்கமும் எடுத்துக்கொண்டு போகும் வாழ்வில் இனிமேலாவது காதலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எல்லா சாதிகளும் சனங்களும்.

மேன்சன் பாடலை தவிர்த்துவிட்டு (படம் இடையில் தடுமாறுவது தவிர்க்க) கரட்டாண்டியைப் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் நகைச்சுவை பண்ணியிருக்கலாம். ஸ்கோப் இருக்கின்றன கதையில். ஷங்கரும் சந்தோசப்பட்டிருப்பார். செயற்கையாக இருக்கிறது.

சன் டிவியின் விமர்சனத்தில் 'சூப்பரா, நல்லா, ஒருதடவை பாக்கலாம், அட்டகாசமா, கெளப்பிட்டாங்க'ளாய் சொல்லிவிட்டுப்போனவர்களின் கருத்துக்களை வழக்கம்போல நான் கண்டுகொள்ளவில்லை. விமர்சனத்தின் முடிவில் படத்தின் முடிவையும் அவர் சொன்னபோது நிஜமாய் அதிர்ந்தேன். அது தவிர்க்கப்படவேண்டும். எப்போதும் கிளைமேக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும். வெற்றிக்காக இல்லாவிட்டாலும் முடிவில் படம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் தொடர்ந்த ரசனைகளுக்காவது இது கொஞ்சம் அவசியம். மற்றும் 'டாப் டென்'னிலும் இதற்கு இரண்டாவது இடமாம். நம்பமுடியவில்லை.

எப்படியாயினும், உண்மையில்- 'காதல்' ஒரு காவியம்.


6 comments:

Mookku Sundar said...

எம்.கே.கே,

விமரிசனம் நல்லாருக்குபா. இந்தப் படம் எப்ப வந்து, நான் இங்கே பாக்கப் போறேனோ தெரியலை. அதுக்குள்ள பாதி படமும், மத்தவங்க கருத்துகளும் தெரிஞ்சு, சுவாரையம் போயிடும் போலருக்கு.

சுடச்சுட, first show போய் பாத்தூடு, வெளியே கேட்டுகிட்ட நின்னவங்களுக்கு, மெதப்பா விமரிசனம் சொன்னதல்லாம், ஒஎஉ காலமப்பு..ஒரு காலம்..!!

என்ன செய்ய..ஏதாவது கெடைக்கணும்ணா, எதையாவது விட வேண்டி இருக்கு அப்பு...

எம்.கே.குமார் said...

மறுமொழிக்கு நன்றி மூக்ஸ்.

நானும் எல்லாப்படத்தையும் தியேட்டர்ல போய்ப்பாக்குறது கிடையாது. மனசுக்குப்பிடிச்சதா தோணினா மட்டும் போறது உண்டு. ஆயுத எழுத்து, ஆட்டோகிராஃப், விருமாண்டி, வசூல் ராஜா (நண்பர் கூட்டிப்போனார்) பிதாமகன், அன்பே சிவம் இவைதான் கடந்த 3 ஆண்டுகளில் நான் தியேட்டரில் போய்ப்பார்த்தவைகள். இப்போ காதல். இதிலும் 'அன்பே சிவம்' திருட்டு விசிடியில் முதலில் பார்த்துவிட்டு பிறகு தியேட்டரில் போய்ப் பார்த்தேன். :-)

கரட்டாண்டியா வரும் அப்பையனின் பெயர் கோபாலகிருஷணன் இல்லை. அருண்குமாராம். (அதானே பாத்தேன் என்னடா பய நம்ம கலர்லெ இருக்கானேன்னு! :-) )

எம்.கே.

எம்.கே.குமார் said...

//Dear Mr.M.K.Kumar

I read your review and opinion on my film 'kaadhal' in
www.maraththadi.com .Its quite interesting and very
usefull.

Such reviews not only encourage us but makes us apply
ourselves more.

Thanks,

Balaji Sakthivel.///


அன்பர்களே, இது 'காதல்' படத்தின் இயக்குனர் திரு. பாலாஜி சக்திவேல் அவர்கள், நான் எழுதிய காதல் பட விமர்சனத்திற்கு எழுதிய பின்னூட்டம்.

நன்றி பாலாஜி சார்.

எம்.கே.

Vijayakumar said...

பாலாஜி சாரை விடுங்க. காதல் ஏன் உங்களுக்கு ஒரு காவியம்ன்னு எனக்கும் தெரியும்டே. :-))))))

குழலி / Kuzhali said...

மிக அழகாக எழுதப்பட்ட விமர்சனம், நமக்குதான் காதல் ஒரு காவியமா? இல்லை வேறு ஏதாவதா என்று தெரிந்து கொள்ள ஒரு கொடுப்பினையும் இல்லை.

//தெரியும்டே. :-)))))) //
அல்வாசிட்டி விஜய், தெரியுமா உங்களுக்கு அடுத்த சந்திப்பிலே எனக்கும் தெரியப்படுத்திடுங்கோ.....ஹி ஹி...

Anonymous said...

'மன்மதன்' சுமார் 75 நாட்கள் ஓடிய பிறகும் Top 10-ல் அதன் முடிவைச் சொல்லாத சன் டி.வி., 'காதல்' வந்து ஒருவாரத்தில், முடிவையும் சொன்னவர்கள்.

Search This Blog