Sunday, January 30, 2005

ஒரு அனுதாபமும் ஒரு அஞ்சலியும்!

எதற்கும் வளையாத நடுநிலை நாயகங்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள விழையும் சில வணங்காமுடிகளைக் கூட 'அதெல்லாம் இல்லை, இப்போ பாரு எப்படி படக்குன்னு பல்டியடிப்பான்னு' காட்டுவதற்காக இயற்கை சில நேரங்களில் சந்தர்ப்பங்களைக் கொடுத்து கவிழ்த்துக்காட்டும்! அந்த சந்தர்ப்பத்திற்காக சிலரை எப்போதும் நான் கவனித்துக்கொண்டே இருப்பதுண்டு! வணங்காமுடிகளின் வளைவும் குனிவும் அழகானதுதானே!

இந்தவார துக்ளக் அட்டைப்படம் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்தியது. இந்த விஷயத்தைப் பற்றி நான் இரு வாரங்களுக்கு முன் எழுத நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை. இப்போது துக்ளக் அட்டைப்படம் அதைச் சொல்லத்தூண்டி விட்டு விட்டது.

சங்கரராமன்கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வந்த விசாரணை அதிகாரி பிரேம்குமார் எஸ்பி யிடம், 'இவ்வழக்கு வெற்றி பெறுமா' என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்க, அவர் ரொம்பவும் அமைதியாகவும் அடக்கமாகவும் சொன்னார், 'இக்கொலை, வரதராஜ பெருமாள் கோவிலுக்குள்ளே நடந்திருக்கிறது. கடவுளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அவர்தான் அனைத்திற்கும் சாட்சி. ஆக பெருமாளுக்கும் காஞ்சி மடத்துக்கும் நடக்கும் வழக்கு இது. நாமெல்லாம் வெறும் கருவிகள் தான்'.

ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி எனக்கு அவர்மேல் ஒரு மரியாதை வந்துவிட்டது மனதில். 'கொலை நடந்திருப்பது உண்மை! அதுவும் கோவிலுக்குள் நடந்திருப்பது உண்மை! குற்றவாளிகள் யாரென்பதை எனக்குத் தெரிந்தவரை விசாரித்து ஒப்படைத்துவிட்டேன். இனி நிஜத்தின் வழி நடப்பது நடக்கட்டும்! எது சரி என்று கடவுள் நினைக்கிறாரோ அது நடக்கட்டும்.' என்பதாய் இதை நான் எடுத்துக்கொண்டேன். இதில் என்ன தவறு?

இந்து மக்களின் உணர்வுகளுக்கு சமாதி கட்டி அதற்கு மேலே அடிக்கடி மேல்பூச்சு பூசிக்கொண்டிருக்கும் கலைஞர் (வெட்கங்கெட்ட அவர்களுக்கு இது தேவைதான்!) கேவலமாய் கிண்டல் அடித்தார். 'ஆக, பெருமாள் வருவாரா சாட்சி சொல்ல? அவருக்கும் சம்மன் வழங்கப்படுமோ?'

வயதால் முதிர்ந்த ஒருவர் எவ்வளவுதான் நாத்திகவாதியாயினும் எவ்வளவுதான் சமயச்சார்பற்ற கூட்டணி படைத்து சாதித்தவராயினும் பலநூறாயிரம் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் புண்படுத்தலாமா? இன்னும் புண்படுத்தவேண்டுமா?

ஒரு போலீஸ் அதிகாரி எப்படிச் சொல்லலாம்? அதுவும் இவ்வழக்கில் மட்டும்? என்றும் சிலர் கேட்கிறார்கள். கொலை நடந்தது கோயிலுக்குள்! எல்லா கொலை வழக்கு விசாரணையிலும் 'என் பணி முடிந்துவிட்டது இனி எது நடக்க வேண்டுமோ அது நடக்கட்டும். அது எனக்கு சம்பந்தமில்லை' என்று விசாரணை அதிகாரி சொல்லலாம். ஆனால் இக்கொலை கோயிலுக்குள் நடந்ததால் பெருமாளையும் சேர்க்க வேண்டி வந்திருக்கிறது. ஆக, வழக்கின் முடிவில் அவர் நிரபராதி என்று வந்தால், 'பெருமாள் தவறான தீர்ப்பை அல்லவா சொல்லிவிட்டார்' என்றல்லவா நினைக்கத்தோன்றும் என்றும் சிலர் நினைக்கலாம். அப்போது மட்டும் இந்து மக்களுடைய உணர்வுகள் பாதிக்கப்படாதா என்றும் தோன்றலாம். 'ஒரு காரியத்தைச் செய்யும் வரை முழு நிலையோடிரு. பிறகு நடப்பது எதுவும் உனக்கானதில்லை' என்ற பகவத் கீதையின் முழக்கம் எப்படி இவர்களுக்குத் தெரியாமல் போனது?

இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் இதே பாணியில் 'குண்டர் சட்டத்தில் போட்டுவிடுவார்களோ' என்று கடவுளே பயந்து கொண்டிருப்பதாய் அட்டைப்படம் போட்டிருக்கிறார். (ஜெயலலிதா இவ்விசாரணையில் முழு நிதானத்தைக் கடைபிடிக்கிறாரா? குண்டர் சட்டம் அவசியம் தானா என்பதெல்லம் இரண்டாம் கேள்விகள்!)

'நேரத்திற்குத் தகுந்ததாய் மாறிக்கொள்ள விழையும் சோ அவர்களை இப்போது பார்' என்று இயற்கை எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது. பிரேம்குமார் எஸ்பி. சொல்லிய வார்த்தைகளின் உட்பொருள் அறியத் தெரியாவதவரா திரு. சோ அவர்கள்? தமக்கு 'இஷ்டமில்லாத' ஒரு நல்ல காரியத்தை யார் சொன்னாலும் தவறா? இப்படியொரு 'இரண்டாம் நிலையில்' இருந்துகொண்டு 'ஹிந்து மஹா சமுத்திரம்' என்று ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை எழுதப்போகிறாராம் இவர்?! அப்போதாவது, 'கீதை சங்கரமடத்திற்கும் மேலானது' என்பது இவருக்குத் தெரியட்டும்!

ஆக இனிமேலும் இவர்கள் அடிக்கப்போகும் வார்த்தை பல்டிகளுக்கும் செயலுக்கும் இப்போதே எனது அனுதாபங்கள்!

ஒரு அஞ்சலி!

இதுவும் தாமதமாகத்தான் வருகிறது.

முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்களுக்கு எனது இதய அஞ்சலிகள்!

நீதித்துறையில் இவருடைய பணி சிறப்பானது என்று யார் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதில் இவர் எனக்குப் பரிட்சயமாகவில்லை. ஆனால் கம்பர் வழி பரிட்சயமானார்.

தான் ஒரு இஸ்லாமிய இனத்தவராய் இருந்தாலும் கம்ப ராமாயணத்தின் பால் மிகுந்த வேட்கை கொண்டு அதில் பல்பெருகிக்கிடக்கும் இலக்கியச்சுவைகளூக்குள் கிடந்து வாழ்ந்தவர். உருண்டவர்! கம்பராமாயணத்தில் மிகவும் ரசிக்கந்தகுந்ததாய் இவர் எழுதிய சில புத்தகங்களைச் சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். (அப்புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது முந்தைய சக தொழிலாளி சகோதரர் திரு. முருகேசன். ஆறுமுகனேரி, தூத்துக்குடி மாவட்டம் அவர்களை இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.)

கம்பராமாயண விஷயங்களை மிகவும் இனிமையாய் எழுதியிருப்பார் மு.மு இஸ்மாயில் அவர்கள். 'கண்டேன் சீதையை' என்ற வார்த்தையின் ஜீவனைக் கூட இவர்வழிதான் படித்தேன் என நினைக்கிறேன்!

ஒரு தேர்ந்த இலக்கிய ரசனாவாதிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

எம்.கே.குமார்.

Tuesday, January 25, 2005

டாக்டராய் நடித்தவர் இப்போது டாக்டர்!

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இனி தனக்கு பெருமை மாலை போட்டுக்கொள்ளலாம். ஒரு நல்ல கலைஞனுக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. ஜேப்பியாரின் கையில் துண்டு போட்டு விலை பேசப்போகிறவர்கள் இருப்பார்கள்; இருக்கட்டும். அது நமக்கு அவசியமில்லை. இது மிகவும் நல்ல செய்தி.

'ஒரு மிகச்சிறந்த நடிகர், நல்ல படங்களின் தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், பாடகர் மற்றும் நல்ல எழுத்தாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு மனிதனுக்கு ஏன் டாக்டர் (ஹானர்ஸ்) பட்டம் வழங்கக்கூடாது' என்று அண்மையில் ஒரு மேடையில் வைரமுத்து கேட்டாராம். வைரமுத்து எதை நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவரது வாய் முகூர்த்தம் இப்போது பலித்திருக்கிறது.

'வாழும் சினிமா அகராதி' கமலுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது. பட்டம் வந்த வழி சாதாரணமாய் இருக்கலாம். பெரிதாய் பேசப்படாததாய் இருக்கலாம். (இதன்மூலம் அது அதற்கு கிடைக்கட்டும்!) ஆனால் பட்டம் பெற்றவர் சகல(கலா) மரியாதைக்கும் உரியவர். திறமையானவர். இன்னும் பலப்பல ஆண்டுகளுக்குப்பின்னும் தமிழ் சினிமா பற்றி யார் பேசினாலும் அதில் 'கமலாயனம்' இல்லாமல் இருக்கமுடியாது என்பது என் கணிப்பு.

'தேவர் மகனில்' ஒரு காட்சி.

"இன்னக்கி நா மரம் வெப்பேன், அது பெருசா வளரும், காய்க்கிம், கனியும். ஆனா அத சாப்புட நா இருக்க மாட்டேம்பு, நீங்க சாப்பீடுவீய, உங்க மகன் சாப்பிடுவாக! அவுங்க மகன் சாப்பிடுவாக! வழி வழியா வாறவக எல்லாரும் சாப்பிடுவாக. நா சாப்பிடலையேங்குறதுக்காக நா மரம் வெக்காமெ போக முடியுமா? வருத்தப்படமுடியுமா? எல்லாம் அப்புடித்தாம்பு. ஒரே நாளையில எல்லாம் நடக்கணுமுன்னு பாத்தா வேலைக்கு ஆகாதுப்பு. அப்படித்தானே வந்துச்சி, அப்படித்தாம்பு போகணும்! படிப்படியாத்தாம்பு எல்லாம் மாறணும்!"

இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் சாதிக்கொடுமைகளுக்கு இதைவிட யாரும் நல்ல முடிவாய்ச் சொல்ல முடியாது. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருப்பவன் வேண்டுமானால் எல்லாம் உடனே நடக்கவேண்டும் என ஆசைப்படலாம். ஆனால் மேல்தட்டிலிருப்பவன் என்ன யோசிப்பான்? இப்பிரச்சனை எப்படித் தீரும்? எப்படித் தீர்க்கமுடியும்?

"ஆமாம், சந்திரபோஸ் எங்க சதம் அடிப்பாரு? அவரு வெள்ளக்காரனைத்தான் அடிப்பாரு, அதுக்குத்தான் அவரு லாயக்கு. பாவம்!"

'விருமாண்டி'யில், ஒரு மறந்துபோனவனை ஞாபகப்படுத்தும் முயற்சி இது. ஒரு கிராமத்து பெண்ணுக்கு கிடைத்த சச்சினின் பிரபல்யம் ஏன் சந்திரபோஸ¤க்கு கிடைக்கவில்லை என்பதை ஒவ்வொரு இந்தியனையும் எண்ணிப்பார்க்கவைக்கும் தந்திரம் இது.

"நீ இன்னைக்கி ஜெயிச்சிருக்கலாம் தம்பி. தோத்தாலும் நா போயி நைட்டு நிம்மதியா தூங்கிடுவேன். ஆனா பொய் சொல்லி ஜெயிச்சிட்டு நீ போயி நிம்மதியா தூங்க முடியுமா?"

இதைவிட ஏது கடவுள்? இதைவிட ஒருவனை மனிதனாக்க என்ன பெரிதாய் எழுதவேண்டும்? மீண்டும் 'விருமாண்டி'யிலிருந்து!

இந்த வசனங்களை எழுதியவர் திரு. கமல்ஹாசன். இப்படி ஒவ்வொரு படத்திலிருந்தும் எத்தனையோ வசனங்களை எடுத்து மனித மனங்களுக்கு உரமேற்ற முடியும் கமல் படங்களிலிருந்து. 'இன்றும் நேற்றும் நாளையும்' எப்போதும் பளிச்சென்று துளிர்விடும் எழுத்து அவருடையது. வாழ்க டாக்டர் கமல் அவர்கள்.

"படித்தவர்களெல்லாம் சேர்ந்து இப்பாமரனை கௌரவிக்கிறார்கள். அதற்காக நான் மகிழ்கிறேன்" என்கிறார் கமல் மிக அடக்கமாக!

'இதப்பத்தியும் உம்மைப்பத்தியும் அய்யன் எங்களுக்கு எப்பவோ சொல்லிட்டுப்போயிட்டான்வெ. நீரு மனீஷாவைப் பாரும்! சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பும், எல்லாரும் நல்லா சிரிக்கிற (ரசிக்கிற) மாதிரி'ன்னு சொல்லுறாரு நம்ம சித்தப்பு! கமல் சார் கண்டுக்குங்க!

பி.கு: வலைப்பதிகளில் எங்கும் இச்செய்தி குறித்து பதிவுகளைக் கண்டது போல எனக்குத் தெரியவில்லை. என்ன காரணம்?

எம்.கே.குமார்.



Sunday, January 23, 2005

சிங்கை இணைய நண்பர்களுக்கு..

இனிய சிங்கை நண்பர்களே,

வருகிற சீனப்புத்தாண்டு (பிப்ருவரி 9 மற்றும் 10) விழாவை முன்னிட்டு எல்லோருக்கும் குறைந்தபட்சம் இருநாட்கள்(ளாவது) விடுமுறை இருக்கும் என நினைக்கிறேன். (எனக்கு 8, 9, 10 என மூன்று நாட்கள் விடுமுறை) சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் பங்காற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் நாம் யாவரும் அந்நாட்களில் ஏதாவது ஒன்றில், ஓரிடத்தில் ஒன்றிணைந்து இணையவிஷயங்களும் இன்னபிற விஷயங்களுமாய் பேசி கலந்து அளவளாவிக்கொள்ளலாம் என்று தோணுகிறது. இணைய நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

நண்பர் மூர்த்தியும் இதுபற்றி சிலநாட்களுக்கு முன் அவரது பதிவில் எழுதியதாய் ஞாபகம். அன்பு, ஈழநாதன் மற்றும் வீரமணி இளங்கோ ஆகியோர் அதில் இசைவும் தெரிவித்திருந்தார்கள். இப்பிரபலங்களைத்தவிர ஜெயந்திசங்கர், நம்பி, மானஸசென் ரமேஷ், அருள்குமரன், சித்ரா ரமேஷ், பனசை நடராஜன் இன்னும் பல 'விஐபிக்கள்' மரத்தடி உறுப்பினர் மற்றும் வலைப்பதிவர்களாக இணைய உலகில் இருக்கிறார்கள். எல்லோரும் முன்வந்தால் இனிய இணைய உறவுகளின் சந்திப்பாய் அதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

எனவே நண்பர்கள் அனைவரும் முன்வந்து அவரவர்க்கு ஏற்ற நேரத்தையும் தேதியையும் சொன்னால் அவற்றில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்படி கலந்துரையாடலை நாம் நடத்தலாம். தங்களின் கருத்துகளுக்கு பின்னூட்டுங்கள். நன்றி!

அன்பன்,எம்.கே.குமார்.

Tuesday, January 18, 2005

நம்பிக்கையிழக்கவைக்கும் இரு முடிவுகள்.

ரயில்வே அமைச்சரான லல்லு அவர்கள் நியமித்த முன்னால் நீதிபதி 'பானர்ஜீ' தலைமையிலான விசாரணைக்குழு, தமது விசாரணையின் முடிவில் 'கோத்ரா' ரயில் எரிப்புச் சம்பவத்தை ஒரு விபத்து 'மட்டுமே' என்று அறுதியிட்டுக்கூறியிருக்கிறது. ஆனால் இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்த இன்னொரு உயர்மட்ட குழுவானது, அது கரசேவை முடிந்து சமர்மதி எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த 'கரசேவர்களைக்' குறிவைத்து 'வெளியாட்கள்' யாரோ பெட்ரோலைக் கொண்டு எரியூட்டியதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். எது இங்கே உண்மை?

ஆக இரண்டு வெவ்வேறு அரசுகள் ஆட்சிக்கு வந்தால் 'உயர்மட்டக்குழு ஆட்கள்' கூட அதற்குத்தகுந்ததாய் மாறிக்கொள்வார்கள் என்பது வருத்தமளிக்கும் விஷயம். இவ்வாறு அரசுக்குத் தகுந்ததாய் ஆய்வறிக்கைகளும் கூட மாறும்போது இந்தியாவும் இந்திய ஆட்சியாளர்களும் உருப்படுவதாய் உருப்படப்போவதாய் யாருக்கும் தோன்றாது.

காங்கிரஸ் அரசுக்குக் கீழேயான இவ்வறிக்கை உண்மையென்று லல்லு அவர்கள் அதன் தலைவராய் இருக்கும்வரை யாராலும் நம்பமுடியாது. ஏனெனில் திரு. லல்லுவைப் பற்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். எத்தகைய தவறையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த 'அரசியல்வாதி' என்பது அனைவருக்கும் தெரியும். பி.ஜே.பி தலைமையிலான அரசு 'கோத்ரா' சம்பவத்தை வைத்து அரசியல் பண்ணியிருக்கலாம் என்றாலும் அப்போது கரசேவர்கள் விஷயம் பெரிதாக பிரச்சனை தரும்படியே இருந்தது. எனவே அப்படியும் நடந்திருக்கலாம் என்று யூகிக்கும்படியாகவே நிலைமை இருந்தது. இந்நிலையில் பி.ஜே.பி அதை வைத்து அரசியல் பண்ணவில்லை என்றும் நாம் சொல்லமுடியாது. ஏனெனில் பி.ஜே.பியின் கொள்கை கடந்தகால பாதைகள் அப்படி. இங்கே எது நிஜம் என்பதை தீ பகவான் மட்டுமே வந்து சொல்லமுடியும் போல இருக்கிறது. பொய் சொல்பவர்களையும் அவர் கொளுத்தி விட்டுப்போகட்டும்.

இரண்டாவது, லல்லு அவர்கள் தனது மடியிலிருந்து ஒவ்வொரு நோட்டாய் எடுத்து நீட்டிக்கொண்டிருந்த செயல் தவறுதான் என்றாலும் மன்னித்துவிடுகிறதாம் தேர்தல் ஆணையம். இது எப்படி இருக்கிறது?

இச்சலுகை எல்லோருக்கும் உண்டா என்றும் அதே தேர்தல் ஆணையம் சொல்லவேண்டும். முதல் தேர்தலிலோ அல்லது ஒவ்வொரு தேர்தலிலுமோ 'முதன் முறையாக செய்யும் தவறு தவறில்லை' என்று அது கொஞ்சம் விளக்கிச்சொல்லிவிட்டுச் செல்லலாம். இத்தகையவைகளே பின்னாளில் ஏதாவது ஒரு முக்கிய வழக்கின் போது முன்மாதிரியாய் அமைந்து அங்கேயும் இன்னொரு குற்றவாளி தப்புவதற்கு ஆயுதமாகிவிடுகிறது. ஆக லல்லு அவர்கள் செய்தால் அது தவறில்லை. மற்றவர்கள் யாராவது செய்தால் தவறாகி விடும்?

வாயைப் பிளந்துகொண்டிருங்கள்! இந்தியா வல்லரசாகி விடும்!

Wednesday, January 12, 2005

'காதல்' - ஒரு காவியம்.

எதேச்சையாக பார்க்க நேரிடும் ஒருசில நிமிடங்களில் பறந்துபோகும் பட்டாம்பூச்சியின் நிழல் போல படக்கென்று வந்து, பறந்து போகும், சில உள்ளம் கொள்ளும் பதிவுகள். ஏதோ ஒரு காய்கறி (முட்டைக்கோஸ் என நினைக்கிறேன்) சமையலுக்காய் நறுக்கிக்கொண்டிருந்த நேரம் செல்பேசி அழைக்க, அதை எடுப்பதற்காக என் அறைக்கு வந்தேன். ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் சன் டிவியின் 'மறுநாளைய திரைவிமர்சன'த்திற்காய் இப்படத்திலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன. முதல் முறை பார்த்தபோது பட்டாம்பூச்சியின் நிழல் கண்களில் நின்று போனது. எல்லா காட்சிகளையும் பார்த்துவிட்டுத்தான் முட்டைக்கோஸ¤க்கு போனேன்.

மதுரையின் பிஸியான தெரு ஒன்றில் மெக்கானிக்காக இருக்கிறான் ஹீரோ. மூன்று முறை அவனை தவறுதலாக விபத்திற்குள்ளாக்குகிறாள் ஹீரோயின். அதை அவள் ஹாஸ்யமாக எடுத்துக்கொண்டுவிட்டுப்போக ஹீரோவுக்கு எரிச்சலாகிறது. மோதுகிறான் அவளோடு. மோதல் காதலாகிறது. பிளஸ் டு படிக்கும் அப்பெண் தான் 'பெண்மையடைவது உணரும் கணம்' அம்மோதல் காதலாகிறது. பிறகென்ன? கவிதையாக எடுக்கப்பட்டிருக்கின்றன அக்காட்சிகள்.

செல்வம் கொழிக்கும் பிராந்திக்கடைக்காரரின் ஒரே மகள் தான் ஹீரோயின். வறுமையை போக்க பழனிக்கு பாதயாத்திரை போகும் தாயின் மகன் ஹீரோ. காதல் எப்படி ஜெயிக்கும்? வீட்டிற்கு இவையெல்லாம் தெரியும் முன்னே நாயகிக்கு நிச்சயமாகும் திருமணத்தைத் தவிர்க்க நாயகனும் நாயகியும் மதுரையிலிருந்து வீடியோ கோச் பஸ்ஸில் சென்னைக்கு வருகிறார்கள் வீடியோ பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஆரம்பிக்க! வாழ்க்கை ஒன்றும் வீடியோ படம் அல்லவே? சென்னையில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் யார்? அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? காதல் ஜெயிக்கிறதா என்பதுதான் படம்.

நிஜங்களைக் காட்சிகளாகக் கொட்டி கவிதையாய்ப் படம் எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க யதார்த்தம். படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும்பொழுதே தாலாட்டுடன் ஆரம்பிக்கிறது படம். மதுரை நகர் வீதிகளையும் மனிதர்களையும் சிங்கப்பூரிலிருந்து பார்க்கும் பொழுது சில கணங்களில் அதிர்ச்சியும் பல கணங்களில் சந்தோசத்தையும் உணர முடிந்தது.

முகமெல்லாம் அம்மை போட்டதன் தழும்பாய் பார்க்கும் கணத்தில் பயமுறுத்தி கொஞ்சம் நேரம் மென்மை காட்டி பிறகு சுயரூபம் காட்டி 'கேரக்டர்க்கு' உயிரூற்றுகிறார் நாயகியின் அப்பா. உள்ளத்தின் கொடூரத்தை 'ஒரு கையில்' மறைத்து மென்மை பேசி கண்கள் வழி சாதிய அதிகாரத்தின் வாழ்க்கை காட்டுகிறார் அவரது தம்பி நாயகியின் சித்தப்பா. இருவரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டு 'மெட்டி ஒலி' பார்த்தாலும் அடங்குவதற்கு அடங்கி எப்போதும் புலம்பிக்கொண்டிருக்கும் மாமியார்க் கிழவியை அதட்டி குடும்பத்தை நடத்துகிறார்கள் அவர்களின் மனைவியர். பிராந்திக்கடையைத் தொழிலாகக் கொண்டவர்களின் போக்கு அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இக்குடும்பத்திலிருந்து அதுவும் பணபலமும் சாதீய பலமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் ஒற்றை மகளாய் ஒரு பெண் இருந்தால் அவருடைய செல்வாக்கு பற்றிச் சொல்லவா வேண்டும்? ஐஸ்வர்யா என்று பெயரிட்டு அன்பைக்கொட்டி வளர்க்கிறார்கள். பேத்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதை அவள் அணிந்து வரும் செருப்பைத் தடவிக்கண்டுபிடித்து புலம்பும் கிழவிக்கு நிகரான யதார்த்த மனிதர்களும் காட்சிகளும் ஏராளம். இவர்களின் மீது தாராள அன்பு கொண்டிருந்தாலும் நாயகி பார்த்த கணத்தில் உயிருக்குள் கலந்துகொள்கிறான் அழுக்குச்சட்டையும் கிரீஸ் கலந்த கன்னமுமாய் ஒருபக்கம் சாய்ந்துகொண்டு பைக் ஓட்டும் சாதாரணமாய் தெருக்களில் நாம் பார்க்கும் ஒரு மெக்கானிக் பையன். பரத்துக்கு நமது இருக்கையிலிருந்து எழுந்து வந்து கை கொடுக்கலாம். அவ்வளவு இயல்பான நடிப்பு. நாயகி ஜிகிர்தண்டா கேட்க அவளது அப்பாவோடு வரும் நேரம் வியர்த்து விறுவிறுத்துப்போனவனாய் பின்வாங்குவது மிகவும் எதார்த்தம். நம்மிலும் 'பலபேர் பின்வாங்கியிருப்பார்கள்.'

நாயகி சந்தியாவுக்கு இது முதல் படமாம். கையில் சூடம் கொழுத்திப்போட்டாலும் நம்ப முடியாது. காட்சிகளின் வழி கரைந்து போகிறாள். உருகிப்போகிறாள். நிஜமாய் ஒரு பதின்ம வயதுப்பெண்ணையும் அவளின் விபரீதமறியா 'ஒரே சிந்தனை' கொண்ட காதலால் ஆன வாழ்க்கையையும் கண்முன்னே காணமுடிகிறது. வரும் அத்தனை காட்சிகளிலும் நிஜமாய் வாழ்ந்துவிட்டு அழுகிறாள். காதலின், காதலனின் முடிவைப் பார்த்து அவள் கண்ணீர் விட்டுக் கதறும் தருணங்கள் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்தானா என்பதை யோசிக்க வைக்கிறன.

மூன்றாவது இடத்திலிருப்பவன் கரட்டாண்டியாய் வரும் (கோபால கிருஷ்ணன்?!) மெக்கானிக் செட் எடுபிடி பையன். அச்சு அசலாய் அதே மாதிரிப் பையன்களை நாம் காணமுடிவதால் இவனும் நடிப்பதாகவே தெரியவில்லை. மதுரையில் ஏழாம் வகுப்பு படிக்கிறானாம். மதுரைப்பாஷை அப்படியே ஓடுகிறது.

நாயகனின் அம்மா, ஜோசப்பாக வரும் நண்பன் சுகுமார் (வடிவேலு போன்றிருப்பவர்), அந்த மேன்சனின் இனிமையான வித்தியாசமான சில மனிதர்கள், மற்றும் காட்சிகள் அனைத்தும் கண்ணுக்குள் நிற்கின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் மனம் நிறைந்த பாராட்டுகளுக்குரியவர். ஒரு நிஜ வாழ்வினை காட்சி, இசை, எடிட்டிங் என முழுமை கொஞ்சும் அழகான எதார்த்தங்களோடு கொடுத்திருக்கிறார். பதிவுத்திருமணம் செய்துகொள்ள என்ன வேண்டும் என்பது கூடத் தெரியாதவர்களுக்கு அதையும் சினிமா வழி சொல்கிறார். நல்ல விஷயம். வயதுக்கு வந்ததைக் கொண்டாடும் விழாவில் வரும் குடி-சாப்பாடு- ஒன்று கலந்த அன்பு-சண்டை- காட்சிகள், மாலை எடுத்துப்போட வரும் மாமன் போதையில் தடுமாறுவது என அனைத்தும் அக்மார்க் வில்லேஜ் விருமாண்டிச்சமாச்சாரங்கள். அழகாகப் பதிவு செய்திருக்கிறார். சித்தப்பா வில்லன் மென்மையாகப்பேசி காரியம் சாதிக்கும் போதெல்லாம்அவரது நிஜத்தைச் சொல்வது போல வருகிறது பின்னணி இசை. இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள்.

காட்சிகளும் இசையும் மனதைத் தொடுகின்றன. காட்சிகள் அப்படியே பட்டாம்பூச்சியின் ரசனையான பறத்தலை நம் கண்ணுக்குள்ளும் மனதுக்குள் உள்வாங்கச்செய்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. அறிமுகம். பூப்புனித நீராட்டு விழாவில் வரும் பாடலுக்கும் இடையிடையே அப்பாட்டில் வரும் மென்மையான இசைக்கும் 'தொட்டுத்தொட்டு' பாடலுக்கும் நிறையவே பாராட்டலாம். நா. முத்துக்குமார் சில இடங்களில் தனித்துத் தெரிகிறார்.

இயக்குனருக்கு இது இரண்டாவது படமாம். சாமுராய் எடுத்து வாழ்க்கையைத் தொலைத்திருந்தவருக்கு ஷங்கர் கை கொடுத்திருக்கிறார். நிறையவே யோசித்து இந்த படத்திற்கு தயாரிப்பாளராயிருக்கிறார். இயக்குனராய் 'ஐந்து பையன்களை' வைத்து (பாவம் பண்ணியதற்கு) தான் சொல்ல வந்ததை ஒரே ஒரு பையனைக் காட்டி தயாரிப்பாளராகி பாப விமோசனம் தேடிக்கொண்டிருக்கிறார்.

பிளஸ் டூ படிக்கும் பெண்ணாய் சீருடையில் கதாநாயகி வருவது, வளர்ந்து வரும் பெண்குழந்தைகளின் தந்தைகளில் சிலருக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதாய்ச் சொன்னார்கள். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான உறவின் சரியான அணுகுமுறை தெரிந்திருக்கவேண்டும் எல்லோருக்கும். சுனாமியும் நிலநடுக்கமும் எடுத்துக்கொண்டு போகும் வாழ்வில் இனிமேலாவது காதலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எல்லா சாதிகளும் சனங்களும்.

மேன்சன் பாடலை தவிர்த்துவிட்டு (படம் இடையில் தடுமாறுவது தவிர்க்க) கரட்டாண்டியைப் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் நகைச்சுவை பண்ணியிருக்கலாம். ஸ்கோப் இருக்கின்றன கதையில். ஷங்கரும் சந்தோசப்பட்டிருப்பார். செயற்கையாக இருக்கிறது.

சன் டிவியின் விமர்சனத்தில் 'சூப்பரா, நல்லா, ஒருதடவை பாக்கலாம், அட்டகாசமா, கெளப்பிட்டாங்க'ளாய் சொல்லிவிட்டுப்போனவர்களின் கருத்துக்களை வழக்கம்போல நான் கண்டுகொள்ளவில்லை. விமர்சனத்தின் முடிவில் படத்தின் முடிவையும் அவர் சொன்னபோது நிஜமாய் அதிர்ந்தேன். அது தவிர்க்கப்படவேண்டும். எப்போதும் கிளைமேக்ஸ் நோக்கிய எதிர்பார்ப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும். வெற்றிக்காக இல்லாவிட்டாலும் முடிவில் படம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் தொடர்ந்த ரசனைகளுக்காவது இது கொஞ்சம் அவசியம். மற்றும் 'டாப் டென்'னிலும் இதற்கு இரண்டாவது இடமாம். நம்பமுடியவில்லை.

எப்படியாயினும், உண்மையில்- 'காதல்' ஒரு காவியம்.


Tuesday, January 04, 2005

ஆத்மா சாந்தியடையட்டும்!

எதுவும் நிச்சயமில்லை. நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த நேரடி ஒளிபரப்பான "சூப்பர் நண்பர்கள் 2004/05" நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்ற ஐந்து நடுவர்களில் தலைமையானவராக 'டை'யோடு இருந்தார் அவர். முதல் இரண்டு சுற்றுகள் முடிந்து, இருபதில் பத்து, பத்தில் ஐந்து என ஐந்து ஜோடி நண்பர்கள் கடைசிச் சுற்றுக்காக காத்திருந்தார்கள்.

ஐந்து ஜோடிகளும் ஐந்து நடுவர்களில் எவரையாவது ஒருவரை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த நடுவர் கேட்கும் கேள்விக்கு அச்சோடி பதில் சொல்லவேண்டும். இதுதான் கடைசிச் சுற்று.

நான்கு நடுவர்கள் முடிந்துவிட்டார்கள். ஐந்தாவது நடுவரிடம் கேள்வி வந்தது. 'டை' யை இழுத்துவிட்டு, அவர் அக்கேள்வியைக் கேட்டார்.'இந்த சூப்பர் நண்பர்கள் என்பதெல்லாம் வெறும் போலித்தனம் என்று நான் நினைக்கிறேன். இதை இல்லையென்று எப்படி மறுப்பீர்கள்.?' இதுதான் கேள்வி.
"என்னம்மா கேட்டாரு பாருய்யா கேள்வி.! வக்கீல்ன்னா சும்மாவா இருக்கு? மத்தவங்க கேட்டதெல்லாம் கேள்வியா" என்று எனதருகில் இருந்த சக அறைவாசியிடம் சொல்லிக்கொண்டே நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சி முடிந்து வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவர்கள் எழுவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு 'லைவ்' முடிந்ததால் டிவியில் அடுத்த நிகழ்ச்சி தொடங்க இருந்த தருணத்தில் சூப்பர் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நண்பரிடமிருந்து அழைப்பு. 'உதுமான் கனி காலமாகிவிட்டார்.'
அவர் கேள்வி கேட்ட தோரணையையும் அந்த மென்மையான புன்முறுவலையும் சற்றுமுன் வரை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

இதோ கைகளில் தவழ்கிறது சென்றவாரம் தேசிய நூலகத்திலிருந்து நான் எடுத்து வந்த "அ·றிணை உயர்திணை" என்ற அவரது சிறுகதைத் தொகுதி. இருகதைகளையும் முன்னுரையையும் மட்டுமே இதுவரை படித்திருந்தேன். அவர் எழுதிய கதையை படிப்பதற்குள் அவர் கதை முடியுமென்று எப்படி நினைக்கமுடியும் என்னால்?

1957 ஆம் ஆண்டு டிசம்பர் 28, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒப்பிலான் என்ற கிராமத்தில் பிறந்து ஐந்து வயதில் சிங்கை வந்து வழக்குரைஞருக்கு படித்து, லண்டன் சென்றும் படித்து வந்து 'உதுமான் கனி & அசோசியேட்ஸ்' என்று வழக்குரைஞர் பணி செய்து, இனியவன் என்ற பெயரில் சில காலமும் பிறகு 'இளையவன்' என்ற பெயரில் 12 சிறுகதைகளும் எழுதியவர்.

அண்மையில் நடந்த மாலன் மற்றும் வெங்கடேஷ் புத்தக வெளியீட்டு விழாக்களில் மட்டுமே எனக்கு அவர் பரிச்சயமாகியிருந்தாலும் இதோ அந்த மென்மையான யாருக்கும் தீங்கிழைக்காத தன்மை கொண்ட நகையும் எளிமையாக பேசிய வார்த்தைகளும் கண்ணுக்குள்ளேயும் நெஞ்சுக்குள்ளேயும் நின்றுகொண்டிருக்கின்றன.

"தற்போது ஆங்கிலம் பேசித்தான் பிழைக்கிறேன். தினமும் தமிழில் தான் சுவாசிக்கிறேன். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன நான் முதன்முதலாக சிறுகதை எழுதத்துவங்கி. என்னை எழுதத்தூண்டியவர் இன்று என்னோடு இல்லை. என் எழுத்தில் அம்பலத்தில் ஏற்றிப்பெருமிதம் கொண்டவனும் என்னுடன் இல்லை. இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று நான் அன்று கற்பனை செய்தது இல்லை. நிஜ வாழ்க்கை கற்பனையை விட அதீதமான திருப்பங்கள் நிறைந்தது என்பதை அனுபவப்பூர்வமாக கற்றிருக்கிறேன். நான் ஒரு தமிழ் வெறியன் அல்ல. தமிழ்ப்பிரியன் என்று அடையாளம் காட்டவே ஆசைப்படுகிறேன்"

அ·றிணைகளும் உயர்திணைகளும் அடங்கிய ஒன்றுக்கு அவரின் முன்னுரை!

கற்பனையை விட, பலமடங்கு கொடுமையான திருப்பங்களும் கொண்டதய்யா வாழ்க்கை! இதோ இன்றும் உணர்ந்துகொண்டேன்!

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இருவேறு மதங்கள் இணைந்த உமது வாழ்வில் 'இன்று நடப்பன' இருக்கட்டும். உமது ஆத்மா சாந்தியடையட்டும்!
எம்.கே.குமார்.


Sunday, December 26, 2004

ஒரு உயிரும் ஒரு பிளாக்கும்! (A Blog with A Soul!)

கடந்த வாரங்களில் ஒருநாள் சி·பி தளம், சமாச்சார் ஆகியவற்றின் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். இங்கு நடந்தஅவரது 'நேசமுடன்' புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. (இதையெல்லாம் பற்றி எழுதியிருக்கிறேன் இதற்கு முந்தைய பதிவில்!) கலந்துரையாடலில் 'இணையம்' வந்து 'பிளாக்குகளில்' கலந்த போது, நான் எழுந்து அக்கேள்வியைக் கேட்டேன். 'ஆளாளுக்கு இப்படிப் பிளாக்குகளைப் பதிவுசெய்துகொண்டு எழுத ஆரம்பித்தால் இந்த பிளாக்குகளால் என்ன தான் பெரிதான நன்மை இருந்துவிடக்கூடும்? பிளாக்கு..பிளாக்குகள் பிளாக்குகளின் கூட்டம் இப்படியாய் இது தொடர்ந்தால் இதன் முடிவு என்னவாய் இருக்கும்? எழுதுகிற எல்லோரும் வருகிற எதிர்வினைகளைக் கண்டு (அடிப்படையான விவாதம்) கொள்ளாமல் இப்படியே எழுதிக்கொண்டு போவதின் முடிவுதான் என்ன?'

ஆர்.வெங்கடேஷ் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். இக்கேள்விக்கு எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கடவுள், மனம் கசியும் படி பதிலைக்காட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. ஒருவரின் அந்தரங்கமான டயிரியை 'மேற்கோளாய்' காட்டி விடைளித்திருக்கிறார் அவர்.

சிங்கப்பூர் சீனப்பெண்மனி அவர். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் முடித்து டச்சுக்காரர் ஒருவரை மணந்து நெதர்லாண்ட்லில் வாசமாகிவிட்டார். இணையத்தில் அவ்வப்போது எழுதி வந்த 32 வயதான அவர், தன்னைப்பற்றி கொஞ்சம் ஏனோ எழுதவேண்டும் என்று தோன்ற, ஒரு 'பிளாக்' ஆரம்பித்து இதோ மொத்தம் 11 பதிவுகள். அதிலும் பத்து மட்டுமே அவருடையது. பதினோராவது பதிவை முடித்துவைக்க அவரால் முடியவில்லை.

மிகவும் அமைதியான முறையில் கடந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார். பத்தே பதிவுகள்! இன்று உலகம் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது!
http://dyingis.blogspot.com/

டச்சு நாட்டுப்பிரஜையாகிவிட்ட அவர் தனது வேதனைகள் பற்றி 169 பக்கங்களில் புத்தகம் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறார். அது இங்கே! http://www.gracechow.info/

அகால மரணமைடைந்த 'கிரேஸ் சோ' விற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!
சக வலைப்பதிவாளன்.

Monday, December 20, 2004

'மாலன்' மற்றும் 'இருவர்' -விழாக்கள்!

மாலன் மற்றும் வெங்கடேஷ் - புத்தக வெளியீட்டு விழாக்கள்.

இடம்: சிங்கப்பூர்.

முதல் நாள்: 13/12/2004 மாலனின் புத்தக வெளீயீடு.

கூட்டம் தொடங்க அரைமணித்துளிகள் இருந்த வேளையில் நான் உள்ளே நுழைந்தேன். எனக்கு சற்று முன்னால் சென்ற ஜெயந்தி சங்கரி அப்போது மாலனிடம் பேசிக்கொண்டிருந்தார். படியை விட்டுக் கீழே இறங்கும்போதே என்னைப் பார்த்துவிட்ட மாலன், இனிய புன்னகையோடு எனக்கு 'பதில் வணக்கம்' சொன்னார். அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இளமையாக இருக்கிறார் மனிதர். இனிமையாகப் பேசுகிறார். அழகாக புன்னகைக்கிறார். பாரதியை மூச்சாகக் கொண்ட ஒரு மனிதருக்கு முன்னால் நாம் நிற்பதே ஒரு பெருமைதானே! நேற்றுத்தான் மின்வெளியில் பாரதி மணி மண்டபம் திறந்ததைப் பற்றிச்சொன்னார். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த இணைய மாநாடு பற்றியும் பேசினார். முக்கியமான ஒரு கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். என்ன கேள்வி என்பது தெரிந்தால் நீங்களும் கூட ஆர்வமாகிவிடுவீர்கள். அதற்குள் சாப்பாட்டு அயிட்டங்கள் (உளுந்துவடை, லட்டு, பெயர் தெரியாத கார அயிட்டம் ஒன்று, உப்புமா, சட்னி, கா·பி, டீ. இதுதான் மெனு. மு. மேத்தா வந்திருந்த பொழுது 'கேசரியும்' வைத்திருந்தார்கள். இப்போது இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு இதில் வருத்தம்!) மெதுவாக வர ஆரம்பித்திருக்க முதலில் வயிற்றுக்குணவு என்று அதனை நோக்கி நடந்தோம்.

சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் அனைத்து பெரிய தலைகளும் தவறாமல் ஆஜராயிருந்தார்கள். மூத்த பத்திரிகை ஆசிரியரும் சிங்கப்பூர் தமிழ்ச்சூழலின் முக்கிய கர்த்தாக்களில் ஒருவரும் இந்தமாத 'காலச்சுவடி'ல் கவர் ஸ்டோரியாய் சிங்கப்பூரின் தமிழ் சார்ந்த சூழல் பற்றி பேட்டி காணப்பட்டிருப்பவருமான திரு.வை. திருநாவுக்கரசு அவர்கள், 'உத்தமம்' அமைப்பின் தலைவரும் இணைய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தியவருமான திரு. அருண் மகிழ்நன் (எவ்வளவு அருமையான பெயர்! இவரைப்பற்றி எப்போதாவது ஒரு தனிக்கட்டுரை வரைவேன் என்று தோன்றுகிறது!), 'ஒலி 96.8'ன் தலைவர் திரு. அழகிய பாண்டியன், தேசிய நூலகச் சேவைகளுக்கான தலைமைப்பொறுப்பு பொறுப்பு வகிக்கும் திருமதி. புஷ்பலதா, எழுத்தாளரும் வழக்கறிஞருமான திரு.உதுமான் கனி, எழுத்தாளரும் கலைஞர் எம்ஜிஆரின் முன்னிலையில் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவரும் பாலச்சந்தரிடம் உதவியாளராய் இருந்தவரும் தற்போதைய தொழிலதிபருமாகிய மா.அன்பழகன், 'முரசு அஞ்சல்' நிறுவனர் முத்து நெடுமாறன் அவர்கள், தேசியப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான திரு. திண்ணப்பன், சிறந்த உள்ளூர் கவிஞரான திரு.க.து.மு இக்பால், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ மற்றும் இன்னபிற எல்லா முக்கியத்தமிழர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

"கங்கைக்கரைத் தோட்டம் ...கூட்டம்... கண்ணன் நடுவினிலே.." என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது ஆர். வெங்கடேஷ் அவர்களைப் பார்த்தபோது. பிரபல இணைய மகளிரணி கூட்டம் கொஞ்ச நேரத்திற்கு அவரை மொய்த்திருந்தது. பத்ரி தன் மனைவியோடும் மகளோடும் ஆடைக்குறைப்போடும் வந்திருந்தார். எம்.கே.குமார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஏனோ கொஞ்சம் பின் வாங்கியது போலிருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை.

ஒருவழியாக வெங்கடேஷ் அவ்வளையத்தை விட்டு வெளியே வந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஈழநாதனும் சேர்ந்துகொண்டார். பேச்சு அவரது வலைக்குறிப்பு பக்கமாய்த் திரும்பியது. கமலைப் பற்றிய அவரது ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் பற்றிப்பேசினோம். பிறகு பத்ரியும் இணைந்துகொண்டார். இந்தியாவிலிருந்து புத்தகங்கள் தருவிப்பது பற்றி பேச்சு நிலவியது. முடிவாக எல்லோரும் அரங்கத்திற்குள் நுழைய ஆரம்பிக்க, அப்போதுதான் பார்த்தேன். ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்தார்கள். 'சொல்லாத சொல்லும் சிறுகதைத் தொகுப்புகளும்' குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்தது. கவிஞர் நெப்போலியன் (நானும் எனது கருப்புக்குதிரையும் கவிதைத் தொகுதியின் ஆசிரியர்.) நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி புஷ்பலதா, திருவாளர்கள்.அருண் மகிழ்நன், அழகிய பாண்டியன், உதுமான் கனி, திண்ணப்பன், க.து.மு.இக்பால், ஆர்.வெங்கடேஷ் மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுபாஷினி கனகசுந்தரம் ஆகியோர் 'வாழ்த்தியும் வாழ்த்தியும் வாழ்த்தியும்' (தட்டுறான், தட்டுறான், தட்டிக்கிட்டே இருக்குறான்னு எழுத்தாளர் பைரவன் சொல்றது மாதிரி படிச்சுக்குங்க!) பேசினார்கள். மாலனே அவ்வப்போது கொஞ்சம் வெட்கத்தில் குறுகிக்கொண்டிருந்தார். 'இரண்டாம் பாரதிதாசனே' என்றழைத்தார் திரு.இக்பால்.!

மரத்தடி நண்பர்கள் பலரையும் பார்க்கும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஈழநாதன், அருள்குமரன், ஜெயந்தி, ரம்யா, மூர்த்தி (வேலைப்பணி காரணமாக தாமதமாக வந்து என்னுடன் சீக்கிரமாக கிளம்பி விட்டார்) , பத்ரி, நம்பி, (நிறைய பேச வேண்டும் என நினத்திருந்தேன். எழுந்து கிளம்பும்போதுதான் கவனித்தேன்.) வலைப்பூ நண்பர் அன்பு எல்லோரிடமும் பேச வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்தை திறம்பட முன்னின்று நடத்திக்கொண்டிருந்த திருமதி. ரமா சங்கரன் அவர்களுக்கு என்னிடம் பேச நேரமில்லை. என்னையும் தெரியவில்லை.

எல்லாவற்றிற்கும் அடிப்படையான 'நேரம்' சீக்கிரம் நழுவிக்கொண்டிருக்க, மாலனின் ஏற்புரை தாமதமாகவே, நான் இரவுப்பணி செல்ல வேண்டி இருந்ததால் 2035க்கு கிளம்பி விட்டேன். மாலனின் உரையை நான் இழப்பது ஒரு பக்கம் வேதனையாய் இருந்தாலும் அந்நேரத்தில் கிளம்பியுமே கடைசியில் டாக்ஸி பிடிக்க வேண்டி வந்துவிட்டது. இவையெல்லாம் போக அவரிடம் நான் கேட்கவேண்டிய கேள்வியையும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் வேறு மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது.

அதனால் என்ன? இப்போது கேட்டு விடுகிறேன், கேள்வி இதுதான். 'விருமாண்டிக்கு தூக்கு தண்டனை ரத்தாகி விட்டதா சார்?'

இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.!

*******************
ஆர்.வெங்கடேஷ் அவர்களின் புத்தக வெளியீடு.

நாள்:14/12/2004

நானும் நண்பர் மானஸசென்னும் அம்மோக்கியோ நூலக அரங்கத்திற்குள் நுழைந்த நேரம் ஏறக்குறைய சிற்றுண்டி அயிட்டங்கள் தீர்ந்திருந்தன. இம்மாதிரிக் கூட்டங்களுக்கு இதுக்காகவேணும் இனிமேல் முதலிலேயே செல்லவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு கண்ணில் தெரிந்த எல்லா நண்பர்களையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். நேற்று மாலன் புத்தக வெளியீட்டு விழாவில் என்னைப்பார்த்திருந்த 'இன்றைய விழா நாயகர்' ஆர். வெங்கடேஷ், 'வாங்க குமார்' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். சிங்கப்பூரின் சில பெரிய தலைகளும் பெரிய கவிஞர்களுமாய் களை கட்டியிருந்த கூட்டம் 'நேசமுடன்' புத்தகம் வாங்குதலிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

வழக்கம் போல புத்தக விற்பனைப் பிரிவை மகளிர் அணி கைப்பற்றிக்கொண்டது. ஜெயந்தி சங்கரியும் ரம்யா நாகேஸ்வரனும் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்; காசாயிருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் திருவாளர்கள் முத்து நெடுமாறன், உதுமான் கனி மற்றும் சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சி தலைவர் முகமது அலி ஆகியோர். புத்தகத்தை முத்து நெடுமாறன் வெளியிட முகமது அலி பெற்றுக்கொண்டார். வரவேற்புரையை உதுமான் கனி ஆற்ற, அவர் தனக்கு இதற்கு இருக்கும் தகுதி என்ன என்பதை மீண்டும் இரண்டாம் முறையாகச் சொன்னார். அமரர் நா.கோவிந்தசாமி அவர்களுக்கு இவர் நன்றி சொல்லியாகவேண்டுமாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் (கவிஞர், இரவின் நரை கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். பட்டுக்கோட்டைக்காரர்) கவிதை எழுதுவது சுலபம் கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்றார். அப்படித்தானா என்பதை ஆர்.வெங்கடேஷ் சொலியிருக்கலாம். அவரே முதலில் கவிஞர் அல்லவா?. பிறகுதானே இதெல்லாம்.

வாழ்த்தியவர்களின் பேச்சுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அண்மையில் 'திசைகள்' பேட்டியில் அவர் சொல்லியிருந்ததை மீண்டும் 'ஒலி அன் ஒளி' பரப்பினார் வெங்கடேஷ். தான் மிகவும் சந்தோசமாகவும் மனத்திருப்தியோடும் இருப்பதாக சொன்னார் ஒரு கேள்விக்கான பதிலாக. (உண்மையிலேயே நல்ல உற்சாகத்தோடுதான் இருந்தார்.) 'பாரா' (பா.ராகவன்) வின் படைப்பு வேகத்தை மெச்சினார். வலைப்பூக்களின் எதிர்காலம் குறித்தான போக்கு எப்படியாகவும் அமையலாம் என்றார். இலக்கியப்படைப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்றே இவரும் சொன்னார். (எழுத்தாளர் பா. ராகவன் அவர்களும் இதையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நினைவு கூறவும்!) இணையத்தில் வரும் மறுமொழிகளுக்கு எப்போதும் தான் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் தனது கட்டுரை கருத்து சார்ந்து அது இருக்கும் வரை அதுவே தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சொன்னார். கார்ஸியா மார்குவேஸ் பற்றியும் (ஒரு) கருத்து சொன்னார். எனக்கு கார்ஸியாவையும் கார்ஸியாவுக்கு என்னையும் தெரியாததால் நான் இதில் தலையிடவில்லை.

பெரிய தலைகள் போக, மரத்தடி நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். நம்பி வரவில்லை, மூர்த்தி வந்ததை நான் கவனிக்க வில்லை.
அருள்குமரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார். 'தமிழ் இனியனு'க்கு மேடைப்பேச்சில் அவ்வளவு ஆர்வமில்லை போலும். தயங்காமல் தடங்கலை ஏற்படுத்தினார். (தமிழ் இனியன் அருள்குமரனின் அப்பாவுக்கு பேரன்.)

நிகழ்ச்சி முடிந்தபின் ஆர்.வெங்கடேஷ், காலச்சுவடு சிபிச்செல்வன், ரமா சங்கரன், புஷ்பலதா, ஜெயந்தி சங்கர், ரம்யா நாகேஸ்வரன், மானஸஜென், ஈழநாதன், பனசை நடராஜன் (மரத்தடியில் 'நட்டு') ஆகியோர் பேசிக்கொண்டிருந்தோம். நூலகம் மூடும் நேரம் முடிந்தும் உள்ளே இலக்கியம் பேசிக்கொண்டிருந்த எங்களை நூலகப்பெண் பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ?

சிபிச்செல்வன் கொடுத்த காலச்சுவடு காலண்டர், ஜே.கிருஷ்ணமூர்த்தி, மறைந்த எம்.எஸ் அம்மா, அபுல்கலாம் ஆசாத், ஈ.வெ.ரா, சி.வி.தாமோதரம் பிள்ளை, குமரப்பா, காந்தி, அம்பேத்கர், என்.எஸ்.கே போன்ற மிக அழகானவர்களின் அழகான ஓவியங்களோடு இருந்தது. கிடைத்தால் விடாதீர்கள்!
நன்றி வணக்கம்.
எம்.கே.


Friday, December 10, 2004

'இஸ்லாம்- ஒரு எளிய அறிமுகம்' -- எனது பார்வை!

எம்.கே.

"எனது பால்ய காலத்து நெருங்கிய நண்பன் ஒரு இஸ்லாமியன். எனது பக்கத்துவீட்டுக்காரர் கூட முஸ்லீம் நண்பர்தான். இன்றும் கூட எனக்கு நான்கைந்து இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். எனது அலுவலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் முஸ்லீம் அன்பர்கள் தான். நான் வளர்ந்த எனது பெரியம்மாவின் வீட்டருகில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு விற்று பிழைப்பை நடத்தினாலும் எனக்கும் ரெண்டு இனாமாய்த் தரும் கிழவியைக் கூட நாங்கள் துலுக்கர் வீட்டு 'அம்மா' என்றுதான் அழைப்போம். அவ்வளவு ஏன் இன்றும் இணையத்தில் ஐந்து இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!" இப்படியெல்லாம் சொல்லிவிட்டுத்தான் 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' புத்தகத்துக்கான எனது பார்வையை இங்கு நான் எழுதவேண்டுமென்றால் மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரரே, நீங்கள் இஸ்லாம் சொல்லும் 'நிஜத்தின்' படி முழுமையாக வாழவில்லை என்றுதான் என்னால் சொல்ல இயலும். ஏனெனில் இதுவரை நானும் ஓரளவிற்காவது இறைவனின் சொல்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது இப்போது எனக்குத்தெரிகிறது. இறைவனுக்கு நன்றி.

'அட! யானை ரொம்பப் பெரியது என்றார்கள், வால் சின்னதாக இருக்கிறதே?!', 'என்னப்பா இது.. யானைக்காது இப்படியா இருக்கும்?' 'இதெல்லாம் பொய், இவ்ளோ பெரிய யானை இத்தனூண்டு வாழைப்பழத்தையா சாப்பிடும்?' 'யானையால் வேகமாக ஓட முடியாதா? அதற்கெதுக்கு இவ்வளோ பெரிய கால்?' 'யானை வரும் முன் மணிச்சத்தம் வருமென்றார்கள், அப்படி எதுவும் கேட்கவில்லை?!' 'ஓஹோ..நாலு காலும் ஒரு தும்பிக்கையும் இருக்கிறது. இதுதான் யானை போல!' 'இல்லை இல்லை நாலு கால்கள் எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறது, தந்தம் இருந்தால் தான் அது யானை!' இப்படியாய் குருடர்கள் யானையைப் பற்றித் தடவிப் பார்த்து பேசிக்கொண்டிப்பது போலத்தான் மதிப்பிற்குரிய பெருமானார் அருளிய இஸ்லாம் பற்றி நாம் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதும்.

கடற்கரையில் தான் நிற்கிறேன். இங்கிருந்து கடலின் ஆழம் சொல்வது அபத்தமாயினும் கடலுக்குள் கொஞ்சமேனும் பயணம் செய்துவிட்டு வந்தவர்களின் அனுபவ வழி அதன் பிரமிப்போடு காலடி நனைக்கிறேன். கடலுக்குள் போய் வந்தார்கள் சரி. நிஜமான ஆழம் தெரியுமா அவர்களுக்கு என்ற சந்தேகமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து போனாலும் அதை அப்படியே விட்டு விட்டும் நாம் கடலின் ஆழத்தைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்க முடியாது. எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் என்ற ஒரு வாக்கியத்தோடு எதையும் முடித்து விடலாம். தாயின் கற்பிலிருந்து இறந்த பின் வரும் வாழ்க்கை வரை! ஆனால் நம்பிக்கைக்கும் ஒரு காலவெளி இடவெளி இருக்கிறதல்லவா?

ஏறக்குறைய முன்னுரையிலேயே தனது புத்தகத்தின் தலைப்பை முடித்து விட்டார் திரு.ரூமி அவர்கள். அதற்குப்பின் வருபவன யாவும் என்னைப் பொருத்த வரை புத்தகத்தலைப்புக்குச் சம்பந்தம் இல்லாதவைகளாகும். நபி(ஸல்) கண்ட இஸ்லாம் இன்று வாழ்கிறதா? என்று புதுத்த¨லைப்பை வைத்து விவாதிக்கலாம்.

'இதோ..பாருங்கள், வால்! இதுதான் முதலை! இதை வைத்துக்கொண்டு எப்படி இது ஆளை விழுங்கும்?' என்று ஆச்சரியத்துடனான கேள்வியோடு ஆரம்பிக்கும் ரூமி அவர்கள் மெல்ல உடலுக்கு வந்து 'பாவம் கரடுமுரடாய் இருக்கிறது இதைப்போய் இப்படிப்பேசுகிறார்களே!' என்று இரக்கப்படுகிறார். பிறகு அகலமான வாய்ப்பகுதிக்கு வந்தவுடன், 'பாருங்கள், மனிதர்களை விழுங்கவா இது? ஏதாவது சாப்பிட வேண்டுமல்லவா அதற்குத்தான் இந்த வாய்..பாவம் இதுவும் உயிர் வாழ வேண்டுமல்லவா?' என்ற இயற்கையின் அபிமானியாய் முதலையின் படைப்பிலக்கணம் பேசுகிறார்.

மேலே சொன்ன உதாரணம் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தீவிரவாதம் பற்றியது. ரூமி அவர்களே ஓரிடத்தில் சொல்லியிருக்கும்படி 'இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பதே இல்லை. நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அடங்கிய ஹதீதுகள் அதைத்தான் சொல்கின்றன' என்று சொல்லிவிட்டுப் பிறகு அதற்கான எதிர்முனைப்புக்கான காரணத்தை ஏதாவது ஒரு பத்திரிகையின் எட்டாம்பத்தி மூலைச் செய்தியை எடுத்துக்கொண்டு வலு சேர்க்கும் வித்தை படைப்பது நியாயமான உணர்வுடையதாய் இல்லை. தன்னைக்கொல்ல தன் எதிரே வாளோடு நிற்பவனையே நேசித்து மனிதராக்கிய மதிப்பிற்குரிய பெருமானார் எங்கே? இவர்கள் எங்கே? யாராயினும் சரி தான் வாழ்ந்து வரும் நம்பிக்கைகளில் சப்பைக்கட்டு கட்டுவது இம்மைக்கு வேண்டுமானால் விளைச்சல் தருவதாய் அமையும். மறுமைக்கு? 'நீங்கள் வரம்பு கடந்து விடவேண்டாம், ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை' (சூரா பகரா. 02:190) என்று சொல்லும் பெருமானாரா இத்தகைய வன்முறைகளுக்கும் வானுயர கோபுரங்களுக்கு விமான முத்தம் கொடுக்கும் செயலுக்கும் துணை நிற்கப்போகிறார்? இதை ஏன் ரூபி அவர்கள் அடிக்கடி தலையைச் சுற்றி வந்து முக்கைத் தொடப்பார்க்கிறார் என்று தெரியவில்லை.

திருமறை அருளப்பட்ட ஒன்று. மிக நேர்த்தியான கட்டமைப்போடு 23 வருடங்களாய்த் தொகுத்த ஒன்றுதான் திருமறையாம். வானவர் ஜிப்ரயீல் ஹீராகுகையில் தனிமையில் இருந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'வஹி' (இந்து மதத்தில் ஞானதீட்சை) மூலம் ஆரம்ப ஐந்து வசனங்கள் அவருக்குச் சொல்லியதும் பிறகு அவ்வப்பொழுது அவருக்குச் சொல்லப்பட்டதையெல்லாம் அவரது நண்பர்கள் மனதிலும் கையில் இருந்த பொருட்களனைத்திலுமாக எழுதிக்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. பிறகு வந்த நபி(ஸல்) அவர்களின் தோழர்களும் மனைவிமாரும் அவைகளை திறம்படத் தொகுத்திருக்கின்றனர்.

சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலைதான் தூய்மையான மனநிலை என்றும் அதையே இறைவன் விரும்புகிறார் என்றும் ஒரு திடமான 'விமர்சன-சுய சிந்தனையின்' ஏற்பு கொள்ளாத வெளிகளால் சூழப்பட்ட தளத்திலே இயங்குவதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஜிகாத் என்கிற அருமையான ஒரு வார்த்தையும் பொருளும் இப்படித்தான் மாற்றுரு கொண்டு விட்டது போலும். ஜிகாத் என்ற வார்த்தைக்கு 'அமைதியான மனப்போராட்டம்' என்பதுதான் திருமறை சொல்லும் பொருளாம்! தனக்குத்தானே தீமைக்கெதிராய் ஒருவர் கொள்ளும் மனப்போராட்டம் என்பது இன்று எப்படி ஆகியிருக்கிறது பாருங்கள். இந்த மாற்றுருவுக்கு ரூமி அவர்கள் கொடுக்கும் வாதங்கள் பாசாங்குத்தன்மை கொண்டிருக்கின்றன.

சமயம் என்ற வார்த்தைக்கு பொருள் தரும் அர்த்தம் எதுவும் இல்லை எனச் சொல்லும் ருமி அவர்கள் மார்க்கம் என்கிறார். சமயம் என்பது சமைதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்க வேண்டும். தகுதிப்படுத்துதல், வழிப்படுத்துதல், ஏற்றதாக்குதல் என்பதெல்லாம் இதற்கு சரிவராது என்று எப்படித்தோன்றியது? மனிதனை நெறிப்படுத்துவதற்காகத்தானே மதங்களும் இறையச்ச உணர்வுகளும் தோன்றின. '(இவ்வுலகில்) நேர்மையும் இறையச்சமும் கொண்டவர்களுக்கே அவ்வுலகம்' என்றுதானே திருமறையும் சொல்கிறது.

எந்த மதத்தோடும் ஒப்பிட்டு இஸ்லாமிற்கு பெருமையும் தகுதியும் மேன்மையும் தர வேண்டிய அவசியம் இல்லை என்னும் திரு.ருமி அவர்கள், பிறகு ஏன் அடிக்கடி சிலைகளை வைத்து வணங்குபவர்களையும் சிலுவைகளை வைத்துக்கொண்டிருப்பவர்களையும் இன்னபிற யூதர்களையும் விவாதக்களத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. வாளால் இஸ்லாம் வாழவில்லை, பரப்பப்படவில்லை என்பதைச்சொல்ல படாதபாடு பட்ட போதும் அதைச் சொல்வதற்கு போர்களையும் ஔரங்கசீப், திப்பு சுல்தான்களையும் சார்ந்து வருகிறார். கஜினி, கோரி முகமதுகள் திறமையாக மறைக்கப்பட்டிருக்கிறார்கள். பாபரையும் காணவில்லை. மூன்று சகோதரர்க¨யும் தந்தையையும் காவலில் வைத்த ஔரங்கசீப் நல்லவராகிவிட்டார். வரலாற்றாசிரியர்கள் கெட்டவர்களாகவும் வினோதமானவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். (இவை எல்லாம் வாளால் வெல்லவில்லை என்பதைச் சொல்லவும் சமய சகிப்புத்தன்மைக்கும் இஸ்லாம் பரவ வழிவகுத்தவர்களுக்காகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேண்டியவர்கள் வேண்டிய உதாரணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.)

இஸ்லாம் பரவிய விதத்திற்கு ஏ.ஆர். ரகுமானும் காந்தியின் மகனும் கூட விளம்பரமாக வருகிறார்கள். இவைகளெல்லாம் தான் சொல்ல வந்த கருத்திற்கு எவ்வகையில் அவசியமாய் இருக்கிறது என்று ரூமி அவர்கள் சொல்லலாம். ஏனெனில் 1400 ஆண்டுகளாக வாழும், இன்னும் அசுரவேகத்தில் மனித இதயத்தில் குடிகொள்ளும் இஸ்லாத்திற்கு இவர்களெல்லாம் எவ்வகையில் உதாரண புருஷர்கள்? இவர்களையெல்லாம் காட்டி ரூமி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்? இவர்களையெல்லாம் (தனிமனிதர்களையெல்லாம்) வைத்தா இஸ்லாம் புனிதமானது என்று சொல்லவேண்டும்?

சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம் சமுதாயத்தில் இல்லை என்பதை இஸ்லாத்தின் பரவுதலுக்கும் உலக மக்களுக்கு மிகவும் ஏற்றத்தக்கதாய் சொல்வதற்கும் அச்சாணியாய் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் நடக்கும் சன்னி, ஷியா கலவரங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

இறைத்தூதராகிய நபி(ஸல்)களின் தவறுகளைக்கூட வான்தூதராகிய ஜிப்ரயீல் (வான்தூதர்) கண்டித்திருக்கிறார். (அக்கண்டிப்புகளைக் கூட நபி(ஸல்) அவர்கள் திருமறையில் தொகுத்திருக்கிறார் இது மிகவும் நல்ல விஷயம்.) இதிலிருந்து தவறு செய்பவர் எவராயினும் தண்டனைக்கு உரியவரே என்னும் இறைவனின் போக்கும் உணர்த்துதலும் எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டிய இன்னொரு உண்மை.

நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்த சில அறிய செய்திகளை திருமறையில் அன்றே இறைவன் சொல்லியிருக்கிறான் என்பதாய்ச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் ரூமி அவர்கள். குழந்தை பிறப்பு பற்றி (துளி நீரால் படைத்தோம்.), வானம் பூமி அதனதன் பாதையில் சுழல்வது பற்றி [அவனே இரவையும் பகலையும் (உண்டாக்கினான்.) சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தான். இவை வானத்தில் (தங்களுடைய வட்டவரையறைக்குள்) நீந்திச்செல்கின்றன. (சூரா அல் அன்பியா 21: 33)], நிழல்கள் தோன்றுவது பற்றி [(நபியே) உம் இறைவன் நிழலை எவ்வாறு (குறைக்கவும்) கூட்டவும் செய்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை நிலை பெறச்செய்திருக்க முடியும். சூரியனை நிழலுக்கு முன்னோடியாக நாம் தான் ஆக்கினோம். (சூரா ·புர்கான் 25:45)] இப்படியாக விஞ்ஞானத்தை சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன் உரைத்திருப்பதாக ரூமி அவர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

இத்தகைய இறை வசனங்கள் மேன்மையானதுதான். ஆனால் அவற்றை இருவிதமாக நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவை அருளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எகிப்து நாகரிங்களிலும் சிந்து சமவெளி நாகரிங்களிலும் மக்கள் இவை எல்லாம் உணர்ந்து தெளிந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எப்போது எத்தனை மணிக்கு சூரிய ஒளி இக்குகையில் விழும் என்பதைக்கூட உணர்ந்து கோபுரங்களையும் பிரபிடுகளையும் கட்டியிருக்கிறார்கள். கி.மு வில் வாழ்ந்த திருவள்ளுவர் கூட மிகத்தெளிவான சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். அதேபோல சித்தர்களும் (பிற) ஞானிகளும் கூட குழந்தை பிறப்பையும் உலக இம்மை மறுமை வாழ்க்கையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே இவைகளில் பிரமிப்பு உண்டாக்கும் வகையில் எதுவும் இருக்கிறதா எனவும் ரூமி அவர்கள் சொல்லலாம். இரண்டாவது, திருமறையின் இக்கருத்துகளில் ஒருவித மேலோட்டத்தன்மையே நிறைய காணக்கிடைக்கிறது. இரு பொருள்களில் அர்த்தம் தரும் வகையில் (பகவத் கீதையிலும் பைபிளிலும் இது போல நிறைய இருக்கின்றன.) இங்கு அதிகம் காணப்படுவதால் இறைவன் எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியாகவே இக்கருத்துகளை அளித்திருக்கிறான் என்றும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
'நம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தைக்குள் இவ்வுலகின் எல்லா விவாதத்திற்குறிய விஷயங்களையும் அடைத்து அமைதியாய் இருந்துவிடலாம். ஆனால் விளக்கம் எதுவும் அறியாது தவறான வழியில் போய்க்கொண்டிருப்பவர்களை அவை சம்பந்தப்பட்ட தெளிவான விவாதங்கள் மீட்டுக்கொண்டு வரும் அல்லவா? அதுதானே எத்தகைய நேர்மையான வாழ்வியலுக்கான உறுதியான நிலைப்பாடும்.?! நேர்மையாக விவாதிப்பதால் அத்தகைய அர்த்தமுள்ள விவாதங்கள் எதுவும் யாரையும் எப்போதும் நம்பிக்கை இழக்க வைப்பதில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்தகைய 'மாற்றுக்கருத்துகளற்ற நம்பிக்கை' என்னும் வட்டத்தின் வெளி வந்து நின்று கொண்டு வட்டத்தின் செயல்பாடுகளையும் கோட்பாடுகளையும் பேசப்போகிறோம். நல்லதுதானே இது? ஆனால் நண்பர்களில் சிலர் (ஏன் இந்து மதத்தில் கூட அண்மையில் கைது செய்யப்பட்ட துறவி ஒருவரின் பிரச்சனையில் ஒருசிலர் அத்தகைய ஒரு வட்ட நிலைப்பாட்டைக் தமது நிலையாகக் கொண்டிருந்தனர்! இதுவும் தவறுதான்!) அது பற்றிப் பேசினாலே இறைத்தூதர்கள் சொல்லும் வழியை விட்டு கோபத்தின் வழி வெகு தூரம் போய்விடுகிறார்கள். அதுவே சரியானதாயும் சிலர் எண்ணுகிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் சிலர் அதன் அடிப்படையான விஷயங்களை மறந்து அடிப்படையின் வெளி நிலைகளில் நேசம் கொண்டு அதையே முதன்மையானதாய் ஆக்கிக்கொண்டாடுகிறார்களோ அதே நிலை இன்றைய உலகின் எல்லா மதங்களிலும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது என்பதை ரூமி அவர்களின் எழுத்து, நாமும் ஆங்காங்கு உணர்ந்து கொள்ள ஏதுவாகிறது. நபி(ஸல்) அவர்கள் சொன்னதின் அடிப்படையான கருத்துகள் தடம் மாறி விட்டனவோ என்பதும் இப்புத்தகத்தைப் படித்தபின் எனக்குத்தோன்றிய இன்னொரு கிளை எண்ணம்.

இறைவனுக்கு நன்றி.

எம்.கே.குமார்.

நன்றி:
திரு. நாகூர் ரூமி அவர்கள் ஆசிரியர், "இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்"


கிழக்குப் பதிப்பகம், மைலாப்பூர். சென்னை.



Sunday, October 31, 2004

அரசியல் கண்ணா அரசியல்!

ஜெயலலிதா அம்மையார் கரன் தப்பாருடன் பேசிய போது, 'சினிமாவில் மட்டுமே நடிக்கத்தெரிந்த எனக்கு அரசியலில் நடிக்கத்தெரியவில்லை' என்றார். இதைச் சொல்வது ஜெயலலிதா அம்மையார் என்பதால் வழக்கம்போல அப்படியே புறந்தள்ளிவிடக்கூடாது. அம்மையாரின் (இன்றைய தவறு உட்பட) அனைத்துத் தவறுகளுக்கும் இந்த அரைகுறைப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்வார்கள்.

நேரில் பேசமுடியாத சில விஷயங்களை முரசொலி வழிக் கிண்டல் செய்யவும் வேறுபடுத்தி நடிக்கவும் அம்மையாருக்குத் தெரியவில்லை. நேரில் இனிமையாகப் பேசி, பிறகு பொம்மைக்கத்தியைக் காட்டி மிரட்டியது போல சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுக்கச்சொல்லிவிட்டு படக்கென்று பொம்மைக்கத்தியை நிஜமாய் உருவி முதுகில் குத்தத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் அம்மையாருக்குச் சொல்லித்தர நெருக்கமான யாருமில்லை. எப்போதாவது 'சோ' மாதிரி சொந்தங்கள் வந்து 'அட..இப்படிப் பண்ணும்மா..'என்று 'எடுத்து'க்கொடுத்துவிட்டுப் போனால் உண்டு. இல்லாவிட்டால் கலைஞரின் 'கீதை வழி'ச்சொந்தங்கள் யாராவது வந்து 'ஹோம் ஒர்க்' செய்யவேண்டும். இதெல்லாம் செய்தாலும் காரியத்தின் இறுதியில் காரியமே கெட்டுவிடுவது போல் அம்மையாரின் பிறவிக்குணம் வந்து முன் நின்று விடும். இப்படியெல்லாம் இருந்தாலும் சிம்மராசியும் நட்சத்திரமும் ஜோவியலாக அம்மையாரை ஆட்கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டம்; அத்தனையும்!

இதெல்லாமிருக்கட்டும். அரசியலில் அடிப்படைத்தேவைகள் என்ன என்பதை வெறும் ஊடகங்கள் வழியாக செய்திகளாகவும் நகைச்சுவைத் துணுக்குகளாகவும் நாம் பார்த்திருக்கக்கூடும். கண்டு நகைத்திருக்கக்கூடும். ஆனால் நிஜமாய் அங்கு நடப்பதுதான் என்ன? அரசியலில் அவ்வளவாய் ஜொலிக்காத தமிழருவி மணியன் சொல்கிறார். அது முழுக்க முழுக்க நிஜம் என்பதை ஒரு 'தேர்தலின் வழி அனுபவித்தவன்' என்ற முறையில் நான் மிக நன்றாக அறிவேன்.

79 வயதிலும், பையன்களே பதவிக்காகச் சண்டை போடும் நிலையிலும் இன்றுவரை அதிகாலை 3 மணிக்கு எழுகிறார், முரசொலியில் எழுதுகிறார், வட்டத்தலைவர்களைக் கூட நினைவில் வைத்து பேசுகிறார், சாமர்த்தியமாக சிலரைப் பழிவாங்குகிறார் என்றால் இவை அனைத்துக்கும் காரணமென்ன என்பதை ஒருநிமிடம் யோசித்துக்கொள்ளுங்கள். தகுதிகள் தெரிகிறதா இப்போது? 'இன்றைய அரசியலில்' நிலைத்து நிற்க வேண்டும் என ஒருவன் விரும்புவானாகில், அவன் கைகொள்ள வேண்டியதும் கடைபிடிக்கவேண்டியதும் கலைஞரின் ராஜதந்திரங்களைத்தான்! அதற்கு அடுத்து எம்.ஜி.ஆர்! கவனியுங்கள்..இன்றைய அரசியலில்..இன்றைய அரசியலுக்காக!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சருடான உரையாடலைப் பதிவு செய்து வெளியிட்டதும் கூட அம்மையாரின் அத்தகைய குணங்களுல் ஒன்று என்றுதான் சொல்வேன். 'வீ£ரப்பனைச் சுட்டுக்கொள்வதற்கு சில மணித்துளிகள் முன்னால் விஜயகுமாருக்கும் ஜெ.மேடத்திற்கும் நடந்த உரையாடல்' எனக்கு வேண்டும். அம்மையார் வெளியிடுவாரா?

சுயவிருப்பங்களில் பொதுத்திட்டங்களை நகர்த்துவதும் பொதுத்திட்டங்களில் சுய நலத்தைக் காட்டுவதும் தவிர்க்கவேண்டிய ஒன்றல்ல, இன்றைய அரசியலில். ஆனால் அவை இரண்டையும் எப்போது சரிவிகிதத்தில் கலந்துகொள்ளவேண்டும் எப்போது ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பவைதான் அரசியலில் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். இன்னும் அம்மையார் அதைக் கற்றுக்கொள்ளாததே அவரின் பாஸிட்டுவானதும் நெகட்டிவானதுமாகும்.
ரஜினிகாந்த் இன்றும் அரசியலில் நிலை தடுமாறித்திரிவதும் எம்.எஸ் உதயமூர்த்தி சுரம் குறைந்து போனதும் ராஜாஜியின் பேரன் காங்கிரஸில் பின்னிறுத்தப்படுவதும் ஏன் வைக்கோவையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். (அன்பு அண்ணனிடம் இன்னும் அவர் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.) முகம் தெரியாது பெயர் தெரியாது அரசியல் களத்தில் நின்று தொலைந்து போய்விட்டவர்கள் இன்னும் ஏராளம்பேர்!இப்போது தமிழருவி மணியனும் இவர்களில் ஒருவர். வலம்புரி ஜானும் ஒருவர்.

இதற்கு எதிரான களத்தில் வெற்றிகரமாக நிற்பவர்கள் என்றால் கலைஞரை விடுங்கள், அவர் பல்கலைக்கழகம். ராமதாஸ் அய்யாவை எடுத்துக்கொள்ளுங்கள். நடிகர்களில் விஜயகாந்திற்கு அத்திறமை கொஞ்சம் இருப்பதாக எனக்குத்தோன்றுவதுண்டு. கவிஞர்களில் கவிப்பேரரசு கொஞ்சம் அறிவார் அவ்வித்தையை! பிற அரசியல் தலைவர்களில் 'எங்க ஊர் ஆள்' திருநாவுக்கரசருக்கு 100% அந்தத்திறமை உண்டு. இன்னும் நிறையப்பேரைச்சொல்லலாம். திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அதில் சமத்து பத்தாது.

தமிழருவி மணியனின் கட்டுரையில் சிங்கும் கலாமும் வேறுபட்டவர்கள் என்பதாய் வருகிறது. உண்மைதான். மதம் வந்தபோது திறமை வந்தது. மதம் வராயிருக்காவிட்டால் திறமையும் வராது. திறமை இருந்தாலும் தெரிந்தாலும் வராது. வேற்றுநாட்டவரா என்ற பிரச்சனையால் சிங் வரமுடிந்தது. அதாவது திறமை! இந்நிலையில் ஒன்றை மட்டும் யோசியுங்கள்..கலாம் இஸ்லாமிய இனத்தவராய் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையானவராய் இருந்தாலும் ஜனாதிபதியாகி இருப்பாரா? மிகவும் மேலானவர் அவர்! இதைவிட நல்லபதவியாக கிடைத்திருக்கும், நாலு ஏழைக்குழந்தைக்கு வாத்தியாராக!

ஆக அரசியலில் முதலில் விளையாடுவது ஜாதீயமும் மதங்களுமே! (அதானாலேயே தூத்துக்குடியில் ஒரு நாடாரையும் திருநெல்வேலியில் ஒரு நாடார் அல்லது தேவரையும் நாகர்கோவிலில் ஒரு கிறித்துவரையும் (கிறித்துவ நாடார்) வேலூரில் ஒரு பாயையும் விழுப்புரத்தில் ஒரு வன்னியரையும் ராமநாதபுரம், மன்னார்குடி, தேனிப்பகுதிகளில் ஒரு முக்குலத்தோரையும் நிறுத்துகிறது கழகங்கள்; கட்சிகள்! ஜெயலலிதா எப்படி வேலூரில் ஒரு இந்துவை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடிந்ததென்றால் அப்போது கலைஞர் பி.ஜே.பி. குழுமத்தில் இருந்தார். அதானாலேயே அவரின் மகமதிய நபர் கூடத்தோல்வியைத் தழுவ நேரிட்டது.)

இப்போது தமிழருவி மணியன் சொல்வதைப் பாருங்கள். உண்மையான இந்தியநாட்டு நல விரும்பியாய் நீங்கள் இருந்தால் அடுத்தமுறை ஓட்டுப்போடும்போது இவ்வார்த்தைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது அரசியலில் நுழைந்தால் அனைத்தையும் கற்றுக்கொண்டு தெளிவா(க்)க் வாருங்கள்! வாழ்த்துகள்!

எம்.கே.


"இன்றைய அரசியல் உலகத்தின் பொது இலக்கணம் என்ன?

உள்ளுக்குள் வஞ்சம் வளர்த்து உதடுகளில் புன்முறுவலைப் பூசிக்கொள்ள வேண்டும். பொய் முகங்களோடு போலியாகப் பழகத் தெரிய வேண்டும். இல்லாத திறமைகளை யும், பெருமைகளையும் இருப்பதாகச் சொல்லி, விதம் விதமாய் பூச்சொரிந்து பல்லிளிக்க வேண்டும், பணத்துக்கும், அதிகாரத்துக்கும், பணிந்து நடக்க வேண்டும். எங்கே வளைய வேண்டுமோ அங்கே வளைந்து, எவருக்கு முதுகு சொறிய வேண்டுமோ அவருக்கு முதுகு சொறிந்து, கைகூப்பி வாய் பொத்தி நிற்க வேண்டும். குறைந்த பட்சம் கள்ளச் சாராயம்காய்ச்சி யாவது கணிசமாகப் பணம் வைத்திருக்க வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக் கலையைக் கற்றுத் தேர்ந்திருந்தால் இன்னும் நல்லது. சாதிக் கட்டுமானம் பின்புலமாக இருப்பது மேலும் நல்லது. இந்திய அரசியலில் இன்று வெற்றிபெற அடிப்படை அரிச்சுவடி இதுதான். இதுதான் பொது விதி. அப்துல் கலாமும், மன்மோகன் சிங்கும் பெற்ற வெற்றிகள் விதிவிலக்குகள்."

தமிழருவி மணியன்.

நன்றி: விகடன்.

Friday, October 29, 2004

வாழ்க நீர் எம்மான்!

"என்னப்பா டியூன் இது??? இதுக்கு என்னத்தை எழுதுறது? எப்படி எழுத முடியும்? மூணாங்கிளாஸ் வாய்ப்பாட்டைத் திருப்பிப் போட்டு வாசிக்கிறமாதிரி இருக்கு?"

"சார் அப்படில்லாம் சொல்லாதீங்க! மியூசிக் டைரக்டர் கேட்டா கோபிச்சுக்கப்போறாரு!"

"கிழிச்சான்! எம் எஸ் வி, ராஜா, தேவா, சந்திரபோஸ், கங்கை அமரன் எல்லாரையும் மிக்ஸ் பண்ணி ஒரு டியூனு போட்டு வெச்சிருக்கான்! இதுக்கு பல்லவி எப்படி எழுத முடியும்?"

"ஆரியமாலா ஆரியமாலான்னு ஏதாவது போடச்சொல்லு. இல்லாட்டி மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்னு ஏதாச்சும் போடச்சொல்லு. டென்ஷன் பண்ணுறாங்கெ!"
****
மியூசிக் டைரக்டர் உதவியாளரைக் கூப்பிடுகிறார்.

"யோவ்..இந்த ஆளு சரி வரமாட்டான். அவரைக்கூப்பிடு. அவர்தான் லாயக்கு."

"சார் அவரு வயசானவரு."

"இருக்கட்டுமேய்யா!"

"இல்லே சார்! இது காதலைச் சொல்லி அவஸ்தை படுகிற காதலன் பாடுற பாட்டு. அவருக்கு முடியுமா?"

"யோவ்..'தொட்டால் பூ மலரும்' யார் தெரியுமா? 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'நீ எங்கே..என் நினைவுகள் அங்கே', 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அட! 'நான் ஆணையிட்டால்' கூட அவருதான்யா எழுதுனது."

"அப்படியா சார்? இருந்தாலும் இதெல்லாம் பழைய படம் சார். புதுப்படம்ன்னு.."

"யோவ்...எழுபத்தி மூணுலயும் இளமையோடு இருக்க ஆளுய்யா அவரு. விகடன் படிக்கிறியா? நளதமயந்தி, ஹேராம், பாய்ஸ், காமராஜ், மின்னலே இன்னும் எத்தனை படம்ய்யா வேணும். எல்லாம் அவருதான். இன்னிக்கும் எழுத்துல இளமையை ஊத்தி எழுதுற ஆளு!"

"அப்படியா சார்? நடு நடுவுலே இங்கிலீஸ் வார்த்தையெல்லாம் போடணும். தேவைப்பட்டா தத்துவத்தையும் எழுதணும் சார்."

"அட! 'தரைமேல் பிறக்க வைத்தான்'னு எழுதணுமா? கலக்குவார்யா அவரு. 'சமஞ்சது எப்படி'ன்னு எழுதணுமா அசத்துவாருய்யா அவரு. இல்லை 'ஓ..மரியா ஓ..மரியா'ன்னு ரம்மியமா எழுதணுமா? இல்லை 'கட்டம் கட்டி கலக்கணு'மா? இல்லை 'சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது'ன்னு இன்னிக்கும் எழுதுவாருய்யா."

"அவ்வளவு பெரியாளா சார் அவரு?"

"என்னய்யா இப்படிக் கேட்டுட்டே? இன்னக்கி 73 வயசாம் அவருக்கு. வாழ்கன்னு மனதார வாழ்த்திட்டு இந்தப்பாட்டை அவரை வெச்சே எழுத வெச்சிடுவோம். என்னய்யா சொல்லுறே?"

"கண்டிப்பா சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்ன்னு நான் சொன்னதா சொல்லிட்டு கூப்பிடுங்க சார்."

எம்.கே.

எஸ்கேப் கண்ணா எஸ்கேப்!

உதவியாளர் உள்ளே வருகிறார்.

நேரம்: 25 அக்டோபர். மாலை 6 மணி.

உதவியாளர்: குட் ஈவ்னிங் சார்.

கங்கூலி: குட் ஈவ்னிங். என்னாச்சு நான் சொன்ன மேட்டர்?

உதவி: ரொம்ப பிஸியா இருந்தார் சார். பேசிட்டு வந்துட்டேன்.

கங்கூலி: என்ன சொன்னார்? பாஸிட்டிவா? நெகட்டிவா?

உதவியாளர்: ரொம்ப ரொம்ப ரொம்ப நெகட்டிவ் சார். பிட்ச், பேஸ் பௌலிங்குக்கு கன்னா பின்னான்னு ஒர்க் அவுட் ஆகுமாம். 100 வது மேட்ச் ஆடுறாரு மெக்ராத். கில்லெஸ்பி, காஸ்புரோவிச் வேற. மூணு எம்டன் சார். பொளந்து புடுவானுக. ஏற்கனவே 35 வருச ரெக்கார்டு பிரேக் வேறயாம். குச்சி பறக்குங்குறாரு கிஷோர் பிரதான். (நம்ம நாட்டோட பிட்ச் மேன்.) யோசிச்சுங்குங்க சார்.

கங்கூலி: என்ன பயமுறுத்துருறீங்க? எனக்கே பேஸ் பௌலிங்கா? சும்மா அப்படி ஆ·ப் சைட்ல பேட்டைச் சுத்துனா நாலு பேருக்கும் இடையில பந்து பறக்கும்யா பவுண்டரிக்கு.

உதவியாளர், அந்தப்பக்கம் திரும்பி மையமாக சிரிக்கிறார்.

உதவி: சார், ஒண்ணுக்கு நாலு தடவை யோசிச்சுங்குங்க. 35 வருஷ ரெகார்டு உங்க கேப்டைன்ஸில போகணுமா? நமக்குத்தான் பலி ஆடு ஒண்ணு எப்பவும் இருக்கே சார். தள்ளிவிட்டுட்டுப்போங்க. ஏற்கனவே 1-0 ந்னு முன்னாடி இருக்குறானுவ. புலி மாதிரிப் பாய்வானுக. போதாதுக்கு சச்சின் வேற இருக்கார். பிரச்சனையே இல்லை. முக்கியமான மேட்சில அவர் அடிக்கமாட்டாருன்னு எல்லாரும் சொல்லுறது மாதிரி இந்த மேட்சிலேயும் அவர் மேலேயும் பழியைப் போடலாம். எதுக்கு சார் வேண்டாத வேலை.? இன்னக்கி தேதில இந்தியன் டீம்ல கேப்டன்ஸிக்கு உங்களை விட்டா ஆளே இல்லை. எத்தனை மேட்ச் சும்மா வந்துட்டுப்போனாலும் நீங்கதான் கேப்டன். அந்த நிலைமையில இருக்கு. எதுக்கு வீண் ரிஸ்க்?

கங்கூலி: (கண்ணை மூடி யோசிக்கிறார்.) அய்யோ..அம்மா..அய்யோ...அம்மா...

உதவி: சார்..சார்..என்னாச்சு? என்னாச்சு சார்? ஏன் கத்துறீங்க?

கங்கூலி: (ஒற்றைக்கண்ணால் பார்த்துக்கொண்டே,) பயந்துட்டியா உதவி? எல்லாம் நம்ம 'நக்மா' டிரையினிங். வயித்து வலி மாதிரி நடிச்சேன். எப்படி நம்ம நடிப்பு?

உதவி: ஹா..ஹா..நான் கூட பயந்துட்டேன் சார். தமிழ்நாட்டுல யாரோ கமலாம். அவர்கூட இப்படி நடிக்க மாட்டாரு சார். பின்னிப்புட்டீங்க. அப்போ உங்களுக்கு வயித்து வலி!? கரெக்டா சார்.?

கங்கூலி: யோவ்.. இப்படி பொத்தாம்பொதுவா சொல்லி வைக்காதே! தொடை மஸில் பிடிச்சுகிச்சுன்னு சொல்லு. ஹிப் மஸில்லயும் பெயின்ன்னு சொல்லு.

உதவி: ஓகேசார். டன்!

(செய்தி: திராவிட் பாவம்!)

எம்.கே.

Monday, October 25, 2004

நிஜமா கண்ணா நிஜமா?

வாசலில் வீரப்பனின் மகள்கள் வித்யாராணியும், பிரபாவும் நின்றுக் கொண்டிருக்க... அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பிரபா நம்மிடம்,

"டாடியை போலீஸ் அங்கிள்ஸ் சுட்டுக் கொன்னுட்டாங்க. டாடியை போட்டோவுல தான் மம்மி காட்டினாங்க. இப்போதான் நேர்ல பார்த்தேன். எங்க டாடிகிட்ட மான், யானையெல்லாம் இருந்திருக்கு. மம்மி கூட்டிக்கிட்டுப் போய் காட்டுறதா சொன் னாங்க. காட்டவே இல்ல. எங்க டாடியை நான் பார்க்கலனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க டாடியைக் கொன்ன போலீஸ் அங்கிள்ஸை நான் பெரிய பொண்ணாகி டுமீல்னு சுட்டுக் கொல்லுவேன் என திக்கித்திணறி சொன்னாள்."

"தமிழ் துப்பறியும் இதழ்களுக்குத் தாங்கள் எழுதும் எதைப்பற்றியும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜேம்ஸ் பாண்ட் போலக்கொல்வதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி -- பரபரப்பாக எழுதினால் விற்பனை அதிகமாகும் என்ற வணிக நோக்கத்தினால் - அவை செய்திகளை உருவாக்குகின்றன.
இன்று தமிழகத்தில் செய்திகளை ஆய்வு செய்தும் எழுதும் எழுத்திற்கான தேவைதான் உள்ளது. கதாசிரியர்களை வைத்து செய்திப்பத்திரிகை நடத்தும் போக்கு செத்து ஒழிய வேண்டும்"

---'காலச்சுவடு' கண்ணன் ஒரு கட்டுரையில்.

இந்த இரண்டு துணுக்குகளுக்கும் ஏதாவது சம்பந்தமிருப்பதுபோல் தோணவேண்டும் உங்களுக்கும். தோணுகிறதா?

பத்தாவது படிக்கிறாராம் வீரப்பன் மகள் திவ்யா. அவரை விட மூத்தவர் வித்யா ராணி. ஆனால் மேலே சொல்லப்பட்ட வீரப்பன் மகளின் வாக்குமூலம் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையின் வாக்குமூலத்திற்கு நிகராயிருக்கிறது. இது நிஜமாகவே நடந்திருக்கக்கூடியதா? 'போலீஸ் அங்கிள்ஸ், அவரை நான் பெரியவளாகி சுடுவேன்' என்பதெல்லாம் அழ. வள்ளியப்பாவின் கதைகளில் வரும் காட்சிகள் போலல்லவா இருக்கிறது?

ஊடகங்கள் வழியாகப் பார்த்தபோது அப்பெண்களிருவரும் சுற்றியிருந்தவர்கள் அழுததாலேயே கண்கள் கலங்கினர். அதுவுமில்லாமல் பிறந்ததிலிருந்து இன்றுவரை எப்போதும் பார்த்திராத பேசியிராத அப்பா என்பவரைக் காட்டி செத்துப்போய் விட்டார் என்று சொன்னால் என்ன உணர்வு வரும்? ஏதோ திடீரென்று தங்கள் மீது வந்து விழும் ஊடக ஒளியிலும் பாடுகளிலும் தடுமாறி திருவிழாவில் தடுமாறும் குழந்தைகளைப் போலவே அவர்கள் என் கண்களில் நின்றனர். ஆனால் பத்திரிகைகள் அப்படியா எழுதுகினறன?

எம். கே.


Thursday, October 21, 2004

தவறு கண்ணா தவறு!

"சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போல் ஒரு பொண்டாட்டி. வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட!" இப்படி ஆரம்பிக்கும் ஒரு விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி பார்க்க நேர்ந்திருக்கும். பார்த்திருக்கிறீர்களா? முதல் வரிப்பாட்டுக்குள் தூங்கும் கணவனுடனான (அழகான) அவளின் புகைப்படத்தைக் காட்டி, சேலையை பின்னிழுத்துச் செருகி 'கை வலிக்குது கை வலிக்குது மாமா' ரேஞ்சில் அவள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதையும் காட்டுவார்கள். அப்போதுதான் வருவான் 'வடுகப்பட்டி ராஜா!' (வைர முத்து இல்லப்பா. நிழல்கள் சந்திரசேகர் மாதிரி!) ஓஹோ...வென்று பின்னணி இசையோடு ஹிப்பித் தலையுடன் அழகான வேலைப்பாடுள்ள சைக்கிளுடன்! இரண்டாம் வரிப்பாட்டுக்குள், கிழவர் கடையிலே 'மிண்ட்-ஓ-பிரஷ்' வாங்கித்தின்றுவிட்டு பாட்டு முடியும்போது சைக்கிளில் அவளையும் கூட்டிகொண்டு போய்விடுவான். இருவரும் போவதைத் தன் கண்ணாடியைத் துடைத்து மாட்டிப் பார்த்து விழிப்பார் முதியவர்.

நான் முதலில் அவ்விளம்பரத்தைக் காண நேர்ந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். கேட்சிங் வாசகங்களோடும் இசையோடும் வந்த அவ்விளம்பரத்தின் சில விஷயங்கள் பிடித்திருந்தாலும் விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட செய்தி சரிதானா? உகந்ததுதானா எனவும் யோசித்தேன். என்ன இருந்தாலும் இந்தியாவில் இப்படியெல்லாம் காண்பிப்பது சரியில்லை எனத்தான் நினைத்துக்கொண்டேன். விளம்பரத்தைத் தயாரித்தவர்களின் எண்ணப்படி எனது நிலையும் இப்போது எழுதும் நிலையும் வெற்றியின் அறிகுறியாகவே இருக்கலாம். ஆனால் விளம்பரத்தின் கண்ணோட்டம் தவறானது தானே! (ஏம்ப்பா...இப்போ வாற சீரியல்லாம் பாக்குறியா? அதை விடவா இதுல மோசமா காமிக்கிறாங்கன்னு என் மனசாட்சி சொல்லும். கண்டுக்காதீங்க!)

ஒன்றுமில்லை. அவ்விளம்பரத்தில் காண்பிக்கும் அத்திருமண புகைப்படத்தை மட்டும் காண்பிக்காமல் இருந்தால் அவளுடைய கணவன், அப்பாவாகவும் இருக்கலாம் என்ற நிலை இருக்குமல்லவா? கொஞ்சம் யோசிக்கிற மாதிரியே விடலாமே! விளம்பர நிர்வாகிகளே இப்படியும் கொஞ்சம் யோசிங்க!
அதிருக்கட்டும், நீங்க என்ன யோசிக்கிறீங்க? சொல்லுங்க!
எம்.கே.

Tuesday, October 19, 2004

மனதைப் பாதித்த சம்பவம் 1.

சினிமா நடிகைகளின் வாழ்வுபற்றி கிசுகிசுவைத்தவிர நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதிதாய் இருக்கப்போவதில்லை. கிசுகிசு ஒன்றுதான் மார்க்கண்டேயத்தனம் கொண்டது. தமிழ் சினிமாவில் நடித்த முதல்பெண்மணியிலிருந்து இன்றைய புது ஹீரோயின் வரை, எம்.கே.டி யிலிரூந்து சிம்பு, ஜெய் ஆகாஷ் வரை எல்லோருக்கும் கிசுகிசு இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். வாழ்வில் அதெல்லாமில்லாவிட்டால் சுவையிருக்குமா?

நான் சொல்ல வந்தது, நடிகைகளின் வாழ்வு பற்றி. உறவுகளின் பண ஆசையோ, அன்பென்றால் விலை என்ன என்று கேட்கும் குடும்பத்தார்களோ, இதுதான் சந்தர்ப்பமென்று உள்ளே புகுந்து காதல் நாடகமாடி, கர்ப்பமாக்கிவிட்டு தவறான கிசுகிசுவை பரப்பிவிட்டு, எனது குடும்பத்தினர் சொல்லியதால் வேறு பெண்ணை மணந்துகொண்டேன் என்று சொல்லும் சக திரைத்தொழிலாளர்களோ இவர்களால் அல்லது இவைகளால் எப்படி ஒரு நடிகை நிஜத்தில் சீரழிகிறாள் என்பதுதான் அது.

எல்லாம் நம்பிக்கைகளும் முடியும் தருணத்தில் என்ன செய்வார்கள் இந்த அபலைகள்? எல்லாப் பெண்களுக்கும் உள்ள ஒரே வழி! நடிகைகளானாலும் இவர்களும் பெண்கள்தானே? தற்கொலை! போ. இனிமேல் இவர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் பார்க்கலாம்? யாரிடம் தா தா என்று பிடுங்கப்போகிறார்கள்? அவனும்கூட துரோகம் செய்துவிட்டான்? அவனுக்கும் எனது உடல்தான் பிரதானமா? இனி எதன் மேல்புரண்டு படுப்பான்? இந்த உலகத்தில் யாருக்குமே நான் மனுஷி என்று தெரியவில்லையா? பணம்,பணம்,பணம்..மேலும் உடல்!

எதுவும் வேண்டாம் போ! இப்படித்தான் நடந்து முடிகிறது அவர்களின் வாழ்வு. கவர்ச்சி நடிகையாய் இருந்தாலும் சரி குடும்ப நடிகையாய் இருந்தாலும் சரி, தேசியவிருது வாங்கிய நடிகையாயிருந்தாலும் சரி. இதுதான் கதி.

மீராஜாஸ்மின் எனக்குப்பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிப்பிலும் சரி இன்னபிற ஊடகங்களாலும் சரி! அண்மையிலொரு விருது வழங்கும்மேடையில் அச்சின்னஞ்சிறிய தேவதை கண்ணீர் கலங்கி அழுகிறது. காரணமென்ன இருக்கமுடியும்? மேற்சொன்ன துரதிஷ்டங்கள்தான்! பாவம். நடிப்பில் தேசிய விருதுபெற்ற அழகான நடிகை! உறவினர்களைப் பிடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்யவேண்டும் போல எனக்குக் கோபம் வருகிறது. தேவதைகள் அழலாமா? அல்லது அழத்தான் விடலாமா?

எம்.கே.

Wednesday, October 13, 2004

அதிர்ஷ்டக்காத்து அடிக்குது வாருங்கள்!

எம்.கே.குமார்.

வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?

சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன்.என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!

இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.

முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் ·பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் இது. குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.

இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!

இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?
மொத்தமாக இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.

தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கும், பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.

எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா? விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.

சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருக்கட்டும். டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம். இதற்கு மேல் என்ன வேண்டும்?

கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)

சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.
இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?
சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!

விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமா சார்? எத்தனை வீடு இருந்தாலும் கவலை இல்லைதானே!

அதுமட்டுமா? உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)

ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.

வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.

வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?

வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.

உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்ப்பா!

போதவில்லையா? இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?
கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?

'சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?' என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா? மனசாட்சி இல்லையா அவர்களுக்கு? கேளுங்கள்!

நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும். இல்லை குறைந்தது இரு ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.

சரி, வேலைக்காலத்திலே தகாத முறையில் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்.. கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?
பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா? ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்!

எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?
அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக் சபா ராஜ்ய சபா உறுப்பினர்கள்!


Saturday, October 02, 2004

மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி.

மகானே!

மீண்டும் பிறந்து வா!
குண்டுகளுக்கும்
தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ!
ஆகையால்
மீண்டும் பிறந்து வா!

தலைவனை இழந்து துயரப்படும்
குழந்தைகள் நாங்கள்!

'இன்று' எங்களுக்கு
எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது

அம்மை அப்பனை
முதியோர் இல்லத்தில் சேர்க்க!
சகோதரனை சொத்துக்காக
ஹர சம்ஹாரம் செய்ய!
மனைவியை மந்தையாக்க!
எதிரிகளை முதுகில் குத்த!

என எல்லாவற்றையும்
இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது.

விலைமகளிடம் போய்விட்டு
விலை போகாமல் வந்தவன் நீ!

இன்று விலைமகளிடம் போய்விட்டு
விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்!
காலத்தைப் பார்த்தாயா மகானே!

வா! வந்து படித்த சிலருக்கேனும்
வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ!

ஏனெனில்
இவர்களெல்லாம்
ராமாயாணத்தையும் படித்துவிட்டு
கோயிலையும் இடிக்கிறார்கள்!
குரானையும் படித்துவிட்டு
குண்டும் வைக்கிறார்கள்!

மீண்டும் வா!
இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்!
அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்!
பயப்படாமல் வா!
உனது தோளுக்கு காவலாகவும்
கொள்கைக்கு கோட்டையாகவும்
இன்று நானும் இருக்கிறேன்.

எம்.கே.

ஒரு ஷாம்பும் ஒரு நிகழ்வும்

சென்ற வாரத்தில் ஜெயலட்சுமி எத்தனை முறை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். (தெரியவேண்டுமல்லவா?! சரித்திரத்தில் இடம் பிடிக்கும் முக்கிய நிகழ்வு அல்லவா அது?) ஜெயலட்சுமி கமகமவென்று ஷாம்பு போட்டு குளித்து கூந்தல், காற்றில் மோகனராகம் பாட பளிச்சென்று காட்டன் சேலையில் வந்து விரிந்த இதழ்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறங்கிய செய்தியை படித்தபோதும் பார்த்தபோதும் எரிச்சல் அதிகமாக, அட! என்னமா (இன்னும்) இருக்காய்யா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் சக அறைவாசிகள். அதெல்லாம் இன்றைய இன்றுக்கு நிரம்ப முக்கியம் பாருங்கள்! இனி என்ன ஷாம்பூ போட்டார், எப்போது குளித்தார், எத்தனை முறை குளித்தார் என்றெல்லாம் விளம்பரம் வரலாம். சினிமாவில் நடிப்பீர்களா என்று வேறு அந்த மாதுவிடம் கேட்கிறார்கள்!

அதெல்லாம் பற்றி நான் சொல்ல வரவில்லை.

ராஜா ராமண்ணா என்றொருவர் கடந்த வாரம் இறந்து போனார் அது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே? அந்த ராஜா ராமண்ணா யார் தெரியுமா?

1925 ல் கர்நாடகாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று லண்டன் சென்று ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்து (கவனிக்கவும், மீண்டும் இந்தியாவிற்கு வந்து) டாக்டர் பாபா ஆராய்ச்சிக்கூடத்தில் இணைந்தவர்.

1965 முதல் 1968 வரை இந்திய அணுகுண்டு வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

1974ல் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது (இந்திராவின் ஆட்சிக்காலத்தில்) முக்கிய பொறுப்பில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

1990களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரத முதல் குடிமகனின் ஆசான் வேறு!

அப்படிப்பட்டவர் இறந்து போன செய்தி ஜெயலட்சுமியின் கூந்தல் வாசத்தில் தடம் பிறழ்ந்து போகிறது! என்னே மரபு இது! கேவலம்!

எம்.கே.

ஒரு கவிதை

என் நண்பன் யாரென்று சொன்னால்
என்னைப் பற்றிச் சொல்வேன்என்றார்கள்.

குருதி தோய்ந்த காயங்களை
மௌனம் தைத்த உதடுகளுக்குள்
புதைத்துவிட்டு,
வார்த்தைகள் இழந்து
ஜன்னலின் இந்தப் பக்கம் நான்!

வைத்துக்கொள்ள ஏதுமின்றி
எல்லாம் கொட்டித் தீர்க்கும்
ஜன்னலின் அந்தப் பக்கம் மழை!

அறுக்க முடியாத ஆயிரமாண்டு இழை
நீடிக்கிறது மழைக்கும் பெண்களுக்கும்!


இந்த கவிதையை எழுதியவர் தாமரை! கவிதையில் பூதாகரம் காட்டும் விஷயம் எதுவுமில்லை என்னும் போதிலும் ஒரு நிமிடம் கவிதை ரசிக்க வைக்கிறது. இந்த வார விகடனில் தாமரையின் மற்ற கவிதைகளை விட இது கொஞ்சம் பரவாயில்லை.
எம்.கே.

Thursday, September 23, 2004

எனக்குப்பிடித்த மனிதர்களில் ஒருவர்.

தெருவில் ஐஸ் அல்லது பொறி உருண்டை விற்றுச்செல்பவரைப் போலத்தான் உங்களுக்கும் ஏன் எனக்கும் கூட அவரைப்பார்த்தால் தோன்றும். அன்னாருடைய தோற்றம் அப்படி. தோற்றம் மட்டுமே எப்படி ஒரு மனிதனுக்குத் தவறான முதல் முகவரியையோ அல்லது முதல் அபிமானத்தையோ தரவல்லது என்பதை அவரைக்கொண்டும் நான் அறிந்துகொள்ளும்படி இயற்கை எனக்கு கற்றுவித்திருக்கிறது.
மாதத்தின் முப்பது நாட்களில் இருபத்தைந்து நாட்கள் வெளியூர்ப்பயணம். தொடர்ந்த சிலமணி நேர பயணங்களுக்கே நாமெல்லாம் நொந்து நூலாகிப்போகிறோம். தண்ணீர் முதல் வாந்தி எடுத்தால் பிடித்து வைப்பதற்கு பிளாஸ்டிக் கவர் வரை சேகரித்துக்கொண்டு கிளம்புகிறோம். இதற்கிடையில் ஜன்னலோர இருக்கைகளுக்காக குருஷேத்திரங்களையும், பாபர், அக்பர்களை மிஞ்சும் வகையில் பானிபட்டுகளையும் கூட நம்மில் பலர் நடத்துகிறோம். ஆனால் இவர்?
அறுபத்தொன்பது வயது. உடலுக்குத்தான் அது. மனதுக்கு? இருபத்தைந்துதான் இருக்க வேண்டும். கோட்டை முதல் குமரி வரைஇன்னும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள்; ஊர்வலங்கள். கலைஞரைப்போல வயதுக்குகந்த கார்களையோ இருக்கைகளையோ பயன்படுத்துவதில்லை இவர். கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வசதியும் இல்லாதவர், அவற்றைக்கொடுக்கும் நிதி படைத்த கட்சிகளையும் சாராதவர். பதினெட்டு வயதிலிருந்து ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி; ஒரே பணி மக்கள் பணி. வாரிசுகளை ஓட்டுச்சாவடிக்கே செல்லவிடாமல் மத்திய மந்திரிகளாக்கும் மரபு தலைவிரித்தாடும் வகையில் இவர் எல்லா அரசியல்வாதிகளையும் விட புனிதமானவர்.
அண்மையில் அவருடைய மனைவியின் பேட்டி ஒன்றைப் பத்திரிகைகளில் படித்தேன். செல்லம்மாவின் வழி வாரிசுகளில் இன்னும் ஒருவர். அறுபத்தொன்பது வயதிலும் மக்கள் பணியாற்றும் ஒரு மகானுக்கு மனைவி. நல்லதுக்கும் கெட்டதுக்கும் கணவன் அருகினிலே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரிப்பெண்களின் ஒருத்தியாய் எதிர்பார்த்து வந்திருப்பார். நடப்பதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு எங்கிருந்தாலும் உடம்பைக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் என்றவாறு அன்போடு அரவணைத்துப்போகும் இல்லத்தரசியாய் இப்போது அவர். நான்கு வேட்டிகள் மட்டுமே தன் கணவர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான்கு வேட்டிகள்! கம்பிகளில் தொங்கும் ஆடை வகைகளைக் கொஞ்சம் பார்த்தபடி இதை நாமும் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.
இலக்கியவாதிகளின் பின்பாகத்தையும் அரசியல்வாதிகளின் முன்பாகத்தையும் கொண்டு அரசியலில் நீச்சலடிப்பார் பலர். வெஞ்சினத்தைப் பின்புறம் வைத்து வெற்றிச்சிரிப்பை முன்புறம் வைத்தும் அரசியல் நடத்துவார் சிலர். எப்போதும் ஆணவத்தின் முகமாக தலைநிமிர்ந்து அகங்காரத்தின் உருவமாக இருப்போரும் கூட அரசியலில் இருக்கிறார்கள். ஆனால் இவர்?
ஆத்மார்த்தமாக நாம் ஆசைப்படும் எந்த நல்லவிஷயமும் நமது முயற்சியின்றியும் கூட நம்மிடம் வந்துசேருமாம்; நடக்குமாம்.
எப்போதாவது இவரைச் சந்திப்பேன் என நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அப்போது சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து வணங்க வேண்டும்.மக்கள் மனங்களின் மந்திரி திரு. நல்லகண்ணு அவர்களுக்கு என் வணக்கங்கள்.
எம்.கே.

Search This Blog